25 Jan 2021

அட்மிஷனப் போடப் போறீயா இல்லியா?

அட்மிஷனப் போடப் போறீயா இல்லியா?

செய்யு - 697

            ஆர்குடி பெரியாஸ்பத்திரியில செய்யுவ வெளியிலயே உக்கார வெச்சிருந்தாங்க. கசக்கி எறிஞ்ச தாளப் போல அவளெ ஆட்டோவுல கொண்டு வந்ததுக்குப் பெட்ல படுக்கப் போட்டிருக்கணும். அதெ வுட்டுப்புட்டு அவளெ வெளியில இருந்த நாற்காலியில கசக்கிச் சுருட்டி வெச்ச துணியப் போல உக்கார வெச்சு அவளெ தாங்கிப் பிடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கிறாப்புல சுப்பு வாத்தியார்ரெ பக்கத்துல உக்கார வெச்சிருந்தாங்க. அவளுக்குக் கண்ணுல்லாம் உள்ளார செருவிப் போயி இருந்துச்சு. டாக்கர்ரு வந்துதாம் பாக்கணும்ன்னும் அது வரைக்கும் ஒரு நர்ஸ் ஊசியப் போட்டு வெச்சிருக்கிறதா சொன்னாங்க. அதெ பாத்ததும் விகடுவோட வந்த கட்சி ஆளுங்கள்ல ஒல்லியா இருந்தவரு சத்தம் போட ஆரம்பிச்சாரு, "ஏம் உள்ள பெட்டுல கொண்டுப் போயி வெச்சி டிரீட்மெண்டு பாக்க மாட்டீங்களா? இப்பிடித்தாம் சாவக் கெடந்தாலும் வெளியிலயே வுட்டுச் சாவ வுடுவீங்களா?"ன்னு ஆஸ்பத்திரி முழுக்க கேக்குறாப்புல டமுக்குக் கொரல்ல.

சுப்பு வாத்தியாரு என்ன பண்ணுறதுன்னு தெரியாம பொண்ணுக்குப் பக்கத்துல பரிதாபமா உக்காந்திருந்தாரு. அவரோட நெலையப் பாக்குறப்போ மனசளவுல ரொம்ப ஒடைஞ்சிப் போனது போல இருந்துச்சு. விகடுவோட வந்த வாத்தியாருமாருக சுத்திலும் ஒரு பார்வையப் பாத்துட்டு தொவண்டுப் போயி சுய நெனைவு இல்லாம உக்காந்திருந்த செய்யுவ எப்பிடி உள்ளார பெட்ல கொண்டு போயி சேக்குறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சாங்க.

            "ஏம் இப்பிடிப் பண்ணுறாங்க?"ன்னாம் விகடு நடக்குற நெலமெ ஒண்ணும் புரியாம. நடுரோட்டுல மயக்கமாயி வுழுந்தா கூட சுத்தி நிக்குற சனங்க பக்கத்துல இருக்குற ஏதோ ஒரு வூட்டுல கொண்டுப் போயி படுக்கப் போட்டு மொகத்துல தண்ணிய தெளிச்சு சோடாவோ, டீத்தண்ணியோ வாங்கிக் கொடுக்குற ஒலகத்துல ஓர் ஆஸ்பத்திரியிலே அதுவும் பெரியாஸ்பத்திரியில இப்பிடியா மயங்கிப் போன பொண்ண கொண்டாந்தா அதெ அப்பிடியே நாற்காலியில உக்கார வெச்சி ஏன்னா ஏதுன்னு வெசாரிக்காம ஊசிய மட்டும் போட்டு வுடுவாங்கன்னு விகடுவுக்குத் தெகைப்பா இருந்துச்சு. 

            "இஞ்ஞ யிப்பிடித்தாம். டாக்கடர்ர பாக்க வுடாம, நர்சுங்களே ஏதோ ஊசியப் போட்டு, ரண்டு மருந்து மாத்திரையத் தந்து கெளப்பி வுடத்தாம் பாப்பாங்க. நாம்ம சத்தம் போட்டாத்தாம் வெளியில வந்துப் பாப்பாங்க. அதுக்குத்தாம் நம்ம ஆளு சவுண்ட்டு வுடுறாரு!"ன்னாரு செவப்பா இருந்த ஆளு இஞ்ஞல்லாம் இப்படித்தாம்ங்றாப்புல. அத்தோட அவரு ஒல்லியா இருந்த ஆளப் பாத்து, "எப்பா சத்தம் பத்தலப்பா. ஒண்ணு கூட வெளியில எட்டிப் பாக்கல!"ன்னாரு இன்னும் கொஞ்சம் சத்தத்தெ அதிகம் பண்ணுன்னு உசுப்பி வுடுறாப்புல. ஏற்கனவெ அவரோட சத்தம் உருமி மேளத்தெப் போலத்தாம் இருந்துச்சு. சேப்பான ஆளு சொன்னது அதெ இன்னும் அதிகம் பண்ணுன்னு கொம்புச் சீவி வுடுறாப்புல இருந்துச்சு.

            "அப்போ வூடு கட்டி ரவுண்ட்டு அடிக்கவா?"ன்னாரு ஒல்லியான ஆளு கையி ரண்டையும் சொழட்டிக்கிட்டு.

            "நீயி என்னத்தெ பண்ணுவீயோ? ஏது பண்ணுவீயோ? இன்னும் ரண்டு நிமிஷத்துல இஞ்ஞ ஒரு டாக்கடர்ரு நிக்கணும்!"ன்னாரு சேப்பான ஆளு காரியம் ஆகணும்ங்றாப்புல.

            "எவ்வடி இஞ்ஞ எந் தங்காச்சிக்கு ஊசியப் போட்டு வுட்டு அப்பிடியே உக்காத்தி வெச்சிட்டுப் போனது? வாங்கடி மொதல்ல வெளியில! இல்லாட்டி இதெ ஆஸ்பத்திரியில வெச்சி ஒஞ்ஞளுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுறாப்புல ஆயிடும்!"ன்னு சத்தம் போட்டாரு ஒல்லியான ஆளு நடுரோட்டுல நின்னு சத்தத்தெ வைக்குறாப்புல. அவரோட சத்தத்தெ கேட்டு உள்ளார இருந்து ஒரு நர்ஸ்ம்மா வந்தாங்க.

            "யாரு நீயி? ஏம் இப்பிடி சவுண்ட் வைக்குறே? டாக்கடர்ரு வந்துதாம் பாக்கணும். அவ்சரம்ன்னா பிரைவேட்டு ஆஸ்பிட்டலுக்குக் கொண்டுட்டுப் போ. பர்ஸ்ட் எய்ட் என்ன பண்ணணுமோ அதெ பண்ணிருக்கு. இதென்ன ஒம் பாட்டன் ஆஸ்பத்திரின்னு நெனைச்சிக்கிட்டீயா? என்னவோ வாடி போடின்னு சவுண்ட் வைக்குறே? போலீஸ்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் வெச்சன்னா பாத்துக்கோ, பிடிச்சிக் கொண்டுப் போயி உள்ளார வெச்சிடுவாம்!"ன்னாங்க அந்த நர்ஸ்ஸம்மா ஒல்லியான ஆளெ ஒரு மொறைப்பு மொறைச்சுக்கிட்டு.

            "கூப்புடுடி ஒம் போலீஸ? இப்பத்தாம்டி போலீஸ் ஸ்டேசன்லேந்து வார்றேம். மறுக்கா ஸ்டேசன்னா பயந்துடுவமா? நாம்ம பாதி நாளு இருக்குறதே ஸ்டேசன்லத்தாம்! நாம்ம பொறந்து வளந்ததே அங்கத்தாம்!"ன்னாரு அந்த ஒல்லியான ஆளு ஸ்டேசன்லயே குடித்தனம் பண்டுறாப்புல.

            "யிப்போ பெட்ல வெச்சி டிரிட்மெண்ட் பாக்கப் போறீயளா? இல்லியா?"ன்னாரு சேப்பான ஆளு மெரட்டலான கொரல்ல.

            "பெரச்சன ஆயிடும் சிஸ்டர். நாஞ்ஞ செம்ம காண்டுல வந்திருக்கேம். ஒடனே பொண்ண உள்ளாரக் கொண்டுப் போங்க. பெட்ல படுக்க வையுங்க. டாக்கடர்ரு வர்றப்போ வாரட்டும்!"ன்னாரு குண்டான ஆளும் சேந்துக்கிட்டு அடி மேல அடிச்சு தொடர் மெரட்டல் வுடுறாப்புல.

            "மொதல்ல இந்த ஆளு எஞ்ஞள வாடி, போடின்னு சொல்லிப் பேசுறதெ நிப்பாட்டச் சொல்லுங்க. இந்த ஆளு மொதல்ல ஆஸ்பிட்டல்ல வுட்டு வெளியிலப் போவணும்!"ன்னாங்க நர்ஸ்ம்மா கண்டிஷன் பண்டுறாப்புல.

            "நாம்ம வெளியில போனா எந் தங்காச்சிய உள்ளாரக் கொண்டுட்டுப் போயிடுவேன்னு சொல்லு. யிப்பவே இந்த நேரமே வெளியிலப் போயிடுறேம்! எந்த தங்காச்சிய உள்ளாரக் கொண்டுப் போவீயா? சொல்லு போவீயா? உள்ளார மட்டும் கொண்டு போ! நாம்ம வெளியில போறமா இல்லியான்னு பாரு!"ன்னாரு ஒல்லியான ஆளு சத்தியம் செஞ்சா மாற மாட்டேம்ன்னு சவால் வுடுறாப்புல.

            "நீயி வெளியில போனீன்னாத்தாம் எதாச்சும் நாம்ம செய்வேம்! இஞ்ஞ நிக்குற ஒவ்வொரு நொடிக்கும் நாம்மளும் அப்பிடியே நிப்பேம்!"ன்னாங்க நர்ஸ்ம்மா பதிலுக்குப் பதிலு சவாலு வுடுறாப்புல.

            "அப்பிடின்னா செரி! எந் தங்காச்சிக்காக வெளியில போறேம். எந் தங்காச்சிக்கு மட்டும் எதுனாச்சும் ஆச்சுன்னா நீயி ஒழுங்கா வூடு போயிச் சேர்ற முடியாது. ஆஸ்பிட்டலுக்கு வெளியிலத்தாம் நிப்பேம். ஒம் பேரு ன்னா சொல்லு?"ன்னாரு ஒல்லியான ஆளு கித்தாப்பெ கொஞ்சம் கூட கொறைச்சுக்காம.

            "ச்சைய் ப்பே!"ன்னுட்டு அந்த நர்ஸ்ம்மா சேப்பா இருந்த ஆளப் பாத்து வேண்டா வெறுப்பா கேக்குறதுப் போல கேட்டாங்க, "என்னாச்சு? ஏம் இந்தப் பொண்ணு யிப்பிடி இருக்குது? வந்ததுலேந்து கேட்டுட்டேம். பக்கத்துல உக்காந்திருக்கிற ஆளு ஒண்ணுத்தையும் சொல்ல மாட்டேங்றாரு. நாம்ம என்னத்தெ பண்ண? அதாங் ஒரு ஊசியப் போட்டு வுட்டுட்டு டாக்டரு வரட்டும்ன்னு உக்கார வெச்சேம்!"ன்னாங்க அந்த நர்ஸ்ஸம்மா கொஞ்சம் இப்போ எறங்கி வந்துப் பேசுறாப்புல.

            "அந்த மருவாதி! ஆங் அந்த மருவாதி வேணும்!"ன்னு சொல்லிக்கிட்டெ ஒல்லியான ஆளு ஆஸ்பிட்டல வுட்டு வெளியிலப் போனாரு.

            "போதும்! சவுண்ட் போதும்! இப்போ நீ மொதல்ல வெளியில போப்பா!"ன்னாரு குண்டான ஆளு இனுமே காரியம் ஆயிடும்ங்றாப்புல.

            "எந் தங்காச்சிக்காகப் போறேம்!"ன்னு வெளியில போன ஒல்லியான ஆளோட சத்தம் சன்னமா உள்ளாரக் கேட்டுச்சு.

            "இந்த மாதிரியான ஆளுங்கள எல்லாம் ஏம் உள்ளாரக் கொண்டாறீயே? ன்னா கேஸ்ன்னு சட்டுப் புட்டுன்னு சொல்லுங்க! என்ன பண்ணலாம்ன்னு பாக்கலாம்!"ன்னாங்க நர்ஸ்ம்மா எப்பிடியோ சமாளிச்சு வுட்டுப்புடலாம்ங்றாப்புல.

            "போலீஸ் கேஸ்ம்மா. வெச்சி வெசாரிச்சி நாற்காலியோட வெச்சிப் பின்னாடி தள்ளி வுட்டதுல மயக்கமாயிடுச்சு!"ன்னாரு சேப்பான ஆளு சட்டுன்னு விசயத்துக்கு வந்தாப்புல.

            "இந்தப் பொண்ணையெல்லாம்மா போலீஸ்ல வெச்சி மொரட்டுத்தனமா வெசாரிக்கிறாங்க?"ன்னு ஆச்சரியப்பட்டாப்புல கேட்டாங்க நர்ஸ்ம்மா.

            "நேத்தி வக்கீலு ஒண்ணு செருப்படி பட்டதெப் பத்தி பேசிட்டு இருக்காங்கல்ல. கேள்விப்பட்டீயளா?"ன்னாரு சேப்பான ஆளு தெகைப்பெ கூட்டுறாப்புல.

            "ஆம்மாம்! பேசிட்டு இருந்தாங்க. அந்தப் பொண்ணு இதானா? அதாங் போலீஸ்ல வெச்சி இந்த மாதிரிக்கிப் பண்ணி வுட்டு இருக்காங்களா?"ன்னு நர்ஸ்ஸம்மாவே அடுத்தாப்புல கோத்து இழுத்துக் கேட்டுச்சு.

            "அதெ பொண்ணுத்தாம். அட்மிஷனப் போட்டு உள்ளாரக் கொண்டுப் போங்க!"ன்னாரு சேப்பான ஆளு இப்போ சொன்னதெ செய்யுன்னு காட்டமா உத்தரவெ போடுறாப்புல.

            "உள்ளார வந்து பெட்ல படுத்துக்கிட்டும். வேணும்ன்னா டிரிப்ஸ் ஒண்ணுத்தெ போட்டு வுடுறேம். உள்ளார அட்மிட் பண்ணறதையெல்லாம் டாக்கடர்ரு வந்து பாத்துதாங் முடிவெ பண்ணணும். நீங்கப் போயி அவுட்பேஷன்டுக்கு ஒரு சீட்டுப் போட்டுட்டு வாங்க!"ன்னாங்க நர்ஸ்ஸம்மா இதாங் விதிங்றாப்புல. அவுங்க எந்த விதியப் பத்திச் சொன்னாங்களோ தெரியல. மனுஷனோட விதி சரியில்லன்னா நாட்டுல இருக்குற விதிங்களும் அதுக்கு ஒத்து ஊதுறாப்புலத்தாம் இருக்கும் போல.

            "மகேந்திரா! நீயிப் போயி பெத்தநாயகத்த வர்றச் சொல்லு. அவ்வேம் வந்து சத்தம் போட்டாத்தாம் இந்தம்மா சரிப்பட்டு வரும் போலருக்கு!"ன்னாரு சேப்பான ஆளு சொன்னதெ செய்யலன்னா தாம் நினைக்கிறதெ தலைய கொண்டு வான்னாலும் அதெ செய்யுறதுக்கு ஆளுங்க இருக்காம்ங்றாப்புல.

            "புரிஞ்சிக்கோங்க சார்! இன்பேஷன்டோட அட்மிஷனல்லாம் டாக்கடர்ருதாம் முடிவு பண்ணணும். நாம்ம இந்த ஆஸ்பிட்டல்ல வேல பாக்குற ஒரு கூலி. அவ்வளவுதாங். மாசம் ஆன சம்பளம். அதுக்காக வேலையப் பாத்துக்கிட்டு இருக்கேம். என்னவோ நாம்மத்தாம் இந்த ஆஸ்பிட்டல்ல கட்டுனாப்புலயும், நம்ம கன்ட்ரோல்லயும்தாம் இந்த ஆஸ்பிட்டல் இருக்குறாப்புல பேசுதீயேளே? நீஞ்ஞ பண்ணுறதெல்லாம் கேமிராவுல ரிகார்ட் ஆயிட்டுத்தாம் இருக்கு. ஒரு கம்ப்ளெய்ண்ட் வெச்சா போதும், அரசாங்க பணியாளரா பணி செய்ய வுடாம தடுத்ததா உள்ளாரத் தூக்கிப் போட்டுடுவாங்க பாத்துக்குங்க!"ன்னாங்க நர்ஸ்ஸம்மா ஒரே நேரத்துல பயந்து சொல்றாப்புலயும் அதே நேரத்துல பயமுறுத்திச் சொல்றாப்புலயும்.

            "நீஞ்ஞ ஒஞ்ஞ கடமெயெ மட்டும் சொல்லுங்க, செய்யுங்க. நாஞ்ஞ எஞ்ஞ யண்ணாச்சிக்குப் போனப் போட்டு உள்ளார அட்மிஷனப் போட்டுக்கிறேம்."ன்னாரு சேப்பான ஆளு இதுக்கு மேல பேசிப் பிரயோஜனம் இல்லங்றாப்புல.

            "கோவிந்து! விசாகன் யண்ணாச்சிக்குப் போனப் போட்டுச் சொல்லு. யண்ணாச்சி நேரடியா சீப் டாக்கடருக்கே போனப் போட்டு வுட்டார்ன்னா வேல முடிஞ்சிடும். நாம்மப் போயி சில்லுண்டி சிறுவாடுகிட்டல்லாம் கெஞ்சிக்கிட்டுக் கெடக்க வேண்டியதில்ல!"ன்னாரு குண்டான ஆளு இதுக்கு மேலயும் பேசிட்டு இருக்க மாட்டேம், கட்டம் கட்டி காரியத்துல எறங்கிடுவேம்ன்ன மெரட்டுறாப்புல.

            இதுக்கு மேல பேசுனா நெலமெ மோசமாயிடுமோன்னு நெனைச்சாங்களோ என்னவோ தெரியல, யில்ல விசாகன் அண்ணாச்சி வந்தா நெலமெ சிக்கலாயிடும்ன்னு நெனைச்சாங்களோ என்னவோ புரியல, ஒண்ணுஞ் சொல்லாம நர்ஸம்மா செய்யுவ கைத்தாங்கலா அழைச்சிட்டுப் போயி உள்ளார பெட்ல படுக்க வெச்சாங்க. அவ்வே செய்யு அப்போ முழு மயக்கத்துலேந்து கொஞ்சம் மின்னேறி அரை மயக்க நெலமையில இருந்தா. அப்பிடியே குளுக்கோஸ் பாட்டில ஒண்ணு மாட்டி வுட்டு டிரிப்ஸையும் போட்டு வுட்டாங்க. சுப்பு வாத்தியாரு பெட்டுக்குப் பக்கத்துல மவளுக்குப் பக்கத்துல உக்காந்திருந்தாரு. அவரு என்னவோ சின்னபுள்ள மாதிரி மாறிருந்தாரு. சின்னபுள்ளைக்குச் சொல்லிச் சொல்லி செய்யச் சொன்னா செய்யுறதெப் போல சொல்ல சொல்ல செஞ்கிட்டு இருந்தாரு. செய்யுவ உள்ளார நர்ஸ் அழைச்சிட்டுப் போறப்பயும் அப்பிடியே உக்காந்திருந்தாரு. "நீஞ்ஞளும் உள்ளாரப் போங்க வாத்தியாரே!"ன்னு சேப்பு ஆளு சத்தம் போட்டதுந்தாம் அவரும் உள்ளாரப் போனாரு. உள்ளாரப் போயி அப்பிடியே நின்னுட்டு இருந்தவரு, "பொண்ணுக்குப் பக்கத்துல ஆறுதலா உக்காருங்க வாத்தியாரே!"ன்னு மறுக்கா சேப்பான ஆள சொன்னதும்தாம் பக்கத்துல உக்காந்தாரு. இப்பிடி ஒவ்வொண்ணுத்தையும் சொல்ல சொல்ல பண்ணிட்டு இருந்தாரு.

            "மகேந்திரா! வா நாம்ம கொஞ்சம் வெளியிலப் போயி சாப்பாட்டுக்கு ஏற்பாட்ட பண்ணிட்டு வருவேம்!"ன்னாரு சேப்பான ஆளு அடுத்த கட்ட காரியத்துல எறங்குறாப்புல. மணி அப்பிடி இப்பிடின்னு ராத்திரி எட்டுக்கு மேல ஆயிருந்துச்சு. அவுங்க எல்லாரும் ஆஸ்பிட்டல்ல விட்டு வெளியில போனாங்க.

            விகடுவும், பரமுவோட அப்பாவும், விகடுவோட வந்த வாத்தியாருமாருகளும் உள்ளாரப் போயி பெட்டெச் சுத்தி நின்னாங்க. செய்யு லேசா கண்ண விழிச்சிப் பாத்தா எல்லாரையும். கொஞ்சம் கொஞ்சமா அவளோட நெலையில மாத்தம் உண்டாவ ஆரம்பிச்சிது.

            "யிப்போ எப்பிடி இருக்கு?"ன்னாம் விகடு செய்யுவப் பாத்து அவளுக்கு இந்தக் கேள்வி உரைக்குமா உரைக்காதான்னு கூட புரியாம. சட்டுன்னு அதெ அவ்வே வாங்கிக்கிட்டாப்புல, "ஸ்டேசன்ல வெச்சி அடிச்சாங்கண்ணா!"ன்னா செய்யு. அதெ சொல்லுறப்போ அவளோட கண்ணுலேந்து தண்ணி குபுக்குன்னு வெளியில வந்துச்சு. படுக்க வெச்சு ஒரு குளுக்கோஸ் பாட்டில போட்டு வுட்டதும் அவளோட நெலையில கொஞ்சம் முன்னேத்தம் இருந்துச்சு.

            "நாம்ம எதிர்பாக்கலடாம்பீ இப்பிடி நடக்கும்ன்னு!"ன்னு சுப்பு வாத்தியாருக்கும் அடுத்ததா கண்ணுலேந்து தண்ணி குபுக்குன்னு வெளியில வந்துச்சு.

            "இதெ எதாச்சும் பண்ணித்தாம் ஆவணும்! பிரஸ்ஸூக்குப் போன பண்ணுறீயளா?"ன்னாம் விகடு பக்கத்துல இருந்த வாத்தியார்மார்களப் பாத்து.

            "போதும்டாம்பீ! இதெ இத்தோட வுட்டுடு. பிரஸ்ஸூன்னு போனா நம்ம பொண்ணு பேரையும் இழுத்து வுட்டுத்தாம் எழுதுறாப்புல இருக்கு. நம்மள நாமளே நாறடிச்சிக்கிட்டு இருக்க முடியாது. நடந்தது வெளியில தெரியாம வூடுப் போயிச் சேரணும் தெரிஞ்சிக்கோ! ஊர்ல கெளரவமா இருக்கேம். அதெ கெளரவத்தோட இருக்கணும் பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒரு சம்சாரிங்றவெம் ஓர் எல்லையத் தாண்டிப் போவக் கூடாதுன்னு கோட்டெ கிழிக்கிறாப்புல.

            "இதுக்கு மேல என்னத்தெ கெளரவம் கொறைஞ்சிடப் போயிடப் போவுது?"ன்னாம் விகடு வானமே இடிஞ்சு வுழுந்திடுச்சுன்னா அதுக்கு மேல இடிஞ்சு வுழுவுறதுக்கு என்னா இருக்குங்றாப்புல.

            "இந்தாரு விகடு! பிரஸ்ன்னா நீ நெனைக்குற மாதிரி நாம்ம கூப்புட்டுச் சொன்ன ஒடனே போலீஸ்ஸப் பத்தியெல்லாம் எழுதிட மாட்டாங்க. அதுவும் இது கேஸ்ஸாயிருக்கு. கேஸ்ஸூ சம்பந்தமா அவுங்களுக்குச் சேதியக் கொடுக்கறவங்களே போலீஸ்காரங்கத்தாம். அவுங்கள பகைச்சிக்கிற மாதிரிக்கல்லாம் அவுங்க செஞ்சிட மாட்டாங்க!"ன்னாரு வந்திருந்த வாத்தியார்மார்கள்ல ஒருத்தரு அதுக்குன்னு இருக்குற நடைமொறையா சொல்றாப்புல.

            "எதாச்சும் செய்யணுங்ம்ங்கய்யா! நமக்கு ரத்தமெல்லாம் கொதிக்குது. தங்காச்சிக்கு யிப்பிடி ஆயிடுச்சு. நாம்ம ஒண்ணுமே பண்ண முடியாத யண்ணனா இருக்கேம்ன்ன ரொம்ப கஷ்டமா இருக்கு!"ன்னாம் விகடு ஏதும் ஏலாத தன்னோட ஆத்தாமைய என்ன பண்டுறதுன்னு புரியாம.

            "ஏதோ இத்தோட வுட்டதுன்னே நெனைச்சுக்கோ விகடு. போலீஸ் வாயிலப் போயி மீள்றது சுலுவுல்ல. ஒந் தங்காச்சியோட நல்ல நேரம் மயக்கம் வந்து எப்பிடியோ விட்டுட்டானுவோ. இத்தோட வுட்டுக்கிடணும். இதெப் போட்டு மேல மேல இழுத்துக்கக் கூடாது!"ன்னாரு இன்னொரு வாத்தியாரு நடப்பெ சுட்டிக் காட்டுறாப்புல.

            "யப்போ ஒண்ணுமே பண்ண முடியாதா?"ன்னாம் விகடு வெளைஞ்சதெ கரையேத்த முடியாம தவிக்குற சம்சாரியோட ஏக்கத்தோட.

            "செங்கதிர் பத்திரிக்கையில நமக்குத் தெரிஞ்ச நிருபர் ஒருத்தர் இருக்காரு. அவர்ர கூப்புட்டுன்னா பாக்கலாம். ஆன்னா அந்தப் பத்திரிகெ ரொம்பப் பேரு படிக்கிற பத்திரிகெ கெடையாது. தினமணி, தினகரன் நிருபருங்கல்லாம் நமக்குத் தெரிஞ்சவங்கத்தாம். அவுங்களுக்கும் வேணும்ன்னாலும் போன அடிச்சிச் சொல்லிப் பாப்பேம்!"ன்னு அந்த வாத்தியாரு நிருபருங்க ஒவ்வொருத்தருக்கா போன அடிச்சாரு.

            "மவ்வேம் அப்பிடித்தாம் சொல்லுவாம். அவ்வேம் பேச்செல்லாம் கேட்டு எதெயும் பண்ணாதீயே! ஊர்ல கெளரவமா இருந்தாச்சு. அதெத் தாண்டியும் கோர்ட்டு, ஸ்டேசன்னும் பாத்தாச்சு. இத்தோட நிறுத்திக்கிடணும். இதுக்கு மேலப் போவக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஆறு கரை பொரண்டாலும் கரை நின்ன எடத்துலத்தாம் நிக்கணுங்றாப்புல.

            "யப்பா சொல்றதும் சரிதான்னு படுது. இத்தோட இதெ வுட்டுடு விகடு. நடந்தது நடந்துப் போச்சு. அந்த சனியன் பிடிச்சப் பயெ நகெ பணத்தெ கொடுத்தாலும் சரித்தாம், கொடுக்காட்டியும சரித்தாம். மொதல்ல அவ்வேங்கிட்டெருந்து தங்காச்சிக்கு விடுதலைய வாங்குங்க. நல்ல எடமாப் பாத்துக் கட்டி கொடுத்துட்டுப் போங்க. ஏம் இதெல்லாம் போட்டு இழுத்துக்கிட்டு. இதெல்லாம் சுத்தப்பட்டு வாராது!"ன்னாரு இன்னொரு வாத்தியாரு ஏதோ நடந்தது நடந்துப் போச்சு, இனுமே இத்துப் போல நடக்காம பாத்துக்கிடணும்ங்றாப்புல.

            "நமக்கு யிப்போ பிரஸ்காரவுங்க வாரணும்!"ன்னாம் விகடு, மனுஷனுக்குக் கோபம்ன்னு ஒண்ணு வர்றப்போ யாரு சொல்லும் மனசுல ஏறுறதில்ல, மனசு போன போக்குல போறதுதாம் சரித்தாம் படுதுங்றாப்புல.

            "யப்பா விகடு! பிரஸ்காரவுங்கன்னு சென்சிட்டிவான விசயங்களப் போடுவாங்க. இன்னும் ஒலகமே புரியாத ஆளா இருக்கீயே. இதெ சம்பவம் சினிமாவுல இருக்குறவங்களுக்கு, அரசியல்ல இருந்தவங்களுக்கு நடந்தா இந்நேரத்துக்கு டிவிப்பொட்டில்லாம் பிரேக்கிங் நியூஸ்ன்னு அலறும். நாமல்லாம் ஸ்டேசனுக்குப் போயி செத்தே போனாலும், அம்பது பேரு, நூறு பேரு தெரண்டு ஸ்டேசனுக்கு மின்னாடியோ, தாசில்தார் ஆபீஸூக்கு மின்னாடியோ நின்னு போராட்டம் பண்ணத்தாம் கொஞ்சமாச்சும் கண்டுகிட்டு நடவடிக்கெ எடுக்கலாமா என்னான்னு யோசிப்பானுங்க!"ன்னாரு அந்த வாத்தியாரு நெனைச்ச படிக்கெல்லாம் நடாத்திக் காட்ட சாதாரண மனுஷங்கள செகத்துல யாருக்குத் தெரியும்ங்றாப்புல.

            "நம்மாள ஒண்ணுமே பண்ண முடியாதா?"ன்னாம் விகடு தழுதழுத்த கொரல்ல திக்கத்துப் போனவேம் தடுமாறி நிக்குறாப்புல.

            "இந்தாருப்பா விகடு! மனசெ தளர வுட்டுப்புடாதே. இப்பத்தாம் நிருபருக்குப் போனப் போட்டுச் சொல்லிருக்கேம். அவுங்க இருக்குற எடத்துலேந்து கெளம்பி இஞ்ஞ வந்தாவணும்ல. வர்ற வரைக்கும் கொஞ்சம் அமைதிப்படு. அவுங்க வந்துப் பேசிப்பேம்! சித்தெ அடங்கு!"ன்னாரு பிரஸ்ஸூக்குப் போன பண்ண வாத்தியாரு புதுத்தண்ணி ஆத்துல வர்றப்போ மின்னாடி துள்ளிக் குதிக்கிற மீனப் போல துள்ளிக் குதிக்காதேங்றாப்புல.

            நிருபருங்க வர்ற வரைக்கும் நடந்தச் சம்பவத்தப் பத்தி ஆளாளுக்கு தங்களுக்குத் தோணுன கருத்துகளப் பேசிக்கிட்டு இருந்தாங்க. பரமுவோட அப்பாவும் விகடுவோட காதுல வாந்து அதெல்லாம் வாணாங்றாப்புல, நாசுக்கா இத்தெ இத்தோட வுட்டுப்புடுவேம்ங்றாப்புல சொன்னாரு.

அரை மணி நேரத்துல ரண்டு நிருபருங்க வந்தாங்க. செங்கதிருக்கு நிருபரா இருக்குறவர்தாம் தினகரனுக்கும் ரிப்போர்டடரா இருக்குறதா அறிமுகம் பண்ணிக்கிட்டாரு. தினமணி நிருபரும் தன்னெ அறிமுகம் பண்ணிக்கிட்டுச் சேதியக் கேட்டாங்க. நடந்ததெ விகடு ஒண்ணு விடாம சொன்னாம்.

            "நேத்தி நடந்த செருப்படி வாங்குன வக்கீலப் பத்தித்தாம் டவுன்ல பேச்சா கெடக்குது. நமக்கு ஒண்ணுமில்லங்க சார்! நாளைக்கிப் பேப்பர்லயே நியூஸ் வர்றாப்புல பண்ணிடலாம். அதுக்குப் பெறவான சம்பவங்களுக்கு நீங்கத்தாம் பொறுப்பு. பேரு எல்லாம் வெலாவாரியப் போட்டுத்தாம் நியூஸ் போடுறாப்புல இருக்கும். அதெ தொடந்தாப்புல விசாரணை அது இதுன்னு ஒங்களப் போட்டு அலைக்கழிச்சிடுவாங்க. ஆம்பளன்னா கூட பரவால்ல. சமாளிச்சிடலாம். பொம்பளப் புள்ளையா வேற இருக்கு. நாளைக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்குறப்போ நெறைய சிரமத்த சந்திக்க வேண்டி இருக்கும். நாங்க நீதிக்குப் பக்கத்துல இல்லன்னு மட்டும் நெனைச்சிப்புடாதீங்க. நடைமொறையச் சொல்றேம். நீதி வேணும்ன்னுட்டு வாழ்க்கைய வீணடிச்சிக்கிறதுல்ல அர்த்தமே இல்ல. இதுக்கு மேல நீங்கத்தாம் சொல்லணும். நடந்த சம்பவத்தெ நியூஸ் ஆக்கணுமா வேணாமான்னு!"ன்னாரு செங்கதிரோட ரிப்போர்ட்டரு இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சுச் சொல்லுங்கங்றாப்புல.

            "இதெல்லாம் போலீஸ் நியூஸ் பாஸ்ஸூ. இந்த நியூஸ்ஸையெல்லாம் அவுங்க கொடுக்குறத வெச்சித்தாம் நாங்கப் போடுறது. இதுக்கெல்லாம் எப்.ஐ.ஆர். ஆயிருக்கணும். நாங்க அனுப்புனாலும் பத்திரிகையில சட்டுன்னுப் போட்டுட மாட்டாங்க! ஒரு நியூஸூக்காக வந்து அது கெடைக்கலங்றதப் பத்தி எங்களுக்கு கவலெயில்ல. வந்து வேஸ்ட்டா திரும்புறதா நாங்க அதெப் பத்தி எதுவும் நெனைக்கல. இப்பிடியே கெளம்பிடுறேம். ஆன்னா இது தங்கச்சியோட வாழ்க்கெப் பெரச்சனெ. இதெ இத்தோட விட்டுட்டு, இப்பிடி ஒண்ணும் நடக்கலன்னு நெனைச்சிப் போயிட்டே இருங்க. நீங்க இதெ கண்டுக்கிட கண்டுக்கிட போலீஸ்காரவங்களும் இதெ பெரிசா கண்டுக்கிட்டு நோண்டி நொங்கெடுக்க ஆரம்பிச்சிடுவாங்க. அவுங்க ஒரு வாஸ்ட் பவர்ரு பாஸ்ஸூ! ஏகப்பட்ட லிங் இருக்கு. இத்தோட இதெ விட்டுட்டுத் தங்கச்சிய நல்லபடியா கொணப்படுத்திக் கொண்டுப் போறதெப் பாருங்க. லாக்கப்புலயயே செத்த எத்தனெ பேரோட கேஸ்‍ஸை‍யே ஒண்ணும் இல்லாம அடிச்சிடுவாங்க. ஏன்னா ஒரு கேஸ்ஸப் பொருத்த மட்டுல அவுங்க கொடுக்குற எப்ஐஆர்தாம் மொதல்ல பேசும். அதெ அவுங்கத்தாம் கொடுத்தாவணும். அவுங்க மேலயே ஒரு கேஸ்ன்னா நெனைச்சிப் பாருங்க. சுத்தமா நிக்காது. போயி அசிங்கப்படறாப்புல ஆயிடும். எங்களுக்கு ஒண்ணுமில்ல, இந்த நியூஸ்ஸப் புரமோட் பண்ணுறதுல. அதுக்குப் பின்னாடி ஒங்க தங்கச்சியப் பத்தி ஆளாளுக்கு கண்டவெதமா பேசுறாப்புலயும், எழுதுறாப்புலயும் ஆயிடும். நீங்க இப்போ எங்கள பிடிச்ச மாதிரி ஒங்க தங்காச்சியோட புருஷன் வேறொரு நிருபரப் பிடிச்சி வேணும்னே எதாச்சும் எழுத வைப்பாம். இதெ இத்தோட வுட்டுட்டு இருக்குற கேஸ்கள முடிச்சிட்டு கைய கழுவிட்டுப் போவப் பாருங்க!"ன்னாரு வந்திருந்த இன்னொரு நிருபரு இதாங் ஒலக வழக்கம்ங்ற மாதிரிக்கு.

            "அவுங்க சொல்றதுதாம் செரி! இவ்வேம் பேச்சக் கேட்டுட்டு எதுலாச்சும் எழுதிப்புடாதீங்க!"ன்னு சுப்பு வாத்தியாரு எல்லாரையும் பாத்துக் கையெடுத்துக் கும்பிட்டாரு. பட்டுச் சுட்டதெல்லாம் போதும், இதுக்கு மேல சுடுறதுக்கு ஒடம்புல எடமில்லங்ற மாதிரிக்கு நோந்துப் போனவர்ரப் போல திரும்ப திரும்ப எல்லாத்தையும் பாத்துக் கையெடுத்துக் கும்பிட்டுகிட்டெ இருந்தாரு அவரு. அதெப் பாத்ததும் அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல ஒவ்வொருத்தரா சன்னமா கௌம்பி ஆஸ்ப்பிட்டலுக்கு வெளியில வந்தாங்க. விகடு ஒண்ணும் சொல்ல முடியாம பேச்சத்துப் போயி நின்ன எடத்துலயே அப்பிடியே நின்னாம். வந்திருந்த நிருபர்ங்க அதெ புரிஞ்சிக்கிட்டவங்கப் போல விகடுவோட தோள்ல அரவணைப்பா ரண்டு தட்டு தட்டிட்டு கண்ணால போறோம்ங்றாப்புல ஒரு குறிப்பெ காட்டிட்டுக் கௌம்பப் பாத்தாங்க. விகடுவோட கண்ணுலேந்து தண்ணி பொல பொலன்னு கொட்டுனுச்சு.

            விகடுவோட கூட இருந்த வாத்தியாருமாருங்க அவ்வேம் அப்பிடியே நிக்கட்டும்ன்னு விட்டுப்புட்டு நிருபர்ங்கள ஆஸ்பிட்டல வுட்டு வெளியில அழைச்சிட்டுப் போயி டீத்தண்ணிய வாங்கிக் கொடுத்துப் பேசி இருந்துட்டு அனுப்பி வெச்சிட்டு உள்ளார வந்தாங்க. விகடு ரொம்பவே சோர்ந்தாப்புல ஆனாம்.

            "இதெ நெனைச்சி ஒண்ணும் கவலப்படாதே விகடு. நாளைக்கு வேணும்ன்னாலும் நியூஸ்ல கொடுத்துக்கிடலாம். இதெப் பத்தி யப்பாவோட நல்ல கலந்துக்கிட்டு ஒரு முடிவுக்கு வா!"ன்னாரு ஒரு வாத்தியாரு விகடுவெ வார்த்தையால முட்டுக் கொடுத்துத் தூக்கி வுடுறாப்புல.

            "அதெல்லாம் ஒண்ணும் வாணாம். இதுல கலந்துக்கிடல்லாம் ஒண்ணுமில்ல. கோர்ட்டு கேஸ்ஸூன்னுப் போயித்தாம் இப்பிடி ஆயி நிக்குது. அன்னிக்கே ஒண்ணும் வாணாம்ன்னு வெவகாரத்தப் போட்டு முடிச்சிருந்தா இந்த நெல வந்திருக்காது. பொண்ணையும் இந்நேரத்துக்கு வேற ஒரு நல்ல எடத்துலப் பாத்து கதெயெ முடிச்சிருப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நடக்கவே தெரியாதவேம் ஓடத் தெரியாம ஓடி குழிக்குள்ள வுழுந்துப்புட்டாப்புல.

            வாத்தியாருமாருக எல்லாம் விகடுவப் பாத்தாங்க. அவ்வேம் தலையக் குனிஞ்சிக்கிட்டாம். கொஞ்ச நேரம் ஆனதும், "ஒஞ்ஞளோட ஒதவிக்கு எப்பவும் நன்றி சொல்லிக்கிறேம். இக்கட்டனா சூழ்நெலயில கூட வந்து நின்னு ரொம்ப ரொம்ப நன்றி. இனுமே ஒண்ணுமில்ல. நீஞ்ஞக் கெளம்புங்க. நாம்ம இனுமே பாத்துக்கிறேம்! பள்ளியோடம் விட்டு வூட்டுக்குப் போனதும் போவததுமா ஓடியாந்திருப்பீயே! வூட்டுலயும் எஞ்ஞப் போயிட்டாருன்னு நெனைச்சிட்டே இருப்பாங்க!"ன்னாம் விகடு தழுதழுத்த கொரல்ல இதுக்கு மேல அவுகள நிக்க வைக்காம நேரா நேரத்துல நன்றியோட வூட்டுக்கு அனுப்பிச்சிடணும்ங்ற நெனைப்புல.

            "அதெப் பாத்துக்கிடலாம். அத்து ஒண்ணும் பெரிய விசயமில்ல. இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறேம்!"ன்னாங்க வாத்தியாருமாருங்க இப்போ ஒடனே போறாப்புல இல்லங்றாப்ல. அவுகளுக்கு விகடுவோட மனசெ கொஞ்சம் ஆறுதலும் தெகிரியமும் பண்ணி வுடணும்ன்னு ஒரு நெனைப்பு. அதுக்கேத்தாப்புல நெலமைய மாத்துறாப்புல பேச ஆரம்பிச்சாங்க. அவுங்க ஆளாளுக்கு அவங்க மனசுல பட்டதெ, அனுபவப்பட்டதெ பேச ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் நேரம் எதுவும் பேசாம அவுங்க பேசுறதெ வேண்டா வெறுப்பா கேக்குறதெப் போல இருந்த விகடு, ஒரு நெலைக்கு மேல செய்யுறதுக்கு எதுவும்மில்லங்றதெ புரிஞ்சிக்கிட்டவெனப் போல செரின்னு அவுங்களோட உக்காந்து அவுங்க பேசுறதுக்கெல்லாம் ஆமாம் போடுறாப்புல பேச ஆரம்பிச்சாம். அவுங்க கொஞ்சம் கொஞ்சமா அவனோட மனநெலய மாத்துறாப்புல அவுங்கவுங்க வாழ்க்கையில நடந்த சம்பவத்தெ சொல்லி சொல்லி, கொஞ்ச கொஞ்சமா நடந்த சம்பவத்தெ ஒரு ஜோக்கா மாத்துற முயற்சியில எறங்குனாங்க. மனசுக்குள்ள இந்தச் சம்பவத்தோட வலியிருந்தாலும் இதெ அப்பிடி மாத்திச் சிரிக்கிறதெ தவுர வேற வழியும் தெரியல விகடுவுக்கு. நம்ம வாழ்க்கையில நடக்குறதெ வேறொருத்தம் வாழ்க்கையில நடக்குறதா நெனைச்சி சிரிச்சி முடிச்சிட்டா விசயம் முடிஞ்சது அவ்ளவுதாம். முடியாதவேம் வலியில சிரிக்கிறதெ தவுர அவ்வேம் வலிக்கு இந்த ஒலகத்துல வேற மருந்தென்ன இருக்கு? இதுல ரொம்ப அனுபவப்பட்டுத்தாம் வள்ளுவரு எழுதியிருப்பாரு போல, இடுக்கண் வருங்கால் நகுகன்னு.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...