கட்ட வாங்கிட்டா கட்டு கட்டா பணத்தெ
கேப்பாங்க!
செய்யு - 717
ரொம்ப பீஸ்ஸல்லாம் கேக்க மாட்டோம்ன்னுத்தாம்
சொன்னாரு ஆனந்தகுமார் வக்கீல். செந்தில்குமாரு வக்கீல் போன் அடிச்சி சொன்னப்போ
அஞ்சு வழக்குக்குமா சேத்து முப்பதினாயிரம் ரூவாயக் கொண்டாந்துக் கொடுக்கச் சொன்னாரு.
அந்தத் தொகையக் கேட்டப்பவே அப்போ இருந்த நேரத்துல விகடுவுக்குப் பக்குன்னு இருந்துச்சு.
அத்தோட பணத்தெ கொண்டாந்து கொடுக்குறப்போ செய்யுவ வந்து எல்லா வழக்குக்கும் வக்காலத்து
நோட்டீஸ்ல கையெழுத்தப் போட்டுட்டுப் போவச் சொன்னாங்க. சட்டுன்னு பணத்தெ பொரட்ட
வழியில்லாம விகடு தெகைச்சி நின்னப்போ, கையிலப் போட்டிருந்த கை வளையலுங்க ரண்டையும்
கழட்டிக் கொடுத்து, இதெ அடவு வெச்சிட்டு அப்படியே வர்றப்போ கவரிங்க வளையலு நால்ல
வாங்கிட்டு வாங்கன்ன்னா ஆயி அடவு வைக்க கையிலயும் கால்லயும் நகெ இருக்குறப்போ ஏம் கையும்
காலும் சோந்து உக்காரணும்ங்றாப்புல. இப்போ அடவு வைக்குறதுக்கு நகெ இருக்குங்ற கவலைய
வுட இப்பிடி நகெ மேல நகெயா எல்லா நகெயையும் அடவு வெச்சிட்டா அதெ எப்பிடி மீட்குறதுங்ற
தவிப்புல விகடு அதெ வாங்க யோசிச்சாம் மீன திங்குறேம்ன்னு முள்ள முழுங்கிட்டவனப் போல.
"ன்னா யோஜனெ? ஒரு வக்கீலப் பாத்தாச்சு.
வழக்குக் கட்டுகளையும் கொடுத்தாச்சி. அவரு நல்லா நடத்துவார்ங்ற நம்பிக்கெயும் வந்தாச்சு.
இனுமே அவரு கேக்குற காசியக் கொடுக்குறதுல யோஜிக்கிறதுல ஒரு புண்ணியமும் யில்ல. அவுங்கக்
கேக்கற காசிய இந்த வளையல அடமானம் வெச்சிக் கொண்டுப் போயிக் கொடுங்க!"ன்னா ஆயி
நயமான சரக்கு கெடைக்குறப்பவே காசியப் போட்டு வாங்கிப் போட்டுப்புடணும், பெறவு காசி
இருக்குறப்போ நயமான சரக்கு கெடைக்காதுங்றாப்புல.
"இதெயும் அடவு வெச்சா அடுத்தாப்புல
ஒரு பணத்தேவைன்னா ன்னாத்தப் பண்றதுன்னு பயமா இருக்குடி!"ன்னாம் விகடு வவுத்துல
இருக்குற முட்டைக்காகக் கோழிய அறுத்துப்புட்டா நாளைக்கு முட்டைக்கு என்னா பண்ணுறதுங்றாப்புல.
"அடவு வைக்குறதுக்கு இத்து இருக்குன்னு
பாக்கணுமே, தவுர அடுத்தாப்புல அடவு வைக்குறதுக்கு ன்னத்தா பண்ணுறதுன்னு பாக்கக் கூடாது.
இப்போ இதெ அடவு வையுங்க. அடுத்ததா அடவு வைக்க எதாச்சும் ஒண்ணும் வரும்!"ன்னா
ஆயி தலெ வலி போனா திருவு வலி தானா வரும்ங்றாப்புல.
"அடுத்தா அடவு வைக்குறதுக்கு எதுவும்
வர்ற கூடாதுன்னு நெனைக்குறதா? அடவு வைக்க எதாச்சும் ஒண்ணு வரும்ன்னு நெனைக்குறதா? அடுத்த
அடவு வைக்குறதுன்னாலும் எதாச்சும் வாங்கி வெச்சாத்தானே வரும்டி. உள்ள எதுவும் வர்றாம
வெளியில போயிட்டு இருக்குறப்ப எப்பிடிடி வரும்?"ன்னாம் விகடு அள்ளி அள்ளி தின்னா
தட்டுல தானா சோறு வர்றதுக்கு அத்து என்னா அமுதசுரப்பியாங்றாப்புல.
"அதது நடக்குறப்போ அதத யோஜிக்கலாம்.
வர்றத ஒண்ணுத்தெப் பத்தி மின்கூட்டியே யோஜிச்சு ஏம் கலங்குறீயே?"ன்னா ஆயி ஆத்தைக்
கடக்குறப்போ பாலம் இருக்கா, இல்லியாங்றதெ பாத்துக்கிடலாம்ங்றாப்புல. அப்பிடின்னா புலி
வாரப்படியே வர்றப்போ வாரட்டும், அதுவும் ஒரு வகையில சரிதாம்ன்னு அதெ கொண்டு போயி
அடவு வெச்சி முப்பத்தி எட்டாயிரத்த வாங்கியாந்தாம் விகடு. அத்தோட நாலுக்கு எட்டா கவரிங்
வளையலையும் வாங்கியாந்தாம். அதெ பாத்துட்டு ஆயி சொன்னா, "கவரிங் வளையல வாங்கித்
தர்றதுல தாராள பிரபுவால இருக்கீயே! இதெ போல கவரிங் வெலையிலயே நகெ கெடைச்சா எல்லா நகெயயும்
வாங்கிக் கொடுத்துடுவீயே! அதென்னவோ நகெக் கடையில நகன்னா ஆன வெல, குதிலெ வெலல்லா சொல்றாம்!"ன்னு
கஞ்சிச்சோறே பிரியாணியப் போல இருந்தா மக்கா ஏம் பிரியாணிய திங்கப் போறதுங்றாப்புல.
அடவு வெச்ச பணத்துல முப்பத்தி ரண்டாயிரத்தெ
எடுத்துக்கிட்டு மிச்ச ஆறாயிரம் ரூவாய வூட்டுச் சிலவுக்கு இருக்கட்டும்ன்னு வெச்சிட்டு
டிவியெஸ் பிப்டியிலயே கொடுத்துட்டு வர்றதுக்கு சாயுங்காலமா கெளம்புனாம் விகடு.
பஸ்ஸூ பிடிச்சிப் போயி வர்றதுன்னா அரை நாளுக்கு மேல ஆவுங்றதால டிவியெஸ்
பிப்டியிலயே சாயுங்காலமா கெளம்பி அதுலயே ராத்திரித் திரும்பிடுறது அவனுக்கு உடனடியா
போயி வார்றதுக்கு வசதியா இருந்துச்சு. திட்டையிலேந்து வண்டிய எடுத்தா ரண்டரை மணி நேரத்துக்குள்ளார
மூலங்கட்டளெ வழியா எருக்காட்டூர் போற ரோட்டுல போயி நேரா கொரடாச்சேரிய பிடிச்சா,
அப்பிடியே குடவாசல் போயி, வலங்கைமான் வழியா போயி தாராசுரத்தெ பிடிச்சிடுவாம். தாராசுரத்துல
கொடுக்க வேண்டியதெ கொடுத்துட்டு, பேச வேண்டியதப் பேசிட்டு இருவது நிமிஷத்துக்குள்ள
முடிச்சிட்டுக் கெளம்புனாம்ன்னா, அதெ வழியப் பிடிச்சி திரும்ப வூட்டப் பாக்க எப்பிடியும்
ராத்திரி பதினோரு மணிக்குள்ளார வந்திடுவாம்.
இந்த மொறை வக்கீல் ஆபீஸ்ல பணத்தெ கொடுக்குறாப்புல
இருந்ததால தாராசுரத்துக்குப் போயி அங்கேயிருந்து கெளம்பி பாலக்கரையில இருக்கற வக்கீல்
ஆபீசுக்கு வர்ற நேரத்துல, நேர்ரா செய்யுவையும், சுப்பு வாத்தியாரையும் பாலக்கரைக்குக்
கெளம்பி வர்ற சொல்லிட்டா, நாமளும் குடவாசல் வழியா கும்பகோணத்துக்கு நேரா போயி பாலக்கரையப்
பிடிச்சா நேரம் மிச்சமாவும்ன்னு நெனைச்சாம். அதுபடியே அஞ்சே காலுக்கு அவ்வேம் கெளம்புறப்போ
ஒரு போன அடிச்சி ஏழரைக்கெல்லாம் வக்கீலோட ஆபீஸ்ல இருக்குமாறு சொல்லிட்டுத்தாம் கெளம்புனாம்.
விகடுவும் சொன்னாப்புல ஏழே முக்காலுக்கு வக்கீல் ஆபீஸ்ல போயி எறங்குனாம். செய்யுவும்,
சுப்பு வாத்தியாரும் சரியா வந்து வக்கீல் ஆபீஸ்ல உக்காந்திருந்தாங்க.
விகடு பணத்தெ கொண்டுப் போயிக் கொடுத்ததும்தான்
செய்யுகிட்டெ வக்காலத்து நோட்டீஸ்ல வேக வேகமா கையெழுத்த வாங்குனாரு ஆனந்தகுமாரு சோத்தையே
பாக்கதவேம் அதெ பாத்ததும் வெடுக் வெடுக்குன்னு எடுத்து முழுங்குறாப்புல. "எல்லா
வழக்குலயும் பர்ஸ்ட் டைம் மட்டும் செய்யு வந்து ஆஜராகட்டும். அதுக்குப் பிறகு தேவைப்படுறப்ப
மட்டும் ஆஜரானா போதும்!"ன்னாரு ஆனந்தகுமாரு மொத நாளு அட்டென்டென்ட்டஸ்ஸப் போட்டுக்கிட்டா
பெறவு எத்தனெ நாளு வாணும்ன்னாலும் ஆப்சென்ட்டு ஆயிக்கிடலாம்ங்றாப்புல.
"நாமளும் இந்த வழக்கையெல்லாம் மறந்து
கொஞ்சம் படிக்கணும்ன்னு பாக்குறேம். இந்த படிக்கு நம்மள ரொம்ப கோர்ட்டுக்கு அலைய
வுடாம இருந்தா அத்து ரொம்ப பெரிய உதவியா இருக்கும்ங்கய்யா!"ன்னா செய்யு அலையாத
செருப்புக்குத் தேய்ச்சல் அதிகம் கெடையாதுங்றாப்புல.
"அதுக்காகத்தாம் நாம்ம அதப் பத்தி
சொல்லிருக்கிறேம். நீங்க அநாவசியமா கோர்ட்டுக்கு அலைஞ்செல்லாம் செரமப்பட வேணாம்.
நம்ம வக்கீலுகள்ல யாராச்சும் ஒருத்தரு போயி ஆஜராயிடுவேம். பாத்துக்கலாம்."ன்னாரு
ஆனந்தகுமாரு சாவுக்குப் போறவேம் தலைய காட்டிட்டா போதும், துக்கம் கூட வெசாரிக்க வாண்டாம்ங்றாப்புல.
அந்த நேரத்துல ஆபீஸ்ல ஆனந்தகுமாரு மட்டுந்தாம் இருந்தாரு. செந்தில்குமாரும், நந்தகுமாரும்
காங்கல.
"அவுங்க மூத்தவங்களப் பாத்து சொல்லணுமா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு கோயிலுக்கு வந்துப்புட்டா மூலவர தரிசிக்காம எப்பிடி போறதுங்றாப்புல.
"அதாங் பணத்தெ கொடுத்திட்டீங்களே!
நாம்ம சொல்லிக்கிறேம். பேசணும்ன்னா சொல்லுங்க வீட்டுக்குள்ளத்தாம் ரெஸ்ட்டா இருப்பாரு.
கூப்புடுறேம்!"ன்னாரு ஆனந்தகுமாரு கட்டண தரிசனத்துக்குக் காசிய கொடுத்துப்புட்டாவே
போதும் சாமிய தரிச்சது போலத்தாம்ங்றாப்புல.
"ஓய்வெடுக்குறவங்களெ தொந்தரவு பண்ண
வாணாம். பெறவு சேதி ஒண்ணுமில்லன்னா நாஞ்ஞ கெளம்புறேம்! மவ்வேம் வேற இதுக்காகவே ஊர்லேந்து
கெளம்பி வந்திருக்காம். திரும்ப ஊருக்குப் போயிச் சேந்தாத்தாம் மறுநாளு அவ்வேம் பள்ளியோடம்
போவ முடியும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கால்ல புண்ண கண்டவனெ ரொம்ப நேரத்துக்கு
நிக்க வைக்க முடியாதுங்றாப்புல.
"இதுக்காக இவ்ளோ அவசரப்பட்டு பணத்தெ
கொண்டு வந்திருக்க வேண்டியதில்லயே. வந்ததுதாம் வந்துப்புட்டீங்க! கொஞ்சம் பொறுங்க.
எல்லா கேஸ்ஸோட ஸ்டேட்டஸையும் பாத்துச் சொல்லிடுறேம்!"ன்னு கம்ப்யூட்டர்ல வழக்கு
நம்பர்ரப் பாத்து ஒவ்வொரு வழக்குலயும் என்னென்னைக்கு வாரணுங்றதெ ஒரு சீட்டுல குறிச்சிக்
கொடுத்தாரு புதையலுக்கான ரகசிய வழிய குறிச்சு சூட்சமமா கொடுக்குறாப்புல. அதெ சுப்பு
வாத்தியாரு வாங்கி, செய்யுவோட கையில கொடுத்தாரு.
"நாம்ம ஆர்குடி சப் கோர்ட்டுல போயி
நேர்ல பாத்து வக்காலத்தப் போட்டுட்டு என்னிக்கு அவன கிராஸ்ஸப் பண்ணலாங்றதெ ஜட்ஜூகிட்டெயும்
கேட்டுக்கிட்டு வந்துடுறேம். அண்ணந்தாம் கிராஸ் பண்ணப் போறாரு. கிராஸ் பண்ணுறதுல அவருதாம்
கிங்! அண்ணன் கிராஸ் பண்றதுன்னா வண்டியிலத்தாம் வருவாரு. நாங்கத்தாம் டூவீலர்ல வருவேம்.
நாங்க வர்றப்போ பெட்ரோலுக்கு எரநூறு, கோர்ட்டுல ஆஜராவுறதுக்கு ஐநூறுன்னு எழுநூறு
கொடுத்துடுங்க. அண்ணன் கிராஸூக்கு வந்தா அய்யாயிரம். காருக்கு ரண்டாயிரம் தனியா கொடுத்துடணும்.
நாளையிலேந்தே ஒங்க கேஸ் எங்கெங்க நடக்குதோ அங்கங்க நம்ம ஆளுங்க ஆஜராவ ஆரம்பிச்சிடுவாங்க.
நாம்ம ஆர்குடி கோர்ட்டுக்குப் போயி வக்காலத்துப் போட்டுட்டு என்னிக்கு கிராஸ்ங்றதெ
சொல்லிடுறேம். அன்னிக்கு நீங்க செய்யுவ அழைச்சிக்கிட்டு பணத்தோட வந்துடுங்க!"ன்னாரு
ஆனந்தகுமாரு கோட்டு, சூட்டு, பூட்டு இல்லாம அஞ்சு நட்சத்திர ஓட்டலுக்குள்ள நொழைய முடியாதுங்றாப்புல.
அவரு சொல்றதெ கேக்க இன்னும் அஞ்சாயிரமா அத்தோட அதுக்கு மேல இன்னும் ரண்டாயிரமான்னு
விகடுவுக்கு அப்பவே வயித்த கலக்கறாப்புல இருந்துச்சு. சுப்பு வாத்தியாரும் வக்கீலப்
பிடிக்கிறதுன்னு ரொம்ப பெரிய வக்கீலா பிடிச்சிட்டேம் போலருக்கேன்னு கலங்குன கலக்கம்
அவரு கண்ணுலயும் தெரிஞ்சிச்சு கொளத்து மீனுக்கு வலையப் போட்டுத் திமிங்கலத்தெ பிடிக்கிறோமாங்றாப்புல.
மொதல்ல அந்த வக்கீல் ஆபீஸ்ஸ வுட்டுக்
கெளம்புனா போதும்ன்னு எல்லாம் கெளம்பி வந்தாங்க பாதாளத்துல வுழுந்தவேம் பொக்குன்னு
மேலெழும்பி வாரணும்ன்னு நெனைக்குறாப்புல. இன்னும் கொஞ்ச நேரம் நின்னாக்கா அதுக்கு
இந்த பீஸூ, இதுக்கு இந்த பீஸூன்னு இன்னும் பணத்தெ பத்தி நெறைய சொல்லிடுவாரோங்ற நெனைப்பு
எல்லாத்துக்கும் இருந்துச்சு. பாலக்கரை பஸ்
ஸ்டாப்புல நின்னு சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "ஒந் தங்காச்சி எல்லாம் பெரும்
தோதுல போறாடாம்பீ! இந்த வக்கீலுங்கள வெச்சி சமாளிக்க முடியுமான்னு தெரியலையே! ஆனெயக்
கட்டி தீனிப் போடறாப்புல ஆயிடும் போலருக்கேடா! ஆரம்பமே பெரிசால்லடா இருக்கு. இஞ்ஞ
கும்பகோணத்துலேந்து திருவாரூரோ, ஆர்குடியோ வண்டியிலயே வர்றதா இருந்தாலும் நூத்து
ரூவாயிக்குப் பெட்ரோல்ல போட்டாலே போதுமேடா. அதுக்கு எரநூத்து ரூவாயின்னு சொல்றானுவோன்னு
தெரியலையே. அதுல ஒரு நாளுக்கு ஆஜராவுறதுக்கு ஐநூத்து ரூவாய்ன்னா ஒரு வாரத்துலயே நாலு
நாளு கோர்ட்டுன்னு வந்துட்டா ரண்டாயிரத்து எண்ணூத்து ரூவாயில்லடா ஆவும். அதெ நாம்மப்
போயிக் கொடுக்குறதுன்னா போற வர்ற நம்ம பஸ்ஸூ சிலவுக்கு நூத்து ரூவாய வாண்டாமா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு வைர நகையெ குடிசை வூட்டுல வாங்கி வெச்சு அதுக்குப் பாதுகாப்புக்
கொடுக்க முடியுமாங்றாப்புல.
சுப்பு வாத்தியாரோட அதெ கவலெ விகடுவுக்கும்
இருந்துச்சு. இருந்தாலும் அதெ அவ்வேம் வெளியில காட்டிக்கிடாம, "எறங்கிட்டெம்.
இனுமே யோஜனெ பண்ணி பிரயோஜனமில்ல. எப்பிடியாச்சும் சமாளிப்பேம். அஞ்சு வழக்குல ரண்டு
வழக்கத்தாம் வாபஸ் பண்ணிப்புடலாம்ன்னு சொல்லிட்டாங்கல்ல. அப்போ நமக்கு மூணு கேஸ்தானே.
எப்படியும் ஒரு கேஸ்ஸூ பாஞ்சு நாளைக்கு ஒரு தவாத்தாம் வரும். மூவிரண்டு ஆறு. ஆறு தவா
வர்றதுக்கும் போறதுக்கும் காசுன்னா நாலாயிரத்து எரநூத்துதானே ஆவுது. சமாளிச்சிக்கிடலாம்.
ஆரம்பத்துல இந்த அஞ்சு கேஸூம் வர்றப்பத்தாம் கொஞ்சம் செருமமா இருக்கும். அதெ சமாளிச்சிட்டா
பெறவு சுலுவா பாத்துக்கிடலாம்!"ன்னாம் விகடு தலைய இழுத்துப் போட்டுப்புட்டா கன்னுக்குட்டி
சொகப்பெரசவம் ஆயிடும்ங்றாப்புல.
"என்னத்தெ கணக்க போட்டு என்னத்தெ
சமாளிக்கிறது? மவளுக்கு ஜீவனாம்சன்னே ஜட்ஜூ அய்யாயிரத்தெத்தாம் போட்டிருக்கிறாரு.
அந்த அய்யாயிரமே வந்தப் பாடில்ல. அப்பிடியே வந்தாலும் கூட அதெ வக்கீலுக்குப் பீஸ்ஸா
கொடுக்குறதுக்குத்தாம் சரியா இருக்கும் போலருக்கு. அதுவும் அந்த மாசத்துல எதாச்சும்
குறுக்கு விசாரணைன்னு வந்தா அதுக்கு அய்யாயிரம், கார்ல வர்றதுக்கு ரண்டாயிரம்ன்னா அந்த
காசியே பத்தாது போலருக்குடா மவனே! என்னாத்தச் செய்யப் போறேம்ன்னே தெரியலயடா!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு பூனை வாயில பூந்து பொறப்பட்ட எலி திரும்ப வாருமாங்றாப்புல.
"குறுக்கு விசாரணெ மாசத்துக்கு ஒண்ணா
வர்றப் போவுது. ஜீவனாம்ச அப்பிலுக்கு, வன்கொடுமெ வழக்குக்கு, இந்த ஹெச்செம்ஓப்பிக்குன்னு
எப்பவாச்சுத்தானே வர்றப் போவுது. அந்த நேரத்துல ஈயெல் சரண்டரு, டிஏ அரியர்ன்னு சம்பளத்துல
பணவரத்து எதாச்சும் வரும்ப்பா. பாத்துச் சமாளிச்சிக்கிடலாம்!"ன்னாம் விகடு தண்ணிய
ஊத்துவாங்கன்னு பாத்துக்கிட்டா வெதை மொளைக்குதுங்றாப்புல. அப்பிடி அவ்வேம் அப்பார்ர
தைரியப்படுத்துறதுக்குச் சொன்னாலும் அப்படி வாங்குற காசிய எல்லாம் வக்கீல்கிட்டெ கொடுத்துட்டு
இருந்தா மித்த குடும்பச் சிலவெ எப்பிடிச் சமாளிக்கிறதுங்றதெ நெனைச்சப்போ கொஞ்சம்
மெரட்சியாத்தாம் இருந்துச்சு. பாலக்கரை ஸ்டாப்பிங்குல நின்னு இன்னும் நெறைய பேசணும்ன்னு
போலத்தாம் இருந்துச்சு. இருந்தாலும் அதுக்கு மேல பேசிக்கிட்டு நின்னா நேரம் ஆயிட்டெ
இருக்கும் போல இருந்துச்சு. அப்பவே மணி ராத்திரி ஒம்போதுக்கு மேல ஆயிருந்துச்சு.
விகடு டக்குன்னு பையில கைய வுட்டு ரண்டாயிரத்துல
ஆயிரத்து எண்ணூத்த எடுத்து சுப்பு வாத்தியார்கிட்டெ கொடுத்துட்டு எரநூத்து கையிச்
செலவுக்கு இருக்கட்டும்ன்னு பையில வெச்சிக்கிட்டாம். சுப்பு வாத்தியாரு அந்த பணத்துல
ஆயிரத்தெ மட்டும் எடுதூதுக்கிட்டு எண்ணூத்த விகடுகிட்டெ கொடுக்கப் பாத்தாரு.
"இருக்கட்டும்ப்பா! இஞ்ஞ எதாச்சும் சிலவுன்னா என்னத்தெ பண்ணுவீயே? அவ்வே தங்காச்சி
வேற பியெச்டி என்ட்ரன்ஸ்ன்னு தஞ்சாவூரு, திருச்சின்னுப் போயிட்டு இருப்பாளே!"ன்னாம்
விகடு தோசைக்கேத்த காசியக் கொடுத்தாவணும்ங்றாப்புல.
"நாமளும் பென்ஷன் வாங்குறேம்டா! அதெ
என்னத்தெ பண்ணப் போறேம். அதெ வெச்சிப் பாத்துக்கிறேம். அஞ்ஞ பாப்பா இருக்காடா. அவ்வே
ஆசப்பட்டு எதாச்சும் தீனி பண்டம் கேட்டாலும் வாங்கிக் கொடுக்காவது கையில காசி இருக்கணுமேடாம்பீ!
யிப்பிடி ஒட்டத் தொடைச்சி எடுத்துக் கொடுத்தா என்னடா பண்ணுவே?"ன்னாரு சுப்பு
வாத்தியாரு வூட்டுக்குள்ள பொட்டிக்குள்ளார பணம் இருந்தாலும் வெளியில கௌம்புறப்போ சட்டை
பையில நாலு காசு இருக்கணுங்றாப்புல.
"நகெ கொஞ்சம் அடவு வெச்சதுல வூட்டுல
ஆறாயிரம் வெச்சிருக்கேம்ப்பா! இந்த வக்கீலுங்க இப்படிச் சொல்றதெ மிங்கூட்டியே கட்டெ
கொடுக்கறப்பவே சொல்லிருந்தா, நகெ அடவு வைக்குறப்ப அறுபதினாயிரம் ரூவா தர்றேன்னு சொன்னாம்ப்பா,
அதெ அப்பிடியே வாங்கிருப்பேம்ப்பா. ரொம்ப வாங்குனா திரும்ப பணத்தெ கட்டி நகெயெ மீட்குறப்போ
செருமமா இருக்குமேன்னு நாம்மத்தாம் முப்பத்தி எட்டுனாயிரத்தெ வாங்குனேம்ப்பா! இனுமே
போயி கூடுதலா காசியக் கொடுன்னு கேக்க முடியுமாப்பா! என்னவோ வழக்குக் கட்டுகளப் பாத்துட்டுத்தாம்
பணத்தெ சொல்ல முடியும்ன்னு இப்பிடி பண்ணுறானுவோளேப்பா!"ன்னாம் விகடு பெய்யுற
மழைய பெய்யுறப்போ வுட்டுப்புட்டு வெயிலு கொளுத்துறப்போ பாத்திரத்தெ எடுத்து வெளியில
வெச்சு தண்ணிய பிடிக்க முடியமாங்றாப்புல.
"எல்லா சோலியும் இப்பிடிதானப்பா!
நம்மகிட்டெயிருந்து கட்டுகள வாங்குறதுக்காக என்னத்தெ வாணாலும் பேசுவாய்ங்க போல. கட்டெ
வாங்குனதுக்குப் பெறவுத்தாம்பா அவனுங்களோட சுய ரூவத்தக் காட்டுவானுவோ. இனுமே இதுல
நீயி சொல்றாப்புல யோஜனெ பண்ணி ஆவப் போறதில்ல. பேசிட்டெ இருந்தா நேரந்தாம் ஆவும்.
நீயிக் கெளம்பு. வேற எதுனாச்சும் சேதின்னா வூடு சேந்தப் பெறவு போன்ல பேசிக்கிடலாம்.
கெளம்புடாம்பீ மொதல்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நரகல்ல வுழுந்த பெறவு நாத்தமடிக்குதுன்னு
சொல்ல முடியாதுங்றாப்புல.
"ஒஞ்ஞள பஸ்ஸ ஏத்தி வுட்டுப்புட்டுக்
கெளம்புறேம்ப்பா!"ன்னாம் விகடு புத்துக்குள்ளார நொழைஞ்சு முடியுற வரைக்கும் பாம்புக்குப்
பாதுகாப்பு இல்லங்றாப்புல.
"ஏம்டாம்பீ! இஞ்ஞ இருக்குற தாராசுரத்துக்கு
கும்பகோணத்து பஸ் ஸ்டாண்டுப் பஸ்ஸப் பிடிச்சிப் போயி, அங்கேயிருந்து தாராசுரத்துக்குப்
பஸ்ஸூ ஏறிப் போவத் தெரியாதா எஞ்ஞளுக்கு? பஸ்ஸ பிடிச்சா அடுத்த இருவதாவது நிமிஷத்துல
வூட்டுல இருக்கப் போறேம். நாஞ்ஞ கெளம்புறம்டாம்பீ! மொதல்ல நீயிக் கெளம்பு. வேகமா
போவாம பாத்து மெதுவா சூதானமா வூடுப் போயிச் சேருடாம்பீ! வூடுப் போயிச் சேந்ததும்
போன அடிச்சிப்புடு. நாம்ம தூங்காம உக்காந்திருப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு
தன்னால கோழிக்கனா கண்டுக்கிட்டு இருக்க முடியாதுங்றாப்புல.
"நம்மாள ஒமக்கு எம்மாம் செருமம்ண்ணே!"ன்னு
கண்ணுல தண்ணி பொங்கி வர்றாப்புல தளும்பிட்டா செய்யு ஆறு அரிக்க அதே தாங்கிட்டுப் பொறுமையா
இருக்குற கரையப் போல இருக்கீயேங்றாப்புல.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீயி கலங்காம
யிரு. எதுவும் சில காலந்தாம். நடக்குறதெல்லாம் நல்லதுக்கே. எல்லாம் மாறும்!"ன்னாம்
விகடு போறதுக்குன்னு ஒரு காலம் இருந்தா வர்றதுக்குன்னு ஒரு காலம் இருக்காமலா போயிடும்ங்றாப்புல.
"எஞ்ஞன்னெ சில காலம்? மூணு வருஷத்துக்கு
மே ஆயிடுச்சு. நடக்குற எத்து நல்லதுக்கா இருக்கு? எஞ்ஞ எல்லாம் மாறுது? ஒண்ணுல மாட்டி
தப்பியாந்தா இன்னொண்ணுல மாட்டுறதா இருக்குண்ணே!"ன்னு செய்யு கிட்டதட்ட அழுவவே
ஆரம்பிச்சிட்டா ஒரு கண்டத்துல தப்பிச்சா இன்னொரு கண்டத்துல சிக்குறதா இருக்குறாப்புல.
"இந்தாரு அவ்வேம் வூடு கெளம்புறப்ப
பாத்து அழுவாதே. அதெ நெனைப்புல வண்டியில போனாம்ன்னா என்னத்துக்கு ஆவுறது? குடும்பத்துல
ஒருத்தருக்குச் செருமம்ன்னா வுட்டுப்புட முடியுமா? ஆளாளுக்குப் பாத்து கொஞ்சம் செருமத்தெ
பாத்துத்தாம் ஆவணும். இதுக்கு மேல பேயாதே நீயி. இப்பவே மணி ஒம்போத தாண்டிட்டதெப் போலருக்கு.
அவ்வேம் கெளம்பட்டும். எதுவா யிருந்தாலும் நீயி காத்தால போன்ல பேசிக்கோ. நீயி சட்டுன்னு
வண்டிய ஸ்டாண்டப் போட்டு ஸ்டார்ட்டு பண்ணிக் கெளம்புடாம்பீ! பேசிட்டெ இருந்தா பேசிட்டே
இருக்க வேண்டியத்தாம். எம்மாம் நேரந்தாம் தள்ளிட்டு வண்டிய பிடிச்சிக்கிட்டெ நிப்பே.
கெளம்புடாம்பீ சட்டுபுட்டுன்னு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சாப்புட்டு முடிச்சவேம்
கையி காய்ஞ்சு போறாப்புல சாப்புட்ட எடத்துலயே உக்காந்துப்புடக் கூடாதுங்றாப்புல.
விகடு வண்டிய ஸ்டாண்ட் போட்டு வண்டிய
ஸ்டார்ட் பண்ணுனாம். அதே நேரத்துல சுப்பு வாத்தியாரு கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்குப்
போறாப்புல பஸ்ஸூ ஒண்ணும் வந்துச்சு கல்யாண தசெ வந்துப்புட்டா வரன் தேடாமலே அதது வெசாரிச்சிட்டுத்
தானா வரும்ங்கங்றாப்புல. "கெளம்புடாம்பீ! நாஞ்ஞ இந்த பஸ்ல ஏறி பஸ் ஸ்டாண்டுக்குப்
போயி அப்பிடியே கெளம்புறேம். நாஞ்ஞ நின்னா நீயும் நின்னுட்டு இருப்பே!"ன்னு அந்த
பஸ்ஸக் கையக் காட்டி அதுல மவளெ அழைச்சிக்கிட்டு ஏறுனாரு, போறது போறப்படி போயிட்டு இருந்தா
அதது போகுற போக்குல போயிட்டு இருக்கும்ங்ற மாதிரிக்கு. விகடுவும் ஸ்டார்ட் பண்ண வண்டியிலேந்து
கைய ஆட்டிட்டு ஊர்ரப் பாக்கக் கெளம்புனாம் அப்பாருக்கும் தங்காச்சிக்கும் மட்டுமல்லாது
எத்தனெ பெரச்சனெ வந்தாலும் அத்தனைக்கும் டாட்டா காட்டிட்டுப் போறதெ தவுர இப்போ வேற
வழியில்லங்றாப்புல.
*****
No comments:
Post a Comment