8 Jan 2021

தவமிருந்து தாக்கல் செய்த பதிலுரை

தவமிருந்து தாக்கல் செய்த பதிலுரை

செய்யு - 680

            செய்யுவ பஸ் ஏறி ஆர்குடி பஸ் ஸ்டாண்டுல வந்து அங்கேயே நிக்கச் சொல்லிட்டு சுப்பு வாத்தியாரு சரியா எட்டு மணிக்கெல்லாம் தன்னோட டிவியெஸ் பிப்டியோட விளமல்ல இருக்குற வக்கீலோட ஆபீஸூ காம்ப்ளக்ஸ் முன்னாடி நின்னாரு. மவளெ நேரடியா கோர்ட்டுல வர்றச் சொல்றதுக்கு அவருக்கு யோசனையா இருந்துச்சு. நம்ம நேரம் சரியில்லாம பொண்ணு சீக்கிரமா வந்து நிக்குற நேரத்துல பாலாமணியோ, வக்கீல் கங்காதரனோ வந்து நாம்ம இல்லாத நேரத்துல எதாச்சும் பேசிப் பிரச்சனையா ஆயிடக் கூடாதுங்ற முன்யோசனையிலத்தாம் சுப்பு வாத்தியாரு மவளெ பஸ் ஸ்டாண்டுலய நிக்கச் சொல்லியிருந்தாரு. இருந்தாலும் அவருக்கு அங்க ஒருவேள தப்பித் தவறி அவனுங்கப் போயி எதாச்சும் அமளி துமளி ஆயிடக் கூடாதுன்னே நெனைப்பும் ஓடிட்டு இருந்துச்சு. இப்பிடியெல்லாம் கண்டதையும் நெனைச்சு அல்லாடிக்கிட்டு இருக்குறதுக்கு அன்னிக்கே சமரசமா கேஸ்ஸ முடிச்சிருந்திருக்கலாம்ன்னு ஒரு நொடி அவருக்கு ஒரு நெனைப்பு மின்னலப் போல உண்டாயி மறைஞ்சது.

            எட்டு மணிக்குச் சரியா வந்து நிக்குறதா சொன்னா வக்கீல வேற காங்கல. அவரு வர்றாம தனிமையில நிக்குறது அவருக்குப் பல வெதமான நெனைப்புகள கெளறி வுட்டுக்கிட்டெ இருந்துச்சு. ரோட்டுல பல வெதமான வண்டிக ஓடிட்டு இருந்துச்சு. அந்த வாகனங்களப் பாத்தாலும் அவரோட மனசு அதுல எதிலயும் பதியல. எப்படா வக்கீல் வருவாரு, வந்ததும் அவரே அழைச்சிக்கிட்டு மவளெ ஆர்குடி பஸ் ஸ்டாண்டுலேந்து அழைச்சாந்துடணுமேங்ற நெனைப்புதாம் அவரு மனசுக்குள்ள வாகனங்களப் போல ஓடிட்டுக் கெடந்துச்சு. வக்கீல் அரை மணி நேரம் கழிச்சாப்புல எட்டரைக்கு வந்தாரு. வந்தவரு காம்பளக்ஸ் மின்னாடி தன்னோட டிவியெஸ் ஸ்டார் சிட்டிய நிப்பாட்டி சைடு லாக் பண்ணிட்டு, சுப்பு வாத்தியாரோட டிவியெஸ் பிப்டியோட பின்னாடி ஏறிக்கிட்டாரு.

            அவரைக் கெளப்பிக்கிட்டு வண்டிய கொஞ்சம் வேகமாவே வுட்டாரு சுப்பு வாத்தியாரு வண்டிய. "என்னா இன்னிக்கு வண்டி கொஞ்சம் வேகமா போறாப்புல இருக்கே?"ன்னாரு வக்கீலு ஆச்சரியப்பட்டுப் போயி.

            "மவ்வே வேற வந்து ஆர்குடி பஸ் ஸ்டாண்டுல நிப்பா. அவளெ காக்க வைக்காம அழைச்சாந்துடணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட மனசுல இருக்குற தவிப்பெ காட்டுறாப்புல.

            "ஏம் பொண்ணு வந்து அரை மணி நேரம் பஸ் ஸ்டாண்டுல காத்து நிக்கக் கூடாதா சார்? அப்புறம் அவளுக்கு என்னிக்குத்தாம் பொது எடத்துக்கு வர்றது போறதுல அனுபவம் உண்டாகும்?"ன்னாரு வக்கீலு சுப்பு வாத்தியாருக்கு பெரியவங்க ஸ்தானத்துல நின்னு புத்தி சொல்றாப்புல.

            "அந்த அனுபவம்லாம் இருக்கு. அந்தப் பயலுவோ தப்பித் தவறி அங்கப் போயித் தொலைஞ்சி எதாச்சும் பெரச்சனெ ஆயிடக் கூடாது பாருங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அசம்பாவிதங்றது எந்த ரூபத்துல வேணா வந்த எப்பிடி வேணாலும் நடக்கும்ங்றாப்புல.

            "அந்தப் பயலுங்க அந்த அளவுக்குப் போயிட்டானுங்களா?"ன்னாரு வக்கீலு என்னவோ ஒண்ணும் தெரியாததப் போல.

            "அதெத்தானேங்கய்யா அன்னிக்கு ஆபீஸ் வந்தப்போ பூரா சொன்னேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நெலமையோட தீவிரத்தெ சொல்றாப்புல.

            "அப்போ அவனுங்கள கொஞ்சம் மெரட்டி வைக்கணுமே!"ன்னாரு வக்கீல் பம்மாத்துக் காட்டணுங்றாப்புல.

            "நீஞ்ஞ வந்தாளே போதும். மெரண்டுப் போயிடுவானுவோ. நீஞ்ஞ வர்றாததும் கொறெ. அதுலத்தாம் அந்தப் பயலுவோ துள்ளுறானுவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீலு வர்றாத கொறைய நாசுக்கா சொல்லிக் காட்டுறாப்புல.

            "எங்க சார்! நீங்கத்தாம் பாக்குறீங்களே! நாமளும் கொஞ்சம் கேஸ்களக் கொறைச்சிக்கணும்ன்னுத்தாம் பாக்குறேம். கொறைய மாட்டேங்குது. அப்பாவிப் பொண்ணுங்க நம்மள நம்பித்தாம் வருது. முடியலன்னு சொல்ல முடிய மாட்டேங்குது!"ன்னாரு வக்கீல் தன்னோட சுயபுராணத்தெப் பாடி சமாதானத்தெ வைக்குறாப்புல. இப்படியா வண்டியில வர்றப்போ பேசிக்கிட்டே ஆர்குடி வந்து சேர்ந்தாங்க சுப்பு வாத்தியாரும் வக்கீலும். சுப்பு வாத்தியாரு நேரா ஆர்குடியில இருக்குற ஓட்டல் ஆரியாஸ்ல கொண்டு போயி வக்கீல்ல விட்டுட்டு, பஸ் ஸ்டாண்டுல நிக்குற செய்யுவையும் ஓட்டல் ஆரியாஸூக்கு அழைச்சாந்து காலைச் சாப்பாட்ட முடிச்சாரு.

            கால சாப்பாடு முடிஞ்சதும் மொதல்ல வக்கீல அழைச்சுக் கொண்டு போயி கோர்ட்டுல விட்டுட்டு, அதுக்குப் பெறவு செய்யுவ அழைச்சுக் கொண்டுப் போயி கோர்ட்டுல விட்டாரு. மணி சரியா அப்போ பத்து மணியாயிருந்துச்சு. நல்ல வேளையா பாலாமணியும், வக்கீல் கங்காதரனும் வந்திருக்கல. ஒருவேளை மவளெ மொதல்ல இங்க கொண்டாந்து வுட்டு, வக்கீல அழைக்கப் போற நேரத்துல அவனுங்க வந்து ஏதோ வம்பு தும்பு ஆயிடுமோன்னுத்தாம் வக்கீல மொதல்ல கொண்டாந்து வுட்டுப்புட்டு மவளெ அழைக்கப் போனாரு. அவனுங்க இன்னும் வாரலேங்றது தெரிஞ்சதும் பெருமூச்செ வுட்டுக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. கோர்ட்டு பத்தே காலுக்கு மேலத்தாம் ஆரம்பிச்சது. அப்பத்தாம் வக்கீல் கங்காதரன் மட்டும் அரக்க பரப்ப ஓடியாந்து கோர்ட்டுல ஆஜரானாம். பாலாமணி வாரல. பதினோரு மணிக்கு மேல வழக்கு நம்பர்ர சொல்ல பேர்ரக் கூப்புட்டப்போ செய்யுவும், வக்கீல் திருநீலகண்டனும் மின்னாடிப் போயி நின்னாங்க. வக்கீல் கங்காதரனும் மின்னாடிப் போனாரு. திருநீலகண்டன் பதிலுரையத் தாக்கல் பண்ணிட்டு கங்காதரனுக்கு ஒரு காப்பியக் கொடுத்துக் கையெழுத்து வாங்கிக்கிட்டாரு. அவ்வளவுதாம் அன்னிக்குக் கோர்ட்டு வேல முடிஞ்சது.

            வெளியில வந்தப்போ கங்காதரன் எதுவும் பேசாமப் போயி தன்னோட பல்சர் வண்டிய எடுத்தாரு. திருநீலகண்டன் கங்காதரனப் பாத்து, "என்ன பங்காளி வர்றப்பவெல்லாம் சாடையா பேசுறீங்களாம்மே! இப்ப பேச வேண்டியத்தானே?"ன்னாரு தூபம் போடுறாப்புல.

            "நீ வந்தா சமரசம் பேச முடியாதுன்னு அவுங்க மட்டும் வர்றப்போ பேசுறேம் பங்காளி! அவுங்க ஒத்துக்கிடல. வேறென்ன பங்காளி கேஸ்ஸ சீக்கிரமா முடிச்சிடலாம்ன்னு பாக்குறேம். ஒன்னோட கிளையண்டுக்கு நீயி நல்லது பண்ணாட்டியும் நாமளாவது நல்லது பண்ணுவேம்ன்னு நெனைக்கிறேம்!"ன்னாரு கங்காதரன் சாமர்த்தியமா மடக்குறாப்புல.

            "அதெல்லாம் வேணாம் பங்காளி! ஒம் கிளையண்டுக்கு நல்லது பண்ணுறதோட நீ நிறுத்திக்கோ. நம்ம கிளைண்டுக்கு எது நல்லது, எது கெட்டதுங்றது நமக்குத் தெரியும். அதுப்படி நாம்ம பண்ணிப்பேம்! ஒம் கிளையண்டுக்கிட்ட வாங்குற காசுக்கு மட்டும் ஒழுங்கா வேலையப் பாரு! எக்ஸ்ட்ரா வேலையெல்லாம் பாக்காதே! ஒரே வக்கீல டபுள் சைடும் பாத்தா நாங்கள்லாம் எப்படிப் பொழைக்கிறது?"ன்னாரு திருநீலகண்டன் வேற வேல இருந்தா அதெ வூட்டுலப் போயி பாருங்றாப்புல.

            "அதெல்லாம் ச்சும்மா ஒரு வெளையாட்டுக்குத்தாம் பங்காளி! ச்சும்மா ஒரு கல்ல தூக்கிப் போடுறதுதாம். விழுந்தா மாங்கா, விழாட்டி கல்லுதானே. நீயி யில்லாம எப்பிடி கேஸ்ஸ முடிக்கிறதாம்?"ன்னாரு கங்காரன் வெளையாட்டுச் சிரிப்பெ வெனையா சிரிச்சிக்கிட்டு.

            "பிரச்சனெ ஆயி கோர்ட்டு வரைக்கும் வந்தாச்சு. இனுமே என்னா விளையாட்டு? வந்தா ஒங்க வேலையப் பாத்துட்டு அடுத்த கேஸ்ஸூ இருந்தா அதெ பாக்கப் போங்க பங்காளி! இந்த ஒரு கேஸ்ஸ தவிர வேற கேஸ்ஸே யில்லாததெப் போல இதெ மட்டுமே சுத்திக்கிட்டுக் கெடக்கக் கூடாது. நமக்கு ஆயிரத்தெட்டு கேஸ்ஸூ. அதால சில சமயங்கள்ல ஆஜர் ஆவ முடிய மாட்டேங்குது. அந்த மாதிரி நேரத்துல கிளையண்டுக்கிட்டுப் பேசி சமரசதுக்கு வர்ற வைக்க கூடாது. தெம்பு இருந்தா வழக்குல மோதிப் பாத்து ஜெயிச்சுக்கோ பங்காளி!"ன்னாரு திருநீலகண்டன் தாம் வெளையாட்டு மனநெலையில யில்லாம தீவிர மனநெலையில இருக்கேங்றதெ காட்டுறாப்புல.

            "தங்கள் அறிவுரைக்கு நல்லது பங்காளி!"ன்னு சொல்லிட்டு அதுக்கு மேல பேச விரும்பாதவரப் போல வண்டியக் கெளப்பிக்கிட்டுப் போயிட்டாரு கங்காதரன்.

            "நல்லா பேசி விட்டாச்சு சார்! இனுமே ஒங்கப் பக்கம் திரும்ப மாட்டான்னு நெனைக்கிறேம். அப்பிடி மறுபடி திரும்புனா ஒடனே போன் அடிங்க! அடுத்த அடியெல்லாம் இத்து மாதிரி மட்டையடியா அடிக்க மாட்டேம். அடிச்சேன்னா ரிவீட்டுத்தாம். திரும்ப புடுங்க முடியாது. புடுங்க நெனைச்சா புட்டுக்கிட்டுப் போயிட வேண்டித்தாம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் தன்னோட பராக்கிரம பலத்தெ ஒட்டு மொத்தமா வார்த்தையால சுப்பு வாத்தியார்கிட்டெ காட்டுறாப்புல.

            "நீங்க இன்னிக்கு வந்துட்டுப் போனது ரொம்ப நல்லதாப் போச்சுங்கய்யா! அவனுகளுக்கும் எப்பிடியாச்சும் கேஸ்ஸ முடிக்கணும்ன்னு‍ நெனைப்பு. அதுக்குத்தாம்யா என்னத்தெ பண்ணுறதுன்னு தெரியாம இப்பிடி மெரட்டி பரிகாசம் பண்ணிக் காரியத்தெ சாதிச்சிப்புடலாமான்னு பாக்குறானுவோ. அதெப் புரிஞ்சிக்காம நம்மப் பொண்ணு கோவப்பட்டுக்கிடுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நடக்குற நெலமெ என்னாங்றதெ புரிஞ்சாப்புல.

            "சின்ன வயசுதானே! அதுவும் சின்ன வயசுல ரொம்ப வேற பாதிக்கப்பட்டிருக்கா. கோவம் இருக்காதே பின்னே?"ன்னு சிரிச்சாரு திருநீலகண்டன் தன்னோட தரப்புக்கேத்தாப்புல ஞாயஞ் செஞ்சு வாதாடுறாப்புல. 

            "செரி வாஞ்ஞ டீத்தண்ணியக் குடிப்பேம். குடிச்சிட்டு பொண்ண பஸ்ஸூ ஏத்தி ஊருக்குக் கெளப்பி வுட்டுட்டு, ஒஞ்ஞள வண்டி பின்னாடி வெச்சி நேரா ஆபீஸ்ல கொண்டு போயி விட்டுப்புடுறேம்! அஞ்ஞ திருவாரூரு கோர்ட்டுல வேற கேஸ்ஸூக்கும் நீஞ்ஞ ஆஜராவலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அடுத்த கட்ட வேலைய முடிச்சு பார்சல் பண்ணி வுடுறாப்புல.

            "மணித்தாம் பன்னெண்ட நெருங்கப் போவுதே. இனுமே டீய்யக் குடிச்சிக்கிட்டு மத்தியானச் சாப்பாடுதாம் பாதிப்பாவும். வாங்க சார்! சாப்பாட்ட முடிச்சிட்டு பஸ்ஸூ ஏத்தி விடுங்க நாம்ம பஸ்லேயே கெளம்புறேம்!"ன்னாரு வக்கீல் ஓடிட்டு இருக்குற ரயில தெச மாத்தி வேற ஒரு பாதையில திருப்பி வுடுறாப்புல. திரும்ப ஓட்டல் ஆரியாஸ்ல மவளெக் கொண்டுப் போயி விட்டு, பின்னாடியே வக்கீலக் கொண்டுப் போயி விட்டு மத்தியானச் சாப்பாட்ட முடிக்க வெச்சாரு சுப்பு வாத்தியாரு. சாப்புட்டுக்கிட்டு இருக்குறப்பவே, "அவனுவோ சமாதானத்துக்கு வர்றானுவோன்னு நம்மள யில்லாம முடிச்சிப்புடாதீங்க. பட்ட நாமத்தெ சாத்திட்டுப் போயிட்டு இருப்பானுவோ!"ன்னாரு வக்கீல் சுப்பு வாத்தியார்ர ஆழமா பாத்தப்படிக்கு.

            "நீஞ்ஞ யில்லாமல்லாம் முடியாதுங்கய்யா! நீஞ்ஞ யிருக்கிறப்பவே ன்னா பாடு படுத்துறானுவோ! நீஞ்ஞ யில்லன்னா கொடுக்குறாப்புல கொடுத்துட்டுக் கொடுத்ததெ அப்பிடியே வழிச்சிக்கிட்டுப் போயிடுவானுவோ! தெரியாதா நமக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு அப்பிடில்லாம் நடக்காதுங்றதுக்கு உறுதி சொல்றாப்புல.

            "ஏம் சொல்றேன்னா? சில பேரு வக்கீலுக்குக் கொடுக்க வேண்டிய காசு மிச்சம்தானேன்னு நெனைச்சி அப்பிடி ஏமாந்துப் போயிருக்காங்க. ஏமாந்து பின்னாடி நம்மகிட்டெ வந்து நிப்பாங்க. எல்லாத்துலயும் ‍கையெழுத்தப் போட்டுக் கொடுத்துப்புட்டு நம்மகிட்டெ வந்து நின்னா நாம்ம என்னா பண்ண முடியும் சொல்லுங்க? அப்பிடி ஒரு கேஸூம் நம்மகிட்டெ நடந்துச்சு. அதுக்குப் பெறகு அதெயும் வேற மாதிரி சரிபண்ணி விட்டேன்னா பாத்துக்குங்களேம். இருந்தாலும் அது ஏம் வேலயத்த வேல. அதுக்குத்தாம் முன்னாடியே ஒங்ககிட்டெ சொல்றேம். நாம்ம இல்லாம் இந்த வழக்குல எதுவும் அந்தாண்ட இந்தாண்ட நவுந்துடக் கூடாது. அந்த அளவுக்கு ஒங்க மருமவனுக்கு நாலாப் பக்கமும் செக் வெச்சிருக்கேம். அதெ மறைக்கிறதுக்குத்தாம் இந்த வழக்குல ஒண்ணுமில்லங்ற மாதிரி நாடகமாடி ஒங்களக் கவுக்கப் பாக்குறது. என்னிக்கு இருந்தாலும் இந்த வழக்குங்க ஒவ்வொண்ணும் தலைக்கு மேல அவனுக்குத் தொங்கிட்டு இருக்குற கத்திங்கத்தாம். என்னிக்கு வேணாலும் அவனோட தலையில அறுந்துகிட்டுத்தாம் விழுவும். அதோட அபாயம் புரியாம வெளையாடிட்டு இருக்கிறாம். வெளையாடட்டும். நாமளும் கொஞ்சம் வெளையாட விட்டுத்தாம் நம்ம வெளையாட்டைக் காட்டணும்!"ன்னாரு வக்கீலு எந்த வெதத்துலயும் சுப்பு வாத்தியாரு மனசு மாறிடாதபடிக்கு. வக்கீலுக்கு தாம் கிழிச்சக் கோட்ட சுப்பு வாத்தியாரு தாண்டிடக் கூடாதுங்ற நெனைப்பு. அதெயும் சொல்றாப்புல, “நாம்ம கோட்டெ கிழிச்சேம்ன்னா அதெ தாண்டக் கூடாது. லட்சுமண ரேகையப் போல அது நீலகண்ட ரேகெ. தாண்டுனா கண்டந்தாம். அவனுவோ கட்டம் கட்டிக் காலிப் பண்ண தோதா போயிடும்!”ன்னாரு வக்கீலு பயமுறுத்தி எச்சரிக்குறாப்புல. இப்படி பேசிக்கிட்டெ சாப்பாடு நடந்துச்சு. வழக்கமா எதாச்சும் பேசி தன்னோட பயத்தெ காட்டி சந்தேகத்தெ கௌப்புற செய்யு எதுவும் பேசாம அவ்வே பாட்டுக்கு ஒரு தயிரு சாதத்தெ மட்டும் சாப்புட்டுகிட்டு இருந்தா. அதுவும் நல்லதுங்றது போல நெனைச்சிருப்பாரு போல வக்கீலு. செய்யுவ மேக்கொண்டு எதுவும் பேச வுடறாப்புல வார்த்தைய வுடாம கவனமா இருந்துகிட்டாரு அவரு.

            வக்கீலு சாப்புட்டு முடிச்சதும் அவரு கையில ரண்டாயிரம் ரூவாயத் திணிச்சாரு சுப்பு வாத்தியாரு. "பதிலுரை தாக்கல் பண்ணுதுக்காக ஆயிரத்து ஐநூறு கூடுதலா?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் மொகமெல்லாம் வழிஞ்சு நெறையுற சிரிப்போட.

            "அந்த வக்கீல நல்லா பேசி விட்டீயேல்ல! அதுக்குந்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இன்னிய கோர்ட்டுப் பொழுது நெறைவா போச்சுங்றதெ காட்டுறாப்புல.

            "அப்பிடின்னா ஒவ்வொரு தடவெயும் இப்பிடி வந்து பேசி விட்டுப்புட்டு ரண்டாயிரத்தெ வாங்கிட்டுப் போயிட்டே இருப்பேனே. இப்பிடி ரண்டாயிரம் கெடைக்கும்ன்னா ஏம் அங்க உக்காந்து கேஸ்ஸ நடத்திக்கிட்டு?"ன்னு அதுக்கும் கேள்வியிலயே பதிலு வர்றாப்புல சொல்லிச் சிரிச்சாரு திருநீலகண்டன்.

            "அடுத்ததா கோர்ட்டுக்கு எப்போ வருவீங்க? நாங்க என்ன பண்ணணும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீல கௌப்பி வுடுறதுக்கு மின்னாடி தன்னோட சந்தேகத்தத் தீத்துக்கிறாப்புல.

            "ஜட்ஜ் இப்ப சொன்னாப்புல வக்கீல் வர்றணும்ன்னு எப்போ லாஸ்ட் அன்ட் பைனல் சான்ஸ் சொல்றார்ன்னு பாருங்கோ. அப்போ மட்டும் போன போட்டுச் சொல்லுங்கோ. அது வரைக்கும் மகளெ அழைச்சாந்து நீங்க மட்டும் ஆஜராயிட்டெ இருங்க. டிவி கேஸூக்கும் அப்பிடித்தாம். ஜட்ஜா சொல்லுவாரு வக்கீல வர்றச் சொல்லுங்கன்னு. அப்ப மட்டும் சொல்லுங்க போதும். இடையில ஏன் நாம்ம வேற வந்துகிட்டு ஒங்ககிட்டெ ஐநூறு ரூவாய வசூல் பண்ணிக்கிட்டு? ஒங்களுக்கும் காசி மிச்சம், நமக்கும் அலைச்சல் மிச்சம் பாருங்க!"ன்னாரு வக்கீல் சுப்பு வாத்தியாருக்கு நெரம்ப நயப்பாட்டச் செய்யுறாப்புல.

            செரிதாம்ன்னு சுப்பு வாத்தியாரு வக்கீலையும், மவளையும் நடக்க விட்டெ பஸ் ஸ்டாண்டு வரைக்கும் அழைச்சாந்து வக்கீலைப் பஸ்ஸூ ஏத்தி வுட்டுப்புட்டு, மவளை அழைச்சிக்கிட்டு ஊரு வந்து சேர்ந்தாரு. வூடு வந்து சேர்ந்ததும் அவருக்கு ஒடம்புல அசதி வந்துச் சேந்துச்சு. மனசுக்குள்ள இப்பிடி ஒவ்வொரு தடவையும் வக்கீல் ஆபீசுல தவமா தவம் கெடந்து அவர்ர கொண்டு வர்றதெ நெனைச்சு அலுப்பாவும் தோணுச்சு. இந்த வழக்கு இனுமே எப்பிடிப் போவும்? எந்தத் தெசையிலப் போவும்? எப்ப முடியும்?ங்ற யோசனையும் அவரோட மனசுல அலை அலையா அடிக்க ஆரம்பிச்சது. கடெசீ காலத்துல தன்னெ கோர்ட்டுக்கு அலைஞ்சிட்டுக் கெடன்னு கடவுளு படைச்சிப்புட்டாம் போலன்னு நெனைச்சிக்கிட்டவரு, “அனுபவிக்கணும்ன்னு இருக்குறதெ யாரு மாத்த முடியும்?”ன்னு தனக்குத்தானே முணுமுணுத்துகிட்டாரு. அந்த முணுமுணுப்புல எங்கேயிருந்தோ வந்த வீசுற காத்துல கொஞ்சம் புழுக்கம் போறாப்புல மனசோட புழுக்கம் கொறைஞ்சாப்புல இருந்துச்சு அவருக்கு.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...