ஒரு கலியாண காதல் கதை!
செய்யு - 688
வக்கீல் திருநீலகண்டன் மூணு மாசத்துக்கு
மின்னாடி கேஸ்ஸ எடுத்து அதால ரொம்பப் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பொண்ணோட அப்பங்காரரு
சுப்பு வாத்தியாருக்குப் பக்கத்துல வந்தாரு. பாக்குறதுக்கு ஒல்லியா கண்ணாடிப் போட்டுகிட்டுப்
பஞ்சத்துல அடிபட்ட ஆளைப் போலத்தாம் இருந்தாரு. பஜாஜ் கம்பெனி எம்மெய்ட்டி வண்டிய தயாரிக்கிறதெ
நிறுத்தி ரொம்ப வருஷம் ஆனதுக்கு அப்புறமும் அந்த வண்டியிலத்தாம் அவரு கோர்ட்டுக்கு
வந்திருந்தாரு. தன்னோட வாழ்க்கையில ஒரே எந்திர வண்டியும், இன்னிய வரைக்கும் ஒரு பழுதும்
இல்லாம ஓட்டிக்கிட்டு இருக்குற வண்டியும் இதுதான்னு ரொம்ப பெருமையா சென்னாரு. அதுலத்தாம்
தன்னோட மவளெ வெச்சி அழைச்சிக்கிட்டு வந்திருந்தாரு.
அந்தப் பொண்ணும் ரொம்ப ஒல்லியாவும்,
சொடிஞ்சி விழுந்துடுறதெப் போலத்தாம் இருந்துச்சு. அந்தப் பொண்ணுக்குக் கலியாணம்
ஆயி ஏழு வயசுல ஒரு கொழந்தெ இருக்குறதா சொன்னா நம்ப முடியாது. பாக்குறதுக்கு வயசுல
சின்னப் பொண்ணு மாதிரித்தாம் தோற்றம் இருந்துச்சு. அந்தப் பொண்ணோட அப்பாவும் தோற்றத்துலப்
பாத்தா பேரன் பேத்திய எடுத்தாப்புல இல்ல. அதிகபட்சமா வயசு நாப்பது சொச்சங்ற மாதிரித்தாம்
இருந்துச்சு. அவரு திருநீலகண்டன் இருந்து பேசுன வரைக்கும் எதுவும் பேசல. அதெ கேட்டுக்கிட்டே
நின்னாரு. திருநீலகண்டன் வேற ஒரு கோர்ட்டுக்கு வாதாட போவ வேண்டியிருக்கிறதா சொல்லிட்டுப்
போனதுக்கு அப்புறந்தாம் பேச ஆரம்பிச்சாரு.
"இந்த வக்கீலு சொல்றதெ உண்மைன்னா
எல்லாரும் நெனைக்கிறீயே?"ன்னாரு அந்தப் பொண்ணோட அப்பங்காரரு, சுப்பு வாத்தியாரு
உட்பட அங்க நின்னுகிட்டு இருந்த எல்லாரையும் பாத்து ஏதோ ஒரு புது விசயத்தெ கொளுத்திப்
போடப் போறாப்புல.
"வக்கீலுங்க எந்தக் காலத்துல உண்மையச்
சொன்னாங்க. இவரு சொல்றதெ உண்மென்னு நம்புறதுக்கு?"ன்னாரு பக்கத்துல இருந்த ஒருத்தரு
பத்த வைக்காத பீடிக்கு நெருப்பெ பத்த வெச்சுக் கொடுக்குறாப்புல.
"நீஞ்ஞ சொல்றதுதாங் செரி! இந்த ஆளு
கலியாணம் பண்ணுன பொண்ணு யாரு தெரியுங்ளா?"ன்னு இடைவெளி விட்டு நிறுத்துனாரு அந்தப்
பொண்ணோட அப்பங்காரரு எல்லாரு மனசுலயும் எதிர்பார்ப்பெ விரிய வுடுறாப்புல.
"யாருக்குத் தெரியும் சொல்லுங்க?
என்னவோ காதலுங்றாம். முடி நரைச்சு கெழடா ஆயிட்டேங்றாம். இருந்தாலும் தங் கூட ஓடி வர்றதுக்குப்
பொண்ணு தயாரா இருந்துச்சுங்றாம். ஆந்திராவுக்கு ஓடிப் போயிட்டு வந்ததா சொல்றாம்.
அரை மணி நேரமா பேசுனப் பேச்சக் கேட்டா சினிமாவப் பாத்ததுப் போலத்தாம் இருந்துச்சு.
சினிமாவுல என்னா நெசத்தையா காட்டுறாம்?"ன்னாரு அதுக்குப் பக்கத்துல நின்னவரு சொன்னா
தெரிஞ்சிக்குவோம்ங்றாப்புல.
"அதுக்கில்லீங்க! அந்த ஆளு கல்யாணம்
பண்ண ஆளு யாருன்னா அவருகிட்டெ கேஸூன்னு வந்தப் பொண்ணுங்க. அந்தப் பொண்ண மயக்கிக்
கலியாணம் கட்டிருக்காம் இந்த வக்கீலு. இந்தப் பயலெ நம்பி எப்பிடிங்க நம்மப் பொண்ணுகளோட
கேஸ்ஸக் கொடுக்குறதுங்றேம்!"ன்னாரு அந்தப் பொண்ணோட அப்பங்காரரு உண்மெயெ செதறு
தேங்காயப் போட்டு ஒடைக்குறாப்புல. அதெ கேட்டதும் எல்லாருக்கும் ஒரு நிமிஷம் அதிர்ச்சியா
இருந்துச்சு ஒடைச்ச செதறு தேங்கா கன்னத்துல வந்து தெறிச்சாப்புல.
"அதெப்படிங்க கேஸ்ஸூன்னு வந்தப் பொண்ணு
இவனெ விரும்பிச்சு? எல்லாமே சினிமாவெத் தாண்டுன ஆச்சரியமாத்தாம் இருக்கு!"ன்னாரு
பக்கத்துல இருந்தவரு கையால தொடைய ஒரு தட்டு தட்டிக்கிட்டு.
"நமக்கு என்னா வேலைங்றீங்க? இந்த
மூணு மாசத்துல இவனோட வண்டவாளத்தெ விசாரிக்கிறதுதாம் வேலை. இந்த ஆளு இழுத்துட்டு ஓடுனப்
பொண்ணு சொத்து வழக்குன்னு இவ்வேங்கிட்டெ வந்திருக்கு. பெரியக் குடும்பம் போலருக்கு.
அப்பங்காரரு செத்துப் போயிட்டாம். இந்தப் பொண்ணு, அண்ணன், அக்கா, தங்கச்சின்னு மொத்தம்
ஆறு பேராம். எல்லா சொத்தையும் அண்ணங்காரன் ஆட்டையப் போட நெனைக்க, இந்தப் பொண்ணுங்கல்லாம்
சேர்ந்து கேஸூப் போடுறப்ப வக்கீல்ல தேடுனப்பத்தாம் நம்ம ஆளு கண்ணுல பட்டிருக்காம்.
இவனோட மொத கேஸ்ஸே சொத்துக் கேஸ்தானாம். அதுவும் யாரு மேலங்றீங்க? இவனோட சொந்தப்
பெரியப்பனாம். அப்பங்காரரோட சொத்தெ ஆட்டயப் போட்டுட்டானே, நாம்ம படிச்சப் படிப்பு
என்னாவுறதுன்னு மொத வக்கீல் நோட்டீஸையே பெரியப்பம் மேல விட்டுருக்காம். அவனுவோளும்
சளைக்காம இவனுக்கு நோட்டீஸ் விட்டிருக்கானுவோ. கோர்ட்டுல கேஸ்ஸூம் நடந்திருக்கு.
நம்ம ஆளு கோர்ட்டுல வாதாடாமலே வாயால வடை சுட்டே, கோர்ட்டுக்கு வெளியில வெச்சி, ச்சும்மா
மெரட்டு மெரட்டுன்னு மெரட்டி சொத்தப் பிடுங்கியிருக்காம்! இவனோட மெத்தேடெ அதாங்களாம்.
இவனுக்குச் சரியாவே வாதாடத் தெரியாதுங்களாம்! நம்மகிட்டெத்தாம் ஆவ் ஊவ்ன்னு சத்தம்
கொடுப்பானாம்!"ன்னாரு அந்தப் பொண்ணோட அப்பங்காரரு வக்கீலோட முன்கதெ சுருக்கத்தெ
ஒப்புவிச்சு முடிக்குறாப்புல.
"ஆன்னா பாருங்க! அத்து வேணாலும் உண்மெயா
இருக்கலாம். பொய்யாவும் இருக்கலாம். இந்த வக்கீலு ராசியான ஆளுங்க. எந்தக் கேஸ்ஸ எடுத்தாலும்
ஜெயிச்சிடுவாம். அப்பிடி ஒரு ராசி அவனுக்கு இருக்குது. அவ்வேம் வாதாடாம இருந்தாலும்
ஜெயிப்பானுங்க. அதெ மட்டும் இல்லன்னு சொல்லிடாதீங்க. இதுவரைக்கும் எடுத்த எந்த கேஸ்லயும்
தோத்ததில்ல. அதாலத்தாங்க இவ்வேம் இப்பிடி அப்பைக்கப்போ எங்கேயோ ஓடிப் போனாலும்
கூட்டம் அள்ளுதுங்க இவ்வேங்கிட்டெ!"ன்னாரு பக்கத்துல இருந்த ஆளு வக்கீலோட நதிமூலம்
ரிஷிமூலம் பாக்குறதுல ஒண்ணும் பெரயோஜனம் இல்லங்றாப்புல.
"நல்ல கதெயெ கெடுத்தீங்க போங்க!
நம்ம பொண்ணுக்கு ஜீவனாம்ச வழக்கப் போட்டுட்டு போனப் பயத்தாம். ஆளெக் காணும்ன்னு
தேடுறேம், தேடுறேம் இன்னிக்கு வரைக்கும் தேடி இன்னிக்குத்தாம் பாத்திருக்கேம். நாம்மத்தாம்
பொண்ண அழைச்சிக்கிட்டு இத்தனெ நாளும் கோர்ட்டுக்கும், வூட்டுக்குமா அலைஞ்சிக்கிட்டு
இருக்கேம். எம் பொண்ண கட்டிக்கிட்டு வஞ்சகம் பண்ணான்னே அந்தப் பாவிப் பயெ இன்னிய வரைக்கும்
ஒரு நாளு கூட கோர்ட்டுப் பக்கம் எட்டிப் பாக்கல. கேஸ்ஸப் போட்டு நம்மப் பொண்ண கட்டுன
பாவிப் பயல நாயா அலைய விடுவாம்ன்னு பாத்தா நம்மள நாய அலைய விட்டதுதாம் மிச்சம். இவனெ
நம்பில்லாம் நம்மப் பொண்ண எப்பிடிங்க கோர்ட்டுக்கு வரச் சொல்ல முடியும்? ஒரு நாளு
இழுத்துட்டு ஓடிட மாட்டாங்றதுக்கு என்ன நிச்சயம்?"ன்னாரு அந்தப் பொண்ணோட அப்பங்காரரு
தாம் படுற பாட்டெ கதெயா படிக்குறாப்புல.
"நாமளும் நீங்க சொல்ற கதெயே அரசல்
புரசலா கேட்டுக்கிட்டுத்தாம் இருக்கேம். அந்தப் பொண்ணோட நெலமெ வேற. ஒங்கப் பொண்ணோட
நெலமெ வேற. அப்பிடில்லாம் பண்ணுற ஆளு கெடையாதுங்க. அவனும் கலியாணம் ஆவாம ரொம்ப நாளா
காஞ்சிக் கெடந்தாம். அந்தப் பொண்ணுக்கும் இனுமே எடுத்துக் கட்டி கலியாணத்தெ பண்ணி
வுட குடும்பத்துல ஆளு கெடையாதுங்க. அண்ணங்கார்ரேம் கலியாணத்தெப் பண்ணிட்டு சொத்தெல்லாம்
அமுக்கிட்டு ஒதுங்கிட்டாம். அந்தப் பொண்ணு ஒத்த மரமா நின்னா. நம்மப் பயலும் அப்பிடித்தானே
நின்னாம். ஒண்ணுக்கு ரண்டு மரமா சேந்து தோப்பாவாலாமான்னு பாத்தாம். அதாங் சங்கதி.
பக்கத்துப் பக்கத்துல இருந்தா பத்திக்க வேண்டியது பத்திக்கத்தானே செய்யும். அதாம் விசயம்.
மித்தபடி நல்ல பயதாங்க. காசின்னுல்லாம் ரொம்பப் போட்டு படுத்த மாட்டாம். ஏதோ இப்பத்தாம்
இப்போக் கொஞ்சம் காசிப் பணம்ன்னு அலையுறதா கேள்வி!"ன்னாரு பக்கத்துல நின்ன ஆளு
கேட்டுகிட்டெ சங்கதியையெல்லாம் புதுசா கேக்குறது போல கேட்டுக்கிட்டு இப்போ புதுசா ஒரு
சங்கதிய எடுத்து வுடுறாப்புல.
"என்னத்தாம் இருந்தாலும் ஒரு வாத்தியாரு
தங்கிட்டெ படிக்க வர்ற பொண்ண கலியாணம் பண்ணக் கூடாது. ஒரு வக்கீலுங்றவேம் தங்கிட்டெ
கேஸ்னுனு வர்றப் பொண்ண கைப்பிடிக்கக் கூடாதுங்க. சில தொழில் தர்மங்கள்ன்னு இருக்குங்களே.
அதெ மீறக் கூடாதுங்றேம்!"ன்னாரு அந்தப் பொண்ணோட அப்பங்காரரு தர்மத்தெ அதர்மம்
கவ்வுனதெ போல.
"அதெல்லாம் பாத்தா இந்தக் காலத்துல
நீஞ்ஞ எந்தக் காரியத்தையும் பண்ண முடியாது. டாக்கடர்ங்றவேம் வியாதிக்குத்தாம் வைத்தியம்
பண்ணணும்ன்னு இருக்கு. எந்த டாக்கடரு வியாதிக்கு வைத்தியம் பாக்குறாம்? வாங்கிப் போட்டு
வெச்சிருக்கிற ஸ்கேன்னு, எண்டோஸ்கோப்பின்னு இருக்குற சாமாஞ் செட்டுக்கும், மெடிக்கல்ல
இருக்குற அத்தனெ மருந்து மாத்திரைக்குத்தான்னே அதையெல்லாம் நம்மட தலையில கட்டணும்ன்னுத்தானே
வைத்தியம் பாக்குறாம். யேவாரம்ன்னா நம்மகிட்டெ சரக்கையும் கொறைச்சிக் கொடுக்கக் கூடாது,
நம்மகிட்டெயிருந்து காசியையும் கூடவும் பிடுங்கக் கூடாதுங்றது தர்மங்றாம். எந்த யேவாரி
அப்பிடி இருக்காம் சொல்லுங்க. நீஞ்ஞப் போட்டிருக்கிற சட்டெ எத்தனெ ரூவான்னா முந்நூத்து
ரூவாய்ம்பாம். நெசமாலுமே முந்நூத்து ரூவாயா அத்து? அதெ பருத்தியா வெளைவிச்ச வெவசாயி,
அதெ துணியா நெஞ்ச நெசவாளியக் கேட்டா எல்லாத்துக்கும் சேத்து நூத்து இருவதெ தாண்டாதும்பாம்.
செரி ஒரு நூத்து இருவதுக்கு இன்னொரு நூத்து இருவதெ லாபமா போட்டு எரநூத்து நாப்பதுக்குக்
கொடுன்னா எந்த யேவாரி கொடுப்பாம்? அதுல ஒரு ஸ்டிக்கர்ர ஒட்டி வெலையப் போட்டுடுவாம்
ஒரே வெலைத்தான்னு. அந்த வெலைக்குத்தான்னே வாங்கிட்டு வர்ற வேண்டியதா இருக்கு? வாத்தியாருன்னா
ஊர்ல எந்த அளவுக்கு தர்மமா இருக்கணும்? அவுங்கள கூப்புட்டு வெச்சித்தாம் மின்னாடி காலத்துல
பஞ்சாயத்துப் பண்ணுறது? ஊர்ல ஒரு பத்திரம் ரீஸ்தரு பண்ணுறதுன்னா வெவரம் கேட்டு எழுதி
வாங்கிக்கிறது. இப்ப என்னான்னா இந்த வாத்திப் பயலுவோ அவனுவோ புள்ளீயோளக் கொண்டுப்
போயி தனியாரு பள்ளியோடத்துல சேத்துக்கிறானுவோ? நம்மடப் புள்ளையோளக் கூப்புட்டு
எஞ்ஞப் பள்ளியோடத்துல சேருங்கன்னு ஊர்வலம் போறானுவோ! அரசாங்கத்தெ நடத்துறது இந்த
அரசியல்வாதிங்கத்தானே. அவனுவோ கட்டுப்பாட்டுலத்தானே அரசாங்க ஆஸ்பத்திரிங்க வருது.
எந்த அரசியல்வாதி அரசாங்க ஆஸ்பத்திரிக்கி வந்து வைத்தியம் பாக்குறாம் சொல்லுங்க? நாடே
அப்பிடித்தாம் கெடக்குது. இருக்குற அயோக்கியன்ல அயோக்கியத்தனம் கம்மியாப் பண்ணுறவேம்
யாருன்னுத்தாம் பாக்க வேண்டியதா இருக்கு. அந்த வெதத்துல இருக்குற வக்கீல்ல நம்மகிட்டெ
அனுசரனையா எறங்கி வந்து பேசுற ஆளு யாருன்னு பாக்க வேண்டியதா இருக்கு. அந்த வெதத்துல
இந்தக் கோர்ட்டுல இவனெ வுட்டா வேற யாரையும் பாக்க முடியாது. என்னத்தத்தாம் திட்டுங்க!
கோவப்பட மாட்டாம். இவனுக்கு ஜெயிக்கிற ராசி இருக்குங்க. எப்பிடியும் ஜெயிச்சிடுவாம்.
நம்பிக்கையோட இருங்க!"ன்னாரு பக்கத்துல இருந்த ஆளு அதர்மத்துல இருக்குற தர்மத்தெ
தேடிக் கண்டுபிடிச்சு அதோட ஒட்டிக்கணுங்றாப்புல.
"என்னங்க பொட்டுன்னு இப்பிடிச் சொல்லிப்புட்டீங்க?"ன்னாரு
அந்தப் பொண்ணோட அப்பங்காரரு மனசு தளந்துப் போயி வாய பொளந்தாப்புல.
"வேறென்னத்தெ சொல்லச் சொல்றீங்க?
எம் பொண்ணோட கதெயும் கிட்டதட்ட ஒங்கப் பொண்ணோட கதெத்தாம். எம் மவளுக்கு மூணு வயசுல
பொண்ணு இருக்கா. திடீர்ன்னு அந்தப் பேமாளிப் பயெ பொண்ண வூட்ட வுட்டுத் தொரத்திட்டாம்.
பொண்ணப் பெத்துட்டேம்ன்னு கட்டிக் கொடுத்தவம் கால்ல, அவனோட அப்பன் ஆயிக் கால்ல வுழுவுறேம்.
அவனுக என்னவோ நமக்குக் கால்ல வுழுறது பழக்கம் போலன்னு நெனைச்சிக்கிட்டு ஒரு மருவாதிக்குக்
கூட எழும்புங்கன்னு சொல்லலங்க! செரித்தாம்ன்னு பாத்தேம். திருவாரூர்லேயே சீனியர் லாயர்ன்னு
சொன்னாங்கன்னே வக்கீல் சின்னப்பாகிட்டெ போனேம். காசில்லாம் ஹெவி. போறப்பல்லாம் நல்லாத்தாம்
பேசுனாம் மனுஷன். கோர்ட்டுக்கு வழக்குன்னு வந்ததுக்குப் பெறவு பாத்தீங்கன்னா கிட்ட
நெருங்கியே பேச முடியல. எல்லாத்துக்கும் குமாஸ்தவப் பாத்துக்கங்றாம். நம்ம கேஸூக்கு
மட்டும் ஆஜராவவே மாட்டாம். குமாஸ்தாத்தாம் பாத்துப் பாத்துத் தேதியக் கொடுப்பாரு.
அதுக்கு ஒவ்வொரு தடவைக்கும் குமாஸ்தாவுக்கு நூத்து ரூவாய அழுதுகிட்டுக் கெடந்தேம்.
கேஸ்ஸு எப்போ டிரையல் ஆவுதோ அப்பத்தாம் வக்கீலு சின்னப்பா வந்து ஆஜராவாராம். அவரு
அப்பிடி ஆஜராவதுறக்கு மொத நாளே ஆபீஸ்ல கொண்டு போயி அய்யாயிரத்தெ கொடுத்துப்புடணும்னுமாம்.
அப்பிடியும் செஞ்சித்தாம் பாத்தேம். கேஸ்ஸூ மட்டும் அந்தாண்ட இந்தாண்ட நவுரல. இத்து
என்னடா சண்டெகாரங்கிட்டெ அவமானப் பட்டு வந்து பஞ்சாயத்துப் பண்ணுறவங்கிட்டெ அவமானப்பட
வேண்டியதா இருக்குன்னு கேஸூ கட்டெ வாங்கியாந்து திருநீலகண்டன்கிட்டெ போட்டேம். அவ்வேம்
பாட்டுக்கு நடத்திக்கிட்டு இருக்காம். நம்மட வக்கீலு இவ்வேம் மெரட்டுன மெரட்டல்ல மாப்புள்ள
வூட்டுக்கார பய புள்ளீயோளும் பயந்து மெரண்டு கெடக்குதுங்க. இவ்வேம் ரொம்ப சரியா நூலு
பிடிச்சாப்புல கேஸ்ஸ நடத்துறாம்ன்னுல்லாம் சொல்ல மாட்டேம். இருக்குற வக்கீல்ல நமக்கு
இவ்வேம் தேவலாம்ன்னு நெனைக்கிறேம்! அதாங் வந்துட்டாம்ல. இனுமே எதாச்சும் பண்ணி எதோ
முடிச்சி வுட்டுப்புடுவாம்!"ன்னாரு பக்கத்துல இருந்த அந்த ஆளு சூட்சமத்தெ ஒடைச்சுச்
சொல்றாப்புல.
"நாம்ம ஒரு கதெயெ சொல்ல வந்தா அதெ
வுட பெரிய கதையல்ல நமக்குச் சொல்றீயே? அவனெ இன்னிக்கு வெளியில வர்ற வெச்சி வெளுத்து
வாங்கலாம்ன்னு நெனைச்சிட்டு வந்தேம். ஒஞ்ஙப் பேச்சக் கேட்டப் பெறவு எல்லாம் மாறிப்
போச்சுது. நாம்ம இப்போ என்ன பண்ணணுங்றீயே?"ன்னாரு பொண்ணோட அப்பங்காரரு தனக்கு
ஏதாச்சும் ஒரு வழிய காட்டுங்கங்றாப்புல.
"ஒண்ணும் பண்ண வாணாம். முடிஞ்சா சொல்ற
தேதிக்கு வந்து ஆஜராவுங்க. முடியலையா பேயாம வூட்டுல கெடங்க. ரொம்ப தேதி தள்ளிப் போறப்ப
வக்கீலே போன அடிச்சிக் கூப்புடுவாம். அப்ப மட்டும் அவனெயும் கோர்ட்டயும் பாத்துப்புட்டு
அவ்வேம் பையில மட்டும் நூத்து ரூவாயத் திணிச்சிட்டுப் போயிட்டே இருங்க. ஒங்க கேஸ்ஸ
மனசுல வெச்சிட்டே இருப்பாம். எங்காச்சிம் தோதா சமய சந்தர்ப்பம் வந்துச்சுன்னா ஒஞ்ஞ
மாப்புளக்காரப் பயல எதுலாச்சும் மாட்டி வுட வெச்சி மெரட்டி வாங்க வேண்டியதெ வாங்கிக்
கொடுத்துப்புட்டு கதெயெ முடிச்சிப்புடுவாம். அவ்வளவுதாங் இவ்வேம் நடத்துற கேஸ்ஸூ.
அவ்வளவுதாம் நாம்ம இவனெப் பத்தி வெசாரிச்ச வகையில இவனுக்குத் தெரிஞ்சது!"ன்னாரு
பக்கத்துல இருந்த ஆளு அவ்வளவுதாம் விசயங்றாப்புல.
அப்படி அவரு சொன்னதும் இப்போ அவர்ர எல்லா
பெரச்சனைக்கும் தீர்வச் சொல்ற சாமியார்ரப் போல நெனைச்சுக்கிட்டு, "அப்பிடின்னா
நமக்கும் என்னத்தெப் பண்ணுறதுன்னு ஒரு வழியச் சொல்லுங்க?"ன்னு பக்கத்துல இருந்த
ஆளுகிட்டெ தன்னோட கதெயச் சொல்லி சுப்பு வாத்தியாரு கேட்டாரு.
"இவனெ வக்கீலா வெச்சிக்கிட்டு ஒண்ணும்
செய்ய ஆசெப்படாதீயே! அவனுக்கா கிறுக்குப் பிடிச்ச மாதிரிக்கி ஒரு நாளு மனசு வேல செய்யும்.
அன்னிக்கு நமக்கு எதிர்ப்பா இருக்குற ஆளுங்கள ஒரு பிடி பிடிச்சிடுவாம். அந்த ஒரு நாளு
ஆட்டத்துலயே மெரள வெச்சி எதெ பண்ணணுமோ அதெ பண்ணிக் கொடுத்துடுவாம். இவ்வேங்கிட்டெ
வழக்க ஒப்படைச்சிட்டீயளே? இனுமே நமக்கும் வழக்கும் சம்பந்தம் ல்லன்னு நெனைச்சிக்கிட்டு
ஒஞ்ஞ வேலையப் பாத்துக்கிட்டுப் போயிகிட்டெ இருங்க. அவ்ளவுதாங் வெசயம். மித்தபடி இவனோட
வழக்கு நடத்துற மொறைய யோசனப் பண்ணா பைத்தியந்தாம் பிடிக்கும். ஆன்னா அதுக்காக கவலெப்படாம
நம்பிக்கையோட இருங்க. நிச்சயம் உத்தரவு ஆவுற வரைக்கும் கேஸ்ஸூப் போவுதுன்னா இவ்வேம்
பக்கந்தாம் நிச்சயம் உத்தரவாவும். அதுல ரொம்பவே ராசியான ஆளு இந்த வக்கீலு. அதுல ஒண்ணும்
மாத்தமில்ல!"ன்னாரு நெத்தியடியா தடலடியா நிதர்சனத்தெ போட்டு ஒடைக்குறாப்புல அந்தப்
பக்கத்துல இருந்த ஆளு.
"செரித்தாம் நாம்ம கெளம்புறேம். இந்த
ஆளு வருவான்னு தெரியாம வந்தாச்சு. இன்னிக்கு இருக்குற அத்தனெ கேஸ்லயும் ஆஜராயிட்டுத்தாம்
கோர்ட்டெ வுட்டு வெளியில வருவாம் போலருக்கு. நமக்கு இன்னிக்கு அம்புட்டு நேரமில்ல.
போயிட்டு இன்னொரு நாளு பொண்ணோட வர்றேம்!"ன்னு பொண்ணோட அப்பங்காரரு பொண்ண
அழைச்சிட்டுக் கெளம்புனாரு. இன்னிக்கு இதுக்கு மேல கதெ ஆவாதுங்றதெ புரிஞ்சுக்கிட்டாப்புல
இருந்துச்சு அவரு கௌம்பிப் போனது.
"நாமளும் கெளம்புறேம்ங்க. இன்னொரு
நாளு வந்தப் பாத்துக்கிறேம்!"ன்னு பக்கத்துல இருந்த ஆளும் கெளம்புனாரு சொல்ல வேண்டியதையெல்லாம்
சொல்லி ரொம்ப நேரம் பேசிட்டேங்றாப்புல. எல்லாரும் ஒவ்வொருத்தரா கௌம்புனாலும் சுப்பு
வாத்தியாரும், செய்யுவும் அன்னிக்கு முழுக்க கோர்ட்டுக்கு வெளியில இருந்து திருநீலகண்டன்
எல்லா வழக்கையும் முடிச்சிட்டு வர்ற வரைக்கும் இருந்துப் பாத்துட்டுத்தாம் வந்தாங்க.
"இதுக்கு மேல நீஞ்ஞ வரலன்னா சப் கோர்ட்டு
ஜட்ஜ் சத்தம் போட்டுவாருன்னு நெனைக்கிறேம்! வந்துடுங்கய்யா வர்ற வர்ற ஜட்ஜ சமாளிக்க
முடியல!"ன்னா செய்யு ஒவ்வொரு மொறையும் தான் கையறு நெலையில போயிக் கோர்ட்டுல நிக்குறதெ
சொல்றாப்புல.
"ஆமாங்கய்யா! என்னவோ குறுக்கு வெசாரணைய
முடிக்கணுங்றாங்க ஜட்ஜய்யா. அதெ பேருக்கு முடிச்சி விட்டுப்புடுங்க!"ன்னாரு சுப்பு
வாத்தியாரும் கழுதெ தேய்ஞ்சு கட்டெறும்பா போயி நிக்குறாப்புலயும் அதுக்கு மேல பெரிசா
வக்கீல்ட்டெ வேற எதெயும் எதிர்பாக்காதப் போலயும்.
"கட்டாயம் வர்றேம்! நம்பிக்கையோடப்
போங்க! கலியாணம் வேற ஆச்சுல்ல. இனுமே சரியா கோர்ட்டுல ஆஜராயி சம்பாதிக்கிற வழியப்
பாக்கணும். அதுக்காகவாவது வந்துத்தானே ஆவணும். ஏன்னா அப்பத்தாம் நம்மள நம்பி ஓடி வந்த
பொண்ணு நம்மள விட்டு ஓடிப் போவாம இருப்பா! ஆப்டர் மேரேஜ் அபார்ட் பிரம் திருவாரூர்
நாம்ம அட்டெண்ட் பண்ணுற கேஸ்ஸூம் ஒங்க கேஸூத்தாம். ஆர்குடி சப் கோர்ட்ல சந்திப்போம்!
க்ராஸ்ல ச்சும்மா வெச்சு செஞ்சு பீஸ் பீஸ்ஸா கிழிப்போம்!"ன்னு சிரிச்சிக்கிட்டெ
சொல்லி நம்பிக்கையா வழியனுப்பி வெச்சாரு வக்கீல் திருநீலகண்டன்.
*****
No comments:
Post a Comment