15 Jan 2021

நரைத்த பின்னும் காதல் வரும்!


 நரைத்த பின்னும் காதல் வரும்!

செய்யு - 687

            ஆர்குடி கோர்ட்டுல வன்கொடுமெ வழக்குல எதிர்தரப்புலேந்து வக்கீல் கங்காதரனும், ராசாமணி தாத்தாவும் மட்டும் ஆஜராயிட்டு இருந்தாங்க. மனுதாரரு தரப்புல செய்யு சுப்பு வாத்தியாரோடப் போயி ஆஜராயிட்டு இருந்தா. அந்த வழக்கு தேதி மேல தேதி வாங்கிட்டெ போனுச்சு. சார்பு நீதிமன்றத்துல நடந்த ஹெச்செம்ஓப்பி வழக்குல ஒவ்வொரு தேதிக்கும் சரியா பாலாமணி வக்கீலோட வந்து ஆஜராயிட்டு இருந்தாம். வக்கீல் திருநீலகண்டன் எங்க இருக்காருங்றதெ தெரியாமப் போனதாலல செய்யு மட்டும் வக்கீல் இல்லாம சுப்பு வாத்தியாரோட ஆஜராயிட்டு இருந்தா. ஹெச்செம்ஓப்பி வழக்க பாலாமணி போட்டிருந்ததால அதுல மொதல்ல குறுக்கு விசாரணைக்கு ஆட்பட வேண்டியது அவ்வேந்தாம். அந்த வழக்குல செய்யு தரப்புல பதிலுரைய தாக்கல் பண்ணிட்டதால அதுக்கு அடுத்ததா பண்ண வேண்டியது குறுக்கு விசாரணைதாம். பாலமணிய குறுக்கு விசாரணை செய்யுறதுக்கான தேதிகள ஜட்ஜ் பாட்டுக்குக் கொடுத்துட்டே இருந்தாரு. செய்யு இந்த வழக்குச் சம்பந்தமா டிரான்ஸ்பர் ஓப்பி வழக்குப் போட்டிருக்கிறதா சொல்லிப் பாத்தா. அப்பிடின்னா அதோட விவரங்கள வக்கீல ஆஜராயி அதெப் பத்திச் சொல்ல சென்னாரு ஜட்ஜ். வக்கீல காண முடிஞ்சாத்தானே வெவரத்தெச் சொல்லி வரச் சொல்ல முடியும்ன்னு முழிப் பிதுங்கி நின்னா செய்யு அந்த நேரத்துல.

            வக்கீல் வந்து ஆஜராவமா எல்லா எடத்துலயும் வழக்குத் தேங்க ஆரம்பிச்சிது. வேற வக்கீல வெச்சி வழக்க நடத்தலாம்ன்னாலும் இப்போ வழக்கெ நடத்திட்டு இருக்குற திருநீலகண்டன் நோ அப்ஜெக்சன் கொடுத்தாத்தாம் அத்துச் சாத்தியப்படும். என்ன பண்ணுறதுன்னு மண்டையப் பிய்ச்சுக்காதக் கொறையா சுப்பு வாத்தியாரு, விகடு, செய்யு எல்லாரும் யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ மூணு மாசம் கழிச்சி திருவாரூரு கோர்ட்டுல திடீர்ன்னு ஒருநாளு திருமுகம் காட்டுனாரு வக்கீல் திருநீலகண்டன். அவரு அவர்ரா வந்ததெப் பாத்ததுந்தாம் சுப்பு வாத்தியாருக்கு தெம்பு வந்தது போலிருந்துச்சு.

            "என்னங்கய்யா? எஞ்ஞப் போயித் தொலைஞ்சீங்க? இஞ்ஞ வழக்குல அடுத்தாப்புல என்ன பண்ணுறது? ஏது பண்ணுறதுன்னு புரியாம தவிச்சிப் போயிட்டேம். ஜட்ஜ் வேற வக்கீலு ஆஜர் பண்ணச் சொல்லுங்கன்னு ஏகப்பட்ட தடவெ சொல்லிப்புட்டாங்க! கெடு மேல கெடு கொடுத்து எச்செரிக்கெ பண்ணிக்கிட்டே இருக்காங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அத்துவானக் காட்டுல தவிச்சு நிக்குற தன்னோட நெலைய பரிதாபமா சொல்றாப்புல.

            "ஒண்ணுமில்ல சார்! லவ் அப்பையர்! மேரேஜ் செய்ய வேண்டிய சூட்சுவேஷன். பொண்ணு வூட்டுல ஒத்துக்கல. கலியாணம் நடந்தா வெட்டுவேம், குத்துவேம்ன்னு ஆளாளுக்கு கம்பையும், அரிவாளையும் தூக்கிட்டு நின்னானுங்க. அவுங்க வேற நம்மள அடிச்சி அது வேற வக்கீல்களோட போராட்டமா ஆயிடக் கூடாது பாருங்க. ஒரு வக்கீல் மேல கைய வெச்சா தமிழ்நாடு முழுக்க இருக்குற வக்கீலுங்க எல்லாம் போராட்டத்துல குதிச்சிடுவாங்க. அது ஸ்டேட் லெவல் பிரச்சனை ஆயி, அப்பிடியே அது பாட்டுக்கு நேஷனல் லெவல் பிரச்சனையானா சிரமம் பாருங்க. அதாங் யாருக்கும் எந்த சிரமும் வேணாம்ன்னு பொண்ண அழைச்சிக்கிட்டு ஒரு மூணு மாசத்துக்கு ஆந்திராவுலப் போயி செட்டில் ஆயிட்டேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் எந்த வெதமான பரபரப்பும் இல்லாம.

            "அடடா! ஆகா! அதாங் வெசயமா? இத்துத் தெரியாமப் போச்சே? பொண்ணு வூட்டுத் தரப்புலேந்து இப்போ எதுவும் பெரச்சனெ யில்லயில்ல?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட கரிசனத்தெ கொட்டுறாப்புல.

            "அவனுங்களும் எத்தனெ மாசம் சார் டென்ஷனா விகரஸ்ஸ இருக்க முடியும்? அப்பிடியே இருந்தா ஹார்ட் வெடிச்சி, ரத்தக் குழாய்ல்லாம் சிதறிப் போயிடும் சார்! அதுக்கு மேல அவனுங்களே தாங்க முடியாம நம்மப் பொண்ணு எங்க இருந்தாலும் செளரியமா இருந்தா சரித்தாங்ற முடிவுக்கு வந்துட்டானுங்க. அந்தச் சேதிய இங்க இருக்குற நம்ம ஆளுங்க நமக்குச் சொன்னதுக்குப் பிறவுதாம் ஆந்திராவுலேந்து கெளம்பித் தமிழ்நாட்டோட பார்டரையே மிதிச்சேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் என்னவோ சினிமாவுல காமெடி காட்சிய வௌக்கிச் சொல்றாப்புல.

            "நாஞ்ஞல்லாம் போனடிச்சுப் பாத்தேம்ங்கய்யா! எடுக்கவே மாட்டேனுச்சு! ஸ்விட்ச்டு ஆப்ன்னுல்லா சொன்னுச்சு!"ன்னா செய்யு வக்கீலு தகவல் தொடர்புக்கு அப்பால போனதெப் பத்திக் கேக்குறாப்புல.

            "ஒரு லாயர்ன்னா மத்தவங்க விசயத்துல மட்டும் அப்பிடிச் சிந்திக்கிற ஆளு இல்லம்மா நாம்ம! நம்ம விசயத்துலயும் அப்பிடியே சிந்திக்கிற ஆளு நாம்ம. அந்த நம்பர்ர மட்டும் ஸ்விட்ச்டு ஆப் பண்ணாம வெச்சிருந்தேன்னா அந்த நம்பர்ர டிரேஸ் பண்ணியே ஆந்திரா வரைக்கும் வந்து நம்மளப் போட்டுத் தள்ளியிருப்பானுவோம்மா! அந்த செல்லு, சிம்முன்னு எதுவும் இல்லாம புதுசா ஒரு செல்ல வாங்கி, அதுக்கு ஒரு சிம்ம போட்டு அப்பிடித்தாம் இங்க இருக்குற நம்மளோட சீக்ரெட் ஆளுங்களோட காண்டாக்ட்ல இருந்தேம். நாலு ஜீப்புல நம்மள எங்கன்னு தேடி அரிவாளோட சுத்துனா அதெ நம்மாள சமாளிக்க முடியுமாம்மா?"ன்னாரு வக்கீலு வாஸ்தவமான பேச்சுக்கு எறங்கி வந்துப் பேசுறாப்புல.

            "ஏங்கய்யா! எவ்ளோ பேருக்கு ரீஸ்தரு ஆபீஸ்ல வெச்சிக் கலியாணத்தப் பண்ணிருப்பீயே! அப்பிடியே பண்ணிட்டுப் போறதெ வுட்டுப்புட்டு இப்பிடி ஆந்திரா வரைக்கும் ஓடியிருக்கீயேளே?"ன்னா செய்யு வக்கீல்கிட்டெ லா பாயிண்டெ பிடிச்சுப் பேசுறாப்புல.

            "ரிஜிஸ்தரு ஆபீஸ் வேலையெல்லாம் முடிச்சாச்சும்மா பக்காவா. அதுக்கு மேல ஊருல இருந்தா உசுருக்கு உத்தரவாதம் இல்ல. கலியாணம் பண்ணுறது எதுக்கு? பொண்ணோட சந்தோஷமா வாழத்தானே. நாம்ம நம்மளோட உசுர்ர விட்டுப்புட்டா அப்பறம் எப்படிச் சந்தோஷமா வாழ்றது? அதாங் யோசிச்சேம். பொண்ணோட வாழ்றதும் முக்கியம், உசுரும் முக்கியம். அதுக்குக் கொஞ்ச நாளு தலைமறைவா இருக்குறதுதாம் நல்லதுன்னு பட்டுச்சு. எஸ்கேப் ஆயாச்சு. இப்போ பொண்ணு வீட்டுலயும் யோசிச்சு யோசிச்சுக் கொஞ்சம் சமாதானம் ஆயிருக்காங்க. அப்பிடியே கொஞ்சம் காலம் ஆனாக்கா, ஒரு கொழந்தெ பொறந்தாக்கா முழுசா சமாதானம் ஆயிடுவாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு பாதி தலைமறைவா இருந்துதாம் தீரணும்!"ன்னாரு வக்கீல் தன்னோட ராஜதந்திரப் போக்கெ சமத்காரமா எடுத்துச் சொல்றாப்புல.

            "அதெப்படிங்கய்யா! காதலுக்காக இப்பிடி எஞ்ஞ வழக்கையெல்லாம் தூக்கிப் போட்டுக்கிட்டு ஓடுனீங்கய்யா?"ன்னா செய்யு தனக்குள்ள எழும்புன சிரிப்பெ அடக்கிக்கிட முடியாம.

            "ஓப்பனா சொல்றேம்மா! நீ என்ன நெனைச்சிக்கிட்டாலும் சரித்தாம். வயசு நாப்பதும்மா. இதுக்கு மேல நம்மள எந்தப் பொண்ணு கட்டும் சொல்லு? ஒரு பொண்ணு வந்து ஒன்ன லவ் பண்‍றேம்டா சொன்னா நமக்கு எப்பிடி இருக்கும்? நம்மளயும், நம்ம மூஞ்சியையும் லவ் பண்ண நாட்டுல ஒரு பொண்ணு இருக்கேங்ற சங்கதியே ஆச்சரியமாத்தாம் இருந்துச்சு. அத்தோட விட்டுருந்தா கூட சரி ஏதோ நம்ம மேல ஒரு பரிதாபத்துல சொல்லுதோன்னு நெனைச்சி விட்டிருப்பேம். அன்னிக்கு அதாங் மூணு மாசத்துக்கு மின்னாடி ஆபீஸ்ஸ ஷட்டர்ரப் போடுற நேரத்துல வந்து, இனுமே வீட்டுல இருக்க மாட்டேம், கட்டுனா ஒங்களத்தாம் கட்டுவேம், வீட்டுக்குப் போக மாட்டேம்ன்னு வந்து நிக்குறா. என்னத்தெ சொல்றது? நல்ல வேளையா அன்னிக்குன்னுப் பாத்து ஒங்க அப்பா கொடுத்துட்டுப் போன அய்யாயிரம் பணம் இருந்துச்சு. கையிலப் பாத்தேம். தங்க மோதிரம் ஒண்ணு. கழுத்துல தங்கச் செயின்னு ஒண்ணு. பொண்ணும் கழுத்துலயும், கையிலயும் நகெ நட்டோட இருந்துச்சு. இதெ வெச்சி ஒரு வருஷத்த வேணும்ன்னாலும் சமாளிச்சிப்புடலாம்ன்னு நேரா வண்டியக் கொண்டு போயி டூவீலர் ஷெட்லப் போட்டுட்டு, கையோட ஒரு செல்லு, ஒரு புது சிம்முன்னு வாங்குனேம். திருவாரூரு பஸ் ஸ்டாண்டுல திருப்பதி போற பஸ் ஒண்ணு அந்த நேரத்துக்குக் கெடந்துச்சு. இதாங் சரின்னு பொண்ணோட விட்டேன் ஜூட். முந்தா நேத்தித்தாம் திருவாரூரு மண்ணுல காலடி எடுத்து வெச்சேம். இதாம்மா காரணம் எல்லாத்தையும் போட்டுட்டு ஓட! ஒரு பொண்ணு வந்து ஒங்கள நம்பித்தாம் வந்தேன்னு சொன்னா நாம்ம என்னத்தெ பண்ணுறது சொல்லு! இன்னொண்ணு இந்தப் பொண்ண விட்டாலும் நமக்கு ஒரு பொண்ணு அமையாது. அதுவும் ஒரு காரணம்மா ஓடுறதுக்கு. எப்பிடியோ நமக்கெல்லாம் கலியாணமே ஆவாதுன்னு நெனைச்சிருந்தேன். எப்பிடியோ கடவுள் புண்ணியத்துல ஆயிடுச்சு. லோகத்துல கடவுள் இருக்கார்ம்மா! கடவுள் சத்தியமா சொல்றேம் எங்க வகையில என்னைப் பத்தித் தெரிஞ்ச எவனும் பொண்ண கொடுக்க மாட்டாம். அப்பிடியிருக்குற நெலையில பொண்ணே வாரதுங்றப்போ வர்றேங்ற பொண்ணோட ஓடுறதுல என்னா தப்புங்றேம்மா?"ன்னாரு வக்கீலு தன்னோட பக்கத்து ஞாயத்தெ பாயிண்டா பாயிண்டா எடுத்து வைக்குறாப்புல.

            "நல்லபடியா கலியாணம் ஆன வரைக்கும் சந்தோஷம். வீட்டுல அண்ணன் ஒருத்தரு வேற இருக்காரு போல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீலோட பாய்ண்ட்ல இருக்குற ஓட்டைய எடுத்துக் காட்டுறாப்புல.

            "நாம்ம இல்லன்ன ஒடனே, நம்மளத் தேடி வீடு வரைக்கும் வந்தாச்சுப் போலருக்கே! அவனும் நம்மள மாதிரி ஒரு பொண்ண இழுத்துக்கிட்டு ஓடிப் போயிக் கலியாணத்தப் பண்ணாத்தாம் உண்டு சார்! அவனெ நம்பி எந்தப் பொண்ணாச்சும் சீக்கிரம் ஓடி வரணும்ன்னு பகவான்கிட்டெ வேண்டிக்கிறதெ தவிர நமக்கு வேற வழியில்ல. நம்ம வயசுக்கு இனுமே பொண்ணுப் பாத்து ஆவாதுங்றப்போ, அவனோட வயசுக்கு இப்பிடி நடந்தாத்தாம் உண்டு. ஒங்க கைப்புள்ளயே போற வர்ற எடத்துலன்னு எத்தனெ எடத்துல பொண்ணப் பாத்திருக்காரு தெரியுமா? ஒண்ணும் அமையல. வக்கீல் திருநீலகண்டன்னா ஒருத்தனும் பொண்ணு கொடுக்க மாட்டேங்றாம். அவ்வளவு டைவர்ஸ் கேஸ் அட்டெம்ட் பண்ணிட்டேம் சார்! ஆன்னா ஒரு விசயம் தெரியுங்களா சார்! நம்மள மாதிரி டைவர்ஸ் கேஸ் அட்டெண்ட் பண்ணுற லாயர்ஸ் எல்லாம் குடும்ப வாழ்க்கையில செம கெட்டியா இருப்பாங்க சார்!"ன்னாரு வக்கீல் வாழ்க்கையில எல்லாமே ஏறுக்குமாறாத்தாம் இருக்குங்றதெ போல.

            "ஒலகத்துல எல்லாரு கலியாணத்தையும் பிரிச்சி வுட்டுப்புட்டு, நீஞ்ஞ மட்டும் சந்தோஷமா ஒத்துமையா இருப்பீயே! அப்பிடித்தானே?"ன்னா செய்யு ஒரு நமுட்டுச் சிரிப்பெ சிரிச்சுக்கிட்டு.

            "என்னம்மா பண்ணுறது? பொழைப்புன்னு ஒண்ணு இருக்கே! அதுக்கு இது. வயிறுன்னு ஒண்ணு இருக்கே. அதுக்கு ஆத்துக்காரி சமைச்சிப் போட்டாத்தானே சார் ஆவும். நாமெல்லாம் வாத, பிரதிவாதம் எல்லாம் கோர்ட்டுலத்தாம். வீட்லன்னா அப்பிடியே கால்ல விழுந்துடுவேம். அதாம் சார் விசயம். யாரு நம்மள எட்டி ஒதைக்குறாங்களோ அவுங்க கால்ல விழுந்துட்டா எப்பிடி சார் எட்டி ஒதைக்க மனசு வரும்? கலியாணம்ன்னு ஒண்ணு ஆயிட்டா அவுங்கத்தாம் சார் எல்லாம்!"ன்னாரு வக்கீல் தன்னோட மனசோட ரகசியத்தெ சொல்றாப்புல.

            "அப்பிடின்னா வூட்டுல அவுங்கத்தாம் ஜட்ஜ். நீஞ்ஞ அங்கயும் வக்கீல்தானா?"ன்னா செய்யு வக்கீலா மாறி வக்கீலையே மடக்குறாப்புல.

            "நாம்ம அவுங்க வக்கீல் கெடையாது. அவங்களோட டவாலி. மேட்டர் முடிஞ்சதா?"ன்னாரு வக்கீல் சட்டுன்னு எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளியெ வெச்சு முடிக்குறாப்புல.

            "நீஞ்ஞல்லாம் இப்பிடி இருக்கீயே! நம்மள கட்டுனவேம் மட்டும் ஏம்ங்க்யயா அப்பிடி இருக்காம்?"ன்னா செய்யு தன்னோட ஆத்தாமைய அள்ளிக் கொட்டுறாப்புல.

            "நம்மள மாதிரி கலியாணம் ஆவாம கெடந்தாத்தாம்மா கட்டுனவளோட அருமை தெரியும். அவனெல்லாம் ஒரு சைக்கோ கிறுக்கன்மா. அவனுக்கெல்லாம் அதோட அருமை தெரியாது. தங்க விக்கிரகம் மாதிரி பொண்ண எப்பிடி வெச்சிருக்கணுமோ அப்பிடி வெச்சிக்கணும். அவனுக்கு அதெல்லாம் புரியாதும்மா. கழுதைக்கு என்னிக்கும் கற்பூர வாசனைப் புரியாதும்மா!"ன்னாரு வக்கீலு எல்லாத்துக்கும் தங்கிட்டெ பதிலு இருக்குங்றாப்புல.

            "இப்பத்தாம் கலியாணம் ஆயி வந்திருக்கீங்க! ஒடனே ஒங்கள கோர்ட்டுல ஆஜர் பண்ண சொல்ல முடியுங்களா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தனக்கான காரியம் ஆவுமா சந்தேகத்தெ கேக்குறாப்புல.

            "கோர்ட்டுல ஆஜராவத்தாம் சார் வந்திருக்கேம். இருந்த காசெல்லாம் செலவாயிடுச்சு. கோர்ட்டுக்கு வந்துட்டுப் போயி காசு சம்பாதிச்சாத்தாம் உண்டு. கலியாணம் வேற ஆயிட்டா. இத்தனெ நாளு காசு கொடுத்தாலும் சரித்தாம், கொடுக்காட்டியும் சரித்தாம்ன்னு இருந்துட்டேன். இனுமே ஆத்துக்காரிய வெச்சிக் காப்பாத்த வேண்டிய கடமெ ஒண்ணு சேந்துட்டு. அதால கொடுக்குற காச கொஞ்சம் கூட்டிக் கொடுங்க சார்!"ன்னாரு வக்கீலு சந்தடிச் சாக்குல தன்னோட வருமானத்துல கொறை வெச்சிடாதீங்கன்னு சொல்றாப்புல.

            "அதுக்கென்னங்கய்யா கொடுத்துட்டாப் போச்சு! வாஞ்ஞ ஒங்கள கோர்ட்டுல தேடிகிட்டுல்ல இருக்காங்க. நாஞ்ஞ இன்னிக்கு நரி மொகத்துல முழிச்சித்தாம் வந்திருக்கேம். இல்லன்னா இன்னிக்கு பாக்குற பாக்கியம் எஞ்ஞளுக்குக் கெடைச்சிருக்காது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கேக்குறதெ கொடுக்குறதுக்குத் தயாரா இருக்கேங்றதெ உறுதியாச் சொல்றாப்புல.

            "மொதல்ல ஒங்க வழக்கத்தாம் சார் முடிக்கணும்! இனுமே ஒங்கப் போக்குக்குல்லாம் போவப் போறதில்ல. நாம்ம போற போக்குக்கு வாங்க. நாம்ம சொல்றதுதாம் முடிவு. அதுப்படி வந்து வழக்க முடிச்சிட்டுப் போயி பொண்ணுக்கு இன்னொரு கலியாணத்தப் பண்ணி வைக்கிற வழியப் பாருங்க சார்! இந்த ஒங்க வழக்கால நாட்டுல எவனோ ஒரு கலியாணம் ஆவாத ஆம்பள ஒருத்தனோட சாபத்த நாம்ம அனுபவிச்சிகிட்டு இருக்கேம். இப்பிடி பல பேரோடான ஆம்பளைகளோட சாபத்த வாங்கிட்டுக் கெடந்த காரணத்தாலத்தாம் நமக்குக் கலியாணம் இவ்ளோ டிலே ஆயி சினிமா படத்துல நடக்குற மாதிரி நடந்து முடிஞ்சிருக்கு. பாருங்க மண்டை ஓரத்துல எல்லாம நரைச்சுப் போயி, அந்த வயசுல காதல்ன்னு ஒண்ணு வந்து, இப்போ எப்பிடியோ ஒரு வழியா கரை சேந்திருக்கோம். இனுமே வழக்குன்னு வர்றவங்களுக்குச் சீக்கிரமா கதைய முடிச்சிக் கலியாணத்தப் பண்ணி வெச்சி எல்லாரோட ஆசிர்வாதத்தையும் வாங்கியாவணும். வாழ்க்கையில கொஞ்சமாச்சும் புண்ணியத்தெ தேடணும்ன்னு இருக்கேம் சார்!"ன்னாரு வக்கீல் சிரிச்ச மொகமா நல்லபுத்தி வந்து ஞானமடைஞ்சாப்புல.

            இப்பிடி கூத்தும் கும்மாளமுமா பேசிட்டு ஜீவனாம்ச மேல் அப்பீல்ல ஆஜராயிப் பேசுனாரு திருநீலகண்டன். முன்னய விட அவரோட கொரலு வேகம் அதிகமாகவே இருந்துச்சு. கோர்ட்டுக்குள்ள நொழையுறதுக்கு மின்னாடி, "ஆப்டர் மேரேஜ் நாம்ம ஆஜர் ஆவுற பர்ஸ்ட் கேஸ்! இனுமே பாலாமணியே நம்மள நீக்கிட்டு வேற வக்கீலப் போட்டா போதும், வாங்குனதெ கொடுத்துட்டு ஓடிடுவேம்ன்னு சொல்ற அளவுக்கு  இருக்கும் பாருங்க நம்ம ஆர்கியூமெண்டு!"ன்னு சொல்லிட்டுத்தாம் உற்சாகமா நொழைஞ்சாரு.

            "சிஜேயெம் கோர்ட்டுலேந்து உத்தரவ வாங்கியும் இத்தனா நாளா வாழ்க்கைக்கான பொருளுதவி கிடைக்காம என்னோட கட்சிக்காரர் மிகுந்த கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறார். இந்த கோர்ட்டுக்கே வர்ற முடியாத சிரம தசையில் இருக்கும் அவருக்கு ஒரு பெண்மணியான தாங்கள் பெண்மணியான எனது மனுதாரரின் நிலையில் இருந்து பார்த்து உடனடியாக ஜீவனாம்சத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுத்துத் தர உதவ வேண்டும்!"ன்னாரு திருநீலகண்டன் சொன்ன படிக்கு வேகம் காட்டுறாப்புல.

            "இத்தனெ நாளு ஆஜராவாம இப்பிடித் திடுதிப்புன்னு ஆஜராயி ஒடனே முடிச்சி வையுங்கன்னா எப்பிடி முடிச்சி வைக்கிறது திருநீலகண்டன்? புரசிஜர் படித்தாம் போயாவணும். பீஸ் கோர்ட்டுலயும் ஒத்து வரல. ஆர்கியுமெண்ட்ஸ் எடுத்து வைக்க தயாராவுங்க!"ன்னாங்க ஜட்ஜம்மா. அவுங்க சட்டுன்னு அதுக்கான அடுத்த ஒரு தேதியையும் கொடுத்தாங்க. பாலாமணி தரப்புல ஆஜர் கொடுத்திருந்த கங்காதரன் நக்கலா ஒரு சிரிப்பெ சிரிச்சுக்கிட்டு ஒண்ணும் சொல்லாம வெளியில போனாரு. அவ்வளவுதாம் அன்னிக்கு அந்த வழக்கு அத்தோட முடிஞ்சது.

            அந்த வழக்குல ஆஜராயி வெளியில வந்த திருநீலகண்டன அவருகிட்டெ வழக்கெ ஒப்படைச்சிருந்த அத்தனெ பேரும் சேதி தெரிஞ்சிச் சுத்தி வந்து சூழ்ந்துகிட்டாங்க. எல்லாருக்கும் இந்த மூணு மாசத்துல நடந்தெ கதைய சிரிப்பும் கும்மாளமுமா செய்யுகிட்டெயும் சுப்பு வாத்தியாருகிட்டெயும் சொன்னதெ போல சொல்லிகிட்டு இருந்தாரு திருநீலகண்டன். அவரோட மொகத்துல அன்னிக்குப் பூராவும் ஒரு இனம் புரியாத பூரிப்பு இருந்துகிட்டெ இருந்துச்சு. இவ்வளவு நாளா வக்கீல காங்கலயேன்னு கோவமா வந்தவங்க அவரோட சாகச கலியாண சேதி தெரிஞ்சதும் வந்த கோவம் போன எடம் தெரியாம அமைதியாயிட்டாங்க. “கல்யாண வாழ்த்துகள் வக்கீல் சார்!”ன்னு கேட்டவங்களும் அவரோட சந்தோஷத்துல சங்கமமாயிட்டாங்க. யாருக்கும் அவுங்களோட வழக்கெப் பத்திப் பேசணும்ன்னு தோணல. எல்லாரும் வக்கீலு கல்யாணத்தெப் பத்தியே மேல மேல சிரிப்பாணியும் கிண்டலுமா வெசாரிச்சுக்கிட்டு இருந்தாங்க.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...