11 Jan 2021

மறுபடியும் டிரான்ஸ்பர் ஓப்பி


 மறுபடியும் டிரான்ஸ்பர் ஓப்பி

செய்யு - 683

            விகடு பள்ளியோடம் விட்டு வந்ததும் வாரததுமா நடந்த அத்தனை சேதிகளையும் அவ்வேங்கிட்டெ சொல்லி, கையோட அவனையும் அழைச்சுக்கிட்டு அன்னிக்கு ராத்திரி ஏழு மணி வாக்குல வக்கீல் ஆபீஸூல் போயி நின்னாரு சுப்பு வாத்தியாரு. நடந்த விசயத்தெ ஒரு சங்கதி வுடாம எல்லாத்தையும் வக்கீல்கிட்டெ சொன்னாருன்னும் சொல்லலாம், ஒப்பிச்சார்ன்னும் சொல்லலாம். அதெயெல்லாம் பொறுமையா கேட்டுக்கிட்டு வக்கீல் திருநீலகண்டன் சொன்னாரு.

            "நம்ம வழக்கப் பொருத்தமட்டுல அவ்வேம் போட்ட ஹெச்செம்ஓப்பி வழக்குத்தாம் பெரிய எடைஞ்சல். நாம்மப் பிரிஞ்சிப் போறேம்ன்னா அதெ வெச்சி வன்கொடுமெ வழக்க டைல்யூட் பண்ணிடுவாம். சேர்ந்து வாழ வர்றோம்ன்னா இந்த மாதிரிக்கி இடைஞ்சல் கொடுப்பாம். அவ்வேம் இந்த அளவுக்கு எறங்கியிருக்கான்னா ஹெச்செம்ஓப்பி வழக்க துரிதம் பண்ண நினைப்பாம். அதுக்கு நாம்ம எடம் கொடுக்கக் கூடாது. இப்போ இந்த எடத்துல நம்மளோட அணுகுமுறைய நாம்ம மாத்தித்தாம் ஆவணும்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் நல்ல வெதமா போயிட்டு இருக்குற வண்டிய சடர்ன் பிரேக் போட்டு திருப்புறாப்புல.

            "எஞ்ஞளுக்கு என்னத்தெ அணுகுமுறை தெரியும்? நீஞ்ஞத்தாம் பாத்துச் செய்யணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எப்பிடி வாணாலும் வழக்கெ ஆபத்து வர்றாம கொண்டு போங்கன்னு சொல்றாப்புல.

            "இப்போ நாம்ம என்ன பண்ணணும்ன்னா ஆர்குடியில நடக்குற வழக்குகள இங்க திருவாரூரு கோர்ட்டுக்கு மாத்தணும்ன்னு ஒரு டிரான்ஸ்பர் ஓப்பி வழக்கப் போடணும்!"ன்னாரு வக்கீல் வழுக்கிக்கிட்டுப் போற வழக்குக்கு வம்படியா முட்டுக்கட்டெ போடுறாப்புல.

            "அதெத்தானே அவ்வேம் மொதல்ல செஞ்சாம். அப்பவே விட்டிருந்தா கூட அந்த ரண்டு வழக்கும் இஞ்ஞ வந்திருக்கும். ஒஞ்ஞளுக்கும் இஞ்ஞ திருவாரூர்லயே ஆஜராவ சுலுவா இருந்திருக்கும். கேஸ்ஸூ கூட இந்த அளவுக்குத் தொய்வாப் போவாம நீஞ்ஞ அடிக்கடி ஆஜராயி வன்கொடுமெ வழக்குல ஒரு தீர்ப்பு கூட ஆயிருந்திருக்கும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நல்லா போறதெ நாமளே ஏம் நாசம் பண்ணணும்ன்னு கேக்குறாப்புல.

            "ஒண்ணுப் புரிஞ்சிக்கோங்க! எந்த வழக்குல தீர்ப்பும் ஆவக் கூடாது. அதே நேரத்துல வழக்கும் நின்னுடாம நடந்துகிட்டு இருக்கணும். அது ஒண்ணுத்தாம் இப்போதைக்கு அவனெ மெரள வைக்கும். வழக்குல ஒரு தந்திரம் என்னான்னா எதிரியோட மனப்போக்குக்கு தொடர்ந்தாப்புல ஆப்போசிட்டா போயிட்டே இருந்தா, ஒரு கட்டத்துல மனசு வெறுத்துப் போயி வழக்கே வேணாம்ன்னு விட்டுட்டுப் போயிடுவாம். அந்த எடத்துல நாம்ம சுலபமா ஜெயிச்சிடலாம். அதெ விட்டுப்புட்டு எல்லா வழக்கையும் நடத்தி முடிச்சி நாம்ம தீர்ப்ப வாங்குனா அவனுக்கு ரொம்ப வசதியா மேல் அப்பீலுக்குப் போயி வழக்க மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்குக் கொண்டுட்டுப் போயிடுவாம். நீங்க அதுல ஒரு சூட்சமத்தப் பாக்கணும். மெட்ராஸூக்குப் போனா அவனுக்கு நல்லது. நமக்குக் கெட்டது. ஏன்னா அவ்வேம் மெட்ராஸ்ல இருக்காம். நாம்ம மெட்ராஸ்லேந்து முந்நூறு கிலோ மீட்டர் தள்ளியிருக்கோம். போயிட்டு வாரதுல நாலு தடவெ போயிட்டு வந்தா அலுத்துப் போயிடும். அங்கத்தாம் நாம்ம சொல்ல வர்றதே நீங்க நல்லா கவனிக்கணும். இங்க வழக்கு நடக்கணும். அதுவும் தொடந்து நடந்துகிட்டெ இருக்கணும். அப்பத்தாம் அவ்வேம் ஒவ்வொரு தடவையும் முந்நூறு கிலோ மீட்டர் டிராவல் பண்ணிக்கிட்டு, காசைச் செலவு பண்ணிக்கிட்டு வந்துகிட்டும் போயிக்கிட்டும், போயிக்கிட்டும் வந்துட்டும் அலுத்துச் சலிச்சிப் போவாம். இப்பிடி அலுத்துச் சலிச்சிப் போறதுக்கு பேசாம வழக்கெ முடிச்சிட்டுப் போவலாம்ன்னு நெனைப்பாம். அந்த எடத்துலத்தாம் அவனெ வெச்சிச் செய்யணும்! இப்போ ஒங்களுக்குப் புரியுதோ வழக்கெ எப்பிடிக் கொண்டுப் போவணும்ன்னு?"ன்னாரு வக்கீல் வழக்குகளோட ராஜதந்திர மொறைகளக் கரைச்சுக் குடிச்சவரு போல.

            "நாஞ்ஞ முன்னபின்ன வழக்கு நடத்துனதுல்ல. வக்கீல் நீஞ்ஞத்தாம், நெறைய வழக்க நடத்தி அனுபவப்பட்டவங்க. அதெ எப்பிடி நடத்தணும், கொண்டு போவணுங்ற நுணுக்கம்லாம் ஒஞ்ஞளுக்குத்தாம் தெரியும். அதுல நாஞ்ஞ சொல்றதுக்கு என்னத்தெ இருக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வளர்ற கிளையெ வெட்டித்தாம் ஆவணும்ன்னா வெட்டி வுடுங்கன்னு சொல்றாப்புல.

            "எதிர்தரப்புல மொதல்ல டிரான்ஸ்பர் ஓப்பி வழக்க போட்டாங்கன்னா அப்போ நாம்ம அதெ ஒத்துக்கக் கூடாது. இப்போ நாம்ம அதெ வழக்கப் போட்டோம்ன்னா அதெ அவனும் ஒத்துக்க மாட்டாம். இங்க சீப் கோர்ட்டுல வழக்கு ஆரம்பிச்சிட்டா அங்க கீழ் கோர்ட்டுல வழக்குகள அவனால எடுத்து நடத்த முடியாது. அங்க அப்பிடியே ஒரு ஸ்டாப் ஆயிடும். ஒரு பிரேக்கப் போட்ட நிறுத்துறோம். இங்க வழக்கு நடந்து முடிஞ்சு தீர்ப்பாவ ஒரு வருஷம், ஒன்றரை வருஷம் ஆவும். அதுவரைக்கும் ஆர்குடியில எந்த வழக்கும் முன்னுக்குப் போவாது!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் கிளையையும் வெட்டிப்புட்டு வேர்லயும் கொஞ்சம் வெந்நித்தண்ணிய பாய்ச்சி வுடுறாப்புல.

            "அப்போ ஆர்குடியில வன்கொடுமெ வழக்கும்லா முன்னுக்குப் போவாது!"ன்னாம் விகடு சாதவமா உள்ளதும் சங்கடமா போயிடுமேங்றாப்புல.

            "கரெக்ட். அவன் டிரான்ஸ்பர் ஓப்பி வழக்குப் போட்டப்பவும் அப்பிடித்தானே. ரண்டு வழக்கும் முன்னேறிப் போகாம அப்பிடியே கெடந்துச்சு. அந்த நேரத்துல அவனோட நோக்கம் ஹெச்செம்ஓப்பிய முன்னேத்திக் கொண்டுப் போவணும், வன்கொடுமெ வழக்க நடக்க விடாம பண்ணணுங்றது. மொத்தத்துல அப்போ ரண்டுமே நின்னுப் போனது. இப்போ நாம்ம போடுறப்பயும் அப்பிடித்தாம் ஆவும். நம்மளோட நோக்கம் ஹெச்செம்ஓப்பிய முன்னேற வுடக் கூடாது, வன்கொடுமெ வழக்க நடக்க விடணும்ன்னு. ஆன்னா ரண்டுமே முன்னேறிப் போவாது. ரண்டுமே நிக்கும். கொஞ்ச நாளு அப்பிடியே கெடக்கட்டும். அந்தப் பயலும் யோசிப்பாம். எத்தனெ நாளுக்கு இப்பிடியே வழக்க நடத்திக்கிட்டு வயசெ கடத்திக்கிட்டுக் கெடக்குறதுன்னு? ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பொண்ணு கெடைக்காது பிரதர் ஆம்பளைங்களுக்கு! அதெ நெனைச்சே வருவாம் நாம்ம எப்பிடி நெனைக்குறோமோ, அந்த நெனைப்புக்கு எத்த மாதிரி சமாதானத்துக்கு. அப்போ கோழி அமுக்குற மாதிரி வெச்சி அமுக்குவோம் பிரதர்! அது வரைக்கும் பொறுத்துதாம் ஆவணும். வேற வழியில்ல!"ன்னாரு வக்கீல் ஆக்கப் பொறுத்தவங்க ஆறவும் பொறுக்கணுங்றாப்புல.

            "எல்லா வழக்கும் சேர்ந்து மொத்ததுல ஒரு இடியாப்ப சிக்கலுக்குள்ள போயிடுமேங்கய்யா! நேர்ராவே வழக்க நடத்தி என்ன ஆனாலும் பரவாயில்லன்னு விட்டுப்புட்டுப் போயிடலாம்ங்கய்யா! வேணும்ன்னா இஞ்ஞ முடிஞ்ச வரைக்கும் வழக்க நடத்தி விட்டுப்புட்டு ஹைகோர்ட்டுக்கு போவாம கூட விட்டுப்புடலாம்!"ன்னாம் விகடு குறுக்கு வழியெல்லாம் வேணாங்றாப்புல.

            "பிரதர்! திருவாரூர்லயும் செரி, ஆர்குடியிலயும் செரி, நாகப்பட்டணத்துலயும் செரி! திருநீலகண்டன்ன்னா ஒரு நேம் இருக்கு. வழக்க எடுத்தா ஜெயிப்பாம்ன்னு. அந்த பேருக்குத்தாம் எனக்குத் தொழில் ஓடிட்டு இருக்கு. ஒங்கப் போக்குக்குப் போயி வழக்கு தோத்தா வெச்சுக்கோங்க, அடுத்த நிமிஷமே திருநீலகண்டன் வழக்குல தோத்துப் போயிட்டான்னு சேதி ஆந்த்ராக்ஸ் பொடியப் போல பரவிடும். வருமானம் போயிடும் பிரதர். நம்மப் பொழைப்பு இதெ வெச்சித்தாம் ஓடிக்கிட்டு இருக்கு. அதுல மண்ணள்ளிப் போட்டுட நெனைக்காதீங்க பிரதர். இது எனக்கு ஒரு விதத்துல பாதிப்பா ஆவுது. ஹை கோர்ட்டுல போயி ஒங்க தங்கச்சியோட சேர்ந்து வாழ ஒரு ஜட்ஜ்மெண்ட்ட வாங்கிட்டு வரான்னு வெச்சுக்கோங்க! ஒங்களால என்ன பண்ண முடியும் சொல்லுங்க? ஒண்ணும் ஜட்ஜ்மெண்ட்டெ இல்லாதப்பவே, நாம்ம கோர்ட்டுல தாக்கல் பண்ண பதில்மனுவெ வெச்சிக்கிட்டெ இந்த வேல பாக்குறான்னா ஜட்ஜ்மெண்டு கெடைச்சிட்டா ருத்ர தாண்டவமே ஆடுவாம். அதெ ஒங்களால சமாளிக்க முடியுமா? நம்மாளயும் அப்புறம் ஒண்ணும் பண்ண முடியாது. சுப்ரீம் கோர்ட்டுல அதாவது டில்லியிலப் போயி அதுக்கு ஸ்டே ஆர்டர் வாங்கியாவணும். அதெல்லாம் ஒடனடியா நடக்குற காரியமா பிரதர். நாட்டுல பெரிய பெரிய ஆளுங்க அப்பிடிப் பண்ண முடியும். நம்ம நெலைய யோசிச்சுப் பாருங்க பிரதர்! யோசிக்கணும் பிரதர்! வெச்சா குடுமி, செரைச்சா மொட்டைங்ற மாதிரிக்கெல்லாம் ஒரு வக்கீல்கிட்டெயே வாதம் பண்ணக் கூடாது பிரதர்!"ன்னாரு வக்கீல் நேர்ரா இருக்குற ரோட்டுலத்தாம் வேகமாப் போறதுல அடிக்கடி விபத்துக நடக்குதுங்றதெ எச்சரிக்குறாப்புல.

            "மவ்வேம் சொல்றதெக் கேக்காதீயே! இப்போதைக்குப் பாதுகாப்பு என்னவோ அதெ பண்ணுங்க. அந்தப் பயெ வூடு தேடி போலீஸ்ஸ அனுப்பி வுட்டதுலேந்து நமக்குப் பக்குபக்குங்கது. இன்னிக்கு அந்த இன்ஸ்பெக்டரு அம்மாவே சமாளிச்சி அனுப்புறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிட்டு. எப்பிடியோ சமாளிச்சு அனுப்பிட்டேம். ஊருல இருந்த பொம்முனாட்டிச் சனங்க அது பாட்டுக்கு வந்து நின்னுப்புட்டுங்க. அது வேற கதெ. எப்பவும் நெலமெ அப்பிடியே இருக்கும்ன்னு சொல்ல முடியாது பாருங்க. இவ்வேம் வேற பள்ளியோடம் போயிட்டாம். நாமளும் வெளியில எங்காச்சிம் போயிருந்தா நெலமெ என்னாவுறது? வூட்டுல இருக்குறது பொண்டுக. அதுகப் பாட்டுக்கு போலீஸ் வந்து மெரட்டுக் கூப்புடுதேன்னு கெளம்பிட்டா, பெறவு போலீஸ்கிட்டேயிருந்து மீட்டுக் கொண்டாரதல்லாம் சுலுவா? லாக்கப்ல வெச்சிச் செத்துப் போனவங்க எத்தனயோ பேத்தோட கதெயெல்லாம் கேக்குறேம். வழக்குக் கெடக்குது வழக்கு. மொதல்ல நம்மளக் காப்பாத்திக்கணும். அதுக்கான வழி என்னவோ பண்ணுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இப்போதைக்குச் சூதானமா இருக்குறதுதாங் முக்கியங்றாப்புல.

            "அப்பா சரியா சொல்றாங்க பாருங்க பிரதர். அதாம் அனுபவம். ஒங்க வயசுக்கு அது புரியாது. சார்! நான் சொல்றதெ நல்லா கேட்டுக்குங்க. இப்போ டிரான்ஸ்பர் ஓப்பிய போட்டா ஆர்குடியில ரண்டு வழக்குமே நின்னுப் போவும். அதாவது மேல் கோர்ட்டுல வழக்கு நடக்குறதால கீழ் கோர்ட்டுல எதுவும் பண்ண முடியாது. இங்க திருவாரூர் கோர்ட்டுல ஒரு தீர்ப்பு வர்ற வரைக்கும் அவுங்க தேதி மேல தேதித்தாம் கொடுப்பாங்க. அதுக்கு ரண்டுக்கு ஆஜராவமா ஒண்ணுக்கு மட்டும் ஆஜராயிக்கிட்டு ஓட்டிக்கிட்டு இருக்கலாம். அதுக்குள்ள கொஞ்ச காலம் ஓடும். அதுல ஒரு மாத்தம் உண்டாவும். இப்போதைக்கு இதெ பண்ணுறதுதாம் நல்லது. அவனால முண்ட முடியாது. செத்தப் பாம்பப் போல கொஞ்ச நாளைக்கிக் கெடந்துப் பாத்து அலுத்துப் போயி நம்மகிட்டெ வருவான். இங்க வந்தான்னா அவனோட பல்ல பிடுங்காம அனுப்ப மாட்டான் இந்த திருநீலகண்டன். நம்ம பேரே திருநீலகண்டன். ஆலகால வெஷத்த விழுங்குன கடவுளோட பேரு!"ன்னாரு வக்கீல் உருட்டித் தெரட்டி வெண்ணெய்ய வாகா வெளியில கொண்டாந்துடுற மோர்க்காரிய போல.

            "இப்போதைக்குக் கொஞ்சம் காபந்துப் பண்ணி வுடுங்க. ஊர்லேந்தும் செரி, போலீஸ்லேந்து செரி கொஞ்ச நாளைக்கு யாரும் எந்தத் தொந்தரவும் பண்ணக் கூடாது. அதாம் யிப்போ முக்கியம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தாளகதி புரிஞ்சு ஜிங்குசாக்கு அடிக்கிறவேம் போல.

            "நாம்ம சொன்ன இந்த வேலையப் பண்ணா அவனால ஒண்ணும் பண்ண முடியாது. ஓடிகிட்டெ இருக்குறவன ஓடாம பண்ணுறது ரொம்ப பெரிய தண்டனை. வேலை செஞ்சிக்கிட்டெ இருக்குறவனுக்கு வேலையில்லாம உக்கார்ர வைக்கறதும், வேலை செய்யாம உக்காந்திருவனுக்கு வேலையக் கொடுக்கறதும் சரியான தண்டனை. அவ்வேம் ஒங்க மாப்புள ஓடியே பழக்கப்பட்டவேம். அவனால ஓடாம இருக்க முடியாது. நாம்ம இப்போ பண்ணப் போறது அவனெ ஓடாம நிறுத்துற வேல. அவனோட மைண்ட் செட்டுல நாம்ம என்ன நோக்கத்துல போறோங்றதெ மொதல்ல புரியாம அடிக்கணும். அதெ யோசிச்சு யோசிச்சு அவனெ கொழம்பிப் போவணும். அப்பத்தாம் அவ்வேம் நம்ம வழிக்கு வருவாம்."ன்னாரு வக்கீல் குட்டையக் கொழப்பி மீனோட ஒட்டு மொத்த குட்டையையும் சேத்து வலையில அள்ளுறாப்புல.

            "அந்தப் பயெ வழிக்கு வரானோ யில்லையோ, கொஞ்ச நாளுக்கு அலைச்சல யில்லாம கெடந்தாலும் செரித்தாம்! மவ்வே வேற படிக்க முடியலன்னு ரொம்ப நொந்துப் போயிக் கெடக்கா. யிப்பிடியெல்லாம் வழக்கப் போட்டா, படிக்க வெச்சா மனசு மாறும்ன்னுத்தாம் பண்ணுது. அவளுக்கு நடந்ததும் கொடுமெதாம். யிப்போ என்னாச்சுன்னா வழக்குக்கு அலைஞ்சு அலைஞ்சு அதுலயே அவ்வே மனசு பாதிச்சிப் போயிடும் போலருக்கு. நீஞ்ஞ சொல்றதுதாங்கய்யா செரி! கொஞ்ச நாளைக்கு எல்லாம் அப்பிடியே கெடக்கட்டும். தீர்ப்பு வந்தும் ஒண்ணும் ஆவப் போறதில்லன்னு தெரியிது. அவ்வேம் மேல அப்பீலுக்குப் போன வர்ற தீர்ப்புல ன்னா புண்ணியம் சொல்லுங்க?இதுலப் போயி தீர்ப்ப வாங்கி என்னவாவப் போவுது? நெலமெ யிப்பிடி இருக்க இதுல ஏம் வழக்குன்னா, ஏதோ ஒரு வெதத்துல மனசுக்கு ஆறுதலுக்குத்தான், நாமளும் ச்சும்மா இருக்கல, முடிஞ்ச வரைக்கும் போராடிப் பாத்தேம்ன்னு. அதுப் போதும் போங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஆபரேஷன் தியேட்டருக்குப் போற நோயாளி எப்படியாச்சும் காப்பாத்தி வுட்டுப்புடுங்கன்னு பாக்குற எல்லாரையும் பாத்துக் கையெடுத்துக் கும்புடறாப்புல.

            "அப்பிடில்லாம் மனசெ விட்டுட வேணாம் சார்! அவ்வேம் எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் சரித்தாம் ஒங்க மகளுக்கு அவளுக்குக் கலியாணம் ஆவுற காலம் வரைக்கும் ஜீவனாம்சத்தக் கொடுத்துதாம் ஆவணும். வன்கொடுமெ வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டு வரைக்கும் நடத்தி முடிச்சா ஜெயிலுக்குப் போயித்தாம் ஆவணும். இதாங் நிஜம், உண்மை, சட்டம். இதெ யாராலும் மாத்த முடியாது."ன்னாரு வக்கீலு பசுமரத்துல ஆணிய அடிக்குறாப்புல.

            "அந்த அளவுக்கு நடத்தி முடிக்கிற அளவுக்கு மனசுல பலமில்ல, பணத்துலயும் பலமில்ல. நம்மாள முடிஞ்சது இந்த அளவுத்தாம். ஏதோ இஞ்ஞ இருக்குற கோர்ட்டுல வழக்கப் போட்டு ஆவுறதெப் பாத்துட்டு விட்டுட வேண்டித்தாம். ஞாயம், நீதிங்றதுல்லாம் வலுத்தவனுக்குத்தாம் கெடைக்கும். அவனுக்கு அந்த அளவுக்கு பண பலமும் இருக்கும். ஆளு பலமும் இருக்கும். நம்ம நெலமெ அப்பிடியில்ல. இன்னிக்குக் காசிய வுட்டா நாளைக்கு என்ன பண்ணுறதுன்னு எண்ணி எண்ணி சிலவெ பண்ணுற நாம்ம, வழக்கப் பத்தியெல்லாம் நெனைச்சிப் பாக்கவே கூடாது. இந்த அளவுக்கு இதெ கொண்டு வந்து நடத்துறதெ எஞ்ஞ நெலமெக்கு ரொம்பப் பெரிய சாதனைங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சாண் ஏறி மொழம் சறுக்குற தன்னோட நெலையச் சொல்றாப்புல.

            "அப்புறம் சொல்ல மறந்துட்டேம் பாருங்க. டிரான்ஸ்பர் ஓப்பி வழக்குக்கு ஒரு பத்தாயிரம் ஏற்பாடு பண்ணிடுங்க. பத்தாயிரமா மொத்தமா கொடுக்கணும்ன்னு கூட அவசியமில்ல. அய்யாயிரத்தெ மொதல்ல கொடுத்துட்டுப் பிறகு அடுத்த மாசத்துல அய்யாயிரத்த கொடுத்தாலும் செரித்தாம். ஆபீஸ் வாடகை வேற ரண்டு மாசமா கொடுக்காம கெடக்கு. நாம்ம வக்கீலா இருக்குறவாசி ஓனரால ஒண்ணும் சொல்ல முடியல. நாளைக்கு நம்மளோட உதவின்னு வந்தா என்னப் பண்ணுறதுன்ன தலையச் சொரிஞ்சிக்கிட்டு இருக்காரு. இருந்தாலும் அதுக்காக நாம்ம அதையெ வெச்சிக்கிட்டுக் கொடுக்காம இருந்துட முடியுமா? நீங்க கொடுக்குற அய்யாயிரத்த வெச்சித்தாம் வாடகையக் கொடுத்தாவணும். நம்மகிட்டெ வர்ற கேஸ்க எல்லாம் ஓசியில கேஸ் நடத்துறதாவே வருதுங்க. என்னத்தெ பண்ணுறது? பாவ புண்ணியம் பாத்து நடத்தித் தொலைய வேண்டியதா இருக்கு!"ன்னாரு வக்கீல் தலைய சொரிஞ்சாப்புல. கடெசீயா தாம் வர்ற வேண்டிய முக்கியமான குறிப்புக்கு வந்துட்ட மொகக்குறிப்பெ அவரோட மொகம் நல்லா காட்டுனுச்சு.

            "நீங்களும் ரொம்ப நாளா வழக்க நடத்திட்டு இருக்கீங்க. நெறையக் கொடுக்கணும் ஒங்களுக்கு. ஒங்களக்குக் கொடுக்கக் கூடாதுன்னு நெனைக்கல. எல்லாம் யில்லாத கொறைத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெச்சிக்கிட்டு தங்கிட்டெ எந்த வெதமான வஞ்சனையும் இல்லங்றதெ சொல்றாப்புல.

            "புரியுது சார்! ஒங்க நெலமெ! பொண்ணுக்குக் கலியாணம்ன்னு பண்ணி வெச்சி ஓட்டாண்டியா நிக்குறீங்க. ஒங்ககிட்டெ கேக்குறதுக்குக் கஷ்டமாத்தாம் இருக்கு. நமக்கு வீடு ஒண்ணுத்தாம் சொந்தம். மத்தபடி தண்ணியிலேந்து காசு கொடுத்து வாங்கித்தாம் குடிக்க வேண்டியதா இருக்கு. காசே வாங்காம வழக்க நடத்தித் தர்றதா சொல்லிட்டு இப்பிடி ஒவ்வொரு வழக்குக்கும் பணத்தெ கேக்குறதா நெனைச்சிட வேண்டாம். சில நேரங்கள்ல நம்மளோட நெலமெ அப்பிடி ஆயிடுது. திருவாரூர்ல நீங்க எந்த வக்கீல்கிட்டெ போனாலும் இதெ விட காசு கூடத்தாம் கேப்பாங்க. ரண்டு மடங்கு, முணு மடங்குன்னு கூடுதலா. நாம்ம அப்பிடில்லாம் ஆசைப்படல. வாழ்க்கைய ஓட்டுறதுக்காகவது பீஸ்ன்னு கேட்டுத்தானே ஆவ வேண்டியிருக்கு!"ன்னாரு வக்கீல் தன்னெ எதுக்கெடுத்தாலும் பணங் கேக்குற வக்கீலுன்னு நெனைச்சிப்புட கூடாதுங்றாப்புல.

            "ஒஞ்ஞள அப்பிடில்லாம் விட்டுப்புட மாட்டேம். முடிஞ்சா பத்தாயிரத்தையும் கொண்டாந்து கொடுத்துடுறேம். அப்பிடி முடியாட்டியும் நீஞ்ஞ சொன்னாப்புலயே இந்த மாசம் ஒரு அய்யாயிரம், அடுத்த மாசம் அய்யாயிரம்ன்னு கொடுத்துப்புட்டுத்தாம் மறுவேல பாப்பேம். ஒஞ்ஞள தவிக்க மட்டும் விட்டுப்புட மாட்டேம். எஞ்ஞளுக்காகப் பாடுபடுற நீஞ்ஞ கஷ்டத்துல நிக்குற மாதிரி விட்டுட மாட்டேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நல்லா நிக்குற மரத்துக்கு நாலு பக்கமும் முட்டுக் கொடுத்து நிறுத்துறாப்புல.

            "நாம்ம ஆர்குடி சார்பு நீதிமன்றத்துல நமக்குத் தெரிஞ்ச வக்கீலுங்கள வெச்சி கேஸ்ஸோட ஸ்டேட்டஸ்ஸ விசாரிச்சிக்கிட்டு அடுத்தத் தேதிக்கு வந்து ஆஜர் ஆவுறேம். நீங்களும் மகளெ அழைச்சிக்கிட்டு வந்துடுங்க. ஏன்னா அவனுங்க தரப்புல ஆவணங்க, கூடுதல் மனுவெ என்னத்தெ தாக்கல் பண்ணிருக்கானுங்கறதெ நாம்ம காப்பிப் போட்டு வாங்கி யோசன பண்ணியாவணும்."ன்னாரு வக்கீல் எந்த எடத்துல தட்டுனா சுப்பு வாத்தியாரு பட்டனெ தட்டுன பொம்மையப் போல சந்தோஷமா ஆடுவார்ங்றதெ தெரிஞ்சவரெப் போல.

            நெசமாவே சாதாரணமா கூப்பிட்டெ ஆர்குடி கோர்ட்டுக்கு வராத வக்கீலு, அவராவே வர்றதா சொன்னதுல சுப்பு வாத்தியாருக்குச் சந்தோஷம் தாங்கல. பட்டனெ தட்டுனா ஆடுற பொம்மையப் போல மனசுக்குள்ள சந்தோஷத்துல ஆட ஆரம்ப்பிச்சிட்டாருன்னுத்தாம் சொல்லணும். அவரோட மொகத்துல சந்தோஷத்தோட வெளிச்சம் வக்கீல் ஆபீஸத் தாண்டியும் வெளியில வீச ஆரம்பிச்சிட்டுது. அந்த நேரத்துல அவரெ கொண்டு போயி நாகப்பட்டணம் கடற்கரையில நிப்பாட்டியிருந்தா கலங்கரை வௌக்கத்தெ போலத்தாம் ஒளிய வீசியிருப்பாரு. அந்தச் சந்தோஷத்தோடயே மவனெ அழைச்சிக்கிட்டு அன்னிக்கு வூடு வந்து சேர்ந்தாரு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...