வக்கீலைக் காணல!
செய்யு - 686
சமரசத் தீர்ப்பாயத்துல இருந்த வழக்குக
எல்லாம் சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு ஒவ்வொண்ணா போவ ஆரம்பிச்சது. கோர்ட்டுக்குப்
போனா எத்தனெ மொறை வக்கீல் இல்லாம பெட்டிஷனரோ, ரெஸ்பாண்டன்டோ ஆஜராயிட்டு இருக்க
முடியும். ஒரு கட்டத்துக்கு மேல ஜட்ஜ்ங்க பெட்டிஷனரையோ, ரெஸ்பாண்டன்டையோப் பாத்து
வக்கீலு எங்கன்னு கேக்க ஆரம்பிச்சிடுவாங்க. வக்கீல் வரல, அடுத்தத் தேதிக்கு வந்துடுவாங்கன்னு
எத்தனெ மொறெ சொல்ல முடியும்? செய்யுவுக்குச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போச்சு.
ஜட்ஜூக்கு அதெ கேட்டு எரிச்சலாப் போச்சு. இந்த வக்கீலு ஆஜராவலன்னா வேற வக்கீல வெச்சி
கேஸ்ஸ நடத்துன்னு ஜட்ஜூ சொல்லுற அளவுக்கு செய்யுவோட நெலமெ ஆச்சு.
சுப்பு வாத்தியாரோ, செய்யுவோ வக்கீல்
திருநீலகண்டனோட மொகத்துப் பாத்து ரண்டு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. செய்யுவோட வழக்குக்கு
மட்டுமல்ல, திருநீலகண்டன் ஆஜரான அத்தனெ வழக்குலயும் அவர்ர வக்காலத்தப் போட்டுக்கிட்டு
அத்தனெ பேரும் திருநீலகண்டனத் தேடி அலைஞ்சிக்கிட்டுத்தாம் இருந்தாங்க. அவரோட செல்போனுக்குப்
போன போட்டா ஸ்விட்ச்டு ஆப்ன்னே வந்துச்சு. இந்தக் காலத்து ஒரு மனுஷன் ஒரு நாளு, ரண்டு
நாளு செல்போன ஸ்விட்ச் ஆப் பண்ணி வெச்சிருப்பாம். இப்பிடியே ரண்டு மாசத்துக்கு ஸ்விட்ச்
ஆப் பண்ணிருப்பான்னு, ஆபீஸ்ஸூப் பக்கம் போயிப் பாத்தா ஆபீஸோட ஷட்டர்ல ஒட்டடை படிஞ்சி
புழுதிப் படிஞ்சி இருக்கு.
இரத்தினம் காம்ப்ளக்ஸ் ஓனரும் வக்கீல்
திருநீலகண்டனத் தேடிட்டுத்தாம் இருந்தாரு. திருநீலகண்டன் வாடகை கொடுத்து பத்து மாசத்துக்கு
மேல ஆவுதுன்னு, "இனுமே வக்கீலுக்கு கடெ வாடவைக்கே கொடுக்க மாட்டேம்!"ன்னு
பொலம்பிக்கிட்டு இருந்தாரு. எத்தனையோ நாளு விகடுவும், சுப்பு வாத்தியாரும் விளமல்ல
இருக்குற ரத்தினம் காம்ப்ளக்ஸூக்கு சாயுங்காலமா ஆறு மணி வாக்குல போவுறவங்க ராத்திரி
ஒம்போது மணி வரைக்கும் நின்னுட்டு வருவாங்க. என்னிக்காவது ஒரு நாளு எப்படியாச்சும்
வந்து வக்கீலு ஆபீஸ்ஸ எட்டிப் பாத்துட மாட்டாராங்ற ஒரு எதிர்பார்ப்புதாம். போயிட்டு
வந்த ஒவ்வொரு நாளும் ஏமாத்தமாத்தமாத்தாம் திரும்புனாங்க. கோர்ட்டுல இருக்குற பார்
கெளன்சில் வரைக்கும் விசாரிச்சா திருநீலகண்டனப் பத்தின தகவல் யாருக்கும் தெரியல.
"போறப் போக்கப் பாத்தா பார்த்தா வக்கீல கண்டுபிடிச்சிக் கொடுங்கன்னு ஹை கோர்ட்டுல
ஆட்கொணர்வு மனுவத்தாம் போடணும் போலருக்கு!"ன்னாங்க பார் கெளன்சில்ல இருந்தவங்க.
ஏதோ ஒரு காரணத்துக்காக ரகசியமா திருநீலகண்டன்
ஒளிஞ்சிருக்கணும்ன்னு எப்படியோ அவரோட வீட்டு அட்ரஸ்ஸக் கண்டுபிடிச்சிப் போயிப் பாத்தா
ஆள பிடிச்சிடலாம்ன்னு பாத்தா, அவுங்க வீட்டுல அதுக்கு மேல அலட்சியமா ஒரு பதிலச் சொல்றாங்க.
இத்தனெ நாளு மவனெ காணும்ங்ற பதட்டமோ, பரபரப்போ அவர்ர பெத்தவங்க யாருகிட்டெயும் இல்ல.
"அவ்வேம் இப்பிடித்தாம். ரண்டு மூணு மாசத்துக்குக் காணாமப் போயிடுவாம். அவனாவே
திரும்பி வந்துடுவாம்!"ன்னு வக்கீலோட அப்பங்காரரு ரொம்ப அலட்சியமா சொன்னாரு.
திருவாரூர்லேந்து வடக்க நாதாரிமங்கலத்துல
உண்டாயிருந்த புறநகர்ல ஒரு எடத்தெ வாங்கி, பேங்க்ல லோன போட்டு அந்த வீட்டெ கட்டியிருந்தாரு
திருநீலகண்டன். அக்கம் பக்கத்துல வீடுக எதுவுமில்ல. தனிச்ச தீவு போல தனிச்ச வீடா இருந்துச்சு.
ஆத்திர அவசரம்ன்னு சத்தம் போட்டா கூட அக்கம் பக்கத்துலேந்து சத்தம் கேட்டு ஆளுங்க
வந்து சேர அஞ்சு நிமிஷமாவது ஆவும். வீட்டெச் சுத்திலும் பல பேருங்க வாங்கிப் போட்டிருந்த
ப்ளாட்டுகள்ல கருவச் செடி மண்டியிருந்துச்சு. சில ப்ளாட்டுகள்ல கருவெ அது பாட்டுக்குச்
சித்தன் போக்கும் சிவம் போக்குன்னு மரமாவே
வளந்து கருவக்காடாவே காட்சித் தந்துச்சு. காத்து ஒண்ணுத்தாம் தகதகன்னு அடிச்சிக்கிட்டு
இருந்துச்சு அந்த எடத்துல. அவரு வீட்டுக்கு அத்து ஒண்ணுத்தாம் நல்ல தொணை. இப்பிடி
தனிச்ச ஒரு வூட்டுல இருக்க வக்கீலப் பெத்தவங்களுக்குப் பயமாத்தாம் இருக்கணும். ஆனனா
அவுங்களோட மொகத்துல எந்தப் பயமும் யில்ல. அவுங்களக்கு இங்கயே இருந்துப் பழகிப் போயிருக்கும்
போல. இந்த தனிமை வீட்டை விட அவுங்க பயங்கரமான அனுபவங்களப் பாத்தவங்கப் போல அவுங்களோட
மொகம் இருந்துச்சு.
அவுங்களப் பாத்ததுல, கோர்ட்டுல இந்த மாதிரி
வழக்குக இருக்குன்னும், வக்கீல் ஆஜராவாம ரொம்ப செருமமா இருக்குதுன்னும் சுப்பு வாத்தியாரு
சொன்னாரு. "அதெப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்கோ. எப்பிடியும் கூடிய சீக்கிரமே
வந்துடுவாம். நீங்க வாதியோ, பிரதிவாதியோ தெரியல. ஆன்னா கோர்ட்டுல மட்டும் ஆஜராயிட்டெ
இருங்க. அவ்வேம் என்னிக்கு வந்தாலும் சரித்தாம், வந்தான்னா அன்னிக்கே எல்லா கேஸ்லயும்
வெளுத்துக் கட்டிடுவாம்!"ன்னு நம்பிக்கையா சொன்னாரு வக்கீலோட அப்பங்காரரு. அதெ கேட்டதும், "அப்பிடி வூட்டுல கூட சொல்லாம
எஞ்ஞப் போவாரு?"ன்னு கேட்டாம் விகடு அவரு கொடுத்த நம்பிக்கெ பிடிக்காததப் போல.
"சின்ன வயசுலேந்து அப்பிடித்தாம்ங்க.
சொல்லாம கொள்ளாம எங்கயாச்சும் ஓடிடுவாம். நாஞ்ஞளும் துடிச்சிப் போயி ஊரு ஒலகமெல்லாம்
தேடிட்டு இருப்பேம். கண்டுபிடிக்க முடியாது. ஒரு கட்டத்துல தேடிப் போயி அலுத்துப்
போயிடுமா? அந்த நேரம் பாத்துத் திரும்பி வருவாம்! நீங்க இப்பத்தாம் கேள்விப்படுறதால
பதற்றப்படுறீங்கோ. எங்களுக்கு அனுபவிச்சி அனுபவிச்சி அலுத்துப் போயிடுச்சு!"ன்னாரு
வக்கீலோட அப்பங்காரரு எவ்ளோ வாழ்க்கையில பாத்தாச்சுங்றாப்புல.
"திரும்பி வர்றப்போ எங்க போனீயே?
எதுக்குப் போனீயேன்னு எதுவும் கேக்க மாட்டீயளா?"ன்னாம் விகடு என்னத்தாம் மனுஷங்க
நீங்கங்றாப்புல.
"என்னத்தெ கேக்குறது? கேட்டா பைத்தியத்தப்
போல சத்தம் போடுவாம். சமயத்துல கையில கெடக்கறதெ எடுத்து அடிக்க வருவாம். இந்த வயசுல
யாருக்கு அடி வாங்க தெம்பு இருக்கு சொல்லுங்கோ? இது பரவாயில்ல. பன்னெண்டாவது பப்ளிக்
எக்ஸாம் இருக்கு. இப்ப காணாமப் போன மாதிரி காணாமப் போயிட்டாம். எப்பிடி இருக்கும்
சொல்லுங்கோ? தேடாத எடமில்லெ. அலையாத ஊரில்ல. பப்ளிக் எக்ஸாம்லாம் முடிஞ்சி ஒண்ணரை
மாசம் இருக்கும். திரும்பி வர்றாம். எங்கடா போனே? என்ன விசயம்ன்னா மொறைக்குறாம்.
கேள்விக் கேக்குற நம்மள போடா கெழட்டுக் கூதின்னு கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுறாம்.
செரின்னு பேசாம விட்டாச்சு. ஆப்சென்ட் ஆன பரீட்சைய அவனா பிரைவேட்டா அப்ளை பண்ணித்தாம்
எழுதுனாம். ரொம்ப ஆச்சரியமா எழுதுன எல்லாத்திலயும் செவண்டி பெர்சென்டேஜூக்கு மேல மார்க்ஸ்.
அவனுக்கா ஒரு மூடு வந்தா செய்வாம். இல்லன்னா போட்டது போட்ட படியே விட்டுட்டுப் போயிட்டு
இருப்பாம். அப்பிடி ஒரு மனசு அவனுக்கு!"ன்னாரு அப்பங்காரரு. அவரோட மொகத்துல எதெப்
பத்தின வருத்தமும் இல்லாத அலட்சியம் தெரிஞ்சுது.
"பார்த்தா அப்பிடில்லாம் தெரியலயே?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு தன்னால அவரு சொல்றதையெல்லாம் நம்ப முடியலங்றாப்புல.
"எப்பவாச்சும் பாக்குற ஒங்களுக்குத்
தெரியாது. எப்போதும் பாத்துட்டு இருக்குற எங்களுக்குத்தாம் தெரியும்!"ன்னாரு
அப்பங்காரரு சொல்றதெ நம்புங்கங்றாப்புல அழுத்தம் திருத்தமா.
"எங்கயோ போறதப் பத்தி ஒண்ணுமில்ல.
போற எடத்துல ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆன்னா யாருக்குத் தெரியும்? கஷ்டமில்லங்கலையா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு தன்னோட சந்தேகத்துல என்ன தப்புங்றாப்புல.
கைய மேல நீட்டிக்கிட்டு, "பகவான்தான்
காப்பாத்தணும்!வேற என்ன நாதியிருக்கு?"ன்னாரு வக்கீலோட அப்பங்காரரு வானத்தெப்
பாத்து கைய நீட்டிக்கிட்டு.
வீட்டுக்கு மின்னாடியே செட்டிக் டேங்க்
கட்டியிருந்துச்சு. அதுல ஒருத்தரு வேட்டிய மட்டும் கட்டிக்கிட்டு உக்காந்துகிட்டு அங்கக்
கிடக்குற கல்லைத் தேய்க்குறதும், குச்சிகளைச் சின்ன சின்னதா ஒடைக்கிறதும், அதெ எடுத்து
அடுக்குறதுமா சின்ன புள்ளையப் போல ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தாரு. அவரோட வயசுக்கும்
செயலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததப் போல அவரு பண்டுறதெல்லாம் சின்ன புள்ளெ தனமா
இருந்துச்சு. அவர்ரப் பாத்து சுப்பு வாத்தியாரு, "யாருங்க இவரு. ரொம்ப நேரமா
இப்பிடியே பண்ணிக்கிட்டு இருக்காரே?"ன்னாரு தாம் வக்கீல தேடி வந்த ஞாபவத்தெ கொஞ்சம்
வெலக்கி வைக்குறாப்புல.
"ஒங்க வக்கீலு வீட்டெ விட்டு ஓடிப்
போற கிறுக்குன்னா, இவனுக்கு வீட்டெ விட்டு அந்தாண்ட இந்தாண்ட நகர முடியாத கிறுக்கு.
ஒங்க வக்கீலோட அண்ணன். திடீர்ன்னு நல்லா வேலைக்குப் போவாம். நாலைஞ்சு மாசந்தான்.
பிறகு அந்த வேலைக்குப் போக முடியாதுன்னு இப்பிடி நாலைஞ்சு மாசம் உக்காந்துடுவான்.
அப்புறம் திரும்ப வேலை. இப்பிடித்தான் பண்ணுறான். பகவானோட யோகத்துலப் பாருங்க இவனுக்கும்
வேலை கொடுக்க நாட்டுல ஆளு இருக்காம்."ன்னாரு வக்கீலோட அப்பங்காரரு விதிய நொந்துக்குறாப்புல.
"படிச்சிருக்காரா?"ன்னாம் விகடு
அந்த ஆளோட சுழிய விசாரிக்குறாப்புல.
"அதாங் பிரச்சனை. எக்கனாமிக்ஸ், சோசியாலஜி,
சைக்கலாஜின்னு டிரிபிள் எம்.ஏ, என்னென்னமோ டிப்ளமோ படிப்பெல்லாம் படிச்சி வெச்சிருக்கான்.
ஏகப்பட்ட சர்டிபிகேட்ஸ். அந்த விவரம் நமக்குத் தெரியல. டைப் ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட்,
டிரைவிங் வரைக்கும் கத்து வெச்சிருக்கான். கொஞ்ச நாளு சிஏ எக்ஸாம் எழுதுறதா சொல்லிட்டுத்
திரிஞ்சாம். அது பெறவு என்னாச்சுன்னு தெரியல. இப்போ என்னவோ எக்கனாமிக்ஸ்ல எம்பில்
பண்ணணும்ன்னு திரிஞ்சிக்கிட்டுக் கெடந்தாம். அது இப்போ என்ன நெலையில இருக்குன்னு தெரியல.
நமக்கும் அலுத்துப் போச்சுப்பா. ஏதோ பண்ணித் தொலைன்னு கண்டுக்கிடாம விட்டுறது. இதெல்லாம்
கண்டுகிட்டா நானும் ஒரு கிறுக்கனா அலைய வேண்டியதுத்தாம். அப்பிடி அலைஞ்சா இந்தக் குடும்பத்தெ
யாரு காப்பாத்துறது சொல்லு! குடும்பத்துக்குன்னு ஒரு ஆளு நின்னு பாக்க வேண்டித்தானே
இருக்கு?"ன்னு கொஞ்சம் நெருக்கமா பேச ஆரம்பிச்சாரு வக்கீலோட அப்பங்காரரு.
"ஆமாங்க வேறென்ன பண்ணுறது?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு ஆறுதலா வெறென்னத்தெ சொல்றதுன்னு புரியாம.
"சில விசயங்கள நெனைக்கிறதெ விட நெனைக்காமலே
இருந்திடுறது உத்தமம். இதெ நெனைக்க ஆரம்பிச்சா மன உளைச்சல்தாம். அதெயே பாத்துக்கிட்டுக்
கிடந்தா வீட்டுல ஆத்துக்காரி இருக்கா, இப்பிடி ஒருத்தம் கல்ல நோண்டிக்கிட்டும், மண்ண
நோண்டிக்கிட்டும் இருக்காம். யாரு சோறு போடுறது? பீடியோ ஆபீஸ்ல கிளார்க்கா இருந்து
கிளார்க்காவே ரிட்டையர்டு ஆயாச்சு. நோ புரோமோஷன். ஆச்சரியமா இருக்கலாம். குடும்பத்துக்காகவே
எதுவும் வேணாம்ன்னு அப்பிடியே இருந்துட்டேன். ஒங்க வக்கீல் கடைக்குட்டி. மண்ண நோண்டிக்கிட்டு
இருக்கிறவேம் அவனுக்கு மூத்தவன். இவுங்க ரண்டு பேருக்கும் மூத்ததுப் பொண்ணு. அது ஒண்ணுத்தாம்
சமத்துச் சாமர்த்தியம். ஆனா அதுக்கு அமைஞ்ச ஆம்படையான் இருக்காம் பாருங்க. சரியான ரெளடிப்
பயல். இருந்தாலும் பொண்ணு சமாளிச்சிக்கிது. நம்ம பயலுங்க ரண்டும் இப்பிடி இருக்கானுங்களோன்னு
சமயத்துல நெனைச்சி வருத்தப்பட்டாலும், அவனுங்களோட கிறுக்குத்தனத்துக்குப் பயந்துகிட்டுதான்
மருமகன் அடக்க ஒடுக்கமா இருக்கான். இதுல நடந்திருக்குற ஒரே நல்லது அதுதான். அதெத்தான்
நான் நெனைச்சிக்கிறது. கெட்டதுலயும் ஒரு நல்லதுன்னு. இல்லன்னா என்னோட மருமவனெ என்னால
சமாளிக்கவே முடியாது."ன்னு பெருமூச்செ விட்டாரு வக்கீலோட அப்பங்காரரு மனசுல பாரத்தையெல்லாம்
வார்த்தையில எறக்கி வெச்சிட்டாப்புல.
"ஒங்க கதெயெ கேக்குறப்ப, எங்க கதெ
பரவாயில்லங்ற மாதிரிக்கி இருக்குது!"ன்னு தன்னோட கதெயெ சொல்ல ஆரம்பிச்சாரு சுப்பு
வாத்தியாரு எசெப் பாட்டு பாடுறாப்புல.
"நீங்க ஒண்ணுப் பண்ணுங்கோ! திருக்கடையூர்
அபிராமி இருக்காளோ இல்லியோ! மவளெ ஒரு மொறை அழைச்சிட்டுப் போயி அவளெ சேவிச்சிட்டு
வாங்கோ. எல்லாம் சரியாயிடும்! இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் அங்கப் போனாத்தாம் சரியாவும்.
நானே பகவான் பகவான்னு சொன்னாலும் இப்பல்லாம் பகவான் மேல பெரிசா நம்பிக்கை இல்ல, பகவதிங்க
மேலத்தாம்! அந்த ரூபத்தெ பாத்தாலே போதும், பாத்தா என்னா பாத்தா, மனசுல நெனைச்சா போதும்
கஷ்டமெல்லாம் விலகிப் போயிடும்!"ன்னாரு வக்கீலோட அப்பங்காரரு வந்தவங்களுக்கு
ஆறுதலெ பார்சல் கட்டித் தர்றாப்புல.
"செரிங்க அப்போ நாஞ்ஞ கெளம்புறேம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு அதுக்கு மேல பேசுறதுக்கு ஒண்ணுமில்லாங்றாப்புல.
"பாவம் எந்த ஊர்லேந்து எவ்வளவு தூரத்துலேந்து
வர்றீங்களோ? இப்பிடி நாலைஞ்சு பேராச்சும் நெதமும் வர்றாங்க. அவுங்ககிட்டெ பதிலச் சொல்லி
அனுப்புறதுக்குப் பாவமா இருக்கு. பிள்ளையாண்டனோட புத்தி இப்பிடிப் போவுமா? என்னத்தெ
சொல்றது? அந்தப் பகவான்தான், ச்சேச்சே பகவான் இல்ல, பகவதித்தாம் பாத்து அவனுக்கு ஒரு
நல்ல புத்தியக் கொடுக்கணும். எதுக்கும் கவலைப்படாம போங்கோ! யாரையும் கைவிட்டுறாப்புல
பண்ணிட மாட்டாம் பிள்ளையாண்டான்! அது அவனோட ஜாதகம்!"ன்னு சொல்லி அனுப்பி வெச்சாரு
வக்கீலோட அப்பங்காரரு தன்னால முடிஞ்சது அவ்ளோதாங்றாப்புல.
சுப்பு வாத்தியாரு, விகடுவும் டிவியெஸ்
பிப்டியில திரும்புறப்போ, பல்சர்ல வந்த ஒருத்தரு வண்டிய நிறுத்தி, "இஞ்ஞ வக்கீல்
திருநீலகண்டனோட வூடு எங்கன்னு தெரியுங்களா?"ன்னாரு. அவரு கேக்குற தொனியப் பாத்ததுமே
சுப்பு வாத்தியாருக்குப் புரிஞ்சது இவுங்களும் நம்மள எடுத்த கேஸூதான்னு.
"நாஞ்ளும் அவரு வூட்டுக்குத்தாம்
போயித் திரும்புறோம். எங்கேயோ போயிருக்கிறாராம். அவராத்தாம் திரும்புவாம். திரும்புனா
கேஸ்கள நடத்தி முடிச்சிக் கொடுத்துடுவாராம்."ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட
அனுபவத்தெ சுண்டக் காய்ச்சி வடிச்சுச் சொல்றாப்புல.
"சரியான கிறுக்குப் பயலுங்க! அவ்வேம்
கிட்டெப் போயித் தெரியாத்தனமா கேஸ்ஸக் கொடுத்தாச்சு. இப்போ மானம் போவுது. நமக்குத்
தெரிஞ்ச ஆளு ஒருத்தரு காட்டி வுட்டாரேன்னு வந்து சிக்கிக்கிட்டெம். மொத தடவே பாத்தப்பல்லாம்
ரொம்ப பிரமாதமாத்தாம் பேசுனாம். கேஸையும் நல்லாத்தாம் கொண்டுப் போனாம். கடைசியில
என்ன ஆனுச்சோ தெரியல. அவ்வேம் பாட்டுக்குப் போட்டுட்டு எஞ்ஞயோ போயித் தொலைஞ்சிட்டாம்.
இப்போ அவ்வேம் வூடு எங்கேன்னு தேடி அலைய வுட்டுப்புட்டாம். என்ன பண்ணுறதுன்னே புரிய
மாட்டேங்குது! இன்னொரு வக்கீல்கிட்டெ கேஸ்ஸக் கொடுக்கலாம்ன்னாலும் கட்டுக எல்லாம்
அந்தக் கிறுக்குப் பயலலோட ஆபீஸ்லல்ல இருக்கு. இன்னும் ஒரு வாரம் பாக்குறது. ஆளு வரலன்னா
ஆபீஸ்ஸ ஒடைச்சிக் கேஸ் கட்ட எடுக்குறேன்னா இல்லியான்னு பாருங்க! செரி நீஞ்ஞ கெளம்புங்க.
நீஞ்ஞ சொல்றதெப் பாத்தா ஆளு இப்போதைக்கு அட்ரஸ் இல்ல. இருந்தாலும் நாமளும் வூட்டுலப்
போயி வெசாரிச்சாத்தாம் வூட்டுல கெடக்குறப் பயலுங்களுக்காவது ஒரு பயம் கொடுத்தாப்புல
இருக்கும்! ச்சும்மா வுட்டுப்புட்டுத் தேட மாட்டேம் பாருங்க!"ன்னாரு அந்த ஆளு
வந்ததுக்குச் சும்மா திரும்புறதில்லங்றாப்புல.
"வந்ததுக்குப் போயி விசாரிச்சிட்டுப்
போனா ஒஞ்ஞளுக்கும் திருப்தியாப் போயிடும்!"ன்னு சொன்ன சுப்பு வாத்தியாரு,
"இப்பிடியே நேராப் போயி, ஒரு ஒடைஞ்சப் பாலம் தெரியுது பாருங்க. அதுல வலதுப் பக்கமா
ஒடிச்சி நேராப் போயி எடதுப் பக்கமா ஒரு ரோடு போவும் பாருங்க. அதுலேந்து ஒரு வூடு
கொஞ்ச தூரத்துலயே தெரியும். மஞ்ச நெறத்துல பெயிண்ட் அடிச்ச வூடு. சுத்திலும் கருவச்
செடியாவும், மரமாவும் இருக்குற அந்த எடத்துல அது ஒரு வூடுதாம் இருக்கும். பாத்தாலே
தெரியும்!"ன்னாரு அப்பிடியே வக்கீலோட வூட்டு வெலாசத்தெப் படம் பிடிச்சுக் காட்டுறாப்புல.
"பாருங்க! வூட்டெ கூட கண்டுபிடிச்சிடக்
கூடாதுன்னு சரியான கருவக்காட்டுல கட்டி வெச்சிருக்காம் காட்டாம் பெய. வூட்டுலப் போயி
வூட்டுல இருக்குறவங்கள ஒரு பிடி பிடிச்சிட்டு வர்றேன்னா இல்லியான்னு பாருங்க!"ன்னு
ஆக்ரோஷமா பல்சர்லேந்து சீறிப் பாய்ஞ்சாரு அந்த ஆளு.
"நாட்டுல நம்ம ஒருத்தருக்கு மட்டுமில்லடாம்பீ!
இந்த வக்கீலோட வழக்கு வெச்சிருக்கிற எல்லாருக்குமேதாம்டா பெரச்சனையா கெடக்கு!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு வக்கீலு வூடு தேடி வந்ததுலயும் ஆறுதல் இருக்குங்றாப்புல.
"ஆம்மாம்ப்பா! இந்த வக்கீலு வழக்கச்
சமாளிக்கிறதெ வுட, இந்த வக்கீல வெச்சிச் சமாளிக்கிறது ரொம்ப செருமம்ப்பா!"ன்னாம்
விகடு வழக்குன்னு வக்கீல்கிட்டெ வந்து வக்கீலால வழக்கு ஆவுதுங்றாப்புல.
“என்னமோ போடாம்பீ! நடக்குறதுதாம் நடக்கும். நாம்ம தலைகீழா நிக்குறதால
ஒலகம் ஒண்ணும் தலைகீழா திரும்பிடப் போறதில்ல!”ன்னுகிட்டே சுப்பு வாத்தியாரு டிவியெஸ்
பிப்டிய விட ஆரம்பிச்சாரு. இனுமே வேறெங்க வக்கீலத் தேடுறதுங்ற சலிப்பு அவரோட பேச்சுல
தொனிச்சது இன்டிகேட்டரப் போட்டதெ போல விகடுவுக்குக் கேட்டுச்சு.
*****
No comments:
Post a Comment