26 Jan 2021

தாய்மண் முன்னேற்ற கழகம்


 தாய்மண் முன்னேற்ற கழகம்

செய்யு - 698

            ராத்திரி எட்டரை மணிக்கு மேல இருக்கும். சேப்பான ஆளு, குண்டான ஆளு, ஒல்லியான ஆளுன்னு கட்சிக்கார ஆளுக உள்ளார வந்தாங்க. அவுங்களோட இன்னும் ரண்டு பேரு கூட வந்தாங்க.

            "நாஞ்ஞ சாப்பாட்டு ஏற்பாட்ட பண்ணப் போகல. வேற ஒரு ஏற்பாட்டுக்காகப் போனோம். அந்த ஏற்பாடு ஆயிடுச்சு. அதாச்சி விசாகன் அண்ணாச்சிகிட்டெ பேசியாச்சு. அண்ணாச்சி ஹெட் டாக்டர்கிட்டெப் பேசி உள்ளார அட்மிஷன் போடச் சொல்லியாச்ச. ஒம்போது மணிக்கு மேல உள்ளார அழைச்சிட்டுப் போயிடுவாங்க. இவுங்க லேடியா இருக்குறதால உள்ளார ஜென்ட்ஸ் அலோ பண்ண மாட்டாங்க. வூட்டுலேந்து யாராச்சும் வரச் சொன்னீயன்னா தொணையா இருக்கும்!"ன்னாரு சேப்பான ஆளு அடுத்தடுத்து நடக்கப் போறதெ முன்கூட்டியே அறிவிக்குறாப்புல.

            அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாரு விகடுகிட்டெ சொன்னாரு, "யப்போ யம்மா வந்தாத்தாம் செரியா இருக்கும். அப்பிடின்னா யம்மாவுக்குப் போன பண்ணி வடவாதியில ரண்டாம் நம்பரு பஸ்ஸூ இருக்கும். அதுல ஏறி ரா தங்குறாப்புல துணிமணிகள எடுத்துட்டு வாரச் சொல்லலாம். ஆன்னா விசயம் இன்னதுன்னா பயந்து பதத்தமாயிடும். பாத்துப் பதனமா பேசணும். விசயம் என்னான்னு கேட்டா கொஞ்சம் ஒடம்புக்கு முடியாததால ஆஸ்பிட்டல்ல சேத்துருக்கிறேம்ன்னு கவனமா சொல்லோணும். ஒரு நாளு தங்கிட்டுப் போன செரியாயிடும்ன்னு ரொம்ப கவனமா பாத்துச் சூதானமா சொல்லுடாம்பீ! ஏம் மறுக்கா மறுக்கா சொல்றேம்ன்னா என்னவோ ஏதுன்னு பதற்றமாயிடப் போவுதுங்க. யம்மா வந்ததும் நீயி கூட பரமுவோட அப்பாவோட வூட்டுக்குக் கெளம்பிப் போ. வூட்டுல அதுங்க வேற தனியா கெடக்குமுங்க. நாம்ம இஞ்ஞ தங்கிட்டுக் காலாங்காத்தால கெளம்பி வர்றேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நடக்கப் போறதுக்கு ஏத்த மாதிரி இப்படித்தாம் செய்யணும்ங்றாப்புல.

            விகடு வூட்டுக்குப் போன அடிக்கிறதுக்காக போன எடுத்தாம். ஆயி நாலஞ்சு மொறை போன அடிச்சிருந்தது மிஸ்டு கால்ல காட்டுனுச்சு. இவனுக்கு இருந்த அலமலப்புல அடிச்சிக்கிட்டெ இருந்த போன எடுக்க மனசு வாரல. அது பாட்டுக்கு அடிச்சிக்கிட்டுக் கெடக்கட்டும்ன்னு விட்டுட்டாம். மிஸ்டு கால் ஆயிருந்த நம்பருக்கே போன அடிச்சாம். ஆயிதாம் எடுத்தா. "எத்தனெ மொற அடிக்கிறது? இஞ்ஞ என்னாச்சோ? ஏதாச்சோன்னு புரியாம வூட்டுல எல்லாரும் தவிச்சிப் போயி நிக்குறேம். போன எடுத்துத் தகவலச் சொன்னா ன்னா?"ன்னா ஆயி தன்னோட பேச்சுல ஆயிரங் காலத்துத் தவிப்பெ காட்டுறாப்புல.

            "இஞ்ஞ கொஞ்சம் தங்காச்சிக்கு ஒடம்புக்கு முடியல. ஆஸ்பத்திரியில சேக்குறாப்புல ஆயிடுச்சு! அந்த அலமலப்புல போன எடுக்க முடியல!"ன்னாம் விகடு போன ஏம் எடுக்கலங்ற காரணத்தையும் அதுக்கான நெலமெ இன்னதாங்ற வௌக்கத்தையும் ஒண்ணா சேத்து ஒரே சிரிஞ்சுல ரண்டு மருந்தெ எடுத்து ஏத்துறாப்புல.

            "ன்னா அலமலப்போ? ன்னா அவசரமோ? வூட்டுல இருக்குற பொம்பளைங்க மனசுப் புரியாத ஆளுங்க நீஞ்ஞ! ஸ்டேசன்ல வுட்டுட்டாங்களா?"ன்னா ஆயி இவ்வேம் சாமர்த்தியத்தெ வாழப்பழத்துல ஊசிய ஏத்திக் குத்துறாப்புல.

            "ஸ்டேசன்லேந்து அழைச்சாந்தாச்சு. கொஞ்சம் மயக்கமா இருக்குதுன்னா. அதாங் ஆஸ்பிட்டல்லா சேத்தா ஒரு நாளு இருந்துட்டுப் போவச் சொல்றாங்க. நீயி யம்மாவக் கெளப்பி ராத்திரி தங்குறாப்புல வடவாதிக்கு வர்ற ரண்டாம் நம்பர் பஸ்ல அனுப்பி வுடு. நாம்ம ஆட்டோவுக்குப் போன அடிச்சிச் சொல்றேம். இன்னும் பத்து நிமிஷத்துல வூட்டுக்கு வந்துடும். வேற ஒண்ணும் வெவரமா கேக்காத யிப்போ. வூட்டுக்கு வந்து நாமளே வௌக்கமா சொல்றேம். புரிஞ்சிப்பேன்னு நெனைக்கிறேம். யம்மா இஞ்ஞ வந்து சேந்த பெற்பாடு நாம்ம கெளம்பி வர்றேம். பரமுவோட யப்பா இஞ்ஞத்தாம் இருக்காக. நாமளும் அவருமா கெளம்பி வந்துடுறேம். நீயி பாப்பாவப் பாத்துக்கிட்டு பத்திரமா இரு. சாப்பாட்ட முடிச்சிடு! யம்மாவ மட்டும் சுருக்குன்னு சூதானமா கௌப்பி வுடு."ன்னாம் விகடு நறுக்குன்னு சேதிய சொல்லி சுருக்குன்னு கௌப்பி வுடுன்னு.

            "ஆஸ்பத்திரியில சேத்துருக்குறதா சொல்றீயளே? ஒடம்புக்கு ரொம்ப முடியலையா?"ன்னா ஆயி சங்கதியக் கேட்டதும் மனசுக்குள்ள உண்டான சங்கடத்தெ அடக்க முடியாம.

            "அதாம் சொன்னேம்லா. நாம்ம வந்து சொல்றேம். நீயி மொதல்ல யம்மாவக் கெளப்பி வுடுற வழியப் பாரு. ஆட்டோ பத்து நிமிஷத்துல வந்துடும்! ரொம்ப கேக்க வாணாம். காரியத்தெப் பாரு. வந்துப் பேசுறேம். ரொம்ப பேச முடியா யிப்போ!"ன்னாம் விகடு பேச்சைக் கொறைச்சிட்டு ஆவ வேண்டியதெப் பாருங்றாப்புல. செரின்னு சொல்லிட்டுப் போன வெச்சா ஆயி. அடுத்தபடியா விகடு வடவாதியில இருக்குற ஆட்டோவுக்குப் போன அடிச்சி தகவலச் சொல்லி, ரண்டாம் நம்பரு ஆர்குடி பஸ்ஸூல ஏத்தி வுடச் சொன்னாம்.

            விகடு பேசி முடிச்சதும், "இன்னிக்கு ஒம்போது மணிக்கு மேலத்தாம் இன்பேஷன்ட் வார்ட்டுல அட்மிஷன் போடுறதால இன்னிக்குச் சாப்பாட்ட நாம்மத்தாம் பண்ணியாவணும். வாங்க எல்லாரும் கெளம்பிச் சாப்புட்டுட்டு அப்பிடியே சாப்பாடும் வாங்கிட்டு வந்துடுவேம். மின்னடி சொன்ன சாப்பாட்டு ஏற்பாட்டெ இனுமேத்தாம் பண்ணணும்!"ன்னாரு சேப்பான ஆளு. இந்தப் பேச்சக் கேட்டதும், "அப்போ நாஞ்ஞ கெளம்புறேம். நாளைக்கிக் காலையில வர்றேம்!"ன்னாங்க வாத்தியாருமாருக ஆஸ்பத்திரியிலேந்து வெளியில கௌம்புங்கன்னு சொல்றதுக்கு மின்னாடி நாமளே கௌம்பிடுவோம்ங்றாப்புல.

            "ஒங்க ஒதவிய நாம்ம எப்போதும் மறக்க முடியாது! வாஞ்ஞ எல்லாரும் சாப்புடலாம்!"ன்னாம் விகடு தொணைக்கு வந்து தோள் கொடுத்தவங்கள எப்பிடி வெறு வாயோட அனுப்ப முடியாதுங்றாப்புல.

            "அதெல்லாம் பாத்துக்கிடலாம் வாஞ்ஞ. இன்னும் நெறைய செஞ்சிருக்கணும். நம்மளோட செல்வாக்கு அவ்ளோத்தாம். ஏதோ எங்களால முடிஞ்சது கூட மாட தொணைக்கு வந்து நிக்கறது மட்டும்தாம். அதெ எப்பவும் பண்ணுவேம். பணம்லாம் இருக்கான்னு சொல்லுங்க. இல்லன்னா பக்கத்துலத்தாம் ஏடியெம் இருக்கு. வேணுங்றதெ எடுத்தாந்து தர்றேம்!"ன்னாரு அதுல ஒரு வாத்தியாருமாரு கையில காசியில்லாம சங்கடப்படக் கூடாதுங்றதெ புரிஞ்சாப்புல.

            "இப்போதைக்கி இருக்குறதுப் போதும். தேவைன்னா வாங்கிக்கிறேம்!"ன்னாம் விகடு ஒத்தாசையெ வுட பணங்காசியா பெரிசுங்றாப்புல.

            "அப்பிடின்னா செரி! எல்லாருக்கும் வர்றோம்!"ன்னு சொல்லிட்டு வாத்தியாருமாருக கெளம்பப் பாத்தாங்க.

            “ஒரு டீத்தண்ணியாவது…”ன்னு இழுத்தாம் விகடு சும்மா அனுப்ப முடியாதுங்றாப்புல.

            “இப்போ ஒண்ணும் வாணாம். அம்மா வாரணும்ங்றீயே. அதெ பாக்கணும். இஞ்ஞ நேரத்துக்குச் சாப்பாடு வாங்கிச் சாப்பாட்ட முடிக்கணும். இப்போ இருக்குற நெலமைக்கு அதல்லாம் வாணாம். அதெ பெறவு பாத்துக்கிடலாம். நீஞ்ஞ இப்போ ஆவ வேண்டியதெ பாருங்க. நாஞ்ஞ கௌம்புறேம். ராத்திரி நேரம் வேற ஆயிட்டு இருக்கு. வேறெதுவும் உதவின்னா யோஜிக்காம போனப் பண்ணுங்க! நிமிஷத்துல ஓடியாந்திடுறேம்!”ன்னு சொல்லிட்டு வாத்தியாருமாருக சட்டுன்னு கௌம்பிட்டாங்க.

            வாத்தியாருமாருக எல்லாம் கௌம்புனதும் அவுங்கள வண்டி எடுக்குற வரைக்கும் வெளியில வந்து அனுப்பி வெச்சிட்டு திரும்பவும் உள்ளார வந்தாம் விகடு. "நீயும் அவங்க எல்லாத்துக்கும் சாப்பாட்டப் பண்ணிட்டு, நமக்கும், தங்காச்சிக்கும் அப்பிடியே யம்மாவுக்கும் சேத்துச் சாப்பாட்ட கட்டிட்டு வாடாம்பீ! நேரமாச்சுன்னா சாப்பாடு யில்லாமப் போனாலும் போயிடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சூரியன் சுருக்குன்னு அடிக்கிறப்பவே காய வைக்குறதெ காய வெச்சுப்புடணும்ங்றாப்புல.

            விகடு எல்லாரையும் அழைச்சிக்கிட்டு வெளியில வந்தாம். "ஒம்போது மணிக்கு மேல ஆவட்டும் பாஸ்ஸூ! சாப்புடலாம்! யம்மாவும் வந்துக்கிட்டு இருப்பாங்க. அவுங்களயும் ஒண்ணா சாப்பாட்ட வாங்கிட்டு அழைச்சுக்கிட்டுப் போயிடலாம். அதுவரைக்கும் கொஞ்சம் பேசிட்டு இருப்பேம்!"ன்னாரு ஒல்லியான ஆளு இப்போதைக்குக் கொஞ்சம் ஆசுவாசமா இருப்போங்றாப்புல. ஆஸ்பத்திரிக்கி தென்னண்டைப் பக்கமா இருந்த தூங்குமூஞ்சி மரத்துக்குக் கீழ எல்லாரும் வந்து நின்னாங்க.

            "ஒங்களப் பத்தி ஒண்ணுமே சொல்லலயே! தக்க நேரத்துல நீங்க தொணையா இருந்தீயே!"ன்னாம் விகடு. அப்பிடிச் சொல்றப்பவே அவ்வேம் தொண்டெ அடைச்சிக்கிட்டு.

            "எஞ்ஞள ஒஞ்ஞளுக்குத்தாம் தெரியாது. யப்பாவுக்கு நல்லாவே தெரியும். நம்மப் பேரு கோவிந்து. மூலங்கட்டளெ. இவ்வேம் மகேந்திரன். வடவாதிப் போற வழியில கூத்தனூரு இருக்குல்ல. அந்த ஊருக்காரு. இவரு பெத்தநாயகம். அதெ ஊருதாம். மித்த இவுங்க எல்லாம் ஆர்குடி. இவரு பேரு மாரியப்பன், இவரு பேரு முத்துக்கருப்பன், இவரு சூச! எல்லாம் தாய்மண் முன்னேற்ற கழக்கத்துல கட்சிப் பொறுப்புல இருக்குறவங்க."ன்னு அறிமுகப்படுத்துனாரு சேப்பான ஆளான கோவிந்து. ஊரு பேரு தெரியாம ஒதவனவங்களோட பேரும் ஊரும் தெரிஞ்சப்போ விகடுவுக்கு தெகைப்பா இருந்துச்சு.

            "ஒஞ்ஞ தங்காச்சி இன்னிலேந்து நமக்கும் தங்காச்சி. சின்ன புள்ளையப் போயி படுக்க வான்னு கூப்புட்டுருக்காம் அந்த வக்கீலு. அவனெ நாளைக்கி கோர்ட்டுக்கு மின்னாடி வெச்சி வெளுத்து எடுக்குறேம் பாரு!"ன்னாரு பெத்தநாயகம் கொதிக்குற பானையில குதிக்குற பருக்கையாட்டம்.

            "யப்பா! சும்மா இருப்பா நீ வேற! கோர்ட்டுக்கு முன்னாடி வக்கீலுங்க மேல்லாம் கைய வைக்கக் கூடாது. அவுங்களுக்குன்னு சங்கம் இருக்கு. அது மூலமா பெரச்சனைப் பண்ணுவாங்க. அவுங்கப் பண்ணுன தப்பு தெரியாது. வக்கீலத் தாக்கிட்டாங்கன்னுத்தாம் ப்ளாஸ் ஆவும். அந்த மாதிரி ஆளுங்கள அடிக்கிறதன்னு முடிவு பண்ணிட்டா வேற மாதிரித்தாம் அடிக்கணும். கோர்ட்டு முன்னாடியோ, அவுங்க கோர்ட்டுக்குப் போட்டுருக்கிறப்போ கைய வைக்கவே கூடாது. அது ரொம்ப ஆபத்துப்பா!"ன்னாரு கோவிந்து சிரிச்சபடிக்கு பெத்தநாயகத்தோட தோள்ல தட்டுனாப்புல.

            "நீங்க எப்பிடி இஞ்ஞ?"ன்னாம் விகடு அவுங்க வந்தக் கதெயெ அறிஞ்சுக்குற ஆவலாதியில.

            "வடவாதி போலீஸ் ஸ்டேசன்ல வயப் பிரச்சனைக்காக எல்லாரும் வந்திருக்கேம். அப்பத்தாம் ஒஞ்ஞ தங்காச்சிய ஜீப்புல அழைச்சாந்து வடவாதி போலீஸ் ஸ்டேஷன்ல மின்னாடி வெச்சி ஆர்குடி டவுன் போலீஸ் ஜீப்புல ஏத்தப் பாக்குறாங்க. அப்போ ஏ யப்பா என்னா தெகிரியம்ங்றீயே? என்னா பேச்சப் பேசுனுச்சு ஒஞ்ஞ தங்காச்சி? அதுல அசந்துப் போயி அப்பிடியே நின்னுட்டேம். எதா இருந்தாலும் இஞ்ஞ வெச்சுப் பேசுங்க, ஆர்குடியில்லாம் வார முடியாதுன்னுட்டு. போலீஸ்காரவுக ஜீப்புல ஏறி ஆர்குடித்தாம் போவணுங்றாங்க. அப்போ தங்காச்சி கேட்டுச்சுப் பாருங்க, இஞ்ஞன்னுச் சொல்லி அழைச்சாந்துட்டு யிப்போ ஆர்குடின்னா ன்னா ஞாயம்ன்னு. அதுக்கு வடவாதி ஸ்டேசன்லேந்து யாரும் பதிலச் சொல்ல முடியல. விக்கிச்சிப் போயி நிக்குறாங்க போலீஸ்காரவுக. சம்பவம் அங்கத்தாம் நடந்துச்சுங்றதால அங்கத்தாம் வெச்சி வெசாரிக்கணும். ஆர்குடின்னு சொன்னா வர மாட்டீயேன்னுத்தாம் இஞ்ஞ வெசாரணைன்னு கெளப்பியாந்து வெசாரிக்கிறாப்புல வெசாரிச்சு யிப்போ ஆர்குடிக்கு அனுப்பி வுடுறேம்ங்றாங்க போலீஸ்காரவுக. ஆர்குடின்னா நாம்ம வார மாட்டேம்ன்னு அப்பிடியே ஸ்டேசன் வாசல்லயே தரையிலயே உக்காந்துட்டுத் தங்காச்சி. ஒஞ்ஞ அப்பாரும் உக்காந்துட்டாரு. ஒஞ்ஞ யம்மா அந்த நேரத்துல என்னா சத்தம் போட்டாங்கங்றீயே! எல்லா போலீசும் மெரண்டுப் போயித்தாம் நின்னுச்சு. ஒஞ்ஞ தங்காச்சிய ரண்டு பொம்பளப் போலீஸூங்க குண்டு கட்டா சேந்து தூக்கில்ல ஆர்குடி போலீஸ் ஜீப்புல ஏத்துனாங்க. ஒடனே ஒஞ்ஞ யப்பாவும் நாமளும் கூட வருவேம்ன்னு ஜீப்புல ஏறிட்டாரு. எப்பிடியோ ஆர்குடிக்குத் தங்காச்சியக் கொண்டு வாரணும்ங்றதால ஒண்ணும் சொல்லாம போலீசும் யப்பாவ ஒண்ணும் சொல்லாம வுட்டுடுச்சு. ஜீப்பு கெளம்புற வரைக்கும் ஒஞ்ஞ அம்மா அழுது ஆர்ப்பாட்டமே பண்ணிட்டாவோ. அப்பவே எஞ்ஞளுக்குப் புரிஞ்சிடுச்சு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவுதுன்னு. ஒடனே நாஞ்ஞ என்னா ஏதுன்னு வெசாரிக்கிறேம். அப்பத்தாம் மித்த மித்த வெவரங்கள் தெரிய வருது. ஒடனே ஒஞ்ஞ யம்மாவ நீஞ்ஞ ஸ்டேசனுக்கு அஞ்ஞல்லாம் வர வேணாம்ன்னு வூட்டுக்குக் கெளப்பப் பாத்தா, ஒஞ்ஞ யம்மா நாமளும் வர்றேன்னு அடம். ஒரு வழியா அவுங்கள சமாதானம் பண்ணி நாஞ்ஞல்லாம் இருக்கேம்ன்னு ஆறுதல் பண்ணி அனுப்பி வுட்டு, ஜீப்புக்குப் பின்னாடியே நாஞ்ஞ டூவீலர்ல போலீசு வாகனத்தெ பாலோ பண்ணிக் கெளம்பிட்டேம்! இதாங் நாஞ்ஞ வந்து சேந்த கதெ!"ன்னாரு கோவிந்து வாக்கியத்துக்கு வாக்கியம் இடையில மெல்லிசான ஒரு சிரிப்பெ சிரிச்சுக்கிட்டு.

            "அட அதெ ஏந் தம்பீக் கேக்கறே? இஞ்ஞ வந்தா போலீசுவோ நம்மள யாரையும் உள்ளார வுட மாட்டேங்றாவோ. ஒந் தங்காச்சிய வெச்சி மெரட்டு மெரட்டுறானுவோ. ஒந் தங்காச்சியும் பயப்படாமத்தாம் சத்தம் போட்டு பதிலச் சொன்னிச்சு. அத்துப் பொறுக்கலம்பீ அந்த போலீசுக்கு. சட்டுன்னு உக்காந்திருந்த நாற்காலிய ஒரு ஒதெ ஒதைச்சித் தள்ளி வுட்டாம் பாரும்பீ! அதுல ஆப்பாயிடுச்சும்பீ தங்காச்சி. இவ்வளவையும் நாஞ்ஞ வெளியில நின்னுகிட்டெப் பாக்குறேம். அதுக்கப்புறம்தாம் நாஞ்ஞ அதிரடியா உள்ளார நொழைஞ்சது. போலீசும் தங்காச்சி மயக்கமடிச்சதுல கொஞ்சம் மெரண்டுத்தாம் போயிட்டாவோ. ஒடனே ஒரு ஆட்டோவ வர்ற சொல்லி நாஞ்ஞ ஏத்துறப்பத்தாம் நீஞ்ஞ வந்தீயே!"ன்னாரு பெத்தநாயகம் வுட்ட கதெ தொட்ட கதென்னு இல்லாம முழுக்கதெயையும் சொல்லி முடிக்குறாப்புல.

            "எந்த ஊர்லேந்தோ வந்து ஒதவிப் பண்ணிருக்கீயே. எஞ்ஞ ஊர்லேந்து அந்த நேரத்துல யாரும் தொணைக்கு யில்லாமப் போயிட்டாங்க!"ன்னாம் விகடு கண்ணுல வழிஞ்ச தண்ணியத் தொடைச்சிக்கிட்டு.

            "ஒஞ்ஞ ஊருக்காரவுங்க இதுல ஒண்ணும் பண்ண முடியாதுங்க வாத்தியார்ரே! ஊர்லேந்து நாலு பேரு வந்து நின்னாங்கதாம். அவுங்க யாரும் உள்ள நொழைய முடியாதடிபக்கு ஒரு வார்த்தெ பேச முடியாதபடிக்கு போலீஸ்ஸூ அந்த அளவுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தூக்கியிருக்காங்க. பக்கா ப்ளானிங் வாத்தியாரே. நல்லா யோசிச்சு வெச்சு செஞ்சிருக்காங்க. ஆர்குடி டவுன் போலீஸா உள்ளார வந்தா பெரச்சனெ ஆயிடும்ன்னு அவுங்க இஞ்ஞ வந்து நின்னுகிட்டு நம்ம வடவாதி ஸ்டேசன் போலீஸ்ல சொல்லித் தந்திரமா யாரையும் வூட்டக்குள்ளார வர வுடாம ச்சும்மா வடவாதி ஸ்டேசன் வரைக்கும் விசாரணைன்னு சொல்லி, அத்து முடிஞ்சதும் நாஞ்ஞளே கொண்டாந்து வுட்டுடுறோம்ன்னுல்லா தூக்கியிருக்காங்க. நாஞ்ஞ கட்சிக்கார ஆளுங்க. தூசு தும்பட்டெ நொழைய முடியாத எடத்துலல்லாம் நொழைவோம். நம்மாளேயே இஞ்ஞ ஆர்குடி ஸ்டேசன் வந்து உள்ளார நொழைய முடியலையே! அந்நேரத்துக்கு விசாகன் அண்ணாச்சி இருந்திருக்கணும். அவரு இந்நேரம்ன்னு பாத்து தலைவர்ர சந்திக்க சென்னைப் பட்டணம் போயிட்டாப்புல. அண்ணாச்சு ஏரியாவுல இருந்திருந்தார்ன்னா ரகளையாத்தாம் ஆயிருக்கும்."ன்னாரு மகேந்திரன் நாக்கெ ஒரு துருத்து துருத்திக்கிட்டு.

            "எப்பவும் மொகம் தெரியாதவங்களோட ஒதவி எங்களுக்கு இருக்கு!"ன்னாம் விகடு ஆண்டவனோட தொணை இருக்குறாப்புல.

            "யாரு மொகம் தெரியாதவங்க வாத்தியார்ரே? ஒஞ்ஞ மாமா குமரு இருக்காப்புலல்ல. அவரோட பிரண்டு மாணிக்கவிநாயகம் தெரியும்ல. அவரு யாரு? எஞ்ஞ மாமா. அவரோட அக்காப் புள்ளையோ நாஞ்ஞ. ஒஞ்ஞளுக்குத் தெரியுமோ தெரியாதோ? மூலங்கட்டளெ ஓகையூரு கம்பு வாத்தியார்ன்னா பேமஸ்ஸூ வாத்தியார்ரே! மூலங்கட்டளைக்குப் பேரு வந்ததே அவர்ர வெச்சித்தாம். அவருகிட்டெ கம்பு கத்துக்காத ஆளுங்களே ஒரு நேரத்துல ஊர்ல கெடையாது. ஏரியாவுல அவர்ர தெரியாத ஆளுங்க கெடையாது. ஆளு கொஞ்சம் போக்கிரித்தாம் அதே நேரத்துல ஞாயவான். அவரு யாருங்றீயே? எஞ்ஞ பெரிப்பா. நாஞ்ஞ அவரோட தம்பியோட புள்ளீயோ. எஞ்ஞளுக்கு ஒஞ்ஞ அப்பாவே நல்லாவே தெரியும். அப்போ நாஞ்ஞ சின்னப்புள்ளீயோ? மாணிக்கவிநாயம் மாமா வூட்டுக்கு வர்றப்பல்லாம் ஒஞ்ஞ யப்பாவே பாத்திருக்கேம். இப்பவும் வளந்த பிற்பாடு பாக்குறதுதாம். ஆன்னா பேசுறது கெடையாது. நாஞ்ஞளும் கொஞ்சம் போக்கிரியான ஆளுங்கத்தாம். அதாலத்தாம் கட்சியில இருக்கேம்!"ன்னு சொல்லி அப்பவும் ஒரு சிரிப்பெ சிரிச்சாரு கோவிந்து.

            "மூலங்கட்டளெ கம்பு வாத்தியார்ன்னா ஒஞ்ஞளுக்கும் கம்பு சுத்தல்லாம் தெரியுமா?"ன்னாம் விகடு தமிழ்நாட்டுல இருக்குற அத்தனெ பேத்துக்கும் தூயத்தமிழ் பேசத் தெரியும்ங்றாப்புல.

 

கம்பு வாத்தியாரின் கடைசிக் காலம்

            கோவிந்து மறுக்கா ஒரு சிரிப்பெ சிரிச்சாரு, யாருடா இவ்வேம் நேரம் புரியாதவேம் அர்த்த ராத்திரியில் எழுந்து உக்காந்துக்கிட்டு வடை, பாயசத்தோட இஞ்ஞ விருந்து எஞ்ஞன்னு கேக்குறானேங்ற மாதிரிக்கு. "அதெல்லாம் ஓல்டு ஸ்டைலாயிடுச்சு வாத்தியார்ரே! இப்பல்லாம் யாரு கம்ப சுத்துறா? எதுன்னா பெரச்சனைன்னா அருவாளால ஒரே போடுதாம். அருவாளோட வசதிக்குக் கம்பு வாராது. அதோட யிப்பல்லாம் யாரு நேருக்கு நேர்ரா நின்னுப் போடுறதெல்லாம். எல்லாம் பின்னாடி போடுறதுதாம். யிப்போ பாத்தீயன்னா துப்பாக்கி, குண்டுப் போடுறது வரைக்கும் வந்தாச்சு. இப்பல்லாம் போயி யாரு கம்பு கத்துக்குவா? அத்து எஞ்ஞ பெரிப்பாவோட அந்திமக் காலத்துலயே சாவக் கெடந்து அப்பிடியே போயிடுச்சு. ஒஞ்ஞ ஏரியா பெரசிடண்டா ரகுநாதெம் கெடந்தாரே அவருதாம் பெரிப்பாவப் பெரிய ஆளுங்கற மாதிரிக்கிப் பாத்துப் பூசெ வெச்சிக்கிட்டுக் கெடப்பாரு. பெறவு கொத்தூர்ல ஒரு சோசியக்காரரு கெடப்பாரே பேரு கூட சங்கோ கிளிஞ்சல்ன்னு வரும்ங்க வாத்தியாரே. அந்த ஆளு ஒருத்தரு. மித்தபடி மூலங்கட்டளெ கம்பு வாத்தியார்ர பிற்காலத்துல ஊர்லயே மதிக்கிறது கெடையாது. அதுவும் எஞ்ஞ யப்பா யாரு? அவரோட தம்பித்தானே. அவரே ஒரு காலத்துல மதிக்கிறது கெடையாது. எஞ்ஞ யப்பாவுக்கும் பெரிப்பாவுக்கும் பேச்சு கெடையாது. கம்புச் சுத்திக்கிட்டு வரும்படி யில்லாம கெடக்குறார்ன்னு. நாஞ்ஞ சின்னப் புள்ளீயோத்தாம் அவரு மேல பாசமா பெரிப்பா பெரிப்பான்னு கெடக்குறது. நாஞ்ஞ அவரு மேல பாசமா கெடந்தமே தவுர அவருகிட்டேயிருந்து கம்பு வித்தையெல்லாம் கத்துக்கிடல. அவரும் யப்போ எஞ்ஞளுக்கு சீனி சேவும், காரச் சேவும் வாங்கிக் கொடுத்தாரே தவுர கம்பச் சுத்த வாஞ்ஞன்னு கண்டிஷன் பண்ணில்லாம் கூப்புடல. விருப்பம் இல்லாத யாருக்கும் கத்துக் கொடுக்கவும் மாட்டாரு. அவுங்களா வாரணும் கம்பச் சுத்தம்பாரு. எஞ்ஞளுக்கும் கம்பச் சுத்துறதுல பெரிசா ஆர்வம் யில்ல. பேட்டையும் பந்தையும் எடுத்துக்கிட்டு வெளையாடுறதுலயே இருந்துட்டேம். அவரே மனசு வெறுத்துப் போயித்தாம் இருந்தாரு. கம்பச் சுத்தி வரும்படி பாக்க முடியலன்னு. ஆன்னா ஆர்வமா கெளம்பி வர்றவங்களக்கு சாவுற வரைக்கும் சொல்லிக் கொடுத்துட்டுத்தாம் இருந்தாரு. மனுஷன் கம்பச் சுத்துறதெ தவுர ஒரு வேல பாக்க மாட்டாரு. எங்காச்சும் பஞ்சாயத்துன்னா போறது, அடிதடின்னா போறது. மித்த நேரத்துல பட்டச் சரக்கெ வாங்கி அடிச்சிக்கிட்டெ கெடக்குறது. கம்பச் சுத்த கத்துக்கிட வர்றவங்க கொடுக்குற தட்சணெ என்னங்றீயே பட்டச் சரக்குத்தாம். கடெசிக் காலத்து பட்டச் சரக்கெ வாங்கி ஊத்த ஆளு கெடைக்காம, கையி காலல்லாம் நடுங்க ஆரம்பிச்சி கையிலயும் கால்லயும் கட்டுக்கம்பி இருக்குப் பாருங்க. அதெ கட்டிக்கிட்டுக் கெடப்பாரு கையிக் காலு நடுங்கக் கூடாதுன்னு. எஞ்ஞளுக்குப் பாக்குறப்ப பரிதாபமா இருக்கும். பட்டச் சரக்க வாங்கியாந்து ஊத்துறது. அதெ குடிச்சார்ன்னா தெம்பு எங்கயிருந்து வாரும்ன்னு தெரியாது கம்பச் சுத்த ஆரம்பிச்சார்ன்னா ரண்டு மணி நேரத்துக்காவது சுத்திட்டுத்தாம் நிப்பாட்டுவாரு! எல்லாருக்கும் சாவுற காலத்துல பால ஊத்தி உசுரு அடங்கும்பாவோ. எஞ்ஞ பெரிப்பாவுக்குப் பட்டச் சரக்க ஊத்தில்லா உசுரு அடங்கிடுச்சு! ஆன்னா ரகுநாதெம் உசுரோட இருந்திருந்தார்ன்னா அந்த அளவுக்கு வுட்டுருக்க மாட்டாரு. எஞ்ஞ பெரிப்பா ஓகோன்னுத்தாம் இருந்திருப்பாரு. என்னிக்கு ரகுநாதெம் செத்தாரோ அன்னிக்கே பெரிப்பாவும் ஒடைஞ்சிடுச்சு. தன்னோட வித்தையெல்லாம் சொல்லிக் கொடுத்து கடெசீ வரைக்கும் தனக்குப் பின்னாடி கொண்டு சேக்க வேண்டிய ஆளா அத்து ரகுநாதெத்தாம் நம்பிருந்துச்சு. ரகுநாதெம் அப்பிடி அற்பாயுசுள போயிச் சேரும்ன்னு அத்து நெனைக்கல. அத்துச் சாவுல கூட பெரிப்பா அழுதது நெனைவிருக்கு. யப்போ பாத்தீங்கன்னா, ‘எலே ரகுநாதெம் யப்பாரு செத்துதாம்டா மவ்வேம் சாவணும். மவ்வேம் செத்து யப்பாரு பின்னாடி சாவக் கூடாதுடா’ன்னு அழுதுச்சு. அத்து அழுது பாத்ததில்ல. அன்னிக்குத்தாம் பாத்தது. அந்த அளவுக்கு ரகுநாதனெ சிஷ்யபைுள்ளையா மட்மில்ல, சொந்தப் புள்ளையப் போலவே வெச்சிருந்துச்சு."ன்னு கோவிந்து சொன்னப்போ பேச்சுக்குப் பேச்சு மெல்லிசா சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்த அதோட கண்ணுல கண்ணுத் தண்ணி எட்டிப் பாத்துச்சு.

            "கம்பு வாத்தியாரோட புள்ளீயோ அந்த வித்தைய தொடந்தாப்புல பண்ணுறாங்களா?"ன்னாம் விகடு. அவனோட நெனைப்பு மொத்தமும் கம்பு வித்தெ மேல குவிஞ்சாப்புல தங்காச்சி கவலெயெ வுட கம்பு வித்தெ மேல உள்ள கவலெ அதிகமாயிப் போச்சு.

            "எஞ்ஞ வாத்தியார்ரே! புள்ளீயோ இருந்தாத்தானே பண்ணுறதுக்கு. எஞ்ஞ பெரிப்பா கலியாணமெ கட்டிக்கிடல. அதுலத்தாம் எஞ்ஞ யப்பாவுக்கும், பெரிப்பாவுக்கும் பெரச்சனையே. என்னவோ கம்பு வித்தைதாம் மொத பொண்ட்டாட்டின்னும் அதுக்குப் பெறவு வேற பொண்டாட்டியல்லாம் இல்லன்னும், இதெ கத்துக்கிடற புள்ளீயோத்தாம் தன்னோட புள்ளியோன்னும் இருந்துட்டாரு. அதாலயே பாத்தீயன்னா எஞ்ஞ யப்பா அவர்ர சாவுற வரைக்கும் மதிக்கவேயில்லங்றேம். யிப்ப என்னவோ யண்ணன் யண்ணன்னு போட்டோவ வெச்சி அழுதுகிட்டுக் கெடக்குறாரு. நம்ம குடும்பத்தோட பெரிய சாமிங்றாரு, கொல சாமிங்றாரு. செத்தத்துக்குப் பின்னாடி உருவி வழியுறாரு. உசுரோட இருந்த காலத்துல ஒரு சொட்டு பட்டச் சாராயம் கூட வாங்கி ஊத்தல வாயில!"ன்னாரு கோவிந்து. அவரு அதெ சொன்னப்போ சிரிச்சாப்புல சொல்லுறாரா, அழுவுறாப்புல சொல்லுறாரான்னு அவரோட மொகத்தெப் பாக்குறப்போ கொழப்பமாத்தாம் இருந்துச்சு. அவரோட கண்ணுங்க ரண்டும் காலத்துல பின்னோக்கிப் போறாப்புல உள்ளுக்கு இழுத்துக்கிடுச்சு.

            "நாமளாவது ஒஞ்ஞ பெரிப்பா நெனைவா கம்பு சுத்துறதுக்கு ஊர்ல எதாச்சும் பண்ணணும்!"ன்னாம் விகடு உணர்ச்சி வசப்பட்டு வாழப்பழத்தோல்ல கால்ல வைக்குறவேம் தன்னையறியாம சர்ருன்னு வழுக்கிட்டுப் போறாப்புல.

            "ம்ஹூம்! அத்து ஒண்ணுத்தாம் கொறைச்சலு. அவுங்கல்லாம் கம்புச் சுத்துன போக்கிரின்னாலும் ஞாய தர்மத்துக்குக் கட்டுப்படுவாங்க. தப்புன்னு சின்ன புள்ள சொன்னாலும் அத்துத் தப்பா இருந்துட்டா சின்ன புள்ளன்னு பாக்காம பொட்டுன்னு கால்ல வுழுந்து மன்னிப்பக் கேட்டுடுவாங்க. சட்டாங்குடியில ஒரு பஞ்சாயத்துன்னு அப்போ ஒஞ்ஞ ஊரு கருப்பத் தேவர் கூப்புட்டார்ன்னு போயிருக்கு பெரிப்பா. இதுகள அடியாளுங்கள மாதிரிக்கி நிப்பாட்டி வெச்சி ஊருக்காரவுங்க பஞ்சாயத்துப் பேசுறது. இவுங்க நிக்குறதப் பாத்து கட்டுப்படாத ஆளுங்களும் கட்டுப்படுறது அப்போ. கிட்டத்தட்ட ஒஞ்ஞ தங்காச்சிக் கேஸூ மாதிரித்தாம். பொண்ணு மேல அவ்சாரிப் பட்டம் கட்டிப்புட்டாவோ. அதெ காரணமா வெச்சியே அத்து வுட்டுட்டாவோ. அப்போ ஊருப் பஞ்சாயத்துலயே இதெல்லாம் பண்ணிடுறது. பஞ்சாயத்தும் முடிஞ்சிடுச்சு. அதுக்குப் பெறவுதாம் பெரிப்பாவுக்கு சம்பவம்ல்லாம் சித்தரிச்சதெல்லாம் பொய்யின்னு தெரிய வருது! என்னா நடந்திருக்கும்னு நெனைக்குதீயே?"ன்னாரு கோவிந்து விகடுவெப் பாத்து ஒரு கேள்விக்குறியப் போடுறாப்புல.

            "சொல்லுங்க!"ன்னாம் விகடு பதிலுக்கு ஓர் ஆச்சரியக் குறியெ போடுறாப்புல.

            "ச்சும்மா சொல்லுங்க வாத்தியாரே! ஒஞ்ஞ யோஜனெ எப்பிடிப் போவுதுன்னு பாக்கணும்ல!"ன்னாரு கோவிந்து விகடுவே ஆழமா ஒரு பார்வெ பாத்துக்கிட்டு மொகம் மாறாத ஒரு சிரிப்பெ சிரிச்சுக்கிட்டு.

            "நமக்குத் தெரியல. நம்மாள யோசிக்க முடியல!"ன்னாம் விகடு தலைய ரண்டு பக்கமாவும் ஆட்டிக்கிட்டு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...