7 Dec 2020

ஆம்பள!

ஆம்பள!

செய்யு - 648

            வன்கொடுமெ வழக்கப் போட்டதுக்குப் பெறவு பாலாமணியும் செரி,  ராசாமணி தாத்தாவும் சரி ஒரு மொறை கோர்ட்டுப் பக்கம் எட்டிப் பாத்ததோட செரி. அதுக்குப் பெறவு கோர்ட்டுப் பக்கம் எட்டிப் பாக்கல. அவுங்க சார்பா கோர்ட்டுப் பக்கம் எட்டிப் பாத்ததெல்லாம் பழைய பரமசிவம் மட்டுந்தாம். அவரு பாலாமணி வக்கீலோட குமாஸ்தான்னு சொல்லி கோர்ட்டுல ஆஜராயிட்டெ இருந்தாரு. அவரோட வேல அன்னிக்குக் கோர்ட்டுல என்ன நடந்ததுங்றதெ ஒடனே போன் பண்ணிச் சொல்றதும், அன்னிக்கு யார் யாரு செய்யு தரப்புல கோர்ட்டுக்கு வந்ததுங்றதெ சொல்றதும்தாம். மின்ன மாதிரி பழைய பரமசிவம் பேச வர்றப்போ அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து நின்னு கேக்குறத சுப்பு வாத்தியாரு விட்டுட்டுட்டாரு. பழைய பரமசிவம் பாட்டுக்கு எதாச்சும் பேசிகிட்டு இருக்க இவரு பாட்டுக்கு காது கேக்காதவர மாதிரி வந்திடுவாரு. செய்யு எதாச்சும் நின்னு பதிலச் சொல்லப் பாத்தாலும், கெளம்புன்னு ஒரு அதட்டலப் போட்டு கொண்டு வந்துகிட்டு இருந்தாரு.

            வன்கொடுமெ வழக்கப் போட்டதுக்குப் பெறவு நடந்ததுல ஒரு முக்கியமான மாற்றம்ன்னா வக்கீல் திருநீலகண்டனுக்குப் போனப் போட்டு பாலாமணி பேசுனதுதாம். அவ்வேம் பேசுறப்பயே திருநீலகண்டன் வக்கீல் ரொம்ப எச்சரிக்கையா கேட்டிருக்கிறாரு, "செலபோன்ன ரிகார்ட்டுல போட்டுத்தாம் பேசுறீங்களா மிஸ்டர் பாலாமணி?"ன்னு. அதுக்கு ஒடனே பாலாமணி, “அப்பிடில்லாம் தப்பா ஒண்ணும் நடந்திடாது. நடக்கவும் வுட மாட்டேம்!”ன்னு ரொம்ப வருத்தப்பட்டாப்புல பேசிருக்காம். அதெத் தொடர்ந்துதாம் மேக்கொண்டு வக்கீல் பேசியிருக்காரு. வருத்தப்படுறாப்புல ஆரம்பிச்ச பாலாமணி திருநீலகண்டன் வக்கீல நம்ம வைக்கணுமேன்னு இப்பிடித்தாம் ஆரம்பிச்சிருக்காம்.

            "நாம்ம ரொம்ப நொந்துப் போயிருக்கேம் வக்கீல் சார்! நம்மளச் சுத்தி யாருமே சரியில்ல. நம்மையும் செய்யுவையும் பிரிக்கப் பாக்குறாங்க. எல்லாம் அவுங்கவுங்க குடும்பத்தோட ஒத்துமையா இருந்துக்கிட்டு நம்மள மட்டும் குடும்பம் இல்லாமப் பிரிச்சி வுடப் பாக்குறாங்க சார்! ஒஞ்ஞளுக்கு இதோட வேதனெ தெரியாது சார்! யாருமே நாம்ம பொண்டாட்டியோட சேந்துப் போவணுங்றதெப் பத்திப் பேச மாட்டேங்றாங்க. எஞ்ஞ யம்மா ஒரு ஆளுதாம் கெடந்து அடிச்சிக்கிட்டு இருக்குது. அதெயும் சமயத்துல நாமளோ, யப்பாவோ சேந்து அடிச்சிப்புடுறேம் சார்! அதுக்குப் பெறவு அதுவும் அதெப் பத்தி பேசுறதில்ல. ஒரு வாரம் வரைக்கும் எதுவும் சொல்லாம சோறு தண்ணி இல்லாம கெடக்கும். செரித்தாம் பாவம்ன்னு நெனைச்சிப் பேசுனா சேந்து வாழ்றதெப் பத்திப் பேசும் பாருங்க. ஒடனே ஒரு செவுட்டு இழுப்புத்தாம். ஒடனே அடங்கிடும். நாம்ம ஏம் இப்பிடிப் பண்‍றேம்ன்னு தெரியில. ஆன்னா அப்பிடித்தாம் நடக்குது சார்! இதெ எதுக்குச் சொல்றேம்ன்னா நாம்ம சொல்றதுல நீஞ்ங நம்பிக்கெ யில்லாம இருக்கலாம். ஒஞ்ஞளோட பேசுறதெ நாம ரிகார்ட் பண்ணுறதா நீஞ்ஞ நெனைக்கலாம். அதுக்காகத்தாம் உண்மெயெப் போட்டு ஒடைக்கிறேம். நம்ம மேல ஒஞ்ஞளுக்கு நம்பிக்கெ வாரணும் சார்! அதுக்காகச் சொல்றேம்!"ன்னிருக்காம் பாலாமணி.

            "சொல்லுங்க மிஸ்டர் பாலாமணி! ஒங்கள நம்புறேம். நிஜமாவே நீங்க சேந்து வாழணும்ன்னுத்தாம் ஆசைப்படுறீங்களா? அப்பிடி ஆசைப்படுற நீங்க ஏம் பீஸ் கோர்ட்டுக்கு ஒரு அழைப்புக்குக் கூட வாரல?"ன்னாருக்காரு வக்கீலும் வுடாம தன்னோட பாணியில ஞாயத்தெ வைக்குறாப்புல.

            "டாக்கடர்ரா இருக்குற நாம்ம ஏம் அடிபணிஞ்சிப் போவணுங்றாங்க சார் சுத்தி இருக்குறவங்க. நம்மட பொண்டாட்டியோட காசிய வெச்சி, பொண்டாட்டியோட குடும்பத்துல இருக்குற காசிய கரைச்சா தானா அவ்வே வழிக்கு வருவான்னும், அவாளவே குடும்பம் நடத்த வருவான்னும் சொல்றாங்க சார்! நாம்ம என்ன பண்ண முடியும்?"ன்னு பச்சதாபத்த காட்ட வைக்குறாப்புல பேசியிருக்காம் பாலாமணி.

            "யாரு அப்பிடிச் சொல்றா?"ன்னிருக்காரு வக்கீலும் பாலாமணி மனசுல உள்ளதெ என்னான்னு கண்டுபிடிக்கணும்ங்ற நோக்குல.

            "யாருன்னு சொல்றது சார்! சொன்னா மனவருந்தந்தாம் வரும். எஞ்ஞ யப்பங்காரருக்குக் கூட பேத்தியோட சேத்து வாழ வைக்கணுங்ற நெனைப்புத்தாம். மனசுக்குள்ள வீராப்பா வறட்டுக் கெளரவந்தானே தவுர வேறொண்ணுமில்ல. மித்த யாருக்கும் எஞ்ஞ யப்பா யம்மாவ வுட்டுப்புடுங்க, அவுங்க ரண்டு பேத்தத் தவுர வேற யாருக்கும் அப்பிடி ஒரு நெனைப்பு கெடையாது சார்! நமக்கு ரண்டு தங்காச்சியோட வாழ்க்கையும் முக்கியம் சார்! அவுங்க ரண்டு பேரும் வாழாவெட்டியா இருந்துடக் கூடாது பாருங்க. இதுல்லாம் சில குடும்ப விசயங்க. சொன்னா சட்டுன்னு புரியாது!"ன்னு ஞாயத்தெ வெச்சிருக்காம் பாலாமணி.

            "ஒங்க தங்கச்சிக வாழவெட்டியா வந்துடக் கூடாதுங்றதுக்காக நீங்க ஒங்க பொண்டாட்டியா வாழவெட்டியா மாத்த நெனைக்குறது எந்த விதத்துல நியாயம்ன்னு நெனைக்குறீங்க?"ன்னு வக்கீலும் பாலாமணியப் பொரட்டிப் போடுறாப்புல கேட்டிருக்கிறாரு.

            "நீஞ்ஞ சொல்றது புரியுது சார்! நம்மளோட மொத தங்காச்சியோட வாழ்க்கெயெப் பத்தி சொல்றதுக்கில்ல. அவளெ ஒருத்தம் வெச்சிக் குடும்பத்தெ நடத்துறான்னா அவனெ தியாகிங்ற எடத்துல வெச்சித்தாம் பாக்க வேண்டி இருக்கு. ஒண்ணுமே இல்லாதப்ப, சாப்பாட்டுக்கே வழியில்லாதப்ப, குடும்பத்துல ஒரு டிக்கெட் தொலைஞ்சா தேவலாம்ன்னு நெனைச்சப்போ எந் மொத தங்காச்சி சுந்தரிய வந்துக் கட்டிட்டுப் போனவேம் எஞ்ஞ முருகு மாமவோட மூத்த மவ்வேம் சித்துவீரென். கட்டிட்டுப் போனது மட்டுமில்ல எந் தங்காச்சியோட கேரக்டர் சரியில்லன்னு தெரிஞ்ச பெறவும் கூடி குடித்தனம் நடத்துறவேம். அதால அவ்வேம் ஒரு முக்கியமான ஆளு சார்! அவ்வேம் பேச்ச மீறாம இருக்குறதலத்தாம் எந் தங்காச்சியோட வாழ்க்கெயெ இருக்கு. இந்த வயசுக்கு மேல எந் தங்காச்சி வாழாவெட்டியா வந்து நின்னா சமாளிக்க முடியாது சார்! இன்னொரு கலியாணமும் பண்ணி வைக்க முடியாது. அவ்வே பெத்த பொண்ணே வயசுக்கு வந்து நிக்குறா சார்!"ன்னு பாலாமணி சொல்றப்பவே நெசமாலுமே அவ்வேம் கொரலு ஒடைஞ்சிப் போயிருக்கு. அப்பிடியே தழுதழுத்திருக்காம் பாலாமணி.

            "கடவுள் இருக்கார் பாலாமணி. அப்பிடில்லாம் நடக்காது. ஒரு லாயர்கிட்டெ உண்மையெ ஒளிக்காம சொல்றதுலத்தாம் இருக்கு பிரச்சனைக்கான தீர்வ அடையுறதுங்றது. நம்மள ஒங்களோட கோ பிரதர்ரா நெனைச்சி நீங்க மனசுல உள்ள அத்தனையையும் சொல்லுங்க. நாம்ம ஒங்க ஆப்போசிட் லாயர்ன்னாலும் கண்டிப்பா ஒங்களோட வெல்விஷர்ல ஒருத்தர்ன்னு நெனைச்சுக்கோங்க! சொல்லுங்க மிஸ்டர் பாலாமணி!"ன்னிருக்கார் திருநீலகண்டன் வக்கீலும் மேக்கொண்டு பாலாமணி என்னத்தெத்தாம் சொல்லப் போறான்னு.

            "அந்த நம்பிக்கையிலத்தாம் பேசிட்டு இருக்கேம் சார்! ரண்டாவது தங்காச்சியக் கட்டிக் கொடுத்தது மூணாவது மாமன் மவ்வேனுக்குத்தாம் சார். அவுங்க வகையில மூணாவது மாமாவான லாலு மாமா வகையில சில நெருக்கடிங்க இருக்கு சார். ஓர் ஆம்பள அந்த அளவுக்கு எறங்கியெல்லாம் போயிப் பஞ்சாயத்தப் பண்ணி அழைச்சிட்டு வார்றக் கூடாதுன்னு நிக்குறாங்க. பொம்பளெ அவளுக்கே அம்மாம் திமிருன்னா ஆம்பளெ அதெ வுட ஒரு நூலாச்சும் கூட இருக்கணும்ன்னு பேசியே உசுப்பி வுடுறாங்க. நாம்ம ரொம்ப நாளா ஒஞ்ஞகிட்டெ பேசாம இருந்ததுக்கும், ஒரு மொறை நீஞ்ஞ பேசுனப்ப வரம்பத் தாண்டி பேசுனதுக்கும் அத்து ஒரு காரணம். ரண்டாவது தங்காச்சிக்கும் நாம்ம செய்யு கூட சேர்ந்து வாழ்றதுல எந்த விருப்பமும் இல்லங்க சார்! மொத தங்காச்சி அதுக்கு மேல. தூக்குல கயித்த எடுத்துட்டுப் போனவ என்னிக்காச்சும் மறுக்கா இதெ வேலையத்தாம் செய்வாங்றா. இத்தோட வுட்டா கோர்ட் கேஸாயி அப்பிடியே முடிஞ்சிப் போயிடும்ங்றா. அதெ மீறி அழைச்சிட்டு வந்தா அவ்வே செத்து நம்மள கொலை கேஸ்ல சிக்க வெச்சிடுவான்னு பீதியக் கெளப்புறா! நம்ம நெல எப்பிடி இருக்கும்ன்னு நெனைச்சுப் பாருங்க சார்?"ன்னிருக்காம் பாலாமணி உடைஞ்சு வுழுந்திடுறாப்புல.

            "பாலாமணி! ஒங்க குடும்ப விசயம் அந்த அளவுக்குல்லாம் வெளியில தெரியக் கூடாதுங்றது ஒரு விசயம். ஒங்க குடும்ப விசயத்துல அடுத்தவங்களோட முடிவுகள களத்துல எறக்கக் கூடாதுங்றது ரெண்டாவது விசயம். ரண்டு விசயத்துலயும் நீங்க நல்லா கொட்டெ விட்டிருக்கீங்க. வெளியிலத்தாம் ஆம்பளையா வீரமா இருக்கணும். வூட்டுக்குள்ள அப்பிடியே படக்குன்னு பொண்டாட்டியோட கால்ல வுழுந்துடணும். யாருக்கு என்னத்தெ தெரியப் போவுது சொல்லுங்க. அவுங்கத்தாம் நம்ம லைப்புக்கு எல்லாமே. அதுல ஒண்ணும் தப்பே கெடையாது! எல்லா பயலும் குடும்பத்துல இப்பிடித்தாம். வெளியில சொல்லிக்க மாட்டாம். பெரிசா பந்தா பண்ணிப்பாம்! இப்பிடித்தாம் இன்னிக்குக் குடும்பங்க ஓடிட்டு இருக்குது!"ன்னிருக்காரு வக்கீலு பாலமணிக்கு ஒரு வழியக் காட்டறாப்புல.

            "புரியுது சார்! ஒவ்வொரு நாளும் நம்மளோட குடித்தனத்தப் பத்தி போன்ன பண்ணிக் கேட்டு, நாம்ம எப்பிடி இருக்கணும்ன்னு ஒரு கிளாஸ்ஸே எடுக்குறாளுவோ எந் தங்காச்சிக ரண்டு பேரும். நாம்ம எதாச்சும் ஒளறித் தொலைச்சிட்டா அதெ அப்பிடியே மாமா பொண்ணு ஈஸ்வரி, குயிலி, லாலு மாமான்னு போட்டு வுட்டு வெடைச்சி எடுத்துப்புடுறாளுங்க. அதுல கொழம்பிப் போயி எதாச்சும் பண்ணிப் புடறதுதாம் பெரச்சனையா இருக்கு. பட் யிப்ப நாம்ம கொஞ்சம் கொஞ்சமா அதெயெல்லாம் ஒணர்ந்துகிட்டு வர்றேம்! நீஞ்ஞ சொல்றது டூ ஹன்ரட் பெர்சன்ட் கரக்ட்தாம்!"ன்னிருக்காம் பாலாமணி வக்கீலு சொல்றதெ ஆமோதிக்குறாப்புல.

            "வெல் பாலாமணி! ஒங்ககிட்டெ ஒண்ணு கேட்பேம். தப்பா நெனைச்சிக்கக் கூடாது. ஒங்கள ரண்டு பேத்தையும் சேர்த்து வைக்குறதுல நமக்கு எந்தப் பெரச்சனையும் இல்ல. இப்போ பேசப் போற இந்த ஒரு விசயந்தாம் பெரச்சனைன்னு வெச்சிக்குங்ளேம். இதெ ஒங்களோட மனைவி ஒடனே நம்மகிட்டெ சொல்லிடல. வக்கீல்கிட்ட எந்த உண்மையையும் மறைக்கக் கூடாதுன்னு அழுத்தம் கொடுத்துதாம் கேட்டு வாங்குனேம்ங்றதையும் நீங்க ஞாபவத்துல வெச்சிக்கிடணும். விசயம் என்னான்னா நீங்க பிசிக்கலா, மெண்டலா ஒரு ஆணுக்குண்டான தன்மைகளோட இல்லங்றாப்புல என்னோட கிளையண்ட் அதாவது ஒங்களோட ஒய்ப் சொல்றாங்க! நாம்ம ஒங்க பெர்சனல்ல ஒவரா குறுக்கிடலன்னு நெனைச்சா சொல்லுங்க. நாம்ம கட்டாயப்படுத்தல. ஆன்னா இது குறித்து நீங்க சொல்றதெ வெச்சித்தாம் நாம்ம ஒரு முடிவுக்கே வர்ற முடியும் சேத்து வைக்கலாமா? வேண்டாமாங்றதெ?"ன்னிருக்காரு வக்கீல் திருநீலகண்டன் விசயத்தைப் பொட்டுன்னு போட்டு ஒடைக்கிறாப்புல.

            ஒரு ரண்டு நிமிஷத்துக்கு மேல வக்கீலும் பாலாமணியும் பேசிகிட்டு இருந்த பேச்சு சட்டுன்னு அமைதியில ஒறைஞ்சுப் போயிக் கெடந்திருக்கு. இதெ கேட்டதும் பாலாமணி அதுந்துதாம் போயிருக்காம். பெறவு பாலாமணி சன்னமான கொரல்ல பேச ஆரம்பிச்சிருக்காம்.

            "நீஞ்ஞ சொல்றதெப் பாத்தா ஒஞ்ஞளுக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சுன்னு நெனைக்கிறேம். செய்யு இதெ சொல்லிருக்க மாட்டான்னுத்தாம் நெனைச்சிருந்தேம். சொல்லிருக்கிறா. ஸோ ஒஞ்ஞளுக்கு எல்லாம் ஓரளவுக்கு தெரியும். முழுக்க நனைஞ்ச பெறவு முக்காடு போடுற மாதிரித்தாம் இனுமே நாம்ம பேசுறதுங்றது. உண்மெய நடந்ததெ ஒடைச்சுப் பேச வேண்டிய நெலையில நாம்ம இருக்கேம். ஆக்சுவலா அந்தப் பிரச்சனை நைன்த், டென்த் படிக்கிறப்பவே ஆரம்பிச்சிடுச் சார். அப்பவே அம்மாவோடதெ, தங்காச்சிகளோடதெ உடுப்புகள எடுத்துப் போட்டுருக்கிறதுன்னு அதாச்சிம் யாருக்கும் தெரியாம போட்டுக்கிடுறதுன்னு ஆரம்பிச்சிடுச்சு. பட் என்னோட பீலிங்ஸ்ஸ கன்ட்ரோல் பண்ண முடிஞ்சது சார். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ போறப்ப அதுக்கேத்த பிரண்ட்ஸ்ஸே கெடைச்சாங்க. டாக்கடருக்குத்தாம் வெறி கொண்டு நாம்ம படிக்கிறதுக்குக் காரணமே அப்பிடி ஆயிட்டா இந்தப் பெரச்சனைய ரொம்ப சுலுவா நாமளே டீல் பண்ணிடலாங்றதுதாம். அன்பார்ச்சுனேட்டா நமக்கு எம்பிபியெஸ் கெடைக்கல. செல்ப் பினான்ஸ் காலேஜ்ல கெடைச்சாலும் படிக்க வைக்குற சூழல்ல குடும்பமும் இல்ல. ஆயுர்வேதாத்தாம் கெடைச்சிது. அதுக்கே நாமளே பட்டினிக் கெடந்து, நாமளே படிக்கிறப்பவே ஒழைச்சிச் சம்பாதிச்சித்தாம் படிச்சேம். இந்த வேல அதுக்குப் பெறவு கெடைச்ச கவர்மெண்ட் ஜாப்ன்னு நாம்ம டியூவல் லைப் புல் செக்யூரோட இருக்குறதுக்கு நமக்கு எல்லா வசதியும் கெடைச்சிது. அதுக்கேத்தாப்புல வேலையும் மெட்ராஸ்ல கெடைச்சிது. நமக்கெத்த மாதிரி அதுக்குன்னெ பிரண்ட்ஸ் அமைஞ்ச பெற்பாடு என்னோட லைப் வேற மாதிரி டியூன் ஆவ ஆரம்பிச்சிது. ரொம்ப நாளு வரைக்கும் ரண்டாவது தங்காச்சியோட கலியாணத்தச் சொல்லியே மொறையான திருமண வாழ்க்கையத் தவித்துக்கிட்டுத்தாம் வந்தேம்!"ன்னு சொல்லி அதுக்கு மேல சொல்ல முடியாம தழுதழுத்து நிறுத்திருக்காம் பாலாமணி.

            "சொல்லுங்க பாலாமணி! ஒங்கள நம்மாள புரிஞ்சிக்க முடியுது!"ன்னாருக்காரு வக்கீலு பாலாமணிய மேலும் பேச வுடுறாப்புல.

            "கிராமத்துப் பொண்ணா, கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ள பொண்ணா, அதுவும் சொந்தக்கார பொண்ணா பாத்தா ஒருவேள பிரச்சனை வெளியில தெரிஞ்சாலும் சமாளிச்சிப்புடலாம்ன்னுத்தாம் செய்யுவக் கலியாணம் பண்ணது. அவளும் எவ்வளவோ பொறுத்துக்கிட்டா. நம்மளோட விசயம் ஓரளவுக்கு எந் தங்காச்சிக்கும் சரித்தாம், எஞ்ஞ லாலு மாமாவுக்கும் தெரியும். அவுங்களுக்கு ஒரு பயம் சார். நாம்ம எங்க ஆபரேஷன் பண்ணி லேடியாவே ஆயிடுவோம்ன்னு. அதுக்குன்னே ஆம்பளெடா, நீயி ஆம்பளெடான்னு சொல்லிச் சொல்லி நம்மள எப்பவும் முறுக்கேத்தி வுடுறாப்புல சூழ்நெல ஆயிடுச்சு. அவுங்க நம்மள இப்பவும் உசுப்பி வுடுறதுக்கும் காரணம் அதுதாம் சார். நாம்ம அப்பிடியே ரண்டுங்கெட்டான தவிக்குறாப்புல ஆயிடுச்சு. மனசளவுல உள்ளார ஒரு பொண்ணைப் போலவும், என்னெ சுத்தி உள்ளவங்களுக்காக என்னோட சமூக கெளரவத்துக்காகவும் ஒரு ஆம்பளப் போவும் வாழ்றாப்புல ஆயிடுச்சு. இப்போ அவளெ செய்யுவப் பிரிஞ்சி இருக்குறப்போ அவ்வே மேல ஒரு சாப்ட் கார்னர் வருது சார்! தப்புப் பண்ணிட்டதா மனசுக்குள்ள அப்பப்பா ஒரு குத்த உணர்ச்சியும் உண்டாவுது சார்!"ன்னிருக்காம் பாலாமணி ரொம்ப வருத்தப்பட்டு நொந்து போயிருக்குறாப்புல.

            "ஓ.கே. வெல். நடந்தது ஒரு துயரச் சம்பவம். டார்க் சைட் ஆப் தி லைப். அது கிடக்கட்டும். ஒங்க பிரசண்ட் மைண்ட் செட் என்னா? அதெ கரெக்டா சொல்லுங்க? அதாவது ஒங்க ஒய்ப்கிட்டெ ஹஸ்பண்டா நடந்துக்கிறது, அப்புறம் தாம்பத்தியம், குழந்தை பிறக்குறதுன்னு... ஏன்னா அதெப் பத்திச் சொன்னீங்கன்னத்தாம் ஹானெஸ்ட்டா இதுல என்ன பண்ண முடியுங்றதே நம்மாள திங்க் பண்ண முடியும்!"ன்னிருக்காரு வக்கீலு ஒரு முடிவுக்கு வர்றாப்புல.

            "தெரபி எடுத்துக்கிட்டு இருக்கேம் சார்! அது ஒருபக்கம் போயிக்கிட்டு இருக்கு. நிச்சயமா ஹண்டர்ட பெர்சன்ட் கியூர் ஆவாட்டாலும் நைன்டி பர்சென்டுக்கு மேல கியூர் ஆயிடுவேம்ங்ற நம்பிக்கெ இருக்கு சார். நீஞ்ஞ இவ்ளோ டீப்பா கேக்குறதால நாமளும் இன்னும் எறங்கியும் சொல்றேம் சார்! நாஞ்ஞ சேர்ந்து வாழ்ந்தாலும் எஞ்ஞளுக்குள்ள கொழந்தெ பொறக்குறதுலயும் எந்தப் பெரச்சன்ன இருக்காதுன்னுத்தாம் நெனைக்கிறேம். அப்பிடியே இருந்தாலும் அதெ சரி பண்ணிக்கிறதுக்கான மெடிஷன் எல்லாம் நமக்குத் தெரியும் சார்! நானே ஒரு டாக்கடருங்றதால ஐயாம் ஸ்யூர். டெபனெட்ட நம்மள நீஞ்ஞ நம்பலாம்!"ன்னிருக்காம் பாலாமணி ரொம்ப நம்பிக்கெ கொடுக்குறாப்புல.

            "நீங்க இதையெல்லாம் அவுங்ககிட்டெ மனசு விட்டுப் பேசியிருக்கலாம். அதாவது ஒங்களோட மாமனாரு வூட்ட சொல்றேம். ஒரு மாப்புள்ளைங்ற வகையில உங்கள விட்டுக் கொடுக்குற ஆளுங்க கெடையாது அவுங்க. அந்த வெதத்துல ஒரு நல்ல எடந்தாம் கடவுளோட புண்ணியாத்தால ஒங்களுக்கு அமைஞ்சிருக்கு. ஒங்க மைத்துனர் எல்லாத்தையும் புரிஞ்சிக்கிற ஒரு நல்ல ஆளு. நீங்க அவர்கிட்டயாவது இதெயெல்லாம் ஷேர் பண்ணியிருந்திருக்கலாம்!"ன்னிருக்காரு வக்கீலு பாலாமணிய கொஞ்சம் ஆழம் பாக்குறாப்புல.

            "பயம் சார்! தப்பா நெனைச்சிப்புடுவாங்களோ, அசிங்கமா நெனைச்சிப்புடுவாங்களோ பயம் சார்! சுத்தி இருந்த எந்த தங்காச்சிக, மாமா வரைக்கும் பயமுறுத்தியும் வுட்டாங்க சார்! நமக்கே பல நேரங்கள்ல கொழப்பமா இருக்கு சார்! நாம்ம நம்ம மனசெ கேட்டு நடக்குறமா, பெறத்தியாரு சொல்றதெ கேட்டு நடக்குறமான்னு? வெரி டெலிகேட் அன்ட் காம்பிளிகேட் போஷிஷன் சார் நம்ம நெலமெ!"ன்னிருக்காம் பாலாமணி ரொம்ப பரிதாபத்த உருவாக்குறாப்புல.

            "இப்போ சேர்ந்து வாழ வர்றீங்றீங்க ஓ.கே! நாளைக்கே நீங்க சொல்ற அவுங்கப் பேச்சக் கேட்டு மாற மாட்டீங்கன்னு நெனைக்குறதுல எதாவது தப்பு இருக்கா? ஏற்கனவே நீங்க எங்க தரப்புல எல்லாத்துக்கும் செமத்தியா சொல்லொண்ணு செயல் ஒண்ணுன்னு நல்லா அடி கொடுத்திருக்கீங்க. மறுபடியும் இதுல சிக்கல்ன்னா ஒங்ககிட்டெ நாம்ம வாங்குன அடியெ அப்பிடியே அவுங்க மேல செலுத்துறாப்புல ஆயிடும். அதாவது நாமளும் சேந்து அவுங்கள அடிச்சாப்புல ஆயிடும்! அதெ நல்லா யோசனப் பண்ணிட்டு நாளைக்கு, நாளை மறுநாள், ஏம் ஒரு வாரம் கூட கால அவகாசம் எடுத்துக்கிட்டு தீர்க்கமா உறுதியா சேர்ந்துத்தாம் வாழப் போறேம்ங்றதெ சொல்லுங்க!"ன்னிருக்காரு வக்கீல் வாங்கப் போற மாட்டோட பல்ல பிடிச்சிப் பாக்குறாப்புல.

            "நோ சார்! தீர்க்கமா முடிவெ பண்ணிட்டுத்தாம் ஒஞ்ஞளுக்கு அடிச்சிருக்கேம். எவ்வளவோ காலம் யோசிச்சிட்டெம். இந்த முடிவுல மாத்தம் இல்ல. இப்போ எடுத்த முடிவெ இனி தள்ளியும் போடுறதுக்கில்ல. அந்த முடிவுலத்தாம் ஒடனே ஒஞ்ஞளுக்கு அடிச்சிப் பேசுறேம். சத்தியமா நான் பேசுறதல்லாம் உண்‍மெ சார். உண்மெயத் தவுர வேற எதுவும் இல்ல. யிப்போ இஞ்ஞ எங் கையில பகவத் கீதைய வெச்சிட்டுத்தாம் இதெ சொல்றேம்!"ன்னிருக்காம் பாலாமணி வக்கீலோட மனசெ கரைச்சிடுறாப்புல.

            "ஓக்கே பாலாமணி! நீங்க சொல்றதெ நம்பலாம்ன்னு நெனைக்கிறேம். சேர்ந்து வாழலாம்ன்னு நெனைக்குற ரண்டு பேர்ர பிரிச்சி வைக்க மனசில்ல. அப்படி நாமளும் பிரிச்சி வெச்சதும் இல்ல. பிரிஞ்சிப் போற இருந்த சோடிகளயே சேத்திருக்கேம். இருந்தாலும் நீங்க பேசுனதப் பத்தி என்னோட கிளையண்ட்டுகிட்டயும் அவுங்களோட பேமிலிகிட்டயும் கலந்துக்கிட்டு தகவல் சொல்றேம். ஏன்னா புரபஷனல்லா அதாங் எத்திக்ஸ். நாளைக்கு இதெ நேரத்துக்கு போன அடிக்கிறேம்!"ன்னிருக்காரு வக்கீலு பாலாமணிக்கு ஒரு முடிவெ சொல்றாப்புல.

            "வேணாம் சார்! நீஞ்ஞ அடிக்க வாணாம். நாமளே இதே நேரத்துக்கு நாளைக்கு அடிக்கிறேம். நல்ல சேதியாச் சொல்லுங்க சார்! ஒஞ்ஞளுத்தாம் நாம்ம தெய்வத்தப் போல நம்புறேம். ப்ளீஸ் சார் எனக்காக இன்னிக்கு கடவுள்கிட்டெ வேண்டிக்கிடுங்க சார் சேர்ந்து வாழணும்ன்னு. அதுக்குப் பெறவு பேசுங்க சார் அவுங்ககிட்டெ. பேசிட்டு ஒரு நல்ல சேதியா சொன்னா ஒஞ்ஞளுக்குக் கோவிலக் கட்டிக் கும்பிடுவேம் சார்! இதெ வெளையாட்டுக்கோ வேடிக்கைக்கோ சொல்லல. நெசமவே கோவிலக் கட்டுவேம். இத்து ஒஞ்ஞ மேல ஏம் மேல சத்தியம்!"ன்னிருக்காம் பாலாமணி வக்கீலோட மனசு தெகைச்சிப் போறாப்புல. அதோட வக்கீல் போன்ல பேசுறத நிப்பாட்டிட்டு அரை மணி நேரத்துக்கு மேல யோசிச்சிருக்காரு. அந்த யோசனைக்குப் பிற்பாடுதாம், அவரு அவ்வேங்கிட்டெ பேசுனதெ அப்பிடியே போன் போட்டு அன்னிக்கு ராத்திரியே மேற்கண்ட பேசுனது பேசுனபடி சுப்பு வாத்தியார்கிட்டெ சொன்னாரு. ரொம்ப நேரம் அதெ பத்தி போன்ல வக்கீல் சுப்பு வாத்தியாரு பேசிட்டு இருந்தாரு. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல இருக்கும் அவுங்க ரண்டு பேரும் போன்லயே பேசிக்கிட்டு இருந்தாங்க.

            "இதெ முடிவு நாளைக்கும் இருந்தா சந்தோஷந்தாம். ஆன்னா இருக்காது. மாறிப் போயிருக்கும். ஏன்னா நாஞ்ஞ பல வெதங்கள்ல அவ்வேங்கிட்டெ அடிபட்டிருக்கேம், அனுபவப்பட்டிருக்கேம், நொந்து நொம்பலப்பட்டிருக்கேம். ஒஞ்ஞளுக்கு இத்துப் புதுசுங்றதாலயும், மொத மொதல்ங்றதாலயும் அப்பிடி இருக்கும். அவ்வேம் அப்பிடித்தாம் பேசுவாம் பேச்சாலயே மயக்குறாப்புல. பேசுற பேச்சுலயே ஒஞ்ஞள வெறி பிடிச்சி காரியத்தெ சாதிக்க வெச்சிடறாப்புல. ஆகையால அவ்வேம் அந்த அளவுக்கு எறங்கி வந்து உண்மெயச் சொல்றப்போ நாஞ்ஞளும் எறங்கி வர்றத் தயாருதாம். ஒரு செலதெ மாத்திக்கிடலாம். நாமளும் அதெ நம்புறேம். ஆன்னா சைக்கோதனத்தெ மாத்திக்கிட முடியுமான்னு தெரியல. அதாலத்தாம் சொல்றேம், இதெ நாளைக்கி நீஞ்ஞப் பேசிட்டுச் சொல்லுங்க! அப்பப் பாக்கலாம் நீஞ்ஞ சொல்றதெ ஏத்துக்கிறதா வாணாமாங்றதெ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீல்கிட்டெ போன்ல.

            "நாம கூட கொறைச்சல்லா சொல்றதா நெனைக்கப்படாது. போன்ல என்னா ஒங்க மாப்புள பேசுனாரோ, அதுக்கு நாம்ம என்ன பேசுனோமோ அதெ அப்பிடியே அட்சரம் பெசவு இல்லாம சொல்லிருக்கேம். ஒருத்தன் பணிஞ்சி தப்ப உணர்ந்துப் பேசுறப்போ ஒரு வாய்ப்பக் கொடுக்கணுங்றது நம்மளோட தனிப்பட்ட முடிவு. ஒரு மாரலும் அதுதாம். அந்த அடிப்படையிலத்தாம் நீங்க விருப்பப்பட்டா சேர்ந்து கூட வைக்கலாம்ன்னு ஒரு வார்த்தைய விட்டிருக்கேம். நல்லா கவனிக்கணும், நீங்க விருப்பப்பட்டா மட்டுந்தாம். இல்லன்னா இல்லத்தாம்! கம்பெல் பண்றதுக்கு நமக்கு எந்த ரைட்ஸூம் கெடையாது!"ன்னாரு வக்கீலு தன்னோட நெலைய தெளிவா விளக்குறாப்புல சுப்பு வாத்தியாருகிட்டெ.

            "நாம்ம தப்புச் சொல்லல. இதெயே நாளைக்கும் போன் பண்ணுறப்பச் சொல்லுங்கன்னு சொல்றேம்ங்றேம். வேற நாமளும் ஒஞ்ஞ ஒண்ணும் தப்பா நெனைக்கல!"ன்னு சொல்லி சுப்பு வாத்தியாரு போன வெச்சாரு.

            அவுங்க இவ்ளோ நேரம் பேசுனதப் பாத்து வழக்கு ஒரு வழியா முடியப் போவுது போலருக்கு, அதுக்குத்தாம் இவ்ளோ பேசிட்டு இருக்காங்ளோன்னு வூட்டுல இருந்த எல்லாரும் நெனைச்சாங்க. 

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...