18 Jan 2021

நறுக்குன்னு நாலு கேள்விங்க கூடவா இல்லே?

நறுக்குன்னு நாலு கேள்விங்க கூடவா இல்லே?

செய்யு - 690

            கட்டாயமா பாலாமணியக் குறுக்கு விசாரணை பண்ண ஜட்ஜ் கொடுத்த கடைசி வாய்ப்புலயும் திருநீலகண்டன் சாக்குப் போக்குச் சொல்லிக்கிட்டு நின்னாரு. சூரியன்னா அத்து எப்படியும் கெழக்கால உதிச்சிடும்ன்னு நம்பிக்கையோட இருந்தா அத்து எந்த தெசையிலயும் உதிக்காதுன்னா எப்படி இருக்கும்? அப்படி இருந்துச்சு இப்போ சுப்பு வாத்தியாரோட நெலமெ. வாங்கன்னு சொல்லாமலே கோர்ட்டுக்கு வர்றதாக இருக்கட்டும், நேரத்தோட வந்து உக்கார்றதா இருக்கட்டும் அதுல எந்தக் கொறைபாடும் இல்ல. இதுக்கு மின்னாடில்லாம் கோர்ட்டு ஆரம்பிச்சிப் பரபரப்பா வந்து சரியா வழக்கைத் தாக்கல் பண்ணவரு இப்போ எல்லாம் சரியா பண்ணிகிட்டு செய்ய வேண்டிய காரியத்துல ஏம் போட்டுச் சொதப்புறார்ன்னு மட்டும் புரியவே இல்ல. இன்னிக்கு எப்பிடியும் குறுக்கு விசாரணைய முடிச்சிடுவார்ங்ற நம்பிக்கையில சுப்பு வாத்தியாரும்,செய்யுவும் கோர்ட்டு ஆரம்பிக்கிறதுக்கு மின்னாடி அதெப் பத்தி எதுவும் கேக்காமலே இருந்துட்டாங்க. ஆன்னா இப்பிடி இந்த மொறையும் அவரு இப்பிடி குறுக்கு விசாரணை பண்றதுக்கு இன்னொரு தேதியக் கேப்பார்ன்னு ரண்டு பேரும் சத்தியமா எதிர்பாக்கல. ரண்டு கன்னத்துல அறைஞ்ச பெற்பாடும் அறையறதுக்கு மூணாவது ஒரு கன்னம் இருக்கும்ன்னு காட்டுறதெப் போல இருந்துச்சு வக்கீலு பண்டுறதெ பாக்குறப்போ.

            ஜட்ஜ் திருநீலகண்டனப் பாத்து, "ஒங்க மனசுல நீங்க என்னத்தாம் நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க? ஒங்களோட கிராஸ்க்காக இதுவரைக்கும் பெட்டிஷனர் ஏகப்பட்ட மொறை ஆஜர் ஆயிட்டார். ஒங்க தரப்புலேந்து வர்றாம இழுத்தடிச்சி லேட் பண்ணதோட, இப்போ வந்தும் லேட் பண்ணுறீங்க? இதெ அனுமதிக்க முடியாது. ஒரு கட்டத்துக்கு மேல இதெ கோர்ட்ட அவமதிக்கிறதாத்தாம் பாக்க முடியும். சட்டம் படிச்ச நீங்களே இப்பிடின்னா என்னத்தெ சொல்றது?"ன்னாரு இதுக்கு மேல வெறென்னத்தெ சொல்றதுங்றாப்புல.

            "இந்த ஒரு மொறை மட்டும் ஒரு வாய்ப்பக் கொடுங்கய்யா.கட்டாயம் நாளைக்கே கிராஸ் வெச்சாலும் பண்ணிடுறேம். இன்னிக்கு ஒடம்புக்குச் சுகமில்லீங்கய்யா. கட்டாயம் இன்னிக்கு வந்தாவணும்ன்னு அய்யா சொன்னதாலத்தாம் ஒடம்புக்கு முடியாததையும் பாக்காம நேர்ல வந்து சொல்லிடுவேம்ன்னு ஓடியாந்தேம். அய்யா நம்மளப் பத்தி தப்பா நெனைச்சிடக் கூடாதுல்ல!"ன்னாரு திருநீலகண்டன் நெசமாலுமே பள்ளியோடத்துப் புள்ளைங்க சாக்கு வெச்சிக்கிட்டு நிக்குறாப்புல.

            "என்னங்க நீங்க? பத்துக் கேள்வியக் கேட்டு முடிச்சா வேலெ முடிஞ்சிடும். அடுத்ததா ரெஸ்பாண்டன்ட்ட குறுக்கு விசாரணைப் பண்ண அடுத்தத் தேதிய கொடுக்கலாம். இப்பிடி ஜவ்வுப் போல இழுத்தா எப்பிடி? இதுக்கு மேல ஒங்களுக்கு வேற சான்ஸ் கொடுக்குறாப்புல இல்ல. ஒன் அவர் டைம் தர்றேம். அதுக்குள்ள எதாச்சும் பண்ணிக்கோங்க. கிராஸூக்குத் தயாரா வாங்க! அதெத்தாம் நம்மாள செய்ய முடியும்!"ன்னாரு ஜட்ஜ் தன்னோட கண்டிப்பெ காட்டுறாப்புல.

            "நாங்க இந்த நாளு முழுதும் வேணாம்ன்னாலும் இவரு கிராஸ் பண்ணுறதுக்காக காத்திருக்கோம்ங்கய்யா! இன்னிக்கு எப்பிடியாவது பண்ணிடச் சொல்லுங்கய்யா! ஒவ்வொரு மொறையும் இந்தக் கிராஸ்க்காகவே இவரு மெட்ராஸ்லேந்து வந்து செருமப்பட்டுகிட்டு இருக்காருங்கய்யா!"ன்னாரு வக்கீல் கங்காதரன் சுமாரா எரிஞ்சுக்கிட்டு இருக்குற நெருப்புல பெட்ரோல அள்ளி வீசுறாப்புல.

            "ஷார்ப்பா ஒன் அவர்ல திரும்ப வாங்க. இன்னிக்கு பெட்டிஷனர்ரப் பண்ண வேண்டிய கிராஸ்ஸ முடிச்சிடலாம்!"ன்னு சொல்லிட்டு வேறெந்த பதிலையும் எதிர்பாக்காதவரப் போல ஜட்ஜ் அடுத்த கேஸூக்கான நம்பரையும் பேரையும் படிக்கச் சொல்லி கண்ணால குறிப்பக் காட்டுனாரு.

            கோர்ட்ட விட்டு ரண்டு தரப்புல இருந்த எல்லாரும் வெளியில வந்தாங்க. "இன்னிக்காவது கிராஸ் பண்ணி முடிச்சிடுவானுவோளா? நாம்மல்லாம் கிராஸ் பண்ண எவ்ளோ துடிப்பா இருந்தோம்! இவனுவோ என்னான்னா இப்படி இருக்கானுவோளே! நம்ம பங்காளி வேற ஏம் இப்பிடிச் சொர்ந்து போயிட்டார்ன்னு தெரயலயே!"ன்னாரு வக்கீல் கங்காதரன் சாடையா காதுல கேக்குறாப்புல.

            "பயம் வந்துட்டுப்பா அவுங்களுக்கு. கேஸ்ல தோக்கப் போறோம்ங்ற பயம் வந்ததும் இந்தக் கிராஸ்ஸ முடிச்சா கேஸ்ஸூ சீக்கிரமா முடிஞ்சிடும்ன்னு கணக்கப் போட்டு இழுத்தடிக்கப் பாக்குறாங்கப்பா!"ன்னாம் பாலாமணி கங்காதரன்கிட்டெ சொல்றாப்புல எரியுற புண்ணுல சொரிஞ்சு வுடுறாப்புல.

            "ஏற்கனவெ என்னத்தெ கேக்கறது? என்னத்தெ புடுங்குறதுன்னு நின்னுகிட்டு இருக்காப்புள பங்காளி. நாம்ம வேற நின்னுகிட்டு எதாச்சும் ரண்டு கேள்விக் கேக்கப் போறதெ கலைச்சி வுட வாணாம். நாம்ம கொஞ்சம் போய் பிரியா ஸ்டராங்கா காப்பிச் சாப்புட்டு ரெப்ரஷ் பண்ணிட்டு வருவோம்! பங்காளி பிரியா இருந்து எதாச்சும் யோஜனெ பண்ணட்டும்!"ன்னாரு வக்கீல் கங்காதரன் எப்படியாச்சும் சொரனெ வந்து சொணங்கிடாம எதையாச்சும் பண்ணட்டும்ங்றாப்புல. அதுக்குப் பெறவு எல்லாருமா சேர்ந்த இன்னோவா கார்ல ஏறி பஸ் ஸ்டாண்டுப் பக்கமா போனாங்க.

            சுப்பு வாத்தியாருக்குத் தாங்க முடியாத எரிச்சலா வந்துச்சு. செய்யு அதெ வுட தாங்க முடியாத கடுப்புல இருந்தா. அதெப் பத்தி எந்த வெதமான கவலையும் இல்லாததப் போல இருந்துச்சு திருநீலகண்டனோட மொகம். "ஏம்ங்கய்யா நாலு கேள்வி கேக்குறதுல என்னத்தெ கொறைஞ்சிப் போயிப் போறீயே? நாலு கூட வாணாம். நறுக்குன்னு ரண்டுக் கேள்வியக் கேட்டுட்டு பட்டுன்னு வாங்க. அந்தப் பயலுவோ பண்ணுற பரிகாசம் நம்மாளயே தாங்க முடியல. நாமளே என்னப் பேச்சுப் பேசுனாலும் சரித்தாம் பேசிட்டுப் போங்கடான்னு நெனைக்கிற ஆளு. நம்மாளயே தாங்க முடியாத அளவுக்கு அவனுவோ பேசுறாப்புல வைக்கிறீயளே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு இதுக்கு மேல எதெயும் தாங்குற மனசு தனக்கு இல்லங்றாப்புல.

            "இதுக்குதாங். ரொம்ப நேரம் குறுக்கு விசாரணைப் பண்ணச் சொல்லுவோம்ன்னு நெனைச்சிக்கிட்டு தள்ளிப் போட்டது போலருக்கு. இப்போ நாமளே ரண்டு கேள்விக் கேட்டா போதும்ன்னு சொல்லிட்டோமா? இனுமே ரொம்ப சுலுவா குறுக்கு வெசாரணைய முடிச்சிடுவீங்களய்யா?"ன்னா செய்யு வக்கீல உசுப்பு வுட்டுப்புடுறாப்புல.

            "ஏம்மா அந்தப் பயலுவோ பண்ணுற நக்கல் பத்தாதுன்னு நீ வேற நக்கல் பண்ணுறே? வர்ற அவசரத்துல கேஸ் கட்ட எடுக்காம வந்துட்டேம்! கேஸ் கட்டு இல்லாம என்னத்தெ கேள்விக் கேக்குறதுன்னுத்தாம் தடுமாறிகிட்டு இருக்கேம்!"ன்னாரு திருநீலகண்டன் உண்மெயெப் போட்டு உடைக்குறாப்புல.

            "என்னது கேஸ் கட்டு இல்லையா? ஏம்ங்கய்யா குறுக்கு விசாரணைன்னா மொத நாளே வக்கீலுங்க எல்லாம் பிராக்டீஸ் பண்ணிப் பாப்பாங்கன்னு கேள்விப்பட்டிருப்பேம். அப்போ நீஞ்ஞ இதுவரைக்கும் கேஸ் கட்டெ கூட பொராட்டிப் பாக்கலையா?"ன்னா செய்யு கப்பல் கவுந்த பெறவு அதுல போற தானும் மூழ்குறாப்புல.

            "அத்து வந்தும்மா! ஒன்னோட கேஸ் கட்டு வீட்டுல இருக்கும்ன்னு நெனைச்சிக்கிட்டு நேத்திக்குக் கோர்ட்டுலேந்து ஆபீஸ் போவாம வீட்டுக்குப் போயிட்டேம். வீட்டுக்குப் போனா அங்க ஒன்னோட கேஸ் கட்டு காணல. அப்பிடின்னா ஆபீஸ்லத்தாம் இருக்கும்ன்னு நெனைச்சி காத்தால சீக்கிரமா எழும்பி அதெ எடுத்தாந்து படிச்சிப் பாத்து கிராஸூக்குத் தயாராயிடணும்ன்னு நெனைச்சேம். சரின்னு காத்தால கொஞ்சம் எழுந்திரிக்க முடியாம போனாலும், எழுந்திரிச்ச ஒடனே ஆபீஸூக்கு வேட்டியோடயே ஓடுனேம். அங்கப் பாத்தாலும் அங்கயும் கேஸ் கட்டெ காணல. என்னத்தெ பண்ணச் சொல்றே? திருவாரூரு கோர்ட்டுல இருக்குற வக்கீலுங்களுக்கான ரூம் லாக்கர்ல இருக்குமோ என்னவோ தெரியல. கோர்ட்டுக்குன்னா ஒம்போதரைக்கு மேலத்தாம் போயித் தொறக்க முடியும். அங்க ஒம்போதரைக்கு நாம்மப் போயி நின்னா இங்க எப்போ வழக்குக்கு வர்றது சொல்லு? அதாங் பாத்தேம். கட்டு இல்லன்னாலும் பரவாயில்ல. இங்க வந்து ஜட்ஜூகிட்டெ பாத்து எதாச்சும் சமாளிச்சிப்புடலாம்ன்னு பாத்தா, இந்த ஜட்ஜ் என்னான்னா விடா கொண்டான், கொடா கொண்டன்னா இருக்காம். என்னத்தெ பண்ணச் சொல்றே?"ன்னாரு வக்கீல் நோட்டு எங்கன்னா நோட்டெ காணும்ன்னு சொல்ற சின்ன புள்ளையப் போல.

            "என்னங்கய்யா கேஸ் கட்டெ எடுத்துட்டு வர்றாம வந்ததை இம்மாம் அலட்சியமா சொல்றீயே? கட்டு வேற ஆபீஸ்லயும் இல்லேங்றீயே, வீட்டுலயும் இல்லேங்றீயே. கட்டு இருக்குமா ன்னா?"ன்னா செய்யு புதுப்புது பூதமா கௌம்பி வர்றதப் பாத்துப் பயப்படுறாப்புல.

            "கட்டு நிச்சயம் திருவாரூரூ கோர்ட்டுல இருக்குற லாக்கர்லத்தாம் இருக்கு. கேஸ் சம்பந்தமா எதாச்சும் பிரிபேர் பண்ணணும்ன்னு எடுத்துட்டுப் போயிருப்பேம். அங்கேயே மறதியாவோ, தவறுதலாவோ வெச்சிருப்பேம். எடையில ஒரு மூணு மாசம் கோர்ட்டு, கேஸ்ஸூன்னு எட்டிப் பாக்காததுல எதெ எங்க வெச்சேம்? ஏம் அங்க இங்க கொண்டுப் போயி வெச்சேம்ங்ற எந்த வெவரமும் சட்டுன்னு ஞாபவத்துல வர்ற மாட்டேங்குதும்மா!"ன்னாரு வக்கீல் தான் இதுக்கு மேல என்னத்தெ பண்டுறதுங்றாப்புல.

            "ஒருவேள கட்டு திருவாரூருக் கோர்ட்டுலயும் ல்லன்னா? என்னத்தெப் பண்ணுவீங்க? எதெ வெச்சி கேஸ்ஸ நடத்துவீங்க?"ன்னா செய்யு எல்லாமே போச்சாங்ற சந்தேகத்துல உண்டான வேதனெ தாங்காம.

            "அது வேணும்ன்னா கோர்ட்டுல காப்பிப் போட்டு வாங்கிக்கிடலாம். கொஞ்சம் செலவுத்தாம் ஆவும்!"ன்னாரு வக்கீல் எவ்ளவோ சமாளிச்ச பெற்பாடு இதெ சமாளிக்க முடியாதாங்றாப்புல.

            "அந்த சிலவுக்கான காசிய நாஞ்ஞ தர்ற முடியாது. ஒஞ்ஞ அஜாக்கிரதையால தொலைச்சதுக்குல்லாம் நாஞ்ஞ எதுக்குக் காசியத் தர்றணும்?"ன்னா செய்யு அழுகெய அடக்கிட்டு தழுதழுத்துச் சொல்றாப்புல.

            "அம்மா! தாயே! எந் தெய்வமெ! அதுக்கெல்லாம் ஒங்கிட்டயோ, ஒங்க அப்பாகிட்டெயோ பைசா காச கேக்க மாட்டேம். நிச்சயமா அந்த கட்டுங்க எல்லாம் திருவாரூரு கோர்ட்டுலத்தாம் இருக்கும். இன்னிக்குப் போறப்பவே அதெல்லாம் எடுத்து ஆபீஸ்ல வெச்சிட்டுத்தாம் மறுவேலப் பாப்பேம்!"ன்னாரு வக்கீல் ஒடைஞ்சு போன செய்யுவெ ஒட்ட வைக்குறாப்புல.

            "கேஸ் கட்டு கையில இல்லாம கேள்விகளக் கேக்க முடியாதா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு எப்பிடியோ இன்னிய பொழுது காரியம் ஆனா பரவாயில்லங்றாப்புல.

            "கேக்கலாம். கிராஸ் அவ்வளவு எடுப்பா இருக்காது. அதெ விடவும் நாம்ம ஒரு மணி நேரமாவது கிராஸ் கொஷ்ஷின்ஸ்ஸ தயார் பண்ணிட்டு சின்னதா ஒரு பிராக்டீஸை மனசுக்குள்ளப் பண்ணியாவணும். அதுக்கெல்லாம் இப்போ நேரமிருக்கா என்னா?"ன்னாரு வக்கீல் சுப்பு வாத்தியார்கிட்டெ டைம் மிஷின் இருக்காங்றாப்புல.

            "அதெ கணக்குப் பண்ணித்தாம் ஜட்ஜ் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்திருக்காரு. அதெயும் பயன்படுத்திக்க முடியாதபடி கேஸ் கட்டையே எடுத்தாராமலேயே வந்திருக்கீயே? செரி பரவால்ல. இதுக்கு அமைப்பு அவ்வளவுதாங். மனசுல தோணுன சில கேள்விகளையாவது கேட்டு இதெ இன்னிக்கே முடிச்சிப்புடுங்க. இதெ ஒண்ணு, ஓணான்ன தூக்கி மடியில கட்டிக்கிட்டாப்புல இருக்கு. நடக்குமா? நடக்காதான்னு எந்நேரமும் கனவுல வரைக்கும் வந்துட்டுப் போவுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இதுக்கு மேல இதெ சொமக்க தமக்குத் தெம்பு இல்லங்றாப்புல.

            "அப்பிடில்லாம் கிராஸ் பண்ணா அவனுக்குக் கொழுத்துப் போயிடும். கோர்ட்டுக்கு வெளியில வெச்சி அன்ன கேள்விகளக் கேக்குறவனுங்களே, நாம்ம கோர்ட்டுக்குள்ள வெச்சி உரிச்சி எடுக்கணும் சார்! அவனுவோ வெளியில பேசுறதுக்குல்லாம் அமைதியா இருக்கேம்ன்னு சொல்லுறீங்களே! ஏம் அமைதியா இருக்கேம்ங்றதெ எனக்குக் காட்டக் கிடைக்குற சந்தர்ப்பம் சார் அது. இந்தக் கோர்ட்டோட வரலாறுலயே அப்பிடி ஒரு கிராஸ் நடந்திருக்கக் கூடாது. அப்படி ஒரு கிராஸ்ஸப் பண்ண நினைக்கிறேம். இந்தக் கிராஸ்ஸ நெனைச்சி நெனைச்சி அவனுக்கு வாழ்நாளெல்லாம் உறுத்தணும், ஒதறல் எடுக்கணும் சார்! நீங்க என்னான்னா போனப் போவுது, பொழைச்சிப் போவட்டும் விட்டுடுறீங்க! எப்பிடி சார் விட முடியும்? ஒங்களுக்கு வேணும்ன்னா அவ்வேம் பேசுறதும், கிண்டல் அடிக்கிறதும் சர்வ சாதாரணமா இருக்கலாம் சார்! நாம் ஒரு புரபஸனல். நம்மாள அதெ அப்பிடியெல்லாம் எடுத்துக்கிட முடியாது! அவனெ வெச்சிச் செய்யணும் சார்! அப்பத்தாம் அடங்குவான்!"ன்னாரு திருநீலகண்டன் வாழ்க்கையிலயே மொத மொதலா ரோஷம் கண்டவர்ரப் போல.

            "அவனெ வெச்சிப் பண்ணுறதுக்கு நமக்கு நெறைய வாய்ப்புங்க இருக்குங்கய்யா! அடுத்ததா வன்கொடுமெ வழக்குல அவனெ மட்டுமில்லாம, அவ்வேம் குடும்பத்தையும் குறுக்கு வெசாரணை பண்ணுறதுக்கான வாய்ப்புங்க இருக்குய்யா! இந்த வழக்குல நீஞ்ஞ இவனெ மட்டுந்தானே வெச்சிப் பண்ண முடியும். வன்கொடுமெ வழக்குல அவனோட மொத்தக் குடும்பத்தையும் வெச்சிப் பண்ணலாம். அதால அதுவரைக்கும் கொஞ்சம் நேரத்தப் பாத்துட்டு பொறுமையா இருங்க. ஏன்னா அந்த கேஸூங்கத்தாம் நாம்ம போட்டது. அதெ ஸ்ட்ராங்கா பண்ணிக்கிட்டா போதும். இத்து இவ்வேம் போட்டா கேஸூத்தானே. இதுல சுமாரா குறுக்கு விசாரணை பண்ணிக்கிட்டு விட்டுடுங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இன்னிய பொழுது எப்பிடியோ வெசாரணையில ஓடுனா பரவாயில்லங்றாப்புல.

            "அப்பிடில்லாம் விட முடியாது சார்! இந்த திருநீலகண்டன் கிராஸ் பண்ணான்னா அதெ பார் கெளன்சில் வரைக்கும் லாயர்ஸ் பேசணும். அப்பிடித்தாம் விசாரிப்பேம். இன்னிக்கு இவனெ குறுக்கு விசாரணை பண்ணுறங்றது பாம்ப அடிச்சிக் கொல்லாம தப்ப விடுறதெப் போல. இன்னிக்கு இதெ விட்டுட்டு இன்னொரு தேதியில பண்ணுறங்றது பாம்ப அடிச்சி கண்ட துண்டமா வெட்டி பால்ல ஊத்திக் குழி தோண்டி பொதைக்குறாப்புல. பாம்ப அடிச்சி விடுறதுக்கு நாம்ம பைத்தியக்கார்ரம் இல்ல சார்!"ன்னாரு வக்கீலு தர்க்க ஞாயம் வெச்சு பேசுறாப்புல.

            "இந்தப் பேச்சுல ரண்டெ எடுத்து விட்டா கூட போதும். இன்னிக்குக் கதெ முடிஞ்சிடும். அடுத்தக் கதெயில மவளெ குறுக்கு விசாரணைப் பண்ணி விட்டுப்புடுவாங்க. அவளும் கொஞ்சம் சொதந்திரமா ஆயிடுவா பாருங்க. இப்பத்தாம் எம்பில்ல பிராஜெக்ட்ட போட்டடிச்சு முடிச்சி அடுத்ததா பிஹெச்டிக்குப் போவணும்ன்னு என்னென்னவோ தயாரு பண்ணிட்டு இருக்கா. என்டரன்ஸ் எழுதணும், செலக்ட் ஆவணும்ன்னு சொல்லிட்டு இருக்கா. நீஞ்ஞ மனசு வெச்சா இன்னிக்கு முடிச்சிப்புடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கெஞ்சிக் கால்ல வுழுவுற நெலமைக்கு வந்துப்புட்டாப்புல.

            "நீ தாரளமாக என்னத்தெ படிக்கணுமோ படிம்மா. இதெ மனசுல ஏத்திக்காதே. இதெல்லாம் வக்கீலுங்க எங்களுக்குள்ள வெளையாட்டு. நாங்க இப்பிடித்தாம் இதெ ஆடுவோம். நீ படிக்க வேண்டியதெ படிச்சிக்கிட்டெ இரும்மா."ன்னாரு வக்கீல் செய்யுவப் பாத்து என்னத்ததாம் கெஞ்சுனாலும் எதுக்கும் அசமடங்க மாட்டேம்ங்றாப்புல.

            "எப்பிடிங்கய்யா இதெ ஒண்ணுத்தெ பூரான புடிச்சி சீலைக்குள்ள வுட்டுப்புட்டாப்புல இருக்கு. இந்த நெனைப்பு வந்தாவே போதும் படிக்கணும்ன்னு நெனைக்கிற நெனைப்பும் ஓடிப் போவுது. ஏம்டா படிக்கிறேம்ன்னு இருக்குது. இதோட கிராஸ்ஸ முடிச்சி, அடுத்ததா வன்கொடுமெ வழக்கோட கிராஸ்‍ஸையும் முடிச்சிட்டா நமக்கென்னன்னு அக்கடான்னு இந்தக் கேஸூம் ஒண்ணும் வேணாம்ன்னு, ஜீவனாம்சமும் வேணாம்ன்னு ஒதுங்கிடுவேம். இந்தக் கேஸூலேந்து எதாச்சும் கெடைச்சா அத்தனையையும் நீங்களே பீஸ்ஸா எடுத்துக்கோங்கய்யா. பைசா காசிய அதுலேந்து கொடுங்கன்னு கூட கேக்க மாட்டேம்!"ன்னா செய்யு வழக்குன்னாலே வெறுத்துப் போனாப்புல.

            "என்னம்மா இந்த அளவுக்கு விரக்தியா பேசுறே? கேஸ்ஸூ கண்டிப்பா நம்மப் பக்கந்தாம் ஜெயிக்கும். நம்ம பக்கம்தாம் நிக்கும். அதுல ஒண்ணும் சந்தேகப்பட வேணாம். இந்தக் கேஸ்லயே நமக்கு அவனோட வாழப் போவ பயமா இருக்கு, போவ முடியாதுன்னு சொன்னா சோலி முடிஞ்சது. இது ஒரு வழக்கெ கெடையாது. சேந்து வாழ வான்னு ஒரு பெட்டிஷன்தான் போட்டிருக்காம். அவ்வளவுதான் இந்த வழக்கு. நாம்ம முடியாதுன்னட்டா அடுத்ததா விவாகரத்த வாங்கிட்டுப் போன்னு அதுக்கு அர்த்தம். அவ்வளவுதாம். இதுக்கு ஏம் நீ இவ்ளோ டென்ஷன் ஆவுறே?"ன்னாரு வக்கீல் எதுவுமே வழக்குல பெரிய விசயமே இல்லங்றாப்புல.

            "டென்ஷன்லாம் இல்லீங்கய்யா! இன்னிக்குக் கிராஸ்ஸ முடிச்சா ஒரு வேல முடிஞ்சிடும். இத்து மனசுல ஒரு பாராம இருக்குங்கய்யா. அவனுவோ பேசுறது அதெ விட பெரிய பாரமா இருக்குங்கய்யா! வர்ற ஆத்திரத்துக்கு அவனுவோள அடிச்சிப்புடுவேனோன்னு வேற பயமா இருக்குங்கய்யா! எதாச்சும் அசாம்பாவிதமா நடக்குறதுக்குள்ள ஏதோ நாலு கேள்வியக் கேட்டுவிட்டு அந்தாண்ட அனுப்பிடுங்கய்யா! அடுத்தத் தேதியில நம்ம கிராஸ்ஸ முடிச்சிட்டு இந்தாண்ட ஓடியாந்துடுவேம்!"ன்னா செய்யு தலைக்கு வந்தது தலைப்பாகையோட போவட்டுங்றாப்புல.

            "இந்தத் தேதியில அவனெ கிராஸ் பண்ணி முடிச்சா, ஒடனே அடுத்தத் தேதியில ஒன்ன கிராஸ் பண்ணி முடிச்சிடுவான்னு நெனைக்குறீயா? இப்போ அவனெ எவ்வளோ காக்க வெச்சிருக்கேம். அதெ போலத்தாம் அவனுவோ தரப்புலயும் செய்வானுவோ. ச்சும்மா ஒலகம் புரியாத பொண்ணா இருக்கீயேம்மா! இதெப் பத்தி நீ கவலைப்படாம ஏதோ பிஎச்டி படிக்கணும்ன்னு சொன்னீயோ இல்லீயோ! அதெப் படி. வேணும்ன்னா இங்க கோர்ட்டுக்கும் புக்ஸ்ஸ எடுத்தாந்துப் படி!"ன்னாரு வக்கீல் சமத்காரமா புத்திமதி சொல்றாப்புல.

            "இந்தக் கோர்ட்டு நெனைப்பு வந்தாலேயே போதும்யா எடுக்குற புத்தகமும் அப்பிடியே தானா அந்தாண்டப் போயி விழுந்துடும். இன்னிக்குக் கோர்ட்டுக்கு வந்திருக்கேன்னா இனுமே நாம்ம புத்தகத்தெ எடுக்க ரண்டு நாளு ஆயிடும். அதெ போல கோர்ட்டுக்கு வர்றதுக்கு ஒரு நாளுக்கு மின்னாடியே புக்க எடுக்க முடியாது நம்மாள. நம்ம நெல மனநெல அப்பிடி இருக்கு!"ன்னா செய்யு தன்னோட மனசு படுத்துற பாட்டெ எடுத்துச் சொல்றாப்புல.

            "செரி இதெ பத்தி நெனைக்காதே. இந்த ஒரு தேதிய மட்டும் விட்டுடு. அடுத்தத் தேதியில என்னவோ கிராஸ்ஸ ஜாலியா நெனைச்சிக்கிட்டுச் சீக்கிரம் பண்ணு பண்ணுன்னு சொல்றானுவோளே அவனுவோள அருணாக்கயிறு வரைக்கு அவுத்து விட்டு ஓட வைக்கிறேம் பாரு! கொஞ்சமாச்சும் ஸ்டப்பா கேள்விகள தயாரு பண்ணிக்கணும்மா! அப்பத்தாம் கிராஸ்ன்னா அதுக்கு ஒரு மரியாதெ இருக்கும்! அதெ நாம்ம ஒவ்வொரு கிராஸ்லயும் மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக்கேம். இந்த ஒரு கேஸ்ல அதெ விட்டோம்ன்னா வெச்சுக்கோ அது என்னோடி லைப்லயே பெரிய ப்ளாக் ஹோல்லா ஆயிடும்!"ன்னாரு வக்கீல் வானமே தலைகுப்புற வுழுவுற மாதிரிக்குத் தன்னோட மானமே போயிடுங்றாப்புல.

            "இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்ததுக்கு நறுக்குன்னு நாலு கேள்விகளத் தயார் பண்ணிருக்கலாம். என்னவோ புதுசா எஞ்ஞ கேஸ்ஸத்தாம் மொத கேஸ்ஸா எடுத்து நடத்துறாப்புலல்ல பேசுதீயே? எஞ்ஞ எல்லா கேஸ்களையும் நீஞ்ஞத்தானே நடத்துறீயே? பூரா கதெயும் ஒஞ்ஞளுக்குத் தெரிஞ்சதுதானே? அதுலேந்து ஒரு நாலு கேள்விக் கூடவா கேக்க வாராது?"ன்னா செய்யு வாதம் பண்ணுற வக்கீல்கிட்டெயே வாதம் பண்டுறாப்புல.

            "சார்! ஒங்கப் பொண்ணு ரொம்ப உணர்ச்சிவசப்படுறா. நாம்ம ஜட்ஜூகிட்டெ நாளைக்கே கிராஸ்ஸூக்குத் தேதிய வாங்கி நாளைக்கே இதெ முடிக்கிறேம் பாருங்க!"ன்னாரு திருநீலகண்டன் விதண்டாவாதம் பண்ணுறதையெல்லாம் வாதத்தால செயிச்சுட முடியாதுங்றாப்புல. இவுங்க இப்பிடிப் பேசிட்டு இருக்கிறப்பவே காப்பி குடிக்கிறதா கெளம்பிப் போன பாலாமணி, கங்காதரன் வக்கீலோட ராசாமணி தாத்தாவும் இன்னோவா கார்லேந்து எறங்கி கோர்ட்டுக்குள்ளாரப் போனாங்க. போறப்ப, "என்னப்பா பங்காளி! அந்தப் பொண்ணுகிட்டெ கேட்டாவது ரண்டு கேள்வியத் தயார் பண்ணிக்கிட்டீயா இல்லீயா? நம்ம டாக்குடர் கிராஸூக்கு ரெடி! நாஞ்ஞ ரெடி, நீஞ்ஞ ரெடியா? டீலா? நோ டீலா? பட்டுன்னு வாப்பா. வந்து கிராஸ்ஸ முடிச்சி வுடுப் பாக்கலாம்!"ன்னாரு வக்கீல் கங்காதரன் என்னவோ பரிகாசம் பண்ணுறதெ பாயாசம் குடிக்குறாப்புல.

            "ச்சைய்! இந்த அசிங்கத்துக்காவது இப்பவே கிராஸ்ஸ முடிச்சிடணும்!"ன்னா செய்யு தலையில அடிச்சிக்கிட்டு.

            "அப்பிடில்லாம் ஹிஸ்டரிய தடம் மாத்திப் போட்டுட முடியாதும்மா!"ன்னு சொல்லிக்கிட்டெ எதுவும் தன்னெ பாதிச்சிட முடியாதுங்றாப்புல திருநீலகண்டன் கோர்ட்டுக்குள்ளார நொழைஞ்சாரு. அவரு பின்னாடியே செய்யுவும், சுப்பு வாத்தியாரும் என்ன நடக்கப் போவுதுன்னு புரியாம பதற்றமா நொழைஞ்சாங்க.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...