13 Jan 2021

தலையெழுத்துக்கும் கிரகத்திற்குமான தொடர்பு!

தலையெழுத்துக்கும் கிரகத்திற்குமான தொடர்பு!

செய்யு - 685

            ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்துல நடந்துகிட்டு இருக்குற வன்கொடுமை வழக்கையும், ஆர்குடி சார்பு நீதிமன்றத்துல நடந்துக்கிட்டு இருக்குற ஹெச்செம்ஓப்பி வழக்கையும் திருவாரூர்ல இருக்குற தொடர்புடைய நீதிமன்றத்துக்கு மாத்தணும்ன்னு வக்கீல் திருநீலகண்டன் செய்யுவோட சார்புல திருவாரூரு மாவட்ட முதன்மை நீதிமன்றத்துல டிரான்ஸ்பர் ஓப்பிய தாக்கல் பண்ணாரு. அதுக்குக் காரணமா அந்த மனுவுல பாலாமணியும், பாலாமணியோட வக்கீலும் தன்னோட கட்சிக்காரரான செய்யுவ ஆர்குடியில கோர்ட்டுக்கு வந்துட்டுப் போறப்பல்லாம் வழியில வெச்சு மெரட்டுறதாவும், பரிகாசம் பண்ணுறதாவும், அவுங்ககிட்டெயிருந்து ஆர்குடியில தன்ன தற்காத்துக் கொள்றது முடியலன்னும், அதனால வீட்டிலிருந்து ஆர்குடிப் போயிட்டு வர்றது சிரமமா இருக்குறதாவும் காரணங்கள சொல்லியிருந்தாரு. அவரு தாக்கல் பண்ணுன மனு விசாரணைக்கு எடுத்துக்கப்படாம ரொம்ப நாளு அப்பிடியே கெடந்துச்சு. அதுக்குக் காரணமா தாக்கல் பண்ணு மனுவுல நெறைய குறைபாடுக இருக்குறதாவும் அதெ திருத்தி தாக்கல் பண்ணுங்கன்னு கோர்ட்டுல சொல்லிட்டு இருந்தாங்க.

            வக்கீல் திருநீலகண்டன் நாலைஞ்சு முறை திருத்தித் திருத்தி மனுவைத் திரும்ப திரும்ப தாக்கல் பண்ணாரு. கடைசியா வன்கொடுமை வழக்குக்குத் தனியா ஒரு டிரான்ஸ்பர் ஓப்பியும், ஹெச்செம்ஓப்பிக்கு தனியா ஒரு டிரான்ஸ்பர் ஓப்பியும் தாக்கல் பண்ணுங்கன்னு கோர்ட்டுல சொன்னாங்க. ஒரு டிரான்ஸ்பர் ஓப்பி வழக்கு ரண்டு வழக்கா மாறுறதால இன்னொரு அஞ்சாயிரம் அதுக்குக் கேட்டாரு வக்கீலு. இந்த வக்கீல நம்பிக் காரியத்துல எறங்கிட்டு அவர்ரப் பகைச்சிக்க முடியாதுன்னு சுப்பு வாத்தியாரும், விகடுவும் அவரு கேட்டப்படி அங்க இங்கன்னு அலைஞ்சு பணத்தைத் திரட்டிக் கொண்டுப் போயிக் கொடுத்தாங்க. ஒவ்வொரு மாசமும் வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி மிச்சம் பண்ணுற காசு எப்பிடியோ வக்கீல் செலவுக்குன்னு அது பாட்டுக்கு ஏதோ ஒரு வகையில செலவ வெச்சிக்கிட்டெ இருந்துச்சு. எவ்வளவு சிக்கனமா இருந்தாலும் வக்கீல் செலவுக்கான அகோரப் பசிக்கு அதெல்லாம் பத்தவே இல்ல.

            தாக்கல் பண்ணுன டிரான்ஸ்பர் ஓப்பி வழக்குல வன்கொடுமைக்குன்னு தாக்கல் பண்ணுனது சரியா இருக்குன்னு அது வெசாரணைக்கு வந்துச்சு. ஆன்னா ஹெச்செம்ஓப்பிக்குன்னு தாக்கல் பண்ணதுல சில கொறைபாடுக இருக்கிறதாவும் அதெ சரிபண்ணிக் கொடுங்கன்னு அந்த மனு திரும்ப வந்துச்சு. எந்த வழக்கு நடக்கணும்ன்னு நெனைக்கிறோமோ, அதெ இழுத்தடிக்கிறாப்புல மேல்முறையீடு நடக்குது. எதெ இழுத்தடிக்கணும்ன்னு நெனைக்கிறோமோ, அதெ இழுத்தடிச்சு நடத்துறாப்புல மேல்முறையீடு அமைய மாட்டேங்குது. மொத்தத்துல எது நடக்கணுமோ அது நடக்காம, எது நடக்கக் கூடாதோ அது நடந்துச்சு.

            ஆர்குடி தண்ணி டேங்கு கோர்ட்டுல நடந்துக்கிட்டு இருந்த ஹெச்செம்ஓப்பி வழக்குல ஒரு திருப்பமா சமரச நீதி மையத்துக்கு அனுப்பி வெச்சாரு நீதிபதி. அங்க மட்டும் வழக்குப் போவலன்னா வக்கீலு எங்கன்னு கேட்டு ஜட்ஜ் நிச்சயம் தொளைச்சி எடுத்திருப்பாரு. திருநீலகண்டன் வக்கீலுக்கு ஆர்குடி கோர்ட்டுல ஆஜர் கொடுக்குறதுங்றது ஆடிக்கொரு தடவெ, அமாவாசைக்கு ஒரு தடவெ நடக்குற அதிசயந்தாம். அந்த வெதத்துல ஜட்ஜ் வழக்கெ சமரச மையத்துக்குத் திருப்புனதுல, அதெ ஒரு சாதவமா நெனைச்சா செய்யு. இப்பிடி ஆவும்ன்னு தெரிஞ்சா டிரான்ஸ்பர் ஓப்பிய போட்டிருக்கவே வேணாம்ன்னு சொன்னா அவ்வே.

            திருவாரூரு கோர்ட்டு சமரச நீதி மையத்தப் போல கூட்டம் கம்மியா இல்லாம ஆர்குடி ஹெச்செம்ஓப்பி வழக்குக்கான சமரசத் தீர்ப்பாய கட்டடத்துல கூட்டம் நெரம்பி வழிஞ்சது. எல்லாம் புருஷன் பொண்டாட்டிப் பெரச்சனைக சம்பந்தமான கேஸூங்கத்தாம். இங்க உக்கார்றதுக்குல்லாம் எடம் இல்ல. அவுங்கவுங்களும் கெடைச்ச எடத்துல, படியில, கீழே, மேலன்னு எங்க எடம் இருக்கோ அங்க உக்காந்திருந்தாங்க. செய்யுவையும், பாலாமணியையும் கூப்புட்டப்போ தனியால்லாம் அவுங்கள வெச்சி எதையும் கேக்க முடியாத அளவுக்கு அக்கம் பக்கத்துல யாராச்சும் நின்னுகிட்டு இருந்தாங்க. அதென்னவோ அப்பிடி நிக்குறவங்களும் அங்க நடக்குறதுக்கும், பேசுறதுக்கும் சம்பந்தமே யில்லங்ற மாதிரிக்கிக் கண்டுக்கிடாமத்தாம் நின்னாங்க. செய்யுவோட வழக்குப் பேர்ர சொல்லிக் கூப்புட்ப்போ செய்யுவும் பாலாமணியும் பீஸ் கோர்ட்டு ஜட்ஜ் மின்னாடி உக்காந்திருந்தாங்க. சுப்பு வாத்தியாரு செய்யுவுக்குப் பின்னாடி நின்னுகிட்டு இருந்தாரு. ராசாமணி தாத்தா பாலாமணிக்குப் பின்னாடி நின்னுகிட்டு இருந்துச்சு. செய்யு தன்னோட கதெயெ சுருக்கமா சொன்னதும், அதுக்கு மாத்தமா பாலாமணி அவனோட கதென்னு ஒண்ணுத்தெ சுருக்கமா சொன்னாம். அதெ கேட்ட ஜட்ஜ், "ஏம்மா இப்பிடிப்பட்ட ஒரு ஆளெ பிரிய ஒனக்கு எப்பிடிம்மா மனசு வந்துச்சு? போயி சந்தோஷமா சேர்ந்து வாழும்மா!"ன்னாரு பாலாமணி பேச்சுல மருவிப் போனாப்புல.

            "நம்மால அந்த ஆளோடல்லாம் சேந்து வாழ முடியாது. தயவு பண்ணி பிரிச்சி வுட்டுப்புடுங்கய்யா! வெட்டி வுடவும் முடியல, வெலகிப் போவவும் முடியல!"ன்னா ரொம்ப சலிப்பா செய்யு.

            "அப்பிடில்லாம் பேசக் கூடாதும்மா! பாருங்க அவரு மொகத்த! எவ்வளவு பரிதாபமா இருக்காரு!"ன்னாரு ஜட்ஜ் செய்யுகிட்டேயிருந்த நெத்தியடியப் போல வந்தப் பதிலக் கெட்டதும். ஜட்ஜ் இப்படிச் சொன்னதெ கேட்டதும் பாலாமணி இன்னும் மொகத்த பாவமா வெச்சிக்கிறாப்புல வெச்சிக்கிட்டு, "ஒரு சான்ஸ் மட்டும் கொடுக்கச் சொல்லுங்க சார்! ஒரே ஒரு சான்ஸ்! என்னைத் திருத்திக்க ஒரு சான்ஸ்ஸா அதெ நாம்ம பயன்படுத்திக்கறேம்!"ன்னாம் பாலாமணி கெஞ்சுறதுக்குப் பொறப்பெடுத்த அப்புராணியப் போல.

            "ஒரே ஒரு சான்ஸ்தான்ம்மா கேக்குறாரு! அதெ கொடுக்குறதுல என்னத்தெ கொறைஞ்சிப் போயிடப் போறே?"ன்னாரு ஜட்ஜ் பாலாமணி பக்கத்துல இருக்குற ஞாயத்தெ கேக்குறாப்புல.

            "ரண்டு உசுரு இருந்தா ஒரு சான்ஸ் கொடுக்கலாம். ஒரு உசுரு போனாலும் இன்னொரு உசுர வெச்சி காவந்துப் பண்ணிக்கிடலாம்ன்னு. இருக்குறது ஒத்த உசுருதானேய்யா. அதெ வுட்டுப்புட்டு நாம்ம குடும்ப நடத்துறதா? பரலோகம் போறதா?"ன்னா செய்யு கண்ணு ரண்டையும் முந்தானையால தொடைச்சிக்கிட்டு.

            "அந்த அளவுக்குக் கொடுமைக்கார ஆளாய்யா நீ?"ன்னாரு ஜட்ஜ் இப்போ பாலாமணியப் பாத்துட்டு மொகத்தெ சுளிச்சாப்புல.

            "கோவத்துல சொல்றது சார் அதெல்லாம்! அந்தப் பொண்ணோட வாழணும்ன்னு அந்தப் பொண்ணோட ஊர்லயே வாடகை வூடு வரைக்கும் பாத்து வெச்சிருக்கேம் சார்! ஓகேன்னா நாளைக்கே, நாளைக்கு ன்னா நாளைக்கு, இன்னிக்கே பாலக் காய்ச்சி குடிப் போயிடுறலாம். எல்லா செட்டப்பும் தயாரா இருக்கு சார்!"ன்னாம் பாலாமணி தலைக்கு மேல போற வெள்ளத்துல எதுவும் குடி முழுகிப் போயிடலங்றாப்புல.

            "அப்புறம் என்னம்மா தயக்கம் ஒனக்கு?"ன்னாரு ஜட்ஜ் கண்ணெ மூடிக்கிட்டு செய்யுவப் பாத்து.

            "தயக்கம்லாம் ஒண்ணுமில்லங்கய்யா! அவரு வேல பாக்குறது அரும்பாக்கம். வூடு பாத்துறதுக்கிறது திட்டையில. அஞ்ஞ வேலப் பாத்துக்கிட்டு இஞ்ஞ வாடவெ வூட்டுல எப்பிடித் தங்குவாருன்னு கேளுங்கய்யா?"ன்னா செய்யு கண்ணு ரண்டையும் தொறந்துகிட்டு முழிக ரண்டும் அந்தாண்ட இந்தாண்ட பெரளாம.

            "அதானே! எப்பிடிப்பா இதெல்லாம் சாத்தியம்?"ன்னாரு ஜட்ஜ் செய்யு கேட்டதையே திருப்பிக் கேக்குறாப்புல.

            "வாரா வாரம் இதுக்காவே வந்துப் போயிக்கிட்டு இருக்கேம் சார் நாம்ம!"ன்னாம் பாலாமணி கீமுழி முழிச்சிக்கிட்டு.

            "அதுக்கு நாம்ம எஞ்ஞ யப்பா வூட்டுலயே இருந்துக்கிடலாம்ங்கய்யா!"ன்னா செய்யு ஞாயம் கேக்குறாப்புல.

            "வேணும்ன்னா வேலைய வுட்டுப்புட்டே வர்றேம் சார்! நமக்கு நம்மட பொண்டாட்டிய வுட வேல ஒண்ணும் முக்கியம் கெடையாது!"ன்னாம் பாலாமணி அசட்டுத் துணிச்சல்ல அடிச்சு வுடுறாப்புல.

            "இதுக்கு என்னம்மா சொல்றே?"ன்னாரு ஜட்ஜ் செய்யுவப் பாத்து இதுக்கு என்னத்தெ பதிலச் சொல்லப் போறேங்றாப்புல.

            "நிச்சயமா தயாரா இருக்கேம்ங்கய்யா! வேலைய வுட்டுப்புட்டு வந்தா அந்த வூட்டுல இந்த நிமிஷமே குடித்தம் போவத் தயாருங்கய்யா!"ன்னா செய்யு தடாலடியா சரணடைஞ்சாப்புல. இதெ கேட்டதும் பின்னாடி நின்னுகிட்டு இருந்த சுப்பு வாத்தியாருக்கு ஒரு நொடி அதிர்ச்சியா போயி, சட்டுன்னு மின்னல் வந்து இதயத்துல வெட்டுனாப்புல ஆயிடுச்சு. உச்சியிலேந்து உள்ளங்காலு வரைக்கும் சுரீர்ன்னு போயிடுச்சு. உசுரே போயிட்டதெப் போல சட்டுன்னு ஒரு வலி அவருக்குள்ளார உருவாயிடுச்சு. சட்டுன்னு சுப்பு வாத்தியாரு வாயைத் தொறக்க எத்தனிச்சாரு. அதுக்குள்ளே மிந்திக்கிட்டு ஜட்ஜ் பேச ஆரம்பிச்சாரு.

            "பெறவென்னய்யா? பொண்டாட்டிய வுட வேலையா முக்கியம். போயி மொதல்ல ரிஸைன் பண்ணிட்டு பொண்டாட்டியோட குடித்தனம் நடத்து. டாக்கடர்தானே. அங்க ஒரு கிளினிக்கப் போட்டுட்டு பொழைச்சுப் போ! அன்ட் ஸோ கேஸ்ஸ சமரசமா முடிச்சிக்கிடலாமா?"ன்னாரு ஜட்ஜ் பாலாமணியப் பாத்து மொத்தத்தையும் முடிச்சு வைக்குறாப்புல. அவரு அதெ சொல்லி முடிச்சு மைக்ரோ வினாடி நேரம் இடையில இருந்திருக்காது. கௌண்டவுன் முடிஞ்ச நொடி சீறிப் பாயுற ராக்கெட்டைப் போல பட்டுன்னு பாலாமணி வாயைத் தொறந்தாம்.

            "நாம்ம கொஞ்சம் யோசிக்கணும் சார்! அடுத்தத் தேதி வரைக்கும் டயம் கொடுங்க!"ன்னாம் பாலாமணி. அதெ கேட்டதுந்தாம் சுப்பு வாத்தியாருக்குப் போன உசுரு திரும்ப வந்ததெப் போல இருந்துச்சு. கெட்டிக்காரன் புளுவு எட்டு நாளைக்குத்தான்னு சும்மாவா சொன்னாங்கன்னு நெனைச்சிக்கிட்டாரு. நல்ல வேள நாம்ம வாயைத் தொறக்குறதுக்குள்ள ஜட்ஜ் ஒண்ணுத்தெ சொல்லி அதுக்குப் பாலாமணி தன்னோட புளுவு மூட்டையே தானே அவித்துக் காட்டிப்புட்டாம்ன்னு தன்னெ தனக்குத் தானே தெடம் பண்ணிக்கிட்டாரு. அடுத்தடுத்து சரியுற சீட்டுக் கட்டுக கூட அந்த வேகத்துல சரியாது. அம்மாம் வேகத்துல ஜட்ஜ் சொன்னதும் அதுக்குப் பாலாமணி தன்னோட கருத்தெ சொன்னதும் படா வேகத்துல நடந்து முடிஞ்சது.

            "எல்லாம் புளுவுங்கய்யா. நாம்ம போட்டிருக்கிற வன்கொடுமெ வழக்குலேந்து தப்புக்கிறதுக்கு நடத்துற நாடவம்ய்யா!"ன்னா செய்யு ஒரு வினாடி கூட கொஞ்சமும் தாமதிக்காம. நாம்ம பேசுறதுக்கு இனுமே ஒண்ணுமே இல்லங்ற மாதிரிக்குத் தன்னோட வாயைத் தனக்குத் தானே கட்டளெ போட்டுக்கிட்டது போல மூடிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.

            "நீ கொஞ்சம் உணர்ச்சிவசப்படாதம்மா! நாம்ம பேசுறேம்!"ன்னு செய்யுகிட்டெ சொல்லிட்டு, "என்னய்யா நீ? கொஞ்ச நேரத்துக்கு மின்னாடித்தாம் வேலைய விட்டுட்டு வர்ற தயாரா இருக்கேங்றே? சரிதான்னு அந்தப் பொண்ணு சொன்னதும், யோசிச்சுப் பதிலச் சொல்லணுங்றே? மொதல்ல பதிலச் சொல்றப்போ யோசிக்கலையா? இப்பத்தாம் யோசிக்க ஆரம்பிக்கிறீயா? இப்பிடி நெனைச்சி நெனைச்சி பேசிக்கிட்டு இருந்தா அடுத்தடுத்து நிக்குறவங்கள எப்பப் பாக்குறது? போயி நல்லா யோசிச்சிக்கிட்டு அடுத்த தேதிக்கு வா பாக்கலாம்!"ன்னு சொல்லி சமரச நீதிபதி அனுப்பி வெச்சிட்டாரு. இப்பிடி ரொம்ப துடுக்கா பேசிட்டு வெளியில வந்தா செய்யு. மவ்வே இந்த அளவுக்குச் சூதானமா பேசுவான்னு சுப்பு வாத்தியாரு கொஞ்சமும் எதிர்பாக்கல. அவருக்கு மவளெப் பாக்க பெருமெயா இருந்துச்சு. ஆர்குடி கோர்ட்டுக்கு வந்து இப்போத்தாம் பீஸ் கோர்ட்டு ஜட்ஜ் சொன்ன பதில்ல மொத மொறையா மூஞ்சுச் செத்துப் போனாம் பாலாமணி. அன்னிக்கு அவனால செய்யுவ கிண்டல் பண்ண முடியல. நடை தளர்ந்துத்தாம் அன்னிக்கு நடந்துப் போனாம். ராசாமணி தாத்தா செத்த சவம் போல அவ்வேம் பின்னாடி நடந்துப் போச்சுது. நடந்த சம்பவத்தெ தெரிஞ்சுக்கிறதுக்காகப் பீஸ் கோர்ட்டுக்கு வெளியில நின்னுகிட்டு இருந்தாரு கங்காதரன் வக்கீலு. நடந்ததெ கேட்டதும் அவரோட மொகமும் சுடுகாட்டுக்குப் போறது போல போச்சுது. ஒண்ணும் சொல்ல முடியாம அவுங்க எல்லாரும் ஏறுனப் பெறவு இன்னோவா காரு அமரர் ஊர்தியப் போல அன்னிக்குப் போனுச்சுன்னுத்தாம் சொல்லணும்.

            ஆர்குடி ஹெச்செம்ஓப்பி பீஸ் கோர்ட்டுக்கு அடுத்தத் தேதிக்குப் பாலாமணி வந்தா அவனோட மொகத்திரைய நல்லாவே கிழிச்சித் தொங்க வுட்டுப்புடணுங்ற முடிவோட செய்யு ரண்டாவதா சிட்டிங் போட்டிருந்த தேதிக்குப் போனா. ஆனா அந்தத் தேதியில பாலாமணி ஆஜராவுல. மத்தியானம் வரைக்கும் காத்திருந்துப் பாத்தா. ஜட்ஜ் மூணு மணி வரைக்கும் காத்திருந்துட்டுப் போவச் சொன்னதால அவரு சொன்னபடியே இருந்துட்டு சுப்பு வாத்தியாரோட திரும்புனா. கெளம்புறதுக்கு மின்னாடி ஜட்ஜ்கிட்டெ சில வார்த்தைகள மட்டும் சொல்லிட்டு வந்தா, "யய்யா! நாம்ம சேந்து வாழ சம்மதிக்க மாட்டேங்ற தெகிரியத்துலத்தாம்யா அந்த ஆளு அம்மா பேசுறதெல்லாம். நாம்ம சேந்து வாழ தயாருன்னு சொன்னதும் அந்த ஆளோட மொகம் போன போக்கே பாத்தீயளா? அதாங் இந்தத் தேதிக்கு இஞ்ஞ வாரல. வந்தா நிச்சயம் நீஞ்ஞக் கேள்விக் கேப்பீயே? அதுக்குப் பதிலச் சொல்லியாவணும்ன்னு வாரல. இந்த ஹெச்செம்ஓப்பி வழக்கப் பொருத்த மட்டுல அந்த ஆளு வராத நாளு கெடையாது. இப்பத்தாம் வர்றாம இழுத்தடிக்கிறதெல்லாம். ஏன்னா இத்து அந்த ஆளு போட்ட வழக்கு. இதுக்கு வர்றதெ போல நாம்ம போட்ட வழக்குக்கு எதுவுமே வாரதில்ல. யய்யா நம்மள தப்பா நெனைச்சிக்கிட வாணாம். இனுமே இந்த சமரசத் தீர்ப்பாயத்துக்கு நாம்ம வர மாட்டேம்!"ன்னு. படபடன்னு கிராமத்துப் பொண்ணா வெள்ளந்தியா பேசிட்டுப் போற செய்யுவ கண்ணு முழி அசையாம பாத்தாரு பீஸ் கோர்ட்டு ஜட்ஜ்.

            அவ்வே அப்பிடி இனுமே பீஸ் கோர்ட்டுப் பக்கமே எட்டிப் பாக்க மாட்டேம்ன்னு ஆர்குடி பீஸ் கோர்ட்டு ஜட்ஜ்கிட்டெச் சொன்னாலும் அவ்வே சமரசத் தீர்ப்பாயத்துல ஆஜராவுறதெ அவளாலயே தடுக்க முடியல. அது எப்பிடின்னா அது வேற ஒரு வடிவத்துல வந்துச்சு. ஜீவனாம்ச அப்பீலுக்கு திருவாரூரு முதன்மை நீதிமன்றத்துல நடந்த கேஸ்ல கொஞ்ச நாளு விசாரிச்சிட்டு அந்த ஜட்ஜூம் இந்த வழக்கெ சமரசத் தீர்ப்பாயத்துக்குத் திருப்புனாங்க. அந்த ஜட்ஜ் ஒரு பெண்மணி. அவுங்க எப்பிடியாச்சும் இந்த வழக்க சமரசமா முடிச்சி வுடணும்ன்னு பாத்தாங்க. ஆர்குடியில சமரச தீர்ப்பாயத்துலேந்து தப்பிச்சு வந்தா திருவாரூரு கோர்ட்டுல திரும்ப அதெ சமரசத் தீர்ப்பாயத்துலப் போயிச் சிக்குறாப்புல இருக்கேன்னு நெனைச்சா செய்யு. மின்னாடி ஜீவனாம்ச வழக்கு சிஜேயெம் கோர்ட்டுல நடந்தப்ப இருந்த பீஸ் கோர்ட்டு ஜட்ஜூத்தாம் இப்ப அனுப்புன பீஸ் கோர்ட்டுக்கும் ஜட்ஜா இருந்தாரு. அதால அவருக்கு செய்யுவோட கதெ அத்துப்படியா இருந்துச்சு. பாலாமணியோட பேச்சும் அத்துப்படியா இருந்துச்சு.

            ஆர்குடியில சமரசத் தீர்ப்பாயத்துல பேசுனதெப் போல திருவாரூரு சமரசத் தீர்ப்பாயத்துல மொத சிட்டிங்குக்கு மட்டும் என்னவோ அதிசயம் நடந்தாப்புல வந்த பாலாமணி சேர்ந்து வாழப் போறதாவும், அதால எந்தப் பொருளையும் கொடுக்கப் போறதில்லன்னும், கூடிய சீக்கிரமே ஆர்குடி சார்பு நீதிமன்றத்துலேந்து அதுக்கான தீர்ப்பு வந்துடுங்ற மாதிரியும் பேசுனாம். செய்யு தன்னோட பொருளெ திருப்பிக் கொடுத்தா பிரிஞ்சிப் போறதுக்குத் தயாரா இருக்குறதா சொன்னா. இப்பிடி ரண்டு பேரும் எதிரும் புதிருமா இருந்ததால திருவாரூரு பீஸ் கோர்ட்டு ஜட்ஜ் அடுத்ததா ரண்டு சிட்டிங்கப் போட்டுப் பாத்தாரு. திரும்ப அரைச்ச மாவையே அரைச்ச அதெ சங்கதித்தாம் நடந்துச்சு. அடுத்தடுத்த சிட்டிங்குக்கு செய்யு போனா, பாலாமணி வாரல.

            அதெ நேரத்துல ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்துலயும் ஜட்ஜ் பீஸ் கோர்ட்டு பக்கமா கேஸ்ஸக் கொஞ்சம் திருப்பி விட்டுப் பாத்தாரு. திருவாரூரு முதன்மை நீதிமன்றத்துல டிரான்ஸ்பர் ஓப்பி வழக்கு நடந்துகிட்டு இருந்ததால அவரு அடுத்தடுத்துத் தேதிகள மட்டுந்தாம் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. அதால சமரச மையத்துக்கு அனுப்பி வெச்சா அங்க எதாச்சும் ஒரு முடிவோ மாத்தமோ வாரட்டும்ன்னு எதிர்பாத்து அனுப்பிச்சிப் பாத்தாரு. வன்கொடுமெ வழக்குக்கான சமரசத் தீர்ப்பாயத்துலயும் பேச்சு வார்த்தெ ஆரம்பமானுச்சு. அதுலயும் மொத சிட்டிங்க்ல ஆஜராயி பாலாமணி இந்த வன்கொடுமெ வழக்க வாபஸ் வாங்குனா சேர்ந்து வாழ தயாரா இருக்குறதாவும், பொருள்கள கொடுக்க தயாரா இருக்குறதாவும் சொன்னாம். அதெ செய்யு அப்பிடியே வரிசைய மாத்திச் சொன்னா, பொருளெ மொதல்ல கொடுத்தா வழக்கெ வாபஸ் வாங்கத் தயார்ரா இருக்குறதாவும், சார்பு நீதிமன்றத்து சமரசத் தீர்ப்பாயத்துல சொன்னபடிக்கு வேலைய விட்டுப்புட்டு வந்தா சேர்ந்து வாழவும் தயாரா இருக்குறதாவும் சொன்னா. அவ்வளவுதாம் அதுலயும் அடுத்தடுத்த தேதிக்கு ஆஜராவமா ‍டிமிக்கிக் கொடுக்க ஆரம்பிச்சாம் பாலாமணி. ஆன்னா செய்யு நெனைக்கல எல்லா வழக்குலயும் இப்பிடி ஒரே நேரத்துல சமரசத் தீர்ப்பாயத்துல வந்து நிக்கும்ன்னு. அதெ போல ஒரே நேரத்துல எல்லா கேஸ்ஸூம் கோர்ட்டுக்குத் திரும்பும்ன்னும் அவ்வே எதிர்பார்க்கல. எதிர்பாக்குற மாதிரி நடக்குறதா வாழ்க்கெ? எல்லாத்துலயும் எதிர்பாக்காத மாதிரி நடக்குறதுதானே வாழ்க்கெ! அப்பிடித்தாம் மேலும் சில பல எதிர்பார்க்காத சம்பவங்க அடுத்தடுத்து நடக்க ஆரம்பிச்சிது.

            வானத்தெப் பாத்தா சில நேரங்கள்ல மேகமெல்லாம் இல்லாம பளிச்சுன்னு நீல நெறமா மட்டும் தெரியுது. சில நேரங்கள்ல வெண்மேகங்க கலந்தாப்புல தெரியுது. திடீர்ன்னு கருமேகங்க சூழ்ந்து இருட்டா போவுது. இது பகல் நேரத்துச் சமாச்சாரம்ன்னா ராத்திரி நேரத்து வானமும் ஒரே மாதிரியா இருட்டாவா மட்டும் இருக்குது? ஒண்ணுமே தெரியாத அமாவாசெ ராத்திரியிலயும் இருட்டெ கிழிக்குறாப்புல சில நேரங்கள்ல மின்னல் அடிக்கத்தானே செய்யுது. வானத்தெப் போல இருக்குற வாழ்க்கையில எந்த நேரத்துல என்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்? அதாலத்தாம் பூமியில இருக்குற மனுஷனோட தலையெழுத்த வானத்துல இருக்குற கிரகத்தெ வெச்சுச் சொல்றாங்கப் போலருக்கு.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...