13 Feb 2021

கட்டத் தெரியாத குருவியோட கூட்டைப் போல!

கட்டத் தெரியாத குருவியோட கூட்டைப் போல!

செய்யு - 716

            சனிக் கெழமெ ராவுல தாராசுரம் வூட்டுக்கு வந்ததும் சுப்பு வாத்தியாரு விகடுகிட்டெ, "நாளைக்கிக் காத்தாலே கெளம்பி வூட்டுக்குப் போயிக் கட்டெ எடுத்துட்டு வந்தேன்னா, சாயுங்காலம் கூட போன்ன பண்ணிக் கேட்டுப்புட்டுக் கொண்டுப் போயிக் கொடுத்துட்டு வந்துப்புடலாம். அவுங்கப் பேசுற பேச்சுல நமக்கு நம்பிக்கெ வந்துடுச்சு. வழக்கெயும் கூடிய மட்டுல சீக்கிரமா முடிச்சிக் கொடுத்துடுவாங்கன்னு நெனைக்கிறேம்!"ன்னாரு வெதைக்க வெதை கையில இருந்தா மறுநாளே வெள்ளாம வெளைஞ்சு தள்ளிடும்ங்றாப்புல. தாராசுரம் கெளம்பி வர்றதுக்கு மின்னாடியே கேஸ் கட்டெ எடுத்துட்டு வர்றேம்ன்னு சுப்பு வாத்தியார்ட்டெ சொன்னதப் பத்தி எதுவும் கேக்காம, விகடு ஞாயித்துக் கெழமெ காத்தால அஞ்சு மணிக்கெல்லாம் பஸ்ஸப் பிடிச்சி கும்பகோணத்துக்கு வந்து, கும்பகோணத்துலேந்து திருவாரூருக்கு வந்து, திருவாரூர்ல எட்டாம் நம்பரு பஸ்ஸப் பிடிச்சி திட்டையில எறங்கி, எட்டாம் நம்பரு பஸ்ஸூ வடவாதி வந்து திரும்புறதுக்குள்ள வூட்டுலேந்து கேஸ் கட்டுகள எடுத்துக்கிட்டு அதெ எட்டாம் நம்பரு பஸ்ல ஏறி திருவாரூரு வந்து, திருவாரூர்லேந்து கும்பகோணம் வந்து, கும்பகோணத்துலேந்து தாராசுரத்துல எறங்குறப்ப மத்தியானம் மணி மூணு ஆயிருந்துச்சு. பன்னெண்டு மணி நேரம் முடியுறதுக்கு ரண்டு மணி நேரம் இன்னும் மிச்சமிருந்துச்சு. தாராசுரத்துலேந்து தொடங்குன வட்டம் தாராசுரத்துல முடிய பத்து மணி நேரம் ஆனுச்சு. அலைச்சலோட வடிவமும் வட்டந்தாம் போல.   

            ஆனந்தகுமாரு வக்கீல்கிட்டெ போன் பண்ணிக் கேட்டப்போ சாயுங்காலம் அஞ்சு மணிக்கு மேல வரச் சொன்னாரு. சுப்பு வாத்தியாரு குடும்பத்துல இருந்த எல்லாரையும் கெளப்பிக்கிட்டு வக்கீல் ஆபீஸூக்குப் போனாரு. அந்த வக்கீலுங்க பேசுறதெ கேட்டாவே எல்லாத்துக்கும் ஒரு தெளிவு கெடைக்கும்ங்றது சுப்பு வாத்தியாரோட நெனைப்பு. அந்த நெனைப்புக்காகவே ஊரு கூடி தேரு இழுக்குறாப்புல குடும்பம் கூடி ஓர்மையா இருப்போம்ன்னு வக்கீலு ஆபிசுக்குப் போவேம்ன்னு போயிட்டாரு. ஆபீஸ்ல செந்தில்குமாரும், ஆனந்தகுமாரும் இருந்தாங்க. நந்தகுமாரு யில்ல. சுப்பு வாத்தியாரு வழக்கோட கட்டுகள ரொம்ப பவ்வியமா பூசை சாமானுங்களப் பூசாரிக்கிட்டெ கொடுக்குறாப்புல செந்தில்குமாரோட கையில கொடுத்தாரு. அதுல ரண்டு கட்டுகள ஆனந்தகுமார்கிட்டெ கொடுத்துட்டு, அவரு ரண்டு கட்டுகளப் பிரிச்சிப் பாத்தாரு செந்தில்குமாரு.

"என்னப்பா கட்டுகள்ல இருக்குற காகிதங்க மாறி மாறி இருக்குறாப்புல இருக்குதே! அங்க எப்பிடி இருக்குது?"ன்னாரு செந்தில்குமார் ஆனந்தகுமார்ரப் பாத்து வண்டிய எடுக்குறப்பவே வழி கோணலா இருக்கேங்றாப்புல. "இங்கயும் இப்பிடித்தாம்ண்ணா இருக்கு. இப்படி கட்டுகள வெச்சிக்கிட்டு எப்பிடி அந்த வக்கீலு கேஸ்ஸ நடத்துனானோ? அதுக்கே அவனெ பாராட்டணும்ண்ணா!"ன்னாரு ஆனந்தகுமாரு கொண்டெ ஊசி வளைவுல எப்பிடித்தாம் அறுவது கிலோ மீட்டரு வேகத்துல வண்டிய ஓட்டுனானோன்னு மூக்கு மேல வெரல வைக்குறாப்புல.

            "அவ்வேம் பாட்டுக்கு சம்பந்தம் சம்பந்தம் இல்லாம வளைச்சி வளைச்சி எழுதிருக்கானே! பாவம்ப்பா ஜட்ஜூங்க. இதெப் படிச்சிப் பாத்தாலே டென்ஷன் ஆயி என்ன பண்ணுறதுன்னு தெரியாம குழம்பிப் போயிடுவாங்க. அதுல பாரு ஜீவனாம்ச கேஸ்ல தீர்ப்பாயிருக்கு. அந்தத் தீர்ப்ப வழங்குறதுக்குள்ள ஜட்ஜூ ரொம்பத்தாம் சிரமப்பட்டிருப்பாரு. அது செரி! இதுல தீர்ப்பாயிருக்கே. ஜீவனாம்சம் கொடுத்துக்கிட்டு இருக்கானா?"ன்னாரு செந்தில்குமாரு செங்காயி பழுத்தா புளியம் பழமாத்தாம் ஆவும்ங்றாப்புல.

            "அதுக்கு என்னவோ மனுவப் போடச் சொன்னாருங்கய்யா! அது போட்டது போட்டதுதாம்யா. பெறவு அவ்வேம் மேல் அப்பீல் பண்ணிட்டான் சொல்லி அதுல ஜெயிக்கணும்ன்னுட்டு மேல இருக்குற கோர்ட்டுல ஆஜராயிட்டாருங்கய்யா!"ன்னா செய்யு புளியங்காயிப் பழுத்தாலும் பழக்கடையில வெச்சி விக்க முடியாதுங்றாப்புல.

            "இந்தத் தீர்ப்ப வெச்சே அவனோட பேயிங் அதாரிட்டிக்கு ஒரு நோட்டீஸ்ஸ அனுப்பலாமே! ஜீவனாம்சம்ங்றது உன்னோட ஜீவாதார உரிமை. அதெ வாங்குறாப்புல பண்ணிருந்தா வேல முடிஞ்சிருக்கும். தானா வழிக்கு வந்திருப்பாம்."ன்னாரு ஆனந்தகுமாரு உரிமெக்கார்ரேம் கேக்குறப்போ குத்தகெ பணத்தெ கொடுத்துத்தாம் ஆவணும்ங்றாப்புல.

            "அதுல ஜெயிச்சிட்டா அவ்வேம் ஹை கோர்ட்டுல அப்பீல் பண்ணுவான்னும் நம்மாள அலைஞ்சிக்கிட்டுக் கெடக்க முடியாதுன்னும் சொன்னாருங்கய்யா அந்த வக்கீல். அதாலத்தாம் வழக்கெ இழுத்தடிக்கிறதாவும் சொன்னாருங்கய்யா!"ன்னா செய்யு வண்டியில ஏறுனா விசுக்குன்னு ஊரு வந்துப்புடும்ன்னுத்தாம் கால்நடையா காத தூரம் நடக்குறோம்ன்னு சொல்லுறாப்புல.

            "எதிர்தரப்புல பணத்தெ வாங்கிட்டு சரியான போங்காட்டம் ஆடியிருப்பாம் போலருக்கே!"ன்னாரு செந்தில்குமாரு தரவு பேசி வுடுறவேம் கூட்டியும் கொறைச்சும் வுட்டுப்புட்டு ரண்டு பக்கமும் பணத்தெ வாங்கிப்பாம்ங்றாப்புல.

            "இந்தக் கட்டுகள படிச்சிப் பாத்து சரி பண்ணுறதுக்கே ரண்டு நாளுக்கு மேல ஆவும்ண்ணா!"ன்னாரு ஆனந்தகுமாரு ஒரு ராத்திரிக்குக் கண்ணு விழிச்சா ரண்டு பகலுக்குத் தூங்கணும்ங்றாப்புல.

            "ஆமாம்டா தம்பி! என்னவோ கூடு கட்டத் தெரியாத குருவி கண்ட மேனிக்குக் கூட்டைக் கட்டி வெச்சிருக்கிறாப்புல அவனுவோ பாட்டுக்கு காயிதம் மேல காயிதமா அடுக்கி வெச்சிருக்கானுவோ. இதுக்கு இவ்ளோ காயிதங்களே தேவயில்ல. ஒரு வழக்குல போட்டு முடிக்க வேண்டியதெ அஞ்சு வழக்காக்கி கொல குத்துக் குத்தியிருக்கிறானுவோ!"ன்னாரு செந்தில்குமாரு நூலகத்துப் படிக்கிறேம்ன்னு போனவ்வேம் அகராதிய எடுத்து வெச்சு படிக்கிறாம்ங்றாப்புல.

            "கோர்ட்டப் பத்தி, சட்டத்தெப் பத்தி, ‍அதோட நடைமுறைகளப் பத்தி எஞ்ஞளுக்கு அவ்வளவு புரியாதுங்கய்யா. வக்கீல்லா நீஞ்ஞப் பாத்துச் செய்யுறதுதாம். அப்பிடித்தாம் பழைய வக்கீலு நல்ல வெதமா செய்யுறதா நெனைச்சிக்கிட்டே இருந்தாச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தரையில வண்டிய ஓட்டுற மனுஷருக்குக் கடல்ல ஓட்டுற கப்பல்லப் பத்தி என்னத்தெ தெரியும்ங்றாப்புல.

            "சார்! இந்தக் கேஸ்ஸப் போட்டு இவ்வளவு இழுத்திருக்க வேண்டியதே இல்ல. இந்த கேஸ்ஸோட சாராம்சம் என்னா? ரண்டே ரண்டுதாம். ஒண்ணு சேர்ந்து வாழப் போறீங்களா? யில்ல பிரிஞ்சிப் போறீங்களா? அப்பிடிங்றதுதாம். சேர்ந்து வாழப் போறன்னு முடிவெ எடுத்துட்டா இந்த வழக்கே தேவையில்ல. பிரிஞ்சிப் போறீங்கன்னா அப்பவும் இந்த வழக்குத் தேவையில்ல. சுமூகமாப் பேசி முடிச்சி வாங்க வேண்டியதெ வாங்கிக்கிட்டு, கொடுக்க வேண்டியதெ கொடுத்துட்டு ரண்டு பக்கமும் ஒத்து வந்து ஒரே ஒரு வழக்கு, விவாகரத்து வழக்கப் போட்டு ஆறே மாசத்துல முடிச்சிட வேண்டியதுதாம். ரண்டு பக்கமும் ஒத்து வந்துட்டா ரொம்ப அலைச்சலும் தேவையில்ல. சிம்பிளா முடிச்சிக்கிட்டு நீங்க ஒங்க கதையப் பாத்துட்டுப் போயிட்டே இருக்கலாம். அதெ போல அவங்க கதையப் பாத்துப் போயிட்டு இருப்பாங்க. இதுல ஜீவனாம்ச வழக்கெல்லாம் தேவையே யில்ல. அது வெசாரணைக்கு வர்றப்போ நம்ம பொண்ண கூண்டுல நிறுத்தி அவ்வேம் தரப்பு வக்கீலு நம்மட குடும்பத்து மானத்தையே வாங்குவாம். பதிலுக்கு நாம்ம அவனெ கூண்டுல நிறுத்தி அவனோட குடும்பத்து மானத்த வாங்குறாப்புல இருக்கும். எப்படிப் பாத்தாலும் கடைசியில கோர்ட்டுல அதெ கொடுக்கணும்ன்னுத்தாம் தீர்ப்பப் பண்ணுவாங்கறது வேற விசயம். அந்தப் பயெ அதெ கொடுக்க மாட்டேன்னு நின்னான்னு வெச்சுக்குங்க, அதுக்குத் திரும்ப கோர்ட்டு மேல கோர்ட்டா அலைஞ்சிக்கிட்டெ இருக்கணும்! இதெல்லாம் நிறைய நடைமுறைச் சிரமங்கள உண்டாக்கிடும். சுருக்கமா சொன்னா ஒங்களோட அன்றாட வேலைகளக் கூட இந்த வழக்குகளுக்காக அலையுறதால பாக்க முடியாமப் போயிடும். ஒங்க வாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்கள கூட மறந்துட்டு இந்த வழக்குக்காக மட்டுமே ஒட்டுமொத்த குடும்பமே அலைஞ்சிக்கிட்டுக் கெடப்பீங்க. நாம்ம சொல்றதெ போல இப்போ இங்க ஒங்க குடும்பத்தையே கொண்டாந்து உக்கார வெச்சிருக்கீங்க பாருங்க!"ன்னாரு செந்தில்குமாரு வரப்புச் சண்டெயே வாய்க்கால்லயே வெட்டி வீசலன்னா அத்து வாழ்க்கெ சண்டெயா ஆயிடும்ங்றாப்புல.

            "நீஞ்ஞ சொல்ற அத்தனையும் நூத்துக்கு நூத்துச் சரிதாங்கய்யா! இப்போ அலைஞ்சிருக்கிற அலைச்சலு, அதுக்காக சிலவு பண்ணது, அதுல உண்டான மன ‍உளைச்சலு எல்லாத்தையும் பாக்குறப்போ மிங்கூட்டியே நடந்த ஒரு சமாதானத்துல பாதிக்கும் கம்மியா கொடுக்குறதா அவ்வேம் சொன்னப்பவே முடிச்சிருந்திருக்கலாங்கய்யா! அப்போ எம் மவ்வே அதுக்குச் சம்மதிக்க மாட்டேம், வாங்குனா ஒத்த பைசா வுடாம முழுசாத்தாம் வாங்குவேம்ன்னு நின்னுட்டா. யப்போ அந்த வக்கீலு கூட ஏதோ பாத்து முடிச்சிட்டுப் போங்கய்யான்னு நல்ல வெதமாத்தாம் யோஜனையச் சொன்னாரு. ஆன்னா அந்தப் பயலுவோ அப்போ பேசுனப் பேச்சையும், அதுக்குப் பண்ணுன அடாவடியையும் நெனைச்சப்போ அதெ வாங்குறதுக்கு, வழக்கெ நடத்தியே அவனுங்கள ஒரு வழி பண்ணிப்புடணும்ன்னு தோணுச்சு. கடெசீயா இதுவரைக்கும் வழக்கெ நடத்தி நாஞ்ஞ ஒரு வழி ஆனதுதாம் மிச்சம்."ன்னாரு சுப்பு வாத்தியாரு கோண குதிரெ மேல ஏறிப் போன பாதெ தெரியலங்றாப்புல.

            "பை த பை! இந்த வழக்கப் பொருத்த மட்டில எங்களுக்கு நீங்க சில சுதந்திரங்களையும், அதிகாரங்களையும் தந்துத்தாம் ஆவணும். முக்கியமா வழக்கோட போக்கப் பத்தி நீங்க எந்தக் கேள்வியும் கேக்கக் கூடாது. இந்த வழக்குல நீங்க எப்படிப் போவணும்ன்னு நாங்க சொல்றோமோ அப்பிடித்தாம் போவணும். ஏன்னா நீங்க ஒரு போக்குக்கு இழுத்து, நாங்க ஒரு போக்குக்குப் போனா சரிபட்டு வாராது. இந்த வழக்கு கிட்டதட்ட பாதிக்கு மேல போயிருக்கு. இதுல நிறைய சட்டம் சார்ந்த விசயங்கள்ல்லாம் இருக்கு. அதுக்கு எப்படிப் போனா சரியா இருக்குங்றது எங்களுக்குத்தாம் தெரியும். மொதல்ல இத்தனை வழக்குகளே வேண்டியதில்ல. இதுல டிரான்ஸ்பர் பண்ணுற ரண்டு கேஸ்களையும் வேண்டாம்ன்னு வாபஸ் வாங்கிக்கிட்டு வெலகிக்கிறதுதாம் நல்லது. அந்த ரண்டு கேஸ்களையும் நடத்துறதால எந்தப் பிரயோஜனமும் இல்ல. என்னா நாம்ம சொல்றது புரியுதா?"ன்னாரு செந்தில்குமார் வெட்டுறதெ வெட்டி ஒட்டுறதெ ஒட்டிட்டா உருவம் கெடைச்சிடும்ங்றாப்புல.

            "இந்த வழக்குல எப்பிடிச் செஞ்சா செளரியமா இருக்குமோ அப்பிடியே செய்யுங்கய்யா! எஞ்ஞளுக்கு ன்னா தெரியும் சொல்லுங்க? இப்பிடிச் செஞ்சா சரியா இருக்கும்ன்னுத்தாம் பழைய வக்கீலு பண்ணாருங்கய்யா. செரின்னு அதுப்படியே பண்ணுங்கன்னு நாஞ்ஞ சொல்லிட்டேம். அவரோட வழக்குப் போக்குல நாஞ்ஞ என்னிக்கும் தலையிட்டது கெடையாதுங்கய்யா. சமாதானத்துக்கு வந்து முடிச்சிப்புடுவேம்ன்னு அவரு சொன்னப்போ, அவுங்க தர்றதா சொன்னது பாதிக்கும் கம்மியமா இருந்ததாலத்தாம் எம் மவ்வே அதெ வாணாம்ன்னுப்புட்டா. அத்து ஒண்ணுத்தாம் அவர்ர மீறுனதுன்னு சொல்லலாம். பெறவு தயவுபண்ணி ஹெச்செம்ஓப்பி வழக்குல குறுக்கு வெசாரணையப் பண்ணிப் புடுங்கய்யான்னு அவர்ரப் போட்டு கெஞ்சுனதெ வேணும்ன்னா அவர்ரப் போட்டுத் தொந்தரவு பண்ணதா சொல்லலாம்ங்கய்யா. மித்தபடி அவரு கேட்ட காசியக் கொடுத்தேம். அவரு எப்பிடியெல்லாம் வழக்குல நடந்துக்கிடணும்ன்னு சொன்னாரோ அப்பிடியெல்லாம் நடந்துகிட்டெம். பல வழக்குல அவரு ஆஜராவமாலே நம்மளத்தாம் போயிட்டு இருக்கச் சொன்னாரு. அதுப்படியேத்தாம் போயிட்டே இருந்தேம். வேற எந்தக் குத்தமும் வைக்கலங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒத்தூதிப் பாத்தும் சுருதி சேராம போனதுதாம் மிச்சம்ங்றாப்புல.

            "நீங்க சொல்றதுல எதுவுமே தப்பில்லங்க சார்! நீங்க வாங்க வேண்டிய பொருட்கள் கம்மியா இருக்கு, அதெ வாங்க முடியாதுன்னு சொல்றதுக்கு ஒங்களுக்கு உரிமெ இருக்கு. அதெ தப்புன்னு சொல்ல முடியாது. அது ஒண்ணா. ரண்டாவது குறுக்கு விசாரணைன்னு வர்றப்போ அதெ வக்கீல் செஞ்சுத்தாம் ஆவணும். அதுக்காக நீங்க கெஞ்சியும் அவரு பண்ணாதது ஒங்களோட தப்பில்ல. சம்பந்தப்பட்ட வக்கீலோட மன்னிக்க முடியாத தப்பு. அது ரெண்டா. அப்புறம் மூணாவது இந்த ஹெச்செம்ஓப்பி வழக்கோட குறுக்கு விசாரணையை முடிச்சிடுவேம். ஏன்னா அதுல ஒங்களோட கெளரவம் அடங்கியிருக்கு.  அதுலத்தாம் பிரச்சனை ஆயிருக்கு. அதுல ஒரு குறுக்கு விசாரணையப் பண்ணாம விட்டுறக் கூடாது. அந்த ஒரு குறுக்கு விசாரணையை மட்டும் பண்ணிக்கிட்டு, அந்த கேஸ்ஸ இல்லாம அடிச்சிடலாம். அது மூணா. நாலாவது என்னான்னா, ஒடனே நாம்ம விவகாரத்து வழக்கெ போட்டு இதுலேந்து அதாவது இந்த ஹெச்செம்ஓப்பி வழக்குலேந்து மொதல்ல வெளியில வந்துடலாம். விவாரகத்து வழக்கெ நாம்ம போட்டுட்டா அதுக்குப் பெறவு ஹெச்செம்ஓப்பி வழக்குக்குப் பவர் இல்ல. அதுக்குப் பிறகு வன்கொடுமெ வழக்கையும், ஜீவனாம்ச மேல் அப்பீலையும் பாத்துக்கிடலாம்! அது நாலா."ன்னாரு செந்தில்குமாரு ஒவ்வொரு வெரலா நாலு வெரலை மடக்குனதுலேந்து நீட்டிக் காமிச்சபடிக்கு எதுலயும் நாலு விசயம் தெரிஞ்சா போதும் எதையும் சமாளிச்சுப்புடலாம்ங்றாப்புல.

            "விவகாரத்து வழக்கெ போட்டா வன்கொடுமெ வழக்கு ஒண்ணும் யில்லாமப் போயிடும்ன்னும், ஜீவனாம்ச மேல் அப்பீலும் அவனுக்குச் சாதவமா போயிடும்ன்னு அந்த வக்கீலு சொன்னாருங்கய்யா!"ன்னா செய்யு சொல்லுறவங்க சொல்றப்போ எப்பிடி மாங்கா மரத்துல தேங்காயி காய்க்கும்ங்றதெ நம்பாம இருக்க முடியும்ங்றாப்புல.

            "இந்தாரும்மா ஒரு விசயத்தப் புரிஞ்சுக்கோ! வன்கொடுமெ வழக்குல ஒனக்கு நடந்ததெ சொல்லியிருக்கிறே. நடந்தது நடந்ததுதாம். அதெ மாத்த முடியாது. நடந்த அந்தக் கால கட்டத்துல அவ்வேம் குற்றம் பண்ணிருக்கான்னா அது குற்றம்தாம். அதெ எப்பிடி இல்லைன்னு சொல்ல முடியும்? அந்த வழக்க நீயா வாபஸ் வாங்குற வரைக்கும் அந்த வழக்குல சொன்னது அத்தனையும் உண்மெ. நீ விவாகரத்து வழக்கப் போடுறதால அந்த வழக்கு எந்த விதத்துலயும் பாதிக்கப்படப் போறது கெடையாது. சொல்லப் போனா அவனோட கொடுமைக தாங்காமாத்தாம் விவாகரத்து வழக்கையே போட்டிருக்கேன்னுத்தாம் ஆவும். புரியுதா?"ன்னாரு செந்தில்குமாரு ரத்தம் வரலேங்றதுக்காக அடிபடலன்னு சொல்ல முடியுமாங்றாப்புல.

            "ஆன்னா அந்த வக்கீலு வெவகாரத்து வழக்குப் போட்டா, பழி வாங்குற நோக்குலத்தாம் வன்கொடுமெ வழக்கெ போட்டிருக்கிறதா சொல்லி அந்த வழக்கெ ஒண்ணுமில்லாம அடிச்சிடுவாங்கன்னு சொன்னாருங்கய்யா! அதாலத்தாம் நாஞ்ஞ ஹெச்செம்ஓப்பி வழக்கெ அவரு எடுத்து நடத்துவேம்ன்னு சொன்னதும் ஆமாம்ன்னு சொன்னேம்ங்கய்யா!"ன்னா செய்யு நோயாளிக்கு என்னத்தெ தெரியுது எது தலைவலிக்குப் போடுற ஊசி, எது வயித்து வலிக்குப் போடுற ஊசிங்றாப்புல.

            "அந்த வக்கீலு ஒங்கள நல்லாவே குல்லா போட்டிருக்காம். இதுல எப்பிடின்னாம்மா! அவனுக்கு எதிர் தரப்ப இந்த வழக்குகள வெச்சி மிரட்டணும்ங்றது ஒண்ணு. புதுசா வழக்கப் போடாம ஒங்ககிட்டெயிருந்த காச வாங்க முடியாதுங்றது ரண்டு. அதுக்காகத்தாம் அந்த வக்கீலு இந்த மாதிரி பேசி ஒங்கள திசை திருப்பியிருக்காம். நீங்க சொல்றதாப் பாத்தா அதுக்கு என்னா சொல்றதுன்னா, ரண்டு பக்கமும் அவ்வேம் நல்லா கேம் ஆடியிருக்கிறாம். இப்போ நாம்ம ஹெச்செம்ஓப்பி வழக்குல குறுக்கு விசாரணைய அவனெ மட்டும் முடிச்சிக்கிட்டு, விவாகரத்து வழக்கப் போட்டுட்டா அதுக்கு மேல நீங்க அவனுவோ பண்ணுற குறுக்கு விசாரணையில ஆஜராவ வேண்டியதில்ல. இந்த விவாகரத்து வழக்கெ காட்டியே அதுல ஆஜராவுறதுலேந்து விலக்க வாங்கிக்கிடலாம், அந்த ஹெச்செம்ஓப்பியைய ஒண்ணுமில்லாம அடிச்சிடலாம். அந்த வழக்கெ தேவையில்ல. அதுலப் போயி ஆஜராவணுங்ற அவசியமேயில்ல. அத்தோட நாங்க அந்த வக்கீலோட பேசியும் பாக்குறோம். அந்த டாக்கடர்கிட்டெயும் பேசிப் பாக்குறோம். சமாதானமா அவ்வேம் தரப்பு வந்தா முடிச்சிடலாமா சார்?"ன்னாரு செந்தில்குமாரு முடிஞ்ச வரைக்கும் மீந்துப் போன இட்டிலியில இட்டிலி உப்புமா பண்ணி உருப்படியா எதாச்சும் சமாளிக்கப் பாப்போம்ங்றாப்புல.

            "தாராளமா முடிச்சிடலாங்கய்யா! அவ்வேம் எவ்வளவு கொடுத்தாலும் சரித்தாம்ய்யா! அதெ வாங்கிட்டு முடிக்கிறதுக்கு தயாரா இருக்கேம்ய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மொதலை வாயிலேந்து புடுங்குன வரைக்கும் ஆதாயம், தவலை வாயில தள்ளுன வரைக்கும் ஆதாயம்ங்றாப்புல.

            "செரி! அப்பிடின்னா மொதல்ல சமாதானமா போயி செட்டில்மெண்ட்டுக்குப் போறதெ மொத வழியா வெச்சிக்கிடலாம். அப்பிடி ஒரு வேள அவ்வேம் செட்டில்மெண்டுக்கு வர்றதா பட்சத்துல, அதாவது வர்றதா பட்சத்துலத்தாம் நாம்ம வழக்கு எடுக்குறோம். வழக்குன்னுப் பாத்தீங்கன்னா நாம்ம எடுத்தா மூணே வழக்குத்தாம். ஒண்ணு திருவாரூரு சீப் கோர்ட்டுல ஜீவனாம்ச வழக்கோட அப்பீல், ரண்டு மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்துல வன்கொடுமை வழக்கு, மூணாவது சப் கோர்ட்டுல குறுக்கு விசாரணைய முடிச்சிட்டு ஒடனடியா விவாகரத்து வழக்கு. இந்த மூணுதாம். அதுக்கு மேல இதுல கேஸ்களே வேண்டாம். ஏன்னா அவ்வேம் சமாதானத்துக்கு வரலன்னா நமக்கு அவனெ மெரட்டுறதுக்கு இருக்குற துருப்புங்றது ஜீவனாம்ச வழக்கும், வன்கொடுமெ வழக்குந்தாம். அதெ நாம்ம வுட்டுட முடியாது. அதே நேரத்துல அந்தப் பொம்பளப் பயலோட இனுமே சேந்து வாழப் போறதில்லங்றதால விலகி வந்து விவகாரத்தப் போட்டு முடிக்கிறதுதாம் சரியானது. அதுலப் போயி தேவையில்லாம உளைச்சல்ல உண்டு பண்ணிக்கிட முடியாது. வழக்கப் பொருத்தமட்டில எப்பவும் கிளியர் கட்டா இருக்கணும். இப்போ வழக்க குறித்த தெளிவு வந்துடுச்சுங்களா ஒங்களுக்கு!"ன்னாரு செந்தில்குமாரு கட்டடம் கட்டுறதுக்கு மின்னாடி வரைபடத்தெ தெளிவா வரைஞ்சிக்கிடணும்ங்றாப்புல.

            சுப்பு வாத்தயாரு தலைய ஆட்டுனாரு. "பெறவு பீஸ்ஸப் பத்திச் சொல்லிட்டீங்கன்னா அதுப்படி கொடுத்துடுவேம். ஏன்னா எதுலயும் மொதல்ல பேச வேண்டியதே அதாம். அதுல எதுவும் பெரச்சனெ வந்துப்புடக் கூடாது பாருங்க. ரொம்பவும் பீஸ்ஸ கேட்டுப்புடாதீயே. ஏன்னா எஞ்ஞ நெலமெ அப்பிடி இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு முன்னாடி மொதல்ல போற செம்மறியாடு சரியா போனா பின்னாடி தொடர்ந்து வர்றதெல்லாம் சரியா போவும்ங்ற மாதிரிக்கு மொதல்ல மொதலுன்னு சொல்லப்படுற பணத்தெ பத்தி சரியா பேசிக்கிடணும்ங்றாப்புல.

            "நாங்க ரொம்ப வாங்குற ஆளுங்க கெடையாது சார்! ஒங்களோட நெலமை எங்களுக்குப் புரியுது. இப்போ கேஸ் கட்டுகள முழுசா பாக்காம எவ்ளோ பீஸ்ன்னு சொல்ல முடியாது. இதெல்லாம் உக்காந்து திருத்தமாப் பாத்து மாறியிருக்கிற காகிதங்கள சரி பண்ணிக்கிடுறோம். நீங்க இந்த வழக்குலேந்து அந்த வக்கீல வேண்டாம்ன்னு சொன்ன கோபத்துலயோ என்னவோன்னு தெரியல காகிதங்கள கண்டபடி மாத்தி மாத்தி வெச்சிருக்காரு. அநேகமா இதுல சில காகிதங்க கொறைஞ்சாலும் கொறையலாம். கோபத்துல அப்பிடியும் அந்த வக்கீல் பண்ணிருக்கலாம். அதெல்லாம் சரி பண்ணிப் பாத்தாதாம் எங்களால ஒரு முடிவுக்கு வர்ற முடியும். அப்பத்தாம் இதுக்கான பீஸ் என்னான்னு சொல்ல முடியும். நீங்க போன் நம்பர்ர சொல்லுங்க. இந்தக் கட்டுல எழுதிக்கிறேம். இதெ பாத்து முடிச்சிட்டு பீஸ் என்னாங்றதெ போன் அடிச்சிச் சொல்லிடுறேம். அப்போ நீங்க அதெ வந்துக் கொடுத்துட்டா போதும்!"ன்னாரு ஆனந்தகுமாரு பண்டத்தெ முழுசா பாக்காம வெல சொல்ல முடியாதுங்றாப்புல.

            சுப்பு வாத்தியாரு விகடுவோட போன் நம்பர்ர சொல்ல அதெ ஆனந்தகுமார் கட்டுல ஓரமா எழுதிக்கிட்டாரு கல்வெட்டோட ஓரமா அதெ பொறிச்சவனோட பேர்ர எழுதுறாப்புல.

            "பெறவு வழக்குல ஒருவேள நாஞ்ஞ பார்ட்டி தரப்புல ஆஜர் ஆவலன்னாலும் நீஞ்ஞ ஆஜர் ஆயிடுவீங்கத்தானே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு மின்னல் தப்புனாலும் மழை வந்துப்புடுமான்னு சந்தேவத்துல வெனாவுறாப்புல.

            "ஒண்ணுக்கு மூணு வக்கீலு இருக்கோம் சார்! அதெப் பத்தின கவலையே ஒங்களுக்கு வேணாம். வழக்கு எந்த விதத்துலயும் தொய்வில்லாமப் போவும். அதுக்கு மின்னாடி இதெ சமாதானமா முடிச்சிட முடியுமாங்றதத்தாம் மொதல்ல பாப்பேம். கவலைப்படாம போயிட்டு வாங்க! குடும்பத்தோட எல்லாரும் வந்திருக்கிறதால எல்லாருக்கும் சொல்றேம், இனுமே இந்த வழக்கப் பத்தி தயவுபண்ணி யாரும் நெனைக்காதீங்க. இந்த வழக்க மனசுலயும் ஏத்திக்காதீங்க. என்னிக்கு இந்த வழக்கு எங்களோட ஆபீஸூக்கு வந்துச்சோ அன்னிலேந்து இந்த வழக்குங்றது எங்களோட வழக்கு மட்டுந்தாம், ஒங்களுக்கான வழக்கே கெடையாது. என்னா ஓக்கேதானே?"ன்னாரு செந்தில்குமாரு சரக்கெ வித்த பெற்பாடு அதெ வாங்குனவேம் பாடு, வித்தவம் பாடு இல்லங்ற மாதிரிக்கு. அதுவும் சரிதாங்ற மாதிரி தலைய ஆட்டிக்கிட்டு அத்தனெ சனங்களும் சந்தோஷமா ஆபீஸ்ஸ வுட்டு பாலக்கரை பஸ் ஸ்டாப்பிங்குக்கு வந்து பஸ் ஏற நின்னுச்சுங்க சொமைய எறக்கி வெச்சவேம் சொகமா நிக்குறாப்புல. அங்கேயிருந்து பஸ் ஏறி எல்லாம் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விகடுவையும், ஆயியையும், பவ்வு பாப்பாவையும் இங்க திட்டைக்கு வர்றதுக்குத் திருவாரூரு பஸ்ல ஏத்தி வுட்டுப்புட்டு, சுப்பு வாத்தியாரு, செய்யு, வெங்கு மூணு பேரும் தாராசுரம் போறதுக்கு எதுத்த தெசையில இருந்த பஸ் ஸ்டாண்டுக்கு வந்து மினி பஸ்ல ஏறிக்கிட்டாங்க போவுற பயணத்துக்கேத்தாப்புல தெசை மாறும்ங்றாப்புல.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...