22 Jan 2021

ஞாயம் செத்து நாளாச்சு!

ஞாயம் செத்து நாளாச்சு!

செய்யு - 694

            வக்கீல் திருநீலகண்டன் சந்தேகத்தோட காலாங்காத்தால வுட்ட எடத்துலேந்து தொடர்றாப்புல விகடுவுக்குப் போன அடிச்சாரு. "நேத்தி நீங்கோ உணர்ச்சிவசப்பட நிலையில இருந்தேள். சரிதாம்ன்னு நாமளும் ரண்டு மூணு தடவெ போன அடிச்சிட்டு விட்டுட்டேம். நேத்திய விட இன்னிக்கு சில விசயங்கள் ஒங்களுக்குத் தெளிவா புரிஞ்சிருக்கும்ன்னு நெனைக்குறேம் பிரதர்!"ன்னாரு வெட்டுனாப்புல முடிஞ்ச பேச்செ ஒட்ட வைக்குறாப்புல.

            "சொல்லுங்க!"ன்னாம் விகடு பேசுறதுல எந்த உணர்ச்சியும் இல்லாம. வக்கீல் மேல ஏகத்துக்கும் கடுப்பா இருந்துச்சு விகடுவுக்கு. ரொம்ப சாமர்த்தியமா ஆர்குடிக்கு வரவழைச்சி அசாம்பவிதமா எதாச்சும் நடத்திப்புடுவாரோன்னு அவனுக்குப் பயமா வேற இருந்துச்சு. நேத்திலேந்து அவனுக்கு ஓடிட்டு இருக்குற நெனைப்பு இதுதாம். அதாச்சி, எந்த ஒரு மனுஷனையும் சாதாரணமாவே அடிக்கக் கூடாது. அதுவும் பொது எடத்துல வெச்சி அடிக்கக் கூடாது. அதுவும் செருப்பால அடிக்கவே கூடாது. அப்பிடி அடிக்கிறதும் இந்தச் சமூகத்தெப் பொருத்த மட்டுல ஆம்பளயெ பொம்பள செருப்பால அடிக்கக் கூடாது. ஆக எப்பிடிப் பாத்தாலும் எதெதெல்லாம் நடக்கக் கூடாதோ அதெல்லாம் நடந்திருக்கு. இப்பிடிப்பட்ட ஒரு நெலைய யாராச்சும் பெரிய ஆளுங்களோட தொணையிருந்தாத்தாம் சமாளிக்க முடியும்ன்னு தோணுச்சு விகடுவுக்கு. நிச்சயமா திருநீலகண்டன நம்பிப் போறது ஆபத்தெ தேடி வெலைக்கு வாங்குறாப்புலன்னு நெனைச்சாம் விகடு. திருநீலகண்டன்கிட்டெ பேசுற அளவுக்கு செயல்பாடு இல்லங்றதும் புரிஞ்சப் பெறவு அவரோட பேச்சு நம்பிப் போறது ஆழம் கம்மியாத்தாம் இருக்கும்ன்னு நெனைச்சி நட்டாத்துல எறங்குறதெப் போலத்தாம். அதுவும் இல்லாம வாரேன்னு சொல்லிட்டு வாராமலும் இருக்கக் கூடிய ஆளு அவரு. ஏம் வாரலன்னு கேட்டா அதுக்குக் குந்தாங் கூறா வௌக்கம் கொடுக்கக் கூடிய ஆளும் கூட. இப்படியும் விகடுக்குள்ள நெனைப்பு சொழண்டுக்கிட்டு இருந்துச்சு.

            "ஒண்ணுமில்ல பிரதர்! நீங்களும் அப்பாவும் தங்கச்சியை அழைச்சிட்டு வந்துடுங்க. சும்மா ஸ்டேசன்ல வெச்சி சின்ன பஞ்சாயத்துத்தாம். முடிச்சிட்டம்ன்னா அத்தோட விசயம் முடிஞ்சிடும். இல்லன்னா அது பாட்டுக்கு இழுத்துக்கிட்டு கிடக்கும். நேத்திப் பூரா அவ்வேம் ஆர்குடிய விட்டு போகல. நாம்ம விசாரிச்சிட்டேம். ஆளு ரொம்ப விகரஸ்ஸா இருக்காம். ஆரம்பத்துலயே அமத்திட்டம்ன்னா நல்லது. புகைய விடறது நல்லதில்ல பாருங்கோ!"ன்னாரு வக்கீலு பொங்குற எரிமலை மேல தண்ணிய தெளிச்சு அமத்திப்புடலாங்றாப்புல.

            "இதெ நீங்க நேத்தியே வெச்சு செஞ்சு முடிச்சிருக்கணும்! இன்னிக்குன்னா அவ்வேம் நல்லாவே சுதாரிச்சிருப்பாம். திடீர்ன்னு எஞ்ஞளயும், எந் தங்காச்சியையும் ஆளெ வெச்சி செமத்தியா வெளுத்து வாங்குறான்னு வெச்சிக்கிக்குங்களேம். நாஞ்ஞ என்னத்தெப் பண்ணுறது? நீஞ்ஞப் பாட்டுக்கு நாம்ம என்னத்தெ பண்ணுறதுன்னு கைய விரிச்சிக்கிட்டுப் போயிக்கிட்டெ இருப்பீயே!"ன்னாம் விகடு கூண்டெ தொறந்து வுட்டுப்புட்டா புலி இப்பிடித்தாம் நடந்துக்கும்ங்றதெ சொல்ல முடியாதுங்றாப்புல.

            "அப்பிடியெல்லாம் ஒண்ணும் ஆகாது பிரதர். ஒரு வக்கீல் அழைச்சிட்டு வர்றச் சொன்னா அழைச்சிட்டு வாங்க. ஒங்கப் பாதுகாப்புக்கு நாம்ம புல் கேரண்டி!"ன்னாரு வக்கீல் காட்டுப் புலியை வூட்டுப் புளியைப் போல பானையில வெச்சு அடைச்சிப்புடுவேம்ங்றாப்புல.

            "எந்த நம்பிக்கையில நீஞ்ஞ ஒண்ணும் ஆகாதுன்னு சொன்னீங்கன்னா, நாம்ம அழைச்சிட்டு வர்ற சரியா இருக்கும்!"ன்னாம் விகடு பொத்துட்டு ஊத்துற பானையில தண்ணி எப்படி நெரம்பியிருக்கும்ங்றாப்புல.

            "வாழ்க்கையில எல்லாம் ஒரு நம்பிக்கைத்தாம் பிரதர். வக்கீலையும் டாக்டரையும் நம்பித்தாம் ஆவணும். அதனாலத்தான் சொல்றேம் இது சம்பந்தமா ஸ்டேசன்ல வெச்சிப் பேசி மன்னிப்புக் கேட்டாத்தாம் அடங்கும்!"ன்னாரு வக்கீல் ஒடைஞ்ச பானைய ஒட்ட வெச்சு அதுல திராவகத்தெயே கொண்டு வந்துப்புடுவேம்ங்றாப்புல.

            "எதாச்சும் அசம்பாவிதமா நடந்தா, நமக்கென்னங்ற மாதிரிக்கிக் கைய விரிச்சிடுவீங்கய்யா நீஞ்ஞ! பல அனுபவத்துல ஒஞ்ஞளப் பாத்தாச்சு. ஜீவனாம்ச வழக்குலயே பல எடங்கள்ல நீஞ்ஞ அப்ஜெக்சன் பண்ணாமலே உக்காந்திருந்தீயே! அதெப் போல ஸ்டேசனுக்கு வந்து சிவனேன்னு உக்காந்தீயன்னா? நெனைச்சிப் பாருங்க கைப்புள்ள பெரச்சனைக்கு திருவாரூரு டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த நீஞ்ஞ நடந்துக்கிட்டது இன்னும் நமக்கு மறக்கல. நீஞ்ஞ எஞ்ஞகிட்டெ பேசுறப்பல்லாம் சூரப்புலியாட்டாம் பேசுறீயே! அவனுவோகிட்டெ பச்சக்கிளியாட்டாம் பயந்துப் போறீயே! அதெயெல்லாம் நெனைச்சிப் பாத்துதாம் வேணாங்றேம்!"ன்னாம் விகடு நல்லா போறவனெ தடுமாறிக்கிட்டு வுழுறப்போ நொண்டிக்கிட்டுப் போறவேம் தலைகுப்புறல்லா வுழுவாம்ங்றாப்புல.

            "இதெ எப்பிடியாச்சும் சரிபண்ணித்தாம் ஆவணும் பிரதர். இன்னிக்கு வந்தாத்தாம் இதுல எதாச்சும் பண்ணலாம்!"ன்னாரு வக்கீல் ஒடைச்சுட்டுப் போற காட்டாத்துக் கரைய எப்படியாச்சும் அடைச்சாவணுங்றாப்புல.

            "தப்பா நெனைச்சுக்காதீங்கய்யா! இன்னிக்கு நீஞ்ஞ மட்டும் பேசிப் பாத்துட்டுச் சொல்லுங்க. நாளைக்கு வேணும்ன்னா நாம்ம சில ஏற்பாடுகளெ பண்ணிக்கிட்டு வர்றேம்!"ன்னாம் விகடு நட்டாத்துல நிக்குறதெ போதும், காட்டாத்துல எதிர்நீச்சல்லாம் வேணாங்றாப்புல.

            "அப்போ நாம்ம சொல்றதெ நீங்க நம்பலயில்ல!"ன்னாரு வக்கீலு உடும்புப் புடியா டைனசர்ர பிடிக்கப் பாக்குறாப்புல.

            "நிச்சயமா நம்பல! நூத்துக்கு எரநூதது விழுக்காடு!"ன்னாம் விகடு பொட்டுன்னு அடிச்சாப்புல.

            "இப்பிடியெல்லாம் ஒரு வக்கீல்கிட்டெ பேசக் கூடாது. நீங்க ரொம்ப மொறைத் தவறிப் பேசுறீங்க பிரதர்!"ன்னாரு வக்கீல் மனசுல உண்டான கடுப்பெ கட்டுசெட்டா காட்டுறாப்புல.

            "நீஞ்ஞ எப்பிடி எடுத்துக்கிட்டாலும் செரித்தாம். நாம்ம அழைச்சிட்டு வர்றாப்புல யில்ல! நீஞ்ஞ மட்டும் போயி நாடிப் பிடிச்சிட்டுச் சொல்லுங்க!"ன்னாம் விகடு ஒரு முடிவுக்கு வந்த பெற்பாடு அதுல அடுத்த யோசனைக்கே வேலையில்லங்றாப்புல.

            "நீங்க மட்டும் வர்றாம நாம்ம மட்டும் போயி ஒண்ணும் ஆவப் போறதில்ல. அப்பிடின்னா நாமளும் போவப் போறதில்ல!"ன்னாரு வக்கீல் எனக்கென்ன ஆச்சு எது வலம் போனா என்னா, எடம் போனா என்னாங்றாப்புல.

            "அதாம்ங்கய்யா நல்லது. நீஞ்ஞளும் போவ வாணாம். நாமளும் போவ வாணாம். எதா இருந்தாலும் கொஞ்சம் ஆற வுட்டுப் பாத்துக்கிடலாம்! ஆறுன கஞ்சி பழங்கஞ்சியாயிடும். இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு வேற வேல யிருந்தா அதெப் போயி பாருங்க! ஏன்னா நாஞ்ஞ வந்து அஞ்ஞ அடிவாங்குறதுக்கு வாய்ப்பு இருக்கறதுப் போல, நீஞ்ஞ வந்தாலும் ஒஞ்ஞளயும் அடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு!"ன்னாம் விகடு தாம் மனசுல பயந்துக்கிட்டு இருக்குற தவிப்பெ அப்படியே வடிச்சுக் காட்டுறாப்புல.

            "அப்பிடில்லாம் யாரும் யாரையும் அடிச்சிட முடியாது பிரதர். நீங்களா ஓவரா கற்பனைப் பண்ணிக்கிறீங்க!"ன்னாரு வக்கீல் ஆகாசத்துலேந்து தேனும் வழியாது, நெனைக்குறாப்புலல்லாம் நடக்காதுங்றாப்புல.

            "சில நேரங்கள்ல நாம்ம ஓவரா கற்பனை பண்ணிக்கிறதெ  தாண்டியும் நடக்கும்ங்கய்யா. அது மாதிரியான சந்தர்ப்பங்கள்ல அப்பிடி கற்பனை பண்ணிக்கிறதுலயும், அதுக்கேத்தாப்புல பயந்துகிட்டு நடந்துக்கிறதுலயும் தப்பு ஒண்ணுமில்லன்னு நெனைக்கிறேம். அடிபட்ட பாம்புல்லாம் எந்தக் காலத்துலயும் சமாதானம் பேசிட்டுப் பொறுமையா இருக்காதுங்கய்யா! நீஞ்ஞ நெலமெ புரியாமப் பேசுறீயே! அவ்வேம் பக்கம் பெரிய பெரிய ஆளுகள அழைச்சிட்டு வருவாம். நீஞ்ஞ நம்மப் பக்கத்துக்கு யார்ர அழைச்சிட்டு வருவீயேன்னு மட்டும் சொல்லுங்க. நாம்ம எந் தங்காச்சிய அழைச்சிட்டு வர்றேம்!"ன்னாம் விகடு ஒத்த புடி கிடைச்சாக் கூட அதெ பிடிச்சுக்கிட்டு வர்றேம்ங்றாப்புல.

            "நம்மப் பக்கத்துக்கு நாமளே ஒரு பெரிய ஆளுதாம். நாம்ம ஏம் இன்னொருத்தனெ பெரிய ஆளா நெனைச்சிக்கிட்டு அவனெ அழைச்சிட்டு வந்து அவனெ பெரிய ஆளா ஆக்கணும் சொல்லுங்கோ?"ன்னாரு வக்கீல் சாலுஜாப்பா மடக்குறாப்புல.

            "இதெல்லாம் பேச்சுக்கு நல்லா இருக்கலாம். நடைமொறைக்கு ஒத்து வராது. அவ்வேம் இருவது பேர்ர அழைச்சிட்டு வர்றாம்ன்னு ஒரு பேச்சுக்கு வெச்சிப்போம். நாம்ம நாலு பேரு போயி சமாளிக்க முடியுமா? சினிமாவுக்கு வேணும்ன்னா அதெல்லாம் சரிபட்டு வாரலாம். ஒத்த ஹீரோ மொத்த பேத்தையும் அடிக்கலாம். நடப்புல நாம்ம எல்லாம் அடிவாங்கிட்டு வர்ற வேண்டியதுதாம். ஒஞ்ஞளுக்கு ன்னா அடிய வாங்கிட்டு தூசிய ஊதித் தள்ளிக்கிட்டுப் போயிகிட்டெ இருப்பீயே! எல்லாராலயும் அப்பிடி இருந்துட முடியுமா?"ன்னாம் விகடு வேடிக்கெ பாக்குறவனுக்கா வலி தெரியும், அடிபடுறவனுக்குத்தாம் வலி தெரியுங்றாப்புல.

            "நீங்க ரொம்பப் பேசுறீங்க பிரதர்! இதெல்லாம் நல்லதுக்குக் கெடையாது. ஒரு வக்கீல்ன்னா அவரு சொல்றதுக்கு ஒரு மதிப்பெ கொடுங்க. அதெ விட்டுப்புட்டு அழைச்சிட்டு வர்றச் சொன்னா முடியாதுன்னா நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. முடிவா இதாங் ஒங்க முடிவா?"ன்னாரு வக்கீல் பாடுன பாட்டையே மறுக்கா ஓதுறாப்புல.

            "ஆம்மா. இதாங் முடிவு!"ன்னாம் விகடு கடவுளே வந்தாலும் இதாங் முடிவுங்றாப்புல.

            "அப்போ போன வெச்சிடுங்க பிரதர்!"ன்னாரு வக்கீல் வேண்டா வெறுப்பா சொல்லி முடிக்குறாப்புல. அவரு சொல்லி முடிச்ச அடுத்த நிமிஷம் போன வெச்சாம் விகடு. அவ்வேம் மனசு பூரா ஏதோ தப்பா நடந்துட்டதாவும், தப்பா ஏதோ நடக்கப் போறதாவும் நெனைப்பு சொழண்டுகிட்டெ இருந்துச்சு. அந்த நெனைப்போட அவனால ஒரு நெலையில நிக்க முடியல. அப்பங்காரரெ நோக்கிப் போனாம்.

            "நாம்ம வேணும்ன்னா இன்னிக்குப் பள்ளியோடம் போவாம லீவ அடிச்சிட்டு வூட்டுல இருக்கட்டுமா?"ன்னாம் விகடு அப்பங்காரரான சுப்பு வாத்தியாருகிட்டெ. சுப்பு வாத்தியாரு யோசிச்சு முடிச்சு ஒரு பதிலெ சொல்றதுக்கு மின்னாடிச் செய்யுதாம் முந்திக்கிட்டு ஒரு பதிலச் சொன்னா.

            "வேணாம்ண்ணே! ஏகப்பட்ட லீவெ போட்டுட்டே. நீயிப் பாட்டுக்கு வேலைக்குப் போ! ஒண்ணும் ஆவாது!"ன்னா செய்யு நடக்குறதுக்கு இதுக்கு மேல ஏதும் இல்லங்றாப்புல.

            "போலீஸ் யாராச்சும் வூட்டுப்பக்கம் வாரலாம். வராமலும் இருக்கலாம். நம்மாள முடிவா சொல்ல முடியல. ஆன்னா யாரு வந்து கூப்புட்டாலும் போயிரக் கூடாது. வேணும்ன்னா தங்காச்சியக் கூட வேற நம்ம ஒறவுங்க வூட்டுல கூட விட்டுடுறது நல்லது!"ன்னாம் விகடு ராத்திரியெல்லாம் மனசு படுத்துன பாட்டுலேந்து சூதானமா எப்படி இருக்குணுங்றதெ சொல்றாப்புல.

            "எந்த ஒறவுகிட்டெ கொண்டுப் போயி விடுறது? எல்லா ஒறவும் எதிர்ப்பால இருக்குது. அங்க இங்கப் போயிக் கெடக்கறதுக்கு வூட்டுலயே கெடக்கலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இருந்த கண்ணாடியையெல்லாம் சுக்கு நூறா ஒடைஞ்சப் பெறவு எதுல மொகம் பாக்குறதுங்றாப்புல.

            "ஏம்ண்ணே நாம்மப் போயி எஞ்ஞயோ ஒளிஞ்சிக் கெடக்கணும். போலீஸ்லேந்து வந்தா வாரட்டும். நாம்ம நடந்ததெ சொல்றேம். அவ்வேம் பேசுனது மட்டும் சரியா? அவ்வேம் அப்பிடிப் பேசலன்னா நாம்ம ஏம் செருப்பால அடிக்கிறேம்? ஒரு பொம்பள செருப்பக் கழட்டி அடிக்கிறான்னா என்னா நடந்திருக்கும்ன்னும் போலீஸ்காரவுங்க யோஜிக்கத்தாம் செய்வாங்க. அவுங்க அப்பிடி யோஜனையே யில்லாம ஜீப்ப எடுத்துக்கிட்டு அரெஸ்ட் பண்ண வந்துடுவாங்களா?"ன்னா செய்யு வழக்காட்டு மன்றத்துல வாதத்தெ வைக்குறாப்புல.

            "நாசுக்கானவேம் நகரல்ல மிதிச்சா கால அலம்பிட்டுத்தாம் போவாம். அதெ கையாலத் தொட்டு, மூக்கால மோந்துப் பாத்து, நாக்கால நக்கிப் பாத்து அத்து நரகல்லான்னு ஆராய்ச்சியா பண்ணிட்டு இருப்பாம்? நடந்தது அசிங்கமான சம்பவம்டாம்பீ! அதெ பத்தி அவ்வேம் வெளியில மூச்செ வுட மாட்டாம். மனசுக்குள்ளயே வெச்சி வேற வழியிலத்தாம் கருவறுக்கப் பாப்பாம். நேரடியா ஸ்டேசனுக்குப் போனா அவங்களும் வெசாரிப்பாங்கயில்ல. அப்போ ஸ்டேசன்ல செருப்படி வாங்குனேன்னா சொல்லுவாம்? அப்பிடிச் சொன்னா அவனுக்குத்தாம்டாம்பீ அசிங்கம்! அந்த மாதிரியான அசிங்கத்தெ எந்த ஆம்பளயும் தனக்குத் தானே செஞ்சிக்கிட மாட்டாம். அதெ நேரத்துல இதெ அப்பிடியே மனசுக்குள்ளயே வெச்சிக்கிட்டு வெசாரணையில இதெ ரொம்ப தீவிரமா காட்ட நெனைப்பாம். அதெ வேணும்ன்னா நாம்ம ஒத்துக்கிறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ராத்திரியெல்லாம் யோசிச்சு யோசிச்சுத் தானும் ஒரு முடிவுக்கு வந்திருக்கேம்ங்றாப்புல.

            "அப்பிடி இருந்துட்டா எந்தப் பெரச்சனையும் யில்ல. ஆன்னா வக்கீல் போன் பண்றப்ப ன்னா சொன்னார்ன்னா நேத்தி முழுக்க அவ்வேம் ஆர்குடியிலயே சுத்திட்டு இருந்ததாவும், ஸ்டேசன்ல புகார்ர வெச்சிருக்கதாவும் சொன்னாரு!"ன்னாம் விகடு அரண்டு போனவேம் கண்ணுக்கு கரண்டு போறப்பல்லாம் பேயும் பிசாசும் தெரியுறாப்புல.

            "அப்பிடியே புகார்ர வெச்சிருந்தாலும் வேற மாதிரி வாய்த் தகராறுங்ற மாதிரிக்கித்தாம் இருக்கும்."ன்னாரு சுப்பு வாத்தியாரு எல்லாத்துக்கும் ஒரு பதிலெ கண்டுபிடிச்சு வெச்சிருக்கிறாப்புல.

            "ஒருவேள செருப்படின்னே அவ்வேம் புகார்ர பண்ணிருந்தாம்ன்னா?"ன்னாம் விகடு வேட்டைக்காரங்றவேம் எல்லாத்தையும் அதாச்சி ஆனையையும் பூனையையும் ஒரே மொறையில வேட்டையாடுறது கெடையாதுங்றாப்புல.

            "அவனெ செருப்பால அடிய வாங்குனேம்ன்னு ஒத்துக்கிறப்போ, நாம்ம ஏம் மறுக்கணும். அத்து அவனுக்கு அசிங்கம்டாம்பீ! அவனெ அந்த அசிங்கத்தெ ஏத்துக்கிறப்போ ஆம்மா அந்த அசிங்கத்த அவனுக்குப் பண்ணி வுட்டது நாம்மத்தான்னு சொல்றதுல தப்பே யில்ல. அதாங் தெகிரியம். ஆம்மா இந்திந்த மாதிரிக்கிக் கேள்வியக் கேட்டாம், நாம்ம அதால அடிச்சேம்ன்னு நல்லா செருப்பாலயே அடிச்சேம்ன்னு சொல்ல வேண்டித்தாம். நாக் கூசுறாப்புல பேசிட்டாம்டாம்பீ! நமக்கே கோவந்தாம். கோர்ட்டு வாசல்லா இருக்கேன்னு யோஜனெ பண்ணதுல புத்தி மழுங்கிப் போயி நின்னேம். ல்லன்னா நாமளே அவனெ நேத்தி இழுத்து வெச்சி அடிச்சிட்டுத்தாம் வந்திருப்பேம்! வர வர ரொம்ப மோசமா வேற பேச ஆரம்பிச்சிட்டானுவோ! அத்து ஏதோ ஒரு நெலமயிலக் கொண்டுப் போயித்தாம் வுடப் போவுதுன்னு நெனைச்சேம். இந்த அளவுக்குக் கொண்டுப் போயி விட்டுடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எதார்த்தமாத்தாம் எல்லாம் நடக்கும்ங்றாப்புல.

            "அப்போ என்னத்தாம் பண்டலாம்ன்னு சொல்லுங்க!"ன்னாம் விகடு தன்னோட தவிப்பையும் பயத்தையும் எப்படிப் போக்கிக்குறதுன்னு புரியாம.

            "நடக்கிறதுக்கு மின்னாடி வரைக்கும் பயப்பட வேண்டித்தாம். நடந்தப் பெறவு பயந்தால்லாம் காரியம் ஆவாது. இனுமே ன்னா நடந்தாலும் சரித்தாம்ன்னு அதெ தெகிரியமா எதிர்கொள்ள வேண்டித்தாம். நீயி சொன்னபடிக்கு நாமளா போயி இப்போதைக்கு அஞ்ஞப் போயி சிக்கிக்கிட வாணாம். நம்ம வூடு தேடி யாரு வந்தாலும் செரித்தாம் அதெ பாத்துக்கிடலாம் வா! ன்னா மனுஷன மனுஷன் கொன்னாப்புடப் போறாம்? அப்பிடியே கொன்னாத்தாம் கொன்னுட்டுப் போறாம். ரோஷத்தோட மானத்தோட செத்தாங்ற பேராவது நெலைக்கும்ங்றேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு உருக்கி ஊத்துனா தங்கம் உறைஞ்சத்தாம் போவுங்றாப்புல.

            "அப்போ ஒண்ணுத்தெப் பண்ணுங்க. பாய எடுத்துப் போட்டு, போர்வையப் போத்திக்கிட்டுப் படுக்கச் சொல்லுங்க! போலீஸ் கீலிஸ் யாரு வந்து கேட்டாலும் ஒடம்புக்கு முடியல. அந்தாண்ட இந்தாண்ட நவுர முடியலன்னு சொல்லிட்டு பேயாம கெடங்க. விசாரணைன்னு கூப்புட்டான்னு கெளம்பிப் போயிடுற வேலய மட்டும் வெச்சிக்கிடாதீங்க. போலீஸ்காரவுகக் கூப்புட்டுப் போயி உசுரோட திரும்புனவங்களோட எண்ணிக்கெ கம்மிங்றதெ புரிஞ்சிக்கோங்க. ரொம்ப சாமர்த்தியமா கூப்புடுவாங்க. அதெப் பாத்துக்கோங்க!"ன்னாம் விகடு புயலடிக்காதுன்னு நெனைச்சு கடலோரம் காத்து வாங்கிடப் போயிடக் கூடாதுங்றாப்புல.

            "நாம்ம இனுமே எதுக்கும் பயப்படுறதா இல்லண்ணே! அப்படி வெசாரணைன்னு எதாச்சும் வந்தா அவ்வேம் பேசுன அத்தனையையும் சொல்லுவேம். அப்பிடி ஒஞ்ஞ தாயி, தங்காச்சிகிட்டெ, பொண்டாட்டி, புள்ளகிட்டெ பேசுனா ஏத்துப்பீயளான்னு கேப்பேம். நாமளும் இதெ ச்சும்மா வுடுறதா யில்ல! அவ்வேம் புகார்ரப் பண்ணி போலீஸ் இஞ்ஞ வாரணும்ன்னுத்தாம் எதிர்பாத்துட்டு இருக்கேம். வந்தாத்தானே நாமளும் நம்மப் பக்கத்து ஞாயத்தெ எடுத்துச் சொல்ல முடியும். எத்தனெ நாளுத்தாம் அப்பிடியே அமைதியா கெடந்துக்கிட்டெ இருக்க முடியும் சொல்லு? இன்னிக்கு ரண்டுல ஒண்ணுத்தெ பாத்துட வேண்டியதுதாம்!"ன்னா செய்யு சுனாமியே வந்தாலும் அதுல நீச்சல் அடிக்கப் போறேம்ங்றாப்புல.

            "இதெல்லாம் புத்திசாலித்தனமில்ல. இந்தக் காலத்துல யாரு ஞாயத்தெ பாக்குறா? பணத்தெயும், செல்வாக்கையும், அதிகாரத்தையும் பாக்குறாங்க. எந்தப் பக்கம் பணம் இருக்கோ அந்தப் பக்கம் ஞாயம் பண்ணுறாங்க. எந்தப் பக்கம் செல்வாக்கு இருக்கோ அந்தப் பக்கம் ஞாயம் பேசுறாங்க. யாருகிட்டெ அதிகாரம் இருக்கோ அவுங்களுக்குத்தாம் ஞாயம்ன்னு சொல்லி வக்காலத்து வாங்கப் போறாங்க. அதெயெல்லாம் நாம்ம கொஞ்சம் சீர்தூக்கிப் பாத்துதாம் இந்த விசயத்துல நடந்துக்கணும். அதெ வுட்டுப்புட்டு ஞாயத்தெ சொன்னா அதெ ஏத்துப்பாங்கன்னு நெனைச்சிப்புடக் கூடாது. ஞாயத்தெ கேட்டு புள்ளயெ தேர்ச்சக்கரத்துல வுடுற மனுநீதிச் சோழன்லாம் இஞ்ஞ யாருமில்ல. ஞாயம் கேட்டவனெ தேர்ச்சக்கரத்துல வெச்சி கொல்லுற அநீதி பண்ணுற மக்காத்தாம் நாட்டுல அதிகம். கண்ணகி நீதி கேட்டாப்புலன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கீயா? அந்த மாதிரி பாண்டியன்லாம் யாரும் கெடையாது. இப்போ இருக்குற பாண்டியன்ங்க எல்லாம் கண்ணகியையும் கொல பண்ணிட்டு மறுவேல பாப்பானுவோ! ஞாயம் செத்து நாளாச்சு. ஒனக்கு ஞாயம்ன்னா இந்நேரத்துக்குக் கெடைச்சிருக்கணும். கெடைக்க வேண்டிய ஞாயமே நாளு கணக்கா, மாசக் கணக்கா, வருஷக் கணக்கா இழுத்துக்கிட்டுப் போவுது? கோர்ட்டெ உத்தரவப் போட்டும் ஒன்னால ஜீவனாம்சத்தெ வாங்க முடிஞ்சதா? பெறவு பேசுறீயே ஞாயம் சாயம்ன்னுகிட்டு?"ன்னாம் விகடு கொளத்துல போடுற நீச்சலும், கட்டல்ல போற நீச்சலும் எடத்துக்கு ஏத்தாப்புல மாறும்ங்ற மாதிரிக்கு ஞாய தர்மமும் காலத்துக்கு ஏத்தாப்புல மாறும்ங்றாப்புல.

            "நீயிப் பேசுறதெ கேக்க நமக்குப் பெரிய மன ஒளைச்சலா இருக்கு. நேத்தியிலிருந்தே தாங்க முடியாத மன ஒளைச்சல். யிப்போ நீயி வேற? நம்மள நம்மப் போக்குக்குப் போவவும் வுட மாட்டேங்றீயே? ஒஞ்ஞ இஷ்டத்துக்கு ஆட்டி வைக்குறீயே! யிப்போ என்னத்தாம்ண்ணே சொல்ல வர்றே?"ன்னா செய்யு அதுக்கு மேல அண்ணங்கார்ரேம் பேச்செ பொறுமையா கேக்க மனசு இல்லங்ற மாதிரிக்கு.

            "நெருக்கடியான நேரத்துலல்லாம் நம்ம இஷ்டத்துக்கு ஆட முடியாது. கொஞ்சம் கட்டுசெட்டாத்தாம் இருந்தாவணும். யாரும் வார மாட்டாங்கன்னுத்தாம் நெனைக்கேறேம். ஒருவேள யாரு வந்து கூப்புட்டாலும் வூட்டெ வுட்டுக் கெளம்பாதே!"ன்னாம் விகடு செய்யுவப் பாத்து. பெறவு வெங்குவப் பாத்து, "யம்மா யாரு கேட்டாலும் தங்காச்சிய ரூம்ல வெச்சி அடைச்சிட்டு அவ்வே யில்ல, ஒறவுக்கார கலியாணத்துக்காகப் போயிட்டாங்ற மாதிரி சொல்லிடும்மா! அப்பிடி ல்லன்னா பாய எடுத்துப் போட்டு படுக்க வெச்சி ஒடம்பு சரியில்லன்னு சொல்லிப்புடும்மா! வூட்டெ வுட்டு மட்டும் போயிடக் கூடாது. ஏன்னா நம்ம வூடுதாம் நமக்குப் பாதுகாப்பு! இஞ்ஞ பூந்து யாரும் எதயும் சொல்லிட முடியாது, எதையம் செஞ்சிட முடியாது!"ன்னாம் விகடு கண்ணுல வுழுந்த முள்ளுக்கு முள்வாங்கிய உபயோகிச்சு எதுவும் பண்ணிட முடியாதுங்றதெ காட்டி ரொம்ப சாமர்த்தியமா முள்ளெ எடுக்கணுங்றாப்புல.

            அவ்வளவு அதையும் இதையும் தன்னோட பயத்தையும் தவிப்பையும் சொன்னாலும் அவனுக்கு அதே கேட்டவங்க மேல நம்பிக்கெ இல்ல. பொண்டாட்டிக்காரி ஆயியையும் பாத்து, "நீந்தாம் இதெ கொஞ்சம் பாத்துக்கிடணும்!"ன்னாம். ஆயி தலைய ஆட்டுன்னா.

            "நீயி ஒண்ணும் கவலெப்படாம பள்ளியோடம் போயிட்டு வாய்யா!"ன்னுச்சு வெங்கு வானமா இடிஞ்சு தலையில வுழுந்துடப் போவுதுங்றாப்புல.

            இதுக்கு மேல பேசுனா தெடமா இருக்குறவங்களையும் பேசிப் பேசியே உருக்குழைச்சாப்புல ஆயிடும்ங்றாப்புல பட்டுச்சு விகடுவுக்கு. பள்ளியோடம் போவுறதெத் தவுர வேற வழியும் தெரியல அவனுக்கு இப்போ. அதே நேரத்துல பள்ளியோடத்துக்கு விகடுவால ஒரு தெளிவா கெளம்பிப் போவ முடியல. கெளம்பிப் போனவம் திரும்பி வந்து, "கொஞ்சம் சூதானமா இருந்துக்கோணும்!"ன்னாம் கீறல் வுழுந்துப் போன இசைத்தட்டெ போல நாலைஞ்சு மொறை. எல்லாரும் அதெ கேட்டுக்கிட்டுத் தலைய ஆட்டுனாப்புலத்தாம் தெரிஞ்சிது விகடுவுக்கு. "ஞாயம் ஞாயம்ன்னு உணர்ச்சி வசப்பட்டு யோசிக்கிறதெ வுட, புத்தியா யோசிக்கணும் யிப்போ!"ன்னு கடைசியா ஒரு வார்த்தையும் சொல்லிட்டுக் கெளம்புனாம் விகடு. செய்யு கூட வேண்டா வெறுப்பா அதுக்குத் தலைய ஆட்டுனதாத்தாம் பட்டுச்சு. சொல்றது எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு எல்லாரும் சரியாத்தாம் இருந்துடுவாங்கன்னு நெனைச்சித்தாம் அந்த நம்பிக்கையில விகடு பள்ளியோடத்துக்குப் போனாம். எதையோ ஒண்ணுத்தெ நம்பி எப்பிடியோ போயித்தானே ஆக வேண்டியிருக்கு வாழ்க்கையில. இப்படித்தாம் போகப் போயி கடல்ல சேர்றப் போறேம்ன்னு மொத மொதலா ஓடுனப்போ ஆத்துக்குத்தாம் தெரியுமா? இல்லே இப்படித்தாம் எல்லாம் நடந்து முடியும்ன்னு அத்து நடந்து முடியுற வரைக்கும் மனுஷருக்குத்தாம் தெரியுமா?

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...