20 Jan 2021

செருப்படி சம்பவம்!


 செருப்படி சம்பவம்!

செய்யு - 692

            வானத்துல கருமேகங்களும் சூழல. மின்னல் எதுவும் வெட்டல. இடிச் சத்தமோ, காத்துச் சத்தமோ இல்ல. கடல்லயும் அலைக வேகமாவோ மெதுவாவோ இருந்திருக்காது, அல்லது வீசுன அலை அப்பிடியே நின்னிருக்காது. சூரிய வெளிச்சம் நல்லா பல்லக் காட்டி இளிச்சிக்கிட்டு இருந்துச்சு. நல்ல வெக்கெ.

            "என்னப்பா பங்காளி ஒன்னோட ஆளோட நெலமெ இப்பிடியாயிடுச்சு? ச்சச்சோ நாம்ம எதிர்பாக்கவே யில்ல! இதெல்லாம் ரொம்ப கேவலம்ப்பா! ஆன்னா கேவலமே இல்லங்ற மாதிரிக்கி அளந்து விட்டுருப்பீயே?"ன்னாரு கிட்டக்க வந்த வக்கீல் கங்காதரன் திருநீலகண்டனப் பாத்து ச்சும்மா கெடக்குற வெடிய திரியக் கிள்ளி வுடுறாப்புல.

            "அவுங்களே ரொம்ப டென்ஷன்ல இருக்காங்க. பேசாமப் போயிடு பங்காளி. நீயி வேற டென்ஷன் பண்ணி விட்டுட்டு இருக்காதே. ஏதோ இத்தனெ நாளு வேடிக்கையா, விளையாட்டா பேசிட்டு இருந்தேம். இன்னிக்கு அது வேணாம். இன்னிக்கு அந்த மூட்லயே நாம்ம இல்ல!"ன்னாரு திருநீலகண்டன் எல்லாம் சடவாப் போச்சுங்ற மனநெலையில.

            "பாருய்யா! பங்காளிக்கு மூடுல்லாம் வேணுமாம். மூடு இல்லன்னா பேச மாட்டாராம். வேடிக்கெ பண்ண மாட்டாராம். வெளையாட மாட்டாராம். கிராஸ்ஸூ கூட பண்ண மாட்டாராம்!"ன்னு பகபகன்னு சிரிக்க ஆரம்பிச்சாரு கங்காதரன் கோவத்தெ கௌப்பி வுடுறாப்புல.

            "இப்பத்தானே கலியாணம் ஆயிருக்கு. மூடெல்லாம் அஞ்ஞப் போயிருக்கும். அதாங் இஞ்ஞ மூடு வேல செய்ய மாட்டேங்குது! இப்பிடி தாம் பொண்டாட்டியோட சந்தோஷமா இருந்துகிட்டு இன்னொரு பொண்ணோட சந்தோஷத்துல மண்ணள்ளிப் போட்டுப்புட்டாப்புலயே!"ன்னாம் பாலாமணி நக்கலா சிரிச்சிக்கிட்டெ ரெட்டை அர்த்தத்தெ பொடிச்சு வெச்சுப் பேசுறாப்புல.

            "வேணாம் பாஸ்! இன்னிக்கு நிலமெ சரியில்ல. எல்லாம் கலைஞ்சிப் போவ வேண்டிய எடத்துக்குப் போயிடலாம்! ஊரு சேர்ற வேலையப் பாக்கலாம்! இன்னொரு நாளுக்குப் பாத்துக்கலாம். வழக்குல இதெல்லாம் சகஜம்தாம். எப்போதும் யானைக்கு மட்டும் காலம் வராது. பூனைக்கும் ஒரு காலம் வரும்!"ன்னாரு திருநீலகண்டன் நேரம் கெட்ட நேரத்துல நேரம் சரியில்ன்னு சாட்சியம் பண்ணுறாப்புல.

            "அடப் பாருய்யா பங்காளி என்னென்னவோ பேசுறாரு! யாருய்யா இஞ்ஞ யானெ? யாருய்யா பூனெ? நாஞ்ஞ யானென்னா, நீஞ்ஞ பூனெயா? அதுவுங் குட்டிப் போட்ட பூனெய்யா? அதாங் குட்டிப் போட்ட பூனெயப் போல குட்டிக் கூடயா சுத்திட்டு நிக்குதீயா?"ன்னாரு கங்காதரன் இன்னிக்கு எப்பிடியும் ரண்டுல ஒண்ணுத்தெ நடத்திட்டு அழுகாச்சியப் பாத்துட்டுத்தாம் போவேம்ங்றாப்புல.

            "சார்! நாம்ம இங்க நிக்க வேணாம். நீங்க ஸ்டார்ட் பண்ண வண்டிய திரும்ப ஸ்டார்ட் பண்ணி கிளம்பிக்கிட்டே இருங்க! இவனுங்களுக்கு இன்னிக்கு நேரம் சரியில்ல! சொல்றதெ கேக்குறாப்புல தெரியல!"ன்னாரு திருநீலகண்டன் சுப்பு வாத்தியார்ரப் பாத்து துஷ்டரைப் பாத்தா தூரம் போயிடுங்றாப்புல.

            "யாருக்குப் பங்காளி நேரம் சரியில்லே? நமக்கெல்லாம் நேரம் சரியாத்தாம் இருக்கு. ஒஞ்ஞளுக்குத்தாம் பங்காளி நேரம் சரியில்லே. அதென்ன பங்காளி எதெ சொன்னாலும் மாத்தி மாத்திச் சொல்றே. நீயி யானெ மாதிரி இருந்துகிட்டு எஞ்ஞள யானெங்றே? நாஞ்ஞ ன்னா ஒன்னயப் போல யானெ சைஸூக்கா இருக்கேம். பூனெ சைஸூக்குத்தானே இருக்கேம். இப்போ நேரம் வேற சரியில்லங்றே. எஞ்ஞளுக்கு நேரம்லாம் சரியாத்தாம் இருக்கு. ஒஞ்ஞளுக்குத்தாம் பங்காளி நேரம் சரியில்ல. அதாங் இப்பிடி கேஸ்ல வுட்டுப்புட்டு நிக்குறே. இப்பிடி விடுவேன்னு சத்தியமா நாம்ம எதிர்பாக்கல பங்காளி. அதெப்படி பங்காளி இப்பிடியில்லாம் ஒன்னால பண்ண முடியுது? எந்த லாயரும் பண்ணாத வேலையெல்லாம்ல பண்ணுற? கத்துக்குட்டி லாயர் கூட கன்னாபின்னான்னு நாலு கேள்விக் கேப்பாம் பங்காளி? அவ்ளோ பயமா நம்ம டாக்கடர்கிட்டெ? உண்மெயெ சொல்லு பயந்துட்டதானே?"ன்னாரு கங்காதரன் கழுவிக் கழுவி ஊத்துறதெ இன்னிக்கு கொறைக்குறாப்புல இல்லேங்ற மாதிரிக்கு.

            "பயம்லாம் ஒண்ணும் இல்ல. ஒரு புயலுக்கு முன்னாடி அமைதி இருக்கும். அந்த அமைதித்தாம் இது!"ன்னாரு திருநீலகண்டன் அண்ணாந்துப் பாத்துத் தலையக் கோதிக்கிட்டு ஒரு தத்துவவாதியப் போல.

            "மறுபடியும் பாருடா! பங்காளி டிசைன் டிசைன்னா அடிச்சி விடுறாப்புல. ஏம் பங்காளி இதெல்லாம் கொஞ்சம் கோர்ட்டுல காட்டுனா ஒஞ்ஞ ஆளுங்களாச்சும் சந்தோஷப்படுவாங்க. இப்பிடி சவத்துக்குச் சோத்த ஊட்டுறாப்புல கோர்ட்டுக்கு வெளியில சொல்றீயே? இதெல்லாம் கறிக்காவுமா? காரியத்துக்காவுமா? ஏம் பங்காளி இப்பிடி காமெடி பண்டுறே? சிரிப்புச் சிரிப்பா வர்து பங்காளி!"ன்னாரு கங்காதரன் சிரிப்பெ அடக்க முடியாம வாயை மூடிட்டுச் சிரிக்குறாப்புல.

            "யப்பாடிகளா போதும்டா! வந்து கார்ல ஏறுங்க. ரொம்ப ஆத்திரம் பண்ணிக்கிட்டு கெடக்காதீங்க. ஏதோ ஒளைச்சலுக்கு நாலு வார்த்தெ வேடிக்கையா நையாண்டியா பேசுனமா கெளம்புனமான்னு இருக்கணும்!"ன்னு ராசாமணி தாத்தா அவுங்கள எல்லாரையும் பாத்து ஒரு எச்சரிக்கெ பண்ணுனுச்சு.

            "நீயிச் சித்தெ ச்சும்மா இருப்பா! நாம்ம ன்னா அழுவ வெச்சியா வேடிக்கெ பாத்துட்டு இருக்கேம்? சிரிக்க சிரிக்க அப்பிடியே சிரிக்க வெக்குறாப்புல பேசித்தானே வேடிக்கெ பாத்துட்டு இருக்கேம்! நம்மள என்னமா அழுவு வுட்டுருப்பா அவ்வே! என்னவோ ஸ்டேசன்ல புகார்ர கொடுக்குறாளாம். சோஷியல் ‍வெல்பேர்ல புகார்ர கொடுக்குறாளாம். கோர்ட்டுல ஒண்ணுக்கு ரண்டா கேஸ்ஸப் போடுறாளாம். அதுக்குல்லாம் ன்னா பயந்தாப் பூடுவோம்? எல்லாத்துக்கும் சேத்து வெச்சு அடிச்சோம் பாரு ஆப்பு. யிப்போ இவளோட வக்கீலால கேஸ்‍ஸைய நடத்த முடியலையே? இனுமே என்னத்தெ பண்ணப் போறாளோ? இவளெ யிப்பிடியே வுட்டா யிப்பிடித்தாம் போயிக்கிட்டெ யிருப்பா. கொஞ்சம் புத்தியக் கொடுத்தாத்தாம் ஒழுங்காயிருப்பா!"ன்னாம் பாலாமணி மொத்த பழி வாங்குற வேகத்தையும் ஒட்டுமொத்தமா தீத்துக்குறாப்புல.

            "பேசுறதெ மருவாதியாப் பேசுங்க. யில்ல மருவாதிக் கெட்டுப் போயிடும்!"ன்னா செய்யு அது வரைக்கும் வாயத் தொறக்காம இருந்தவெ பொறுமல் தாங்காம.

            "இந்தாருங்கடா இதெல்லாம் ந்நல்ல பேச்சுல்ல. கெளம்புங்க மொதல்ல. வண்டியப் பாக்க ஏறுங்க."ன்னுச்சு ராசாமணி தாத்தா மறுக்கா ஒரு எச்சரிக்கெ வுடுறாப்புல. அதோட மனசுக்கு ஏதோ தப்பா நடக்கப் போவுதுங்ற மாதிரிக்குத் தோணிருக்கும் போல.

            "ச்சுமா கெடய்யா கெழவா! ஒம் பேரையுந்தாம் சேத்து வன்கொடுமெ வழக்குல கொடுத்திருக்கு. உத்தரவு மட்டும் எக்குதப்பா ஆனா ஜெயில்லப் போயி களியத் திங்க வேண்டித்தாம். அதெ ப் புரிஞ்சிக்காம பேசுறே? அந்தப் பக்கம் ஜெயிக்க வேண்டிய கேஸையே ஒண்ணும் யில்லாம அடிச்சிக்கிட்டு இருக்கேம். இதையெல்லாம் கொண்டாடணும்யா கெழவா! ச்சும்மா தாடிய வளத்து வெச்சிக்கிட்டாப் போச்சா? மூளெயக் கொஞ்சமாச்சும் வளத்து வெச்சிக்கணும்!"ன்னாம் பாலாமணி அப்பங்காரருன்னு கூட பாக்காம ராசாமணி தாத்தாவெ தலையில குட்டுறாப்புல.

            "கரக்டா சொன்னீங்க டாக்டர்! ஒங்களோட எக்ஸ் ஒய்ப் பாருங்க மருவாதிக் கெட்டுடும்ங்குது. அப்பிடி என்னத்தெ இத்து மருவாதியில இருக்கு?"ன்னாரு கங்காதரன் வலது கைய தாவாங்கட்டைக்குக் கொடுத்துக்கிட்டு எடது கையால வலது கையோட முட்டியெ பிடிச்சுக்கிட்டு.

            "இந்தாருங்கப்பா! அவுங்கள அனுப்பிச்சிடுவேம். நாம்ம வேணும்ன்னா எவ்ளோ நேரமானாலும் பாத்துப் பேசிப்பேம். அந்தப் பொண்ணெ உணர்ச்சிவசப்படுற பொண்ணு. நொந்துப் போயி நிக்குற இந்த நேரத்துல எதெ பேசும்? எதெ பண்ணுங்றது தெரியாது. அநாவசியமா அதெ தூண்டி விட்டுட்டு வேடிக்கெ பாக்காதீங்க!"ன்னாரு திருநீலகண்டன் கைய எடுத்துக் கும்புட்டுக்கிட்டு.

            "அட பங்காளி! பொண்ணு உணர்ச்சிவசப்படுறதெ யெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கே. எப்பிடிப் பங்காளி? ஏதோ விசயம் நடந்தாப்புலல்ல இருக்கு. இதெ வெச்சி அதெ கிராஸ் பண்ணுறப்ப வெளுத்து எடுக்கிறேம் பாரு! ச்சும்மா கூண்டுல வெச்சிக் கிழி கிழின்னு கிழிக்கிற கிழியில பங்காளி நீயும் நாறிப் போயித் தொங்குறீயா இல்லையான்னு பாரு! ஆன்னா பாரு, இதுக்கெல்லாம் பயந்துகிட்டுக் கையெடுத்துக் கும்புட்டுகிட்டுக் கால்ல வுழுவ நெனைக்காதே பங்காளி!"ன்னாரு கங்காதரன்.

            "இந்தா செய்யு! இதுக்கு மேல இஞ்ஞ நிக்குறது நல்லதில்ல! மொதல்ல வண்டியில ஏறு! இத்து ஏதோ விபரீதத்துக்குப் பேசிட்டு நின்னுகிட்டு இருக்குறாப்புல இருக்கு. நாயீ கொரைச்சா நாம்மத்தாம் நவுந்துப் போயாணும். அதுகிட்டெ போயி வாதம் வெச்சிக்கிட்டு இருக்க முடியாது!"ன்னு சுப்பு வாத்தியாரு ஸ்டார்ட் பண்ண டிவியெஸ் பிப்டியோட ஸ்டாண்ட எடுத்து விட்டு வண்டியில உக்காந்தாரு.

            "யில்லப்பா இதெ யிப்பிடியே விட்டுக்கிட்டுப் போயிட்டு இருக்க முடியாது. அதென்னப்பா எப்பப் பாத்தாலும் வம்ப வெச்சிக்கிட்டுக் கோர்ட்டுக்கு வர்றப்பயும் போறப்பயும் பெரச்சனெ பண்ணிட்டு இருந்தா எப்பூடி? இன்னிக்கு அதுக்கு ஒரு முடிவெ கட்டியாவணும்! யில்லன்ன சரிபட்டு வாராது!"ன்னா செய்யு வரிஞ்சு கட்டிட்டு ஒரு முடிவெ இப்பவே பண்ணியாகணுங்றாப்புல.

            "நீ கெளம்பும்மா! அப்பா சொல்றதுதாம் சரி! வண்டியில ஏறு. நாம்ம இவுங்கள கவனிச்சி விட்டு அனுப்பி விடுறேம்!"ன்னாரு திருநீலகண்டன் கழுவிக் கழுவி ஊத்துற நேரத்துல நழுவுற மீனா நழுவி ஓடிடுறதுதாங் நல்லதுங்றாப்புல.

            "நீஞ்ஞ எத்தனெ தடவங்கய்யா கோர்ட்டுப் பக்கம் வர்றீயே? ஆடிக்கொரு தவா, அமாவாசிக்கு ஒரு தவா வர்றீயே! ஒவ்வொரு தவாவும் நாம்மத்தானே இவுங்க பண்ணுற டீசிங்க அனுபவிக்க வேண்டியதா இருக்கு. இன்னிக்குக் கெளப்பி வுட்டுப்புடுவீயே. நாளைக்கும் இதெ மாதிரிக்கும் இவனுங்க இதெ மாதிரி பண்ணிட்டு யிருப்பானுவோ. அப்போ நீஞ்ஞ பாட்டுக்கு எஞ்ஞயோ இருப்பீயே. ஒவ்வொரு தவாவும் இந்த வேதனைய நரகத்தெச் சந்திக்கிறது நாம்மத்தானே?"ன்னா செய்யு வேடிக்கெ பாக்குறவனுக்கு என்னத்தெ தெரியும் சித்தரவதையோட வலிங்ற மாதிரிக்கு.

            "ன்னா பங்காளி! ஒங்க ஆள இப்பிடி மருவாதிக் கொறைவா பேச வுட்டுப்புட்டு வேடிக்கெ பாத்துட்டு இருக்குறீயே? நாஞ்ஞல்லாம் எம்மாம் டீசன்டா பேசுறேம்?"ன்னாரு கங்காதரன் கை வெரல்களக் கோத்துக்கிட்டு அப்பிடியே தலைக்கு மேல தூக்கி நெட்டி முறிச்சுக்கிட்டு.

            "இத்து நல்லதுக்கில்ல. நீங்களும் கெளம்ப மாட்டேன்னு நின்னு அழிச்சாட்டீயம் பண்ணிக்கிட்டு நிக்குறீங்க. இந்தப் பொண்ணும் ரண்டுல ஒண்ணு பாக்காம விட மாட்டேன்னு நின்னுகிட்டு இருக்கு. கோர்ட்டு வாசல்ல நாம்ம நின்னுகிட்டு இருக்கேம்ங்றதெ எல்லாரும் மறந்துகிட்டு இருக்கேம்!"ன்னாரு திருநீலகண்டன் ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்தா அதுக்குத் தாம் பொறுப்பில்லங்ற மாதிரிக்கு.

            "அதெல்லாம் செரி பங்காளி! பொண்ணு உணர்ச்சிவசப்படும்ன்னு சொன்னீயே! அதெப் பத்தி சொல்லவே மாட்டேங்றீயே? ஒம் பொண்டாட்டி அளவுக்கு உணர்ச்சிவசப்படுதா? அதெத் தாண்டி உணர்ச்சிவசப்படுதா? நீயி ஒரு தயிர்சாதமாச்சே. அதெல்லாம்மா புரியுது? சொன்னீன்னா நாமளும் டெஸ்ட் பண்ணிப் பாத்திடுவேம்ல!"ன்னாரு கங்காதரன் ஒத்தக் கண்ண அடிச்சிக்கிட்டு கரைய ஒடைச்சுக்கிட்டுப் போவ நெனைக்குற காட்டாத்து வெள்ளம் சொன்னதெ கேட்டுக்கிட்டு கட்டுக்குள்ள நிக்காதுங்றாப்புல.

            "ஒஞ்ஞளுக்கு நாம்ம, நமக்கு நீஞ்ஞன்னு இருக்குறப்ப நீஞ்ஞ ஏம்யா அஞ்ஞப் போவ நெனைக்குதீயே?"ன்னு சிரிச்சாம் பாலாமணி ரெட்டை அர்த்தத்துல சிலாகிச்சுப் பேசுறாப்புல.

            "ஒரு டிபரண்ட் டேஸ்ட்டுக்குத்தாம்!"ன்னாரு கங்காதரன் நாக்கால உதட்டெ தடவிக்கிட்டு.

            "நீங்க கெளம்புறீங்களோ இல்லையோ. நாம்ம கெளம்புறேம்!"ன்னு ஆளெ வுடுங்கடா சாமின்னு கெளம்பப் பாத்தாரு திருநீலகண்டன்.

            "என்ன பங்காளி! வழக்க முடிக்காமல்ல கெளம்புறீயே மோறை தலை இல்லாமா? கேட்டகேள்விக்குப் பதிலச் சொல்லிட்டுக் கெளம்புங்க!"ன்னாரு கங்காதரன் கட் அன்ட் ரைட்டா கேக்குறாப்புல.

            "எதடா சொல்லச் சொல்றீயே? எதுன்னாலும் நேரா நிக்குற நம்மகிட்டெ கேளுங்கடா?"ன்னா செய்யு உள்ளுக்குள்ள அதிகமான காத்தால வெடிச்சுச் செதறுற பலூனப் போல.

            "இதென்ன பங்காளி! பார்ட்டி ரொம்ப சூடாவுது? இதெயெல்லாம் கொஞ்சம் மிங்கூட்டியே எடுத்துச் சொல்ல மாட்டீயா? இதுல நேரா வேறல்ல கேக்கச் சொல்லுது. அப்பிடின்னா கேட்டுடுவோம். ஏம்டி அடுத்தத் தேதியில ஆஜராவுறப்ப ரண்டாயிரம் கொடுத்துல்லா ஆஜராவணும்! இருக்கா? இல்லியா?"ன்னாரு கங்காதரன் ரண்டு கண்ணையும் மாறி மாறி அடிச்சுக்கிட்டு.

            "அதெப் பத்தி நீஞ்ஞ ஏம்டா கவலப்படுதீயே? இருந்தா கொடுக்கிறேம். இல்லன்னா கொடுக்க முடியலன்னு சொல்லிட்டுப் போறேம்!"ன்னா செய்யு பொசுக்குன்னு கால்ல ஏறுற முள்ளெ போல.

            "இல்லாட்டியும் பரவால்லம்மா. நாம்ம நீயி கொடுத்துட்டதா சொல்லி நம்மட ஆளெ கிராஸ் பண்ண வுடுறேம்!"ன்னாரு கங்காதரன் ஒடம்பெ ஒரு குலுக்குக் குலுக்கிக்கிட்டு.

            "அப்பிடி ஒண்ணும் பண்ணும்ன்னு அவ்சியமில்ல!"ன்னா செய்யு வெடுக்குன்னு கொட்டுறெ தேளப் போல.

            "ச்சும்மால்ல ஒண்ணுமில்லம்மா. ஒம்மட வக்கீலோட இருக்குறாப்புல ஒரு நாளு நம்மளோடயும் ஒரு ராவுக்கு இருந்துட்டுப் போயிடு! அதுக்கு ரண்டாயிரம் சரியாப் போயிடும்!"ன்னாரு கங்காதரன் ஒத்தாசெ பண்றதா பவ்வியம் காட்டிப் பேசுறாப்புல.

            "செருப்பால அடிப்பேம்டா!"ன்னா செய்யு அதெ கேட்டதும் அதெ தாங்க முடியாத உணர்ச்சிக அனைத்தையும் ஒண்ணு சேத்து வார்த்தையால அடிக்குறாப்புல.

            "யோ யப்பாடி! செருப்பால அடிப்பாலாம்லா தர்மபத்தினி? என்னவோ ஒருத்தனோட குடும்பம் நடத்துறாப்புலல்ல பேசுறா தேவிடியா முண்டெ? அடி செருப்பால!"ன்னாரு கங்காதரன் நாக்கெ துருத்திக்கிட்டு.

            "நீயி சொல்லிக்கிட்டெ இருப்பே. நாம்ம சொல்லிக்கிட்டுல்லாம் இருக்க மாட்டேம். செஞ்சிக் காட்டுவேம்டா! பேசுறதெ மருவாதியா பேசுடா!"ன்னா செய்யு வெறி பிடிச்ச வேங்கப்புலி பாய்ஞ்சு தாக்க தயாரா நிக்குறதெப் போல.

            "எஞ்ஞ செஞ்சுக் காட்டேம் பாப்பேம்டி!"ன்னாரு கங்காதரன் நெஞ்செ நிமுத்திக்கிட்டு ஓரடி முன்னால வந்து. செய்யு அப்பிடிப் பண்ணுவான்னு யாரும் எதிர்பாக்கல, சட்டுன்னு கால்ல போட்டிருந்த செருப்பக் கழட்டி நாலு அடி முன்னாடி வெச்சி கங்காதரனோட மொகத்துல பட்டு பட்டுன்னு அடிச்சா. அதெ எதிர்பாக்காத கங்காதரன் மொகத்த கைகளால தடுத்துக்கிட்டு அப்பிடியே உக்காந்தாரு. கீழே உக்காந்தவர்ரப் பட்டு பட்டுன்னு போட்டுத் தலையில செருப்பால செய்யு அவ்வே பாட்டுக்கு அடிச்சிக்கிட்டெ இருந்தா. அவளால அடிக்கிறதெ நிப்பாட்ட முடியல. அவ்வே பாட்டுக்கு அடி மேல அடியா ஆத்திரம் தீர அடிச்சுக்கிட்டெ இருந்தா. பாலாமணியும், ராசாமணி தாத்தாவும் இதெப் பாத்ததும் சட்டுன்னு ஓடிப் போயி இன்னோவா கார்ல ஏறி கதவெ மூடிட்டு உள்ளார உக்காந்துச்சுங்க. செய்யு ஆத்திரம் தீர்ற மட்டும் அடிச்சிறதெ நிப்பாட்டுறதா தெரியல. தலையில கையப் பிடிச்சிக்கிட்டு உக்காந்த கங்காதரனெ செருப்பால வேகு வேனுன்னு ஆரம்பத்துல அடிச்ச வேகம் கொஞ்சம் கூட கொறையாம பொரட்டிப் பொரட்டி எடுத்தா செய்யு. கோர்ட்டுக்கு வெளியில போயிட்டு இருந்த சனங்களும், வக்கீல்களும் இதெப் பாத்ததும் சுத்திலும் வட்டமா கூடிட்டாங்க. எல்லாம் நிமிஷ நேரத்துல நடந்து முடிஞ்சது.

            அப்பவும் சூரியன் பாட்டுக்கு சுள்ளுன்னு அடிச்சிக்கிட்டுத்தாம் இருந்துச்சு. காத்து அந்தாண்ட இந்தாண்ட அசையல. வானத்துல மேகத்தையும் ஒண்ணும் காங்கல. மேகம் வந்து மழெ கொட்டாட்டாலும், இருந்த வெக்கையில எல்லாருக்கும் வேர்த்துக் கொட்டிட்டு இருந்துச்சு.

            "இப்பிடில்லாம் கோர்ட்டு வாசல்லயே வெச்சி வக்கீல அடிச்சா நாங்கல்லாம் எப்பிடித்தாம் கேஸ்ஸ நடத்துறது?"ன்னாரு ஒரு வக்கீலு சத்தமா சம்பவத்தெப் பாத்து பொறுக்க முடியாம.

            "அந்தப் பொண்ண மொதல்ல அந்தாண்ட அனுப்பி வுடுற வேலையப் பாருங்க. மேக்கொண்டு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போவுது!"ன்னாரு இன்னொரு வக்கீலு கலவரத்தெ சட்டுன்னு கலைச்சி வுடுங்கங்றாப்புல.

            "இவனுங்களயெல்லாம் இப்பிடி அடிச்சத்தாம் சரிபட்டு வரும்!"ன்னு கூட்டத்துலேந்து ரண்டு மூணு பேத்துகிட்டேயிருந்து சத்தம் வந்துச்சு. சுப்பு வாத்தியாருக்கு என்ன பண்ணுறதுன்னே தெகைப்பா இருந்துச்சு. அவரு ஒறைஞ்சுப் போனவர்ரப் போல ஆயிட்டாரு. திடுதிப்புன்னு இப்படி ஆவும்ன்னு அவரு நெனைச்சுக் கூட பார்க்கல. அவரு பக்கத்துல நின்ன திருநீலகண்டனப் பாத்தாரு. ஆளெ காங்கல. எங்கே போனாரு எப்போ காங்காம போனாருன்னு தெரியல. சித்த நேரத்துல எங்கப் போயிருப்பாருன்னு சுத்திலும் பார்வையச் சொழல விட்டாரு. அவருக்கு இப்போ என்னா பண்ணணுங்றதெ திருநீலகண்டன்தாம் சொல்லணும்ன்னு தோணுச்சு. ஸ்டார்ட் பண்ண வண்டி அது பாட்டுக்கு ட்ர்ருட்டு ட்ர்ருட்டுன்னு சத்தம் போட்டுக்கிட்டே இருந்துச்சு. அவரு கையில வண்டி இருக்குற ஞாபவமே அவருக்கு இப்பத்தாம் வந்துச்சு. வண்டியெ என்ன பண்டுறதுன்னு புரியாம அப்பிடியே ஸ்டாண்டு போட்டுட்டு திரும்புனவர்கிட்டெ ஒரு வக்கீலு சொன்னாரு, "நீங்கத்தாம் பாதரா? மொதல்ல பொண்ண அழைச்சிக்கிட்டுக் கெளம்புங்க சார்! இங்க நிக்காதீங்க! பிரச்சனை வேற வெதமா ஆயிடும்! நாமளும் இவனெ கவனிச்சிக்கிட்டுத்தாம் இருக்கேம். பேச்சு நடத்தெ எதுவும் சரியில்ல. சட்டுன்னு பொண்ண கெளப்பிக்கிட்டுப் போயிட்டே இருங்க!"ன்னாரு உதவிக்கு இருக்க வேண்டிய வக்கீலு ஓடிப் போனாலும் யாரோ ஒரு வக்கீலு தொணை இருக்கும்ங்றாப்புல.

            கட்டக் கடெசீயா அடிச்சி முடிச்சு நாலு அடி பின்னாடி வந்து செய்யு கையில இருந்த செருப்ப அவ்வேம் மேலயே தூக்கி எறிஞ்சிட்டு, இன்னொரு செருப்பையும் கழட்டி அவ்வேம் மேல விசிறியடிச்சிட்டு திரும்புனா. சுப்பு வாத்தியாரு மவளோட கையப் பிடிச்சி வேகு வேகுன்னு இழுத்தாந்து வண்டியில ஏறி உக்காந்து, "ஏறு சடவா பின்னாடி!"ன்னாரு நடுங்கிப் போன கொரல்ல. கொஞ்சம் கொஞ்சமா கெளம்பி வேகமெடுக்குற வண்டி, அன்னிக்கு நெலமையப் புரிஞ்சிக்கிட்டதெ போல ஆர்குடி டவுன் எல்லைய கடக்குற வரைக்கும் வேகமாப் போயி பெறவு நெதானமா போவ ஆரம்பிச்சிது.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...