11 Feb 2021

ஐந்து வழக்குகளும், மூன்று வக்கீல்களும்!

ஐந்து வழக்குகளும், மூன்று வக்கீல்களும்!

செய்யு - 714

            தாராசுரத்துக்கு வூடு மாறி ஒரு பெரச்சனெ சரியானுச்சு. அடுத்தப் பெரச்சனையா நடந்துக்கிட்டு இருக்குற வழக்குகளுக்கு வக்கீலப் போடுறதுக்காகக் கோவிந்தெ வெச்சி சிவபாதத்தெ பாக்குறதுன்னு யோசனையில இருந்தாரு சுப்பு வாத்தியாரு. வழக்குக் கட்டுகளப் பாத்துட்டு எடுக்க முடியலன்னு வக்கீல் சொல்லிட்டா மேக்கொண்டு என்னத்தெ பண்டுறதுங்ற கொழப்பத்துலயும் அவரு இருந்தாரு. நடக்கக் கூடாததெல்லாம் நடந்த பெறவு இனுமே எது நடந்தா என்னாங்ற சலிச்சுப் போன துணிச்சலும் மனசுல உண்டாயிருந்துச்சு அவருக்கு. அதால எதுவா இருந்தாலும் கல்லெறிஞ்சுப் பாக்குறது, வுழுந்தா பழம், வுழாட்டி வேறொரு கல்ல எடுத்து வீசுறதுங்ற முடிவுல இருந்தாரு. சிவபாதத்தெ பாத்துக் கேட்டுப் பாக்குறது, ஏத்துக்கிட்டா ஆச்சு, இல்லாட்டி வேற வக்கீலப் பாத்தாப் போச்சுங்ற தெடத்துக்கு இப்போ வந்திருந்தாரு சுப்பு வாத்தியாரு.

விகடுகிட்டெ சொல்லி திட்டை கெராமத்துல இருக்குற கட்டுகள ஒரு நாளு எடுத்துக்கிட்டு ஆர்குடிக்கு வந்துட சொல்லிட்டா, தாராசுரத்துலேந்து மவளெ அழைச்சிக்கிட்டு நாமளும் நேரா ஆர்குடிக்கு வந்துடுலாம்ன்னு திட்டம் பண்ணாரு சுப்பு வாத்தியாரு. இதெப் பத்திச் சொன்னதுல செய்யுவுக்கு என்னவோ அந்தச் சிவபாதம் வக்கீலப் பிடிக்கல. ஆர்குடி, திருவாரூருன்னு வக்கீலப் பாத்து வெச்சா இப்பிடித்தாம் இழுத்துட்டுப் போவும், கும்பகோணத்துல தனக்குத் தெரிஞ்ச வக்கீல வெச்சா அவரு வழக்க சீக்கிரமா முடிச்சிடுவாருன்னு ஒத்தக் கால்ல நின்னா செய்யு. வழக்கெ எடுக்குறதுக்கு மின்னாடியே அழிச்சாட்டியம் காட்டுற சிவபாதம் வக்கீலு வழக்க எடுத்த பின்னாடி என்னா அட்டூழியம் வாணாலும் பண்டலாம்ன்னு வேற சொல்லிட்டுக் கெடந்தா செய்யு. யாரு என்னான்னு வக்கீலப் பத்தி முழுசா தெரியாம கும்பகோணத்துல அவ்வே சொல்ற வக்கீல்கிட்டெ எப்பிடிக் கட்டெ கொடுக்குறதுங்ற தயக்கம் சுப்பு வாத்தியாருக்கு.

            செய்யு சியார்ஐ இன்ஸ்ட்டிட்யூட்ல படிச்சப்போ அவளோட சிநேகிதி பாரதியோட வழக்க முடிச்சிக் கொடுத்தவரு ஆனந்தகுமாருங்ற கும்பகோணத்து வக்கீலு. நாகர்கோயில்ல கலியாணம் கட்டிக் கொடுத்த செய்யுவோட இன்னொரு சிநேகிதியோட கேஸ்‍ஸையும் அவருதாம் முடிச்சிக் கொடுத்திருந்தாரு. அதுக்காக ஒரு வக்கீல் நோட்டீஸ் வுட்டதோட செரி. அவரே எதிர் பார்ட்டிகள நேர்லப் பாத்துப் பேசி முடிச்சி அத்தனெ சாமாஞ் செட்டுகளையும் வாங்கியாந்து கொடுத்துட்டு அதுக்குப் பெறவு இருவதினாயிரம் ரூவாய மட்டும் வாங்கிக்கிட்டதா சொன்னா செய்யு. செய்யுவோட வழக்குக்காக இது வரைக்கும் சிலவெ பண்ண காசிய நெனைச்சப்போ, எல்லா சாமாஞ் செட்டு, நகெ நட்டுகளெ வாங்கிக் கொடுத்துட்டு இருவதினாயிரம் மட்டும் வாங்கிகிட்ட ஆனந்தகுமாரு வக்கீலு உயர்வான ஆளாத்தாம் தெரிஞ்சாரு சுப்பு வாத்தியாருக்கு. இருந்தாலும் அந்த வக்கீலப் போயி நேர்லப் பாத்துப் பேசி மனசுக்கு ஒரு தெளிவோ, திருப்தியோ வர்றாம கட்டுகள எப்பிடிக் கொடுக்குறதுங்ற யோசனெ அவருக்கு. அதெ செய்யுகிட்டெயும் வெளிப்படையா சொன்னாரு. அப்பிடின்னா அவர்ரப் பாத்து பேசிட்டு திருப்திப்பட்டா கொடுக்கலாம்ன்னு சொன்னதெ செய்யுவும் ஒத்துக்கிட்டா.

            சுப்பு வாத்தியாரு விகடுவுக்குப் போனப் போட்டு கும்பகோணத்துக்கு வாரச் சொன்னாரு. விகடு சனிக்கெழமெ கெளம்பி வந்தா தாராசுரத்துல தங்கிட்டு, வக்கீலையும் பாத்துட்டு, ஞாயித்துக் கெழமெ ஊருக்குத் திரும்பிப்புடலாம்ன்னு சொன்னாம். அப்பிடிச் செய்யுறதுதாம் சரின்னு சுப்பு வாத்தியாரு சொன்னதுக்கப்புறம், அதுப்படியே விகடு வூட்டுல பொண்டாட்டிக்காரியையும், மவளையும் அழைச்சிக்கிட்டு சனிக்கெழமெ கெளம்பித் தாராசுரத்துக்குப் போனாம். அப்பிடி கெளம்பி வர்றப்பவே வழக்குக் கட்டுகளையும் எடுத்துட்டு வர்றதாத்தாம் சொன்னாம் விகடு. சுப்பு வாத்தியாரு அவசரப்பட்டுக் கட்டு கையில இருக்குறதால  கொடுத்துடற நெலமெ நம்மள அறியாம வந்துடும், போயிப் பாத்துத் திருப்திப்பட்டா மறுக்கா அலைச்சல் ஆனாலும் பரவாயில்ல, எடுத்தாந்துக் கொடுத்துக்கிடலாம்ன்னுட்டாரு அலைச்சல நெனைச்சுக்கிட்டு ஆராயாம வுட்டுப்புடக்கூடாதுங்றாப்புல. அதால கையில வழக்குக் கட்டுக இல்லாம வெறுங்கையோடத்தாம் ஆனந்தகுமாரு வக்கீலப் பாக்கப் போனாங்க விகடுவும் சுப்பு வாத்தியாரும் செய்யுவும்.

            கும்பகோணத்துல கணித மேதை ராமானுசம் படிச்ச ஆடவர் கல்லூரி வழியாப் போறப்ப வர்ற பழைய பாலக்கரையில இருந்துச்சு வக்கீலு ஆனந்தகுமாரோட ஆபீசு. அவரு மட்டுமில்லாம அவரு இன்னும் ரண்டு வக்கீல்களோட சேர்ந்து மூணு பேர்ரா ஆபீசப் போட்டிருந்தாங்க. ஆபீஸூக்கு மின்னாடியே செந்தில்குமார், ஆனந்தகுமார், நந்தகுமார்ன்னு மூணு பேத்தோட பேரும் போட்டிருந்த ப்ளக்ஸ் போர்ட்டு மேல மாட்டியிருந்துச்சு.

ஆனந்தகுமாரு வடநாட்டு ஆளெப் போல, பாக்குறதுக்கு செக்கச் செவேல்ன்னு சேட்டுக் குடும்பத்து பையனப் போல இருந்தாரு. வயசு அநேகமா முப்பத்துக்குள்ளத்தாம் இருக்கணும் அவருக்கு. செந்தில்குமாருதாம் அவங்களுக்குத் தலைவர்ரப் போல இருக்கணும். அவரு ஆபீஸ்ல நொழைஞ்சதுமே மித்த ரண்டு பேரும் வணக்கம்ண்ணான்னு சொன்னாங்க. செந்தில்குமார் ஒரு கால்ல தாங்கித் தாங்கி நடந்தாரு. அவருக்கு கால்ல பொறப்புலேந்தே அப்பிடி ஒரு பெரச்சனெ இருக்கும் போல தெரிஞ்சிச்சு. அவரும் ஆளு பாக்க செவப்பா வயசு நாப்பதெ நெருங்குறாப்புல இருந்தாரு. இந்த ரண்டு ஆளுகளயும் பாக்குறப்போ நந்தகுமார் ஒல்லியா கருப்பா இருந்தாரு. அவருக்கும் வயசு அநேகமா முப்பத்துக்குள்ளத்தாம் இருக்கணும். ஆன்னா தோற்றத்துல அவரு நாப்பதெ கடந்தாப்புல தெரிஞ்சாரு.

            சுப்பு வாத்தியாரு, செய்யு, விகடுன்னு மூணு பேரும் மொதல்ல கும்பகோணத்து வக்கீல் ஆபீஸ்ல நொழைஞ்சப்போ நந்தகுமார் மட்டுந்தாம் ஆபீஸ்ல உக்காந்து கம்ப்யூட்டர்ல என்னத்தையோ பாத்துட்டு இருந்தாரு. கொஞ்ச நேரத்துல ஆனந்தகுமார் அப்பாச்சி பைக்ல வந்து எறங்குனாரு. அடுத்த அஞ்சு நிமிஷத்துல வூட்டக்குள்ளார யிருந்து செந்தில்குமாரு காலத் தாங்குனாப்புல வந்து சேந்தாரு. அந்த வூடு செந்தில்குமாரோட வூடு. வூட்டுக்கு மின்னாடி இருந்த எடத்தெ தடுத்து ஆபீஸ்ஸா போட்டிருந்தாரு. செந்தில்குமாரு பெரிய சொழல் நாற்காலியிலப் போயி உக்காந்தாரு. அந்த நாற்காலியோட உச்சியில புலி ஒண்ணு உறுமிக்கிட்டு இருக்குற பொம்மெ கச்சிதமா பொருத்தப்பட்டு இருந்துச்சு. அந்த நாற்காலிக்கு மின்னாடி பெரிய மேசெ. அதுல மேல சட்டப்புத்தகங்களும், வழக்குக் கட்டுகளும் ரொம்ப நேர்த்தியா அடுக்கி வைக்கப்பட்டு இருந்துச்சு.

            திருவாரூர்ல திருநீலகண்டன் வக்கீலோட ஆபீசு அப்பிடி இருக்காது. உள்ள நொழைஞ்சாலே தூசி நெடி அடிக்கும். வெளியில வர்றதுக்குள்ள ஒரு ஒட்டடையாவது ஒடம்புல சிக்காம இருக்காது. அவரோட ஆபீசு தரையில கூட்டியே நெடுநாளு ஆயிருக்கும். உள்ளார வந்துட்டுப் போனவங்களோட காலடியில உதுந்த மண்ண அச்சு அசலா அப்பிடியே ஒரு வருஷம் கழிச்சுப் போனாலும் பாக்கலாம். வருஷத்துல ஆயுதப் பூசை அன்னிக்கு மட்டும் எப்பிடியோ ஆபீஸச் சுத்தம் பண்ணி அத்தனைக்கும் விபூதி பட்டையையும், சந்தனப் பொட்டையும், குங்குமப் பொட்டையும் வெச்சிருப்பாரு. அப்போ ஒரு வாரத்துக்கு அவரோட ஆபீஸூ பாக்குறதுக்குக் கொஞ்சம் சுத்தமா இருக்கும். அதுக்குப் பெறவு திரும்ப பழையப்படி ஆயிடும். திரும்ப அந்த ஆபீஸூ சுத்தமாவ அடுத்த ஆயுத பூசைத்தாம் வந்தாவணும். அதுக்காகவே வக்கீலு திருநீலகண்டன் ஆபீஸ்ஸத் தொறந்ததுமே நாலு பத்திகள கொளுத்தி புகைய வுட்டுத்தாம் வெச்சிருப்பாரு அழுக்கு வாடெ பொறுக்காதவங்க ஊதுவத்தி வாடையில சமாதானம் ஆவட்டும்ங்றாப்புல. விகடுவுக்கு இப்போ இந்த ரெண்டு வெதமான வக்கீல்களோட ஆபீசும் மாறி மாறி மனக்கண்ணுக்குள்ள வந்துப் போச்சுது.

            செந்தில்குமாரப் பாக்குறப்போ, அவரு அந்தச் சொழல் நாற்காலியில உட்கார்றப்போ சினிமாவுல வர்ற பிரமாண்டமான வக்கீலப் பாக்குறாப்புலத்தாம் இருந்துச்சு, சிவாஜி சந்திரபாபுவப் போல மெலிஞ்சிருந்தா எப்படி இருப்பாரோ அப்பிடி. அத்தோட அவரோட ஆபீசும் அப்பிடித்தாம் சினிமாவுல பாக்குற மெரட்சியான ஆபீஸ்ஸப் போலத்தாம் இருந்துச்சு செட்டிங் போட்டாப்புல. ஆபீஸ்ஸ ஏசிப் பண்ணி வெச்சிருந்தாரு. மித்த ரண்டு வக்கீல்களும் சாதாரண சொழல் நாற்காலியிலத்தாம் அவருக்கு எடது பக்கத்துல ஒருத்தர்ன்னும், வலது பக்கத்துல ஒருத்தர்ன்னும் பக்கத்துப் பக்கத்துல உக்காந்திருந்தாங்க. அவுங்களோட சொழல் நாற்காலிக்கு மின்னாடி இருந்த மேசையில கம்ப்யூட்டரு ரண்டு பேத்துக்குமே தனித்தனியா இருந்துச்சு. அவங்களுக்கு மின்னாடி எட்டு ப்ளாஸ்டிக் நாற்காலிங்க போட்டிருந்துச்சு. அந்த நாற்காலியில மின்னாடி இருந்த மூணுலத்தாம் விகடு, சுப்பு வாத்தியாரு, செய்யுன்னு மூணு பேத்தும் ஆளுக்கொரு நாற்காலியில உக்காந்திருந்தாங்க.

            "சொல்லுங்க!"ன்னாரு ரொம்ப தோரணையாவும் அதே நேரத்துல கொஞ்சம் அலட்சியமாவும் வக்கீல் செந்தில்குமாரு. அதெ பாக்குறப்ப கோர்ட்டுல வெச்சி வெசாரிக்கிறதப் போலத்தாம் இருந்துச்சு. ஒண்ணுக்கு மூணா வக்கீலப் பாத்ததும் விகடுவுக்கு மொதல்ல பேச்சே வாரல. திக்குறாப்புல தடுமாறுனாம் கோணவாயனெப் போல. சுப்பு வாத்தியாருக்கும் தடுமாற்றமா இருந்திருக்கும் போல வாலிபத்துல இருக்குறவனே தடுமாறுறப்போ வயசான நாம்ம என்னத்தெ பண்டுவேம்ங்றாப்புல. அவரும் சொல்ல வாயெடுத்து எதெ மொதல்ல சொல்றது, எதெ பின்னாடி சொல்றதுன்னு தடுமாறித்தாம் உக்காந்திருந்தாரு போத்திக்கிட்டுப் படுத்துக்கிடறதா, படுத்துக்கிட்டுப் போத்திக்கிடுறதான்னு கொழம்பிப் போனாப்புல. இதெ பாத்துட்டு செய்யுத்தாம் வாயத் தொறந்து, "நாம்ம ஏற்கனவே இஞ்ஞ ஆபீசுக்குப் பாரதியோட வந்திருக்கேம்ங்கய்யா. அப்போ ஆனந்தகுமாரு அய்யா மட்டுந்தாம் இருந்தாங்க. அப்பவே நாம்ம அய்யாகிட்டெ கன்சல்ட் பண்ணிருக்கேம். அய்யாவுக்கு எங் கதெ முழுக்க தெரியும்!"ன்னா தங் கதெயெ இப்போ இங்கே மறுக்கா சொல்றதுன்னா அத்து மறுஒளிபரப்பு பண்டுறாப்புலத்தாம்ங்றாப்புல.

            "கட்டு இருந்தா போதும். கதெ வேண்டியதில்ல. கட்டெ எடுத்து வந்திருக்கீங்களா?"ன்னாரு திரும்பவும் தோரணையா செந்தில்குமாரு லைசென்ஸ் இருந்தா போலீசுக்கிட்டெ நின்னுகிட்டுப் பதிலச் சொல்ல வேண்டியில்லங்றாப்புல.

            "இல்லீங்கய்யா! அய்யாவப் பாத்துட்டு எடுத்துக்குற மாதிரி இருக்குமான்னு தெரிஞ்சா எடுத்துட்டு வாரலாம்ன்னு இருந்தேம்ங்கய்யா!"ன்னு இப்போத்தாம் விகடு கொஞ்சம் தெகிரியமா வாயத் தொறந்தாம் உத்தரவு இல்லாம்ம உள்ளார வார்ற முடியுமாங்றாப்புல. அதெ கேட்டுப்புட்டு அட்டகாசமா என்னவோ ஜோக்கக் கேட்டதெப் போல சிரிச்சாரு செந்தில்குமாரு. "என்னாங்க சார் இது? வழக்க எடுத்துக்குறதுக்குதானே வக்கீலுங்க இருக்கேம். கேஸ்ஸ எடுத்துப்போமா மாட்டோமாங்ற சந்தேகம் ஏன் வந்துச்சு?"ன்னாரு விகடுவெப் பாத்து உள்ளார வந்தப் பெறவு என்னத்துக்கு உத்தரவெக் கேட்டுக்கிட்டுங்றாப்புல.

            "அய்யா! உண்மெயச் சொல்லவா?"ன்னாம் விகடு உண்மைங்றது நெனைச்சிப் பாக்குற கற்பனைய விட மோசமானதுங்றாப்புல.

            "வக்கீல்கிட்டெயும், டாக்கடர்கிட்டெயும் உண்மையை மறைக்கக் கூடாது சார்!"ன்னு வழக்கமா சொல்லுற வசனத்தெ செந்தில்குமார் சொன்னாரு கௌரவம் படத்துல வக்கீல் கதாபாத்திரத்துல வர்ற சிவாஜியே நேர்ல வந்துச் சொல்றாப்புல.

            "இத்து எந்த தங்கச்சியோட வழக்குங்க. ஒண்ணு ஜீவனாம்ச வழக்கு திருவாரூர் சிஜேயெம்ல நடந்து தீர்ப்பாச்சுதுங்க. அதுக்கு ஜீவனாம்சம் கெடைச்சபாடில்லீங்க. மேல் கோர்ட்டுல அப்பீல்ல இருக்குங்க. இன்னொண்ணு வன்கொடுமெ வழக்கு ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்துல நடக்குதுங்க. அதே ஆர்குடியில சார்பு நீதிமன்றத்துல எதிர்தரப்புல போட்டிருக்கிற ஹெச்செம்ஓப்பி வழக்கும் நடக்குதுங்க. இது தவுர ஆர்குடியில ரண்டு வழக்கையும் திருவாரூருக்கு மாத்தணும்ன்னு ரண்டு டிரான்ஸர் ஓப்பி வழக்கு திருவாரூரு சீப் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுல நடக்குதுங்க! இந்த வழக்குகள எடுத்து நடத்துன வக்கீலால்ல யிப்போ நடத்த முடியாத நெல!"ன்னாம் விகடு மளிகெ கடெயில வாங்க வேண்டிய சாமானுங்களுக்குப் பட்டியல் போடுறாப்புல.

            செந்தில்குமார் வெரல வுட்டு எண்ணிக்கிட்டெ, "ஒண்ணு, ரண்டு, மூணு, நாலு, அஞ்சு! அஞ்சு வழக்குங்க. கரெக்ட்?"ன்னாரு அழுத்தமா விகடுவப் பாத்து ஒண்ணாப்புப் புள்ள வெரல வுட்டுக் கூட்டல் கணக்கெ போடுறாப்புல.

            "ஆமாங்கய்யா!"ன்னாம் விகடு பள்ளியோடத்துப் புள்ளே போட்ட கணக்குச் செரித்தாம்ன்னு சொல்ற வாத்தியார்ரப் போல.

            "எத்தனெ வழக்கு இருந்தா என்னா? அதெ பாத்துக்கிடலாம். எடுத்து நடத்துன வக்கீலு யாரு? ஏம் இப்போ அவரால நடத்து முடியல? நாங்க இந்த வழக்க நடத்துலாம்ன்னா நோ அப்ஜெக்சன் பண்ணித் தருவாரா?"ன்னு அடுத்தடுத்ததா கேள்விகளக் கேட்டுக்கிட்டுப் போனாரு செந்தில்குமாரு சும்மாடு வெச்ச தலையில வரிசையா மூட்டைய தூக்கி வுடுறாப்புல.

            "அய்யா நாம்ம ஒவ்வொரு கேள்விக்கா பதிலச் சொல்லலாமுங்களாய்யா?"ன்னாம் விகடு குண்டாம் சோறா இருந்தாலும் ஒவ்வொரு வாயாத்தாம் திங்க முடியும்ங்றாப்புல.

            செந்தில்குமார் சிரிச்சிக்கிட்டெ, "கோர்ட்டு ஞாபவத்துலயே பேசிட்டேம் போலருக்கு. சொல்லுங்க! மொதல்ல வக்கீலுப் பேரு!"ன்னாரு வேலை கேட்டுப் போறவேம்கிட்டெ நேர்காணல் பண்டுறாப்புல.

            "திருநீலகண்டன் எம்.ஏ.,பி.எல்."ன்னாம் விகடு வித்வான்கிட்டெ சுருதி சுத்தமா பாடிக் காட்டுறாப்புல.

            "படிப்பெல்லாம் எதுக்கு?"ன்னு விகடுவெப் பாத்துச் சொன்னவரு, ஆனந்தகுமார்ரப் பாத்து, "யாருப்பா அந்த வக்கீலு? ஒங்களுக்கு யாருக்காச்சும் தெரியுமா? ரொம்ப பேமஸான ஆளா எப்பிடி?"ன்னாரு செந்தில்குமார் ஸ்ரீவில்லிப்புத்தூர்ன்னு சொன்னா அங்கத்தாம் தமிழ்நாட்டு அரச சின்னத்தோட கோபுரம் இருக்குங்றது தெரியுமாம்ங்ற மாதிரிக்கு.

            "மந்திரி கேஸ்ஸ ஒண்ணு எடுத்து செயிச்சதா அஞ்சாறு வருஷத்துக்கு மின்னாடி கேள்விப்பட்டு, பின்னாடி அவ்வேம் ஒரு கேனப்பயலப் போல வழக்கெ நடத்துறதா பேசிக்கிட்டு யில்ல."ன்னாரு ஆனந்தகுமாரு பாண்டிச்சேரின்னா அரவிந்தரு ஆசிரமம் மட்டுமில்ல சரக்குக்கும் அதாம் பேமஸ்ங்றாப்புல.

            "ஓ! கிழிஞ்சக் கோட்டோட வர்றதாவும், கருப்பா இருக்குற கோட்டு சாயம் போயி வெளுப்பா ஆனா பெற்பாடும் அதெ போட்டுட்டு வெள்ள கோட்டா கருப்பு கோட்டான்னு தெரியாத ரண்டுங்கெட்டான் கோட்டோட வர்றதாவும் சொல்லி சிரிச்சிக்கிட்டுக் கெடந்தோமே அந்த வக்கீலா?"ன்னாரு செந்தில்குமாரு கண்டதும் குபீர்ன்னு சிரிப்பெ கௌப்புற சிரிப்பு நடிகராங்றாப்புல.

            "அவ்வந்தாம்ண்ணே!"ன்னாரு ஆனந்தகுமாரு பத்து பொருத்தமும் மெத்த சரிதாம்ங்றாப்புல.

            "அவ்வேங்கிட்டெயெல்லாம் ஏம் சார் வழக்கக் கொடுக்குறீங்க? அவனெ ஒரு பைத்தியம்ன்னுத்தாம் நாங்கல்லாம் பேசிப்பேம்!"ன்னாரு செந்தில்குமாரு பல்லு வெலக்குற பிரஸ்ஸ வெச்சு வூட்டுக்குப் பெயிண்ட அடிக்க முடியும்மாங்றாப்புல. அதெ சொல்லிட்டு, "ஆப்போசிட் சைட் யாரு?"ன்னாரு ஒத்த ஆப்பை கழண்ட ஆப்பைன்னு ஆயிடுச்சு, மித்த ஆப்பையாவது எப்பிடி இருக்குன்னு பாப்பேம்ங்றாப்புல.

            "கங்காதரன், தஞ்சாவூரு வக்கீலு!"ன்னாம் விகடு சரியானப் பதிலெச் சொன்னாலும் தப்புன்னு சொல்லிப்புடுவோங்களோன்னு பயப்படுற புள்ளையாண்டனப் போல.

            "யாருப்பா! கருப்பா கட்டையா எதுக்கெடுத்தாலும் விசுக் விசுக்குன்னு பேசுவான்னே அவனா?"ன்னாரு செந்தில்குமாரு ஆனந்தகுமார்ரப் பாத்து அடையாளத்தெ சொன்னா படம் போட்டுக் காட்டுற ஓவியர்ரப் போல.

            "ஆம்மாங்கய்யா! அப்பிடித்தாம் இருப்பாரு, பேசுவாரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஊடால பூந்து பாக்காமலேயே பாத்ததெப் போல சொல்றீயளேன்னு அதெ ஊர்ஜிதம் பண்டுறாப்புல.

            "சரியான கிறுக்கப் பயல்!"ன்னு சொல்லிக்கிட்டுச் சிரிச்ச செந்தில்குமார், "ஒரு பைத்தியக்காரப் பயெ, ஒரு கிறுக்குப் பயெ. ரண்டு பேரும் கேஸ்ஸ எடுத்து நடத்துனா கிழிஞ்சிடும். மொத்தத்துல நீங்க பைத்தியம் பிடிச்சோ, கிறுக்குப் பிடிச்சோ ‍அலைய வேண்டியதுதாம்."ன்னு இன்னும் பெரிசா சிரிச்சாரு கட்டெ வண்டிய ஒட்டுறம்ங்கிட்டெ கார்ர கொடுத்தா அதெ எப்பிடி ஓட்டுவாம்ங்றாப்புல. மேக்கொண்டு பதில எதிர்பார்க்காம அவரே, "அப்போ கண்டிப்பா வக்கீல மாத்தித்தாம் ஆவணும். ஒரு கேஸ்ல முடிக்க வேண்டியதெ அஞ்சு கேஸ்ஸா ஆக்கி வெச்சிருக்கிறப்பே நெனைச்சேம், இந்த கோமாளித்தன வேலய யாரு பாத்திருப்பான்னு? நெனைச்சாப்புல அவனுங்க பேரையல்ல சொல்றீங்க சார்! தட்ஸ் ஓ.கே."ன்னாரு செந்தில்குமாரு நல்லா இருந்து நூலு கண்டெ சிக்குப் பிடிக்க வெச்சிட்டீங்களேங்றாப்புல.

            "மொதல்ல இவுங்கள வழக்குலேந்து காப்பாத்துறது முக்கியமில்லண்ணே. அந்த வக்கீல்கிட்டேயிருந்துதாம் இவுங்கள காப்பாத்தி ஆவணும்!"ன்னாரு ஆனந்தகுமாரு சாமியாடிய ஓட்டிப்புட்டா பேய பெரச்சனெ யில்லாம ஓட்டிப்புடலாம்ங்றாப்புல.

            "ஆமாம்டாம்பீ! சரியாச் சொன்னே!"ன்னு இன்னும் பெரிசா சிரிக்க ஆரம்பிச்சாரு செந்தில்குமார் சாப்புடுற மருந்தெ நிப்பாட்டிப்புட்டாவே நோயி போயிக் கொணம் காணும்ங்றாப்ல.

            "சார்! சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க! ஒரு வக்கீல்கிட்டெ வழக்கெ கொடுக்குறதுக்கு மின்னாடி அந்த வக்கீலு எப்பிடி என்னா ஏதுன்னு வெசாரிச்சிக்கிட்டுத்தாம் கொடுக்கணும். அப்படி கொடுக்கலன்னா, இப்பிடித்தாம் வழக்குலேந்து வெளியில வர்றதெ வுட, வக்கீல்கிட்டெயிருந்து வெளியில வர்றது பெரிய விசயமாயிடும்! செரி நம்மளப் பத்தி கொஞ்சம் விசாரிச்சிக்கிட்டெ கட்டுகள கொடுங்க. கட்டுகள எப்போ கொண்டு வர்றீங்கன்னு சொல்லுங்க!"ன்னாரு செந்தில்குமாரு தனக்குத் தானே ஒருத்தரு சூன்யத்தெ வெச்சிக்கிடக் கூடாதுங்றாப்புல.

            "ஏம் கட்டுகள இஞ்ஞ ஒஞ்ஞகிட்டெ கொடுக்க வந்தேம்ன்னு கேக்கவே யில்லயே?"ன்னாம் விகடு பாக்கிக் கொடுத்த சில்லரையில ஒத்தக் காசி கூடுதலா இருக்குங்றாப்புல.

            "அதெ வேற ஒங்க வாயால கேக்கணுமா? இந்த மாதிரி வக்கீல்களுங்கிட்டெ கொடுத்தா கேஸ்ஸ இந்நேரத்துக்கு மூணு வருஷமாவது இழுத்திருப்பானுவோ. இன்னும் பல வருஷங்க இழுப்பானுவோ. எத்தனெ வருஷம் கேஸ்க்குன்னு அலையுறது? பொண்ணுக்கு வேற வயசாவுது. ஒங்க நெலமை புரியுது. நீங்க எதுவும் சொல்ல வேணாம். ஒங்க வழக்க எடுத்துக்க நாங்க தயார். பட் கட்டுகளப் பாத்தாத்தாம் மேக்கொண்டுப் பேச முடியும்!"ன்னாரு செந்தில்குமாரு கொணப்படுத்துறேம்ன்னு சொன்ன பெற்பாடு நோப்பாடு கண்டவனெ கண்ணு மின்னாடி கொண்டாந்து நிறுத்துன்னு சொல்ற வைத்தியர்ரப் போல.

            "அண்ணந்தாம் சொல்லிட்டாப்புலல்ல! கட்டுகள என்னிக்கு எடுத்துட்டு வர்றீங்க?"ன்னாரு ஆனந்தகுமாரு பேஷண்டோட வந்தா ஆப்ரேஷன்ன ஆரம்பிச்சுப்புடலாம்ங்றாப்புல. நந்தகுமார் மட்டும் எதுவும் பேசாம அமைதியா எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு மட்டும் இருந்தாரு எதெயும் முழுசா கேக்குறதுக்கு மின்னாடி அவ்சரப்பட்டு நாமளா ஒரு முடிவுக்கு வாரக் கூடாதுங்றாப்புல.

            "ஒரு முக்கியமான விசயத்தையே நாஞ்ஞ யின்னும் ஒஞ்ஞகிட்டெ சொல்லல."ன்னாம் விகடு வுட்ட கொறை தொட்ட கொறை யில்லாம பேசுறதெ பேசி முடிச்சிடணும்ங்றாப்புல.

            "அண்ணே! ஏதோ சொல்லணும்ன்னு நெனைக்குறாங்க. சொல்லட்டும்!"ன்னாரு ஆனந்தகுமாரு செந்தில்குமாரப் பாத்து கேக்குற கதெயெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போன பழயக் கதெதாம்ங்றாப்புல.

            "தாரளமா! அதெ கேக்குறதுக்குத்தானே நாம்ம இருக்கேம். பதற்றப்படாம எதுவா இருந்தாலும் சொல்லுங்க!"ன்னு கிளாஸ்ல மூடி போட்டு டேபிள் மேல ஓரமா வெச்சிருந்த தண்ணிக் கிளாஸ்லேந்து தண்ணிய எடுத்துக் குடிக்க ஆரம்பிச்சாரு செந்தில்குமாரு திராவகத்தெ கொடுத்தா குடிக்க சொல்லப் போறீங்கங்றாப்புல.

            "எந் தங்காச்சி ஆப்போசிட் சைட் லாயரான கங்காதரன ஆர்குடி சப்கோர்ட்டுக்கு மின்னாடி வெச்சி செருப்பால அடிச்சிட்டா!"ன்னாம் விகடு யார்ர அடிச்சாலும் வக்காலத்துப் போட்டு வாதாட வக்கீலு வருவாங்க, வக்கீலையே அடிச்சா வக்காலத்துப் போட்டு வாதாட வக்கீலு வருவாங்களாங்றாப்புல. அதெ கேட்டதும் தண்ணியக் குடிச்சிட்டு இருந்த செந்தில்குமாரு பொரையேறுனாப்புல இருமுனதுல வாயிக்குள்ள இருந்த தண்ணியெல்லாம் செதறி டேபிள்ல்ல தெறிச்சது ஊதுன பலூனு டொப்புன்னு ஒடைஞ்சு சத்தம் நாலா பக்கமும் கேக்குறாப்புல. அந்தத் தண்ணித் துளிக சில செதறி எதுக்க உக்காந்திருந்த சுப்பு வாத்தியாரு, செய்யு, விகடு மேலயும் தெறிச்சது. நந்தகுமார் எழும்பி செந்தில்குமாரோட தலையில தட்டுனாரு. கொப்புளிச்ச தண்ணி மேச மெல அடுக்கியிருந்த சட்டப் புத்தகங்க மேலயும் வழக்குக் கட்டுக மேலயும் செதறியிருந்துச்சு. ஆனந்தகுமார் பட்டுன்னு பேண்ட் பாக்கெட்டுக்குள்ள கைய வுட்டு கர்ச்சீப்ப எடுத்து வேக வேகமா தொடைச்சி வுட்டாரு மழையில நனைஞ்சு வூட்டுக்குள்ளார நொழையுற புள்ளையப் பாத்ததும் சட்டுன்னு பொடவெ தலைப்ப எடுத்து தலைய தொடைச்சி வுடுற அம்மாக்காரியெ போல.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...