27 Jan 2021

ஞாயமே சத்தியமா முக்கியமாய்!

ஞாயமே சத்தியமா முக்கியமாய்!

செய்யு - 699

            அந்தக் காலத்து ஆளுங்க எவ்ளோ நேர்மையா இருந்திருக்காங்கன்னு நெனைச்சிப் பாக்குறப்போ ஆச்சரியமாத்தாம் இருக்கு. இந்தக் காலத்து ஆளுங்ககிட்டெ அதெயெல்லாம் தேடல்லா வேண்டிருக்கு. அவுங்களுக்கு ஞாயம்ங்றது எப்பவுமே முக்கியமா இருந்திருக்கு. அடாவடித்தனம் பண்ணாலும் ஞாயத்துக்குள்ள நின்னுத்தாம் பண்ணிருக்காங்க. ஞாயத்தெ ஒருவேள மீறியிருந்தா அதெ சொல்லிச் சொல்லியே அதுதாங் வாழ்ந்து கெட்டதுக்குக் காரணம்ன்னு ஒப்புக்கவும் அவுங்க தயங்குனதில்ல. ஞாயம் தப்புனதுக்கான தீர்ப்பா அதெ ஏத்துக்கிட்டும் அவுங்க நடந்திருக்காங்க. ஏதோ ஒரு வெதத்துல ஞாயமா நடக்கணுங்ற நெனைப்பு அவுங்க மனசுக்குள்ள, ரத்தத்துக்குள்ள, நாடி நரம்புக்குள்ள அவுங்கள அறியாமலேயே ஓடியிருக்கு. அதெல்லாம் கேக்குறப்போ அதெல்லாம் ஒரு காலம்ன்னு சொல்லி ஏக்கப்படாம இருக்க முடியாது.

            அந்த ஏக்கத்தெ சொல்றாப்புல கோவிந்து சொன்னாரு, "ஒஞ்ஞளால அதெ கற்பனெ பண்ணிக் கூட பாக்க முடியாது வாத்தியாரே! அதுக்காகத்தாம் ஒஞ்ஞள சொல்லுங்கன்னு கேட்டேம். ஞாயத்தெ தப்பித் தப்பா பஞ்சாயத்தப் பண்ணிட்டாங்கன்னு பின்னாடி தெரிஞ்சதும் அதுக்கு நாம்ம ன்னா பண்ண முடியும்ன்னு நெனைக்கல பாருங்க. பஞ்சாயத்துப் பண்ணாங்க யில்ல. அந்தப் பொண்டோட ஊரு திட்டாம்பண்ணையூரு. மாப்புள்ள பையனோட ஊரு சட்டாங்குடி. ஞாயம் பண்டது தப்புன்னு தெரிஞ்சதும் சட்டாங்குடி கெளம்பிப் போயி பஞ்சாயத்தெ வெச்சி அவ்சாரிப் பட்டம் கட்ட நெனைச்சாம் பாருங்க, அந்த மாப்புள்ள பையனெ ஒத்த ஆளா தூக்கிப் போட்டு மிதி மிதின்னு மிதிச்சி, அப்பிடியே தோள்ல திட்டாம்பண்ணையூரு வரைக்கும் தூக்கிட்டுப் போயிருக்குப் பெரிப்பா. ஊருல ஒரு பயெ ன்னா ஏதுன்னு கேக்கலையே. பெரிப்பா மட்டும் கோதாவுல எறங்கிடுச்சுன்னா ஒரு பயெ மூச்ச வுட மாட்டாம். அப்பிடி ஒரு ஆளு அவரு. அப்பிடி ஒரு காலம் அத்து. அந்தப் பொண்ணோட ஊரு திட்டாம்பண்ணையுருதானே. பஞ்சாயத்தப் பண்ணி அந்த ஊருக்கு அனுப்பிச்சிட்டானுவோ பஞ்சாயத்தப் பண்ணுன சட்டாங்குடிகாரனுவோ. திட்டாம்பண்ணையூரு வரைக்கும் அவனெ அப்பிடியே அலாக்கா தூக்கிட்டுப் போயி பொண்ணோட வூட்டுக்கு மின்னாடி அப்பிடியே நின்ன வாக்குலயே வாசல்ல தூக்கிப் தொப்புன்னு போட்டுருக்கு. பொடேர்ன்னு வுழுந்த சத்தங் கேட்டு வூட்டுல யிருந்த அத்தனெ பேரும் வெளியில வந்திருக்காங்க. அந்தப் பொண்ணும் வெளியில வந்திருக்கு. ஆளு பாக்க அந்தப் பொண்ணு மெலிஞ்சிப் போயி உசுர்ர ஒடம்புல பிடிச்சிக்கிட்டு நின்னிருக்கு. பஞ்சாயத்துப் பண்ணதுல ஆளு ஒடிஞ்சிப் போயிந்திருக்கு. பெரிப்பா அப்பிடியே கம்பெ அந்தப் பொண்ணு கையில கொடுத்து பிடின்னுருக்கு. அந்தப் பொண்ணும் பயந்துப் போயிப் பிடிச்சிருக்கு. அப்பிடியே அந்தப் பொண்ணோட கால்ல நெடுஞ்சாண்கெடையா வுழுந்துட்டுப் பெரிப்பா! இந்தச் சங்கதியப் பாத்து திட்டாம்பண்ணையூரு கிராமமெ அந்தப் பொண்ணோட வூட்டு மின்னாடித் தெரண்டிருக்கு. எப்பிடி இருக்கும் சொல்லுங்க? மாப்புள்ளார்ரேம் அடிபட்டு மின்னாடி கெடக்காம். பொண்ணு கையில கம்போடு நிக்குது. கம்பு வாத்தியாரு பொண்ணோட கால்ல வுழுந்து கெடக்குறாரு. எப்பிடி இருக்கும் வாத்தியார்ரே! நெனைச்சிப் பாருங்க!"ன்னு சொல்லித் பெட்டேம்ல்ல சட்டுன்னு தேங்கி நிக்குற தண்ணியப் போல தளும்புனாப்புல உணர்ச்சிவசப்பட்டாரு கோவிந்து. எதையும் சிரிச்ச மொகத்தோட பேசுற அவருக்கு மேக்கொண்டு பேச முடியாம தொண்டை அடைச்சிது.

            "டேய் பெத்தநாயகம் ஓடிப் போயி அந்தக் கடையில ஒரு தண்ணிப் பாக்கெட்டு வாங்கியாடாப்பா!"ன்னாரு கோவிந்து கோடையில வெடிச்சு வறண்டுப் போயிக் கெடக்குற வயலப் போல தொண்டெ வறண்டாப்புல. சொல்லி முடிக்கிறதுக்குள்ள ரண்டு தண்ணிப் பாக்கெட்டோட வந்து நின்னாப்புல பெத்த நாயகம். அந்தத் தண்ணிப் பாக்கெட்ட அப்பிடியே வாயில கொண்டு போயி பல்லக் கொடுத்து ஒரு இழுப்பு இழுத்து முழு பாக்கெட்டையும் அப்பிடியே ஒரே மூச்சுல உறிஞ்சிக் குடிச்சாப்புல கோவிந்து.

            "அதெ நெனைச்சாலும் சரித்தாம், சொன்னாலும் சரித்தாம் அப்பிடியே நெஞ்சடைச்சிப் போயிடுதுங்க வாத்தியார்ரே! அவ்ளோ சரியான மனுஷம். கம்பு வாத்தியாரு பொண்ணோட கால்ல வுழுந்து கெடக்காரேன்னு கிராமமே ஒண்ணு தெரண்டு தூக்குதுங்க அவர்ரே. அந்தப் பொண்ணு நம்மள மன்னிச்சிட்டெம்ன்னு ஒத்த வார்த்தெ சொன்னாத்தாம் எழும்புவேம்ங்றாரு பெரிப்பா. எதுக்கு என்னத்துக்கு மன்னிப்புன்னு அவுங்களுக்குல்லாம் சரியா புரியல. பொண்ண இப்பிடிப் பஞ்சாயத்தப் பண்ணதெ யாருக்கும் தெரியாம ரகசியமா கொண்டாந்து வெச்சிருந்திருக்காங்க பொண்ணுவூட்டுக்காரவுங்க, விசயம் அதுவா தெரியுறப்ப தெரியட்டும், நாமள சொல்ல வாணாம்ன்னு. விசயம் தெரிஞ்சா ஊர்ல நாலு பேத்து நாலு வெதமா பேசுவானுவோன்னு அதெப் பத்தி யாருக்கும் எதெயும் சொல்லிக்காம இருந்திருக்காங்க. அந்தக் காலத்துலல்லாம் அப்பிடித்தாம். அப்பத்தாம் பொண்ணுவூட்டுக்காரவுக விசயத்தெ சொல்ல, ஊரே அசந்துப் போயிப் பாக்குது. அந்தப் பொண்ணுக்கு சர்வ நாடியும் ஒடுங்கிப் போயி ஒடம்பு அப்பிடியே குறுகிப் போய் கம்ப பிடிச்சிக்கிட்டு அப்பிடியே செல போல நிக்குது. கம்பு ஒண்ணு மட்டும் இல்லன்னா வெச்சுக்கோங்க அந்தப் பொண்ணு அப்பிடியே தடுமாறி வுழுந்துப் போயிக்கும்ன்னு வெச்சுக்கோங்களேம். அந்தப் பொண்ணுக்கு வார்த்தெ வரவே மாட்டேங்குது. பல்லெல்லாம் தந்தியடிக்கிது. இவரு நம்மட பெரிப்பா பெரியவங்களா சேந்து தூக்கி வுட, தூக்கி வுட எல்லாரையும் தள்ளி வுட்டுட்டு வூட்டுக்கு மின்னாடி வுழுந்து கெடக்குறாரு. அப்பத்தாம் அந்தப் பொண்ணு ஒரு காரியம் பண்டுச்சு. சட்டுன்னு கையில பிடிச்சிருந்த கம்போட உள்ளார ஓடுனுச்சு. உள்ளார ஓடிப் போன பொண்ணு கழுத்துல கட்டியிருந்த திருமாங்கல்யத்த அவுத்து அதுல ஒரு மஞ்சள முடிஞ்சிக்கிட்டு வெளியில ஓடியாந்து கைய அப்பிடியே நீட்டிட்டு நெருஞ்சாண்கெடையா வுழுந்து கெடக்குற பெரிப்பாவோட கையில அந்தத் திருமாங்கல்யத்தெ அப்பிடியே குனிஞ்சு வெச்சதுப் பாருங்க, அப்பத்தாம் எழுந்திரிச்சாரு பெரிப்பா!"ன்னு சொன்ன கோவிந்தோட கண்ணுல்லாம் கலங்க ஆரம்பிச்சிடுச்சு. அதெ அப்பிடியே வேட்டியத் தூக்கி தொடைச்சிக்கிட்டாப்புல. பெத்தநாயகம் கையில இருந்த இன்னொரு தண்ணிப் பாக்கெட்ட வாங்கி பல்லால இழுத்து ஓட்டையப் போட்டு திரும்பவும் ஒரே மூச்சுல உறிஞ்சிக் குடிச்சி முடிச்சாப்புல. அதெ பாக்குறதுக்கு வறண்டு கெடக்குற வயக்காடு வாய்க்கா வழியா வர்ற தண்ணி மொத்தத்தையும் அப்பிடியே உறிஞ்சிக் குடிக்குறாப்புல இருக்குது.

            "நம்மள மன்னிச்சிட்டேங்றதுக்கு ஒந் திருமாங்கல்யத்தையே கழட்டி வெச்சிட்டீயேம்மா! நம்மளோட குல வமிசத்தையே காப்பாத்திட்டியம்மான்னு அந்தப் பொண்ணு மின்னாடி எழும்பி நின்னு கண்ணுத்தண்ணியா வுடுறாரு பெரிப்பா. அதுல நீஞ்ஞ பாக்கணும், இவருக்குக் கலியாணம் ஆவல. கொழந்தெ குட்டிங்க யில்ல. இருந்தாலும் எஞ்ஞளத்தாம் அப்பிடி நெனைக்கிறாரு. நமக்குன்னு குடும்பம் ல்லன்னா ன்னா? நம்மப் பண்ணுற பாவமோ, தப்போ தம்பிக்காரவுகளோட குடும்பத்துக்குள்ள போவும்ன்னு நெனைக்கிறாரு. இதெப் பாத்துட்டு நிக்குற கெராமத்து ஆளுங்கல்லாம் மூக்கு மேல வெரல வைக்குறாக. யாருக்கு யார்ர ஒசத்தின்னுச் சொல்றது? பண்ணுன பஞ்சாயத்துத் தப்புன்னு தெரிஞ்சதும் ஓரு ஊரையே அடிச்சித் துவம்சம் பண்ணுற அளவுக்குத் தெம்பிருந்தும் ஞாயத்துக்குக் கட்டுப்பட்டு பொண்ணோட கால்ல வுழுந்த கம்பு வாத்தியாரையா? யில்ல தன்னோட அவ்சாரிப் பட்டத்தையெ நீக்கிப் புட்டார்ன்னு நெனைச்சு தன்னோட திருமாங்கல்யத்தையெ கழட்டி மஞ்சள கட்டிக்கிட்டு அதெ கம்பு வாத்தியாரு கையில கொடுத்த பொண்ணையான்னு ஊரே ரண்டு வெதமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வர்றாம தவிக்குது. இன்னிக்கும் நீஞ்ஞ சட்டாங்குடிக்குப் போனீயன்னா மூலங்கட்டளெங்ற பேர்ரச் சொல்லிப் பாருங்க. அவனுங்கள அறியாமலேயே தலெ கவுந்துப் போவும். அதெ திட்டாம்பண்ணையூருக்குப் போயி அதெ மூலங்கட்டளென்னு ஊரு பேர்ரச் சொல்லிப் பாருங்க ஒஞ்ஞள வூட்டுல கூப்புட்டு வெச்சிச் சாப்பாட்ட போடாம அனுப்ப மாட்டாவோ. பெரிப்பா அப்பிடிப்பட்ட ஆளு. ஞாயம்ன்னா உசுர்ர வுடுவாருங்க வாத்தியாரே! அத்து எப்பிடியோ அப்பிடி வாழ்ந்துட்டுப் போயிட்டு. இப்போ நெனைக்கிறப்போ தெகைப்புன்னா தெகைப்பு தாங்க முடியல!"ன்னு சொல்லி முடிச்சி வானத்தெப் பாத்தாரு கோவிந்து. வானமும் அதெ கேட்டுட்டு லேசா சாம்பத் தூத்தலா மழையக் கொட்டுறாப்புலத்தாம் தெரிஞ்சது.

            "அந்தப் பொண்ணு பெறவு அந்த மாப்புள்ளக்காரனோட சேந்து வாழ்ந்துச்சா?"ன்னாம் விகடு கதெ எங்கயோ தொக்கி நிக்குறாப்புல தோண, முழுக்கதெயும் என்னன்னு தெரிஞ்சிக்கிடுற நோக்கத்துல.

            "அந்தக் கதெய ஏம் கேக்குதீயே! இந்தச் சம்பவத்துக்குப் பெறவு ஒரு பயெ அந்த மாப்புள்ளக்கார பயலே அவ்வேம் ஊருலேந்து அக்கம் பக்கத்து ஊரு வரைக்கும் யாரும் மதிக்கல. அவ்வேம் வயலுக்குக் கூட வயக்காட்டு ஆளுங்க வேலைக்குப் போவ மாட்டேனுட்டாங்க. ஒச்சமா வாழ்ந்த பயெ ஓட்டாண்டியாப் போயிட்டாம். ஒரு கட்டத்துல ரொம்ப அடிப்பட்டு நொம்பலப்பட்டு அந்தப் பயலுக்குப் புத்தி வந்து திட்டாம்பண்ணையூர்ல பொண்ணு வூடே கதின்னு கெடந்தாம். அந்தப் பொண்ணு இவனெ ஏத்துக்க முடியாதுன்னுட்டு. அத்து தாம் பாட்டுக்கு யாருக்கும் பாரமில்லாம வாழ்ந்துக்கிடறதா சொல்லிட்டு. பெறவு பயெ ஓகையூரு பக்கம் வர்றதும், மூலங்கட்டளெ பக்கம் வர்றதும் பெரிப்பாவப் பாக்குறதுமா கெடந்தாம். மொத மொறை அவ்வேம் பெரிப்பாவப் பாக்க வந்தப்போ ஊருக்குள்ளயே வெச்சி சுளுக்கு எடுத்துடுச்சு பெரிப்பா. அவ்வேம் பெரிப்பா கால்ல வுழுந்து கதறுன பெற்பாடுதாம் இந்தப் பக்கம் அடியெடுத்து வெச்சேன்ன்னா உசுரோட திரும்ப மாட்டேன்னு மெரட்டி ‍அனுப்பி வெச்சது. இருந்தாலும் உசுரே போனாலும் பரவாயில்லன்னு வருஷா வருஷம் வந்துடுவாம் பெரிப்பாவப் பாக்க. பெரிப்பா அவனெ ரண்டு மூணு மொற அடிச்சி ஒதைச்சுப் பாத்து அதுக்கே அலுத்துப் போயி போடா போயிடுடான்னு சொல்லிக்கிட்டுக் கெடந்துச்சு. இப்பிடியே அஞ்சாறு வருஷம் ஓடியிருக்கும்ன்னு நெனைக்கிறேம். அத்தனெ வருஷமும் சட்டாங்குடியில அவனோட பாஞ்சு ஏக்கரா நெலமும் தரிசாத்தாம் கெடந்துச்சு. பெறவுத்தாம் பெரிப்பாவுக்கு என்னா தோணுச்சோ, என்னா நெனைப்பு வந்துச்சோ தெரியல, அவனெ கெளப்பிக்கிட்டுத் திட்டாம்பண்ணையூருக்குப் போயி அந்தப் பொண்ணோட வூட்டுக்கு மின்னாடி, "ஏ தாயீ!"ன்னு ஒரு சத்தத்தெ வெச்சிது. பெரிப்பா வந்திருக்காகன்னு தெரிஞ்சதும் அந்தப் பொண்ணு ஓடோடி வந்து இவரோட கால்ல வுழுவுது. அந்தப் பொண்ண எழுப்பி வுட்டு உள்ளார இருந்த பொண்டுவுகிட்டெ குங்குமத்தெ கொண்டாரச் சொல்லி, அதெ அப்பிடியே அந்தப் பொண்ணோட நெத்தியில வெச்சி, கையில அன்னிக்குக் கழட்டிக் கொடுத்துச்சுங்க பாருங்க திருமாங்கல்யத்தெ அதெ அப்பிடியே கைய நீட்டிச் சொல்லிக் கொடுத்தாரு பெரிப்பா. அந்தத் திருமாங்கல்யத்தெ பத்திரமா வேட்டி மடிப்புலத்தாம் வெச்சிருந்தாரு ரொம்ப நாளா பெரிப்பா. அதெ பாத்ததும் அந்தப் பொண்ணு புரிஞ்சிக்கிடுச்சு. இவ்வேம் மாப்புளக்கார்ரேம் திருட்டுப் பயலப் போல பெரிப்பா பின்னாடி நிக்குறாம் அப்பவும் ஒளிஞ்சிக்கிட்டு. அந்தப் பொண்ணு வூட்டுக்குள்ளார கூட போவல. வூட்டுல இருக்குற யாருகிட்டெயும் புருஷங் கூட கெளம்பிப் போறேம்ன்னு கூட சொல்லல. புருஷன் பக்கத்துலப் போயி நின்னதும் புருஷங்கார்ரேம் அப்பிடியே பின்னாடிலேந்தே கால்ல வுழுவுறாம் பெரிப்பா கால்ல. அந்தப் பொண்ணும் வுழுவுது. பெரிப்பா அப்பிடியே திரும்பி ரண்டு பேத்தையும், நல்லா மவராசனா புள்ளீயோள பெத்துக்கிட்டு நல்லபடியா இருங்கடாப்பான்னு சொல்லிட்டு வேட்டி மடிப்புல பாக்குது, போடுறதுக்கு வெத்தல பாக்கும், பத்து ரூவா பணமும்ந்தாம் இருக்குது. வெத்தலப் பாக்கோட அந்தப் பத்து ரூவா பணத்‍தெ கொடுத்துட்டு சட்டாங்குடி வரைக்கும் கொண்டுப் போயி விட்டுட்டு வந்துச்சு. அதுக்குப் பெறவு அந்தப் பொண்ணு வந்தச் சேதித் தெரிஞ்சித்தாம் ஊருல வயக்காட்டு ஆளுங்க மாப்புள்ளக்காரப் பயெ வயல்ல எறங்குனாங்கன்னா பாத்துக்கோங்கோ. ரண்டு மூணு வருஷத்துக்குப் பெறவு அந்தப் பொண்ணுக்கு புள்ளெ குட்டி உண்டானுச்சு. புள்ள பொறந்ததும் வண்டிய கட்டிக்கிட்டு பெரிப்பாவ வந்துப் பாத்து அதோட கால்ல கொழந்தய வெச்சித்தாம் தூக்கிட்டுப் போனாங்க. அப்பிடில்லாம் ஒரு காலம்."ன்னாப்புல கோவிந்து. சொல்லிட்டு அண்ணாந்து வானத்தெ பாத்தாப்புல கோவிந்து. இந்தக் காலமெல்லாம் அப்பிடிக் கெடையாதுங்ற மாதிரிக்கு இருண்டு கெடந்துச்சு வானம். நட்சத்திரங்க கூட எதுக்கும் சாட்சி கெடையாதுங்ற மாதிரிக்கு எங்கேயே ஒளிஞ்சுப் போயிக் கெடந்துச்சு.

            "ஏண்ணே! இன்னிக்கு மட்டும் ஒஞ்ஞ பெரிப்பா இருந்திருந்தா என்னாயிருக்கும்?"ன்னாப்புல மகேந்திரன் அழுகாச்சியா போற ஒரு கதெயில திடீர்ன்னு ஒரு சிரிப்பாணியக் கௌப்பி வுடுறாப்புல.

            "நடந்தச் சம்பவத்துக்குக் கொறைச்சலா நாலு கொலையாச்சும் வுழுந்துருக்கும். தப்புன்னு தெரிஞ்சா காட்டாம் போல ஆயிடுவாப்புல பெரிப்பா. தப்புப் பண்ணிட்டதா தெரிஞ்சா கொழந்தப் போல ஆயிடுவாப்புல. இந்த மாதிரிக்கி சம்வத்தெ எல்லாம் இந்த அளவுக்கு வளர வுடாது. இஞ்ஞ ஆர்குடியிலயே அதுகிட்‍டெ கம்பு, சுருளு, மான்கொம்புன்னு அதுகிட்டெ சுத்த கத்துக்கிட்ட ஆளுங்க ஏராளம். மூலங்கட்டளெ வாத்தியாருக்குத் தெரிஞ்சப் பொண்ணுன்னு சங்கதித் தெரிஞ்சா போதும். விசயமே வேற ரூபத்துலப் போயித்தாம் நிக்கும். இஞ்ஞ ஆர்குடிக்கு வராமலேயே உக்காந்த எடத்துல காரியம் சாதிக்கும். கோவத்துக்குக் கோவம், நுணுக்கத்துக்கு நுணுக்கம்ன்னு வேல பாக்கும். ஊரு ஊரா போயி கம்புக் கத்துக் கொடுக்கறது அப்போ ஒரு மொறையப் போல. அத்துக் காலு படாத மண்ணுங்க இந்த ஏரியாவுல கொறைச்சலு. ஆர்குடி பக்கம்லாம் வந்து திரும்புனுச்சுன்னா பட்டச் சாராயத்துலயே மெதந்துகிட்டுத்தாம் வரும். சாமிக்குப் படையலப் போடுறாப்புல இதெ பாத்துட்டா போதும் கறி சமைச்சி பட்டச் சாராயத்தை வாங்கி வெச்சி செமத்தியா கவனிச்சுத்தாம் அனுப்புவானுவோ இந்த மேக்கத்தி ஆளுங்க!"ன்னாப்புல கோவிந்து போயிட்டு இருக்குற கதையில புதுசா ஒரு ஆளு நொழைஞ்சா கதெ எப்பிடி தெச மாறும்ங்றாப்புல.

            "கதெ கேட்டதுல பசி தாங்க முடியலப்பா. இந்தக் கதைக்கு எட்டு தோசயெ எடுத்துக் கட்டிச் சாப்புட்டாலும் பசி அடங்காதுப்பா. எதுத்தாப்புல இருக்குற ஓட்டல்ல சாப்புட்டுட்டு அப்பிடியே ஆளுக்கு ரண்டு தோசயெ வெச்சிக் கட்டிட்டுப் போயிடலாமப்பா!"ன்னாரு பெத்தநாயகம் இதுக்கு மேலல்லாம் படு தீவிரமா கதெயெல்லாம் கேக்க முடியாதுங்றாப்புல.

            "வாத்தியாரோட யம்மா வேற பஸ்ல வர்றதா சொன்னாங்கல்ல. அதெ கணக்குப் பண்ணித்தாம் பெரிப்பாவோட கதெயே எடுத்து விட்டேம். நம்ம ஆளுங்களுக்கு அழுகாச்சிக் காவியமே பிடிக்காது. எதெ சொன்னாலும் சிரிக்க சிரிக்க நையாண்டியா ஓட்டி எடுக்குறாப்புல இருக்கோணும். அத்து இல்லன்னா சொல்ற ஆளெ வெடைச்சி எடுத்துப்புடுவாப்புல. செரி அத்துப் போவட்டும். இப்போ மணியப் பாரு!"ன்னாப்புல கோவிந்து ஒதட்டுல லேசா ஒரு சிரிப்பெ ஓட வுட்டுக்கிட்டு.

            "ஒம்போதரைக்கு மேல ஆவுதுப்பா! இப்பிடியே கதெயெ வுட்டா பாசஞ்ரு டிரெய்ன்னப் போல அத்துப் போயிச் சேர்றப்போ மணி நண்பகல் ஆயிடுமப்பா!"ன்னாரு பெத்தநாயகம் தம் பையில போட்டிருந்த செல்ல எடுத்துப் பாத்துட்டு.  

            "கதெதாம் முடிஞ்சிட்டுல்ல. அத்தோட வுட்டுப்புடணும். நாமளும் ஒஞ்ஞளுக்குக் கதெ சொல்லி எம்மாம் நாளு ஆவுது. அதாங் இன்னிக்குக் கொஞ்சம் நேரம் இருந்துச்சேன்னு எடுத்து வுட்டேம். இத்து வெறும் கதெ மட்டுமில்லப்பா. நம்ம தாய்மண் முன்னேற்ற கழகத்துக்கான கொள்கெ, கோட்பாடு எல்லாம் இந்தக் கதெயில இருக்குது. அந்த வெதத்துல நம்ம கட்சியோட கொள்கை வௌக்கத்தெ கதெ வௌக்கமா சொல்லிருக்கிறேம். அத்துப் போவட்டும். இப்போ நாம்ம சாப்புட்டு முடிச்சி அப்பிடியே யம்மாவுக்கும் சேத்துத் தோசைய கட்டிட்டு வந்து இஞ்ஞ வந்து நின்னா வடவாதி ரண்டாம் நம்பரு பஸ் வர்ற சரியா இருக்கும்ன்னு நெனைக்கிறேம்!"ன்னாப்புல கோவிந்து தன்னோட நெனைப்பெல்லாம் கடந்த காலத்துல கதெயில மட்டுமில்ல, இனுமே நடக்கப் போற கதெயிலயும் இருக்குங்றாப்புல.

            "ஏம்ண்ணே! ஒஞ்ஞ பெரிப்பா யிருந்த இந்நேரத்துக்கு எம்புட்டுச் சாப்புடுவாப்புல?"ன்னாப்புல மகேந்திரன் கோவிந்தோட வாயிலேந்து இன்னும் கொஞ்சம் கதெயெ கிண்டிக் கெழங்கெடுத்துக் கௌறுறாப்புல.

            "ராத்திரின்னா இட்டிலித்தாம். அதுக்கு மீனு கொழம்பு இருக்கணும். அல்லாட்டி புளிக்கொழம்பு இருக்கணு. ல்லன்னா சாப்புடாது. ஓட்டல்ல இருக்குற அத்தனெ இட்டிலியையும் வெச்சாத்தாம் செரிபட்டு வரும் அதுக்கு!"ன்னாப்புல கோவிந்து கம்பு வாத்தியாரு ராச்சாப்பாடு சாப்புடுற அழகெப் பத்தி.

            "நல்ல வேளப்பா இந்நேரத்துக்கு ஒஞ்ஞ பெரிப்பா யில்ல. யிருந்திருந்தா நமக்குச் சாப்பாடு கெடைக்காதுப்பா!"ன்னாப்புல பெத்தநாயகம் எதுவும் தெரியாம சொல்லிப்புடுற பச்ச புள்ள மாதிரி மொகத்தெ வெச்சிக்கிட்டு.

            "சாப்பாடுன்னா அப்பிடிச் சாப்புடுவாப்புல. ஒரு ஆட்டெ அடிச்சிப் போட்டாலும் பத்தாது. அதே நேரத்துல பட்டினின்னாலும் அப்பிடிக் கெடப்பாப்புல. அப்பல்லாம் இந்த மாதிரிக்கிச் சாப்பாடு ஏது? கெடைக்கிறப்ப சாப்புட்டுக்கிறதுதாம். ல்லன்னா ஈரத்துண்டெ நனைச்சி வயித்துல கட்டிக்கிட்டு அதுபாட்டுக்குப் படுத்துக் கெடக்குறதுதாம். இப்போ நமக்குக் கெடைக்கற சாப்பாடெல்லாம் கெடைச்சிருந்தா அங்க ஊர்லேந்தெ கம்பச் சுத்திக்கிட்டெ ஆர்குடி வரும் பெரிப்பா!"ன்னாப்புல கோவிந்து கம்பு வாத்தியார்ரப் பத்திப் பேசுனா அந்தப் பேச்சுக்கு முடிவெ இல்லங்ற மாதிரிக்கு.

            "இதுக்கு மேல பெரிப்பா புராணத்தெ பெறவு வெச்சக்கிடலாம். மொதல்ல சாப்புட வாங்கப்பா. காலையில பதினோரு மணிக்குச் சாப்புட்டது. பெறவு ஸ்டேசன்னு இழுத்துட்டுப் போயி இந்நேரம் வரைக்கும் டீத்தண்ணித்தாம் உள்ளாரப் போயிருக்கே தவுர சாப்பாடுன்னு ஒண்ணும் உள்ளாரப் போவல! உள்ளார தண்ணியா போனதும் இந்நேரத்துக்கு ஆவியா வெளியில போயிருக்கும் போல. வவுறு பக பகன்னு எரியுது!"ன்னு பெத்தநாயகம் சொன்னதும், இதுக்கு மேல பேசுறதுக்கு எதுவுமில்லங்றாப்புல கோவிந்து கண்ணால ஓட்டல்ல நோக்கிப் பார்வையெ காட்டுனாப்புல. யாரும் இனுமே எதுவும் பேசுறாப்புல இல்லங்ற மாதிரிக்கு பேசுற வாய்க்கு வாய்ப்பூட்டெப் போட்டாப்புலயும், சாப்புடுற வாய்க்கு மட்டும் சாவியப் போட்டு தொறந்தாப்புலயும் எதுத்தாப்புல இருந்த ஓட்டல்ல பூந்து ஆளுக்கு ரண்டு தோசெ, ஒரு ஆப்பாயில்ல சாப்பிட்டு முடிச்சி அதெ போலவே மூணு பார்சல்ல கட்டிக்கிட்டு திரும்ப ஆஸ்பிட்டல் ஸ்டாப்பிங்குல வெங்கு வர்ற வரைக்கும் வந்து காத்து நின்னு, அத்து பஸ்லேந்து வந்து எறங்குனதும் எல்லாருமா சேந்து ஆஸ்பிட்டலுக்குக் கூப்புட்டுப் போனாங்க. கொஞ்ச நேரத்துக்குப் பேச்சரவம் இல்லாமப் போனதுல பக்கத்துல தூங்கிட்டு இருந்துச்சோ, தூங்காம இருந்துச்சோ தூங்குமூஞ்சி மரம் அடிச்ச காத்துல லேசா ஒரு சலம்பு சலம்பி உஸ்ன்னு ஒரு சத்தத்தெ எழுப்புனுச்சு. 

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...