கெளம்புறீயா? கேஸ்ஸப் போடவா?
செய்யு - 696
பரமுவோட அப்பா ஆர்குடி தாலுக்கா ஆபீஸ்
ரோட்டுல இருந்த டவுன் போலீஸ் ஸ்டேசனுக்குப் போயிச் சேந்தப்போ ஒரு ஆட்டோ நின்னிருந்துச்சு.
விகடு போன்ல சொன்னதெ கேட்டு ஒண்ணு ரண்டு வாத்தியாருமாருகளும் வந்து நின்னாங்க. அந்த
ஆட்டோவுல செய்யுவத் தூக்கிக் கொண்டாந்து ஏத்திக்கிட்டு இருந்தாங்க. செய்யு மயங்குன
நெலையில கெடந்தா. அதெப் பாத்ததும் விகடுவுக்கு கண்ணுல தண்ணிக் கொப்புளிச்சிக்கிட்டு
வந்துச்சு. கொட கொடன்னு அது பாட்டுக்குப் பொத்துக்கிட்டு ஊத்துற வானத்தெப் போல ஊத்துனுச்சு.
கண்ணு ரண்டுலயும் அருவிதாம் ஒடைஞ்சு ஊத்துதோங்றாப்புல இருந்துச்சு.
ஒடம்புக்கு முடியாத நெலையில பொம்பளைய பொம்பளை தூக்கணும்ன்னோ, ஆம்பளைய
ஆம்பளையத் தூக்கணும்ன்னோ அவசிமியல்ல. ஆன்னா பொம்பளெ போலீஸூங்க இருக்குற ஒரு ஸ்டேசன்ல
செய்யுவ ரண்டு ஆம்பளைங்கத்தாம் தூக்கியாந்து ஆட்டோவுல ஏத்துனாங்க. ஆட்டோ கெளம்புறதுக்குச்
சத்தம் போட்டுச்சு.
சுப்பு வாத்தியாரு வந்து எறங்குன விகடுவப் பாத்தாரு. "இதுக்குத்தாம்டாம்பீ!
வர வேண்டான்னு சொன்னேம். கேட்காம வந்து நிக்குதீயடாம்பீ!"ன்னு தலையில அடிச்சிக்கிட்டு
அப்பிடியே உக்காந்தாரு நல்லா நிமுந்து நின்ன மலெ ஒண்ணு சட்டுன்னு மண்ணோட மண்ணா சாய்ஞ்சாப்புல.
"ஆட்டோ இஞ்ஞ ஒரு நிமிஷம் கூட நிக்கக்
கூடாது. ஒடனே கெளம்பணும்!"ன்னு உள்ளாரேந்து வந்த ஒரு போலீஸ்காரரு வந்து வெளியில
சத்தம் போட்டாரு காது சவ்வ கிழிக்குற கோடையிடியப் போல.
"ஆட்டோ கெளம்பக் கூடாது. இஞ்ஞத்தாம்
நிக்கணும். ஏம் எந் தங்காச்சிக்கு இப்பிடியாச்சுன்னு சொன்னாத்தாம் ஆட்டோவ எடுக்க
முடியும்!"ன்னு விகடுவும் ஆவேசமா சத்தம் போட்டாம் பொத்துற காதையும் கிழிச்சிட்டுப்
போற சிவகாசி வெடியப் போல.
"யாரு இந்தப் பொண்ணோட அண்ணனா? யோவ்
இஞ்ஞ வாய்யா இந்த ஆளுகிட்டெ ஒரு கையெழுத்த வாங்கு!"ன்னு அந்த போலீஸ்காரரு உள்ள
இருந்த ஒரு போலீஸ்காரரக் கூப்புட்டாரு சீமெண்ணெய்ய ஊத்திப் பத்த வெச்சிக்கிட்டு எரியுறவேம்ங்கிட்டெ
தஞ் சாவுக்கு யாரும் காரணமில்லன்னு கையெழுத்துப் போடச் சொல்றாப்புல. உள்ளயிருந்த போலீஸ்காரரு
ஒரு பரீட்சை அட்டையில அச்சடிக்கப்பட்ட காயிதத்துல பால் பாண்ட் பேனாவுல என்னவோ எழுதியிருந்ததோட
ஓடியாந்தாரு. அதெ வாங்கி மின்னாடி நின்னுகிட்டு இருந்த போலீஸ்காரரு, "இதுல ஒரு
கையெழுத்தப் போட்டுட்டு எடத்தெ காலி பண்ணு!"ன்னாரு விகடுவெப் பாத்து நீயி வந்ததும்
நல்லதாத்தாம் போச்சுடாங்றாப்புல.
"நாம்ம யிப்போ கையெழுத்தப் போடணுமா?
ஆட்டோவக் கெளப்பிட்டுப் போவணுமா?"ன்னாம் விகடு பல்ல கடிச்சுக்கிட்டு ஆத்திரத்துல
கொதிச்சு எரியுறவனெப் போல.
"ரண்டுந்தாம். கேள்விக் கேக்காம கையெழுத்தப்
போட்டு ஒந் தங்காச்சியைக் கொண்டுப் போயி ஆஸ்பிட்டல்ல சேத்து காப்பாத்துற வழியப்
பாரு!"ன்னு சத்தம் போட்டாரு போலீஸ்காரரு தீப்பிடிச்சு எரியுறவேம் மேல பெட்ரோல்ல
வாரி வீசுறாப்புல.
"உள்ளார எந் தங்காச்சிக்கு என்ன நடந்ததுன்னு
தெரியாம நாம்ம ஆட்டோவ எடுக்க மாட்டேம். இதுல கையெழுத்தும் போட மாட்டேம்!"ன்னாம்
விகடு எரியுற பொணம் பொடைச்சுக்கிட்டு எழுந்திரிக்கிறாப்புல.
"எலே யம்பீ! கையெழுத்தப் போட்டுக்
கொடுத்துட்டு வாடாம்பீ! ஆட்டோவ எடுத்துக்கிட்டுப் போயி தங்காச்சியப் பாக்குற வழியப்
பாப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு உடைஞ்சு அழுத கொரல்ல. கடைசிச் சொட்டும் எரிஞ்சு
முடிஞ்சு அணையப் போற மெழுகுவர்த்தியப் போல இருந்தாரு அவரு. அழுதழுது அவரு கண்ணெல்லாம்
கன்றிப் போயி செவந்திருந்துச்சு.
சுத்தி நின்ன நாலைஞ்சு கரை வேட்டி கட்டுன
ஆளுங்க சுத்தி வந்த, "இந்தாரும்பீ! இத்து விவாதம் பண்ண வேண்டிய எடமில்ல. எதுவா
இருந்தாலும் பின்னாடிப் பாத்துப்போம். இப்போ மொதல்ல கெளம்புற வழியப் பாப்பேம்!"ன்னு
விகடுவெ சமாதானப்படுத்தப் பாத்தாங்க, வூடு எரியுறப்போ வூட்ட வுட்டு வெளியில வந்து தப்பிக்கப்
பாக்கணுமே தவிர, எரிக்கிற தீயிக்கிட்டெ ஞாயம் கேட்டுக்கிட்டு நிக்கக கூடாதுங்றாப்புல.
வந்து நின்னிருந்த வாத்தியாருமாருகளும் அதாங் சரிங்றாப்புல, “சார்! உணர்ச்சிவசப்படாதீங்க.
அதுக்கான நேரம் இதில்ல. இப்போ ஆவ வேண்டியதெப் பாப்பேம். இவுங்கள என்ன பண்டுறதுன்னு
பெறவு பாப்பேம்! உசுருக்குப் போராடுற நேரத்துல உசுர்த்தாம் பாக்கணும். நீதி ஞாயத்தையெல்லாம்
உசுரு இருந்தாத்தாம் பாக்க முடியும். கௌம்புற வழியப் பாப்பேம் மொதல்ல!”ன்னாங்க.
"யிப்போ நீயி ஆட்டோவக் கெளப்பிட்டுக்
கையெழுத்த வெச்சிட்டுக் கெளம்புலன்னா வெச்சுக்கோ ஸ்டேசன் மின்னாடி ரகளைப் பண்ணதா ஒன்னயும்
உள்ளாரத் தூக்கிப் போடுறாப்புல ஆயிடும்!"ன்னாரு போலீஸ்காரரு குனிய குனிய குட்டுற
சமத்காரனெப் போல.
அதே நேரத்துல உள்ளார நின்ன போலீஸ்காரவுங்க
சில பேரு வெளியில ஓடியாந்தாங்க. வெளியில நின்னுகிட்டு இருந்த போலீஸ்காரர சமாதானம்
பண்ணுறாப்புலப் பேசுனாங்க. "நீஞ்ஞ உள்ளப் போங்கய்யா! நாம்ம சைன வாங்கிட்டு ஆட்டோவ
அனுப்பி வுடுறேம்!"ன்னாங்க சாமர்த்தியமா பேசி நெலமைய சமாளிச்சு வுட்டுப்புடலாம்ங்றாப்புல.
"சீக்கிரம் பண்ணிட்டு உள்ள வாரணும்.
நாம்ம மறுக்கா வந்தா நடக்குறதே வேற!"ன்னு உருமுனாப்புல சொல்லிட்டு மீசைய ரண்டு
பக்கமும் முறுக்குனபடிக்கு அந்தப் போலீஸ்காரரு உள்ளாரப் போனாரு.
"அவரு அப்பிடித்தாம்பீ! நீஞ்ஞ ஒஞ்ஞ
தங்காச்சிய ஸ்டேசனுக்கு வந்தப் பெறவு பத்திரமா அழைச்சிட்டுப் போனதா இதுல ஒரு சைன வெச்சிடுங்க.
நாஞ்ஞ மேக்கொண்டு எந்தக் கேஸூம் யில்லாம அய்யாகிட்டெ சொல்லி சரிபண்ணி வுட்டுடுறேம்!"ன்னாங்க
அந்தப் போலீஸ்காரவுங்க தாளாளிச்சு வுடுறாப்புல.
"இந்தாரும்பீ! எதாச்சும் புகார்ரக்
கொடுக்குறாப்புல இருந்தா எம் பேர்ர எல்லாம் இதுலச் சேத்துப்புடாதேம்பீ! நாம்ம யிப்பத்தாம்
வேலையில சேந்தேம். சொன்னா கேக்க மாட்டேங்றானுவோ. காசிய கண்ட எடத்துலயும் கைய நீட்டி
வாங்கிடுறது. அதுக்கேத்தாப்புல ஒண்ணு கெடக்க பண்ணிட்டு மெரட்டுறது, பயமுறுத்துறதுன்னு
இதெ வேலையப் போச்சு!"ன்னாரு அதுல ஒரு போலீஸ்காரரு ஸ்டேசன்ல நடக்குற எதுவும்
தமக்குக் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லங்ற மாதிரிக்கு.
கரை வேட்டியோட நின்ன கட்சிக்காரங்க நாலு
பேரும் விகடுவெ நெருங்கி, "இப்பப் பெரச்சன பண்ண வாணாம். நமக்குத் தங்காச்சித்தாம்
முக்கியம். மொதல்ல அவுங்களப் பாப்பேம்பீ! அவுங்களப் பாத்துட்டு இவுங்கள உண்டு இல்லன்னு
அடிப்பேம். அதுல சைன வெச்சிட்டு வாஞ்ஞ. அதெல்லாம் அவுங்களுக்கான சேப்டி பார்மாலிட்டீஸ்.
ச்சும்மா மெரட்டுலாப்புற பேசுனாலும் ரொம்பபே பயந்துப் போயிக் கெடக்கானுவோ உள்ளார!
உள்ளார பயமில்லன்னா வெளியில ஏம் மெரட்டல் வருது பாரு! நெலமெ செரியானப் பெறவு இவனுங்கள
ஒரு பிடி பிடிப்பேம். இப்போ அதுக்கான நேரமில்ல!"ன்னாங்க அவுங்க எல்லாரும் ஒண்ணு
சேர்ந்து ஆபத்தான நேரத்துல ஆத்திரப்பட்டு நிக்காம புத்தியோட சட்டுன்னு ஒரு முடிவுக்கு
வந்துப்புடணும்ங்றாப்புல.
ஆட்டோக்காரரு மின்னாடி வந்து, "ஒண்ணு
வண்டியக் கெளப்ப வுடுங்க. யில்ல ஆளெ வுடுங்க. நாம்ம அடுத்தச் சவாரியப் பாக்கணும்!"ன்னாரு
சட்டுன்னு கடுப்படிச்சாப்புல.
"என்னண்ணே! ஒரு பொண்ணு ஒடம்புக்கு
முடியாம மயக்கமடிச்சிக் கெடக்குறப்போ இப்பிடிச் சொல்றீயளே! வெயிட்டிங் சார்ஜ் போட்டு
தர்றேம்ண்ணே!"ன்னாங்க கட்சிக்கார ஆளுங்க நயந்தாப்புலயும் அதே நேரத்துல கொரல ஒசத்துனாப்புலயும்.
"அதுக்கில்ல சார்! போலீஸ் ஸ்டேசன்
மின்னாடி இம்மா நேரம் ஆட்டோ நிக்கக் கூடாது. எதாச்சும் கேஸ்ன்னு ஆட்டோவப் பிடிச்சி
உள்ளாரப் போட்டுடுவானுவோ. பெறவு நம்மட ஆட்டோவத் தூக்கிக் காயிலாங் கடைக்குத்தாம்
போடணும். புரிஞ்சிக்கோங்க சார்!"ன்னாரு ஆட்டோக்காரரு அதுக்கு மேல அங்க நின்னா
ஆட்டோவோட உசுருக்கும் உத்திரவாதம் இல்லங்றாப்புல.
"இந்தாப்பா நீயி ஆட்டோவக் கெளப்பிக்கிட்டுக்
கவர்மெண்ட்டுப் பெரியாஸ்பத்திரிக்கிப் போ! வேற பிரைவேட்டு ஆஸ்பிட்டலுக்குப் போயிடாத.
நாளைக்கி கேஸ்ன்னு எதாச்சும் ஆனாலும் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியோட ஸ்டேட்டஸ்த்தாம் பேசும்!"ன்னாரு
கட்சிக்கார ஆளுங்கள்ல ஒருத்தரு அதாங் முடிவுங்றாப்புல உத்தரவெ போடுற தொனியில.
"அந்த அண்ணன் என்ன சொல்றார்ன்னு
சொல்லுங்க!"ன்னாரு ஆட்டோக்காரரு விகடுவெப் பாத்து அனுமதிங்றது கெடைக்க வேண்டிய
ஆளுங்கிட்டேயிருந்து கெடைக்கணுங்றாப்புல.
"யிப்போ யாரு சொல்றதும் கெடையாது.
நாஞ்ஞ சொல்றதுதாம். வண்டியக் கெளப்பிக்கிட்டுப் போயிட்டே இரு. இந்தாருங்க வாத்தியாரே
பொண்ணோட ஆட்டோவுல ஏறுங்க. நாஞ்ஞ தம்பிய பின்னாடியே வண்டியில வெச்சிக்கிட்டுக் கொண்டாந்துக்கிட்டே
இருக்கேம்!"ன்னாங்க அந்தக் கட்சிக்கார ஆளுங்க சுப்பு வாத்தியார்ரப் பாத்து. அதுக்கு
மேல அவுங்க யாரையும் கேக்காம, சுப்பு வாத்தியார்ர பிடிச்சி ஆட்டோவுக்குள்ள ஏத்துனாங்க.
"ரைட்! ரைட்! கெளம்பு!"ன்னு ஆட்டோவக் கெளப்பி வுட்டாங்க. விகடுவப் பாத்து,
"மொதல்ல சைன்ன வெச்சிட்டு எஞ்ஞப் பின்னாடி வாஞ்ஞ! நமக்கு யிப்போ தங்காச்சித்தாம்
முக்கியம்! ஒஞ்ஞ வயசுக்கு இதெல்லாம் புரியாது. நாஞ்ஞ நெறைய அனுபவப்பட்ட ஆளுங்க. எதெதெ
எப்பிடி கையாளணுங்றது எஞ்ஞளுக்குத்தாம் தெரியும். ஒண்ணும் யோஜனெ வாணாம். சொல்றதெ கேளுங்க
இப்போ!"ன்னாங்க அந்தக் கட்சிக்கார ஆளுங்க.
“சார்! அவுங்க சொல்றதுதாம் செரி! யோஜிக்காதீங்க.
யோஜிக்குறதுக்குல்லாம் நேரமில்ல. கேக்குறபடி சைன வெச்சிக்கிட்டு வாஞ்ஞ. தங்காச்சியப்
பாக்கணும். இதையெல்லாம் பெறவு எப்பிடி வாணும்ன்னாலும் டீல் பண்ணிக்கிடலாம்!”ன்னாங்க
சுத்தி நின்ன வாத்தியாருமாருகளும்.
அந்த எடத்துலயே அணுகுண்டெப் போல வெடிச்சு
செதறணும், இல்லன்னா அந்த எடத்தையெ அணுகுண்டுப் போட்டதெப் போல ஆக்கணும்ன்னு நின்னவேம்
இப்போ சிம்மெ கழட்டுன செல்போனப் போல நின்னாம். எல்லாரும் சொல்றதெ கேக்குறதெ தவுர வேற
வழி தெரியில விகடுவுக்கு.
விகடு அந்தப் போலீஸ்காரரு நீட்டிட்டு
இருந்த காயிதத்துல கையெழுத்த வெச்சிட்டு, "என்னத்தாம் நடந்துச்சு?"ன்னாம்
இப்போ அந்தக் கட்சிக்கார ஆளுகளப் பாத்து.
"அதெ பேசுறதுக்கு நேரமில்ல. மொதல்ல
ஆட்டோவப் பாலோ பண்ணிப் போவேம். போலீஸ் கேஸ்ன்னாவே அஞ்ஞ ஆஸ்பத்திரியில அட்மிஷன சமயத்துலப்
போட்டுத் தொலைய மாட்டானுவோ. சத்தம் போட்டாத்தாம் காரியம் ஆவும்!"ன்னாரு கட்சிக்கார
ஆளுங்கள்ல செவப்பா இருந்தவரு அடுத்ததா நடக்கப் போறதெ சூசகமா சொல்றதெப் போல.
ஆக்ரோஷமாப் பேசிட்டு உள்ளாரப் போயிருந்த
போலீஸ்காரரு இப்போ வெளியில வந்து, "ன்னா காரியம் ஆயிடுச்சா? ஒரு பயெ இஞ்ஞ நிக்கக்
கூடாது. நின்னா உள்ளப் பிடிச்சிப் போட்டுருவேம் பாத்துக்கோ!"ன்னாரு சத்தமா திடீர்ன்னு
இடிஞ்சு வுழுவுற பாழடைஞ்ச கட்டடத்தெப் போல.
"யோவ் ச்சும்மா நிறுத்துய்யா! வேலயே
யில்லாம அடிச்சிப்புடுவேம் பாத்துக்கோ. என்னவோ மனசாட்சியே யில்லாம பேசுறே? நாமளும்
பாத்துக்கிட்டே இருக்குறேம்? ன்னா நெனைச்சிக்கிட்டு இருக்கே? குடும்பத்துல இருக்குறவம்தானே
நீயி? ஒமக்கு குடும்பம் யில்லியா? பொண்ணு புள்ளியோ யில்லியா? யக்கா தங்காச்சியோட
பொறந்த நீந்தானே? அதுகளுக்கு யிப்பிடி ஒரு நெலைன்னா யிப்பிடித்தாம் பேசுவீயா? போலீஸ்காரன்னா
அப்பிடில்லாம் ஒங் குடும்பத்துக்கு ஆவாதுன்னு நெனைக்காதே. யிப்போ நடந்ததெ வுட பயங்கரமா
நடக்கும் பாத்துக்கோ!"ன்னார செவத்த ஆளு வெடி வெச்சிருக்குற குடோனுக்கு நடுவுல
போயி நெருப்ப வெச்சிட்டு வர்றதப் போல.
சரவெடியில திரியோட ஒரு மொனையில பத்த வெச்சா
அடுத்தடுத்த வெடிங்க வெடிக்கும்ங்றதெ போல, "எஞ்ஞ ஆளுங்களக் கொண்டாந்து ஸ்டேசன்
மின்னாடி நிறுத்துனா ச்சும்மா அப்பிடியே ஸ்டேசன்ன செங்கல் செங்கலா பிரிச்சிடுவானுங்கப்
பாத்துக்கோ! ன்னா பொம்பளப் புள்ளீய அரஸ்ட் பண்ணிக் கொண்டாந்ததோட, அவளெ அடிச்சி
மயக்கம் போட வெச்சி, நாக்காலியிலேந்து உருட்டிக் கீழே தள்ளி வுட்டுப்புட்டு ன்னா அராஜகம்
பண்ணிட்டு யிப்போ வந்துப் பேசுறே? பொம்பளைய பொம்பள போலீஸ்தானய்யா வெசாரிக்கணும்.
நீயி ஏம்ய்யா வந்து வெசாரிச்சே? ரண்டு பொம்பள போலீஸூம் ரண்டு மூலப் பக்கமா நிக்குது.
நீயி என்னவோ பொம்பளெ பொலீஸ்ஸப் போல வந்து வெசாரிக்கிறே? எல்லாத்தையும் நேர்ல பாத்த
சாட்சி நாம்ம பாத்துக்கோ. கோர்ட்டுல ஏறிச் சொன்னேம்ன்னா வெச்சுக்கோ வேல இருக்காதுப்
பாத்துக்கோ! இப்பவே வாணாலும் மனித உரிமெ கமிஷனுக்குப் புகார்ர அனுப்புவேம். போனாப்
போச்சேன்னுப் பாத்தா எகுறுறீயே!"ன்னாரு கொஞ்சம் குண்டா இருந்த கட்சிக்கார ஆளு
ஒருத்தரு.
"இந்தாரு நீயி என்ன பெரிய கட்சிக்கார
மசுரா வாணாலும் இருந்துக்கோ. அதெப் பத்தி நமக்கு ஒண்ணுமில்ல. ரிசர்வ் போலீஸ்ஸ கொண்டாந்து
நிறுத்துனேம்ன்னா வெச்சுக்கோ, ச்சும்மா பீஸ் பீஸ்ஸா கிழிச்சிடுவேம் பாத்துக்கோ. அந்தப்
பொண்ணு ச்சும்மா நடிக்குதுய்யா மயக்கம் வந்தாப்புல. அம்மா தெகிரியமா பேசுற பொண்ணு
எப்பிடிய்யா திடீர்ன்னு மயக்கமாவும் சொல்லு! பேசுனா ஞாயமா பேசு. ல்லன்னா கடுப்பாயிடுவேம்
பாத்துக்கோ!"ன்னாரு போலீஸ்காரரு எரிமலெ மேல வெடியக் கொளுத்திப் போட்டுப் பூச்சாண்டி
காட்டாதேங்றாப்புல.
"இந்தா போலீசு! இதெல்லாம் வெச்சுக்காதே.
நீயி நாற்காலியில உக்காந்தபடியே பின்னாடி தள்ளி வுட்டா மயக்கமாவாம ன்னத்தா பண்ணும்?
குடும்பப் பொண்ணுய்யா அத்து. மின்ன பின்னாடி போலீஸ் ஸ்டேசன்ல்லாம் பாக்காதப் போண்ணு.
அதெக் கொண்டாந்து ஸ்டேசன்ல வெச்சி வெசாரிக்கிறங்ற பேர்ல மெரட்டுன்னா அத்து கோவமாத்தாம்
பேசும். அத்துக் கோவமா பேசுனா நீயி நாற்காலியப் பிடிச்சிப் பின்னாடி தள்ளி வுட்டா
மயக்கமாத்தாம் ஆவும். உசுரு போவலங்றதெ ஒந் நல்ல நேரமா நேனைச்சுக்கோ! நீயி ன்னா வேல
செஞ்சிட்டு இந்த ஸ்சேன்லயே இருந்திடுவீயா? வெளியில வந்துத்தானே ஆவணும். யோவ் போலீஸ்காரன்னா
ரண்டு உசுருன்னு நெனைச்சிக்கிட்டீயா? ஒத்த உசுருதாம் பாத்துக்கோ. யாரு எடுத்தாலும்
போயிடும். போலீஸ் உசுருன்னா போவாம நின்னுடும்ன்னு நெனைச்சிக்கிட்டியா? ஒழுங்கா வூடு
போவணுங்ற நெனைப்பு, உசுரோட வூடு போவணுங்ற நெனைப்பு யிருந்தா ஒழுங்கு மருவாதியா ஸ்டேசன்ல
உள்ளாரப் போயி உக்காந்துக்கோ!"ன்னாரு குண்டு ஆளு எரிமலைக் கொழம்பெ அள்ளி வாயிக்
கொப்புளிச்சுத் துப்புறாப்புல.
"ன்னா கட்சிக்காரன்னா இஷ்டத்துக்கு
மெரட்டுவீயா? உள்ளார தூக்கி வெச்சி வயித்துல இருக்குற பீய்ய மிதிச்சே வெளியில எடுத்தேம்ன்னா
வெச்சுக்கோ அப்பத் தெரியும்!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு லத்திய உள்ள வுட்டு
ஆட்டுன்னா கொடலு வெளியில வந்து வுழுவும்ங்றாப்புல.
"மச்சாம்! வுடுடா யன்னெய. இன்னிக்கு
ரண்டுல ஒண்ணுத்தெ பாத்துடறேம்!"ன்னாரு ஒடனே ஒல்லியா இருந்த ஒருத்தரு அந்தப் போலீஸ்காரரெப்
பாய்ஞ்சாப்புல. அவரு ஒடம்புக்கும் அந்தக் கொரலுக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போவல.
இருந்தாலும் செவப்பான ஆளும், குண்டான ஆளும் அவர்ர பிடிச்சிக்கிடுறாப்புல ஆயிடுச்சு.
ஒல்லியான ஒடம்புல அவ்ளோ சுல்லாப்பான வேகம். சுத்தி நின்ன மித்த போலீஸ்காரங்க அந்தப்
போலீஸ்காரர, "உள்ளார வாங்கய்யா!"ன்னு கையப் பிடிச்சி அழைச்சிட்டுப் போனாங்க.
அதுல ஒரு சில போலீஸ்காரவுங்க வெளியில வந்து, "பெரச்சன வேண்டாம் சார்! மொதல்லப்
போயி அந்தப் பொண்ண பாருங்க. இவரு எப்பவுமே இப்பிடித்தாம். இவரு மேலயே ஏகப்பட்ட கம்ப்ளெய்ண்டு
இருக்கு. ஏதோ சர்க்கிள சமாளிச்சி ஓட்டிக்கிட்டு இருக்காரு. நீஞ்ஞப் போயி ஆக வேண்டியதெப்
பாருங்க. இப்பவே பயந்துப் போயித்தாம் இருக்காரு. கெத்த வுடக் கூடாதுன்னு பேசிக்கிட்டு
நிக்குறாரு. இந்நேரத்துக்கு எஞ்ஞ ஆளுங்கள்லயே எவனாச்சும் உளவுத்துறை ஆளுகளுக்குப் போட்டு
வுட்டுருப்பானுவோ. கெளம்புங்க சார்! மேல மேல பெரச்சனெ வாணாம். பெரச்சனெ பண்ணா அத்து
வேற மாதிரிப் போயிடும்!"ன்னாங்க அந்த மித்தப் போலீஸ்காரவுங்க ஒடைப்பெடுத்த எடத்துலப்
போயி அடைக்குறதெ வுட்டுப்புட்டு மதுவாங்கரெ வழியா ஓடுற தண்ணியப் பாத்துட்டு நிக்குறதுல
என்னா அர்த்தம் இருக்குங்றாப்புல.
"தம்பீ! சத்தத்தெ நிறுத்து! மொதல்ல
இப்போ பாக்க வேண்டியத தங்காச்சியைத்தாம். அதெ பாத்து முடிச்சிட்டு இதெ என்ன வாணாலும்
பண்ணிக்கிடலாம். கெளம்பு. கெளம்பு. சத்தத்தெ வைக்காதே. எட்றா தம்பி வண்டிய!"ன்னு
ஒல்லியான அந்த ஆளெ அசெமடக்கி வுட்டுப்புட்டு ஆளாளுக்குப் போயி வண்டிய எடுத்தாங்க.
எல்லாரோட வண்டியும் சொல்லி வெச்சாப்புல யமாஹா கிரக்ஸ்ஸாவே இருந்துச்சு. அந்த வண்டியோட
சத்தமெ கொஞ்சம் வித்தியாசமாத்தாம் இருக்கும் வெங்கல குண்டானுக்குள்ளெ இரும்புக் குண்டெ
போட்டு உருட்டுறாப்புல. வண்டிய கௌப்புற அந்தச் சத்தத்தெ கேட்டப்போ அந்தச் சத்தத்துக்கு
மின்னாடி வேறெந்த சத்தமும் நிக்க முடியாதுங்றாப்புல இருந்துச்சு.
விகடுவெ செவப்பா இருந்த ஆளு வண்டியில பின்னாடி ஏறச் சொன்னாரு. விகடு
பரமுவோட அப்பாவப் பாத்தாம். "நீயி ஏறிப் போ! நாம்ம பின்னாடியே வர்றேம்!"ன்னாரு
அவரு உதவிக்கு வர்றவங்கள கையோட கெட்டியா பிடிச்சுக்கோங்றாப்புல.
"நீஞ்ஞ யிப்பிடியே வூட்டுக்குக் கெளம்புங்க.
நாம்மப் பாத்துக்கிறேம்!"ன்னாம் விகடு பரமுவோட அப்பாவுக்கு இனுமே ஏம் செருமத்தெ
கொடுக்கணும்ன்னு.
"நல்ல கதெயெக் கெடுத்தே? நாம்ம ஆஸ்பத்திரி
வரைக்கும் வந்துப் பாத்துட்டுக் கெளம்புறேம்!"ன்னு பரமுவோட அப்பாவும் வண்டியக்
கெளப்பிக்கிட்டு பின்னாடியே பின்தொடர்ந்தாப்புல வர்ற நின்னாரு.
ட்ருட் ட்ட்டுன்னு ஒவ்வொரு வண்டியும்
கெளம்புனுச்சு. விகடுவுக்காக அங்க வந்து நின்ன ஒண்ணு ரண்டு வாத்தியாருமாருகளும் பின்னாடியே
கெளம்பி வந்தாங்க. ஒவ்வொரு வண்டியும் ஒண்ணு பின்னாடி ஒண்ணு போறதெப் பாக்குறப்போ ரெண்டு
சக்கர வாகனங்கள வெச்சிச் செஞ்ச ரயிலு வண்டி ஓடுறாப்புல இருந்துச்சு.
*****
No comments:
Post a Comment