9 Jan 2021

மறுபடியும் ஒரு மத்திசம்

மறுபடியும் ஒரு மத்திசம்

செய்யு - 681

            ரண்டாயிரத்து பதினெட்டாவது வருஷம் மார்ச் மாசம் ஒரு ஞாயித்துக் கெழமெ. வெயில் நல்லா கொழுத்த ஆரம்பிச்சது. சுப்பு வாத்தியாரு வூட்டுல இருக்காரு. அவரு குடும்பத்துச் சனங்க அத்தனையும் வூட்டுலத்தாம் இருக்கு. பதினோரு மணி வாக்குல சொட்டெ கண்ணுராசு சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு வந்து, "கொஞ்சம் வந்துட்டுப் போங்க!"ன்னு சுப்பு வாத்தியார்ர சத்தம் வெச்சுக் கூப்ட்டாரு.

            "அடடே! அடடே! வாரணும் வாரணும்! நம்மட மவளுக்கு எதுப்பா கூண்டுல ஏறி சாட்சியம் பண்ணதுக்குப் பெறவு நம்ம மொகத்துல முழிக்க மாட்டீயேன்னுல்ல நெனைச்சேம்!"ன்னாரு வெளியில வந்த சுப்பு வாத்தியாரு குத்திக் காட்டுறாப்புல.

            "அதெல்லாம் மனசுல ஒண்ணும் வெச்சுக்காதீயே! அந்த வழக்குல ஒஞ்ஞளுக்குச் சாதவமா தீர்ப்பாயிடுச்சுன்னா சேர்ந்து வாழ்றதுக்கான வாய்ப்பு யில்லன்னு மாப்புள்ளப் பயெ வந்து கால்ல வுழுவாத கொறையா கெஞ்சுனாம். ஒரு சோடிய சேத்தப் புண்ணியம் ஆவட்டும்ன்னு வந்ததுதாம். அதனாலென்ன கொறைஞ்சிப் போயிச்சு? இன்னொரு நாளு மாப்புள்ள பயலெப் பாத்தப்போ ஒஞ்ஞப் பக்கந்தாம் தீர்ப்பாயிருக்குன்னும், மேல அப்பீல பண்ணிருக்காம்ன்னும் சொன்னாம்!"ன்னாரு சொட்டே கண்ணுராசு கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாதவரப் போல.

            "ஒரு தெருவுல இருந்துகிட்டிருந்து யிப்படி முதுவுல குத்தியிருக்கக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட மனசுல இருக்குற வலியக் காட்டுறாப்புல.

            "அப்படி நாம்ம நெனைச்சிருந்தா இன்னிக்கு ஒஞ்ஞ வூட்டு வாசப்படியெ மிதிச்சிருக்க மாட்டேம். இன்னிக்கு ஒஞ்ஞ மவளுக்கு சேர்ந்து வாழ்றாப்புல ஒரு வாய்ப்பு வந்திருக்கு. அதெ செஞ்சி வுடத்தாம் நீஞ்ஞ என்ன நெனைச்சாலும் பரவால்லன்னு வந்து நிக்குறேம். அதால வாத்தியார்ரே! அன்னிக்கும் செரித்தாம் இன்னிக்குத்தாம் செரித்தாம் ரண்டு பேத்தையும் சேத்து வெச்சிப்புடணும்ன்னுத்தாம் நிக்குறேம். நம்ம நெனைப்பு ஒரே நெனைப்புத்தாம். அதெ நீஞ்ஞ எப்பிடி நெனைச்சாலும் செரித்தாம்!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு வருத்தப்படுறவரப் போல.

            "அதாங் அன்னிக்கே பஞ்சாயத்துலயே எல்லாம் முடிஞ்சிடுச்சே. அன்னிக்கே பேசித்தாம் வுட்டாச்சே. இனுமே இந்த விசயம் சம்பந்தமா கெராமமோ, பஞ்சாயத்தே இதுல தலையிடாதுன்னு. பெறவு ஏம் வந்து தலையிடுறீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு முடிஞ்ச முடிச்செ ஏம்டா அவுக்குறீங்கன்னு சொல்றாப்புல.

            "பழச மனசுல வெச்சிட்டுப் பேசப்படாது. நம்ம பட்டறைக்காரரு எல்லாத்தையும் மறந்துட்டு வந்து பக்கத்துல அய்யாவு வூட்டுல உக்காந்திருக்காரு. வந்து பேசுனீங்கன்னா காரியம் முடிஞ்சிடும். இதெ பஞ்சாயத்தாவும் நெனைக்க வாணாம். கெராமத்துலேந்து கூப்புடறதாவும் நெனைக்க வாணாம். வந்துட்டு மட்டும் ஒங்க கருத்தெ சொல்லிட்டுப் போயிடுங்க!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு ரொம்ப கொழைஞ்சு கொலாவுறாப்புல.

            "அந்த ஆளு எங் குடும்பத்து விசயத்துல தலெயிடுறதெ நாம்ம விரும்பல. அந்த ஆளோட நமக்குப் பேச்சு வார்த்தெயும் கெடையாது. என்னிக்கு எம் மவளுக்கு எதிரா கோர்ட்டுப் படியேறி சாட்சி சொல்லலாம்ன்னு நீஞ்ஞ, பட்டறைக்காரரு எல்லாம் வந்தீயளோ அன்னிக்கே எல்லாம் முடிஞ்சிப் போச்சு. முடிஞ்சிப் போனதெ தொடங்க நெனைக்காதீயே. பஞ்சாயத்துல பேசுனுபடியே வெட்டுனது வெட்டுனதாவே இருக்கட்டும்."ன்னாரு சுப்பு வாத்தியாரு முடிஞ்ச கதெயெ பேச வாணாங்றாப்புல.

            "வெட்டுன எடத்துலேந்து துளுக்குறது யில்லையா வாத்தியார்ரே! பிடிவாதம் பிடிச்சிட்டு நிக்குறதுல அர்த்தமில்லே. ஒஞ்ஞ பிடிவாதத்தால ஒஞ்ஞ பொண்ணு வாழ்க்கெ வீணாயிட வாணாம். பொண்ணப் பெத்துட்டு நாம்ம வூட்டுலயே வெச்சிக்கிட முடியுமா ன்னா? பொண்ண பெத்த நாம்ம அசிங்கப்படாமலும் இருக்க முடியுமா ன்னா? அதெல்லாம் பாத்தா பொண்ண வாழ வைக்க முடியாது வாத்தியார்ரே! பக்கத்து வூடுதானே! ஒஞ்ஞளுக்காக வந்து காத்திருக்காவோ. பிடிச்சா பேசுங்க. யில்லன்னா நமக்கு விருப்பமில்லன்னு சொல்லிட்டு வந்துப்புடுங்க!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு நல்லதெ பேச நெனைக்குற நலவிரும்பியப் போல.

            "அதெ ஏம் நாம்ம அஞ்ஞ வந்து சொல்லணும்? இஞ்ஞயே ஒஞ்ஞ மூலமா சொல்லிடுறேம். விருப்பமில்லன்னுப் போயி சொல்லிட்டு போயிட்டே இருங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எந்தப் பக்கமா வந்தாலும் அந்தப் பக்கத்துல கதவச் சாத்தி வார்த்தையால தாழ்ப்பாளப் போடுறாப்புல.

            "நாம்மப் போயிச் சொல்றது எப்பிடி? பொண்ண பெத்த தகப்பனாரு வந்து சொல்றது எப்பிடி? ஒஞ்ஞள ஒண்ணும் பொண்ண அனுப்பி வைக்க சொல்லல வாத்தியார்ரே! வந்து ஒஞ்ஞ மனநெல ன்னா? முடிவு ன்னா? ங்றதெ ஒஞ்ஞ வாயால சொல்லிட்டு மட்டும் வந்துடுங்க! கடெசீயா ஒரு முயற்சி. இதுல ல்லன்னா அதுக்கு அப்புறம்லாம் ஒஞ்ஞளப் போட்டு உசுப்பிக்கிட்டுக் கெடக்க மாட்டேம்! யாருக்காக வரலன்னாலும் பரவாயில்ல. நம்மகிட்டெ பேச்சு வார்த்தெ பண்ணணும்ன்னு வந்தவங்கள மதிச்சி முடியும், முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருங்க வாத்தியார்ரே! மதிச்சி வர்றவங்களுக்கு நாம்ம மதிச்சி ஒரு பதிலச் சொல்லலன்னு நாளைக்கி யாரும் பல்லு மேல நாக்கெ போட்டு ஒத்த வார்த்தெ சொல்லிப்புடப்படாது பாருங்க!"ன்னாரு சொட்டே கண்ணுராசு கெட்டதா எதுவும் நடந்துப்புடக் கூடாதுங்றாப்புல.

            "இவ்ளோ சொல்றதுக்காக வேற வழியில்லாம கொஞ்சம் கூட விருப்பமில்லாம செரித்தாம்ன்னு வர்றேம்! நம்மள யாரும் வற்புறுத்தல்லாம் கூடாது. அப்பிடி எதாச்சும் நடந்தா ஒடனே எழுந்திரிச்சி வந்துப்புடுவேம். யாரும் நம்ம மேல வருத்தப்படக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சட்டுன்னு எந்த ஊர்லயும் இல்லாத அதிசயமா அடிக்குற காத்துல பனைமரம் நாணலப் போல வளையுறாப்புல.

            "பொண்ண பெத்தவரு நீஞ்ஞ. நீஞ்ஞ எடுக்க வேண்டிய முடிவெ நீஞ்ஞத்தாம் எடுத்தாவணும். அதுல நாஞ்ஞ வந்து பொறுப்பு எடுத்துக்கிட்டுல்லாம் இருக்க மாட்டேம். அத்து தப்பு. அதெ நேரத்துல ஒரு நல்ல சந்தர்ப்பத்தெ அமைச்சிக் கொடுக்க வேண்டியது எஞ்ஞ கடமென்னு நாஞ்ஞ நெனைக்கிறேம். நாளைக்கி ஒருவேள கூப்புட்டு வெச்சிப் பேசிருந்தா ரண்டு பேரும் சேந்திருப்பாங்களோங்ற நெனைப்பு எஞ்ஞளுக்கு வந்து அத்து தொண்டையில செருவுன மீனு முள்ளு மாதிரிக்கி குத்தக் கூடாது பாருங்க!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு சர்க்கரைத் தண்ணிய கரைச்சுக் காதுக்குள்ள ஊத்துறாப்புல. அதுக்கு அப்புறம் சுப்பு வாத்தியாரு சொட்டெ கண்ணுராசுவோட கெளம்புனாரு. அதெ எல்லாத்தையும் உள்ளார இருந்த மேனிக்குக் கேட்டுகிட்டு இருந்த வெங்கு ஓடியாந்து, "நீஞ்ஞ ஒண்ணும் போவ வாணாம். அவ்வேம் கூட ஒட்டும் வாணாம். ஒறவும் வாணாம். கோர்ட்டு வரைக்கும் கொண்டாந்து நிறுத்துனவங்கிட்டெ போயி என்னத்தெ சமாதானம் பண்ணுறது? ஒடைஞ்ச கண்ணாடிய ஒட்ட வெச்செல்லாம் சுத்தப்பட்டு வாராது!"ன்னுச்சு தளும்புற பால்ல தண்ணிய தெளிச்சு வுடுறாப்புல.

            "நீஞ்ஞ சித்தெ உணர்ச்சிவசப்படாம யிருங்க. ஆம்பளைங்கள கலைச்சி வுடுறதெ பொம்பைளங்களோட வேகந்தாம். அஞ்ஞ பேசிட்டு வந்து ஒஞ்ஞகிட்டெயும் கலந்துகிட்டுத்தாம் முடிவெ சொல்லப் போறது. நாஞ்ஞ ஒண்ணும் கட்டாயம்லாம் பண்ண மாட்டேம்!"ன்னாரு சொட்டே கண்ணுராசு எரியுற கொள்ளியக் கொஞ்சம் இழுத்து வுடுறாப்புல.

            "நீயாச்சும் சொல்லேம்டா! யப்பாவ போவ வாணாம்ன்னு!"ன்னுச்சு வெங்கு விகடுவப் பாத்து மேக்கொண்டு பொங்குற பால்ல எப்பிடி பாத்திரத்துக்குள்ள போவ வைக்குறதுன்னு புரியாததப் போல.

            "யம்மா சொல்றதும் செரித்தாம்! யப்பா போக வாணாம்!"ன்னு விகடு, சொட்டெ கண்ணுராசுவப் பாத்து, "எஞ்ஞள யிப்பிடியே விட்டுடுங்களேம். நல்லதோ கெட்டதோ நாஞ்ஞப் பாத்துக்கிறோம், சொமந்துக்கிறேம்!"ன்னாம் விகடு எரியுற கொள்ளிய எடுத்து தண்ணியில வுட்டா சுரீர்ன்னு சத்தம் வருமே அதெப் போல.

            "நீயி சின்னப்புள்ளே! ஒம் வயசுக்கு சிலது புடிபடாது. ஒரு புள்ளயப் பெத்துப்புட்டா எல்லாம் தெரிஞ்சதா அர்த்தம் கெடையாது. வேணும்ன்னா நீயும் வா. யப்பாவோட உக்காந்துப் பேசு. எதுவா யிருந்தாலும் பேசணும். பேசிட்டு எந்த முடிவெ வாணாலும் எடுக்கலாம். அதுல தப்பேயில்ல. பேசவே மாட்டேம்ன்னா அத்து தப்பான வழிமொற!"ன்னாரு சொட்டே கண்ணுராசு சின்ன பயலெ சித்தெ சும்மா இருடாங்ற மாதிரிக்கு விகடுவப் பாத்து.

            "அதெல்லாம் கோர்ட்டு, ஸ்டேசன்னு போயிப் பேச வேண்டியதெ பேசியாச்சு!"ன்னாம் விகடு அத்துக் கட்டிப் பேசுறாப்புல.

            "அந்தப் பேச்சு வேற. இஞ்ஞ பேசப் போற பேச்சுங்றது வேற. ஸ்டேசன், கோர்ட்டுக்குல்லாம் குடும்பத்தெ பத்தி என்னத்தெ தெரியும்? நாஞ்ஞ ஒஞ்ஞ குடும்பம், அவுங்க குடும்பம்ன்னு அறிஞ்ச ஆளுங்க. அதெப் புரிஞ்சிக்கோ. யப்பாவ அழைச்சிட்டுப் போயி நாம்ம ஒண்ணும் கடிச்சித் தின்னுப்புடப் போறதில்ல, நீயி போவ வாணாம்ன்னு சொல்றதுக்கு. வந்துப் பேசிட்டு ஒரு முடிவுக்கு வாரட்டும். அத்து எந்த முடிவா யிருந்தாலும் செரித்தாம்!"ன்னாரு செட்டெ கண்ணுராசு மேளத்தோட ரண்டுப் பக்கமும் சமத்காரமா தட்டுறாப்புல. அதுக்கு மேல அதுல பேசிக் கதெ ஆவப் போறதில்லன்னு தெரிஞ்சது விகடுவுக்கு. சொட்டெ கண்ணுராசு சுப்பு வாத்தியாரோட கையப் பிடிச்சி அழைச்சிக்கிட்டுப் போனாரு. சுப்பு வாத்தியாரும் அதுக்கு மேல வேற வழியில்லன்னு கெளம்பிப் போனாரு.

            "நீயும் போடாம்பீ!"ன்னுச்சு வெங்கு உஷாரா விகடுவெ கௌப்பி வுடுறாப்புல.

            "வாணாம்மா! அக்கப்போரான பேச்சாத்தாம் இருக்கும்! நாம்ம போவல!"ன்னாம் விகடு போறதுக்கு விருப்பமில்லாதவனப் போல.

            "அவனுவோ எதாச்சும் ஒண்ணு கெடக்க பேசி யப்பாவோட மனசெ கொழப்பி வுட்டுடப் போறானுவோடாம்பீ!"ன்னுச்சு வெங்கு தன்னோட பதற்றத்தக் காட்டறாப்புல.

            "நாம்மத்தாம் ஒரு முடிவுக்கு வந்தாச்சு தங்காச்சிய அனுப்ப முடியாதுன்னு. அதுக்கு மேல இதுல கொழப்புறதுக்கு ஒண்ணுமேயில்ல!"ன்னாம் விகடு இனுமே பேசிக் கிழிக்க பிரமாதமா என்னா இருக்குங்றாப்புல.

            "யிப்பிடித்தாம் பஞ்சாயத்தப்பவும் கூட மாட போவாம யிருந்தே. அஞ்ஞ நடந்ததென்ன?"ன்னுச்சு வெங்கு அப்படி உக்காந்தபடியே கன்னத்துல கைய வெச்சுக்கிட்டு.

            "இத்துப் பக்கத்து வூடுதாம். இஞ்ஞ உக்காந்தவே பேசுறது நல்லா கேட்கும்!"ன்னாம் விகடு சொவத்துக்கும் காது இருக்குங்றாப்புல. அதுக்கு மேல மவ்வேங்கிட்டெ பேசி காரியம் ஆவப் போறதில்லன்னு விட்டுட்டு வெங்கு, காது இருந்தாலும் இதயம் இல்லாத சொவத்துல முட்டிக்கிட்டு என்னத்தெ ஆவப் போறதுங்றாப்புல.

            அய்யாவு வூட்டுத் திண்ணைப் படிகட்ட ஏறி சுப்பு வாத்தியாரு வந்ததுமே பட்டறைக்காரரு பட்டாமணி பெரிசா சிரிச்சாரு. "அன்னிக்கு நாஞ்ஞ எப்பிடியாச்சும் பாத்து சேத்து வெச்சிப்புடலாம்ன்னு பாத்ததுக்கு, வாணாம்ன்னு சொல்லிப்புட்டு இன்னிக்குக் கோர்ட்டுல போயிச் சேந்திருக்கம்ன்னா சொல்லிருக்கீயே! பரவால்ல. எப்பிடியோ சேந்தா செரித்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரப் பாத்து என்னவோ சாதிக்க முடியாத ஒண்ணுத்தெ சாதிச்சுட்டாப்புல.

            "நாஞ்ஞ அப்பிடில்லாம் சொல்லலீங்க. நீஞ்ஞள எதாச்சும் ஒளறி வுட்டுப்புட்டு திரும்பவும் குட்டையக் கொழப்பி வுட வாணாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வார்த்தெ ஒவ்வொண்ணுத்தையும் அளந்து வுடுறாப்புல.

            "இதுலப் போயி கெளரவம் பாத்துக்கிட்டு. ஒஞ்ஞ மாப்புளப் பையெம் அஞ்ஞ சித்துவீரன் வூட்டுல உக்காந்துகிட்டுதாம் இஞ்ஞ நம்மள அனுப்பிருக்காம்! இதெ நீஞ்ஞ தனியாத்தாம் பேசுவேம்னனாலும் செரி. நாஞ்ஞ ஒதுங்கிக்கிறேம்!"ன்னாரு பட்டாமணி தாம்தாம் ஒலகத்துலயே நம்பர் ஒன் நல்லவங்றவரப் போல.

            "என்னய்யாப் பேசுதீங்க? ஜீவனாம்ச வழக்குல தீர்ப்பாயிருக்கு. ரண்டுப் பக்கமுமே எதிர்ப்பா கெடக்கு. கோர்ட்டுல வெச்சு கேக்கக் கூடாத கேள்வியெல்லாம் கேட்டுப்புட்டு, எவ்வேம் கூடயெல்லாம் எம் மவளெ சேத்து வெச்சிப் பேசிப்புட்டு, இன்னிக்கு எப்பிடிய்யா அவ்வேம் வெக்கம் கெட்டத் தனமா சேந்து வாழ்றேன்னு அஞ்ஞ உக்காந்துட்டு இஞ்ஞ ஆளெ அனுப்பி வைக்கிறாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தண்ணியில எழுதி வுட்ட வாசகத்தெப் போல பேசுதீங்களேன்னு சொல்றாப்புல.

            "அதெல்லாம் கோவம் இருக்கத்தாம் செய்யும். கோர்ட்டு, கேஸூன்னு போறப்ப அதெல்லாம் தவுக்க முடியாதுங்க!"ன்னாரு பட்டாமணி அப்படி நடக்குறதுதாம் வாஸ்தவங்றதெப் போல.

            "அடங் கொப்புரானே! இம்மாம் சொல்றேம் அதெ புரிஞ்சிக்காம! கோர்ட்டுலயே சேர்ந்து வாழ விருப்பம் யில்லன்னா வாங்குனதுல காக்காசிய, காலு பங்க நகெயெ கொடுத்து வெட்டி வுட்டப்புடுறேம்ன்னு நின்னப் பயெ! எஞ்ஞகிட்டெ வாங்குன காசியையே எஞ்ஞகிட்டெ கொடுத்து அதெ அவ்வேம் வாழ்நாளு ஜீவனாம்சமா கொடுக்குறதா சொன்னப் பயெ. அந்தக் காயிதமெல்லாம் கையிலத்தாம் இருக்கு. எந்த மொகத்தோட எம் பொண்ணோட சேந்து வாழப் போறதா நிக்குறானாமாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட கோவத்தெ தாளிக்குறப்ப வெடிக்குற கடுகெப் போல.

            "நடந்ததெல்லாம் வாஸ்தவந்தாம். நீஞ்ஞ பொண்ணப் பெத்தவங்க. அவுங்க பையனெப் பெத்தவங்க. ஒஞ்ஞளுக்கு ஒரு மொழம்ன்னா அவுங்களுக்கு நாலு மொழம் இருக்கத்தானே செய்யும். அதெ பெரிசுப் பண்ணிக்கிட்டு. எத்தனெ நாளு பொட்டப் புள்ளய வாழ வெட்டியா வெச்சிருப்பீயே? தெருவுல நாலு பயெ பேசுறதுக்கு மின்னாடி அனுப்பிச்சிடணும்!"ன்னாரு பட்டாமணி ஒலக நடப்பெ ஒரு சாண் வரிக்குள்ள அடக்குறாப்புல.

            "‍தெருவுல எல்லாம் பேச ஆரம்பிச்சி நாளாயிடுச்சு. அதெ கேட்டு எஞ்ஞ காதுக்கும் புளிச்சிப் போயிடுச்சு. ஆம்பளெ புள்ளயெப் பெத்தவனுக்கு நாலு மொழமாவே இருக்கட்டும். பொட்டெ புள்ளயெப் பெத்த நமக்கு ஒத்த மொழமாவே இருக்கட்டும். அத்து என்னய்யா நாம்ம ன்னா ஆம்பளெப் புள்ளய பெக்காதவேம் மாரில்லாம் பேசுதீயே? அவனெ வர்றச் சொல்லவா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு என்னத்தடா பேசுறீங்கன்னு சொல்றாப்புல.

            "வாத்தியார்ரே! டென்ஷன் ஆவாதீயே. கோர்ட்டுல நீஞ்ஞ சேர்ந்து வாழ்றதா சொன்னதாலத்தாம் யிப்போ அவுங்க போனா போவுதுன்னு எறங்கி வந்திருக்காங்க. ஒஞ்ஞ முடிவெ சொல்லுங்க. அவ்வளவுதாம் விசயம்!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு தாளாளிச்சு வுடுறாப்புல.

            "யாருய்யா கோர்ட்டுல சொன்னது? கோர்ட்டுக்குப் போனதெ பிரிஞ்சிப் போவத்தாம். பெறவெப்பிடிய்யா சேந்து வாழணும்ன்னு சொல்லுவாங்க?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெசனக் கடுப்பெடுத்தவரப் போல.

            "யிப்பிடி இந்த ஆளு சொல்லுவார்ன்னுத்தாம் தாடிக்கார‍ ஜோசியரு காயிதத்தெ சிராக்ஸ் பண்ணி கையோடு கொடுத்து வுட்டாரு. இந்தாப்பா கண்ணுராசு இது அவுங்க காயிதமா என்னான்னு நீயே கேளு. சங்கதியக் கேட்டுட்டு நாம்ம கெளம்புறேம். என்னவோ மத்திசம் பண்ண வந்த மனுஷங்கள அசிங்கம் பண்ணுறாப்புல பேசிக்கிட்டு!"ன்னு எகுறுனாரு பட்டாமணி பத்த வைக்குறதுக்கு மின்னாடியே பட்டுன்னு வெடிக்குற வெடியப் போல சட்டுன்னு பாய்ஞ்சு.

            "யாருய்யா ஒஞ்ஞள மத்திசம் பண்ண வாரச் சொன்னது? ஒஞ்ஞ கால்ல வந்து வுழுந்து சமாதானம் பண்ணி வுடுங்கன்னு கெஞ்சுனேன்னா? பஞ்சாயத்துலேயே எம் மவ்வேம் கட் அன்ட் ரைட்டா அத்து வுட்டுத்தானே பேசுனாம். பெறவு எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு எம்மட வூட்டுக்கு ஆளெ அனுப்பி வுட்டு கூப்ட்டு வுடுறீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெடிக்குற வெடிக்குள்ள வெரல வுட்டு ஆட்டுறாப்புல.

            "ச்சும்மா எதுக்கெடுத்தாலும் தேளு கொடுக்கப் போல கொட்டிக்கிட்டு இருக்கக் கூடாது. இந்தக் காயிதத்தெ வாங்கிப் பாருங்க. இத்து ஒஞ்ஞ காயிந்தானே!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு கண்ணுக்குள்ள வெரல நீட்டி ஞாயம் கேக்குறாப்புல. அந்தக் காயிதத்தெ வாங்கிப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு. அது ஹெச்செம்ஓப்பி வழக்குல வக்கீல் தாக்கல் பண்ணியிருந்த பதிலுரை. அதுல அப்பிடித்தாம் வக்கீல் நிபந்தனைகளோட வாழ சம்மதம்ன்னு அதெ தாக்கல் பண்ணிருந்தாரு.

            "அடப் போங்கய்யா! இதெ எடுத்துக்கிட்டுத்தாம் பேசணும்ன்னு கூப்புட்டீயளா? இதுக்கும் நமக்கும் சம்பந்தம் எதுவும் கெடையாது. வழக்குக்காக வக்கீலு தாக்கல் பண்ணது இத்து. நாஞ்ஞ எஞ்ஞப் பொண்ண அனுப்ப மாட்டேம். நீஞ்ஞத்தானே சொன்னீயே? கோர்ட்டு கேஸ்ன்னா அப்பிடித்தாம் ஏறுக்கு மாறா எல்லாமே இருக்கும்ன்னு. அதுல இத்து ஒரு ஏறுக்கு மாறு. யிப்பிடித் தாக்கல் பண்ணாத்தாம் வழக்கெ நடத்த முடியும்ன்னு வக்கீலு சொன்னாரு. செரின்னு சொன்னதுதாம். அதுக்கு மேல இதுக்கு ஒண்ணும் பவர் கெடையாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பத்திக்கிட்டு வர்ற நெருப்ப பட்டுன்னு வாயாலேயே புஸ்ன்னு ஊதி அணைக்குறாப்புல.

            "இந்தாரு வாத்தீ! அஞ்ஞ ஒம் மாப்புள்ளயோட வக்கீலும் வந்திருக்காம். அவ்வேம் அடிச்சிச் சொல்றாம். யிப்பிடி மனுவெ தாக்கல் பண்ணா அதுக்குச் சேந்து வாழணும்ன்னுத்தாம் அர்த்தம்ன்னு. அப்பிடி வாழ மறுத்தா இதெ வெச்சே ஸ்டேசன்ல கொடுத்து வாழ வர வைப்பேம்ன்னு. அப்பிடில்லாம் கிராமத்துக்குள்ள போலீஸ் வந்து ஒம்மட வூடு அசிங்கப்படக் கூடாதுன்னுத்தாம் நாஞ்ஞ வந்தது. ஒனக்கென்ன ஒம்மட வூட்டுக்கு யாரு வந்தா ன்னா? நீயி பாட்டுக்கு இருப்பே. கோர்ட்டுக்கும், ஸ்டேசனுக்கும் போயிப் போயி எல்லாம் ஒனக்கு உதுத்துப் போச்சு. அதுக்காக கிராமத்துல இருக்குற மித்தவங்களையும் அப்பிடியே நெனைச்சிக்கிட்டீயா?"ன்னாரு பட்டாமணி வெரட்டி வெரட்டி வெளுக்குறாப்புல.

            "இந்தாருய்யா! எம்மட வூட்டுக்குப் போலீஸூ வருது, வராம இருக்குது? ஒனக்கென்ன? ஒம்மட வூட்டுக்கு அப்பிடில்லாம் நடக்காதுன்னு நெனைச்சிப் பேயாதே. நாளைக்கும் நீயும் போயி ஸ்டேசன்ல, கோர்ட்டுல நிக்குற மாதிரி நெலமெ வாரும். என்னவோ கோர்ட்டு கேஸூன்னு போயி நிக்காதெ ஆளு மாரில்ல பேசுறே? ஒங் கதெயே தம்மேந்தி ஆத்தாவோட மவனெ கூப்டாந்து புட்டுப்புட்டு வைக்கச் சொல்லவா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெளுக்குற வெளுப்புல சாயம் போயிடுங்றாப்புல.

            "இவனெல்லாம் ஒரு மனுஷனா? இவ்வேங்கிட்டெ பேச வந்தேம் பாரு! பொண்ண பெத்து எத்தனெ நாளு வூட்டுல வெச்சிருக்கேன்னு பாக்குறேம். ஒம் மாப்புள்ள கோர்ட்டுல தீர்ப்ப வாங்கிட்டு ஒம் பொண்ண வந்துத் தூக்குவாம். அப்பத் தெரியும் டவுசர்ரு கிழியுறது. மருவாதியா வந்துப் பேசுனா மருவாதிக் கெட்ட தனமால்ல பேசுறே?"ன்னாரு பட்டாமணி தாண்டி தலைகுப்புற வுழுவுற ஆளப் போல.

            "அநாவசியமா நீயி ஏம்யா எம்மட வூட்டு விசயத்துல தலையிடுறே? ஒம்மட குடும்ப விசயத்துல என்னிக்காவது வந்து நாம்ம வந்து தலெயிட்டுருக்கமா? பஞ்சாயத்துலயே இதெப் பத்தி பேசுறதில்லன்னுட்டு எதுக்குய்யா வந்துப் பேசுதீயே? மனுஷன்னா ஒரு நாக்கு, ஒரு வாக்கு இருக்கணும்ய்யா! எம்மட வூட்டு வாசல்ல மிதிச்சி நம்மள கூப்புட்டுறக்கவே கூடாது. நாஞ்ஞப் பிரிஞ்சிப் போவ தயாரா இருக்கேம். நகெ நட்டு, பணங்காசிக்காக இத்து இழுத்துகிட்டு இருக்குது. அம்புட்டுததாம். அந்தக் கொள்ளக்காரப் பயெ புடுங்குனதெ தூக்கி வெச்சான்னா நாளைக்கே கதெ முடிஞ்சிடும் பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அண்டா பால்ல ஏம்டா அநாவசியமா குண்டான் தண்ணிய கலக்குதீங்கன்னு சொல்றாப்புல.

            "சொன்னா கேக்குறவ்வேம் யாரு? சேர்ந்து வாழணும்ன்னு தீர்ப்பு வந்தாத்தாம் நீயெல்லாம் செரிபட்டு வருவே. வக்கீலு அதெத்தாம் சொல்றாம். நாம்ம பேசவே வாணாம். ஜட்ஜ்மெண்டோட போவம்ன்னு. என்னவோ ஒம் மாப்புள்ள பண்ண அடத்தால நாஞ்ஞ இஞ்ஞ வந்து நின்னு அசிங்கப்பட வேண்டியதா இருக்கு! ஒம் மாப்புள்ள ஒன்னய அசிங்கப்பட வாணாம்ன்னு நெனைக்குறாம். நீயி அசிங்கப்பட்டுத்தாம் போயி நிப்பேன்னா போயி நில்லு! யாருக்கென்ன நஷ்டம்? யாருக்கென்ன கஷ்டம்?"ன்னாரு பட்டாமணி சித்திரக்குப்தன் காலக்கணக்குப் போட்டுச் சொல்றாப்புல.

            "மொதல்ல அவனெ மாப்புள்ளன்னு சொல்றதெ நிறுத்து. அதுவே நமக்கு அசிங்கம். நம்மோட கஷ்ட நஷ்டம் நமக்கு. அதுக்காக ஒம் வூட்டுல வாசல மிதிச்சனா? அப்பிடி மிதிக்காதப்பா எதுக்குடா எம்மட வூட்டு வாசல்ல மிதிக்கிறீயே? இன்னிக்கு நீஞ்ஞ நமக்கு பண்ணுறதுதாம்டா நாளைக்கு ஒஞ்ஞ வூட்டுல நடக்கப் போவுது. பாக்கறீயா? பாக்குறீயா?"ன்னு ஒருமையில எறங்கி பேசி ஆரம்பிச்சிட்டாரு சுப்பு வாத்தியாரு.

            "ச்சைய் இவனெல்லாம் ஒரு மனுஷன்னு நெனைச்சிப் பேச வந்தேம் பாரு!"ன்னு சட்டுன்னு கௌம்பி அது பாட்டுக்குப் போற குசுவப் போல எழும்பி வெளியிலப் போனாரு பட்டாமணி.

            "யாருடா ஒன்னயப் பேச வர்றச் சொன்னது? காசியையும், குவார்ட்டரையும் வாங்கிக் கொடுத்தா எஞ்ஞ வாணாலும் வெக்கம் கெட்டுப் போயி பேசப் போயிடுவீங்களாடா?"ன்னு படபடன்னு பொறியுறது கொஞ்சம் கூட நிக்காம சத்தம் போட்டாரு சுப்பு வாத்தியாரு.

            "வாத்தியார்ரே! புரிஞ்சிக்கிட்டெம். அநாவசிய சண்டெ வாணாம். நீஞ்ஞ கெளம்பி வூட்டுக்குப் போயிடுங்க!"ன்னாரு சொட்டே கண்ணுராசு கெஞ்சுறாப்புல. “ஆமாம்பீ! நம்மட வூட்டுல வம்பு வாணாம்!”ன்னாரு அதுவரைக்கும் பேசாம எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு இருந்த அய்யாவு.

            "யாருய்யா இஞ்ஞ கெளம்பி வந்துப் பேசுறதுன்னது? இப்பிடி ஆவும்ன்னுத்தாம்ய்யா நாம்ம வாரதில்லன்னு சொன்னேம். அழைச்சாந்துப்புட்டு யிப்போ யிப்பிடிச் சொன்னா மருவாதிக் கெட்டுடும்! இனுமே எவனாச்சும் எம் மவ்வே விசயமா வந்து வூட்டுல கூப்புடுங்க. வெச்சிக்கிறேம். இனுமே அதெப் பத்தி பேசுறதில்லன்னா பேசுறதில்லத்தாம்யா! பெறவென்ன நல்லது செய்யுறது? கெட்டது செய்யுறதுன்னு? நீஞ்ஞ செஞ்ச நல்லதெல்லாம் தெரியாதா? எதுத்தாப்புல ஒரு கொல்லைய வாங்குனேம்ன்னு ஊர்ல வெக்க மாட்டேன்னு அடிச்ச ஆளுங்கத்தானய்யா நீஞ்ஞல்லாம்? இன்னிக்கு என்னவோ நல்லது செய்யுறதா வர்றேம்ன்னு பசப்பிக்கிட்டு, பழசெல்லாம் மறந்தப் போயிடும்? நீஞ்ஞல்லாம் நல்லது செய்யுறதா சென்னா நாயி கூட நம்பாதுய்யா! நீஞ்ஞளும் ஒஞ்ஞ பேச்சும். ஓநாயீ வந்துத்தாம் ஆட்டுக்குட்டிக்குப் பாலு கொடுக்கப் போவுது? எஞ்ஞளுக்குத் தெரியாதா?"ன்னு சொல்லிட்டு பொறிக்கிறப்ப பட்டுத் தெறிக்குற தானியத்தெ போல வேகமா ஆவேசமா அய்யாவு வூட்டெ வுட்டு தன்னோட வூட்டுக்கு வந்தாரு சுப்பு வாத்தியாரு.

            "நாம்ம கூட யப்பாரு என்னத்தெ ஏதோ பேசப் போறாரன்னு நெனைச்சேம். சரியாத்தாம் வாங்கி வுட்டுப்புட்டு வந்திருக்காரு!"ன்னுச்சு நடந்த பேச்சு அத்தனையையும் கேட்டுக்கிட்டு இருந்த வெங்கு கன்னத்துல இருந்த கைய எடுத்துக்கிட்டு சபாஷ்ங்றாப்புல மொகத்தெ ஆட்டிக்கிட்டு.

            "ஏம்ப்பா! இதெல்லாம் போயிப் பேசிக்கிட்டு? அனுப்ப இஷ்டமில்லன்னு ஒத்த வார்த்தையில சொல்லிட்டு வர்ற வேண்டித்தானே?"ன்னாம் விகடு வீட்டுக்குள்ளார வந்த சுப்பு வாத்தியார்ரப் பாத்து ஒரு வார்த்தையில விடையளிக்க வேண்டிய கேள்விக்கு ஏம் பாரா பாராவ விடையளிச்சுக்கிட்டுன்னுக் கேக்குறாப்புல.

            "இந்த மாதிரி சந்தர்ப்பம் அமையுறப்போ கேட்டு வுட்டாத்தாம் செரிபட்டு வரும். நாமாள போயிப் பேசல. கூப்புட்டு வுட்டானுவோ வாங்கிக் கட்டிக்கன்னு அதுல கூட கொடுக்கலன்னா எப்பிடி? வெடிக்காத எரிமலையையும் வெடிக்க வெச்சிட்டுத்தாம் பாப்பானுவோ இந்த ஊருக்காரனுவோ! அந்த டாக்குடரு பயெ காசியக் கொடுத்து இந்த மாதிரிக்கிப் பண்ணுறாம்டா! அதுக்கு இந்தப் பயலுவோ யிப்பிடி ஆடுறானுவோடா! இதெ அப்பிடியே போயிச் சொல்லுவானுவோடா! இதெ ஒரு சாட்சியாக்கி ஆர்குடி கோர்ட்டுல இவுங்கள ஆஜராவ வைப்பாம்டா அந்தப் பெய. அந்தப் பயலோட தந்திரம் தெரியலன்னு நெனைச்சிட்டு இருக்காம்! இனுமே என்னா பொண்ணு வாழப் போறதில்லன்னு ஆச்சு. இனுமே எத்து நடந்தாத்தாம் ன்னா? எதெ பேசுனாத்தாம் ன்னா? நகெ நட்டு கெடைச்சாத்தாம் ன்னா? பணங்காசி போனாத்தாம் ன்னா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவனையும் பொண்டாட்டியையும் பாத்து. அவரோட மனசுல ஓர் அசாத்தியமான துணிச்சல் வந்ததெப் போல இருந்துச்சு இப்போ. பேச வேண்டிய காலமும் நேரமும் வந்து அதுக்கான எடமும் அமையுறப்போ எப்பிடிடா போயிப் பேசாம இருக்க முடியும்ன்னு காட்டுறாப்புல இருந்துச்சு சுப்பு வாத்தியாரு எல்லாத்தையும் சுத்திப் பாத்த பார்வை.

*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...