வெளியில இருந்து பார்!
செய்யு - 715
செந்தில்குமாரு நாற்காலியிலேந்து எழும்பி
தன்னோட பேண்ட் பாக்கெட்டுலேந்து கர்ச்சீப் எடுத்து தம் மேல இருந்த தண்ணியக் கொஞ்சம்
தொடைச்சிக்கிட்டாரு. தண்ணிய ஊத்தி நாயைக் குளிப்பாட்டுறப்போ தண்ணியெல்லாம் செதறுறாப்புல
அத்து ஒரு சிலிர்ப்பு சிலித்துக்குமே அப்படி ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துக்கிட்டாரு.
"சாரி சார்! தண்ணில்லாம் மேல பட்டுடுச்சு.
ஆர்குடி செருப்படி வெசயத்தப் பத்தி நாங்க பேசிக்கிட்டுத்தாம் இருந்தேம். அத்து ஒங்க
தங்கச்சித்தானா?"ன்னாரு கம்பீரம் கொழைஞ்சவரைப் போல செந்தில்குமாரு. பவ்வியமா
உக்காந்திருக்கிற பொண்ணா பாய்ஞ்சு அடிச்சிருக்கும்ங்ற மாதிரிக்கிச் செய்யுவ ஒரு பார்வே
பாத்துட்டு விகடுவெப் பாத்து தலைய திருப்புனாரு. அவரோட தலை திரும்புன பார்வைக்கு ஆமாங்ற
மாதிரிக்கி தலையாட்டிக்கிட்டு விகடுவும் தன் மேல லேசுபாவா செதறியிருந்த தண்ணித் துளிகள
கர்ச்சீப்பால தொடைச்சிக்கிட்டாம். சுப்பு வாத்தியாரு கையில வெச்சிருந்த கைப்பையிலேந்த
துண்டெ எடுத்துத் தொடைச்சிக்கிட்டாரு. செய்யு பொடவெ தலைப்பால தொடைச்சிக்கிட்டு இருந்தா.
"நீங்க தயங்குனதுக்கான காரணம் இப்பத்தாம்
புரியுது! வெல்! ஒரு வக்கீல அடிச்சிட்டா இன்னொரு வக்கீலு கேஸ்ஸ எடுப்பாங்களா மாட்டாங்களாங்ற
சந்தேகத்துல கேட்டு இருக்கீங்கன்னு நெனைக்கிறேம். அநேகமா இந்தச் சம்பவத்துக்குப் பெறவு
நீங்க ஆர்குடியிலயோ, திருவாரூர்லயோ வேற வக்கீலப் பாத்துட்டு அத்து முடியாமத்தாம்
இங்க வந்திருக்கீங்க! ஐயாம் ரைட்?"ன்னாரு செந்தில்குமாரு நாயைக் கண்டு பயந்தோடுனவேம்
தாம் ஓட்டப் பந்தயத்துக்குப் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கேம்ன்னு சொல்லி தன்னோட
தெகிரியத்தெ மித்தவங்ககிட்டெ நெலைநிறுத்திக்கிறாப்புல.
"ஆர்குடியில வக்கீல் சிவபாதத்தெ பாத்துட்டுத்தாம்
வந்திருக்கேம்ங்கய்யா. அவரு வழக்க எடுத்துக்க தயாராத்தாம் இருக்காரு. நாஞ்ஞத்தாம் கட்டுகளக்
கொண்டுட்டுப் போவாம இருக்கேம். அதுக்குக் காரணம் எஞ்ஞ தங்காச்சித்தாம். அவளுக்கு
சிநேகிதங்களா சியார்ஜ இன்ஸ்ட்டிட்யூட்ல படிச்ச ரண்டு பேத்துக்கு ஆனந்தகுமாரு அய்யாத்தாம்
வழக்கெடுத்து கோர்ட்டுக்குப் போவாமலேயே கேஸ்ஸ முடிச்சிக் கொடுத்ததா கேள்விப்பட்டேம்.
அந்தக் காரணத்துக்காகவே எந் தங்காச்சிக்கு ஆனந்தகுமாரு அய்யாத்தாம் வழக்கெ நடத்தணுங்ற
முடிவுல வந்து நின்னுட்டா. செரி இனுமே இந்த வழக்க நடத்திப் பிரயோஜனப்படாது, எப்படியாச்சும்
ஒஞ்ஞகிட்டெ ஒப்படைச்சி பேச்சு வார்த்தையிலயோ, வேற வகையிலயோ சுலுவா முடிச்சிப்புடணுங்ற
நோக்கத்துலத்தாம் வந்திருக்கேம்!"ன்னாம் விகடு போயிச் சேர வேண்டிய எடத்துக்கு
நாப்பது வழி இருந்தாலும் சனங்க தூரம் கொறைவான வழியத்தாம் விரும்புவாங்கங்றாப்புல.
"தம்பிக ரண்டு பேருமே பல வழக்குகள
எடுத்து நடத்திட்டு இருப்பானுங்க. பெரும்பாலான வழக்குகள்ல நாம்ம தலையிடுறதில்ல. ரொம்ப
சிக்கலான வழக்குன்னுத்தாம் அதுல நம்ம தலையீடு இருக்கும். வழக்குகளப் பெரும்பாலும் கோர்ட்டுக்குப்
போவ வுடுறதில்ல. ஆபீஸ்லயே வெச்சி முடிச்சிடுவேம். அப்பிடி பல வழக்குகள முடிச்சிருக்கேம்.
அதுல செலதெ நீங்கத்தாம் கேள்விப்பட்டு வந்திருக்கீங்க. வெல்! பட் ஒங்களோட கதெ கோர்ட்டுல
அஞ்சு கேஸ் வரைக்கும் போயிருக்கிறதால கட்டெ பாக்காம எதையும் சொல்ல முடியாது. அதே
நேரத்துல வக்கீல அடிச்சிட்டதால அதுக்காக அந்த கேஸ்ஸ நாங்க எடுத்துக்கிட மாட்டோம்ன்னு
நீங்க நெனைச்சிட வேண்டாம். எங்களப் பொருத்தவரை வழக்கு அவ்வளவுதாம். அது வக்கீல அடிச்சா
என்னா? யார்ர அடிச்சா என்னா? வழக்க நடத்துனா நீங்க அதுக்கு பைசா கொடுக்கப் போறீங்க.
நீங்க பைசா கொடுத்தா நாங்க வழக்க நடத்தப் போறேம். நாம் ரொம்ப ஓப்பனா பேசுறேம். நமக்கு
அதுதாம் பிடிக்கும். நீங்களும் வெளிப்படையாவே பேசலாம். இன்னொரு விசயம் என்னான்னா ஒங்க
ஆப்போசிட் சைட் லாயர் கேரக்டர் வைஸ் ஒர்ஸ்ட்! அது எங்களுக்கு நல்லாவே தெரியும்! உண்மெ
எதுவோ அதெ தைரியமா சொல்லுங்க!"ன்னாரு செந்தில்குமாரு கையில காசிய வெச்சா வாயிலி
தோசெ இருக்கும்ங்றாப்புல.
"திரும்பவும் ஒஞ்ஞளுக்குப் பொரையேறிடாதுல!"ன்னாம்
விகடு நடந்த கதையெ நாஞ் சொன்னா பொரையேறி பொரையேறி நெஞ்சவிஞ்சுப் போயி பொக்குன்னு உசுருப்
போயிடும்ங்றாப்புல.
"ஆக்சுவலா நீங்க என்ன பண்ணுறீங்க?"ன்னாரு
செந்தில்குமாரு சிரிச்சாரு உம்மணாமூஞ்சியப் போல உக்காந்து இருந்துக்கிட்டு ஊமைக் குத்தா
குத்திட்டீயேங்றாப்புல.
"சின்ன புள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக்
கொடுக்குற வேலையில இருக்கேம்!"ன்னாரு விகடு கொழந்தெ பெத்து பெரிய மனுஷனா ஆனப்
பெறவும் தன்னோட சகவாசம்ல்லாம் இன்னும் சிறு புள்ளைகளோடத்தாம்ங்றாப்புல.
"வாத்தியார்ர இருக்கேங்றதெ சுத்தி
வளைச்சிச் சொல்றதெப் பாத்தா வக்கீலாவும் இருக்கலாம் நீங்க!"ன்னாரு செந்தில்குமாரு
தலையச் சுத்தி மூக்கெ தொடுறவனுக்குப் பேருதாம் நாட்டுல வேலைக்காரேம்ங்ற பேருங்றாப்புல.
"நாம்ம கதெயச் சொல்லலாமா?"ன்னு
கேட்டுகிட்டு விகடு செய்யுவுக்குக் கலியாணம் ஆனதிலேந்து, இப்போ அந்த ஆபீஸ்ல உக்காந்திருக்கிற
வரைக்கும் பொழுது வடிய வடிய கதைய சொல்லி முடிச்சாம்.
"ஐநூத்துப் பக்கத்துக்கு மேல எழுத
வேண்டிய கதையால்லா இருக்கு!"ன்னு சிரிச்சிக்கிட்டெ சொன்னாரு செந்தில்குமாரு சிறுகதை
எழுதுறேம்ன்னு உக்காந்தவேம் அதெ தொடர்கதையா எழுத ஆரம்பிசிட்டதெ போல, "பை த வே
சார்! என்னைக் கேட்டா இந்த வழக்குல ஒண்ணுமே இல்ல. ஒங்க தங்கச்சிக்குத் தைரியம் பத்தல.
அந்தத் தைரியம் இருந்திருந்தா நீங்க சொல்ற பஞ்சாயத்துலயே முடிஞ்சிருக்க வேண்டிய விசயம்
எல்லாமும். அன்ட் ஸோ, ஒங்களுக்கும் தைரியம் பத்தலன்னுத்தாம் சொல்வேம். அந்தப் பஞ்சாயத்துலயே
வெச்சி அந்த டாக்கடர்ருப் பயல வெச்சி செமத்தியா அடிச்சிருந்தீங்கன்னா பிரச்சனை அன்னிக்கே
முடிஞ்சிருக்கும். சார்! சில விசயங்கள பேசித் தீக்கவே முடியாது. அடிச்சி ஒதைச்சித்தாம்
தீர்க்க முடியும். இந்த ஆபீஸ்ல பொரையேறுன நம்மளத்தானே பாத்திருக்கீங்க! இந்த ஆபீஸூ
எத்தனெ மொறை ரணகளமாயிருக்கு, எவ்ளோ சாமானுங்க ஒடைஞ்சிருக்குங்ற கதெய எந் தம்பிகள
கேட்டாத்தாம் தெரியும்!"ன்னு பக்கத்துல ஒக்காந்திருந்த ஆனந்தகுமாரையும், நந்தகுமாரையும்
காட்டுனாரு செந்தில்குமாரு வக்கீல்ங்றவங்க லா மாஸ்டர்ரா மட்டுமில்லாம ஸ்டண்ட் மாஸ்டராவும்
இருக்கணும்ங்றாப்புல. அத்தோட அவரால நிறுத்த முடியல. தொடந்தாப்புல ரொம்ப உணர்ச்சிவசப்பட்டவரெப்
போல அவரே பேசுனாரு.
"ஆளு நாம்ம தாங்கி தாங்க நடக்குறதால
பெலம் இல்லாத ஆளுன்னு நெனைச்சிக்காதீங்க. பேசிப் பாப்பேம். ஒத்து வரலன்னா அடி வெளுத்து
எடுத்துடுவேம். இந்தக் கும்பகோணத்துல அட்வகேட் செந்தில்குமார்ன்னு சொல்லிப் பாருங்க
ச்சும்மா நால தெசையும் அலறும், தெறிச்சி ஓடும். ஒங்க தங்கச்சி அடிச்சதுல டூ லேட். அப்பிடித்தாம்
சொல்லுவேம். எவ்ளோ நாளு கழிச்சி எடுத்த செருப்ப மின்னாடியே சென்னையில குடும்பம் வெச்சீங்கயில்ல
அங்கயே வெச்சி அடிச்சிருக்கணும். அங்கயே வெச்சி அடிச்சிருந்தா கதெ முடிஞ்சிருக்கும்.
இதுக்குல்லாம் அதுதாம் ஒன்லி சொல்யூசன். அண்ணன் தம்பி ஒதவாத எடத்துல கூட அடி ஒதவும்ன்னு
சொல்லுவாங்க யில்ல. அதுதாம் உண்மெ. ஆரம்பத்துலயே வெச்சி அடிச்சாத்தாம் பயம் வரும்.
எல்லா விசயமும் ஒரு முடிவுக்கு வரும். ரொம்ப லேட்டா வெச்சி அடிச்சா அவனுங்களுக்கு
அதெல்லாம் புரியாது. நம்மள பழி வாங்கணும்ன்னுத்தாம் நிப்பானுங்க."ன்னாரு செந்தில்குமாரு
தல புராணத்துக்கு இடையிலயே அதெ பாடுறவேம் தன்னோட சுய புராணத்தெ பாடிக்கிறாப்புல.
வக்கீலு செந்தில்குமாரு பேசுனது அவனுக்கு
வித்தியாசமா இருந்துச்சு. நாட்டுல சட்டமெல்லாம் அடிக்கிறதுக்கு எதிரா இருக்குறப்போ
சட்டத்தெ கையில எடுத்துப் பேச வேண்டிய வக்கீல் சட்டத்தால செல்லுபடியாகாதது கூட அடிதடியில
செல்லுபடியாகும்ன்னு எப்பிடிப் பேசலாம்ன்னு வேற ஆச்சரியமா இருந்துச்சு விகடுவுக்கு.
"வாத்தியார்ரா இருந்துகிட்டு நாம்ம புள்ளையளோயே அடிக்கிறதில்ல. நாம்ம எப்பிடிங்கய்யா
தோளுக்கு மேல இருக்குறவங்களப் போயி அடிக்கிறது?"ன்னாம் விகடு சின்ன லோட்டாவுல
இருக்குற டீத்தண்ணியையே குடிக்க முடியாதவேம் பெரிய லோட்டாவுல இருக்குறதெ எப்பிடிக்
குடிக்க முடியும்ங்றாப்புல.
"அங்கத்தாம் தப்பு பண்ணுறீங்க சார்!
இதெ மாதிரி எங்க குடும்பப் பிரச்சனையில எங்க அக்கா புருஷன் இருக்காரே, எங்க அத்தான்,
அவர்ர இப்பிடித்தாம் கறி விருந்துல வெச்சி அடிஅடின்னு அடிச்சி வெளுத்து எடுத்தேம்.
அன்னிலேந்து இன்னிய வரைக்கும் எங்க அத்தான் பொட்டிப் பாம்பா அடங்கிக் கெடக்கறாரு.அன்னிக்கு
மட்டும் அடிக்கலன்னா என்னா நடக்கும்றீங்க? இன்னும் எகிறிகிட்டெ இருப்பாரு. அவரே சமாளிக்கிறதெ
எங்களுக்குப் பெரும்பாடா இருக்கும். இப்போ நம்மளப் பாத்தாலே போதும் பத்தடி தூரம்
தள்ளித்தாம் நிப்பாரு. நாம்ம இங்க நின்னா அங்க நிப்பாரு. அங்க நின்னா இங்க நிப்பாரு.
பயந்தாம் சார் உலகத்துல எல்லாமே. அந்தப் பயத்தை உண்டாக்காத வரைக்கும் சில பேர்கள சமாளிக்கவே
முடியாது. ஒங்க தங்கச்சி என்னிக்கு அந்த டாக்டர்ரு புடவையக் கட்டுனான்னு தெரிஞ்ச அன்னிக்கே
அப்பிடியே அவனெ கதவெ தொறந்துக்கிட்டு வெளியில பிடிச்சித் தள்ளிருக்கணும் சார். அப்படி
பண்ணிருந்தா அன்னிக்கே ப்ராப்ளம் சால்வ்ட்டு சார். இன்னொரு விசயம் சொல்லட்டுமா சார்!
ஒங்க ஆப்போசிட் லாயர் ஒரு ஹோமோ செக்சுவல். அது தெரியுமா வாட் ஐ மீன்?"ன்னாரு
வக்கீல் செந்தில்குமாரு சட்டத்தெ கையில எடுத்தா பயப்படாதவேம் கூட கட்டையைக் கையில எடுத்தா
பயப்படுவாம்ங்றாப்புல.
அதெ கேட்டதும் விகடு பொரையேறுனாப்புல
இருமுனாம். "தண்ணியக் கொடுங்கப்பா சாருக்கு! நம்மள பொரையேற வெச்ச சார்ர நாம்
போரையேற வெச்சிட்டேம்!"ன்னு பகபகன்னு சிரிச்சாரு செந்தில்குமாரு ஒங் கதெ அனுபவத்துல
ஒண்ணுன்னா வக்கீலுங்க கேட்ட கதெ கோடியில ஒண்ணுங்றாப்புல. சுப்பு வாத்தியாரும், செய்யுவும்
வக்கீலு சொன்னதெ கேட்டதும் அதுக்கு எப்பிடி நடந்துக்கிறது, என்னத்தெ சொல்றதுன்னு புரியாம
கண்ணு விழி ரண்டும் தெரண்டாப்புல முழிச்சாங்க.
"சரி! அதெ விடுங்க. ஒலகத்துல சில
விசயங்கள மாத்த முடியாது. நாம்ம நம்ம விசயத்துக்கு வருவேம். ஒங்க தங்கச்சிய தைரியப்படுத்துறது
முக்கியம். இப்பிடி பயந்து பயந்து ஊர்ர வுட்டு ஓடியாறத நிப்பாட்டணும். இதெ அவனுங்க
கேள்விப்பட்டா பெரிய வெற்றியப் போலத்தாம் நினைப்பானுங்க. ஒங்க தங்கச்சிக்கு இந்த வழக்குக்கு
அப்பாற்பட்டு நாம்ம சில அட்வைஸ் பண்ணணும்ன்னு நெனைக்கிறேம் வித் யுவர் பர்மிஷன்!"ன்னாரு
செந்தில்குமாரு புத்திச் சொல்லியே ஒருத்தரோட புத்திய எப்படி வாணும்ன்னாலும் மாத்திப்புடலாம்ங்றாப்புல.
"தாராளமா சொல்லுங்கய்யா! ஒஞ்ஞ அனுபவத்துல
எவ்வளவையோ பாத்திருப்பீயே! அதெ நீஞ்ஞ சொல்றப்பத்தாம் தெளிவு உண்டாவும். ஒஞ்ஞளுக்கு
அதெ சொல்ற அத்தனெ தகுதியும், உரிமெயும் இருக்குங்கய்யா! நீஞ்ஞளும் அவளுக்கு ஒரு யண்ணனப்
போலத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு புத்திக் கொள்முதலெ பண்ணிக்கிடுறதுக்குக்
கணக்கு இல்லங்றாப்புல.
"வெல்! செய்யு! லிசன்! மொதல்ல ஒரு
விசயத்தப் புரிஞ்சிக்கோங்க. கற்புங்றது நம்ம மனசுக்கு நாம்ம சரியா இருக்குறதுதாம்.
அதெ மத்தவங்களுக்கு எல்லாம் காட்டிக்கிட்டு நிக்கணுங்ற அவசியம் இல்ல. வழக்குன்னு வந்துட்டா
கண்ணகியையும் பத்தினி இல்லங்ற மாதிரிக்கித்தாம் வாதாடுற மாதிரிக்கி இருக்கும். அதுக்காக
கண்ணகி பத்தினி இல்லங்ற மாதிரிக்கி ஆயிடுமா? ஆயிடாதுல்ல! நமக்குத் தெரிஞ்சு பாத்தீங்கன்னா,
புருஷன வெச்சிக்கிட்டு பஜாரித்தனம் பண்ணவங்களும் இருக்காங்க. புருஷனப் பிரிஞ்சி கடெசி
வரைக்கும் பத்தினியா இருந்து புள்ளைங்கள வளத்து ஆளாக்குனவங்களும் இருக்காங்க. ஸோ அதெப்
பத்தி நீங்க இனுமே கவலைப்படக் கூடாது. அதெ கேர் பண்ணிக்கவே கூடாது. யாரு என்னத்தெ சொன்னா
என்னா? அதெ நீங்க இனுமே காதுல வாங்கிக்கவே கூடாது ஓக்கே? இது பர்ஸ்ட். செகண்ட் வழக்குன்னு
வர்றப்போ, கிராஸ்ன்னு வர்றப்போ இதெ நீங்க ஏத்துக்கிட்டுத்தாம் ஆவணும். இட்ஸ் கொய்ட்
நேச்சுரல். அதெ ஒண்ணும் செஞ்சுட முடியாது. எந்த வழக்குலயும் நிதானமா இருக்குறவங்கத்தாம்
ஜெயிக்கிறாங்றதெ நீங்கப் புரிஞ்சிக்கிடணும். நாந்தாம் ஜெயிப்பேம்ன்னு ஆர்பாட்டம் பண்ணுறவேம்
கேஸ்ல ஜெயிச்சதா சரித்திரமே இல்ல. அந்த ஆர்ப்பாட்டத்தப் பாத்து நாமளும் பதிலுக்கு பதிலடி
கொடுக்குறாப்புல ஆர்ப்பாட்டம் பண்ணணும்ன்னு நெனைச்சா நிச்சயமா நாம்மத்தாம் தோத்துப்
போவேம். நான் வழக்குல தோத்துப் போறதெ மட்டும் சொல்ல, வாழ்க்கையில தோத்துப் போறதையும்
சொல்றேம். இந்த வழக்க சுத்தமா மறந்துடுங்க. இதெ விட்டுட்டு நீங்க அடுத்தது என்னத்தெ
பாக்கணும்ன்னு நெனைக்குறீங்களோ அதெ பாருங்க. ஒரு ஜாப், ஒரு செகண்ட் லைப். அதெ மட்டும்
பாருங்க. வழக்க தயவுசெஞ்சுப் பாக்காதீங்க. அதெ கண்ணுக்குப் பக்கத்துல கொண்டு வந்து
வெச்சிப் பாக்கவே பாக்காதீங்க. ஒரு சின்ன கல்ல கண்ணுக்குப் பக்கத்துல கொண்டு வந்துப்
பாத்தா அது ரொம்ப பெரிசாத்தாம் தெரியும். அதெ பெரிய கல்ல கண்ண விட்டு வெலக்கி தூரத்துல
வெச்சிப் பாத்தா அது ரொம்ப சின்ன கல்லாத்தாம் தெரியும். விசயம் அவ்வளவுதாம். எதெ எங்க
வெச்சிப் பாக்கணுமோ அதெ அங்க வெச்சிப் பாக்கணும். என்னோட கருத்துப்படி ஒங்க அண்ணன்
ஒங்களப் பத்தி சொன்ன கதையிலேந்து நீங்க சின்ன பிரச்சனைய எல்லாம் கண்ணுக்குப் பக்கத்துல
வெச்சிப் பாக்குறதா நெனைக்கிறேம். தயவுபண்ணி எந்தப் பிரச்சனையா இருந்தாலும் செரித்தாம்
அதெ கண்ணுக்கு தூரத்துல வெச்சிப் பாருங்க. சிம்பிளா சீக்கிராமவே ஒரு சொல்யூசன் ஒங்களுக்குக்
கெடைச்சிடும்!"ன்னாரு செந்தில்குமாரு பாக்குறவேம் சரியா பாத்தா கோணலும் நேராத்தாம்
தெரியும்ங்றாப்புல.
"ரொம்ப சரியாச் சொன்னீங்கய்யா!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு கண்ணாடி போட்டா கண்ணே மாறிப் போயிடும்ங்றாப்புல.
"அவ்வளவுதாம் சார் விசயம். நாம்ம
சொன்னது வாழ்க்கையில எல்லாத்துக்கும் பொருந்தும். நாம்ம பாக்குற பார்வைத்தாம் நம்மளோட
வாழ்க்கையையே மாத்துது. அப்படிங்றப்போ ஏன் நாம்ம சரியான பார்வையிலப் பாக்கக் கூடாது?
நாம்ம மாத்த வேண்டியது மத்தவங்கள கெடையாது. நம்மளோட பார்வையைத்தாம். இந்த ஒலகத்தை
நம்மாள என்னிக்கும் மாத்த முடியாது. பட் நம்மளோட பார்வைய நாம்ம இஷ்டப்படி எப்படி வேணும்ன்னாலும்
மாத்தக்கிடலாம் ரைட்!"ன்னாரு செந்தில்குமாரு மஞ்ச கண்ணாடிய போட்டுக்கிட்டா ஒலகமே
மஞ்சளா மாறிப் போயிடும்ங்றாப்புல.
"ஒஞ்ஞகிட்டெ வந்தது மவளுக்கு மட்டுமில்ல.
நம்மளுக்கும் ரொம்ப தெளிவா இருக்குங்கய்யா. இப்பிடின்னு தெரிஞ்சா குடும்பத்துல எல்லாத்தையும்
அழைச்சிட்டு வந்திருப்பேம். இந்தச் சம்பவத்துக்குப் பெறவு குடும்பத்துல எல்லாமே கொழம்பித்தாம்
போயிக் கெடக்குங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒருத்தருக்குப் போடாம ஊருக்கே
போட்டாத்தாம் தடுப்பூசியால பெரயோஜனம் உண்டுங்றாப்புல.
"நீங்க என்னிக்கு வேணும்ன்னாலும்
ஒங்க குடும்பத்துலேந்து எத்தனைப் பேர்ர வேணும்னாலும் அழைச்சிட்டு வாங்க சார்! நாம்ம
பேசுறேம். தெளிவா பேசுறப்போ நிச்சயம் தெளிவாயிடுவாங்க. நாம்ம தெளிவா பேசாதாப்பத்தாம்
சுத்தி இருக்குறவங்க கொழம்பிப் போயிடுறாங்க. எது நடந்தாலும் செரித்தாம் அதெ உள்ள
நின்னுப் பாக்காதீங்க. வெளியில நின்னு பாருங்க. இந்த ஒலகத்துக்கும் ஒங்களுக்கும் எதுவும்
சம்பந்தமில்லன்னு நெனைச்சிப் பாருங்க. யூ காட் எக்சாட் சொல்யூசன். ஸோ நீங்கன்னு ஒருத்தரு
கெடையாதுன்னு நெனைச்சி ஒங்கள இன்னொருத்தர்ரா வெச்சிப் பாக்குறப்பத்தாம் ஒங்களால ஒரு
விசயத்த பேஸ் பண்ண முடியும்! எதெயுமே வெளியில இருந்துப் பாருங்க. உள்ள இருந்த மட்டும்
பாக்காதீங்க, ப்ளீஸ்!"ன்னாரு செந்தில்குமாரு அவ்வவேம் மனசுலேந்துதாம் உலகம் உருவாகுதுங்றாப்புல.
அதெ கேட்டுட்டுச் சரிதாங்ற மாதிரிக்கி தலைய ஆட்டுனாரு சுப்பு வாத்தியாரு வேதாந்தம்
கேட்டு ஏகாந்தம் அடைஞ்சவர்ரப் போல.
"இதுக்கு மேல நீங்க கேஸ் கட்டுகளக்
கொண்டாந்தாத்தாம் அது எந்த நெலையில இருக்கு, எப்பிடி இருக்குறதெ பாத்துட்டு மேற்கொண்டு
பேசலாம்!"ன்னாரு செந்தில்குமாரு கறக்குற மாட்டெ கண்ணுல காட்டாம அத்து எம்மாம்
பால்ல கறக்கும்ன்னு சொல்ல முடியாதுங்றாப்புல.
"ரண்டு மூணு நாளுக்குள்ள கேஸ்ஸூ கட்டுகளோட
வந்திடுறேம்! கட்டுக இஞ்ஞ தாராசுரத்துல யில்ல. அஞ்ஞ ஊர்ல திட்டையில இருக்கு! கட்டுகளோட
ஒஞ்ஞள வந்துப் பாக்குறேம்."ன்னாரு சுப்பு வாத்தியாரு சாதகப் பொருத்தம் பாக்க வந்த
எடத்துல, கௌம்புற அவ்சரத்துல சாதகத்தெ மறந்துப்புட்டு வெச்சிட்டு வந்துட்டோம்ன்னு சொல்றாப்புல.
“இப்போ நீங்க கௌம்பலாம். கன்சல்டேஷன் பீஸ்
ஐநூத்து ரூவா மட்டும் கொடுங்க. மேக்கொண்டு கட்டுகளோட வாங்கப் பேசலாம்!”ன்னாரு செந்தில்குமாரு
கிளைமேக்ஸத் தாண்டி சினிமா படம் ஓடப்படாதுங்றாப்புல.
சுப்பு வாத்தியாரு மவனெப் பாத்தாரு. விகடு சட்டைப் பையிலேந்து ஐநூத்து
ரூவாய எடுத்துக் கொடுத்தாம். அதெ ஆனந்தகுமார்க்கிட்டெ கொடுங்றாப்புல கண்ணெ காட்டுனாரு
செந்தில்குமாரு. அதுபடியே ஆனந்தகுமாரு பக்கம் பணத்தெ நீட்ட அவரு அதெ வாங்கி மேசை மேல
வெச்சாரு. சுப்பு வாத்தியாரும் செய்யுவும் எழும்பி நின்னு கௌம்புறோம்ங்றாப்புல கைய
குமிச்சாங்க. பதிலுக்கு செந்தில்குமாரும் கையக் குமிச்சிக் கௌம்பலாம்ங்றாப்புல கண்ணெ
காட்டுனாரு.
வக்கீல் ஆபீஸ வுட்டு மூணு பேத்துமா பாலக்கரை ரோட்டுல நடந்தாங்க. இந்த
வக்கீல்களப் பாத்ததுல சுப்பு வாத்தியாருக்கு ஒரு திருப்தி இருந்துச்சு. அதெ நடந்து
வர்ற வழியில பேசிட்டு இருக்குறப்போ சொல்லிட்டு இருந்தாரு. "மொதல்லயே கேஸ்ஸ
இஞ்ஞக் கொண்டாந்து கொடுத்திருக்கணும்டாம்பீ!"ங்ற வரைக்கும் ரொம்ப சந்தோஷமா
சொல்லிட்டே வந்தாரு சுப்பு வாத்தியாரு அஸ்திவாரத்தெ போடுறதுக்கு மின்னாடியே பத்தாவது
மாடியே கட்டிப்புடணும்ங்றாப்புல.
*****
No comments:
Post a Comment