23 Jan 2021

விசாரணைன்னு அழைச்சிட்டுப் போயிருக்காங்க!

விசாரணைன்னு அழைச்சிட்டுப் போயிருக்காங்க!

செய்யு - 695

            பள்ளியோடம் போன பெறவும் விகடுவுக்கு வூட்டுல நடந்தச் சம்பவங்க அலை அலையா மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டெ இருந்துச்சு. சட்டுன்னு பாடத்தெ நடத்துற மனநெலைக்கு வர்ற முடியல. மத்தியானம் வரைக்கும் இடை இடையில போனப் பண்ணிக்கிட்டுக் கெடந்தாம். வூட்டுலயும் யாரும் வெசாரணைக்குல்லாம் வரலன்னு சொல்லிச் சொல்லி அலுத்துச் சலிச்சிப் போயிட்டாங்க. மத்தியானச் சாப்பாட்டெ சாப்புட்டு முடிச்சு வரைக்கும் இதெ வேலையா கெடந்தாம் அவ்வேம். ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குறாப்புல இருந்துச்சு அவனோட பயமும் சந்தேகமும். கொளுந்து வுட்டு எரியுற தீயி அதுவா எரிஞ்சு அடங்குறாப்புல ரொம்ப நேரமாச்சு அவ்வேம் மனசுக்குள்ள எழுந்த பயமும் சந்தேகமும். அதுக்குப் பெறவுப் பள்ளியோடத்துல இருந்த வேல அலமலப்புல மனசு போவ ஆரம்பிச்சிது. அந்த அலமலப்புல இடையிடையில போன் பண்ணாம விட்டுட்டாம். பள்ளியோடம் வுட்டதும்தாம் வூட்டு ஞாபவம் வருது. போன் பண்ணி ரண்டு நிமிஷத்தெ ஏம் வீணாக்கணும்ன்னு கோட்டகத்துலேந்து வேகு வேகுன்னு சைக்கிள மிதிச்சுக்கிட்டு திட்டைக்கு வூடு வந்துச் சேந்தாம். வூடு வந்து சேந்தா வூட்டுல வெங்குவும், ஆயியும் அழுதுகிட்டு உக்காந்திருந்துச்சுங்க. ஏம் அழுகுறாங்கன்னு அவ்வேம் யோசிக்கிறதுக்குள்ள, "தங்காச்சியப் போலீஸ்ல வந்து அழைச்சிட்டுப் போயிட்டாங்க!"ன்னுச்சு வெங்கு நெஞ்சுல கைய அடிச்சிக்கிட்டு. அதோட தலெ தொள தொளன்னு ஆடுது பிடிமானம் இல்லாத கொட்டகெ காத்துல ஆடுறாப்புல.

            "ஏம்மா நமக்கு ஒரு போன அடிக்க வேண்டித்தானே?"ன்னாம் விகடு தீத்தாங்கொட்டையெ தேய்ச்சு தொடையில வெச்சா அனிச்சையா சட்டுன்னு கத்துறவனெப் போல.

            "எஞ்ஞடா எல்லா போனையும் புடுங்கி நிப்பாட்டிப்புட்டாங்க. யாரும் யாருக்கும் போன பண்ணக் கூடாதுன்னு மெரட்டிப்புட்டாங்க. இஞ்ஞ வடவாதி ஸ்டேசன்லத்தாம் வெசாரணைன்னு அழைச்சிட்டப் போனாங்க. நாம்ம கெளம்பக் கூடாதுன்னு தல தலயா அடிச்சிக்கிட்டெம். ஒந் தங்காச்சிக்கிட்டெ யண்ணம் சொன்னபடிக்குப் பாயெ எடுத்துப்போட்டு படுடீன்னா சொன்னதுக்குக் கேக்கலடாம்பீ! அவ்வே சொன்னது போலவே மங்கம்மா சபதம் பண்டாப்புல செஞ்சிப்புட்டா. நாம்மப் போயி ஞாயம் கேக்குறேம்ன்னு கெளம்பி மின்னாடி நிக்குறா. ஆம்பள போலீஸூ, பொம்பள போலீஸ்ன்னு ஏழெட்டுப் பேரு இருக்கும்டா!"ன்னுச்சு வெங்கு கட்டம் கட்டுனதுக்குப் பெற்பாடு தப்பிக்கிறதுக்கு எங்கடா வழியிருக்குங்றாப்புல.

            "அப்பா கூடவா போவ வாணாம்ன்னு தடுக்கல?"ன்னாம் விகடு சட்டுன்னு அப்பங்காரரு ஞாபவம் வந்தாப்புல.

            "ஒந் தங்காச்சி இப்பிடி பண்ணுறப்பப் பாவம் அவரு என்னடா பண்ணுவாரு? செரின்னு பொண்ண காபந்துப் பண்ணணும்மேன்னு கெளம்புறாரு. நாமளும் கெளம்புறேம். அத்து என்னடா வூட்டச் சுத்தி கொல்லப் பக்கம் முன்பக்கம்ன்னு போலீஸ்ஸ நிப்பாட்டி வெச்சி வூட்டுக்குள்ள நொழையுறாங்க. நாம்ம ன்னடா அப்பிடி தப்பிச்சா ஓடிடப் போறேம்? என்னவோ கொலக் குத்தம் பண்ணுறவங்களப் பிடிக்குறாப்புல பிடிச்சிட்டுப் போவ நிக்குறாகு. இவ்வே என்னமோ தெகிரியமா கெளம்பிப் போவ நிக்குறா! என்னத்தெ சொல்ல! நாமளும் ஓடிப் போயி ஜீப்புல ஏறுனேம். வடவாதி ஸ்டேசன்லத்தாம் வெசாரணைன்னாங்க. அவரு அப்பாரு வண்டியில வந்தாரு பின்னாடியே. அதெ நம்பித்தாம்டாம்பீ செரி இஞ்ஞத்தானேன்னு நம்பிப் போனாக்கா அஞ்ஞ கொஞ்ச நேரம் வெச்சிருந்து ஆர்குடிக்குக் கொண்டுட்டுப் போவ நிக்குறாக!"ன்னு சொல்லி பெருமூச்சு வுட்டுச்சு வெங்கு. அத்துப் பேச பேச தொண்டையெ அடைச்சிக்குது. கொரலு கமறுது. ரொம்பவே தடுமாறுது. விகடு அம்மாக்காரியோட மொகத்தப் பாத்துக்கிட்டெ நின்னாம். இருந்தாலும் அத்துப் பாட்டுக்குப் பேசுது.

            "நாம்ம செமத்தியா சத்தம் போட்டேம்டாம்பீ! நீஞ்ஞல்லாம் நல்லாவே இருக்க மாட்டீயேன்னு. இப்பிடி இஞ்ஞ வெசாரிக்கிறதா சொல்லிட்டு நம்பிக்கெ தூரோகம் பண்ணுறாப்புல வேற எஞ்ஞயோ அழைச்சிட்டுப் போறீயோளேன்னு! ஒடனே ரண்டு பொம்பள போலீசுக வந்து நம்மள பிடிச்சிக்கிட்டுச் சத்தம் போடாதேன்னு வாயை அமுக்குதுங்க. அப்பவும் நாம்ம வுடலடாம்பீ! ஒம் குடும்பம், கொழந்தெ குட்டியெல்லாம் நாசமா போவன்னு சொன்னத்துக்குப் பெறவுத்தாம் பயந்துப் போயி அப்பிடில்லாம் சொல்லாதேன்னு சித்தெ பிடிய வுட்டுச்சுங்க. ச்சும்மா வெசாரணத்தாம்ன்னும், வெசாரிச்சிட்டு அனுப்பிடுறேம்ன்னும் சொல்லித்தாம் ஆர்குடிக்குக் கொண்டுட்டுப் போறதா சொன்னாவோ. செரின்னா அப்பாரு வண்டிய அஞ்ஞயேப் போட்டுக்கிட்டு ஒந் தங்காச்சியோட ஜீப்புல ஏறிப் போறாவோ! நம்மளே வூட்டுக்குக் கெளம்பிப் போவச் சொன்னாவோ. அஞ்ஞயிருந்து என்ன பண்ணுறதுன்னு புரியாம ஜீப்புக்குப் பின்னாடியே கொஞ்சம் ஓடிப் பாத்து ஒண்ணும் பண்ண முடியாம நடந்தே வூடு வந்துச் சேந்தேம்டாம்பீ!"ன்னுச்சு வெங்கு. அதெ சொல்லி முடிச்சதும் கண்ணுலேந்து தண்ணித் தண்ணியா பொத்துக்கிட்டு ஊத்துறாப்புல ஊத்துது.

            "கிராமத்துலேந்து யாருமே வரலியா?"ன்னாம் விகடு தழுதழுத்துப் போன ஒடைஞ்ச கொரல்ல.

            "ஊரு பொம்பளைகளே தெரண்டு வந்துப்புட்டாக. போலீஸ்காரவுக வெளியில நின்னுகிட்டு யாரையும் உள்ள வுட மாட்டேங்றாக. யாராச்சும் எதுனாச்சும் பேசுனாலும், உள்ள வந்தாலும் அவுங்களயும் கேஸ்ஸூப் போட்டு அரஸ்ட் பண்ணிடுறதா மெரட்டுறாக. பரமுவோட யம்மா திமிறிக்கிட்டு வூட்டுக்குள்ள உள்ளார வாரப் பாக்குறாங்க. ரண்டு பொம்பளெ போலீசுக வெளியில நின்னுகிட்டு அவுகள லத்தியால அந்தாண்ட தள்ளுறாக. பொம்பளெ சனங்க எல்லாம் சத்தப் போடுது. சத்தம் வெச்சா அவுகளெ அரெஸ்ட் பண்ணிப்புடுவேம்ன்னு மெரட்டுறாக போலீசுக. யாருடாம்பி என்னத்தெ பண்ண முடியும்? நீயி சொன்னதுதாம் செரி. அவளெ எங்காச்சிம் அனுப்பிருக்கணும். யில்ல இவளாச்சும் நோவு கண்டாப்புல படுத்துக் கெடந்திருக்கணும். எதெயும் பண்ணல. நமக்கு ன்னா பயம்ன்னா அவனுவோ வடவாதின்னு சொல்லி ஆர்குடிக்கு அழைச்சிட்டுப் போனாப்புல, ஆர்குடின்னு சொல்லி வேற எங்காச்சிம் அழைச்சிட்டுப் போனாக்கா என்னாத்த பண்ணுறதுன்னுத்தாம்!"ன்னு கையி ரண்டையும் தலையில வெச்சுக்கிட்டு ஓன்னு கதறி அழுவ ஆரம்பிச்சுச்சு.

            "நீஞ்ஞ சீக்கிரமா கெளம்புங்க! கௌம்பிப் போயி என்னா ஏதுன்னு பாருங்க! அத்தைய நாம்மப் பாத்துக்கிடுறேம்!"ன்னா ஆயி அழுதழுது கம்மிப் போன கொரல்ல. என்ன பண்டுறதுன்னு புரியாம விகடு வூட்டுக்கு வெளியில வந்தாம். அவ்வேம் வந்த சைக்கிள்தாம் வெளியில கெடந்துச்சு. அதெ எடுத்துக்கிட்டா ஆர்குடி வரைக்கும் போறதுன்னு நெனைச்சாம். அந்த நேரத்துல சரியா பரமுவோட அப்பா டிவியெஸ் எக்செல்ல வேகமா வந்து நின்னாரு. "இப்பதாம்டா சேதி கேள்விப்பட்டேம். திருவாரூரு வரைக்கும் போயிருந்தேம். வந்ததும் சேதி இன்னதுன்னாவோ. கெளம்பியாந்துட்டேம். உக்காரு கெளம்புவேம்!"ன்னாரு காட்டாத்து வெள்ளத்துல தத்தளிச்சுக்கிட்டுப் போறவனெ ஹெலிஹாப்டர்லேந்து கயித்தெ தூக்கி வீசி காப்பாத்துறதெப் போல. விகடு சட்டுன்னு தொத்திக்கிட்டு ஏறிக்கிறவனெப் போல பின்னாடி ஏறி உக்காந்தாம்.

            "ஒண்ணும் கவலப்படாத! நம்ம ஊரு ஆளுங்க நாலைஞ்சுப் பேருங்க அஞ்ஞப் போயிருக்குங்க. இப்பத்தாம் போன் பண்ணிக் கேட்டேம். ஆர்குடி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்குத்தாம் கொண்டுட்டுப் போயி வெசாரிச்சுக்கிட்டு இருக்குறதா சொன்னாவோ. ராத்திரிக்குள்ளார தங்காச்சிய வூடு கொண்டாந்துச் சேத்துப்புடுவேம்! ஒண்ணுத்துக்கும் கவலெபடாதே நீயி! குறிப்பா பதற்றம் ஆவாதே. எதுவா இருந்தாலும் பாத்துக்கிடலாம்!"ன்னாரு பரமுவோட அப்பா எதுவா இருந்தாலும் சமாளிப்போம்ங்றாப்புல. விகடு பின்னாடி உக்காந்துப் போனபடியே அவனுக்குத் தெரிஞ்ச வாத்தியாருமாருகளுக்குப் போன அடிச்சு நடந்த சம்பவத்தெ சுருக்கமா சொல்லி ஆர்குடி டவுன் ஸ்டேசனுக்கு வந்துப்புடுங்கன்னு கேட்டுக்கிட்டாம். அவனோட நெலமைய புரிஞ்சிக்கிட்டவங்களா அவுங்க எல்லாரும் கெளம்பி ஆர்குடி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்துப்புடுறதா சொன்னாங்க.

பரமுவோட அப்பா டிவியெஸ் எக்செல்ல வேகமாத்தாம் போனாரு. போற வேகத்துல வண்டியோட ஒதறல் கடுமையாத்தாம் இருந்துச்சு. ஆன்னா விகடுவுக்கு அதெ வுட வேகமா போவணும் போல இருந்துச்சு.

            "போலீஸ் கூப்புட்டாங்கன்னு மட்டும் ஒத்தையா கெளம்பிப் போயிடக் கூடாதுடா! அடிச்சே கொன்னாலும் கொன்னதுதாம். ஆன்னா நீயி பயப்படாதே. நாலைஞ்சுப் பேரு நம்ம ஆளுவோ ஜீப்ப பாலோ பண்ணிட்டுத்தாம் போயிருக்காக. முக்கியமா நீயி பதற்றம் ஆவாதே. ஏம்டா நேத்திக்கு அப்பிடிச் சம்பவம் நடந்திருக்குன்னு ஊர்ல யாருகிட்டாச்சும் சொல்லணுமா இல்லையா? நீஞ்ஞப் பாட்டுக்குப் பேயாம வூட்டுக்குள்ள இருந்துக்கிட்டா யாருடா என்னத்தெ பண்ணுறது? யாருக்குடா வெசயம் தெரியுது? தெரிஞ்சாத்தானே எதாச்சும் பண்ணி வுடலாம். நேத்தி ஒந் தங்காச்சி வக்கீல செருப்பால அடிச்சதுக்கு ஆர்குடியே சிரிச்சிக் கெடக்குது. அதெ எல்லாத்தியும் நாஞ்ஞளா கேள்விப்பட்டுல்ல தெரிஞ்சிக்கிட வேண்டிதா இருக்கு! நாங்களால்ல ஓடியாரா வேண்டிருக்குது!"ன்னாரு பரமுவோட அப்பா எல்லாத்தையும் ஒத்தையாவோ சொத்தையாவோ சமாளிச்சுப்புட முடியாதுங்றாப்புல.

            "இந்த அளவுக்கு மோசமா நடக்கும்ன்னு நாம்ம எதிர்பாக்கல!"ன்னாம் விகடு தனக்குள்ள நேத்தியிலேந்து இருந்த பயத்தையும் சந்தேகத்தையும் மறைச்சுக்கிட்டுப் பேசுறாப்புல.

            "ஏம்டா அறிவுக் கெட்டவனே? வக்கீலப் போயி செருப்பால அடிச்சா அவ்வேம் சும்மா இருப்பானா? அவனுக்குன்ன சங்கம் இருக்கு, பார் கெளன்சில் இருக்கு! பெரச்சனெ பண்ணாம இருப்பானா? அந்த அறிவு கூடவா கெடையாது? எல்லாத்தையும் ஒஞ்ஞளுக்குள்ளயே வெச்சிச் சரி பண்ணிப்புடலாம்ன்னு நெனைச்சிடாதே. நாலு பேரு தயவும் வேணுந்தாம். அப்பத்தாம் எதுவா இருந்தாலும் சரி பண்ண முடியும்!"ன்னாரு பரமுவோட அப்பா ஊசி மொனையில வேகமா மோதிக்கிட்டு அது குத்துதுன்னு சொல்லக் கூடாதுங்றாப்புல.

            "ஒடனே வக்கீலுக்குத்தாம் போன்ன பண்ணணும்! பண்ணுடா ஒஞ்ஞ வக்கீலுக்கு!"ன்னாரு பரமுவோட அப்பா அடுத்ததா ஆவ வேண்டிய பண்டுடாங்றாப்புல. அப்போத்தாம் விகடுவுக்கு வக்கீலுக்குப் போனப் பண்ணணுங்ற நெனைப்பே வந்துச்சு. இருந்த பதற்றத்துல மூளெ சரியா வேல செய்ய மாட்டேங்றது அவனுக்குப் புரிஞ்சது. வக்கீல் திருநீலகண்டனுக்குப் போன போட்டாம் விகடு. ரண்டு மொறைப் போனைப் போட்டும் அவரு போன எடுக்கல. மூணாவது மொறைத்தாம் எடுத்தாரு. எடுத்த ஒடனே விசயத்துக்கு வந்து விகடு பேச ஆரம்பிச்சாம்.

            "போலீஸ்ல வந்து தங்காச்சிய அரஸ்ட் பண்ணிட்டுப் போயிருக்காங்க. நீஞ்ஞ அவசரமா ஆர்குடி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த ஒதவிப் பண்ணணும்!"ன்னாம் விகடு ஒட்டுமொத்தமா ஒடைஞ்சு வுழுந்தவெனப் போல.

            "இப்போ வர முடியாதுங்களே! இங்க திருவாரூர்ல நமக்கு முக்கியமான சில வேலைங்க இருக்குங்களே!"ன்னு வக்கீலு யாரோ சம்பந்தமே இல்லாத ஒருத்தர்கிட்டெ பேசுறதெப் போல பேசுனாரு.

            "யய்யா! நாஞ்ஞ ரொம்ப நெருக்கடியில இருக்கேம். நீஞ்ஞ வந்தாத்தாம் மேக்கொண்டு ஜாமீன் எடுக்கணுமா? என்னாங்றது எஞ்ஞளுக்குப் புரியும். அதெ எப்பிடிச் செய்யணுங்றது கூட எஞ்ஞளுக்குத் தெரியாது. தயவு பண்ணி இந்த ஆபத்தானே நேரத்துல நீஞ்ஞத்தாம் வந்து தொணைக்கு இருக்கணும்!"ன்னாம் விகடு நடுக்கடல்ல தெசை தெரியாம தவிக்கிறவனெப் போல.

            "நாம்ம காலங்காத்தாலயே ஒங்களுக்குப் போன அடிச்சிச் சொல்லிட்டேம். நீங்க தும்ப விட்டுப்புட்டு வாலைப் பிடிக்க நெனைச்சா நாம்ம ஒண்ணும் பண்ண முடியாது. வேணும்ன்னா நாளைக்கு வர்றேம். நீங்க ஸ்டேசன்லப் போயி பாத்துட்டு போன அடிங்க. நம்மாள இங்க இருந்தபடியே ஒங்களுக்கு அங்க என்ன செய்ய முடியும்ன்னு பாக்குறேம்."ன்னாரு வக்கீல் போன்ல பேசியே நீச்சல் கத்துக் கொடுத்துடுறேம்ங்றாப்புல.

            "என்னங்கய்யா! நாஞ்ஞளே ஏதோ தப்புப் பண்ணிருந்தாலும் இந்த ஆபத்தான நேரத்துல இப்பிடிச் சொல்றீங்களே? நாம்ம தப்பா எது பேசிருந்தாலும் அதுக்காக கால்ல வுழுந்து மன்னிப்ப கேட்டுக்கிறேம். யிப்போ நீஞ்ஞ வந்து காபந்து பண்ணி வுடுங்க. இந்த ஒதவிய நாம்ம காலத்துக்கும் மறக்க மாட்டேம். நாம்ம எந்த தப்பப் பண்ணிருந்தாலும் அதெ மன்னிச்சுக்குங்க. மன்னிச்சுக்குங்க!"ன்னு போயிக்கிட்டு இருக்குற எடத்துலேந்து போன்னு பேசிட்டு இருக்குற திருநீலகண்டன் இருக்குற எடத்தெ நோக்கி நெடுஞ்சாண்கிடையா கால்ல வுழுந்து கேக்குறாப்புல கெஞ்சுனாம் விகடு.

            "நீங்க எதையும் புரிஞ்சிக்காமலேயே பேசுறீங்க! நம்மளோட தோப்பனாருக்குக் ஒடம்புக்கு முடியல. சீரியஸ் கண்டிஷன். ஆஸ்பிட்டல்ல இருக்கேம் இப்போ. இப்போ எப்படி கெளம்பி வர்றது சொல்லுங்க?"ன்னாரு வக்கீலு கொஞ்சம் கூட பதற்றம் இல்லாத கொரல்ல சாவகாசமா. விகடுவுக்கு அதுக்குப் பெறவு மேக்கொண்டு என்னத்தெ பேசுறதுங்றது புரியல. பேசாம அப்பிடியே இருந்தாம்.

            "என்னா பிரதர் ஒண்ணும் பேச மாட்டேங்றீங்களே?"ன்னாரு வக்கீல் சீழு வடியுற புண்ணுல திருப்புளிய வுட்டு நிமுண்டி வுடுறாப்புல.

            தெளிவான அழுத்தமான கொரல்ல விகடு சொன்னாம், "ஒஞ்ஞ யப்பாவப் பாருங்கய்யா! நாம்ம இஞ்ஞ எப்பிடியாச்சும் பாத்துக்கிறேம்!"ன்னாம் விகடு இனுமே தங்களால யாருக்கும் எந்த கஷ்டமும் வேணாங்றாப்புல.

            "நாளைக்குக் கண்டிப்பா வந்துடுறேம்!"ன்னாரு வக்கீல் செத்த பின்னாடி வந்து வைத்தியம் பாக்குறேன்னு சொல்ற டாக்டர்ரப் போல.

            "வாங்கய்யா! நல்லது!"ன்னு சொல்லிட்டுத் தலைக்கு மேல வெள்ளம் போறப்ப இனுமே சாண் போனா என்னா, மொழம் போன என்னாங்ற மாதிரியான மனநெலையோட போன வெச்சாம் விகடு.

            "என்னடா என்னவோ மன்னிச்சுக்கோங்க அத்து இத்துன்னு சொல்லிட்டு இருந்தீயே? வக்கீலு என்னத்தெ சொல்றாருடா?"ன்னாரு பரமுவோட அப்பா அவ்வேம் பேசுனதெ வெச்சு விசயம் என்னாங்றாப்புல.

            "வக்கீலு வர முடியாதுங்றாரு! அவரோட அப்பாங்காரருக்குச் சீரியஸ்ஸாம்!"ன்னாம் விகடு வறட்டுத்தனமா ஒரு சிரிப்பெ சிரிச்சுக்கிட்டு.

            "நம்ம நேரத்தப் பாரு. இப்பிடித்தாம் ஆவும். செரி வா! பாத்துக்கிடலாம்! நம்மட ஆளுக இருக்காகல்ல. பாத்துப்போம்!"ன்னாரு பரமுவோட அப்பா விகடுவெ அலாக்கா ஆறுதல்ல தூக்கி வெச்சு சொமக்குறாப்புல. போயிக்கிட்டு இருக்குற வண்டி இப்போ லட்சுமாங்குடியத் தாண்டி கோரையாத்தாங்கரைய‍ நெருங்குனுச்சு. சட்டுன்னு வண்டி நின்னுச்சு.

            "ரிசர்வ் வுழுந்திருக்கு போலருக்குடா! இத்து ஒண்ணுடா நேரங் கெட்ட நேரத்துல ரிசர்வு வுழுந்துக்கிட்டு!"ன்னு சொல்லி வண்டிய நிப்பாட்டி விகடுவெ எறங்கச் சொன்னாரு விகடு பரமுவோட அப்பா கோவமும் எரிச்சலும் கலந்த கொரல்ல. ரிசர்வ் வுழுந்ததெ சரிபண்ணிட்டு வண்டிய ஸ்டாண்டு போட்டு ஸ்டார்ப் பண்ணாரு பரமுவோட அப்பா. வண்டி கெளம்புனுச்சு. வண்டி கௌம்புனதும் ரொம்ப வேகமா வெரட்டுனாரு பரமுவோட அப்பா. வண்டியோட ஒதறல் ரொம்ப அதிகமாவே இருந்துச்சு. அதெ உணர முடியாத அளவுக்கு ரண்டு பேத்தோட மனசுலயும் பதற்றம் அதெ வுட அதிகமா இருந்துச்சு. ஆர்குடி டவுன் போலீஸ் ஸ்டேசன்ன வண்டி சீக்கிரமா நெருங்கிடாதான்னு நெனைச்சிக்கிட்டு இருக்குறப்ப அய்யர்சமாது பெட்ரோல் பங்கப் பாத்து வலது கைய காட்டிட்டு வலது பக்கமா வண்டியத் திருப்புனாரு பரமுவோட அப்பா.

            "பெட்ரோல்லப் போட்டு முடிப்பேம்டா! வேற எங்காச்சும் வண்டி நின்னா எறங்கித் தள்ளிட்டுப் போறாப்புல போயிடும்!"ன்னு பரமுவோட அப்பா சொல்லிட்டுச் சட்டுன்னு, "ரண்டு லிட்டரு பெட்ரோல்ல ஆயிலோட சேத்துப் போடுப்பா!"ன்னாரு வேகத்துலயும் விடாப்பிடியா விவேகத்தெ விடாதவர்ரப் போல. பங்குல பெட்ரோல்லப் போட்டு ஆயிலக் கலந்து ஊத்துனதும் பரமுவோட அப்பா பணத்தெ எடுத்துக் கொடுக்கப் பாத்தாரு. அதுக்குள்ள விகடு முந்திகிட்டு பணத்தெ கொடுத்தாம். அப்போ அவனோட செல்போன் அடிச்சிது. செய்யுவோட நம்பர்லேந்து போன் வந்துச்சு. என்னடா இதுன்னு ஒண்ணும் புரியாம சட்டுன்னு எடுத்துப் பேசுனாம் விகடு. சுப்பு வாத்தியாருதாம் பேசுனாரு.

            "தம்பீ! எஞ்ஞடா இருக்கே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ரொம்ப நெதானமா பேசுறவர்ரப் போல. இப்போ இருக்குற நெலமைக்கும் அவரோட நெதானமான பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாததப் போல இருந்துச்சு விகடுவுக்கு.

            "கெளம்பி வந்திட்டு இருக்கேம்ப்பா!"ன்னாம் விகடு அப்பங்காரரோட பேச்சோட குறிப்ப அறிஞ்சிக்க முடியாம.

            "இஞ்ஞ வர வாணாம். வெசாரணெ முடிஞ்சிடுச்சாம். வேற ஒண்ணும் பெரச்சனெ யில்ல. தங்காச்சிய வுட்டுப்புட்டாங்க. நாம்ம அழைச்சிட்டுக் கொண்டாந்துடுறேம்! நீயி வேற ஏம் தேவையில்லாம்ம வந்தே? இனுமே வார வாணாம். நீயி திரும்பிக் கெளம்பி வூட்டுல போயி இரு. வூட்டுல வேற அழுதுகிட்டு இருக்கும்ங்ற. அதுகளெ சரி பண்ணிட்டுப் பாத்துக்கோ. நாம்ம வந்துடுறேம். எல்லாத்தையும் விடுவிச்சிட்டாங்க. செல்போன்னையெல்லாம் கொடுத்துட்டாங்கடாம்பீ! ஒண்ணும் பெரச்சனெ யில்ல. எல்லாம் சரியாயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கால்ல சுத்துன பாம்பு அதுவாவே கம்முன்னு ஓடிட்டாப்புல.

            "இஞ்ஞ அய்யர்சமாதுகிட்டெ வந்தாச்சுப்பா. சித்த நேரத்துல அஞ்ஞ வந்துடுறேம்!"ன்னாம் விகடு வந்ததுதாம் வந்தாச்சு வந்துப்புடுறோம்ங்றாப்புல.

            "வேண்டாம்டாம்பீ! வாணாம்டாம்பீ! நீயிக் கெளம்பு வூட்டுக்கு. நாம்ம ஒரு மணி நேரத்துக்குள்ள வூட்டுல இருப்பேம்! ஆம்மா அம்புட்டு நேரந்தாம் ஆவும். கௌம்பு. கௌம்பு. வூட்டெப் பாக்க கௌம்பு. நாம்ம வந்துக்கிட்டெ இருக்கேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெரசா நடக்குறதெ இன்னும் வெரசு பண்டுறாப்புல.

            "என்னடா போன்ல?"ன்னாரு பரமுவோட அப்பா விகடு பேசுறதெ வெச்சி எதுவும் வௌங்கிக்க முடியாம.

            "யப்பாதாம் பேசுறாக. வர வேணாங்றாங்க!"ன்னாம் விகடு தீப்பிடிச்ச வூட்டுக்குள்ள நொழைய வாணாம்ன்னு தடுக்குறதெப் போல சுப்பு வாத்தியாரு வார வாணாம்ன்னு தடுக்குறதெப் பத்தி.

            "யப்பாவா பேசுணுச்சு? நல்லதாப் போச்சுப் போ! யப்பா அப்பிடித்தாம் சொல்லும். நாம்மல்லாம் ஏம் ஸ்டேசனுக்கு வந்துட்டுன்னு நெனைச்சிக்கிட்டுச் சொல்லும்? இம்மாம் தூரம் வந்துட்டுப் போயிட்டுப் போவலன்னா எப்பூடி? நீயி போன கட் பண்ணிட்டு வண்டியில ஏறு. வெரசாப் போயிச் சேருவேம்!"ன்னாரு பரமுவோட அப்பா வந்த வரைக்கும் பாத்து அழைச்சுக்கிட்டுக் கௌம்புவோம்ங்றாப்புல.

            "அஞ்ஞயே இருங்கப்பா. கெளம்பிட வாணாம். நாம்ம வந்துடுறேம்!"ன்னாம் விகடு பட்டனெ தட்டுனா பாய்ங்சுப் போற ஏவுகணையப் போல.

            "வாண்டா..."ன்னு சுப்பு வாத்தியாரு சொல்லி முடிக்கிறதுக்கு மின்னாடியே போன கட் பண்ணிட்டு, பரமுவோட அப்பா ஸ்டார் பண்ணி வெச்சிருந்து நவுந்த வண்டியில பின்னாடி ஏறுனாம் விகடு ஓடுற பஸ்ல ஓடிப் போயி ஏறுறவனோட நெலைமையில. வண்டிய அப்பிடியே ரயில்வே ஸ்டேசன் ரோடு வழிய வுட்டு வெரட்ட ஆரம்பிச்சாரு பரமுவோட அப்பா. டிவியெஸ் எக்செல்லு ச்சும்மா பிய்ச்சு எடுக்குறாப்புல ஒதறலோட தெறிச்சு ஓடிட்டு இருந்துச்சு ஆர்குடி ரயில்வே ஸ்டேசன் ரோட்டுல.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...