6 Dec 2020

வன்கொடுமை வழக்கு

வன்கொடுமை வழக்கு

செய்யு - 647

            ஆர்குடி குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில வன்கொடுமை வழக்கை குற்றவியல் பிரிவு 19 (6) (1) இன் படி தங்க குடியிருப்பு வசதி செய்து தரச் சொல்லியும், பிரிவு 20 (20) இன் படி கண்ணியத்தைக் காத்தும், கொடுமைகளுக்கான இழப்பீட்டுத்  தொகை வழங்க உத்திரவிட சொல்லியும், பிரிவு 20 (5) (1) இன் படி இட உதவியைக் குறிப்பிட்ட காலகெடுவுக்குள்ள வழஙக் உத்திரவிடச் சொல்லியும், பிரிவு 22 இன் படி சித்திரவதைகளுக்கு எதிர்மனுதாரர் தனித்தோ, கூட்டாகவோ உரிய இழப்பீடு தொகைய வழங்கச் சொல்லியும் தாக்கல் பண்ணாரு வக்கீல் திருநீலகண்டன்.

            இந்த வழக்குல எதிர்மனுதாரர்களாக பாலாமணி, ராசாமணி தாத்தா, சரசு ஆத்தா, சுந்தரி, சித்துவீரன், பிந்துன்னு ஆறு பேரையும் சேர்த்திருந்தாரு வக்கீல். கலியாணத்தப்போ பண்ணுன நகெ நட்டு, காரு வாங்க கொடுத்த காசு, கலியாணத்த பண்ண கொடுத்த காசு, செஞ்ச சீர்வரிசை சாமானுங்க எல்லாத்தையும் ஜீவனாம்ச வழக்குல தாக்கல் பண்ணியிருந்ததெப் போல பட்டியல் போட்டிருந்தாரு. அத்தோட செய்யுவுக்கு நடந்த கொடுமைக, பாலாமணி பண்ணுன சித்திரவதைக, கலியாணத்துக்குப் பெறவு அவ்வேம் நடந்துகிட்ட மொறைன்னு அத்தனையையும் வழக்குல சேர்த்து, அதோட எதிர்மனுதாரர்களாக இருக்குற ஆறு பேரும் பண்ணுன அத்தனெ வெதமான மொறைப்பாடுகளையும் சேர்த்திருந்தாரு. கலியாணத்துக்காக நகை வாங்குன அத்தனை ரசீதுக, பர்னிச்சர் கடைகள்ல வாங்குன ரசீதுக, பாங்கி அக்கெளண்ட்ல பணம் எடுத்ததுக்கான பாஸ்புத்தகம்ன்னு அத்தனையையும் ஆவணப் பட்டியலா சேர்த்துக் கொடுத்திருந்தாரு.

            "ஜீவனாம்ச வழக்குங்றது பாலாமணிய மட்டுந்தாம் கோர்ட்டுக்கு வரவழைச்சது. வன்கொடுமை வழக்குங்றது அவனோட மொத்த குடும்பத்தையும் கோர்ட்டுல கொண்டாந்து நிப்பாட்டிடும். அதுக்குப் பயப்படாதவன் இதுக்குப் பயந்துதாம் ஆவணும். அவன் நிச்சயம் பேச்சு வார்த்தைக்கு வருவான். நாம்ம நம்மளோட ஆபீஸ்லயே வெச்சு சிட்டிங்க போட்டு முடிச்சித் தந்திடுறேம்!"ன்னாரு இந்த வழக்கப் பாலாமணி மேல போட்டு முடிச்சதும் திருநீலகண்டன் வக்கீல்.

            போட்டுருக்குற வழக்குலயே ரொம்ப முக்கியமான வழக்கு இதுதான்னு சொன்ன திருநீலகண்டன் வக்கீல் வழக்கைத் தாக்கல் பண்ணுறப்போ வந்ததுதாம். அதுக்குப் பெறவு வரல. இந்த வழக்குக்காக அவரு வரணும்ன்னா திருவாரூர்லேந்து கெளம்பி ஆர்குடிக்கு வர வேண்டியதா இருந்துச்சு. அப்பிடி வந்தா அங்க திருவாரூர்ல நடக்குற அத்தனெ கேஸ்களையும் அப்பிடியே போட்டுப்புட்டு வர்றாப்புல இருந்துச்சு. "வக்கீல் வாராட்டியும் பரவாயில்ல, மனுதாரர் ஆஜரான போதும். தொடந்தாப்புல பொண்ண அழைச்சிட்டு வந்து ஆஜராயிட்டெ இருங்க! கேஸ் டிரையலுக்கு வர்றப்பே சரியா வந்து ஆஜராயிடுறேம்! ஆன்னா வழக்குல வக்கீலோ, மனுதாரரோ யாராச்சும் ஒருத்தரு கட்டாயம் ஆஜராவணும். நாம்ம தொடர்ந்தாப்புல வர்ற முடியாத காரணத்தால வழக்குப் போட்ட மனுதாரரும் வர்றாம போனா கேஸ் குளோசாயிடும். அந்த நெலமெ வர்றாமப் பாத்துக்கிட்டுத் தொடர்ந்து ஆஜராவுங்க. ஆஜராயிட்டு நடக்குறதெ போன் பண்ணிச் சொல்லுங்க. அதுக்குத் தகுந்தாப்புல என்ன பண்ணணுமே ‍அதெ நாம்ம பண்ணிக்கிறேம்!"ன்னாரு திருநீலகண்டன் வக்கீல் சுப்பு வாத்தியார்கிட்டெ.

            அதெ நம்பி சுப்பு வாத்தியாரும், செய்யுவும் கோர்ட்டுல கொடுக்குற ஒவ்வொரு தேதிக்கும் ஆஜராயிட்டே இருந்தாங்க. நெலமை மின்ன மாதிரி இல்லாம ஒரு வாரம் ஆர்குடி போனா, இன்னொரு வாரம் திருவாரூரு கோர்ட்டுன்னு மாறி மாறிப் போவ வேண்டிய நெலமை உண்டாயிடுச்சு.

            வன்கொடுமை வழக்குல பாலாமணி ஆஜராகணும்ன்னு சம்மன் போனதுக்குப் பெறவு பாலாமணியும், ராசாமணி தாத்தாவும் கோர்ட்டுல ஆஜராவ வந்தாம்ங்க. அதுக்கு வந்தவேம் இன்னோவா கார்ர எடுத்துட்டு வந்தவேம் கோர்ட்டுக்கு உள்ளாரயும் வெளியேயும் உள்ளார போறதுமா வெளியில வர்றதுமா அலைஞ்சிக்கிட்டு இருந்தாம். ஆர்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தாலுக்கா ஆபீஸ் ரோட்டுல இருந்துச்சு. பக்கத்துலயே தாலுக்கா ஆபீஸ், டவுன் போலீஸ் ஸ்டேஷன், பீடியோ ஆபீஸ் எல்லாம் இருந்துச்சு. அதால எந்நேரமும் கூட்டம் திமுதிமுன்னு இருந்துக்கிட்டெ இருக்கும். அந்த கூட்டத்துக்கு மத்தியில இவ்வேம் எல்லாத்துக்கும் எடைஞ்சலா கார்ல உள்ளார வாரதும் போறதுமா இருந்தாம். எதுக்காக அவ்வேம் அப்பிடி அலைஞ்சிக்கிட்டு இருக்காங்றது புரியல. அன்னிக்குக் கோர்ட்ல ஆஜரான செய்யுவ மத்தியானம் வரைக்கும் இருக்கச் சொல்லிட்டாங்க.

            மத்தியானத்துக்கு மேல பாலாமணி ஒரு பெட்டிஷன தாக்கல் பண்ணாம். அதுல அவ்வேம் அல்லது ராசாமணி தாத்தா அவுங்க ரண்டு பேத்துல யாராவது ஒருத்தரு மட்டும் இதுல ஆஜரான போதும்ன்னும், மித்தவங்க எல்லாம் வழக்கோட சம்பந்தம் இல்லாதவங்கன்னும், அவுங்கள வழக்குல சேர்க்கணும்ங்ற ஒரே நோக்கத்தோட வழக்குக்கு உள்ளார கொண்டு வந்திருக்கிறதாவும், மேலும் அவுங்க எல்லாம் ஒடம்பு முடியாம இருக்குறதாலயும், அன்னாடங் காய்ச்சிகளா இருக்குறதாலயும், தெனசரி சம்பாதிச்சிச் சாப்புட வேண்டிய நெலையில இருக்குறதாலயும் கோர்ட்டுக்கு அலைஞ்சி சிரமப்பட முடியாதுன்னு அந்தப் பெட்டிஷன தாக்கல் பண்ணுனாம். மத்தியானத்துக்கு பெறவு அவ்வேம் தாக்கல் பண்ணுன பெட்டிஷனோட ஒரு காப்பிய கோர்ட்லேந்து செய்யுகிட்டெ கொடுத்து கெளம்புலாம்ன்னுட்டாங்க. அதெ வாங்கிட்டு செய்யு திருநீலகண்டன் வக்கீலுக்குப் போன அடிச்சா. அதெ படிக்கச் சொல்லிக் கேட்டவரு, அவ்வேம் அப்பிடித்தாம் பெட்டிஷன் தாக்கல் பண்ணுவான்னும் அடுத்த மொறை வர்றப்போ அவுங்க எல்லாம் ஆஜர் ஆவணும்ன்னு பதிலுக்கு மனுவே தாக்கல் பண்ணுவேம்ன்னாரு.

            சுப்பு வாத்தியாரு டிவியெஸ் பிப்டியத் தள்ளிக்கிட்டு கோர்ட்டுக்கு வெளியில வந்தாரு. செய்யுவும் வண்டிக்குப் பின்னாடியே வந்தா. செரித்தாம் எல்லாம் முடிஞ்சிட்டு வூட்டுக்குக் கௌம்புவோம்ன்னு செய்யுவும் சுப்பு வாத்தியாரும் பாத்தா ஒடனடியா கௌம்ப முடியாத அளவுக்கு ஒரு பேச்சுப் பிரளயமே அங்க நடக்க ஆரம்பிச்சது. அங்க வெளியில இன்னோவா கார்ரப் போட்டுக்கிட்டு பாலாமணி, ராசாமணி தாத்தா, பழைய பரமசிவம் எல்லாம் நின்னாங்க. பாலாமணியோட மொகத்தப் பாக்குறப்போ சந்தோஷம் செத்த சவக்கலை தாண்டவமாடுனுச்சு. அவ்வேம் மொகத்துல கோவம் கொப்புளிச்சிக்கிட்டு இருந்துச்சு. இந்த வழக்கத் தாக்கல் பண்ணது அவனுக்கு மனசளவுல பெரிய பாதிப்ப உண்டு பண்ணியிருந்தது அவ்வேம் நிக்குற நெலையப் பாக்குறப்பவே தெரிஞ்சிது. அவனோட மனசுல இப்பிடி ஒரு வழக்க செய்யு போடுவான்னு நெனைச்சிருக்க மாட்டாங்றது அவ்வேம் அடுத்ததா பேசுன பேச்சுலேந்து தெரிஞ்சிது.

            "ஒங் குடும்பத்தெ நடந்த எந்தப் பிரச்சனையிலயும் இழுக்காதப்போ, ஏங் எம் குடும்பத்தெ கோர்ட்டு வரைக்கும் இழுக்குறே?"ன்னாம் பாலாமணி வெளியில வந்த செய்யுவப் பாத்ததும்.

            சுப்பு வாத்தியாரு செய்யுவப் பாத்து, "அதெயல்லாம் காதுல வாங்கிக்கிடாம கண்டுக்கிடாம நீயிப் பாட்டுக்கு வா!"ன்னாரு. செய்யு கேக்கல. "யில்லப்பா நாம்ம பதிலச் சொல்லிட்டுத்தாம் வருவேம். இப்பிடிப் பதிலச் சொல்லாம போயிட்டு இருக்குறதுதாம் இவுங்க துளுத்துக்கிட்டுப் போறதுக்குக் காரணம்!"ன்னு சொல்லிட்டு பாலாமணியப் பாத்துப் பேச ஆரம்பிச்சா. "நீயி ஏன் எங் குடும்பத்தெ இழுத்து கண்டிபடியெல்லாம் எழுதி அப்பன வுட்டு லட்டர்ரப் போட்டு வுடுறே? ஒம்மட ஒட்டுமொத்த குடும்பத்தோட வந்து நின்னுத்தாம் பஞ்சாயத்துல அவமானம் பண்ணுனே. அப்படிப் பண்றப்போ ஒட்டுமொத்த குடும்பத்தையும் கோர்ட்டுல இழுத்து வுடுறுதுல ன்னா தப்பு?"ன்னு.

            "நீயி பண்ண காரியத்தால மின்னாடிலேந்து யம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல. இப்போ நீயி போட்ட இந்த வழக்கால இன்னும் பயந்துப் போயி ஒடம்புக்குச் சுத்தமா முடியாம கெடக்கு! யம்மாவுக்கு ஒடம்புக்கு முடியாத நேரத்துல இந்த வேலையப் பண்ணிருக்கக் கூடாது. எஞ்ஞ யம்மாவுக்கு மட்டும் எதாச்சும் ஆச்சன்னா ஒன்னயச் சும்மா வுட்டுப்புட்டு தேட மாட்டேம்! கசாப்புக் கடையில வெச்சு ஆட்ட பொட்டத் தள்ளுறாப்புல கொன்னே புடுவேம்!"ன்னாம் பாலாமணி.

            "ந்நல்லா இருக்குறவங்கள ஒடம்பு சரியில்லாம இருக்குறதா சொல்லி அவுங்கள சாவடிச்சிடாதே! இதுவரைக்கும் சொன்ன பொய்யில்லாம் போதும். ஒருத்தரோட ஒடம்பு விசயத்துல பொய்யிச் சொன்னா அத்து அப்பிடியே நெசமாயிடும் பாத்துக்கோ. யாத்தாவுக்கு ஒடம்புக்கு முடியாம போறதுக்கு நாமெல்லாம் காரணமில்ல. காரணமே நீந்தாம். குடும்பத்துல கொழப்பத்த உண்டு பண்ணி நம்மளுக்குப் பயங் காட்டுனே. நீயி காட்டுன பயத்துக்குல்லாம் பயந்துகிட்டு ஒங் கூடயே இருப்பேம்ன்னு நெனைச்சே. ஒங் கணக்குத் தப்புக் கணக்காயி யிப்போ கோர்ட்டு வரைக்கும் வந்து நிக்குது. இஞ்ஞயும் வந்து நிக்க அவ்சியம் யில்லாம நமக்குப் பண்ணி வுட்ட நகெ நட்டு, பணங்காசிய மட்டும் கொடுத்துடுன்னுத்தாம் நாம்ம கேட்டேம்! நீயி தாரல. அதெ வாங்குறதுக்கு வேற வழி தெரியல! இதுல ஆளெ வேற வுட்டு கண்டபடிக்கு மெரட்டுறே! அதாங் இனுமெ மெரட்டுப் பாப்பம்ன்னு சொல்லத்தாம் இந்தக் கேஸ்ஸப் போட்டிருக்கு! இதுல கொல்வேன்னு வேற வுடாம இன்னும் மெரட்டுறே! ஏற்கனவேத்தாம் மனசளவுல கொன்னுபுட்டீயே நம்மள! யின்னும் ஏம் கொல்லணும் கொல்லணும்ன்னு நிக்குறே கொலக்கார பாவியோளா!"ன்னா செய்யு மனசுல உள்ளதெயெல்லாம் கொட்டித் தீக்குறாப்புல.

            "நாம்ம கொடுக்க மாட்டேன்னா சொன்னேம். நீயி பேராச பிடிச்சி அலைஞ்சா அதுக்குல்லாம் யாரு கொடுக்க முடியும்?"ன்னாம் பாலாமணி தன்னெ ஞாயம் பண்ணிக்கிறாப்புல.

            "எத்து பேராசெ? நாஞ்ஞ கொடுத்த காசிப் பணத்தெ கேக்குறுது பேராசையா? அப்போ ஒனக்கு இருக்குறது என்னா நல்ல ஆசையா? ஒமக்குத்தாம் பேராசெ! அடுத்தவங்க வூட்டுக் காசிக்கு ஆசெப்படுற பேராசெ! அரக்கப் பயலுவோ எரக்கத்தப் பத்தி பேசுவானுவோளாம்! காட்டேரி வந்து கண்டமேனிக்கு தெய்வப்பாடம் சொல்லுமாம்! அந்தக் கதையால்லா இருக்கு!"ன்னா செய்யு ஞாயத்துக்குப் பதிலு ஞாயம் வைக்குறாப்புல.

            "சொல்றதெ சொல்லிட்டேம்! நமக்கென்ன? ஒங் காசித்தாம் கையில இருக்கு. அதுலேந்து எடுத்துத்தாம் சிலவெ பண்ணுவேம். இனுமே காசின்னு வந்து கேட்டா அதுலேந்து கழிச்சிக்கிட்டு மிச்சத்தத்தாம் தருவேம். நீஞ்ஞப் பாட்டுக்குக் கலியாணத்தப் பண்ணுவீயே! பிடிக்கலன்னா பிரிஞ்சிப் போறேன்னு சொல்லி ஜீவனாம்சத்த வாங்கிக்கிட்டு நல்லா நொட்டிக்கிட்டுப் போவீயளோ? ஆம்பளைங்க ன்னா இளிச்சவாயன்ங்கள்ன்னு நெனைச்சிக்கிட்டீயா? ஒரு பைசா தர்ற மாட்டேம். ஒண்ணும் தர்றாம அடிச்சாத்தாம் நீயெல்லாம் சரிபட்டு வருவே. ஒரு பொட்டக் கழுதெ கோர்ட்டு வரைக்கும் வந்து வெக்கங் கெட்டு நிக்குறே? கேட்டா அப்பிடித்தாம் பண்ணுவேன்ன வேற சொல்றே? நீயெல்லாம் பொம்பளையே யில்லடி! அவ்சாரி நாயே!"ன்னாம் பாலாமணி பேசுற ஞாயத்தையெல்லாம் அடிச்சு நொறுக்குறாப்புல.

            "ஆமாம்டா! நாம்ம பொம்பளயில்ல. நீந்தாம் பொம்பள. அதெ சொன்னா அசிங்கப்பட்டுப் போயிடுவே. என்னவோ ஒங் காசியக் கொடுக்கறாப்புலல்ல பெலாக்கணும் பாடுறே. எங் காசிய மூஞ்சியில வுட்டுறிடா. அதெ எடுத்துக்கிட்டு நாம்ம பாட்டுக்குப் போயிட்டே இருக்கேம். எமக்கு ஒம்மட ஜீவனாம்சமும் வாணாம், ஒரு மண்ணும் வாணாம்! முடியுமாடா ஒம்மாலே? ஒரு ஆம்பளன்னா அதெ செஞ்சிக் காட்டுடா! ஒன்னய அதுக்கப்புறம் ஆம்பளன்னு ஒத்துக்கிடுறேம்!"ன்னா செய்யு வெடிச்சுச் செதறுறாப்புல.

            "ஜீவனாம்சம் வேணான்னா பெறவு எதுக்குடி கோர்ட்டுல ஜீவனாம்ச வழக்கும், அத்தோட வுடாம வன்கொடுமெ வழக்கும் போட்டிருக்கே?"ன்னாம் பாலாமணி திரும்பவும் செய்யு பேசுனதெ வெச்சு ஞாயத்தைப் பிடிக்குறாப்புல.

            "அப்பத்தாம் அதுக்குப் பயந்துகிட்டு எங்கிட்டெ வாங்குன நகெ நட்டையும், பணங்காசியையும் கொடுப்பேனுத்தாம்டா போட்டிருக்கு. அப்பிடிச் சொல்லித்தாம் வக்கீலு இதெயெல்லாம் போட்டாரு!"ன்னா செய்யு தம் பக்கத்து ஞாயத்தைக் காட்டுறாப்புல.

            இப்பிடியே பேசிகிட்டு நின்னா நெலமெ மோசமாயி கோர்ட்டு வாசல்ல அடிச்சிக்கிட்டு நிக்குற மாதிரி ஆயிடும்ன்னு "இதெயெல்லாம் ஏம் பேசிக்கிட்டு. நீ வா! கெளம்புவோம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு செய்யுவ சாமர்த்தியமா கௌப்புறாப்புல.

            "நீஞ்ஞ சித்தெ சும்மா இருங்கப்பா! இவனுங்களுக்குப் பேசுனாத்தாம் சரிபட்டு வரும்!"ன்னா செய்யு பாலாமணி மேல உள்ள ஆத்திரத்தையெல்லாம் அப்பங்காரரு மேல கொட்டுறாப்புல.

            "இந்த அளவுக்குக் கேவலமா எறங்கி வந்து வழக்கப் போடுவீங்கன்னு நெனைக்கல. இதெல்லாம் ஒழுங்கான நாகரிகமான கூச்ச நாச்சம் உள்ள குடும்பம் பண்டுற வேல யில்ல. இத்தனெ நாளு வரைக்கும் ஒஞ்ஞ குடும்பத்து மேல ஒரு அபிப்ராயம் இருந்துச்சு. இன்னிலேந்து அந்த அபிப்ராயமும் போயிடுச்சு. இந்த வழக்குக்கான காயிதத்தெ வாங்குற வரைக்கும் கூட பாலாமணிக்கு ஒண்ணு சேந்து வாழுவோம், யில்ல கொடுக்க வேண்டியதெ கொடுத்துட்டுப் பிரிஞ்சிப் போயிடுவோம்ங்ற நெனைப்புத்தாம் இருந்துச்சு. என்னிக்கு இந்த வழக்குக்கான காயிதம் வந்துச்சோ அன்னிலேந்து அந்த எண்ணம் போனதுதாம் மிச்சம். நீஞ்ஞ நெனைச்சிக்கிட்டு இருக்கீயே இத்தெ என்னவோ பெரிசா? இத்தெல்லாம் ச்சும்மா. வேலைக்காவாது.இதுக்குத் தீர்ப்பாயி வர்றதுக்குள்ள பொண்ணு கெழவியாப் போயிடும்!"ன்னாரு பழைய பரமசிவம் வன்கொடுமெ வழக்கெ மட்டம் தட்டி சுப்பு வாத்தியாரோட குடும்பத்தையும் மட்டம் தட்டுறாப்புல.

            "இத்தெல்லாம் ச்சும்மான்னா பெறவு எதுக்குப் பேசிட்டு இருக்கீயே! நீஞ்ஞ போவ வேண்டிய வழி அஞ்ஞ இருக்கு. நாஞ்ஞ போவ வேண்டிய வழி இஞ்ஞ இந்தப் பக்கம் இருக்கு. ஆளாளுக்கு அவுங்கவுங்க வழியப் பாத்துட்டுப் போவ வேண்டித்தானே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு இப்போ எப்பிடியோ எல்லாத்தையும் அந்தாண்ட இந்தாண்ட சண்டெ வர்றாம கௌப்பி வுட்டா போதும்ன்னு.

            "அதுக்கு மின்னாடி நீஞ்ஞ பண்டுறதோட பின்விளைவு எப்பிடி இருக்கும்ங்றதெ சொல்லிட்டுப் போவணும்லா. அதுக்குத்தாம் நேரம் ஆனாலும் பரவாயில்ல, நமக்கு எதிரியானாலும் பரவாயில்லன்னு நின்னுட்டுச் சொல்லிட்டுப் போறேம்!"ன்னாரு பழைய பரமசிவம் ஒரு நலம் விரும்பிய போல நைச்சியமா.

            "மாப்புள்ள! நீயெல்லாம் இப்பத்தாம் கோர்ட்டையப் பாக்குறே. நாஞ்ஞல்லாம் கோர்ட்டுலயே குடித்தனம் நடத்துன ஆளுங்க. எஞ்ஞளுக்கு இதெல்லாம் ச்சும்மா பொழுதுபோக்கு. ஒனக்கெல்லாம் இத்து ஒத்து வாராதுங்றதெ சொல்றதுக்குத்தாம் மெனக்கெட்டு நின்னுப் பேசிக்கிட்டு இருக்கிறது. காலம் கடந்த பெற்பாடாவது புத்தி வாரட்டுமேன்னு பாத்தா… முடி கொட்டுனப் பெறவு சீப்ப வாங்கி என்ன ஆவப் போவுது சொல்லு?"ன்னுச்சு ராசாமணி தாத்தா தம் பங்குக்கு மெரட்டி ஆவுறதப் பாப்பேம்ன்னு.

            "கோர்ட்ல கேஸ்ஸப் போட்டதுக்குப் பெறவு நமக்குள்ள ன்னா பேச்சு? அந்தாண்ட போங்க! கோர்ட்டுல வக்கீலு பாத்துப்பாங்க. பேசிப்பாங்க. நீஞ்ஞ என்னா பேசணும்ன்னு நெனைக்குதீயளோ அதெ வக்கீல்கிட்டெ சொல்லிக் கோர்ட்ல பேசச் சொல்லுங்க. அவுங்க அஞ்ஞ வந்து அதெப் பேசுவாங்க. அநாவசியமா நாம்ம பேசி இனுமே என்னாவப் போவுது. இதெல்லாம் கதைக்காவுமா? அஞ்ஞ கோர்ட்டுல பேசுனாச்சும் சோலிக்காவும். இஞ்ஞ பேசுற எதுவும் உப்புப் பொறாது. எதா இருந்தாலும் கோர்ட்லப் பாத்துக்கிடலாம். கௌம்புங்க. நீஞ்ஞ‍ கெளம்புங்க. நாஞ்ஞளும் கெளம்புறோம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பேச்செ ஒரு முடிவுக்குக் கொண்டு வர்றாப்புல.

            "அந்த அளவுக்கு வந்துப்புட்டா! ரண்டு தடவெ கோர்ட்டுக்கு வந்ததுக்கே இம்மாம் தெகிரியம்ன்னா? காலம் பூரா கோர்ட்டுலயே கெடக்கற நமக்கு எம்மாம் தெகிரியம் இருக்கும்? இந்தாரு மாப்புளே! ஒந் நல்லதுக்குன்னு நெனைச்சி சொன்னா கெட்டதுக்குன்னு எடுத்துக்கிறே. அதாங் பெட்டிஷன்ன தாக்கல் பண்ணியாச்சே. இனுமே யாரு கோர்ட்டுப் பக்கம் வர்றப் போறா. அதுக்குத்தாம் வர்றப்பயே பேசுறது. பேசியாச்சு. இனுமே நீயும் ஒம் பொண்ணும் அலைஞ்சிக்கிட்டுக் கெடங்க. கோர்ட்டுல ஒண்ணும் நடக்கப் போறதில்ல. நாஞ்ஞ வூட்டுல உக்காந்துகிட்டு இந்தப் பரமசிவத்த மட்டும் அனுப்பிவுட்டுட்டு ஹாயா குசாலா இருந்துப்பேம்! என்ன பண்ட முடியும் இந்த வழக்காலன்னு நெனைக்குறே? ஒண்ணும் பண்ட முடியாது!"ன்னுச்சு ராசாமணி தாத்தா கடெசியா மனசுல அல்லு கௌப்பி வுடுறாப்புல.

            "கோர்ட்ட ஏமாத்தலாம். ஒஞ்ஞள நீஞ்ஞளயே ஏமாத்திக்கிட முடியாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சாசுவதமா பேசி முடிக்குறாப்புல.

            "நாஞ்ஞ எல்லாரையும் ஏமாத்துவோம் மாப்ளே! ஒன்னால ஆனதெப் பாரு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா சுப்பு வாத்தியாரு சொன்னதெ நக்கல் அடிக்குறாப்புல.

            யிப்போ செய்யுவுக்கு என்ன தோணுனுச்சோ, அவளாவே சொன்னா, "இவுங்ககிட்டெ என்னத்தெ பேச்சு? கெளம்புவம்ப்பா! இதெல்லாம் மனுஷ சென்மத்துல சேத்தியில்ல! பேசுறது தெண்டம்!"ன்னு.

            "இதெத்தாம் நாம்ம மொதல்ல சொன்னேம். நீயி பிற்பாடு சொல்றே!"ன்னு சொல்லிட்டு வண்டிய ஸ்டாண்டு போட்டு நிப்பாட்டி ஸ்டார்ட் பண்ணாரு சுப்பு வாத்தியாரு.

            "இதெயே நெனைச்சிக்கிட்டு யாரு மேலயாவது கொண்டுப் போயி வண்டிய வுட்டுப்புடாம, ஒழுங்கா வூடுப் போயிச் சேரு மாப்ளே!"ன்னுச்சு ராசாமணி தாத்தா வுடாம கிண்டலடிக்குறாப்புல. சுப்பு வாத்தியாரு காதுல அது விழுந்தாலும் வுழுவாத மாதிரி வண்டியக் கெளப்பிட்டு வேகமா வந்துட்டாரு. மனசுக்குள்ள மட்டும், "எம்மாம் கொழுப்பு அந்தப் பயலுவோளுக்கு?"ன்னு சொல்லிக்கிட்டாரு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...