19 Jan 2021

எவ்ளோ பணம் கை நீட்டி வாங்குனீங்க?

எவ்ளோ பணம் கை நீட்டி வாங்குனீங்க?

செய்யு - 691

            பாலாமணியும் வக்கீல் கங்காதரனும் உள்ளார நொழைஞ்சதும் விருட்டுன்னு உள்ளார நொழைஞ்ச வக்கீல் திருநீலகண்டன் சடார்ன்னு சடர்ன் பிரேக் போட்டாப்புல நின்னாரு. அவரு நின்னதப் பாத்ததும் பின்னாடியே போன சுப்பு வாத்தியாரும் செய்யுவும் முன்னாடி போற வாகனம் நிக்குறதெப் பாத்ததும் நிக்குற பின்னாடி வர்ற வாகனங்களப் போன நின்னாங்க. நின்ன வக்கீலப் பாத்து மேக்கொண்டு உள்ளாரப் போயிடலாமான்னு கேட்டாரு சுப்பு வாத்தியாரு. அவனுங்கப் போன ஒடனெல்லாம் போவக் கூடாதுன்னு கொஞ்ச நேரம் நின்னு ஏறுக்கு மாறா தாம் நடந்துக்கிறதெ காட்டுறாப்புல நின்னு பெறவு உள்ளாரப் போனாரு திருநீலகண்டன். அவரு நகர பின்னாடியே செய்யுவும் சுப்பு வாத்தியாரும் போனாங்க. செய்யுவுக்கு மொத மொதலா ஜீவனாம்ச வழக்குல குறுக்கு விசாரணை நடக்க போறப்போ அவ்வே ரொம்ப பயந்துகிட்டு இருந்தா. மனசுக்குள்ள ஏகப்பட்ட நடுக்கம் வேற. அவளோட குறுக்கு விசாரணை முடிஞ்சதும் பாலாமணிய குறுக்கு விசாரணையில உண்டு இல்லன்னு பண்ணிப்புடணும்ன்னு திருநீலகண்டன்கிட்ட கண்டிஷன்னா சொல்லிட்டு இருந்தா. இப்போ நெலமெ எல்லாமே தலைகீழா இருக்குறாப்புல இருந்துச்சு. ஏதோ பேருக்காவது இந்தக் குறுக்கு விசாரணைய நடத்தி முடிச்சிடுங்கன்னு திருநீலகண்டன் வக்கீல்கிட்ட கெஞ்சுற நெலமைக்கு வந்திருந்தா செய்யு.

            பாலாமணிக்கு மொத மொதலா ஜீவனாம்ச வழக்குல குறுக்கு விசாரணை நடந்தப்போ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுக் கூண்டுல ஏறுறதும், இறங்குறதுமா இருந்தாம். அந்த பாலாமணியா இவ்வேங்ற மாதிரிக்கி, இந்தக் குறுக்கு விசாரணைய எப்போ நடக்கும்ன்னு ரொம்ப ஆவலாதிய எதிர்பாக்குற ஆளா அவ்வேம் மாறியிருந்தாம். பாக்கப் போற வகையில ஜீவனாம்ச வழக்குல தோத்துப் போயி மேல் அப்பீல் பண்ணி அவ்வேம் உற்சாகமா வேற உருமாறியிருந்தாம். செய்யுவோ அந்த வழக்குல ஜெயிச்சும் கூட ரொம்பவே தொவண்டுப் போயிருந்தா. இந்த வழக்குகள எப்பிடி ஒரு முடிவுக்குக் கொண்டு வர்றதுங்ற கொழப்பத்துல தவிச்சிட்டு இருந்தா.

            வக்கீல் கங்காதரன் கோர்ட்டுக்குள்ள வந்து உக்காந்ததிலிருந்தே ஜட்ஜ்ஜப் பாக்குறதும், குறுக்கு விசாரணைக்குத் தயாரா வந்தாச்சுங்ற மாதிரிக்கிக் குறிப்பக் காட்டுறதுமா இருந்தாம். அதெ ஜட்ஜ் கண்டுகிட்டாரா, இல்லையாங்றது தெரியல. அவரு பாட்டுக்கு தொடர்ச்சியா நாலைஞ்சு கேஸ்கள விசாரணைக்கு எடுத்துக்கிட்டுத்தாம் பெறவு பாலாமணிய குறுக்கு விசாரணையப் பண்ணுறதெ எடுக்கச் சொன்னாரு. பாலாமணி கூண்டுல ஏற தயாரா நின்னாம். திருநீலகண்டனும், கங்காதரனும் மின்னாடிப் போயி நின்னாங்க.

            "நீங்க கிராஸ்ஸப் பண்ண ரெடிதானே?"ன்னு கேட்டாரு ஜட்ஜ் திருநீலகண்டனப் பாத்து குறுக்கு வெசாரணையத் தொடங்குறதெ உறுதி பண்ணிக்கிறாப்புல.

            "இப்போ இந்த நேரத்துல கிராஸ் பண்ண முடியாதபடிக்குத் தலைவலியால ரொம்ப அவதிப்படுறேம்ங்கய்யா. தவிர்க்க முடியாத இந்த சூழ்நிலையில இந்த ஒரே முறை மட்டும் எக்ஸ்கியூஸ தயவு செஞ்சு ஏத்துக்கணும்!"ன்னாரு திருநீலகண்டன் வலியால ரொம்ப வேதனைப்படுறாப்புல. ஜட்ஜ் திருநீலகண்டன உத்துப் பாத்தாரு அப்பிடில்லாம் ஒண்ணும் தெரியலங்ற மாதிரிக்கி.

            "வேண்டுமென்றே எனது கட்சிக்காரரை அவமதிக்கும் செயல்ங்கய்யா இது!"ன்னாரு கங்காதரன் திரிய கொளுத்துறாப்புல. ஜட்ஜ் ஒரு நிமிஷம் பேனாவ நெத்திப் பொட்டுல ரண்டு தட்டு தட்டிக்கிட்டு யோசனையப் பண்ணாரு. பாலாமணியப் பாத்து, "ஒவ்வொரு தடவெயும் மெட்ராஸ்லேந்துதாம் ஆர்குடிக்கு வர்றீங்களா? இங்க பக்கத்துல தங்கியிருக்கீங்களா?"ன்னு கேட்டாரு வெசாரிக்குற தொனியில.

            "ஒவ்வொரு தடவை விசாரணைக்கும் சென்னைப் பட்டணத்துலேந்துதாம் வர்றேம்! முந்தா நேத்தி இன்னிக்குன்னு விசாரணைன்னு சொன்னதால சென்னைப் போயி ஒரு நாள்ல திரும்பணும்ன்னு ‍டியூட்டிக்கு லீவு கொடுத்துட்டு இங்கே தங்கியிருந்தேம். இது முடிஞ்சதுன்னா சென்னைக்குக் கிளம்பிடுறேம்!"ன்னாம் பாலாமணி ரொம்ப பவ்வியமா பதிலச் சொல்றாப்புல.

            "ஒரு முறை வந்துட்டுப் போறதுக்கு எவ்ளோ செலவு ஆவுது?"ன்னாரு ஜட்ஜ் பாலாமணிய நல்ல ஆழமா உத்துப் பாத்துக்கிட்டு.

            "அங்கேயிருந்து வந்துட்டுப் போறதுன்னா இந்த மாதிரி தங்குறது எல்லாம் சேர்த்து நாலாயிரம் வரைக்கும் ஆவும்!"ன்னாம் பாலாமணி. அதெ கேட்டுக்கிட்ட ஜட்ஜ் ஒரு நிமிஷம் யோசனெ பண்ணாரு. பெறவு பதினாலு நாளுக்குத் தள்ளி குறுக்கு விசாரணைய ஒத்தி வெச்சி, அன்னிக்கு பாலாமணிய குறுக்கு விசாரணையப் பண்ண ரண்டாயிரும் ரூவாய அபராதமா கட்டிட்டுட்டுத்தாம் பண்ணணும்ன்னு உத்தரவப் போட்டாரு. அதெ கேக்க செய்யுவுக்கு மனசுல கொதிப்பா போச்சுது. சுப்பு வாத்தியாருக்கும் தாங்க முடியாத கோவந்தாம் மனசுக்குள்ள. பாலாமணி மொகத்துல சந்தோஷம்தான்னா சந்தோஷம் தாங்க முடியாத சந்தோஷம். கங்காதரன் மொகத்துல வழக்குலயே ஜெயிச்சுட்டாப்புல ஒரு பூரிப்பு. அந்தச் சந்தோஷத்தோடயும், பூரிப்போடயும் பாலாமணியும், கங்காதரனும் கோர்ட்டுக்கு வெளியில போனாங்க. சுப்பு வாத்தியாருக்கும், செய்யுவுக்கும் கூட்டத்தோட கூட்டமா அவுங்க நின்னுகிட்டு இருந்த கோர்ட்டு எடத்தெ விட்டு அந்தாண்ட நவுர காலுங்க மறுத்தது. திருநீலகண்டன் ரண்டு பேரையும் அந்தக கூட்டத்துலேந்து கொஞ்சம் வாசப்படிக்கு பக்கமா நவுத்திக்கிட்டு வந்து, "ஒண்ணும் பயப்பட வேணாம் சார்! அடுத்ததுல ரண்டாயிரத்த கொடுத்துட்டு அவனெ உண்டு இல்லன்னு பண்ணிடுறேம்!"ன்னாரு மெல்லிசான கொரலுல, ஆன்னா அந்த மெல்லிசான கொரல்லயும் ஆக்ரோஷம் கொறையாம தன்னோட இருப்பெ காட்டுறாப்புல.

            "என்னங்கய்யா நாலு கேள்வியக் கேட்டுப்புட்டு வுடுறதெ விட்டுப்புட்டு, அவனுக்கு ரண்டாயிரத்தக் கொடுத்து விசாரணையப் பண்‍றேன்னா இதெல்லாம் கேக்கறதுக்கு பித்துக்குளித்தனமால்ல இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரும் மெல்லிசான கொரல்ல கூரை ஏறி கோழியப் பிடிக்கத் தெரியாம கோபுரம் ஏறி எங்ஙன போயி தொலையுறதுங்றாப்புல.

            "நமக்குக் கோர்ட்டுல உத்தரவான அய்யாயிரம் ஜீவனாம்சத்தெயெ ஒஞ்ஞளால வாங்கித் தர்ற முடியல. அவ்வேம் எம்புட்டுச் சுலுவா ரண்டாயிரத்தெ நம்மகிட்டெயிருந்து தட்டிப் பறிச்சிட்டாம் பாத்தீங்களா? நாம்ம ஏதோ தப்புப் பண்ணி அவ்ராதம் கொடுத்தா கூட பரவாயில்ல. நீஞ்ஞ ஒஞ்ஞ கடமெயெ செய்யாததுக்கு நாஞ்ஞ எதுக்குங்கய்யா ரண்டாயிரத்தெ கொடுக்கணும்?"ன்னா செய்யுவும் கொரல ஒசத்தாம மெல்லிசான கொரல்ல ஒடம்புல இருக்குற ரத்தமெல்லாம் சூடேறிக் கொதிக்குறாப்புல.

            "அது ஒண்ணும் பெரிய விசயமில்லம்மா! அப்பிடி ரண்டாயிரம் கொடுக்க யோசிச்சா, அவனெ குறுக்கு விசாரணை பண்ணாம விட்டுட்டுக் கூட ஒன்ன கிராஸ் பண்ணிடச் சொல்லிடலாம்."ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் சர்வரோக அலட்சியத்தெ வார்த்தையில வடிச்சுக் கொட்டுறாப்புல.

            "நாம்ம அவனெ குறுக்கு விசாரணெ பண்ண முடியாதாம். அவுங்க நம்மள குறுக்கு விசாரணெ பண்ணுவாங்களாம். கேக்கவே வேடிக்கையாயில்லங்கய்யா? ஒஞ்ஞளுக்குக் கொஞ்சம் கூட வெக்கமில்லீங்களாய்யா? இதெ வந்து மானங்கெட்ட தனமா சொல்றீயளே? ஒஞ்ஞள ன்னா பெரமாதமா அவனெ வெசாரணெ பண்ணச் சொன்னோம் நாமளும் எஞ்ஞ யப்பாவும்? அவனெ வெசாரணெ பண்ணுறதுல ஒஞ்ஞளுக்கு ன்னா பெரச்சனெ?"ன்னா செய்யு காட்டமா பல்ல கடிச்சிக்கிட்டு வார்த்தைகள மென்னு முழுங்கிட்டுக் கேக்குறாப்புல.

            "கேஸ் கட்டு கையில இல்லாததுதாம் பிரச்சனை. இப்போ கையில கேஸ் கட்டு இருக்குன்னா எதிர்தரப்பு வக்கீல்கிட்டெத்தாம் இருக்கு. அவ்வேங்கிட்டெப் போயி வெக்கங்கெட்ட தனமா கேஸ்கட்டுலேந்து இந்தந்த பேப்பர்ஸ்ஸ கொடுன்னு அசிங்கத்தனமா கேட்டுக்கிட்டு நிக்க முடியுமா?"ன்னாரு திருநீலகண்டனும் வாயைகை கையால பொத்திக்கிட்டுப் பதிலுக்குத் தனக்கும் காட்டமா பேசத் தெரியுங்றாப்புல.

             "யிப்போ கோவப்பட வேண்டியது நீஞ்ஞ கெடையாதுங்கய்யா! நாஞ்ஞத்தாம் ஒஞ்ஞ மேல கோவப்படணும். ஒஞ்ஞளுக்குக் கோவப்பட ஞாயமே கெடையாது. ஒரு குறுக்கு விசாரணைன்னா தயாரா வர்ற வேண்டியது நீஞ்ஞத்தானே. ஏம் தயாரா வரலே? அதுவும் ரண்டாவது தடவெ ஒரு வாய்ப்புக் கொடுத்தும்?"ன்னா செய்யு கொரலோட வேகம் கூடாம அதே நேரத்துல தன்னோட ஒட்டுமொத்த சக்தியையும் தெரட்டிக் கேக்குறாப்புல.

            "நீ என்னம்மா நம்மளப் போட்டு இப்பிடி கிராஸ் பண்ணுறே? இதெல்லாம் வழக்குல சகஜம்மா! இப்பிடில்லாம் நெறைய நடந்தும் நாம்ம கேஸ்ல ஜெயிச்சிருக்கேம். ஒனக்கு இது மொத அனுபவம்மா. அதால பதற்றப்படுறே!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் எது நடக்கவும் உலகத்துல வாய்ப்பு இருக்குங்றாப்புல.

            "நீஞ்ஞ அவனெ கிராஸ் பண்ணிருந்தா நாம்ம ஒஞ்ஞள எந்தக் கேள்வியையும் கேக்கப் போறதில்லே! நீஞ்ஞ செய்ய வேண்டியதெ செய்யல. அதால நாம்ம கேக்கற நெலையில நீஞ்ஞ இருக்கீயே! நாம்ம கேக்குறதுல என்ன குத்தம்ன்னு மட்டும் தயவு பண்ணிச் சொல்லுங்க. ஞாயமில்லன்னா ஒஞ்ஞ கால்ல போட்டிருக்கிற செருப்பக் கழட்டி அடிங்க. வாங்கிட்டுப் போயிட்டே இருக்கேம்! தயவு பண்ணி நாம்ம பதற்றப்படுதறா மட்டும் சொல்லாதீயே!"ன்னா செய்யு லேசா கொரல ஒசத்தித் தன்னால வக்கீலு சொல்ற சமாதானத்தெ தாங்கிக்க முடியலங்றாப்புல.

            "நாம்ம இன்னும் கோர்ட்ட விட்டு வெளியில போவல. வெளியிலப் போயாவது கொஞ்சம் பேசுவேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் செய்யுவையும் சுப்பு வாத்தியாரையும் அந்த எடத்தெ வுட்டு நவுத்துறாப்புல.

            "வெளியில வந்தாலும் நாம்ம இதெத்தாம் பேசுவேம். ன்னா இப்போ கொஞ்சம் சத்தம் கொறைச்சலா பல்ல கடிச்சிட்டுப் பேசுறேம். வெளியில போனா பல்லக் கடிக்காம சத்தமாவே பேசுவேம். ஒஞ்ஞளுக்குத்தாம் கேவலமா போவும்!"ன்னா செய்யு விரக்தியாயி ஆவேசப்பட்டாப்புல.

            "ஒரு பொண்ணுக்கு இவ்ளோ கோவம் ஆகாதும்மா! தயவு பண்ணி வெளியில வா! பேசலாம்!"ன்னாரு வக்கீல் கோவத்தெ காட்டுற எடம் கோர்ட்டு இல்லங்றாப்புல.

            அதுக்கு மேல வேற வழியில்லாம திருநீலகண்டன் முன்னாடிப் போவ கோர்ட்ட விட்டு முழுசா வெளியில வந்தாங்க செய்யுவும், சுப்பு வாத்தியாரும். அங்க வெளியில கோர்ட்ட விட்டு வெளியிலப் போவாம கொஞ்ச தூரத்துல நின்னு பாலாமணியும், வக்கீல் கங்காதரனும், ராசாமணி தாத்தாவும் இவுங்களப் பாத்துட்டே நின்னாங்க.

            "ஒங் கோவத்துல ஞாயமில்லன்னு சொல்லல. ஆத்திரத்துல அறிவெ இழந்துடாதேன்னுத்தாம் சொல்றேம். நாம்ம நெனைச்சது ஒண்ணு. நடந்தது ஒண்ணு. இன்னிக்கும் அவனெ கிராஸ் பண்ணாம டீஸ் பண்ணிடலாம்ன்னு நெனைச்சா ஜட்ஜ் அந்த மாதிரிக்கிப் பண்ணுவாருன்னு சத்தியமா நாம்ம எதிர்பாக்கலம்மா!"ன்னாரு திருநீலகண்டன் செய்யுவத் திரும்பவும் கோர்ட்டுக்கு வெளியில வெச்சு கொஞ்சம் சமாதானம் பண்ணுறாப்புல.

            "அதாங்கய்யா நம்மாள ஏம்ன்னே புரிஞ்சிக்கிட முடியல. சட்டம் படிச்சவுக. எவ்ளவோ வழக்குகளப் பாத்தவுக. ஒரு நாலு கேள்வி. அது கூட வாணாம். ஒரு ரண்டு கேள்வி கூட கேக்க முடியலன்னா பெறவு ன்னா நீஞ்ஞ வக்கீலு? என்னத்தெ வக்கீலுக்குப் படிச்சீய?"ன்னா செய்யு வெளியில வந்தும் கொரல ஒசத்திக் கோவம் கொஞ்சம் கூட தணியாதது போல.

            "புரிஞ்சிக்க மாட்டேங்றீயேம்மா! சொல்றதயே திரும்ப திரும்ப சொல்றே! இதெல்லாம் வழக்குல இருக்குற பல விதமான தந்திரங்கள். வழக்குல நேரா போயெல்லாம் ஜெயிக்க முடியாது. முட்டிக்கிட்டுத்தாம் நிக்கணும். மகாபாரதக் கதையையே எடுத்துக்கோ பகவான் மட்டும் தந்திரமா போர் பண்ண வைக்கலன்னா பாண்டவாஸ் ஜெயிச்சிருக்கவே முடியாது. ராமாயணத்துலயும் எடுத்துக்கோ வாலிய மறைஞ்சிருந்துதாம் தாக்குவாரு ராமன். ஆனானப்பட்ட ஆளுங்களோட கதியே அந்த நெலமன்னா நம்ம நெலமைய நெனைச்சிப் பாரும்மா. நாம்ம சாதாரண மனுஷப் பிறவி. நமக்குன்னு சில தந்திரங்கள் இருக்கு. அதுல ஒண்ணு இந்த எடத்துல மைல்டா மிஸ்ஸாயிருக்கு. தயவுபண்ணி புரிஞ்சிக்கோ இடையில நடக்குற இதெ பாக்காதே. பைனல்லா பாரு. பைனல்ல நாம்மத்தாம் வின். பைனல்ல யாரு ஜெயிக்கிறாங்களோ அவுங்கத்தாம் பராக்கிரமசாலி! அதுக்கு நாம்ம கேரண்டி தர்றேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் தலை மேல அடிச்சுச் சத்தியம் செஞ்சு கொடுக்குறாப்புல.

            "நீஞ்ஞ சாமர்த்தியமா பேசுறீயே! நீஞ்ஞ நடந்துக்கிறதெல்லாம் பாக்குறப்போ அவ்வேம்கிட்டெ பணத்தெ வாங்கிட்டு குறுக்கு வெசாரணையப் பண்ணாம தவிக்குறாப்புலல்ல இருக்கு! கை நீட்டி எவ்ளோ பணம் வாங்குனீயே?"ன்னா செய்யு பட்டுன்னு திராவகத்தெ வீசி எறியுறாப்புல. அப்பிடி ஒரு கேள்விய செய்யு கேட்டதும் சுப்பு வாத்தியாருக்கே ஒரு நிமிஷம் சுரீர்ன்னுப் போயிடுச்சு. அவராலேயே அந்தக் கேள்வியோட வீச்செ தாங்க முடியாததப் போல முகம் சுருங்கிப் போயிடுச்சு அவருக்கு.

            திருநீலகண்டன் அதெ பெரிசா எடுத்துக்காததப் போலத்தாம் அதுக்கும் வெளக்கத்தச் சொன்னாரு. அதெ சொல்றதுக்கு முன்னாடி வாயில மட்டும் ப்பூ ப்பூன்னு அடிச்சிக்கிட்டாரு. "ஒங் கோவம் நல்லாவே புரியதும்மா! விலை போகுற வக்கீலு நாம்ம கெடையாதும்மா! பகவான் மேல சத்தியமா சொல்றேம், ஒங்ககிட்டெ கூட கொறைச்ச பணத்தெ வாங்கியிருக்கேனே தவிர, அவ்வேங்கிட்டெ பொறங்கைய நீட்டில்லாம் காசு வாங்கவே மாட்டேம். நம்மள விலைக்கு யாராலயும் வாங்க முடியாது. மினிஸ்டர் கேஸ்லேந்து, கெளன்சிலர் கேஸ்ஸூ வரைக்கும் எதுத்து வழக்கு பண்ணிருக்கேம். என்னிக்கும் விலை போனது மட்டும் கெடையாது. அந்த ஒரு தப்ப மட்டும் இந்தப் புரபஷனல்ல பண்ணவே மாட்டேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் தன்னோட கொரல கொஞ்சம் ஒசத்துனாப்புல.

            "நல்லாவே சமாளிக்கிறீங்கய்யா! ஒஞ்ஞ தப்ப மட்டும் ஒத்துக்கிடவே மாட்டேங்றீயளே?"ன்னா செய்யு தாங் கேட்டதுல என்ன தப்புங்றாப்புல.

            "என்னம்மா பண்ணுறது? வக்கீல்ம்மா! ஒரு நெலமைய சமாளிக்கலன்னா இந்தப் பொழைப்புல குப்பை கொட்ட முடியாதும்மா! உன்னோட வழக்கெ நம்மள நம்பி ஒப்படைச்சிருக்கே! அதுல நம்பிக்கை வை. அதுல ஒனக்கு நம்பிக்கை இல்லைன்னா சொல்லு. இப்பவே இந்த நொடியே அத்தனை கட்டுகளையும் நோ அப்ஜக்சன் போட்டு ஒங்கிட்டெ ஒப்படைச்சிடுறேம். நீ எந்த வக்கீல வெச்சி நடத்தணுமோ அந்த வக்கீல வெச்சி நடத்திக்கோ. நீ எந்த வக்கீல்கிட்டெ கேஸ்ஸ நடத்தணும்ன்னு போறீயோ அவுங்ககிட்டெயும் போன் பண்ணி நல்ல வெதமாவே சொல்லி விடுறேம்."ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் தான் ரொம்ப நல்ல பிள்ளங்றாப்புல.

            "ஒஞ்ங மேல நம்பிக்கெ யில்லாமல்லாம் யில்லங்கய்யா! இன்னிக்கு ஒரு கேள்வியாவது கேட்டு வெசாரணைய முடிச்சிருந்தீயன்னா கெளரவமா போயிருக்கும். இன்னிக்கு நடந்த சம்பவம் கெளரவக் கொறைச்சலால்லப் போயிடுச்சு. அதெ நெனைச்சித்தாம் மவளும் ஆத்திரப்படுறா. நமக்கும் ரொம்ப கொதிப்பா இருக்கு. வேறென்ன? ஏதோ வெசாரணெ முடிஞ்சிருந்தா, இஞ்ஞ நின்னு நீஞ்ஞளும் இவ்ளோ வெளக்கத்தெ கொடுக்க வேண்டியதில்ல. நாஞ்ஞளும் ஒஞ்ஞ மேல கோவப்பட வேண்டிய அவசியமில்லே. அதெத்தாம் சொல்லிக்க நெனைக்கிறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவளோட மனநெலைய எடுத்துச் சொல்றாப்புலயும் தன்னோட மனக்கொறையை எடுத்துக் காட்டுறாப்புலயும்.

            "ஒங்க பாய்ண்ட் ஆப் வியூவில நாம்ம எந்தக் குத்தத்தையோ, கொறையோ சொல்ல விரும்பல. ஒங்களுக்கு அப்பிடித்தாம் மனசு இருக்கும். நாம்ம என்ன சொல்றேம்ன்னா, இது முடிவு இல்லை. ஆமாம் இது முடிவு இல்லை. கடந்துப் போகிற வழியில எதிர்படுறது ஒரு சிறு தடை அல்லது சிறு தடுமாற்றம். அவ்வளவுதாம். தடையப் பாத்துட்டு அப்பிடியே நின்னுடப் போறதில்ல. தடுமாற்றத்தெ நெனைச்சி அப்பிடியே தடுமாறிகிட்டெ கிடக்கப் போறதில்ல. இதுக்குப் பிறகு வழக்கு எடுக்கப் போற வேகத்த மட்டும் பாருங்க. அப்புறம் எதாவது சின்ன மிஸ்டேக் ஆனாலும் சொல்லுங்க!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் தன்னோட மிடுக்கெ வுட்டுக் கொடுக்காததப் போல.

            "யிப்போ அடுத்தத் தேதியில ஆஜராவுறப்போ ரண்டாயிரம் ரூவாய கோர்ட்டுல கொண்டாந்து கட்டணுமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு அடுத்து ஆவப் போற கதையெ பேசுறாப்புல.

            "அந்தப் பணத்தெ நாம்மகிட்டெ கொடுத்தீயன்னா நாம்ம அவ்வேம் வக்கீல்கிட்டெ கொடுத்துடுவேம். வெசாரணைக்கு மின்னாடி ஜட்ஜ் பணம் வந்துடுச்சான்னா கேப்பாரு. அவ்வேம் தலையாட்டுவாம். அவ்ளோத்தாம் விசயம் முடிஞ்சிடுச்சு!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் அவ்ளோதாம் விசயங்றாப்புல.

            "ரண்டாயிரம் போறதப் பாக்கக் கூடாது. நாலு கேள்வியாவது அவனெ மனசுல தைக்குறாப்புல கேட்டாவணும். அடுத்தத் தேதியிலாவது எந்தச் சால்சாப்பும் யில்லாம இதெ முடிச்சிக் கொடுத்துப்புடுங்க. ஒண்ணு ஒஞ்ஞள அழைச்சாந்து வர்றதுல பெரச்சனையாவுது. ரண்டு அழைச்சாந்தாலும் இந்த மாதிரிக்கி ஒஞ்ஞளால வாதாடாம பெரச்சனையாவுது. இந்த ரண்டும் யில்லாம அடுத்தத் தேதியில எல்லாம் முடிஞ்சா சரித்தாம். ஏன்னா அதுக்கு மேல ரண்டாயிரம் ரண்டாயிரம்ன்னு கொடுத்துட்டு எப்பிடியாச்சும் வெசாரணைய முடிங்கன்னு ஒஞ்ஞகிட்டெ கொடுக்கறதுக்கு எஞ்ஞகிட்டெ பைசா காசில்ல. இதெயே போயி மவ்வேங்கிட்டெ கலந்துக்கிட்டுத்தாம் காசிய எப்பிடிப் பொரட்டுறதுன்னு யோஜிக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கட்டுற கோவணத்தெ கழட்டி வித்துதாம் இனுமே தாம் காசு சேத்துக் கொடுக்கணுங்றாப்புல.

            "இன்னிக்கும் ஐநூத்து ரூவாயிப் பீஸ்ஸ கொடுக்கணும்தானேங்கய்யா?"ன்னா செய்யு கோவம் தணியாமா வெறுப்பக் காட்டி வெறுப்பேத்துறாப்புல.

            "அம்மா! தாயே! இன்னிக்கு நமக்குப் பீஸே வேணாம். ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்க வேணாம். இப்பவே பஸ் ஏறி கிளம்புறேம். போயி மொத வேலையா ஒன்னோட கேஸ் கட்டெ கண்டெடுத்து அந்த நொடியிலேந்து கிராஸ்ஸ பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிடுறேம்!"ன்னாரு திருநீலகண்டன் வால வுட்டுப்புட்டு தும்பெ வீராப்பா பிடிக்கிறவர்றப் போல. இருந்தாலும் சுப்பு வாத்தியாரு தன்னோட சட்டைப் பையிலேந்து ஐநூத்து ரூவாயி தாளு ஒண்ண எடுத்து வக்கீலோட கையில திணிச்சாரு.

            "வேணாம் சார்! ஒங்கப் பொண்ணு அப்பிடி கேட்டதுக்குப் பிறகும் நாம்ம வாங்கக் கூடாது சார்!"ன்னாரு வக்கீல் அதெ வெலக்கி வுட்டுத் தர்ம ஞாயத்தோட நடந்துக்குறாப்புல.

            "நீஞ்ஞ எஞ்ஞள தவிக்க விட்டதோட யிருக்கட்டும். நாஞ்ஞ ஒஞ்ஞள தவிக்க வுட்டதா இருக்க வாணாம். கலியாணம் வேற ஆயிருக்கு. காசிப் பணமில்லாம்ம என்னத்தெ பண்ணுவீயே? எஞ்ஞளால யாரும் கஷ்டப்பட்டதாவோ, நஷ்டப்பட்டதாவோ நாளைக்கி ஒரு சொல்லு வாணாங்கய்யா! நாஞ்ஞ இப்பிடியே வண்டியக் கெழக்காலக் கெளப்பிட்டுப் போயிடுறேம். நீஞ்ஞ அப்பிடியே தெக்கால கெளம்பி பஸ்ஸ பிடிச்சி ஊருப் போயிச் சேருங்க. அந்தப் பயலுவோ வேற பாத்துட்டே நிக்குறானுவோ. அவனுவோ நிக்குற நெலையப் பாத்தா நம்மள ஓட்டி எடுத்துப்புட்டுத்தாம் மறுவேலப் பாப்பானுவோ போலருக்கு. மவ்வே வேற கோவத்துல கொதிச்சிப் போயி நிக்குறா. நல்ல நேரத்துல நாம்ம வூடுப் போயிச் சேர்றேம்!"ன்னு சுப்பு வாத்தியாரு வக்கீலோட கையப் பிடிச்சுக் கையில காசிய திணிச்சாப்புல கொடுத்துட்டு சட்டுன்னு டிவியெஸ் பிப்டியில சாவியப் போட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ண ஆரம்பிச்சாரு.

            சரியா அந்த நேரத்துல கோர்ட்டு முடிஞ்சிருக்கும் போல. கோர்ட்டுலேந்து எல்லாரும் வெளியில வந்துகிட்டு இருந்தாங்க. வக்கீலுங்களும் வந்துகிட்டு இருந்தாங்க. சுப்பு வாத்தியாரு வண்டிய ஸ்டார்ட் பண்ணி கெளம்புறதப் பாத்துட்டு வக்கீல் கங்காதரன் பாலாமணியையும், ராசாமணியையும் கெளப்பிக்கிட்டு சுப்பு வாத்தியாரையும் செய்யுவையும் நோக்கி வேகு வேகுன்னு வந்தாரு. திருநீலகண்டன் அவுங்கள வெறிச்சிப் பாக்கறாப்புல பாத்துக்கிட்டு அப்பிடியே நின்னாரு என்னதாம் நடக்கும் நடக்கட்டுங்றாப்புல.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...