12 Jan 2021

வாடகைக்கு ஒரு வீடு!

வாடகைக்கு ஒரு வீடு!

செய்யு - 684

            வெத்தல பாக்கு வெச்சி அழைச்சாலே ஆர்குடிக்கு வர்ற யோசிக்கிற வக்கீல் திருநீலகண்டன் ரொம்ப அதிசயமா ஹெச்செம்ஓப்பி வழக்குக்கு தண்ணி டேங்கு கோர்ட்டுல அவரே அடுத்தத் தேதியில ஆஜராயி பாலாமணி தாக்கல் பண்ணியிருந்த அத்தனெ ஆவணங்களோட நகலையும் வாங்குனாரு. அதெ வுட ஆச்சரியமா அவரே சரியான நேரத்துல பஸ்லேந்து வந்து எறங்கிக் கோர்ட்டுலயும் உக்காந்திருந்தாரு. அதெப் பாக்க பாக்க சுப்பு வாத்தியாருக்கு ஒரே நாள்ல ஒலகம் மாறிடுமான்னுத்தாம் ஆச்சரியமா இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு, செய்யு, வக்கீல் திருநீலகண்டன்னு மூணு பேரையும் கோர்ட்ல பாத்ததும் பாலாமணிக்கும், வக்கீல் கங்காதரனுக்கும் சிரிப்பாணி தாங்கல. கேஸ்ல நல்லாவே அவனுவோளாவே மாட்டிக்கிட்டானுங்க மாதிரிக்கி இருந்தது அந்தச் சிரிப்பு. சேர்ந்த வாழத் தயார்ன்னு பதிலுரையில கடைசியில சொன்ன ஒண்ண வெச்சு எல்லா வழக்கையும் ஒண்ணும் இல்லாம அடிச்சிப்புடலாம்ன்னு பாலாமணியும், கங்காதரனும் நெனைச்சாங்க. பதிலுரையில் தாக்கல் பண்ற ஒத்த வாசகம் இப்பிடியா வழக்கையும் வாழ்க்கையோட நெலமையையும் தலைகீழா பொராட்டும்ன்னு நெனைக்க நெனைக்க அதிசயமாவும் ஆச்சரிமாவும் இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கும் செய்யுவுக்கும்.

            கோர்ட்டு முடிஞ்சிப் போறப்ப கங்காதரனாவே வாய வுட்டாரு, "நல்லா வசமா சிக்கிட்டதா தெரியுதே பங்காளி!"ன்னு திருநீலகண்டனப் பாத்து வெடைச்சி வுடுறாப்புல.

            "பொறி இப்பத்தானே வெச்சிருக்கேம் பங்காளி! ஆரம்பத்துல அப்பிடித்தாம் தெரியும். போவப் போவத்தாம் யாரு சிக்கியிருக்கா? யாரு வெளியில இருக்காங்றது?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் பொடி வெச்சுப் பேசுறாப்புல.

            "எல்லா ஆப்பும் மொறையா இருக்கு பங்காளி! பாத்துப் பதனமா இருங்க. ஒதவி வேணும்ன்னா நம்ம நம்பருத்தாம் தெரியுமே! அடிங்கப் பங்காளி! பாத்துச் செஞ்சிக்கிடலாம்! ரொம்ப மூளையப் போட்டுக் கசக்கிக்காதீங்க. அதெல்லாம் மூளெ இருக்குறவெங்க பண்ணுற வேல!"ன்னாரு கங்காதரன் கூடுதலா கலாய்ச்சி வுடுறாப்புல.

            "ஒங்கள சந்திக்கல்லாம் மூளையே தேவையில்ல பங்காளி! இந்த வழக்குல அதால மூளையே நான் பயன்படுத்துறதில்ல!"ன்னாரு திருநீலகண்டன் அசால்ட்டா பதில் தாக்குதல் நிகழ்த்துறாப்புல.

            "எப்பிடியோ பங்காளி! நெக்ஸ்ட் மீட் பண்ணுவேம்!"ன்னு கங்காதரன் பாலாமணி கொண்டாந்த இன்னோவா கார்ல ஏறிக் கெத்து கொழையாம கெளம்புனாரு.

            "பாத்தீங்களய்யா! ஒஞ்ஞகிட்டெயே ன்னா திமிரா பேசுறதெ? இதெத்தாம் அப்படியே சிராக்ஸ் எடுத்துப் பண்ணுறாப்புல பண்ணி நீஞ்ஞ யில்லன்னா நம்மளயும், பொண்ணையும் போட்டு தொவைச்சி எடுத்துப்புடறானுவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒவ்வொரு மொறையும் கோர்ட்டுக்கு வந்து நிர்கதியா நிக்குற நெலமைய எடுத்துச் சொல்றாப்புல.

            "இப்பத்தானே கேஸ்ஸ எடுத்து வாதாட வந்திருக்காம். ஆர்வ கோளாறுல பயலால சும்மா இருக்க முடியல. என்னவோ பெரிய பாய்ண்ட் கண்டுபிடிச்சி டப் கொடுத்துட்டதா நெனைக்கிறாம். இதெல்லாம் ஒரு மயிரும் இல்லங்றதெ ஜட்ஜ்மெண்ட் ஆவுறப்ப புரிஞ்சிப்பாம். இப்பிடித்தானே ஜீவனாம்ச வழக்குல நின்னானுவோ. இவனுவோளட ஒரு சைட்டேஷனெ கூட ஜட்ஜ் கன்சிடர் பண்ணல. அப்பிடித்தாம் இதுலயும் ஆவும்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் எதுவும் பெரிய விசயமில்லேங்றாப்புல.

            "பொதுவா எந்த வக்கீலுமே இப்பிடியெல்லாம் தரை டிக்கெட் அளவுக்கு எறங்கிப் பேசுறதில்லயேங்கய்யா! இவ்வேம் மட்டும் ன்னா பங்காளி, தொங்காளின்னுகிட்டு என்னவோ பள்ளியோடத்துப் பசங்கள வுட மோசமா லாவணிப் பாடிட்டுக் கெடக்குறானேய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சின்ன புள்ளத்தனமா பேச்சு நடந்துக்கிட்டு இருக்கேங்றாப்புல.

            "அதாம் சொல்லிட்டேன்ல. கத்துக்குட்டில்லாம் அப்பிடித்தாம். நிறைகுடம் என்னிக்கும் தளும்புறதில்ல சார்! குறைகுடங்க அப்பிடித்தாம். அதெல்லாம் கண்டுக்க கூடாது. நாய் கொரைச்சா நமக்கென்ன? கொரைச்சு கொரைச்சு தொண்டை வலி காணட்டும் விடுங்க. கொரைக்குற நாய்கிட்டெ நாமளும் பதிலுக்கு நின்னு கொரைச்சு என்னத்தெ ஆவப் போவுது சொல்லுங்க? இதெயெல்லாம் செம ஜாலியா சிரிக்கிறதுக்கு ஒரு மொமெண்டா எடுத்துக்கிட்டுப் போயிகிட்டெ இருக்கணும்! சீரியஸாவே எடுத்துக்கக் கூடாது! ஒரு சரியான லாயர்ன்னா எப்பிடின்னா அந்த லாயரோட ஸ்ட்ராடேஜி கடைசி வரைக்கும் தெரியாது. கிராஸ்லயும், ஆர்கியூமெண்ட்லயும் அதெ தெரிஞ்சிக்க முடியும். ச்சும்மா அப்போ பாத்தீங்கன்னா பயர் மாதிரி இருக்கணும்! நாம்ம அப்பிடித்தாம். நீறு பூத்த நெருப்பு மாதிரி இருப்பேம். பத்த வெச்ச பாம் மாதிரி சார் நாம்ம! எப்ப வெடிப்பேம்? எப்ப கம்முன்னு இருப்பேம்ன்னு நமக்கே தெரியாது. பொறுத்திருந்து பாருங்க. எப்பிடி பீஸ் பீஸ்ஸா கிழிக்கிறேன்னு!"ன்னுட்டு கோர்ட்டுக்கு வெளியிலயே நின்னபடியே பாலாமணி தரப்புல தாக்கல் பண்ணுன ஆவணங்கள ஒவ்வொண்ணா பருந்து பார்வெ பாக்க ஆரம்பிச்சாரு வக்கீல் திருநீலகண்டன்.

            அதுல ஒரு முக்கியமான ஆவணம் திட்டையில வாள்பட்டறையோட ஒட்டி இருக்குற பட்டாமணியோட வீட்டை வாடகைக்கு எடுத்திருக்குற வாடகைப் பத்திரம். வாள்பட்டறையோட போர்மென் தங்குறதுக்காக கட்டுன நாட்டு ஓடு போட்ட வீடு. ஒரு காலத்துல பட்டறை நல்லா ஓடிட்டு இருந்தப்போ இருந்த போர்மேனோட வாழ்க்கைய காலி பண்ணுன வூடு. இப்போ செய்யுவோட வழக்கை காலி பண்ண நிக்குற வூடு. அந்த வீட்டுல இப்போ பட்டறைய லீசுக்கு எடுத்தவங்கத்தாம் குடியிருக்காங்க. ஆன்னா அந்த ஆவணத்துல பாலாமணி அந்த வூட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறதாவும், அதுக்காக முன்பணம் கொடுத்திருக்கதாவும், மாசா மாசம் வாடகை கொடுக்குறதாவும் இருந்துச்சு. ஒரே நேரத்துல எப்பிடி ரண்டு பேரு ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க முடியும்? ஆக இது கோர்ட்டுக்காகத் தாக்கல் பண்ணிருக்கிற பத்திரங்றது தெளிவா தெரிஞ்சிது. இப்படியெல்லாம் எதிராளி கோர்ட்டுல ஆவணங்கள தாக்கல் பண்ணுறப்போ அதெ பொய்யின்னு நிரூபிக்கலன்னா அது உண்மென்னு ஆயிடுற அபாயம் இருக்கு. பெரும்பாலான விசயங்கள்ல உண்மைய உண்மென்னு நிரூபிக்கிறதும், பொய்ய பொய்யின்னும் நிரூபிக்கிறதும் ரொம்ப கஷ்டமான விசயங்க. உண்மெ தன்னெ தானாவே உண்மென்னு நிரூபிச்சிக்கிட்டத்தாம். அதெ போல பொய்யி தன்னெ பொய்யின்னு தானாவே ஒத்துக்கிட்டத்தாம். இதெல்லாம் நடக்குற கதையான்னா அபூர்வமா நடந்தாலும் நடக்கலாம், நடக்காட்டியும் நடக்காமலும் போகலாம்.

            பாலாமணி தாக்கீது பண்ணிருந்த அந்த இருவது ரூவாயிப் பத்திரத்துல அட்வான்ஸ் இருவத்தஞ்சாயிரம் கொடுத்திருக்கிறதாவும் மாச வாடகை ரண்டாயிரத்து ஐநூறுக்குன்னு பதினோரு மாசத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறதா அந்த வாடகைப் பத்திரம் இருந்துச்சு. பாலாமணிகிட்டெ இப்பிடி ஒரு வாடகைப் பத்திரம் இருந்தா, பட்டறைய லீசுக்கு எடுத்தவரு கையிலயும் இதெ போல பக்காவான வாடகைப் பத்திரம் இல்லன்னாலும் டிம்மித் தாள்லயாவது எழுதி வாங்குன ஒப்பந்தம் நிச்சயம் இருக்கும். அந்த ஒப்பந்த பத்திரம் கெடைச்சா இதெ பொய்யின்னு காட்டலாம். அதெ நிச்சயம் பட்டறைய லீசுக்கு எடுத்தவரு கொடுக்க மாட்டாரு. ஏன்னா அந்த ஒப்பந்தப் பத்திரத்தெ கொடுத்துட்டு அவரு கோர்ட்டுக்கு சாட்சிக்காக ‍அலைஞ்சிக்கிட்டும் இருக்க முடியாது, அதுவுமில்லாம பட்டறைக்காரரு பட்டாமணியப் பகைச்சிக்கிட்டு லீசுக்கு எடுத்த பட்டறைய நடத்தவும் முடியாது. ஆக நெலமெ இதுதான். கோர்ட்டுல சாட்சின்னு கூப்புட்டாலும் பட்டாமணி வந்தார்ன்னா பாலாமணிக்கு வூட்டை வாடகைக்குக் கொடுத்திருக்கிறதாவும், வாடகைக்கு அங்கத்தாம் தங்கி இருக்குறதாவும் சாட்சியம் பண்ணிடுவாரு.

            ஆன்னா இது எதுக்குடா இந்த வாடகைப் பத்திரம்ன்னு அவ்வேம் தாக்கல் பண்ணியிருந்த மனுவப் பாத்தா, அதுல பிரிந்திருக்கும் மனைவியின் தாய் வீட்டு அருகே வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பதாவும், அந்த வீட்டில் தங்கி சேர்ந்து வாழத் தயாரா இருக்குறதாவும் சங்கதி இருந்துச்சு. அந்தச் சங்கதியச் சொல்லி சேர்ந்து வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இயன்ற வரையில் செய்திருப்பதால் சேர்ந்து வாழ்வதற்கான உத்தரவைச் சமூக நீதிமன்றம் பிறப்பிக்கணும்ன்னு அத்தோட அந்த மனுவுல வேண்டுகோள் விடுத்திருந்தாம் பாலாமணி. செய்யுவோட தரப்புல பதிலுரையில தாக்கல் பண்ணிருந்த உரிய பாதுகாப்புத் தந்தால் சேர்ந்து வாழத் தயார்ங்ற ஒத்த வாசகத்துக்கு பாலாமணி மொத்த சக்தியையும் புத்தியையும் பிரயோகம் பண்ணி இவ்ளோ வேலையப் பண்ணியிருந்தாம்.

            "பாத்தீங்களா சார்! வாழ வைப்பதற்கு நாங்க தயாரா இருக்கோம், அவுங்கத்தாம் வாழ்றதுக்குத் தயாரா இல்லங்ற மாதிரி ஒரு தோற்றத்த உண்டு பண்ணிருக்கானுவோ!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் எல்லாத்தையும் பாத்து முடிச்ச பின்னாடி.

            "நம்ம ஊர்லயே இப்பிடி எதுப்பா இருக்கானுவோ! சாட்சி சொல்ல வர்றானுவோ! இப்ப என்னான்னா வாடகைக்கு வூடு தந்திருக்கிறதா பத்திரத்தெ தயாரு பண்ண வுட்டுருக்கானுவோ! ஒரே கிராமத்துல இருந்துக்கிட்டு இப்பிடியெல்லாம் செய்ய அவனுவோளுக்கு எப்பிடி மனசு வருதோ தெரியல. இதெ மாதிரிக்கி அவனுவோ குடும்பத்துல நடந்து நாம்ம அவனுவோ பண்ண மாதிரிக்கிப் பண்ணுனா நம்மள கிராமத்துலயே இருக்க வுட மாட்டானுவோங்கய்யா! நாம்ம ஏப்ப சாப்ப ஆளா இருக்குறதால நம்மளப் போட்டு என்னமா பாடு படுத்துறானுவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வாழ்க்கையில கெட்டுப் போனவன் போயி உக்கார்றப்பத்தாம் குட்டிச்சுவரும் ஒடைஞ்சு வுழுவுங்றாப்புல.

            "ஒங்க ஊர்லேந்தே இப்பிடி நாலு பேரு சாட்சிக்குன்னு வந்து நின்னா கேஸ் எடுபடாது சார்! ஒங்க ஊர்ன்னா ஒங்களுக்குத்தாம் சாதகமா இருக்கணும். சாதகமா இருக்காட்டியும் பரவால்ல. கோர்ட்டுப் பக்கம் எட்டிப் பாக்கக் கூடாது. ஒங்க ஊர்லேந்து அவனுக்குச் சாதகமா சாட்சியம் சொல்றப்போ அது ரொம்ப வலுவான சாட்சியமாவும் போயிடும். அப்பிடி ஒங்க மேல அவனுகளுக்கு என்ன எதிர்ப்போ? பார்த்தா ஒங்கள எதிர்க்குறதுக்கு ஒரு காரணமே இருக்குற மாதிரி நமக்குத் தெரியல!"ன்னாரு வக்கீலு புள்ள பூச்சிகிட்டெ ஏம் பாம்பு படம் எடுத்து ஆடணுங்றாப்புல.

            "அதாங் காரணம். நம்மள எதிர்க்குறதுக்கு ஒரு காரணமே யில்லங்றதுதாங் காரணம்! நம்மள எதிர்த்தா திருப்பிக் கேக்கப் போறதில்ல, திருப்படி அடிக்கப் போறதில்ல, பழி வாங்கப் போறதில்ல. அப்போ எதுக்குறதுக்கு நாம்மதானே தோதான ஆளு. அதாங் எதிர்க்குறானுவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எவ்ளோ அடிச்சாலும் அதெ தாங்குறதுக்குத் தன்னோட தலெ தயாரா இருக்குங்றாப்புல.

            "அப்பிடில்லாம் இருக்கக் கூடாது சார்! சொல்லுங்க அவனுங்க ஒவ்வொருத்தரு பேர்லயும் ஒரு கேஸ்ஸப் போட்டு விட்டு கோர்ட்டுக்கு இழுப்பேம்!"ன்னாரு வக்கீல் ஒரு பிடி பிடிச்சு விடுவேங்றாப்புல.

            "இந்த கேஸ்ஸூக்கே ஒஞ்ஞள இழுத்தாந்து கோர்ட்டுல நிப்பாட்டுறது திருவாரூரு தேர்ர இழுத்தாந்து ஆர்குடியில நிப்பாட்டுறதெ போலருக்கு. இதுல அவனுங்களுக்கு எதுப்பா வேற கேஸ்ஸப் போட்டு ஒஞ்ஞள கொண்டாறதுக்குள்ள நாம்ம அவிய்ங்க மின்னாடி அசிங்கப்பட்டு நிக்க வேண்டித்தாம். ரொம்ப தமாசப் போயி நாராசமாயிடும்ங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட சலிப்பையும் வேதனையையும் ஒண்ணு சேத்து வக்கீல் மின்னாடி கொட்டுறாப்புல.

            "நல்லாவே சைக்கிள் கேப்புல ஆட்டோவ ஓட்டுறாப்புல, கெடைச்ச கேப்புல நம்மள வெச்சிக் கலாய்ச்சிட்டீங்களே! அதெ வுடுங்க! அந்த ஓட்டைகள சரிபண்ணியாவணுமே!"ன்னாரு வக்கீல் மீசையெ மண்ணுல வுழுந்தாலும் மண்ணு வந்து மீசையில ஒட்டாதுங்றாப்புல.

            "அதெ வுட்டுத் தொலைங்கய்யா! அவனுங்கள ஆண்டவனே வந்தாலும் சரிபண்ண முடியாது. அவனுவோ பண்ணுறதுக்கு அவனுவோளா அனுபவிச்சாத்தாம் உண்டு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அவருக்குன்னு அவரே உருவாக்கி வெச்சிருக்குற வறட்டு வேதாந்ததெ உதுக்குறாப்புல.

            "அப்பிடின்னா பட்டாமணிக்கு வாடகைக்கு விடுறதுக்கு வீடே இல்லன்னுத்தாம் நாம்ம வாதாடணும். இத்து முழுக்க போர்ஜரியான பத்திரம்ன்னு கோர்ட்டுல அவனோட டங்குவார்ர அவுக்குறானா இல்லையான்னு பாருங்க!"ன்னாரு வக்கீல் எப்படி இருந்தாலும் நெலமையெ கோர்ட்டுல சமாளிப்பேம்ங்றாப்புல.

            "அவனுக்கு வாடகெ வூடு, பெரிய வூடு, சின்ன வூடுன்னு எல்லா வூடும் கெராமத்துல இருக்குங்கய்யா! அதெப்படி யில்லன்னும், போர்ஜரின்னும் வாதாட முடியும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒரு முழு பூசணிக்காயையே சோத்துல மறைக்க முடியாதுங்றப்போ முப்பது பூசணிக்காயை எப்படி மறைக்க முடியுங்றாப்புல.

            "இருக்கட்டும் யாரு வேணான்னா? இருவத்தஞ்சாயிரம் அட்வான்ஸூக்கு விடுற அளவுக்கு வாடகைக்கு வூடு இருக்குது? பட்டறை வேற வெச்சிருக்கான்னு சொல்றீயளே? எல்லாத்துக்கும் சேர்த்து இன்காம்டாக்ஸ் பைல் ரிட்டன் பண்ணான்னா இழுத்து விட்டேம்ன்னா அதுல போயிச் சிக்கிக்கிட்டுக் கெடக்கட்டும். விசயம் இந்த மாதிரின்னா நமக்கு வீடே இல்லன்னுத்தாம் கோர்ட்லுல வந்துச் சொல்லுவாம்!"ன்னாரு வக்கீல் பூசணிக்காயென்ன பெரிய சமாச்சாரம் பலாப்பழத்தையெ உள்ளங்கையில மறைக்கலாம்ங்றாப்புல.

            "அப்பிடி எதாச்சும் பயந்தாத்தாம் உண்டு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதெல்லாம் அசாத்திய சாத்தியம்ங்றாப்புல.

            "ஒண்ணு பண்ணுங்க. அந்த ஆளு மேல வாள்பட்டறையில சட்டத்துக்குப் புறம்பா தேக்கு மரம், செம்மரம்ன்னு அறுக்குறதா மொட்டைக் கடுதாசிய லோக்கல் போலீஸ் ஸ்டேசன், பாரேஸ்ட் டிபார்ட்மெண்டுன்னு போட்டு விடுறீங்களா? நமக்கு எதிரா குழி பறிக்கிறவனுக்கு நாமளும் பதிலுக்குக் குழியப் பறிச்சாத்தாம் அடங்குவானுவோ!"ன்னாரு வக்கீல் பழிக்கு பழி வாங்க வழியக் காட்டி குழிய வெட்டி வுடுங்கன்னு சொல்றாப்புல.

            "அதெ மட்டும் நாம்ம பண்ணுறதில்லெங்கய்யா. அவ்வேம் நமக்கு என்ன கொடுமெ வாணாலும் பண்ணட்டும். இந்த மொட்டக் கடுதாசி போடுறது, பொய்யா மன்றேறி சொல்றது, வட்டிக்கு விட்டு பணஞ் சம்பாதிக்கிறது இதெல்லாம் மட்டும் வாணாங்கய்யா! அதெல்லாம் செய்யக் கூடாதுன்னு ரொம்பப் பிடிவாதமா இருக்கேம். நம்மட மவ்வனே ஷேர் மார்கெட்டுல நல்லாத்தாம் சம்பாதிச்சிட்டு இருந்தாம். யாரோ ஒருத்தம் அழுவ நாம்ம சம்பாதிக்கக் கூடாதுடா மவனேன்னு அவனெ கொண்டாந்து, படிச்சப் படிப்புக்கு வாத்தியாராக்கி விட்டேம். அவ்வேம் இந்த வேலைக்கே வர்ற முடியாதுன்னு பிடிவாதமா நின்னாம். அவனெ பிடிவாதமா தெச திருப்பினேம். அதெல்லாம் ஒரு கதெ. அதெல்லாம் ஒரு நேரம். அப்பிடி நமக்கு வாழ்க்கெயில சில பிடிப்புக உண்டு. அதெ வுட்டுப்புட்டு நாம்ம வெளியில வர்ற முடியாது. வழக்குல தோத்தாலும் பரவாயில்ல அதெ நாம்ம பண்ண முடியாது! வழக்குல தோக்குறதப் பத்தி ஒண்ணுமில்ல, வாழ்க்கையில தோத்துடக் கூடாது. இன்னிக்கு இவ்ளோ பெரச்சனன்னாலும் நம்மாள படுத்தா நிம்மதியா தூங்கிட முடியுது. அதுக்குக் காரணம்ன்னு நாம்ம நெனைக்கிறது யாருக்கும் நாம்ம எந்தத் துரோகமும், குந்தகமும் பண்ணலங்ற நெனைப்புத்தாம். நம்மள மாதிரி அவனுக தூங்க முடியுமா? நிம்மதியா இருக்க முடியுமா? நாம்ம எந்த ஆபத்துல சிக்குனாலும் யாராச்சும் வந்து எப்பிடியோ காப்பாத்தி விட்டுப்புடுறாங்க. அதெல்லாம் ஏதோ ஒரு புண்ணியத்தாலயும், கெட்ட காரியத்தெ பண்ணாததாலயும்ன்னுத்தாம் நெனைக்கிறேம். தயவு பண்ணி தப்பா போற மாதிரியான காரியங்க எதெயும் செய்ய தூண்டிப் புடாதீயே. அப்படி எதாச்சும் தப்பா நாமளே நம்மள அறியாம செய்யணும்ன்னு நின்னாலும், அதெ தடுத்து விட்டுப்புடுங்க. ஒஞ்ஙளுக்குப் புண்ணியமா போவும்!"ன்னுட்டாரு சுப்பு வாத்தியாரு தன்னோட மொத்த வாழ்க்கையோட கோட்பாட்டெ வடிச்சிச் சொல்றாப்புல.

            "அப்பிடின்னா ஒரே வழி நாம்ம ஆபீஸ்ல வெச்சி சொன்னதெ போல மேக்கொண்டு வழக்க நடத்த வுடாம டிரான்ஸ்பர் ஓப்பியப் போட்டுக் கொஞ்ச நாளைக்கு முடக்க வேண்டியதுதாம். மாப்புள என்னம்மா வேல பாத்திருக்காம். நமக்குத் தெரிஞ்சு மோசமான கிரிமினல் லாயர்ஸ் கூட இந்த அளவுக்கு எறங்கி வேல பாக்குறதில்ல சார்! ரொம்ப நம்பளப் போட்டு படுத்துறானே! நாங்களே சுப்ரீட் கோர்ட், ஹை கோர்ட் சைட்டேஷன்ஸ் ரொம்ப கொடுக்குறதில்ல. மாப்புள எங்கேயிருந்து பிடிக்காறோனோ தெரியல. பிடிச்சிக்கிட்டெ இருக்காம்!"ன்னாரு வக்கீல் பாலாமணிக்கு லாயர் பட்டத்தெ கூடிய சீக்கிரமே வாங்கிக் கொடுத்துப்புடுறாப்புல.

            "இப்பிடியெல்லாம் தாக்கல் பண்ணி அந்தப் பயலுக்கு என்னத்தெ லாவம் வர்றப் போவுது? அவ்வேம் வந்து வாழப் போறதும் யில்ல. அவ்வேம் இருக்குறது மெட்ராஸூ. வேலைய வுட்டுப்புட்டு இஞ்ஞ வந்து இருப்பானா? எல்லாம் செட்டப்பு! நாம்ம ஊர்ல ஒண்ணுமில்லாம்ம செல்லாக்காசியா ஆயிட்டேங்றதெ இப்பிடியெல்லாம் பண்ணிச் சொல்லாம்ம சொல்றானுவோ போலருக்கு! யானை படுத்தா அது மேல எலி ஏறி பச்செ குதிரெத்தாம் தாண்டுமாம். யானைக்கே அந்தக் கதின்னா நாம்ம மொசலுங்கய்யா. நம்ம மேல நத்தையே ஏறி சடுகுடுத்தாம் ஆடும். அவ்வேம் ஆட மாட்டேன்னா ன்னா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு சிரிச்சிக்கிட்டுச் சொல்றாரா, சோகமா சோல்றாரான்னு புரியாத வாக்குல.

            "நாம்ம நிச்சயம் அவனோட சேர்ந்து வாழ்றதுக்கு அனுமதிக்க மாட்டோங்றது அவனுக்கு நல்லாவே தெரியும். அதுக்குத்தாம் ஊர்ல இருக்குறவங்கள விட்டு நோட்டம் பாத்தது. பட்டறைக்காரன் வந்துப் பேசுனதா சொன்னீங்க இல்லியா! அதுல நல்லாவே நாடியப் பிடிச்சிட்டாம். அடுத்து ஒடனே தாமதிக்காம போலீஸ்ஸ அனுப்புனதுக்கும் அதுதாம் காரணம். இதையெல்லாம் ஆர்கியூமெண்ட்ல சொல்லி நாங்க சேர்ந்து வாழ எவ்வளவோ முயற்சியப் பண்ணினதாவும், அவுங்கப் பிரிஞ்சிப் போறதுலயே குறியா இருக்குறதாவும் ப்ரூப் பண்ணிடுவாம். இதுல அப்பிடி ஒரு தீர்ப்பு வந்தா போதும் சார்! அதெ வெச்சு வன்கொடுமெ வழக்குல காரியத்தெ சாதிப்பாம். சேர்ந்து வாழ விருப்பம் இல்லாம, பிரிஞ்சிப் போற நிக்குறவங்க பழி வாங்குற நோக்கத்துல இந்த வன்கொடுமெ வழக்கப் போட்டிருக்கிறதா அதுல சொல்லுவாம். அப்போ அவனுக்கு அங்க தப்பிச்சுப் போக ஒரு ஓட்டைக் கெடைக்குதுப் பாருங்கோ!"ன்னாரு வக்கீல் ஓட்டைக்குள்ள இருக்குற ஒடைசல காட்டுறாப்புல.

            பண்ணுற தப்பையும் பண்ணிட்டு அதுலேந்து தப்பிக்க, சட்டத்துல ஓர் ஓட்டைய உருவாக்க முடியும்ன்னா ஒரு மனுஷன் எந்த அளவுக்கு வேணும்ன்னாலும் எறங்கி யோசிப்பாம், செயல்படுவாங்ற மாதிரிக்கித்தாம் இருந்துச்சு பாலாமணி செஞ்சு வெச்சிருக்கிற ஒவ்வொரு வேலையும். அதெத் தாண்டி ஓட்டைய அடைச்சி அவனுக்குத் தண்டனெ வாங்கிக் கொடுக்கணும்ன்னா அதெத் தாண்டி மோசமா கிரிமினலா சிந்திச்சாத்தாம் காரியம் ஆவும் போல இருந்துச்சு நெலமெ. அதெப் பத்தியும் வக்கீல் சொல்ல ஆரம்பிச்சாரு. அதெப் பத்தி ரொம்ப பேச வாணாங்றாப்புல சுப்பு வாத்தியாரு, "ஒரு கிரிமினல்ல தண்டிக்கணும்ன்னு நாம்ம எறங்கி யோஜெனெ பண்ணி நாம்ம ஒரு கிரிமினலா ஆயிட வாணாம். நேர்மையான மொறையில போங்க. அதுல எத்து கெடைச்சாலும் செரித்தாம். ஒரு கிரிமினல் கேஸ்ஸூக்குள்ளப் போயி நாம்ம கிரிமினல் ஆவாம இருக்குறதெ அந்த வழக்குல கிடைக்கிற பெரிய‍ வெற்றித்தாம்!"ன்னாரு அவரு ஒரு கோணத்துல.

            "ஒங்க கொள்கைக்கு எந்தப் பங்கமுமில்லாம டிரான்ஸ்பர் ஓப்பியப் போட்டுக் கொஞ்சம் இழுத்தடிக்கிறேம்! இவ்ளோ வேகமா போறவனுங்களுக்கு ஒரு வேகத்தடையப் போட்டா கொஞ்சம் அடங்கித்தாம் ஆவணும்! பாக்கலாம் அடங்குறானுவோளா இல்லையான்னு?"ன்னாரு வக்கீல் எப்பிடிச் சமாளிக்கச் சொன்னாலும் அப்பிடிச் சமாளிப்பேங்றாப்புல.

            "நீஞ்ஞ ஒவ்வொண்ணையும் பண்ண பண்ண அவனுவோ சிரிப்பாணியால்ல எடுத்துக்கிறானுவோ?"ன்னா செய்யு அது வரைக்கும் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு மனசுக்குள்ளயே புழுங்கிட்டு இருந்து இப்போ புழுக்கம் தாங்க முடியாம.

            "சிரிக்கட்டும்மா! நல்லா‍வே சிரிக்கட்டும்! கடைசியல அழுவப் போறது யாரு, சிரிக்கப் போறது யாருங்றது தெரியும். கடைசியா அழுவுறதுக்கு முன்னாடி நல்லாவே சிரிச்சிக்கிடட்டும்! அவனுங்களோட கெளண்ட் டவுன் இந்த நிமிஷத்துலேந்து ஆரம்பிச்சிடுச்சு. நான் டிரான்ஸர் ஓப்பி வழக்குல என்டர் ஆயிட்டேம்!"ன்னாரு வக்கீல் ஒத்த ஊசியில மொத்த வியாதியையும் போக்கிடுற டாக்கடர்ரப் போல ரொம்ப நம்பிக்கையா. வாழ்க்கெ தடம் பொரண்டு போறப்பெ வார்த்தைகதானே கடெசீயா இருக்குற நெம்புகோலு. அதெ நல்லாவே செஞ்சி வுட்டாரு வக்கீலு. ஒரு வகையில வழக்குக் கொஞ்சம் தொவண்டாப்புல போவப் போறதுன்னாலும் வக்கீல் இப்பிடி ரொம்ப நம்பிக்கையாப் பேசி ஆர்வமா வழக்குல எறங்குறதுல அது ஒரு தெம்பாத்தாம் இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கும், செய்யுவுக்கும். தவிக்குறப்போ தாகம் அடங்குற அளவுக்குத் தண்ணி கெடைக்காட்டியும் ஒரு வாயித் தண்ணிக் கெடைச்சா அது தெம்புத்தானே. பசியா இருக்குறவனுக்கு ஒரு வாயிச் சோறும் அமுதந்தானே. சரிஞ்சு வுழுற கட்டடத்தெ ஒரு தூணு தாங்க முடியாதுன்னாலும் முடிஞ்ச வரைக்கும் அது தாங்கி நிக்குறதெ யாரு என்ன கொறை சொல்லிட முடியும்? வழக்குல இனுமே ஜெயிக்க முடியுமோ முடியலையோ ஆன்னா எதுக்காகவும் கலங்காம அடுத்ததா செய்ய வேண்டியதெ செய்வேம்ன்னு வக்கீல் சொன்னது தாகத்துல கெடைச்ச ஒரு வாயித் தண்ணியப் போலவும், பசியில கெடைச்ச ஒரு வாயிச் சோத்தெ போலவும், சரியுற கட்டடத்தெ தாங்குற ஒத்தத் தூணெ போலவுந்தாம் இருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...