இன்று கழிந்து நாளைக்கு வா!
செய்யு - 693
விகடு பள்ளியோடம் விட்டு வந்தான். வந்த
ஒடனே வூட்டுல எல்லாரையும் ஒரு பார்வெ பாத்துப்புடணும் அவனுக்கு. அப்பங்காரரப் பாக்குறான்
காங்கல. "ன்னம்மா கோர்ட்லேந்து இன்னும் வாரலியா?"ன்னாம் விகடு. வெங்கு பதிலெ
எதுவும் சொல்லாம மொகத்து உம்முன்னு வெச்சிருந்துச்சு. கொஞ்ச நேரம் கழிச்சி என்னத்தெ
நெனைச்சுச்சோ, "ம்! வந்தாச்சு!"ன்னு சொல்லிக்கிட்டு மறுபடியும் உம்முன்னு
மொகத்தக் கொண்டுப் போயிடுச்சு.
சில நேரங்கள்ல விகடு ரொம்ப சரியா கோர்ட்டு
விசாரணை நடக்குற நேரத்துல போன் அடிச்சிப்புடுறதால சிக்கலாப் போயிடும்ங்றதால அவ்வேம்
போன்ன அடிச்சிக் கேக்குற பழக்கத்தெ விட்டிருந்தாம். கோர்ட்டுல எது நடந்தாலும் அத்து
முடிஞ்ச பிற்பாடு செய்யுத்தாம் விகடுகிட்டெ போன் அடிச்சிச் சொல்லிக்கிட்டு இருந்தா.
எதுவும் முக்கியமான விசயம் கோர்ட்டுல நடக்காதப்போ அதெ என்னத்தெ சொல்லிக்கிட்டுன்னு
அன்னிக்குப் போன அடிக்காமலும் இருந்துடுவா செய்யு. அப்படி எதாச்சும் செய்யுகிட்டேயிருந்து
போன் வாரலன்னா அன்னிக்கு எதுவும் கோர்ட்டுல பெரிசா நடக்கலன்னு விகடுவும் புரிஞ்சிப்பாம்.
இன்னிக்குக் கோர்ட்டுக்குப் போனவுக அஞ்ஞயிருந்து போன பண்ணததால பெரிசா எதுவும் கோர்ட்டுல
நடக்கலன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு. வெங்கு மொகத்தெ உம்முன்னே வெச்சிக்கிட்டதெ பாத்ததும்
விகடுவுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. பள்ளியோடம் வுட்டு வந்தவேம்கிட்டெ நாலு வார்த்தெ
நல்ல வெதமா பேசுனாத்தானே உவப்பா இருக்கும். நாமளே எதாச்சும் உவப்பா ஆவுற மாதிரி பேச்சக்
கொடுப்பேம்ன்னு நெனைச்சாம் அவ்வேம்.
"மத்தியானமே வந்துப்புட்டாங்களா?"ன்னாம்
விகடு.
"ம்!"ன்னுச்சு வெங்கு.
"தங்காச்சி எஞ்ஞ? சாப்புட்டாங்களா?"ன்னாம்
விகடு.
"எதுத்த கொல்லையிலத்தாம்பா இருக்காங்க.
போயிக் கேட்டுக்கோ!"ன்னு சலிச்சாப்புல பதிலச் சொன்னுச்சு வெங்கு.
"யிப்போ நாம்ம என்னத்தெ கேட்டுப்புட்டேம்ன்னு
சடவா பதில வருதுன்னு தெரியலையே?"ன்னாம் விகடு.
"ஒண்ணும் சடவுல்லாம் யில்லப்பா! வந்ததுலேந்து
யாரும் ஒண்ணும் சாப்புடலப்பா! நம்மகிட்டெயும் ஒண்ணும் பேசலப்பா! என்னவோ கொல்லையே
பாக்காத ஆளுங்களப் போல எதுத்துக் கொல்லையிலப் போயி உக்காந்து வேலையப் பாக்க ஆரம்பிச்சவுகத்தாம்!
ஏம் சாப்புடலையான்னா கேட்டதுக்கு ஆர்குடியிலயே சாப்புட்டு வந்துப்புட்டதா பதிலு வந்துச்சுப்பா!
அந்த வக்கீலு வந்தா அவனுக்கும் சாப்பாட்டப் பண்ணி, இவுகளும் சாப்பாட்ட முடிச்சிப்புட்டு
வந்துப்புடறாக. இஞ்ஞ ஆக்கி வெச்ச சோறு அப்பிடியே வீணாப் போவுது! ஆக்குன்ன சொத்துல
ஒத்த பருக்கெ கூட மண்ணுக்குப் போவக் கூடாது. வவுத்துக்குத்தாம் போவணும். ஒவ்வொரு பருக்கையிலயும்
வெதைச்சவனோட வேர்வையும் சமைச்சவளோட மனசுமுல்லா கலந்திருக்கு!"ன்னுச்சு வெங்கு.
கேக்க ஆரம்பிச்சா வெங்கு அது பாட்டுக்குல்லா
பேசிட்டு இருக்கும். ஆதாலெ இதுக்கு மேல இஞ்ஞப் பேசிட்டு நிக்குறதுல பிரயோஜனம் இல்லன்னு
நெனைச்சுக்கிட்டு விகடு எதுத்தக் கொல்லைக்குப் போனாம். சுப்பு வாத்தியாரு கொல்லையில
கொத்துற வேலயில மும்மரமா இருந்தாரு. செய்யு இருவாட்சிச் செடிக்குப் பக்கத்துல உக்காந்துகிட்டு
அதோட இலையக் கிள்ளிக் கிள்ளிப் போட்டுக்கிட்டு ஒண்ணுக்கும் கொசக்கெட்ட உருப்படாத
வேலையப் பண்ணிட்டு இருந்தா.
"இன்னிக்காவது அவனெ கிராஸ் பண்ணி
முடிஞ்சிதா? இன்னிக்கும் வாய்தாவா?"ன்னாம் விகடு செய்யுவப் பாத்து. ஒண்ணும் சொல்லாம
விகடுவெ வெறிச்சுப் பாத்தா செய்யு. “என்னாச்சுன்னு சொன்னாத்தானே தெரியும்! அந்த ஆக்கங்கெட்ட
ஆளு என்னத்தெ பண்ணித் தொலைஞ்சாம்?”ன்னாம் விகடு. அதுக்கும் எதுவும் சொல்லாம இப்போ வானத்தெ
வெறிச்சுப் பாக்க ஆரம்பிச்சா செய்யு. “என்னடா இத்து ஒத்த வார்த்தெ வார மாட்டேங்குது?
நாம்ம ன்னா கேக்கக் கூடாததையா கேட்டுப்புட்டேம்?”ன்னாம் விகடு ஒண்ணும் புரியாம. இதுக்கு
மேல அண்ணங்காரனெ சோதிக்குறதுல அர்த்தம் இல்லன்னு நெனைச்சிருப்பா போல செய்யு. வாயைத்
தொறந்தா.
"நாம்ம வக்கீல அடிச்சிட்டேம்ண்ணா!"ன்னா
செய்யு சொரத்தையே யில்லாம.
"கிராஸ் பண்ணலங்ற கோவத்துலயா?"ன்னாம்
விகடு கூர்மையா பாத்தபடிக்கு.
"செருப்பால அடிச்சிட்டேம்ண்ணா!"ன்னா
செய்யு தேய்ஞ்சுப் போன கொரல்ல.
"கையால அடிச்சதுப் பத்தலன்னு செருப்புல
வேறயா அடிச்சே? ஏம் புள்ளே இந்த வேலையப் பண்ணே? நம்ம வக்கீலு கிராஸ் பண்ணலன்னா அதெப்
பத்தி நாம்மப் போயிக் கேக்குறேம்! நீயி ஏம் அவ்சரப்பட்டு அடிச்சி, அதுவும் செருப்பால
வேற?"ன்னாம் விகடு தன்னோட நோப்பாடெ காட்டிக்கிட்ட முடியாம.
"நாம்ம அடிச்சது நம்ம வக்கீல யில்லண்ணா!
அந்தக் கங்காதரம் வக்கீலெ!"ன்னா செய்யு இன்னொரு இருவாச்சு இலையப் பிடிச்சுக் கிள்ளி
எடுத்து பிய்ச்சபடிக்கு.
"அந்த வக்கீலே எதுக்கு அடிச்சே? அந்தச்
சாமியாரு பரதேசிப் பயல அடிச்சாலாவது ஒரு புண்ணியம் உண்டு. அவனெ விட்டுப்புட்டு பொழைப்புக்கு
வாதாட வந்தவனெப் போயி எதுக்கு அடிச்சே?"ன்னாம் விகடு ஒண்ணும் வௌங்காம.
"செருப்பால அடிப்பேம்ன்னேம். எஞ்ஞ
அடிப் பாப்பேம்ன்னாம் அவ்வேம். நீயி சொல்லுவே, நாம்ம செய்வேம்டான்னுப் போட்டு அடிச்சிட்டேம்!"ன்னா
செய்யு என்னவோ சின்ன புள்ளைங்க வெளையாட்டுக்குச் சொல்றாப்புல. அதுக்கு மேல என்னத்தெ
தங்காச்சிக்கிட்டெ கேக்குறதுன்னு அப்பங்காரரு பக்கமா நகந்தாம் விகடு.
"யப்பா! தங்காச்சி என்னத்தெ சொல்லுது?
ன்னா நடந்துச்சு?"ன்னாம் விகடு கொரல்ல கொஞ்சம் பதற்றமா.
கொத்துறதெ நிப்பாட்டிட்டு, "செருப்படிச்
சம்பவமா ஆயிடுச்சுடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நிர்சலனமா சொல்றாப்புல.
"அதெ ஏம் நமக்குப் போன்னப் பண்ணிச்
சொல்லல?"ன்னாம் விகடு விருட்டுன்னு கௌம்புற விரியன் பாம்பெ போல.
"சொன்னா நீயி எதாச்சும் பதட்டப்பட்டுட்டு
ஓடியாந்திடுவீயோன்னு நெனைச்சித்தாம் சொல்லல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பொட்டிப்
பாம்பெ அடக்குறாப்புல.
"ன்னப்பா! எதுக்கெடுத்தாலும் இதெ
மாதிரிக்கிப் பதிலெச் சொல்லிக்கிட்டு. அன்னிக்கு தங்காச்சி கயித்துல மாட்டிக்க நெனைச்சப்பயும்
இதெயே சொன்னீயே! இன்னிக்கும் இதெயே சொல்லுறீயளே?"ன்னாம் விகடு கொரல்ல கொஞ்சம்
கோவம் கலந்தாப்புல.
"நடந்ததெ நடந்துப் போச்சு. அதெ ஒங்கிட்டெ
சொல்றதால மட்டும் மாத்திட முடியுமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பற்று அறுந்துப்
போன மனுஷனப் போல.
"இதென்னப்பா அடிக்க வேண்டிய ஆளெ வுட்டுப்புட்டு
சம்மந்தம் யில்லாத ஆளப் போயி அடிச்சிட்டு வந்து நின்னா அதெ எந்த ஞாயத்துலப்பா சேக்குறது?"ன்னாம்
விகடு நடக்குறதுலயும் ஒரு கரணியம் வேணாமாங்ற மாதிரிக்கு.
"ஆரம்பத்துலயே அவனெ அடிச்சிருந்தா
இந்த நெலைக்கு வந்திருக்காது! அதெ விட்டாச்சு! இப்போ இவனெ அடிக்கிற நெலையில வந்து
நிக்குது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மொறையாத்தாம் முடிச்சு வுழுந்திருக்குறாப்புல.
"ன்னப்பா இத்து? தங்காச்சிப் பாட்டுக்கு
அடிச்சிருக்கு. நீஞ்ஞப் பாட்டுக்கு அசால்ட்டா சொல்றீயளே? அடிக்க வுட்டுப்புட்டு நீஞ்ஞ
என்னத்தெ பண்ணீயே? அவ்வேம் யாரு? ஒரு வக்கீலு! ச்சும்மா இருக்க மாட்டாம்ப்பா! நம்ம
வக்கீலு எஞ்ஞ? இன்னிக்கு வந்தாரா ன்னா?"ன்னாம் விகடு கொஞ்சமாச்சும் எதார்த்த உலகத்துக்கு
வந்து பேசுங்கங்றாப்புல.
"நம்மட வக்கீலு எல்லாம் வந்தாம்.
இத்து அடிச்சதுக்குப் பெறவு ஒரு பயலெ அஞ்ஞக் காணும். சுத்தி நின்ன வக்கீலுங்கத்தாம்
பொண்ண அழைச்சிக்கிட்டு மொதல்ல கெளம்புங்கனாங்க. நாம்ம அழைச்சிக்கிட்டுக் கெளம்பி
வந்துட்டேம்! எல்லாம் மின்னல் மின்னுற நேரத்துல நடக்குது. நம்மள என்னத்தெ பண்டச் சொல்றே?
வேடிக்கெ பாக்கக் கூட நேரம் கெடைக்கலையப்பா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கச்சிதமா
பதிலெ வார்த்தெடுத்துச் சொல்றாப்புல.
"மேக்கொண்டு வக்கீல தொடர்பு கொண்டாவது
என்னத்தெ பண்ணணும்ன்னு கேட்டீயளா? அத்து முக்கியமல்லா! எப்பிடி நடந்துச்சு இந்தச் சம்பவம்?"ன்னாம்
விகடு என்ன நடந்துச்சுங்றதெ ஆதியோட அந்தமா தெரிஞ்சுக்குற நெனைப்புல. சுப்பு வாத்தியாரு
நடந்த கதெயே ஒண்ணு வுடாம சொன்னாரு.
"அப்போ வக்கீலு கிராஸ் பண்ணிருந்தா
இன்னிக்கு இப்பிடி ஒரு சம்பவம் நடக்கப் போறதில்ல?"ன்னாம் விகடு எல்லாத்தையும்
கேட்டு முடிச்ச பெற்பாடு.
"இன்னிக்கு நடக்கப் போறதில்லா. ஆன்னா
என்னிக்கோ ஒரு நாளு நிச்சயம் நடந்திருக்கும்! அவனுவோ பேசுறப் பேச்சு வர வர சரியில்லடாம்பீ!
அவனுகள செருப்பால அடிச்ச வரைக்கும் சரித்தாம். இன்னிக்கும் அடிச்ச அடியப் பாத்துட்டு
ஒதுங்கி ஓடியிருக்கானுவோ சாமியாரு பயலுங்க. அடிச்சா அடியப் பாத்து ஒரு பயலயும் அந்த
எடத்துல காங்கல. எஞ்ஞ ஓடி ஒளிஞ்சான்னுவோன்னு தெரியலடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு
என்னவோ நடந்த சம்பவத்துக்குப் பெருமெ பட்டுக்கிடுறாப்புல.
"நாம்ம வக்கீலத் தொடர்பு கொண்டு
என்னத்தெ பண்ணுறதுன்னு கேக்குறேம்? ஏம் இப்பிடி பண்ணீயேன்னு கேட்டாத்தாம் சரிபட்டு
வரும்ப்பா!"ன்னாம் விகடு இப்போ உண்டாயிருக்குற நெலமைக்கு எதாச்சும் பண்டணும்ங்றாப்புல.
"அவ்வனெ வக்கீலா வெச்சதெ தப்பு. அவனாலத்தாம்
இந்த அளவுக்கு ஆயி நிக்குது. நாமளும் ஒரு ரண்டு கேள்வியாவது கேட்டு முடிச்சித் தொலைடான்னு
தல தலயா அடிச்சிக்கிட்டேம். கேக்கறாப்புல யில்ல. மொறையா செய்யுறேம்ன்னு சொல்லிட்டு
இப்பிடி மொறைகெட்ட தனமா நடந்ததுதாம் மிச்சம்!"ன்னு இவ்வளவு நேரமா தெளிஞ்ச நீரோடை
போல பேசுன சுப்பு வாத்தியாரு இப்போ தலையில கைய வெச்சிக்கிட்டு உக்காந்துட்டாரு.
"யிப்போ என்னத்தெ பண்ணுறதுண்ணா?"ன்னா
இருவாச்சி செடியோட இலைய கிள்ளுறதெ விட்டுட்டு பின்னாடியால வந்து நின்னு செய்யு. விகடு
தலைய ஒரு சொழட்டுச் சொழட்டிக்கிட்டாம். நல்லாவே படபடன்னு நெட்டி முறிஞ்சது.
"இதெ பண்ணுறதுக்கு மின்னாடி யோசிக்கணும்.
பண்ணிட்டு என்னத்தெ யோசிக்கிறது? ஆனது ஆயிடுச்சு. இனுமே இதெ எப்பிடி எதிர்கொள்ளணும்ன்னுத்தாம்
பாத்தாவணும்!"ன்னாம் விகடு அடுத்தது ஆவுறதெப் பாக்குறதுதாம் நல்லதுங்றாப்புல.
சொன்னவேம் ஒடனே அதுக்கேத்தாப்புல பையில இருந்த போன எடுத்து வக்கீல் திருநீலகண்டனுக்குப்
போன அடிச்சாம். அவரு போன எடுத்ததும், விகடு அவ்வேம் பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிட்டாம்.
"என்னங்கய்யா இப்பிடிப் பண்ணிட்டீயே? ஒஞ்ஞள நம்பித்தானே யப்பாவையும், தங்காச்சியையும்
அனுப்பி வுடுறேம். நீஞ்ஞப் பாட்டுக்கு நடுரோட்டுல வுட்டுப்புட்டு ஏதோ நடக்கட்டும்ன்னு
ஒஞ்ஞப் போக்குக்கு எஞ்ஞயோ ஓடி ஒளிஞ்சிட்டீயளே? அடுத்ததா மேக்கொண்டு என்னத்தெ செய்யுறதுன்னு
கூட சொல்லாம எஞ்ஞ இருக்கீயே? இஞ்ஞ இவுங்கப் பாட்டுக்கு வந்து கொல்லையில உக்காந்துகிட்டு
யோஜனையில கெடக்குறாங்க! கிராஸ்ல ரண்டு கேள்வியக் கேட்டு வுட்டுப் போறதில என்னத்தெ
கொறைஞ்சிடப் போறீயே? அதுக்குத்தானே ஒஞ்ஞள வக்கீலா வெச்சிருக்கேம். நீஞ்ஞ வர்றதே எப்பவாச்சும்.
அதுல வர்றப்பயும் கிராஸ்ல ரண்டு கேள்வியக் கேக்கலன்னா என்னத்தெ சொல்றது? நீஞ்ஞ சரியா
கிராஸ்ஸ நடத்தி நறுக்குன்னு நாலு கேள்வியக் கேட்டிருந்தாலே அவனுவோ பாட்டுக்கு அடக்கம்
ஒடுக்கமா போயிருந்திப்பானுவோ! அப்பிடித்தானேய்யா ஜீவனாம்ச வழக்குலல்லாம் கேள்விகளக்
கேட்டீயளே? அதெ கேள்வியக் கூட இஞ்ஞ அப்பிடியே கேட்டிருக்கலாம்! என்னத்தாம் ஆச்சு ஒஞ்ஞளுக்கு?"ன்னாம்
விகடு பொட பொடன்னு பனை மட்டெ போட்ட கூரையில கொட்டுற மழையப் போல.
"எல்லாமே எதிர்பார்க்காம நடந்துட்டு
பிரதர். அவனுங்க அப்பிடிப் பேசுவானுங்கன்னு நாமளும் எதிர்பாக்கல. ஒங்க தங்கச்சியும்
அப்பிடிப் பண்ணுவான்னும் நாம்ம நெனைச்சிக் கூட பாக்கல. எல்லாம் பிராக்சன் ஆப் செகண்டுல
நடந்து முடிஞ்சிடுச்சு. அந்த எடத்துல நிக்குறது யாருக்கும் நல்லதில்லன்னு ஒடனே அந்த
எடத்தெ விட்டு எஸ் ஆயாச்சு! இதாம் நடந்துச்சு!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் கொஞ்சம்
கூட தன் மேல எந்த வெதமான தப்பும் இல்லாத மாதிரிக்கு.
"யிப்போ என்னத்தெ பண்ணுறது?"ன்னாம்
விகடு குறுக்கெழுத்துப் புதிர்ல விடை தெரியாம தவிக்குறவனெப் போல.
"நாம்ம அந்த வக்கீல்கிட்டெ போன அடிச்சிப்
பேசிட்டேம். தாம் தூம்ன்னு குதிச்சாம். நீ என்னத்தெ வேணும்ன்னாலும் குதின்னு நாம்ம
பேசுனதுல பய எங்கயும் முண்ட முடியல. நாளைக்கி போலீஸ் ஸ்டேசன்ல வெச்சி சமாதானமா பேசி
விட்டுப்புடலாம்! நீஞ்ஞளும் வந்துடுங்க!"ன்னாரு வக்கீல் பிரச்சனைய ஒரு முடிவுக்குக்
கொண்டு வந்துப்புடலாம்ங்ற மாதிரிக்கு.
"எஞ்ஞ?"ன்னாம் விகடு போற எடம்
புரியாம.
"ஆர்குடி!"ன்னாரு வக்கீல் தெசைய
காட்டுறாப்புல.
"இன்னிக்கு நடந்த சம்பவத்துக்கு ஒடனே
நாளைக்கு வர்றச் சொல்றீயளே? அவ்வேம் பாட்டுக்கு அஞ்ஞ ஆளெ தயாரு பண்ணிட்டு வர்ற எஞ்ஞள
ஒதைச்சி விட்டாம்ன்னா என்னத்தெ பண்ணுறது?"ன்னாம் விகடு தனக்குள்ள பயத்தெ கேக்குறாப்புல.
"அப்பிடில்லாம் நடக்காது பிரதர்!
அதுக்கு நாம்மப் பொறுப்பு!"ன்னாரு வக்கீல் அலட்சியமா சொல்றாப்புல.
"இன்னிக்கு நடந்தச் சம்பவத்துக்கு
யாரு பொறுப்பு?"ன்னாம் விகடு பட்டுன்னு எசப்பாட்டு பாடுறாப்புல.
"இன்னிக்கு நடந்ததெ வுடுங்க. இனுமே
நடக்கப் போறதெப் பாருங்க!"ன்னாரு வக்கீல் சமத்காரமா விகடுவெ அடக்குறாப்புல.
"அதாங் பாத்துக்கிட்டுத்தானே இருக்குறேம்.
அடுத்த கிராஸூக்கு நாஞ்ஞ ரண்டாயிரம்லாம் கொடுக்க முடியாது. அதுல எஞ்ஞ தப்பு எதுவும்
யில்ல. முழுக்க முழுக்க எல்லாம் தப்பும் ஒஞ்ஞப் பக்கத்துல நடந்தது. அதுக்கு நாஞ்ஞ எந்த
வெதத்துலயும் பொறுப்பேத்துக்க முடியாது. நீஞ்ஞளே ஒஞ்ஞ சொந்தக் காசியில ரண்டாயிரத்தெ
கட்டிக்கிட வேண்டியது. அவனெ கிராஸ் பண்ணிக்கிட வேண்டியது!"ன்னாம் விகடு அதெத்
தாண்டி அடுத்தக் கட்டத்துக்குப் போறாப்புல.
"அது ஒரு பெரிய விசயமில்ல பிரதர்.
அதெ நாம்ம பண்ணிக்கிறேம். வழக்கெப் பொருத்த வரைக்கும் நீங்க எதுவும் கவலைப்பட வேணாம்!
நாளைக்கி மட்டும் தங்காச்சிய அழைச்சிக்கிட்டு டவுன் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டுப்
போயிடுங்க! அப்பிடியே கோர்ட்டுலயும் ஆஜராயி ஜட்ஜ்கிட்டெ இவனுவோ பண்ணுற அழிச்சாட்டியங்கள
ஒரு கடுதாசியா கொடுத்துப்புடலாம்!"ன்னாரு வக்கீலு சூதானமா பேசுறாப்புல.
"நாளைக்கு ஆர்குடி வர்றதுங்றது நல்லதுக்கில்லங்கய்யா!
அவ்வேம் அடிபட்ட பாம்பு மாதிரிக்கி. வேட்டையில தப்புன கரடியப் போல. கொத்தாமலோ, பெரண்டாமலோ
வுட மாட்டாம். நாளைக்கு ஆர்குடிக்கு வர்றதுங்றது ஒஞ்ஞளுக்கே நல்லதில்ல. சில நாளுக்கு
இந்தப் பெரச்சனையே இப்பிடியே வுட்டுப்புட்டு இதெ கொஞ்சம் ஆறப் போடுங்க. அதுதாம் இதுக்கேத்த
ஒரு வழி. அடிப்பட்டவேம் ஒரு ஆம்பள. அடிச்சவ ஒரு பொம்பளே. அதெயே மொதல்ல அவனால தாங்க
முடியாது. கோர்ட்டுக்கு எதுத்தாப்புல செருப்படி வாங்குனவேம் அதெ நெனைப்புலத்தாம் இருப்பாம்.
இனுமே அவனால தலெநிமுந்து எந்த கோர்ட்டுலயும் வாதாட முடியாது. அதுக்குப் பழிவாங்குறாப்புல
நிச்சயம் எதாச்சும் செய்வாம். அதால நாளைக்கு நாஞ்ஞ ஆர்குடிப் பக்கம் வர்றது எஞ்ஞளுக்கு
நல்லதில்ல. இன்னும் சொல்லப் போனா அத்து எந் தங்காச்சி உசுருக்கும் கூட பாதுகாப்பில்ல.
அவ்வேம் நாளைக்கு என்னத்தெ வேணும்ன்னாலும் செய்யலாம்! அதெ கற்பனெ கூட பண்ணிப் பாக்க
முடியாது!"ன்னாம் விகடு தன்னோட சந்தேகத்தெ ஒடைச்சிப் பேசுறாப்புல.
"புரியாம பேசாதீங்க பிரதர்! நாளைக்கி
நான்தாம் ஆர்குடியில இருக்கேமே! என்னை மீறி இந்த திருநீலகண்டனெ மீறி என்னத்தெ நடந்துப்புடும்ன்னு
நெனைக்குறீங்க?"ன்னாரு வக்கீல் பயத்துக்கோ, சந்தேகத்துக்கோ வேலையில்லங்ற மாதிரிக்கு.
"இன்னிக்கு ஒஞ்ஞள மீறி என்னத்தெ நடந்துச்சோ,
அதேத்தாம் நாளைக்கும் நடக்கும்ன்னு நெனைக்கிறேம். இன்னிக்கே நீஞ்ஞ ஒரு தகுதியான ஆளா
மட்டும் இருந்திருந்தா இந்த வெவகாரத்தெ இன்னிக்கேப் பேசி முடிச்சிருக்கணும். ஆன்னா
நீஞ்ஞ முடிக்க மாட்டீயே. நீங்கத்தானே அந்த எடத்தெ வுட்டு மொதல்ல ஓடியிருக்கீங்க. நீஞ்ஞ
நெனைச்சிருந்தா அதெ எப்பிடியோ முடிச்சிருக்கலாம். அதெ இன்னிக்கே முடிச்சா அந்தப் பெரச்சனெ
இன்னிக்கே முடிஞ்சிடுது. அதுக்குப் பெறவு அதுக்கு உசுரு யில்லாமப் போயிடுது. இந்தப்
பிரச்சனைய இன்னிக்கு முடிக்காம விட்டாத்தானே அதுக்கு வளர்றதுக்கு வாய்ப்பு உண்டாவுது.
அப்பத்தானே அத்து கேஸாவும். அதெ எடுத்து நீஞ்ஞ வாதாடலாம்!"ன்னாம் விகடு தலையில
ஒரு குட்டு வெச்சு சொல்றாப்புல.
"கோவத்துல எதாச்சும் பேசாதீங்க பிரதர்!
இந்த ஒரு கேஸ்ஸ எடுத்துத்தாம் நாம் கோடீஸ்வரன் ஆவணும்ன்னு அவ்சியமில்ல. நமக்கு ஆயிரத்தெட்டு
வழக்குக கெடக்கு. அதுல பலதையெ எடுத்து நடத்த முடியல. சரியா ஆஜர் கொடுக்க முடியுறதுல்ல.
நமக்கிருக்குறது பல கேஸ்க ஆங். அதுல இத்து ஒண்ணு அவ்ளோத்தாம். நாளைக்கு வந்தா ஒஞ்ஞளுக்கு
நல்லது. வராட்டி அதோட பின் விளைவுகள நீஞ்ஞத்தாம் ஏத்துக்கிட்டு ஆவணும்! அதுக்கு நாம்மப்
பொறுப்பேக்க முடியாது!"ன்னாரு வக்கீலு ஒரு மெரட்டலெ கொடுக்குறாப்புல.
"இதுவரைக்குமே நல்லாவே பொறுப்பேத்திருக்கீயே!
போதும் போதும் அந்தப் பொறுப்பு!"ன்னாம் விகடு குத்திக் காட்டிப் பேசுறாப்புல.
"புரியாம பேசக் கூடாது பிரதர்! படிச்ச
நீங்களாச்சும் நெலமெயப் புரிஞ்சிக்கிடணும். நாம்ம இங்க திருவாரூரு ஆபீஸ் வந்ததிலேந்து
ஒங்க தங்கச்சிக்கு ஏகப்பட்ட போன அடிச்சிக்கிட்டு இருக்கேம். ஒரு காலை எடுத்துக் கூட
அட்டெண்ட் பண்ணல. நம்மள என்னத்தெ பண்ணச் சொல்றீங்க பிரதர்?"ன்னாரு வக்கீல் பெரமாதமான
ஒரு கேள்விய கேட்டுப்புட்டாப்புல.
"விரும்பத் தகாத சம்பவத்தெ ஒண்ண நடத்தி
முடிச்சிட்டீயே! எதெயும் நடக்குறதுக்கு மின்னாடி தடுக்கணும். வெள்ளத்தெ வர வுட்டுப்புட்டு
என்னத்தெ அணையப் போடுறது?"ன்னாம் விகடு அந்தக் கேள்விக்கெல்லாம் பதிலே இல்லாததப்
போல.
"நீங்க விரக்தியில பேசுறீங்க பிரதர்!
கொஞ்சம் நிதானமா யோசிச்சு நாளைக்கு அழைச்சிட்டு வர்ற வழியப் பாருங்க! நாம்ம நாளைக்கு
ஆர்குடியிலத்தாம் இருப்பேம்!"ன்னாரு வக்கீல் தலையில அடிச்சு சத்தியம் பண்டுறாப்புல.
"நீஞ்ஞளும் போவாதீயே! போனீயன்னா
அடி வாங்காம திரும்ப முடியாது. அதுக்கு ஒடம்புல தெம்பிருந்தா கெளம்புங்க!"ன்னாம்
விகடு முன்கூட்டியே வானிலைய வாசிச்சுச் சொல்றாப்புல.
"நீங்க ஓவரா கற்பனெ பண்ணுறீங்க பிரதர்!
நாளைக்கு தங்கச்சியையும், அப்பாவையும் அழைச்சிக்கிட்டு வாங்க. நாம்ம சமாதானமா பண்ணி
விடுறேம். அந்த வக்கீல் என்னவோ இன்னிக்குப் பூரா ஆர்குடி டவுன் போலீஸ் ஸ்டேசன்லயே
கெடந்ததா நமக்குத் தகவல் வந்திருக்கு. அத்தோட பார் கெளன்சில்ல வேற புகார் பண்ணிருக்காம்.
ஆர்குடி பார் கெளன்சில்ல தனிப்பட்ட விவகாரங்கள்ல தலையிட முடியாதுன்னு சொன்னதுக்கு
அவ்வேம் தஞ்சாவூரு பார் கெளன்சில்ல புகார் பண்ணிருக்காம். ஆர்குடியில இவனெ யாரும் கண்டுக்கிட
மாட்டாங்க. காரணம் ஆர்குடியில கேஸ் நடக்குறப்போ ஆர்குடியிலேந்து ஒரு வக்கீல் ஆஜராவணும்ன்னுத்தாம்
நெனைப்பாங்க. ஆன்னா தஞ்சாவூருலேந்து சும்மா இருப்பாங்கன்னு எதிர்பாக்க முடியாது. அவுங்க
ஆர்குடிக்கு பிரசர் கொடுக்கலாம். இந்தப் பிரச்சனை அதால எப்.ஐ.ஆர். ஆகாம பாத்துக்கிடணும்.
அப்பிடி ஆன்னா ஒங்க தங்கச்சிக்குத்தாம் பின்னாடி கவர்மெண்டு வேலைன்னு வர்றப்போ பிரச்சனை
ஆவும். ஆக சொல்றதெ புரிஞ்சிப்பீங்கன்னு நெனைக்குறேம்! நாளைக்கு கண்டிப்பா வந்துடுவீங்கன்னு
நெனைக்கிறேம்!"ன்னாரு வக்கீல் கிடுக்கிப்பிடிப் போட்டு பேசுறாப்புல.
"நாம்ம ஒஞ்ஞள நம்பி வர்றாப்புல யில்ல!"ன்னு
பட்டுன்னு மொகத்துல அடிச்சாப்புல சொல்லிட்டு சட்டுன்னுப் போன வெச்சிட்டாம் விகடு.
அவ்வேம் அப்பிடி வைப்பாம்ன்னு வக்கீல் எதிர்பாக்கல போல. அவரு விகடுவுக்கு ஒடனே போனெ
அடிச்சாரு. விகடு எடுக்க விரும்பாதவனப் போல போன்லேந்த வர்ற சத்தத்தெ நிப்பாட்டுனாம்.
அவ்வேம் எடுக்காததப் பாத்துத் திரும்ப திரும்ப விகடுவுக்குப் போன அடிச்சிக்கிட்டு
இருந்தாரு வக்கீலு. ஆன்னா விகடு அவரு அத்தனெ மொறை அடிச்சிக்கிட்டுக் கெடந்ததுக்குப்
போன சுத்தமா எடுக்கல. போன் பாட்டுக்கு அப்பைக்கப்போ சத்தம் கொடுத்துக்கிட்டெ கெடந்துச்சு.
*****
No comments:
Post a Comment