கடைசி மற்றும் இறுதி வாய்ப்பு
செய்யு - 679
தண்ணி டேங்கு கோர்ட்டுன்னு சொல்ற ஆர்குடி
சார்பு நீதிமன்றத்துல சேந்து வாழணும்ன்னு பாலாமணி போட்ட ஹெச்செம்ஓப்பி வழக்குல ரொம்ப
நாளா பதிலுரை தாக்கல் பண்ணாம கெடந்துச்சு. இந்த வழக்குல எதிர்மனுதாரரான செய்யுவோட
தரப்புல வக்கீலு சரியா ஆஜராவலங்றதுல ஜட்ஜ் ரொம்பவே கடுப்புல இருந்தாரு. வக்கீல் கங்காதரன்
போட்ட டிரான்ஸ்பர் ஓப்பி வழக்கால வெசாரிக்க முடியாம கெடந்து இப்போ வெசாரணை ஆரம்பிச்சும்
வக்கீல் திருநீலகண்டன் பதிலுரை தாக்கல் பண்ணாம கெடந்ததுல வழக்கு அடுத்தக் கட்டத்துக்கு
நகராமலே கெடந்துச்சு. அதுல ஒரு தேதியில ஆஜரான செய்யுவக் கூப்புட்டு ஜட்ஜ் கண்டிஷன்னா
அடுத்தத் தேதியில வக்கீலோட ஆஜராயி பதிலுரையத் தாக்கல் பண்ணிட்டு மறுவேல பாருங்கன்னு
பொட்டுல அடிச்சாப்புல சொல்லிட்டாரு. அப்படித் தாக்கல் பண்ணாட்டா எக்ஸ்பார்டி எவிடென்ஸ்ஸா
ஒரு தலைபட்சமா தீர்ப்ப வழங்கிப்புடுவேன்னும் எச்செரிக்க பண்ணாரு. இதெ கேட்டுப்புட்டு
வெளியில வந்தா பாலாமணியும், வக்கீல் கங்காதரனும் சேந்துகிட்டுச் செய்யுவையும், சுப்பு
வாத்தியாரையும் வெடைச்சி எடுத்துப்புட்டாங்க.
"ஏம்ப்பா பதிலுரை தாக்கல் பண்ண முடியலன்னா
கொடுக்குறதெ வாங்கிட்டுப் போவ வேண்டியதானேப்பா!"ங்றாம் சாடையா பாலாமணி வக்கீல்
கங்காதரன்ட்ட சொல்றாப்புல.
"அவ்வேம் பொம்பளப் பின்னாடி சுத்துறப்
பயலப்பா! இந்நேரம் அந்த வக்கீல் பயெ எந்தப் பொண்ணோட சுத்திக்கிட்டு கெடக்குறானோ?
இந்தப் பொண்ணு சரியா கம்பெனி கொடுக்க மாட்டேங்குது. அதாலத்தாம் அவ்வேம் இந்தப் பொண்ணுக்குச்
சரியா ஆஜராயிப் பதில் மனுவ தாக்கல் பண்ண மாட்டேங்றாம்ப்பா!"ன்னு வக்கீல் கங்காதரனும்
பாலாமணிகிட்டெ சொல்றாப்புல சாடையா சொல்றாரு.
அதெ கேட்டதும் செய்யுவுக்குக் கோவம் வந்து
அவுங்கள நோக்கி வெறிச்சாப்புல போவப் போனா. சுப்பு வாத்தியாரு செய்யுவக் கையப் பிடிச்சித்
தடுத்து ஒடனே டிவியெஸ் பிப்டியில உக்கார வெச்சி வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டாரு. அப்பவும்
வுடாம பாலாமணி கெளம்பிப் போறவங்க காதுல கேப்புறாப்புல பேசுனாம், "நம்மள ஜீவனாம்ச
வழக்குலயே ஒண்ணும் பண்ண முடியல! ஒரு மசுரையும் புடுங்க முடியலயாம்! இதுல வன்கொடுமெ
வழக்கு வேறயாம்! வான்னு அதுக்குத்தாம் வெச்சேம் பாருப்பா ஹெச்செம்ஓப்பியில ஆப்ப! இதுல
ஒண்ணும் சிண்டெ அந்தாண்டயும் ஆட்ட முடியாது. இந்தாண்டயும் ஆட்ட முடியாது. ஒட்டு மொத்தத்துல
எப்பிடி ஆட்டுனாலும் ஆட்டம் க்ளோஸ்தாம்! போ போ போயி வூட்டுலஅழுதிட்டுக் கெட!"ன்னு.
அதுக்கு வக்கீல் கங்காதரன் சத்தமா,
"தாங்கள் தங்களைப் பிரிந்து வாழும் சட்டப்பூர்வமான மனைவிக்கு கண்ணீரைத் துடைத்துக்
கொள்ள கர்சீப்பைக் கூட வாங்கிக் கொடுக்கவில்லை என்று இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது!"ன்னு
சன்னமா சொல்றதும் அவுங்க ரண்டு பேரும் பகபகன்னு சிரிக்கிறதும் வண்டியில வந்துட்டு
இருக்குற செய்யுவுக்கும், சுப்பு வாத்தியாருக்கும் கேக்குது. வண்டியும் ரொம்ப பழைய
வண்டியா போனதால கொஞ்சம் தூரம் நவுந்தாத்தாம் அந்த வண்டி இப்போல்லாம் வேகமெடுக்குது.
அதுவும் பாவந்தாம் எத்தனெ காலமா அப்பிடி ஒரு வண்டி காலாவதியாயி டிவியெஸ் எக்செல் சூப்பர்ன்னு
வேறோரு வடிவத்துல வந்தப் பெறவு இப்பவும் ஒழைச்சு ஓடா தேய்ஞ்சிட்டுப் போயிக் கெடக்குது.
இப்போல்லாம் கோர்ட்டுக்குப் போயிட்டு
வர்றதெ சுப்பு வாத்தியாருக்கு ஒரு சவாலா மாற ஆரம்பிச்சிது. பாலாமணியும், வக்கீல் கங்காதரனும்
சேர்ந்து பரிகாசம் பண்ணுறதும், கெக்கெலி கொட்டிச் சிரிக்கிறதும்ன்னும் ரொம்ப ரோதனையா
ஆவ ஆரம்பிச்சது. திருவாரூர் கோர்ட்டுன்னா கேஸ்ஸூ முடிஞ்சும் உள்ளார ரொம்ப நேரம் நிக்க
முடிஞ்சிது. ஆர்குடி தண்ணி டேங்குக்குக் கீழே இருந்த சார்பு நீதிமன்றத்துல அது முடியல.
எப்படா வெளியில வந்தா தேவலாங்ற மாதிரிக்கிக் கூட்டமா இருந்ததால, வெளியில வர்றாப்புல
ஆயிடும். வெளி வராந்தாவும் கெடையாது. அதால அப்பிடி வெளியில இவுங்க வர்றதுக்கு மின்னாடி
பாலாமணியும் அவனோட வக்கீலும் சரியா வந்து இப்பிடி எதாச்சும் பரிகாசம் பண்ணி அனுப்பி
வுடுறதெ ஒரு வேலையா பண்ண ஆரம்பிச்சானுங்க. சுப்பு வாத்தியாரு அதெ பெரிசா எடுத்துக்கிடாட்டாலும்
செய்யுவால முடியல. ஏற்கனவே அலைஞ்சு அலைஞ்சு ஜீவனாம்ச வழக்குல தீர்ப்பாயும் அதெ வாங்க
முடியாத மன உளைச்சல்ல இருந்தவெ, இதுல ரொம்ப மனசு பாதிச்சுப் போனா. சமயத்துல அவனுங்க
பண்ணுற பரிகாசம் எல்லெ மீறிப் போறப்ப வூட்டுல வந்து விகடுகிட்டெ சொல்லி அவனுகள அடிச்சிப்
போடணும், கையி கால முறிச்சிப் போடணும்ன்னு பொலம்பிட்டுக் கெடந்தா.
"ஒருவேள பாலாமணியும் வக்கீல் கங்காதரனும்
அப்படி எதாச்சும் பெரச்சனெ உண்டாவனும்ன்னு கூட அப்பிடிப் பேசலாம், பண்ணலாம். அதெ வெச்சி
எதாச்சும் ஆதாயம் தேடலாம்ன்னு பாக்கத்தாம் இந்த வேலயப் பண்ணுறானுவோ! பரிகாசம் பண்ணா
பண்ணிட்டுப் போவட்டும். அவனுவோ வாயித்தானெ வலிக்கப் போவுது. பரிகாசம் பண்ணுறவனெ
கண்டுக்கிடாம சிரிச்சிக்கிட்டெ வந்துடுறோம் பாரு, அத்து பரிகாசத்தெ வுட பெரிய பரிகாசம்!"ன்னாம்
அதுக்கு விகடு செய்யுவ மனசாந்தி பண்ணி வுடுறாப்புல.
"நாம்ம ஏம் அவனுவோ கையி, கால முறிக்கணும்?
வண்டியிலத்தான வர்றானுவோ, போறானுவோ. எங்காயச்சும் அடிபட்டு வுழுந்து அவனுவோளே கையி,
கால முறிச்சிப்பானுவோ போ! அவ்வேம்வேம் பண்ணுற தப்புக்கு அவனுவோளே தண்டனெய அனுபவிப்பானுவோ.
எத்தனெ காலம் யிப்பிடி சொல்லிட்டுக் கெடப்பானுவோ! ரத்தம் சுண்டுற வரைக்குத்தாம்னே.
பெறவு அவனுவோ பண்ண பரிகாசத்துக்கு, அவனுவோள பரிகாசம் பண்ணுறதுக்கு ஆளுங்க வந்துச்
சேருவானுவோ வுடு! யிப்போ அதெ நெனைக்க வாணாம். வக்கீலுக்கு மொதல்ல போனப் போட்டு
இன்னிக்கு நடந்த வெசயத்துச் சொல்லி பதில் மனுவெ தாக்கல் பண்ண ஜட்ஜ் கண்டிஷன்னா சொன்னதெ
சொல்லு. அவரு என்ன சொல்றார்ன்னு கேட்டுக்கிடணும்!"ன்னு சுப்பு வாத்தியாரும்
தம் பங்குக்கு மவளுக்கு வூட்டுக்கு வந்ததும் சமாதானம் பண்ணாரு. சமாதானத்துக்குக் கடைசியில
பரிகாசத்துக்கு ஒரு முடிவ கட்டுறாப்புலயும், ஹெச்செம்ஓப்பி வழக்குல ஜட்ஜ் சொல்றாப்புல
பதில் மனுவெ தாக்கல் பண்ணி வுடுறாப்புலயும் இந்த விசயத்தெ போன் பண்ணி திருநீலகண்டன்
வக்கீல்கிட்டெ சொல்றதுன்னு முடிவாச்சுது.
இந்தத் தகவலப் போன் பண்ணி செய்யு வக்கீல்
திருநீலகண்டன்கிட்டெ சொன்னப்போ, எல்லாத்தையும் அசால்ட்டா கேட்டுக்கிட்டு ஒண்ணும்
கவலெப்பட வேணாம்ன்னும் அடுத்தத் தேதியில கட்டாயம் ஆஜராயி கெளண்டர்ரத் தாக்கல் பண்ணிடலாம்ன்னு
சொன்னாரு. பாலாமணியும் கங்காதரன் வக்கீலும் பரிகாசம் பண்ணிப் பேசுறதெ ரொம்ப பெரிய
கொறையா திருநீலகண்டன் வக்கீல்கிட்டெயும் மறுக்கா மறுக்கா சொல்லிப் பொலம்புனா செய்யு.
"ஒண்ணும் கவலப்படாதம்மா! ஜெயிக்கப் போறவங்க எப்பவும் அமைதியாத்தாம்
இருப்பாங்க. தோக்கப் போறவனுங்கத்தாம் இப்பிடி அலம்பல் பண்ணிட்டு அலைவானுவோ. பண்ணட்டும்.
இப்போ பண்ணுறவன் நல்லாவே பண்ணட்டும். அப்பத்தாம் இப்போ சிரிச்சிக்கிட்டுப் பின்னாடி
அழுவுறதுக்குச் செளகரியமா இருக்கும். எப்பவும் அழுதுகிட்டே இருந்தா அதோட தாக்கம் தெரியாது.
கொஞ்சம் இப்பிடிச் சிரிச்சிட்டுப் பின்னாடி அழுதாத்தாம் அதோட தாக்கம் தெரியும். வீரியம்
தெரியும். எல்லாம் நல்லத்துக்குத்தாம். எவ்வளவு சிரிக்கணுமோ அவ்வளவும் சிரிச்சிக்கிடட்டும்.
வழக்குல தோத்தப் பின்னாடி அவனுங்க அழுவுறதுக்குத்தாம் நேரம் சரியா இருக்கும். வர்ற
தேதியில நாம்ம வர்றேம். கெளண்ட்டர்ர தாக்கல் பண்ணுறேம். என்னத்தெ பேசுறானுவோன்னு நாமளும்
பாத்துடறேம். அவனுவோ சொல்ற எதையும் இந்தக் காதால வாங்கி, அந்தக் காதால விட்டுடணும்
தெரியுதா? நாம்ம கெளண்டர்ர தாக்கல் பண்ணுறப்ப யாரு அழப் போறா? சிரிக்கப் போறாங்றது
தெரியும். அவ்வளவு டெரர்ரா தாக்கல் பண்ணப் போறேம்!"ன்னு வக்கீல் திருநீலகண்டனும்
செய்யுவ சமாதானம் பண்ணி ஆறுதல் பண்ணுறாப்புல சொல்லிட்டுப் போன வெச்சிட்டாரு.
செரித்தாம் அடுத்தத் தேதிக்கு டெரர்ரான
பதிலுரையோட வர்றதா சொல்லிட்டாரேன்னு நம்பி செய்யு கொஞ்சம் மனசளவுல அமைதியானா. வக்கீலோட
வாக்குல இருந்த வேகத்தெ நம்பி அடுத்தத் தேதிக்கு சுப்பு வாத்தியாரும் செய்யுவும் ரொம்பத்
தெம்பா ஆர்குடி சார்பு நீதிமன்றத்துக்குப் போனா வக்கீல் திருநீலகண்டன் வந்து சேரல.
போனப் பண்ணிக் கேட்டா, இந்த வாரேன், அந்தா வாரேன், பஸ்ல வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லிக்கிட்டு
இருக்காரே தவுர வர்றக் காணும். அதுக்குள்ள கோர்ட்டும் ஆரம்பமாயிடுச்சு. அன்னிக்குன்னுப்
பாத்து வழக்குக ரொம்ப அதிகமா இருந்துச்சு. செய்யுவோட மொறை வந்து கூப்புட்டப்போ
செய்யுப் போயி நிக்குறா. வக்கீல் கங்காதரன் பாலமணி தரப்புல பாலாமணியோட போயி நிக்குறாரு.
கெளண்டர் எங்க, வக்கீல் எங்கன்னு ஜட்ஜ் கேக்குறாரு. என்னத்தெ பதிலச் சொல்றதுன்னு புரியாம
செய்யு திருதிருன்னு முழிக்குறா.
"அவுங்க தாக்கல் பண்ண மாட்டாங்கய்யா! வேணும்ன்னே கேஸ்ஸ இழுத்தடிக்கணும்ன்னு
நெனைக்குறாங்கய்யா! நீங்க ஒருதலைபட்ச தீர்ப்பக் கொடுத்தாத்தாம்யா சரிபட்டு வருவாங்க!"ங்றாரு
வக்கீல் கங்காதரன் ஊடால பூந்து வழக்கெ வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னு ஆக்குறாப்புல.
ஜட்ஜ் செய்யுவப் பாத்தாரு. அவளால ஒண்ணும்
சொல்ல முடியல. முழிங்க ரண்டும் மலங்க மலங்க கண்ணுக்குள்ள பொரளுது. இந்த ஒரு மொறை
மட்டும் ஒரு வாய்ப்புக் கொடுத்தா போதும்ங்ற மாதிரிக்கி அவளோட மொகமெல்லாம் சுண்டிப்
போயி கண்ணு ரண்டும் இப்போ கெஞ்சுறாப்புல ஒரு நெலைக்கு வந்துடுச்சு. அதெ ஜட்ஜ் கவனிச்சாரு.
எவ்வளவுதாம் வாய்ப்ப கொடுக்குறதுன்னு அவருக்கும் யோசனையா இருக்கு. "லாஸ்ட் அன்ட்
பைனல் சான்ஸ்!"ன்னு சொல்லி அடுத்த மூணாவது நாளே தேதியப் போட்டு அனுப்பி வெச்சாரு.
செய்யு அவர்ரப் பாத்துக் கையெடுத்துக் கும்புட்டு வெளியில வந்தா. போன மொறையே ரொம்ப
கலாய்ச்சிக் காலி பண்ணவுக இந்த மொறை என்ன வாணாலும் பண்ணி எதாச்சும் பேச்சு ஏடா கூடமா
ஆயி சண்டெ ஆயிடக் கூடாதுன்னு சுப்பு வாத்தியாரு வேகமா வந்து வண்டிய ஸ்டார்ட பண்ணுறாரு.
அதெ வுட வேகமா வந்து பாலாமணியும், வக்கீல் கங்காதரனும் வெளியில வந்து, "லாஸ்ட்
அன்ட் பைனல் சான்ஸ்லயாவது தேறுவாங்களாப்பா!"ங்றாம் சாடையா வக்கீல் கங்காதரன்கிட்டெ.
"எங்க தேறுறது? இந்தப் பொண்ணு அதுக்கு
சரிபட்டு வாரதுப்பா! அதெல்லாம் வக்கீலோட ஆபீஸ்லயே டே நைட்டுன்னு கெடந்து வாங்கணும்ப்பா!
இந்தப் பொண்ணுத்தாம் மாமன் மகனோடயே கெடக்குதே! எடத்தெ மாத்தாத வரைக்கும் அந்த வக்கீலு
வர்றப் போறதுமில்ல. கெளண்டர்ர தாக்கல் பண்ணப் போறதுமில்ல. அடுத்தத் தேதியில ஜட்ஜ்
டாக்கடரான ஒஞ்ஞளுக்குச் சாதகமா சேர்ந்து வாழணும்ன்னு ஒருதலைப்பட்சமா தீர்ப்ப வழங்கப்
போறாரு. அதால டாக்கடரே! சேந்து வாழ தயாரா இருந்துக்குங்க. நல்லா எக்ஸ்பீரியன்ஸானா
பொண்ணுத்தாம்!"ங்றாரு கங்காதாரன் பாலாமணிகிட்டெ சொல்றாப்புல பெருஞ்சிரிப்பெ
சிரிச்சுக்கிட்டு. அதெ கேக்க கேக்க செய்யுவுக்குக் கோவம் எகுறுது. கோவப்படாதேங்ற
மாதிரிக்கிச் சுப்பு வாத்தியாரு, "பொறுமெயா யிரு. இதுக்குல்லாம் வார்த்தையால
பதிலச் சொல்லக் கூடாது. காரியத்தால பதிலச் சொல்லணும்!"ன்னு சொல்லிட்டு வண்டியக்
கெளப்பிக்கிட்டு மவளெ பின்னாடி உக்கார வெச்சிட்டு வர்றாரு. வண்டி மெதுவா கெளம்பி இவுங்களோட
நெலமயப் புரிஞ்சிட்டாப்புல சட்டுன்னு அன்னிக்குப் பாத்து வேகமெடுக்குது. அதெ பாத்துப்புட்டு
இன்னும் லகலகன்னு சிரிக்கிறாங்க பாலாமணியும், கங்காதரனும். வர்ற வழி முழுக்க செய்யுவுக்குப்
பாலாமணியோட மொகமும் கங்காதரனோட மொகமுமா வந்து கெக்கலி கொட்டிச் சிரிக்கிறதாவும், நெஞ்செல்லாம்
அவளுக்குப் பத்திட்டு எரியுறதாவும் மனசு அப்படியே கொந்தளிச்சுக்கிட்டு வருது.
வூட்டுக்கு வந்ததும், "வக்கீலுக்குப்
போன அடிக்கவா?"ன்னு கேட்டா செய்யு. வாணாம்ன்னுட்டாரு சுப்பு வாத்தியாரு.
"சாயுங்காலம் அஞ்சு மணி வாக்குல கெளம்பி மட்டும் தயாரா யிரு. நேர்ராவேப் போயி
வக்கீலப் பாத்துப்புடுவேம். அதாங் செரிப்பட்டு வாரும். போனப் பண்ணிக் கேட்டாக்கா அடுத்தத்
தேதிக்குக் கட்டாயமா வந்துப்புடுவேம்ன்னுத்தாம் சொல்லுவாரு! நேர்லப் பாத்துக் கேட்டாத்தாம்
செரிபட்டு வாரும்!"ன்னு அன்னிக்குச் சாயுங்காலமா நேர்ரா போயி மவளோட மாடிப்படியேறித்
தொறக்காம கெடந்த வக்கீல் திருநீலகண்டன் ஆபீஸூக்கு மின்னாடி உக்காந்துட்டாரு. இவருப்
போயிச் சேந்து முக்கால் மணி நேரம் கழிச்சித்தாம் வக்கீல் திருநீலகண்டன் ஆபீஸ்ஸத் தொறக்க
வந்தாரு. ஆபீஸூ மின்னாடி உக்காந்திருக்குற செய்யுவையும், சுப்பு வாத்தியாரையும் பாத்து
அவருக்குக் கொஞ்சம் வெக்கித்தாம் போச்சுது. இருந்தாலும் சமாளிச்சாரு.
"ஒங்க வழக்குக்குத்தாம் கெளம்புறேம்.
நாகப்பட்டணம் கோர்ட்டுல ரொம்ப நாளா ஆஜராவாம கெடந்த வழக்கு ஒண்ணு. போவலன்னா வழக்கு
தள்ளுபடி ஆவுற நெலமெ. வீட்டுக்கே வந்து கெளப்பிட்டாங்க நம்மள. அதெ முடிச்சிட்டு எப்படியும்
அங்க வந்துப்புடணும்ன்னுத்தாம் இந்தா வர்றேம், அந்தா வர்றேம்ங்றேம் முடியல. அது ஒருவழியா
பஞ்சாயத்தாவே முடிஞ்சி இப்பத்தாம் வர்றேம்ன்னா பாத்துக்கோங்க!"ன்னாரு வக்கீல்
திருநீலகண்டன் கொரலோட வேகத்தெ கொஞ்சம் கூட கொறைச்சுக்காம. அதாச்சித் தம் மேல உள்ள குத்தம்
தெரிஞ்சிடாம, குட்டு ஒடைஞ்சிடாம இருக்குறாப்புல சொல்றாரு.
"யய்யா! ஜட்ஜ் ஒருதலபட்சத் தீர்ப்பா
வழங்கப் போறதா சொல்றதப் பத்திக் கூட நமக்கு கவலெயில்ல. அவனுங்கப் பண்ணுற கிண்டலும்
கேலியும் தாங்கல. தயவு பண்ணி அதுக்காச்சும் நம்மட மான, மருவாதியக் காபந்து பண்ணுறாப்புல
சுமாராச்சும் ஒரு பதிலுரையத் தாக்கல் பண்ணி வுட்டுப்புட்டு நீஞ்ஞ பாட்டுக்கு வந்துப்புடுங்க.
நம்மளப் போட்டு வதைக்காதீங்கய்யா. ஏற்கனவெ வாழ்க்கைய இழந்துட்டு நிக்குறேம். இதுல
அவனுங்க பண்ணுற பரிகாசத்தெ வேற தாங்க முடியல. நாரசமா நா கூசாமப் பேசுறானுவோ!"ன்னா
செய்யு ரொம்ப பரிதாபமா.
"இந்தோ! ஒங்க முன்னாடியே கெளண்டர்ர
தயார் பண்ணுறேம் பாருங்க!"ன்னு சட்டுன்னு ஆபிஸ்ஸத் தொறந்து செய்யுவோட ஹேச்செம்ஓப்பி
கேஸ் கட்ட தேடி எடுத்து வேக வேகமா காகிதத்த எடுத்து எழுத ஆரம்பிச்சாரு. அடப்பாவியளா
இன்னும் பதிலுரையத் தயார் பண்ணாமலே, எப்பிடி இந்தா வர்றேம், அந்தா வர்றேம்ன்னு வக்கீலு
போன்ல சொன்னாருன்னு அப்பிடியே ஷாக் அடிச்சாப்புல உக்காந்திருந்தாரு சுப்பு வாத்தியாரு.
அதெ அவரால சொல்ல முடியல. சரி பரவால்ல இப்போ நாம்ம வந்து இப்பவாச்சும் தயாராவுதேன்னு
மனசெ ஆறுதல் பண்ணிக்கிட வேண்டிய நெலையில இருந்தாரு.
வக்கீல் எழுதுறப்பவே பாலாமணி சார்பா அவனோட
வக்கீல் தாக்கல் பண்ணிருந்த மனுவ படிக்கிறதும், அதுக்கு இன்னின்ன மாதிரி பதிலுரையத்
தாக்கல் பண்ணுறதாவும் சொல்லிக்கிட்டெத்தாம் எழுதுனாரு. பாலாமணி ஹெச்செம்ஓப்பியில்
தாக்கல் பண்ணிருந்த மனுங்றது ஏற்கனவே ஜீவனாம்ச வழக்குல தாக்கல் பண்ணுன எதிருரையும்,
அதுலயே அவ்வேம் கூடுதலா தாக்கல் பண்ணுன அடிஷனல் பெட்டிஷனையும் இணைச்சாப்புலத்தாம் இருந்துச்சு.
அதுல கலியாணம் நடந்த சங்கதியா சொல்லிருந்த பாரா ஒண்ண மட்டும் ஏத்துக்கிட்டு, மித்ததெ
எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா மறுத்தாப்புல சொல்லிக்கிட்டு எழுதிட்டு இருந்தாரு வக்கீலு.
எதிருரையோட கடைசியில வந்தப்போ கொஞ்சம் நிறுத்துனாரு வக்கீலு. நிறுத்திட்டு,
"இப்போ நாம்ம பிரிஞ்சிப் போறதா சொன்னா, அதெ வன்கொடுமெ வழக்குல அவ்வேம் சாதகமா
பயன்படுத்துவாம். சேர்ந்து வர்றதா சொன்னா சரி சேர்ந்து வான்னு இதெ கொண்டுப் போயி
ஸ்டேசன்ல கொடுத்து நம்மள அழைக்கப் பாப்பாம். அதுக்கு ரண்டுக்கும் சேர்த்து செக் வைக்குறாப்புல,
உரிய பாதுகாப்பு தருவதோடு, நல்ல புத்திமதிகளோடு, சரியான மனநிலையோடு அதாவது சைக்கோதனங்களையும்,
சித்திரவதையைச் செய்யும் மனோநிலையையும் கைவிட்டு விட்டு நீதிமன்றம் வழங்கும் உரிய
வழிகாட்டுதலின் படி உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தந்தால் சேர்ந்து வாழத் தயாராக
இருப்பதாகப் பதிலுரையக் கொடுக்குறேம் சார்! ஒங்க கருத்தென்ன? அப்பிராயம் என்ன? தெளிவா
கொழப்பமில்லாம சொல்லுங்கோ!"ன்னாரு வக்கீல்.
"நமக்கென்ன சட்டம் தெரியும்ங்கய்யா?
கோர்ட்டுல எப்பிடி தாக்கல் பண்ணணும்ன்னு ஒஞ்ஞளுத்தானே தெரியும்யா! அதுப்படி நமக்குக்
குத்தகம் ஆயிடாமத் தாக்கல் பண்ணுங்கய்யா! சட்டம் தெரிஞ்சவுங்க நீஞ்ஞ! அனுபவப்பட்டவங்க
நீஞ்ஞ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பவ்வியமா தன்னோட நெலைப்பாட்டெ தெரிவிக்குறாப்புல.
சுப்பு வாத்தியாரு அப்பிடிச் சொன்னதும்,
அண்ணாந்து ஒரு பார்வே பாத்துக்கிட்டு அடுத்தடிபடியா சுத்திலும் பார்வைய சொழல வுட்டுக்கிட்டு
ஒரு வழியா பதிலுரைய எழுதி முடிச்சாரு. "இப்போ நாம்ம கொடுக்குற இந்த கெளண்டர்ரால
அந்தப் பெய அந்தாண்ட போறதா? இந்தாண்ட போறதான்னு தெரியாமத் தவிக்கப் போறாம். மதில்
மேல பூனைத்தாம் அவனோட நெலை. எந்தப் பக்கம் குதிச்சாலும் குதிச்ச எடத்துலயே செத்துச்
சுண்ணாம்பா ஆயிடுவாம். அதெ நெனைச்சி நெனைச்சி அவ்வேம் முடியப் பிய்ச்சிக்கிட்டு பைத்தியக்காரப்
பயலா நிக்குறான்னா இல்லையான்னு பாருங்க! அங்கத்தாம் நிக்குறாம் இந்த வக்கீல் திருநீலகண்டன்!"ன்னாரு
வக்கீல் கோர்ட்டுல எதிர்வாதம் பண்ணுற கொரலு ஒசந்த தொனியில சுப்பு வாத்தியாரையும் செய்யுவையும்
பாத்து.
"அத்துச் செரி! அடுத்த தேதிக்கு வந்துடுவீங்களாய்யா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு விடிய விடிய கதெ கேட்டவேம் விடிஞ்சதும் கதெய மறந்தாப்புல.
"பெறகு எதுக்கு இந்தக் கெளண்டர்ர
அவ்ளோ வேலைய வுட்டுப்புட்டு எழுதி ஒடனே முடிச்சிருக்கிறேம் அது ஒங்க கண்ணு முன்னாடி?
ஒடனே போறப்ப இதெ டைப்புக்குக் கொடுக்குறேம். நாளைக்கே அதெ வாங்கிடுறேம். நாளா நாளைக்குத்தானே
தேதி. அன்னிக்குக் கோர்ட்டுல வந்துடுறேம். ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்!"ன்னு சொல்லிட்டு,
"நீங்க நம்ப மாட்டீங்க! இந்தாங்க டைரி. அன்னிக்குப் பாருங்க ஒண்ணும் தேதியே இல்ல.
அதுக்குத்தாம் டைரி வரைக்கும் எடுத்துக் காட்டுறேம்!"ன்னாரு வக்கீல் தன்னோட நீளமான
வக்கீல் டைரிய பெரட்டிக் காட்டி.
"இல்லங்கய்யா! நாம்ம வாணாலும் வூட்டுக்கே
வந்து கூப்புட்டு வர்றேன்னாலும் வர்றேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீல் சொல்ற
எதுலயும் நம்பிக்கெ இல்லாததெப் போல.
"நம்மள நம்ப மாட்டீங்க போலருக்கே!
செரி வந்துடுங்க. வீட்டுக்கு வேணாம். நேர்ரா ஆபீஸூக்கு இங்ஙனயே வந்துப்புடுங்கோ. ஏம்
ஒங்கள அவநம்பிக்கையில தவிக்க வுடணும்!"ன்னாரு வக்கீல் சுப்பு வாத்தியாரு சொன்னதுக்கு
ஏத்தாப்புல இசைஞ்சுப் போற பதிலா.
"ரொம்ப சந்தோஷம்ங்க. நாம்ம சரியா
எட்டு மணிக்கெல்லாம் வந்துடுறேம்ங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நேரத்துக்குச்
சரியா வந்துடுவேங்றதெ அழுத்திச் சொல்றாப்புல.
"வாங்க! நாம்ம கெளண்டரோட தயாரா இருக்கேம்!"ன்னாரு
வக்கீல் தானும் கொடுத்த வாக்குக்கு நம்பிக்கையா இருப்பேங்றாப்புல.
"எப்பிடியோ நீஞ்ஞ வந்தா செரித்தாம்!"ன்னு
சொல்லிட்டுச் செய்யுவும் பாதி நம்பிக்கையோடயும் பாதி நம்பிக்கை இல்லாமலேயும் கெளம்புனா.
அவ்வே மனசு பூராவும் மூணா நாளு நடக்கப் போற ஹெச்செம்ஓப்பி வழக்குக்கு வக்கீலு பதிலுரையோட
ஆஜர் கொடுப்பாரா மாட்டாராங்ற யோசனெ ரண்டு பக்கமா பிரிஞ்சி அலைக்கழிச்சது. ஒரு பக்க
மனசு வருவார்ன்னு சொல்லுது. இன்னொரு பக்க மனசு மாட்டார்ங்குது. எந்தப் பக்கத்து மனசு
சொல்றதெ கேக்குறதுன்னு அவளுக்குப் பெரும் போராட்டமா இருந்துச்சு. இதெ நெனைச்சு நெனைச்சு
ஒரு வெதத்துல எதிர்தரப்பு வக்கீலாலயும் பெரச்சனையா இருக்கு, இன்னொரு வெதத்துல நம்ம
தரப்பு வக்கீலாலயும் பெரச்சனையா இருக்குதுன்னு அவளோட மனசு நொந்துப் போவ ஆரம்பிச்சிது.
*****
No comments:
Post a Comment