10 Jan 2021

விசாரணைக்கு வர்றீயா? இல்லியா?


 விசாரணைக்கு வர்றீயா? இல்லியா?

செய்யு - 682

            பஞ்சாயத்தாருங்க பண்ணுன அலம்பல் முடிஞ்சு ரண்டு நாளு இருக்காது. அடுத்த ரண்டாவது நாளு செவ்வாய்க் கெழமெ மத்தியானம் மூணு மணி வாக்குல சுப்பு வாத்தியாரு வூட்டு வாசலுக்கு மின்னாடி போலீஸ் ஜீப்பு வந்து நிக்குது. அதுலேந்து பொம்பளப் போலீஸ்ங்களா ரண்டு மூணு பேரு வந்து எறங்குறாங்க. அதுலேந்து இன்ஸ்பெக்டர் அம்மா யாரையும் கேக்காம நேரா கதவெத் தொறந்துக்கிட்டு வூட்டுக்குள்ள வந்து, "செய்யுங்றது யாரு? ஜீப்புல ஏறு கெளம்பு!"ங்றாங்க தோரணையோட எடுப்பான கொரல்ல. வெங்குவும், சுப்பு வாத்தியாரும் கொல்லையில நின்னவங்க ஓடியாந்து, "எதுக்கு எம் புள்ளையக் கூப்புடுறீயே? அவ்வே ன்னா தப்பு பண்ணா?"ங்றாங்க பயந்து நடுங்கிப் போன கொரல்ல.

            "யாரு பொண்ணோட தாயீ தகப்பனா? நீஞ்ஞ ரண்டு பேருந்தாம் பொண்ண புருஷனோட வாழ வுடாம தடுக்குறதா? ஒஞ்ஞளயும் ஜீப்புல ஏத்திக் கொண்டுப் போனாத்தாம் சரிபெட்டு வரும். ஏறுங்க ஜீப்புல!"ங்றாங்க அந்த அம்மா மெரட்டலான கொரல்ல. அதுக்குள்ள சேதி தெரிஞ்சிக் கிராமத்துல இருந்த பொம்பளைங்க எல்லாம் கூடி சுப்பு வாத்தியாரு வூட்டு வாசல் மின்னாடி வந்துட்டாங்க. "ஏம்டி இஞ்ஞ கூட்டம் கூடுதீயே? இஞ்ஞ ன்னா அவுத்துப் போட்டா ஆடுது? கெளம்புங்கடி!"ன்னாங்க ஒரு போலீஸ்கார அம்மா எளக்காரமான கொரல்ல. பொம்பளைங்க யாரும் அந்தாண்ட இந்தாண்ட கலைஞ்சிப் போவல. எல்லாம் தெகிரியமா கேள்வியக் கேட்டாங்க, "எதுக்கு யிப்போ இஞ்ஞ வந்து வூட்டுக்குள்ள பூந்தீயே?"ன்னு ஒண்ணு சேந்த கொரல்ல.

            "இந்த வூட்டுப் பொண்ணு மேல புகாரு வந்திருக்கு. அத்து சம்பந்தமா வெசாரிக்கத்தாம் கொண்டு போவணும்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா சுத்தி நின்ன பொம்பளைங்க யாரையும் பாக்காம அண்ணாந்துப் பாத்துக்கிட்டு.

            "விசாரணைக்குன்னு ஒரு காயிதம் போடாம இப்பிடி நீஞ்ஞ வந்து நிக்குறதெப் பாக்குறப்பத்தாம் சந்தேகமா இருக்கு. நாஞ்ஞளும் திருவாரூர்ல புகாரெல்லாம் கொடுத்திருக்கேம். எல்லாத்துக்கும் காயிதம் அனுப்பிக் கூப்புட்டுப் பாத்தாங்களே தவுர இப்பிடி நேரடியா போயெல்லாம் யாரையும் வம்படியா அழைக்கவே யில்ல! நீங்ஞ காயிதம் போட்டு நாஞ்ஞ வர்றாம இருந்தா கூட இப்பிடி நீஞ்ஞ வர்றதுல ஒரு ஞாயம் இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட தெகிரியத்தையெல்லாம் ஒண்ணு தெரட்டிக்கிட்டு. மின்னாடி இருந்த நடுக்கமும் பதற்றமும் அவருக்குப் போயிருந்துச்சு.

            "புகார்ன்னு வந்துட்டா வெசாரணைக்குன்னு காயிதமும் போடுவோம். யிப்பிடி நேரடியாவும் வருவேம். புகாரோட தன்மையப் பொருத்துத்தாம் அதெல்லாம்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா தடலடியாப் பேசுறாப்புல.

            "புகார்ன்னா யாரு கொடுத்தா? எஞ்ஞ வெசாரணைன்னு கொண்டு போறீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு என்னா ஏதுன்னு தெரிஞ்சிக்கிடாம மவளெ அனுப்பிடக் கூடாதுங்ற முடிவுல.

            "பாக்குக்கோட்டையிலேந்து டாக்டர் பாலாமணிங்றவம் கொடுத்திருக்காரு. வெசாரணைக்குப் பாக்குக்கோட்டைக்கு வந்தாவணும். இப்போ பாலாமணி ஸ்டேசன்ல இருக்காரு."ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா தான் வந்த நோக்கத்தெ பொசுக்குன்னு போட்டு ஒடைக்குறாப்புல.

            "அவ்ளோ தூரத்துக்கு மூணு மணிக்கு மேல நாங்க எப்போ அங்க வந்து இங்க திரும்புறது? எஞ்ஞ ஊருக்கு ராத்திரிக்கு மேலான பஸ்‍ஸெல்லாம் கெடையாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவளெ போலீஸ்காரவுகளோட அனுப்பிடக் கூடாதுங்ற யோசனையில.

            "போலீஸ் வெசாரணைன்னு வூடு தேடி வந்து கூப்புட்டா வந்துத்தாம் ஆவணும். சாக்குப்போக்குல்லாம் சொல்லக் கூடாது. அப்பிடி இருக்குற நீஞ்ஞ குத்தம்லாம் பண்ணக் கூடாது!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் சுப்பு வாத்தியாரு மனசுல குத்த உணர்ச்சிய உண்டு பண்ணுறாப்புல.

            "அப்பிடியென்ன வூடு தேடி வந்து அழைச்சிட்டுப் போறாப்புல குத்தத்தெ பண்ணிட்டேம்?"ன்னா செய்யு தெகிரியமா.

            "இந்தாரு பொண்ணு! நீயி சேர்ந்து வாழ்றதா எழுதிக் கொடுத்துப்புட்டு மூணு வருஷமா சேர்ந்து வாழ வர்றாம இருக்குறதாவும், ஒம்மட மாமியாரோட சாவுக்கு நீந்தாம் காரணம்ன்னும் புகார்ல இருக்கு. அத்து சம்பந்தமா நீயி வந்தாவணும்! வந்தா மருவாதியா அழைச்சிட்டுப் போவேம். வரலன்னா தரதரன்னு அரெஸ்ட் பண்ணி இழுத்துட்டுப்  போவ வேண்டியதா இருக்கும்!"ன்னாங்க அந்த அம்மா டக்குன்னு தன்னோட போலீஸ் மொறைப்பாட்டெ காட்டுறாப்புல.

            "அரெஸ்ட் பண்ணுறதுன்னா அரெஸ்ட் வாரண்ட் இருக்காம்மா?"ன்னா செய்யுவும் தன்னோட தெகிரியத்தெ வுட்டுக் கொடுக்காம.

            "எங்கிட்டேயே சட்டம் பேசுதீயா?"ன்னாங்க அந்த அம்மா கடுகடுங்ற கொரல்ல.

            "தப்பா நெனைச்சாக்காதீங்கம்மா! எஞ்ஞ ஊரு வர்ற லிமிட் திருவாரூரு மகளிர் காவல் நிலையந்தாம். அப்பிடியே நம்மள விசாரணைக்குக் கூப்புடுறதுன்னாலும் அவுங்கத்தாம் வாரணும். நீஞ்ஞ ஏம் எம்மளப் பாக்குக்கோட்டைக்குக் கூப்புடுதீயே?"ன்னா செய்யு நெசமாவே சட்டத்தெ எடுத்து வெச்சிப் பேசுறாப்புல.

            "ஏம்ன்னா நாம்ம பாக்குக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துலேந்து வர்றேம். நாம்ம ஒன்னயக் கொண்டுப் போயி எப்படி திருவாரூரு அனைத்து மகளிர் காவல் நிலையத்துலேந்து வெச்சி வெசாரிக்க முடியும்?"ன்னாங்க அந்த அம்மா பதிலுக்குப் பதிலு சட்டத்தெ எடுத்து நீட்டுறாப்புல.

            "அதாம் நாமளும் கேக்குறேம்ன்னு தப்பா நெனைச்சிப்புடாதீயே! திருவாரூரு மகளிர் காவல் நிலையத்துலேந்து வெசாரிக்க வேண்டிய நம்மள ஏம் பாக்குக்கோட்டையில வெச்சி வெசாரிக்க நெனைக்குறீங்க? நாம்ம வர்ற முடியாது. நமக்கு ஒஞ்ஞளோட வர்ற பயமாவும் இருக்கு. வேணும்ன்னே நம்மள அரெஸ்ட் பண்ணப் பாக்குறதா நெனைக்கிறேம்!"ன்னு அழுவவும் ஆரம்பிச்சிட்டா செய்யு.

            "ச்சும்மா சாதாரண வெசாரணைத்தாம். வந்து ஒன்னோட கருத்தெ சொல்லிட்டு நீயிப் பாட்டுக்கு வந்துக்கிட்டெ யிரு. இந்த கண்ண கசக்கி நடிப்பு வைக்குற வேலையெல்லாம் வாணாம்!"ன்னாங்க அந்த அம்மா நாலா பக்கமும் சுத்தி ஒரு பார்வையெப் பாத்துக்கிட்டு.

            சுப்பு வாத்தியாருக்கு திருவாரூரு மகளிர் காவல் நிலையத்துக்குப் போனப்ப நடந்த சம்பவங்க ஒவ்வொண்ணும் ஞாபவத்துக்கு வந்துச்சு. அங்க இன்ஸ்பெக்டர் அம்மா வெசாரணைக்கு ஒரு பையன அழைக்கப் போயி அழைக்க முடியாம திரும்ப வந்தது, பாலாமணி ஸ்டேசனுக்கே வர்றாம வக்கீல விட்டு காயிதத்துல எழுதிக் கொடுத்தது எல்லாம் அவரோட நெனைப்புக்கு வர வர அவரு கொஞ்சம் வெவரமா பேச ஆரம்பிச்சாரு.

            "எம் பொண்ண அனுப்ப முடியாது. மீறி அழைச்சிக்கிட்டுப் போனீயன்னா நாம்ம வடவாதி போலீஸ் ஸ்டேசன்ல எம் பொண்ண வம்படியா அழைச்சிட்டுப் போனதாவும் அடிச்சிச் சித்திரவதெ பண்ணதாவும் புகார்ரப் பண்ணுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவளோட அழுகையப் பொறுத்துக்கிட முடியாம.

            “அதெ பண்டுவோம் வாஞ்ஞ் மொதல்ல!”ன்னுச்சு வெங்கு தளும்பி வர்ற கொரல்ல.

            "போலீஸ்ஸப் பத்தி போலீஸ் ஸ்டேசன்ல புகார்ரப் பண்ணா நடவடிக்கெ எடுத்துப்புடுவாங்களா?"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா அவுங்கள எதுத்து எதுவும் பண்ண முடியாதுங்றாப்புல. ஒடனே செய்யு வூட்டுக்குள்ள ஓடிப் போனா. "ஏ பொண்ணு! எஞ்ஞப் போயி ஒளிஞ்சிக்கப் பாக்குறே? நீயி எஞ்ஞ ஒளிஞ்சாலும் கொண்டுப் போவாம விட மாட்டேம்!"ன்னாங்க அந்த அம்மா தப்பிக்கிறதுக்கான அனைத்து வழிகளையும் அடைச்சிட்டாப்புல.

            "எஞ்ஞயும் ஒளியிலம்மா! கோர்ட்டுல தாக்கல் பண்ணதுல எங்கிட்டெ வக்கீல் ஒரு காப்பியக் கொடுத்திருக்காரு. அதெ ஒஞ்ஞகிட்டெ கொண்டாந்து காட்டத்தாம் போறேம்!"ன்னா செய்யு தன்னோட ஞாயப்பாட்டெ எடுத்து வைக்குறாப்புல.

            "கோர்ட்டா?"ன்னாங்க அந்த அம்மா ஒண்ணும் புரியாதவங்களப் போல.

            "ஆமாம்மா! கோர்ட்டுல வழக்கு நடந்துகிட்டு இருக்கு. ஜீவனாம்ச வழக்கு நடந்து முடிஞ்சு மாசத்துக்கு அய்யாயிரம் பணம் கொடுத்தாவணும்ன்னு உத்தரவு ஆயிருக்கு. அவ்வேம் தரப்புல மேல் அப்பீலுக்குப் போயிருக்காம். ஆர்குடி கோர்ட்டுல வன்கொடுமெ வழக்க நாஞ்ஞ தாக்கல் பண்ணிருக்கோம். அவ்வேம் சேர்ந்து வாழணும்ன்னு வழக்கெ தாக்கல் பண்ணிருக்காம். வழக்குல்லாம் கோர்ட்டுல இருக்குறப்போ எப்பிடி வந்து ஸ்டேசனுக்குக் கூப்புடுவீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு நடந்த கதையையெல்லாம் நாலு வரியில எடுத்து வைக்குறாப்புல.

            "இந்த விசயத்தெ அந்தப் பயெ நம்மகிட்டெ சொல்லவே யில்லீயே? என்னவோ கோர்ட்டுல தாக்கல் ஆயிருக்கு அத்தெ ஒரு ஆதாரமா தந்தாம். அத்தோட அவனோட அம்மா சாவுக்கு நீந்தாம் காரணம்ன்னுல உருக்கமா அழுதாம்!"ன்னாங்க அந்த அம்மா கண்ணு ரண்டையும் மூடிக்கிட்டு யோசிக்குறாப்புல.

            "தயவு பண்ணி அந்தத் தாக்கல்ல காட்டுனீயன்னா நாமளே அதெப் பத்தின மேக்கொண்டு பல உண்மையெ சொல்லிடுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கெஞ்சிக் கேக்குற கொரல்ல. இன்ஸ்பெக்டர் அம்மா பக்கத்துல இருந்த போலீஸ்கார அம்மாகிட்டெ, "போயி ஜீப்புல இருக்குற அந்தக் காயிதத்தெ எடுத்தா!"ன்னாங்க உத்தரவு போடுற கொரல்ல.

அதெ எடுத்து வந்துக் காட்டுனதும் சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "ஆர்குடி கோர்ட்டுல தாக்கல் ஆயிருக்குற ஹெச்செம்ஓப்பி வழக்குல எஞ்ஞ வக்கீலு தாக்கல் பண்ண பதிலுரைய செராக்ஸ் அடிச்சி ஒஞ்ஞகிட்டெ கொடுத்திருக்காம். அதுல வழக்கு இன்னும் நடக்க வேண்டி இருக்கும்மா. நடந்து முடிஞ்சித் தீர்ப்பு வந்தா நீஞ்ஞ சொல்றதெல்லாம் செரி. வழக்கே இனுமேத்தாம் ஆரம்பமாவும். ரண்டு நாளுக்கு மின்னாடி இப்பிடித்தாம் கிராமத்துல பஞ்சாயத்தார்கள ரண்டு பேர்ர அனுப்பி பெரச்சனெ பண்ணிட்டாம். யிப்போ ஒஞ்ஞளு அனுப்பிச்சிருக்காம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நடப்பெ வௌக்கிச் சொல்றாப்புல.

            "எது எப்பிடியோ நீஞ்ஞ ஸ்டேசன் வரைக்கும் வந்து ஒரு வெளக்கத்தக் கொடுத்துப்புட்டா, நாமளும் பைல க்ளோஸ் பண்ணிடுவேம். யிப்போ இம்மாம் தூரம் பெட்ரோல்ல போட்டுட்டு வந்து நாம்ம ச்சும்மா திரும்ப முடியாது பாருங்க. ஒஞ்ஞப் பொண்ணுக்கு எந்த ஆபத்தும் யில்லாம கொண்டாந்து வுட வேண்டியது நம்ம பொறுப்பு. வேணும்ன்னாலும் நீங்களும் கெளம்புங்க. போயிட்டு வந்துப்புடலாம்!"ன்னாங்க அந்த இன்ஸ்பெக்டர் அம்மா அவ்சரப்படுத்துறாப்புல.

            "அதாங் எங்க ஊரு வாத்தியாரு இம்மாம் சொல்றாரு! அப்புறமும் கெளம்பு கெளம்புன்னா ன்னா அர்த்தம்? எஞ்ஞ ஊருப் பொண்ணுக்கு நடந்திருக்குற கொடுமெக்கு அவனெத்தாம் ஸ்டேசன்ல கொண்டாந்து வெச்சி அடிக்கு அடி, ஒதைக்கு ஒதைன்னு வெச்சி வெசாரிக்கணும். அதெ வுட்டுப்புட்டு எஞ்ஞ ஊருப் பொண்ண கொண்டு போவ நெனைச்சா ன்னா அர்ததம்? அந்தப் பயெ எஞ்ஞப் பொண்ண வாழவே வுடல. என்னவோ பொட்டச்சி மாரில்லா நடந்துக்கிறானாம். பொடவெ கட்டிக்கிட்டுல்லா திரியுறானாம். ஒழுங்கா கட்டில்ல படுக்கக் கூட வக்கில்லாதப் பயெ. அந்தப் பெயலுக்கு வக்காலத்து வாங்கிட்டா வந்திருக்கீயே?"ன்னுச்சு கூட்டமா கூடி வந்த பொம்பளைகளோட வந்திருந்த தம்மேந்தி ஆத்தா எதுக்கும் பயமில்லாததப் போல.

            "அவுங்கத்தாம் கோர்ட்டுக்குப் போயிட்டாங்களே. கோர்ட்டுல வெசாரணை நடந்துகிட்டு இருக்குறப்போ நீஞ்ஞ வெசாரணை பண்ணுறதெல்லாம் மொறையில்ல. இதெ நாஞ்ஞ கோர்ட்டுல சொல்றாப்புல ஆயிடும்!"ன்னாங்க பரமுவோட அம்மாவும் துணிஞ்சு வந்து களத்துல எறங்கி போராடுறாப்புல. முடிவா எல்லா பொம்பளைங்களுமா சேந்துகிட்டு, "எஞ்ஞ ஊரு பொண்ணுக்கு கொடுமெ நடந்திருக்கு. அதெ மொதல்ல வெசாரிங்க அவனெ வெச்சி!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மாவ சுத்திக்கிட்டு.

            "அதுக்குத்தாம் கூப்புடுறேம். அந்தப் பயெ ‍அஞ்ஞ ஸ்டேசன்ல இருக்காம். இந்தப் பொண்ணு அஞ்ஞ வந்தா ஒண்ணா வெச்சி வெசாரிச்சிப் புடலாம்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா சமத்காரமா கூட்டத்தெ சமாளிக்குறாப்புல.

            "ந்நல்ல கதெயே கெடுத்தீயளே? எஞ்ஞ ஊரு பொண்ண எஞ்ஞ ஊரு பஞ்சாயத்துலயே வெச்சி வெசாரிக்கல. ஒரு வூட்டுல கொண்டுப் போயி வெசாரிச்சேம். நீஞ்ஞ என்னான்னா இஞ்ஞயிருந்து பாக்குக்கோட்டை கொண்டுப் போயி வெசாரிப்பீயளா? ந்நல்லா இருக்கே ஞாயம்? நீஞ்ஞளும் ஒரு பொம்பளேத்தானேம்மா. இப்பிடி ஒரு கதி ஒஞ்ஞப் பொண்ணுக்கு நடக்குதுன்னா வுட்டப்புட்டுத் தேடுவீயளா?"ன்னாங்க சுத்தி நின்ன பொண்டுக எல்லாம்.

            "அப்பிடி முக்கியமான வெசாரணைன்னா நீஞ்ஞ திருவாரூரு மகளிர் காவல் நிலையத்துல சொல்லி வுடுங்க. நாம்ம அஞ்ஞ ஆஜரு ஆவுறேம். அஞ்ஞயே வழக்கு கோர்ட்டுக்குப் போயிட்டுன்னா நாஞ்ஞ எதுவும் பண்ண முடியாதுன்னுத்தாம் சொன்னாங்க. ஒவ்வொரு ஸ்டேசனுக்கும் ஒவ்வொரு ஞாயமா இருக்கு?"ன்னா செய்யு அழுது வடிஞ்ச கண்ணுலேந்து தெகிரியத்தெ காட்டிக் கேக்குறாப்புல.

            "நீயி இவ்ளோ பேச்சுப் பேசிக்கிட்டு இஞ்ஞ நிக்குற நேரத்துக்கு அஞ்ஞ வந்து சொல்லிட்டு இந்நேரத்துக்குத் திரும்பியே இருக்கலாம்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா தாம் பிடிச்ச புடிய வுடாம.

            "என்னம்மா நீஞ்ஞ இம்மாம் சாதாரணமா சொல்லுறீயே? நாஞ்ஞ எவ்வளவோ ஸ்டேசன்ல புகார்ருக் கொடுத்தப்போ அந்தப் பெய ஒண்ணுலயும் வந்து ஆஜராவுல. மூணு வருஷம் கழிச்சிப் பொண்டாட்டி சேந்து வாழலன்னு சொன்ன ஒடனே நீஞ்ஞ வந்து இப்பிடி நிக்குதீயளே?"ன்னுச்சு வெங்கு ஒரு கண்ணுல வெண்ணெயும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்குறாப்புல நடந்துக்கிறதெ சொல்றாப்புல.

            "ரொம்பப் பேசாம, நேரத்த வளத்தாம கெளம்புங்க!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா ரொம்ப பிடிச்சா பிடிவாதமா, அதெ வுட்டுக் கொடுக்காம விதாண்டாவாதமா.

            "வக்கீல்கிட்டெயும் ஒரு வார்த்தெ கேட்டுக்கிட்டுக் கெளம்பி வர்றதெப் பத்தி முடிவெ பண்ணுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பட்டுன்னு நெலமைய மாத்துறாப்புல. அவருக்குத் திடுதிப்புன்னு இப்படி ஒரு யோஜனெ எப்படி வந்துச்சோ தெரியல. சட்டுன்னு அவரு கண்ணு ரண்டுலயும் ஒளி பாஞ்சாப்புல பேசுனாரு.

            "வக்கீலுக்கெல்லாம் போன போடாதீயே!"ன்னு அந்த அம்மா சொல்றதுக்கு மின்னாடியே செய்யு சட்டுன்னு பக்கத்துல இருந்த போன எடுத்துத் திருநீலகண்டனுக்குப் போன போட்டு விசயத்தச் சொன்னா. நேரம் நல்ல நேரமா இருந்திருக்கும் போல. இவ்வே போன போட்டதுக்கும் வக்கீலு போன எடுக்குறதுக்கும் எல்லாம் சரியா இருந்துச்சு. செய்யு சொன்னதெ கேட்டுட்டு திருநீலகண்டன் வக்கீல், "நல்ல வேள! போனப் போட்டுச் சொன்னீயேம்மா! தயவுபண்ணிக் கெளம்பிடாதே! அழைச்சிட்டுப் போயி ஒன்னய ஜெயில்ல போட்டா ஜாமீன் எடுக்க நாம்ம அங்க வந்தாவணும். வீட்டுலயே அப்பிடியே பச்சக்குன்னு உக்காந்துக்கோ. நாம்ம அரை மணி நேரத்துல வந்துடுறேம் அங்க. எதுக்கும் அந்த அம்மாகிட்டெ போன கொடு நாம்மப் பேசிப் பாக்குறேம்!"ன்னாரு பேச்சாலயே காரியத்தெ முடிக்க முடியுமான்னு பாக்குறாப்புல.

            செய்யு போன கொண்டுப் போயி இன்ஸ்பெக்டர் அம்மாகிட்டெ கொடுத்து, "எஞ்ஞ வக்கீலு பேசணும்ங்றாரு!"ன்னா இனுமே பேசுறதெ வக்கீல்கிட்டெ பேசுங்கங்றாப்புல.

            "வக்கீல் பேசுறம்ன்னா பயந்தா போயிடுவேம்!"ன்னுகிட்டெ போன வாங்கி, "எந்த ஊரு வக்கீலுய்யா நீயி?"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா எடுத்த எடுப்புலயே அலட்சியம் காட்டுறாப்புல.

            "திருவாரூரும்மா. பார் கெளன்சில்ல துணைத் தலைவராவும் இருக்கேம். பேரு திருநீலகண்டன். திருவாரூரு, ஆர்குடி, நாகப்பட்டிணம்ன்னு எந்த கோர்ட்டுல கேட்டாலும் சொல்லுவாங்க திருநீலகண்டன்னா யாருன்னு. மந்திரி கேஸ்ஸ ஒண்ணுல கூட ஆஜராயி ஜெயிச்ச வக்கீல்ன்னு சொன்னா எல்லாருக்கும் தெரியும்!"ன்னாரு திருநீலகண்டன் அவையடக்கத்தோட சொல்றாப்புல சொல்லி தன்னோட பக்கபலத்தெ காட்டுறாப்புல.

            "சொல்லுங்க சார்!"ன்னுங்க அந்த இன்ஸ்பெக்டர் அம்மா டக்குன்னு தொனி மாறி.

            "நீங்க பாக்குக்கோட்டையிலேந்து இங்க வந்ததெ தப்பு. ஏன்னா திட்டை கிராமமோ வடவாதி கிராமமோ திருவாரூரு அனைத்து மகளிர் காவல் நிலையத்தோட லிமிட்டுக்குள்ள வர்றது. நீங்க அவுங்கள விசாரணைக்குக் கூப்புடறதுக்கு மின்னாடி லோக்கல்‍ போலீஸ் ஸ்டேசன், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துல தகவல் தெரிவிச்சிருக்கணும். தெரிவிச்சீங்களா இல்லையான்னு தெரியல. அத்தோட கோர்ட்டுல வழக்கு நடந்துகிட்டு இருக்குற ஒரு வழக்குல இருக்குறவங்களெ கோர்ட்டெ மீறி நீங்க விசாரணை பண்ணுறது கோர்ட்டு அவமதிப்பா போயிடும். அவுங்கள அரெஸ்ட் பண்ணுறதா இருந்தா இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ள வக்கீல்கிட்டெ தகவல் சொல்லணும்ன்னு இதுல நிறைய சட்ட சிக்கல்லாம் இருக்கு. நீங்க விசாரணைன்னு அழைச்சிட்டுப் போனா நாம்ம இங்க திருவாரூர் முதன்மை நீதிமன்றத்துல நாளைக்கே கேஸ்ஸப் போடுறாப்புல ஆயிடும். அதால பின்னாடி ஒங்க வருங்காலத்துல ஒங்க புரமோஷன் எதுவும் பாதிப்பு ஆன்னா அதுக்கு நாம்ம பொறுப்பு கெடையாது. நாம்ம வழக்குன்னு எறங்கிட்டா பெறவு என்னத்தெ கால்ல விழுந்தாலும் செரித்தாம், கையில வுழுந்தாலும் செரித்தாம் பின் வாங்க மாட்டேம். வழக்க நடத்தி முடிச்சிட்டுத்தாம் மறுவேலை பார்ப்பேம். ஒரு அரை மணி நேரம் பொறுங்க. நாம்ம அங்க வந்துடுறேம். அது பொறுக்க முடியாது, ஒடனே விசாரணைக்கு அழைச்சிட்டப் போவேன்னா நாம்ம மொதல்ல மனித உரிமை ஆணையத்துக்கு இம்மீடியேட்டா மெயில்ல ஒரு புகார்ர தட்டி விட்டுட்டுத்தாம் அங்க வருவேம். நீங்க பாக்குக்கோட்டைக்குப் போறதுக்கு மின்னாடி நாம்ம அங்க இருப்பேம்!"ன்னாரு வக்கீல் தன்னோட அடுத்தக்கட்ட நடவடிக்கையெ ஸ்கெட்ச் போட்டுச் சொல்றாப்புல.

            "அதெல்லாம் வேண்டாம் வக்கீல் சார்! நீஞ்ஞ ஒண்ணும் வார வேணாம். வந்துட்டேம். வந்ததுக்கு வெசாரிச்ச மாதிரியும் அதுக்கு அந்தப் பொண்ணு வெளக்கம் கொடுக்குறாப்புல ஒரு காயிதத்தெ எழுதிக் கொடுத்தா கூட போதும். அதெ வெச்சிக்கிட்டு கெளம்பிடுறேம்!"ன்னாங்க அந்த அம்மா இப்போ பத்தாவது மாடியிலேந்து சட்டுன்னு தரைத்தளத்துக்குத் தொப்புன்னு எறங்கி வர்றாப்புல.

            "அப்பிடின்னா ஓக்கேம்மா! அதுல ஒண்ணும் பெரச்சனெ இல்ல. நீங்க பொன செய்யுகிட்டெ கொடுங்க. நாம்ம பேசுறேம்!"ன்னாரு வக்கீல் சாமியாடிட்டு இருக்குற பொண்ணெ சட்டுன்னு அமைதியாக்கிடுறாப்புல.

            இன்ஸ்பெக்டர் அம்மா போன செய்யுகிட்டெ கொடுத்ததும் வக்கீல் சொன்னாரு, "கோர்ட்டுல வழக்கு நடக்குறதால, சட்டப்பூர்வமா அனைத்தையும் கோர்ட்டுல எதிர்கொண்டு பாத்துக்கிறேன்னு அந்த அம்மாகிட்டெ அனுப்புநர், பெறுநர் போட்டு ஒரு காயிதத்தெ எழுதிக் கொடு. அதெ கொடுக்குறதுக்கு மின்னாடி ஒரு சிராக்ஸ் எடுத்துக்கிட்டா நல்லது. சிராக்ஸ் எடுக்க முடியாட்டியும் செல்லுல ஒரு போட்டோவப் பிடிச்சிக்கோ. போதும். நாம்ம அரை மணி நேரத்துல அங்க வந்து நிக்குறேம்!"ன்னாரு வக்கீல் அடுத்துச் செய்ய வேண்டியதெ ஆணித்தரமா சொல்றாப்புல.

            செய்யு வக்கீல் சொன்னதெ சொல்லி காயிதத்துல எழுதித் தர்றதா சொன்னதெ கேட்டுகிட்டு, அவ்வேகிட்டேயிருந்து போன வாங்கி திருநீலகண்டன் வக்கீல்கிட்டெ அந்த அம்மாவேப் பேசுனாங்க. "நாம்ம கெளம்பிடுறேம் எழுதி வாங்கிட்டு. நீஞ்ஞ வர்ற வேணாம்ங்க வக்கீல் சார்! ஏம் தேவையில்லாம அலைஞ்சுக்கிட்டு? நீஞ்ஞ செரியா கைடுலைன்ஸ் காட்டிட்டீங்க. நாம்ம அதுப்படியே பாலோ பண்ணிப் போயிக்கிறேம். ஒஞ்ஞளுக்கு அநாவசியமா சிரமம் வாணாம்! நாம்ம அப்பிடியே பண்ணிக்கிடலாம்!"ன்னாங்க அந்த அம்மா சட்டுன்னு மழையடிச்சு ஒடனே வெயிலுக்கு மாறிப் போற வானத்தெ போல. எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுச் சுப்பு வாத்தியாரும் செய்யுகிட்டெ சொல்லி, "அய்யாவே அநாவசியமா அலைய வாணாம்ன்னு சொல்லு. நாமளே ஏழு மணி வாக்குல நேர்ல ஆபீசுக்கு வர்றதா சொல்லு!"ன்னாரு நெலமைய சமாளிச்சுப்புடலாம்ங்ற நம்பிக்கையில. அவருக்கு நெலமெ இந்தப் படிக்கு ஒடனே மாறும்ன்னு நம்பிக்கையில்ல. நெலமெ பட்டுன்னு மாறுனதுல வக்கீல் மேல ஒரு பெரிய மருவாதி வந்துப் போச்சு அவரு மனசுக்குள்ள.

            செய்யு அப்பங்காரரு சொன்ன அந்த படிக்கே வக்கீல்கிட்டெ சொல்லிட்டு, அவரு சொன்னபடிக்கே ஒரு காயிதத்தெ எடுத்து எழுதிக் கொடுத்தா இன்ஸ்பெக்டர் அம்மாகிட்டெ. அதெ வாங்கிட்டு, "எப்பிடியோ வர்றாம தப்பிச்சிட்டே! அதெ வுடு! அந்த டாக்கடரோட சேர்ந்து வாழப் போறீயா? என்னா? முடிவெ எப்பிடி எடுத்திருக்கே? இதெ கொஞ்சம் பெர்சனலாவே தெரிஞ்சுக்க ஆசெப்படுறேம்! ஒரு போலீஸ்ஸா நாம்ம இதெ கேக்குறதா நெனைக்க வாணாம்!"ன்னாங்க கெளம்பப் போறதுக்கு மின்னாடி.

            "அந்த ஆளோடல்லாம் சேர்ந்து வாழ முடியாதும்மா. அந்த ஆளு ஆம்பளைங்கள கட்டிப் பிடிச்சிக்கிட்டு, ஆம்பளைங்களோட குடித்தனம் நடத்துற ஆளு. அப்பிடி யாருகிட்டேயோ குடித்தனம் நடத்திக்கிட்டுத்தாம் இத்தனெ வருஷமாப் பிரிஞ்சி இருக்காரு! ஹோமோ கேசும்மா அந்த ஆளு!"ன்னா செய்யு தன்னையும் அறியாம. அதெ சொன்னதுக்குப் பெறவு அவளுக்கே ஒரு யோசனெதாம், நாம்மா இப்படி ஒரு பதிலச் சொன்னேம்ன்னு. அதுக்கு மேல அந்த இன்ஸ்பெக்டர் அம்மா எதுவும் பேசல. செய்யு எழுதிக் கொடுத்ததெ பக்கத்துல இருந்த போலீஸ்கார அம்மாகிட்டெ கொடுத்துட்டு வெளியில கௌம்புனவங்க ஜீப்புல ஏறிப் போயிக்கிட்டெ இருந்தாங்க.

போலீஸ்காரவுக வந்த ஜீப்பு கெளம்புன பிற்பாடு, சுப்பு வாத்தியாரு தலையில கையெடுத்துக் கும்பிட்டாரு வந்து நின்ன பொம்பளைகளப் பாத்து. "அட ச்சும்மா இருங்க வாத்தியாரே! நம்ம ஊரு பொண்ணுக்குன்னா ச்சும்மா வுட்டுப்புடுவமா? அந்தப் பொட்டப் பயெ போலீஸ்ஸ அனுப்பி பயம் காட்டுறாம். அதுக்குல்லாம் பயந்துப்புடாதீங்க. இந்த ஊரு ஆம்பளைங்க வேணும்ன்னா அப்பிடி யிப்பிடி பேசலாம், அப்பிடி யிப்பிடின்னு போவலாம். பொம்பளைகளுக்குப் பொம்பளைங்க விட்டுக் கொடுத்துட மாட்டேம்!"ன்னாங்க எல்லா பொம்பளைங்களும் ஒண்ணு சேந்தாப்புல. அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாரு கண்ணுலேந்து கண்ணுத் தண்ணி வர்றாத கொறைத்தாம். வெங்கு தம்மேந்தி ஆத்தாவப் போயி கட்டி அணைச்சிக்கிட்டு அழுதுச்சு.

"ஒம் பொண்ணு நல்லா இருப்பா பாரு! ஏத்தோ ஒரு நேரந்தாம் இப்பிடி அவளெப் போட்டு அலைக்கழிக்குது. ஆண்டவேம் இருக்காம். பாத்துப்பாம்!"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...