17 Jan 2021

சிறுபிள்ளைப் போல காரணம் சொல்லாதீர்கள்!

சிறுபிள்ளைப் போல காரணம் சொல்லாதீர்கள்!

செய்யு - 689

            வக்கீல் திருநீலகண்டன் சொன்னத் தேதிக்கு ரொம்ப சரியா சார்பு நீதிமன்றத்துக்கு அவராவே பஸ் ஏறி வந்தாரு. சுப்பு வாத்தியாரும், செய்யுவும் ஆர்குடி சார்பு நீதிமன்றத்துக்குப் போயிச் சேர்றதுக்கு மின்னாடியே கோர்ட்டுக்கு வந்து அங்க உக்காந்திருக்கிறதா அவராவே போன அடிச்சுச் சொல்லி அவுங்க ரண்டு பேரையும் கோர்ட்டுக்கு நேரா வேற வாரச் சொன்னாரு வக்கீலு. மணி அப்போ ஒம்போதெ முக்கால் கூட ஆவல. அதெப் பாக்க ஒலகத்துல என்னென்னவோ ஆச்சரியங்கள் நடக்குறதெப் போல இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. ஒவ்வொரு தடவெயும் அவர்ர ஆர்குடி கோர்ட்டுக்கு கொண்டு வர்றதுக்குப் பட்ட பாடெல்லாம் சுப்பு வாத்தியாரு மனக்கண்ணுல வந்துப் போச்சு. மனுஷனுக்கு நேரம் சரியா இருந்தா எல்லாம் தானாவே நடக்கம் போல, நேரம் சரியில்லன்னா என்னத்தாம் மல்லுகட்டுன்னாலும் புல்லுகட்டுக் கூட அந்தாண்ட இந்தாண்ட நவராது போலன்னு அவரு நெனைச்சுக்கிட்டாரு.

            “சாப்பாட்ட முடிச்சிடுவமா?”ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீலப் பாத்த ஆச்சரியம் வெலகாம.

            “அதெல்லாம் ஆயிடுச்சு. ஆத்துக்காரின்னு ஒருத்தி வந்துட்டாளோ இல்லியோ! இனுமே ஓட்டல் சாப்பாடு கூடாதுன்னு நேரத்துக்கே எல்லாத்தையும் பண்ணி கால ஆகாரத்தெ முடிச்சு வுட்டுட்டு மத்தியானத்துக்கும் சாப்பாட்ட கையோடு கட்டிக் கொடுத்துப்புட்டா பாருங்கோ. மத்தியானத்துக்குள்ள காரியம் ஆச்சுன்னா இந்தச் சாப்பாட்டையும் தூக்கிக்கிட்டு அடுத்த பஸ்ஸப் பிடிச்சு திருவாரூருப் போறத்தாம் நிப்பேம் பாத்துக்கோங்கோ. அங்க நெறைய வழக்குக இருக்கு. நாம்ம ஓட்டடல்ல சாப்புட மத்தியானச் சாப்பாட்டுக்கு வரலன்னுல்லாம் வருத்தப்பட்டுக்கிடக் கூடாது. நாம்ம இல்லாத காலத்துல நெறைய தேங்கிப் போயிக் கெடக்கு. எல்லாத்தையும் சரி பண்ணியாவணும். இனுமே பாஸ்ட் பாஸ்ட் எல்லாத்துலயும் பாஸ்ட்தான்!” ன்னு எல்லாத்துலயும் இனுமே வேகம்தாங்ற மாதிரிக்குப் பேச்சுலயும் வேகத்தெ காட்டுறாப்புல மூச்சு வுடாம பேசி முடிச்சாரு வக்கீலு.

            "அப்போ இன்னிக்கு அவனெ குறுக்கு விசாரணைப் பண்ணி முடிச்சிடுவீங்களா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீலோட வேகத்தப் பத்தி விவேகமா கேக்குறாப்புல.

            "அதெ கோர்ட்டுல பாருங்க!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் இனுமே காட்டுற வேகத்தெ சொல்லு இல்ல செயலுல பாருங்கன்னு சொல்றாப்புல.

            "அப்போ இன்னிக்கு ஏதோ நடக்கத்தாம் போவுது!"ன்னா செய்யு வக்கீலோட வேகத்தப் பார்த்த ஆர்வத்துல.

            "நிச்சயமா! ஆனா கடவுள்கிட்டெ இன்னிக்கு நீ வேண்டிக்கோ அவ்வேம் இன்னிக்குக் குறுக்கு விசாரணைக்கு வரணும்ன்னு. ஒரு‍வேள நாம்ம இன்னிக்கு வர்றது தெரிஞ்சி அவ்வேம் வரலேன்னா குறுக்கு விசாரணை பண்ண முடியாதுல்ல. அப்போ அதுக்கு நாம்ம பொறுப்பில்ல!"ன்னாரு வக்கீல் இன்னிக்கு சிங்கமே சிக்குனாலும் சின்னாபின்னம்தான்னு சொல்றாப்புல.

            "அத்து வேற இதுல ஒண்ணு இருக்கா?"ன்னு செய்யு கண்ணு ரண்டும் விரிய பேசி முடிக்கல, பாலாமணியும், வக்கீல் கங்காதரனும் கோர்ட்டுக்குள்ள நொழைஞ்சாங்க. சனங்களும் அடுத்தடுத்தா திமுதிமுன்னு நொழைய ஆரம்பிக்க சப் கோர்ட்டு கூட்டத்தால நெரம்பி வழிய ஆரம்பிச்சது. பத்தேகால் ஆனுச்சு ஜட்ஜ் வந்து வழக்குகள ஆரம்பிக்க. பதினொரு மணி வாக்குக்கெல்லாம் இவுங்க வழக்கு வெசாரணைக்கு வந்துச்சு. பாலாமணியப் பாக்குறுதுக்குக் குறுக்கு விசாரணைக்கெல்லாம் தயாரா வந்திருக்கிறதப் போலத்தாம் இருந்துச்சு. நீயி என்ன கேள்விய வேணாலும் கேளு, அதுக்குப் பதிலச் சொல்றேங்ற மாதிரி வந்து நின்னதும் தெனாவெட்டா ஒரு பார்வையப் பாத்தாம்.

            "ரெஸ்பாண்டட் தரப்புல கிராஸூக்குத் தயாரா? பெட்டிஷனர்ர கூண்டுல ஏத்தலாமா?"ன்னு கேட்டாரு ஜட்ஜ் கேஸ் கட்டெ பாத்தபடிக்கு.

            "மனுதாரர் தரப்புல நிறைய ஆவணங்கள தாக்கல் பண்ணிருக்காங்க. அதுல சிலதெ இன்னும் நாம்ம காப்பி போட்டு வாங்கல. அதெ எல்லாம் கொஞ்சம் பாக்க வேண்டி இருக்கு. அத்தோட ரொம்ப நாளைக்குப் பிறகு இப்பத்தாம் வழக்குல என்டர் ஆயிருக்கிறதால கேஸ்ஸ கொஞ்சம் டீட்டெய்யலா பாக்க வேண்டி இருக்கு. இன்னொரு தேதி கொடுத்தீங்கன்னா உதவியா இருக்கும்யா!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் எதிரியோட தலையோட திரும்புவேன்னு போருக்குப் பொறப்பட்டவேம் தலையில்லா முண்டமா திருப்புறதப் போல. அதெ கேட்டதுமே பாலாமணியும், வக்கீல் கங்காதரனும் சிரிக்க உதட்டெ தொறக்காம ஆரம்பிச்சிட்டாங்க.

            "பெட்டிஷனர் நெறைய தடவெ வந்து வந்து திரும்புறாரு. ஏற்கனவே பல தேதிகள்ல நீங்க ஆஜராவல. ஆஜர் ஆன இந்தத் தேதியிலயும் இன்னொரு தேதி கேக்குறீங்க. இந்தக் கோர்ட்டுக்கு நெறைய வழக்குகள விசாரிச்சி தீர்ப்பு வழங்க வேண்டிய வேல இருக்கு. ஒரு வக்கீலா இருந்துகிட்டு ஹோம்ஒர்க் பண்ணிட்டு வர்றாத குழந்தையப் போல நாளைக்குப் பண்ணிட்டு வந்துடுறதா எக்ஸ்கியூஸ் கேக்குறீங்க. இத்தனெ நாளா இந்த வழக்குல நீங்க என்னத்தாம் பண்ணிட்டு இருந்தீங்க? ஒரு வக்கீலா இது ஒங்களுக்கு அழகு இல்ல. தயவுசெய்து சிறுபிள்ளைப் போல காரணம் சொல்லாதீங்க! லாஸ்ட் அன்ட் பைனல் சான்ஸ் நாளான்னிக்கு கிராஸ்ஸ முடிச்சிடணும். நீங்க முடிச்சாத்தாம் பெட்டிஷனர் தரப்புலேந்து ரெஸ்பாண்டட்ட கிராஸ் பண்ண முடியும். வழக்க அடுத்தடுத்த கட்டத்துக்குக் கொண்டுட்டுப் போவ முடியும். ஒரு வழக்க எத்தனெ வருஷம் இழுத்தடிக்க முடியும்ன்னு நெனைக்கிறீங்க?"ன்னாரு ஜட்ஜ் திருநீலகண்டனப் பாத்து கேஸ்ஸோட இழுவையத் தாங்க முடியலங்றாப்புல.

            "அடுத்த நீங்க கொடுத்திருக்குற தேதியில கண்டிப்பா கிராஸ் பண்ணி முடிச்சிடுறேம்யா!"ன்னாரு திருநீலகண்டன் பவ்வியமான கொரல்ல சட்டுன்னு சரண்டர் கொடுக்குறாப்புல.

            "எல்லாருக்கும் சொல்றேம்! அடுத்தத் தேதியில யாரும் ஆப்சென்ட் ஆகாம ஆஜர் ஆயிடுங்க!"ன்னு சொல்லி ஒரு எச்சரிக்கெ கொடுக்குறாப்புல ஜட்ஜ் அனுப்பி வெச்சாரு.

            கோர்ட்ட வுட்டு சுப்பு வாத்தியாரும், செய்யுவும் சோர்ந்து போயி மெதுவா வெளியில வந்தா, அதுக்கு மின்னாடியே வந்து பரிகாசம் பண்ணுறதுக்குத் தயாரா நிக்குறாப்புல பாலாமணியும், கங்காதரனும் நின்னுகிட்டு இருந்தாங்க. வக்கீலு நேரத்துக்கு வந்து ஆச்சரியம் கொடுத்தப்பவே நெனைச்சிருக்கணும் அதெ வுட ஆச்சரியத்தெ கோர்ட்டுல கொடுக்கப் போறார்ன்னு தனக்குத் தானே நொந்தவர்ரப் போல மொகம் சுருங்கிப் போனாரு சுப்பு வாத்தியாரு.

            "என்னா பங்காளி! எங்க டாக்குடர் கிராஸ்ஸூக்குத் தயாரா வந்து நிக்குறார். இன்ன பயம் பயந்துகிட்டு ஒரு கேள்வியக் கேக்க கூட நடுங்குறீங்களே? வேணும்ன்னா சொல்லுங்க ரண்டு கேள்விய போனா போவுது நாமளே எழுதித் தர்றேம்!"ன்னாரு வக்கீல் கங்காதரன் திருநீலகண்டனப் பாத்து மட்டை அடியா பரிகாசம் பண்ணி அடிச்சிச் சாய்க்குறாப்புல.

            "என்னவோ கிராஸ் பண்ண வந்து கிராஸ் பண்ணாம டீஸ் பண்ணுறது நம்ம தொழில்லயே இல்லாததப் போல பேசுறீயே பங்காளி?"ன்னாரு திருநீலகண்டன் கீழ வுழுந்துட்டாலும் தன்னோட மீசையில மண்ணும் எதுவும் ஒட்டலங்றாப்புல.

            "கோர்ட்டுல பாத்தா நீயி எஞ்ஞள டீஸ் பண்ண மாதிரித் தெரியல. ஜட்ஜ் ஒன்னய டீஸ் பண்ணாப்புலல்ல தெரிஞ்சிது. என்னவோ ஒன்னய ஸ்கூல் பையன் ரேஞ்சுக்கு கொண்டுப் போயி, ஹோம்ஒர்க்க ஒழுங்கா பண்ணிட்டு வான்னுல்ல சொல்லி அனுப்பிருக்காரு. தயவுபண்ணி பங்காளி கிளையண்டு பாவம் பங்காளி! அவுங்களுக்காவது கொஞ்சம் ஹோம்ஒர்க் பண்ணிட்டு வாப்பா. அவுங்க கொடுக்குற காசி கொஞ்சமாச்சும் ஒடம்புல ஒட்டணும்ப்பா! இப்பிடி ஒண்ணுமே பண்ணாம சம்பாதிக்கணும்ன்னு நெனைக்காதே. திருட்டுக் கலியாணம் வேற ஆயிருக்கு. கொழந்தெ பொறந்தா சந்ததி நல்லா இருக்கணும்ல. கொஞ்சம் நேர்மையா நடந்துக்கோ!"ன்னாரு கங்காதரன் எதிர் தரப்புக்கு வந்து திருநீலகண்டனுக்குப் புத்திமதிச் சொல்றாப்புல.

            "என்னா பங்காளி இதெல்லாம்? வாய்தா வாங்குறது நம்ம வரலாற்றுலயே இல்லங்றதெப் போல பேசுறீயே?"ன்னாரு திருநீலகண்டன் மின்னாடி போட்ட தாளத்தையே பின்னாடி திருப்பிப் போடுறாப்புல.

            "இல்லன்னு சொல்லல பங்காளி! இப்பிடி மோசமா ஜட்ஜ் சொல்லுற அளவுக்கு யாரும் வாய்தா வாங்குறதில்லைல பங்காளி! அப்புறம் ஒரு முக்கியமனா விசயம். நமக்கு இன்னொரு கேஸ்ல ஆஜராவ வேண்டிய வேல இருக்கு. அதால சீக்கிரமா சொல்லிட்டுக் கிளம்புறேம். இதுக்கு மேல இழுத்தடிச்சேன்னா வெச்சுக்கோ, ஜட்ஜ் வெசாரணைய யில்லாம எஞ்ஞளுக்குச் சாதவமா தீர்ப்ப எழுதிடுவாரு பாத்துக்கோப்பா! அப்புறம் கேஸ்ஸூ நடத்தாமலே ஜெயிக்கிறாப்புல ஆயிடப் போவுது. ஏதோ கொஞ்சம் பாத்து அவுங்கப் பக்கம் பண்ணி வுடுப்பா!"ன்னு சொல்லிட்டுப் பெரும் சிரிப்பா சிரிச்சாரு கங்காதரன் எகத்தாளத்தப் போடுறாப்புல.

            "வேணும்ன்னா நம்மள அடுத்தத் தேதியில நீஞ்ஞளே கிராஸ் பண்ணுங்களேம்! அந்த ஆளுத்தாம் எதுக்கும் முடியாத ஆளா இருக்கானே!"ன்னாம் பாலாமணி கங்காதரனப் பாத்து அவனும் பெருஞ்சிரிப்ப சிரிச்சிக்கிட்டெ நாசுக்கா நக்கல் பண்ணி நரகல்ல மூஞ்சுல பூசி வுடுறாப்புல.

            "சட்டத்துல அப்பிடி எடமில்ல டாக்டர்! ஆன்னா போறப் போக்க பாத்தா அப்பிடித்தாம் ஆவும் போலருக்கு. நாமளே நம்ம கட்சிக்காரர ஆப்போசிட் சைட்ல இருந்து குறுக்கு விசாரணை பண்ணுறாப்புல. நல்ல வக்கீல கொண்டாந்து போடுறாங்கப்பா! இந்த மாதிரி வக்கீலு அமைஞ்சா எல்லாத்திலயும் கால ஆட்டிக்கிட்டெ ஜெயிச்சிடலாம்ப்பா!"ன்னு சொல்லிட்டு இதுக்கு மேல திருநீலகண்டன என்னத்தெ கேவலம் பண்டுறதுங்ற மாதிரிக்கிக் கங்காதரன் கெளம்பிப் போயி அவுங்களோட இன்னோவால ஏறப் போனாரு.

            "முடியலன்ன சொல்லுப்பா! அடுத்த தேதிக்கு வர்றப்போ நானே நாலு கேள்விய எழுதியாந்து தர்றேம்ப்பா!"ன்னு இன்னிக்கு அசிங்கப்பட்டுப் போயி நாளைக்கும் அசிங்கப்பட வான்னு சொல்றாப்புல சொல்லிட்டு பாலாமணியும் இன்னோவால ஏறப் போனாம். அவ்வேம் ஏறுனதும் அவனெ கட்டிப் பிடிச்சி கன்னத்துல ஒரு முத்தத்தெ வெச்சாரு கங்காதரன். "கோர்ட்டுக்கு வந்து என்னம்மா பேச கத்துகிட்டீங்க டாக்டர்! போறப் போக்கப் பாத்தா நமக்கு குட்பை சொல்லிட்டு நீங்களே கேஸ்ஸ எடுத்து நடத்த ஆரம்பிச்சிடுவீங்க போலருக்கே!"ன்னாரு கங்காதரன் வெளியில நிக்குறவங்களுக்குக் கேக்குறபடி சத்தமா. அதெ கேட்டுக்கிட்டு பாலாமணியும் பதிலுக்கு இன்னொரு மொறை கங்காதரனக் கட்டிப் பிடிச்சி பச்சக் பச்சக்ன்னு கன்னத்துல பத்து முத்தத்துக்கு மேல கொடுத்திருப்பாம். பட்டுன்னு இன்னோவாவோடட கதவு அடைச்சுச் சாத்துன்ன சத்தத்தோட அது கௌம்புனுச்சு. இன்னோவா பொறப்பட்டதும், "இதென்ன ஆம்பளைக்கி ஆம்பளை கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுத்துட்டு?"ன்னா செய்யு அருவருப்புக் காட்டுறாப்புல. அவ்வே மொகம் ரொம்பவே சொணங்கிப் போயிடுச்சு.

            "அவனுவோ இன்னிக்கு ஜெயிச்சிட்டான்னுவோளாம். அதெ அப்பிடிக் காட்டுறானுங்க!"ன்னாரு திருநீலகண்டன் தலையத் தொங்கப்போட்டுக்கிட்டு அதுக்கு ஒரு சமாதானத்தெ சொல்றாப்புல.

            "ஏம்ங்க்ய்யா நீஞ்ஞத்தாம் இன்னிக்குப் பேருக்கு ஒரு கிராஸ்ஸப் பண்ணி முடிக்க வேண்டித்தானே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தான வந்த வாய்ப்பெ வீணா வுட்டுப்புட்டு நிக்குறதெ சொல்லிக் காட்டுறாப்புல.

            "அங்கத்தாம் சார் இருக்கு நம்மளோட மாஸ்டர் ப்ளான். அவ்வேம் என்னிக்குப் பண்ணுவேம்ன்னு நெனைக்கிறானோ, அன்னிக்குப் பண்ணவே மாட்டேம். என்னிக்குப் பண்ண மாட்டேம்ன்னு நெனைக்கிறானோ அன்னிக்குத்தாம் பண்ணுவேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் லெப்ட்ல இண்டிகேட்டர்ரப் போட்டு ரைட்டுல ஒடைச்சித் திருப்புற வாகனக்காரனெப் போல.

            "இதுல என்னங்கய்யா கெடக்கு? போயி சேந்து வாழப் போறதில்லன்னு முடிவாயிடுச்சு எப்பிடி வாணாலும் நீஞ்ஞ கேள்வியக் கேக்கலாம். கேஸ்ஸூ தோத்தாலும் பரவாயில்ல. ஒடனடியா வெவாகரத்துக் கேஸ்ஸப் போட்டுட்டு வுட்டுப்புடலாம். இன்னிக்கு முடிச்சிருந்தா ஒஞ்ஞளுக்கும் ஒரு அலைச்சல் மிச்சமாவும். நமக்கும் பாத்தீங்கன்னா கோர்ட்டுக்கு வந்துட்டுப் போற ஒரு நாளு மிச்சமாவும்ல்ல. என்னவோ பள்ளியோடத்துல பொண்ண கொண்டாந்து அழைச்சிட்டுப் போறது போலல்ல ரிட்டையர்டு ஆனப் பெறவு நாம்ம பொண்ண அழைச்சிக்கிட்டுக் கோர்ட்டுக்கும் வூட்டுக்குமா அலைஞ்சிட்டு இருக்கேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீலோட வௌக்கத்தப் பாத்து ஆவாத கதைக்கு ஏம் தேவையில்லாம்ம ஆத்தெ கட்டி எறைக்கணுங்றாப்புல.

            "நீங்க நெனைக்கிற மாதிரியெல்லாம் ஒரு குறுக்கு விசாரணைய முடிக்க முடியாது. இன்னிக்கு வந்தான்ல. எங்கேயிருந்து வந்திருக்காம்? மெட்ராஸ்லேந்து. வந்து அலைஞ்சிட்டுப் போவட்டும். அதுல இன்னோவா காருக்கு வேற செலவழிச்சிட்டு வந்திருக்காம். ஆன்னா வந்து ஏமாந்துல்ல போயிருக்காம். அதெ மறைக்கிறதுக்குத்தாம் அவனுங்க அப்படி நம்மள டீஸ் பண்ண பாக்குறது? அவனுங்க மாதிரியெல்லாம் நாம்ம தரை டிக்கெட் அளவுக்கு எறங்கி டீஸ் பண்ண மாட்டேம் சார்! கூண்டுல நிறுத்தி எப்பிடி டங்குவார்ர அறுக்கணுமோ அப்படி அறுத்து விட்டுடுவேம். பாக்கத்தானே போறீங்க நம்மளோட ருத்ர தாண்டவம் அப்போ எப்பிடி இருக்கப் போவுதுன்னு?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் வேட்டி அவுந்து வுழுந்தாலும் கோவணம் அவுந்து வுழுவலங்றாப்புல.

            "இன்னிக்குப் போயி ஏம்ங்கய்யா தேவையில்லாம தேதியத் தள்ளிப் போட்டீங்க? ஜட்ஜூம் ஒரு மாதிரியா கேட்டுப்புட்டாரு! இந்தப் பயலுவோ அதுக்கு மேல கேட்டுப்புட்டானுவோ! நமக்கு ஒரு மாதிரியா போயிடுச்சு! ஒஞ்ஞளுக்கு ஒரு அசிங்கம்ன்னா அத்து நமக்குத்தானேங்கய்யா! நமக்கு வந்தக் கோவத்துக்கு செருப்ப கழட்டி அடிச்சிப்புடலாம்ன்னு தோணுச்சு அவனுவோ பேசப் பேச. ஒண்ணும் சொல்ல முடியாமத்தாம் அடக்கிட்டு இருந்தேம்!"ன்னா செய்யு தன்னோட ஆத்தாமை எரிமலையா வெடிக்குறாப்புல.

            "ஒனக்கு மனசுல என்னத் தோணுதோ, அதெ பண்ணு. செருப்ப கழட்டி அடிச்சா அத்து ஒரு கேஸாவும் அவ்வளவுதானே. அந்தக் கேஸ்ஸ ஒனக்குப் பிரியாவே நாம்ம நடத்தித் தர்றேம் போதுமா? இதெயெல்லாம் சொல்லாதேம்மா செஞ்சு காட்டு. இதுல ஒன்னோட டெக்னிக் கோவப்பட்டு நீ அவனுங்கள டென்ஷன் ஆக்குவே. நம்மளோட டெக்னிக் கோவப்படாமலே சிரிச்சிக்கிட்டெ டென்ஷன் ஆக்குவேம்! ஐயம் எ ப்ரபஸனல் கில்லர் யு நோ? அவனோட அம்மாக்காரியையே காலி பண்ணிட்டெம். அவனெ காலி பண்ணுறதுக்கு எவ்ளோ நேரம் ஆவும்? ஒரு பெட்டிஷனத் தூக்கிப் போட்டேன்னா வேல காலி ஆயிடும்!"ன்னாரு வக்கீல் செத்த பாம்பெ அடிச்சு வீராப்பு காட்டுறாப்புல.

            "சீக்கிராம அதெ செஞ்சி முடிங்கய்யா! அவ்வேம் ஆடுற ஆட்டம் தாங்க முடியலெ."ன்னா செய்யு சொல்றதெ செஞ்சி முடிக்கணும்ன்னு பிடிவாதம் காட்டுறாப்புல.

            "அதெல்லாம் பிரம்மாஸ்திரம் மாதிரி. டக்குன்னு யூஸ் பண்ணிட மாட்டேம். பயன்படுத்த வேண்டிய நேரத்துல சரியா பயன்படுத்துவேம். ஓக்கே?"ன்னாரு வக்கீல் சமாளிப்புகள் ஒரு போதும் முடியாதுங்றாப்புல.

            "வர்ற தேதியில ஏதோ ஒப்புக்குச் சப்பாணியா வெசாரணையப் பண்ணி வுட்டாலும் பரவாயில்ல. பண்ணி வுட்டுப்புடுங்க. அவனுங்க அலப்பரைத் தாங்க முடியலங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வேறெப்படி வக்கீல உசுப்பி காரியத்தெ செய்ய வுடுறதுன்னு புரியாததப் போல.

            "என்ன சார் நம்மளப் பாத்து இப்பிடிச் சொல்லிப்புட்டீங்க? ஒரு முறையான குறுக்கு விசாரணைன்னா எப்பிடி இருக்கும்ங்றதெ அன்னிக்கு நீங்கப் பாக்கப் போறீங்க! என்னோட ஆல் டைம் எப்போர்ட்டையெல்லாம் சேர்த்து அன்னிக்கு கிராஸ் பண்ணுறதா இந்த நொடியில இப்பிடி நீங்க சொன்னதால சபதமே பண்ணிட்டேம்!"ன்னாரு வக்கீல் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேங்றாப்புல.

            "சரி அப்பிடின்னா பரவாயில்ல. இன்னிக்கு நடந்ததும் ஒரு வெதத்துல நல்லதுதாம். இத்து நடந்தப் பெறவுத்தானே ஒஞ்ஞளுக்கு இந்த அளவுக்கு வேகம் வருது. இந்த வேகத்தெ வுட்டுப்புடாம வர்ற தேதியில அவ்வேம் மேல பாய்ஞ்சுக் கொதறிடுங்கய்யா!"ன்னா செய்யு எப்படியாச்சும் எதையாச்சும் பண்ணித் தொலையுங்கங்றாப்புல.

            "ஒண்ணும் மனசுல நெனைச்சுக்காம வீடு போங்க. அடுத்தத் தேதியில நடக்கப் போறதெ நெனைச்சிக்கிட்டு வாங்க. நீங்களே வந்து அவனெ விட்டுடுங்கன்னு எங்கிட்டு கெஞ்சுற அளவுக்கு கிராஸ் இருக்கும்!"ன்னாரு வக்கீல் எவ்வளவு எறக்கமா எது நடந்தாலும் ஒலகம் தன்னெ நம்பும்ங்றாப்புல.

            "அப்பிடில்லாம் வந்து யாரும் கெஞ்ச மாட்டேம்ங்கய்யா. நீஞ்ஞ அவனெ கதறக் கதற கேள்வியாலேயே சாவடிக்கலாம்! அதெத்தாம் எதிர்பாக்குறேம்!"ன்னா செய்யு சாவப் போறேம்ன்னு பம்மாத்துக் காட்டுறவனெ யாரும் வந்து தடுக்கப் போறதில்லங்றாப்புல. அப்பிடியே இந்த மாட்டுக்குப் பேசிக்கிட்டே மூணு பேத்துமா ஆஸ்பத்திரி ஸ்டாப்பிங்க வந்தாங்க. இவுங்க வந்த நேரத்துல திருவாரூக்குப் போற பஸ்ஸூ ஒண்ணும் வந்துச்சு. "செரி கிளம்புறேம் சார்!"ன்னு கிளம்பப் பாத்தவருகிட்டெ பையிலேந்து ஐநூத்து ரூவாய எடுத்துக் கொடுத்தாரு சுப்பு வாத்தியாரு. அதெ விருட்டுன்னு வாங்கிக்கிட்டு ஓடிப் போயி அவராவே பஸ்ல ஏறுனாரு வக்கீல் திருநீலகண்டன். வழக்கமா ஆர்குடி கோர்ட்டுக்கு வந்தா அவர்ர அழைச்சுக்கிட்டுக் காலை சாப்பாடு, மத்தியானச் சாப்பாட்டையெல்லாம் ஹோட்டல் ஆரியாஸ்ல வெச்சு பண்ணியாவணுமே, இன்னிக்கு எல்லாம் தலைகீழா மாறுனாப்புல வந்தச் சொவடும் போறச் சொவடும் தெரியாம போறாரே வக்கீலுன்னு அவரு போற பஸ்ஸையே ஆச்சரியமா பாத்துக்கிட்டு இருந்தாரு சுப்பு வாத்தியாரு. அத்தோட வழக்குலயும் சொதப்பக் கூடாத சொதப்புல்லா சொதப்பியிருக்காரு வக்கீலுன்னு சலிச்சுப் போனாப்புல ஆனாரு. “கலியாணம் ஆயிட்டா எல்லாத்துலயும் ஒரு மாத்தம் வந்துப்புடும் போலருக்கு! நாமொன்னு நெனைச்சா தெய்வம் ஒண்ணு நெனைக்கும்ங்ற மாதிரிக்கி, நாமொன்னு நெனைச்சா வக்கீலு ஒண்ணு நெனைப்பாரு போலருக்கு!”ன்னு தனக்குத் தானே முணுமுணுத்துகிட்டாரு சுப்பு வாத்தியாரு. 

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...