சமரசம் உலாவும் இடம்!
செய்யு - 646
சமரச நீதிமன்றம் கோர்ட் இருந்த அதெ வளாகத்துல
மேற்கால இருந்துச்சு. மேல தகர சீட்டுப் போட்ட பெரிய கட்டடமா இருந்துச்சு. அங்கேயிருந்து
ரொம்பப் பக்கத்துலத்தாம் கோர்ட்டோட கேண்டீன் வடவண்டப் பக்கம் இருந்துச்சு. கோர்ட்டப்
போல இல்லாம, வெளியில நெறையப் பேரு உக்கார்றாப்புல ஏகப்பட்ட நாற்காலிங்க சமரச நீதிமன்றத்துல
இருந்துச்சு. அந்த நாற்காலியில உக்கார்ற அளவுக்கு ஆட்கள்தாம் ரொம்ப இல்ல. நூறு பேரு
உக்கார்ற மண்டபத்துல இருவது பேரு உக்காந்தா எப்பிடி இருக்குமோ அப்பிடித்தாம் இருந்துச்சு.
அங்கேயிருந்து உள்ளாரப் பாத்தா நெறைய அறைக இருந்துச்சு. வெளியிலேந்து பாக்கறப்போ தகரசீட்டுப்
போட்ட கட்டடமா தெரிஞ்சாலும் உள்ளார பக்கா மாடிக் கட்டடத்தெ போல ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ்ஸ
வெச்சிப் பூசியிருந்தாங்க. உள்ளார இருந்த அத்தனெ அறைகளும் ஏசி அறைகளா இருந்துச்சு.
அந்த அறையிலத்தாம் சமரச நீதிபதி உக்காந்து வர்றவங்கோளட பெரச்சனைகளக் கேட்டு சமாதானம்
பண்ணி வைக்கற வேலையில இருந்தாரு.
சமரச நீதிமன்ற வெசாரணைங்றது கிட்டதட்ட
சமூக நீதி மையத்தோட வெசாரணையைப் போலத்தாம் இருந்துச்சு. ஒரு வித்தியாசம் என்னான்னா
சமூக நீதி மையத்துல வெசாரிச்சவங்க ஒரு பெண்மணின்னா, சமரச நீதிமன்றத்துல வெசாரிச்சவங்க
ஓர் ஆண்ங்றதுதாம். செய்யுவ உக்கார வெச்சி அவளோட கதைய முழுசா கேட்டாரு சமரச நீதிபதி.
கதெயக் கேக்க கேக்க அவரோட கண்ணே கலங்கிப் போச்சுது. இந்தக் கேஸ்ஸ இங்க வெச்சே முடிச்சிக்
கொடுத்துடறதா அவரு ரொம்ப உறுதியாச் சொன்னாரு. செய்யுவ வெசாரிச்சதோட சுப்பு வாத்தியாரு,
விகடுன்னு போயிருந்த எல்லாத்தையும் தனித்தனியா கூப்புட்டு வெச்சுப் பேசுனாரு.
முடிவா மூணு பேத்தையும் அறைக்குள்ள கூப்புட்டு
வெச்சி அவரு சொன்னது இதுதாம், "சேர்ந்து வாழ்றதோ, பிரிஞ்சி வாழ்றதோ அதெப் பத்தி
நீயி எந்த முடிவெயும் பண்ண வாணாம். அதெ கோர்ட்டுக்கிட்டெ வுட்டுப்புடு. அதாச்சி அந்த
விசயத்துல போட்டு மனசெ போட்டுக் கொழப்பிக்கிட வாணாம். இந்தக் கோர்ட்டு ஒமக்கு அதுல
நல்ல வெதத்துல நல்ல வழியக் காம்பிச்சிடும். அதுக்கு நாம்ம கேரண்டி. ஒம் வருங்கால விசயத்தப்
பத்தி நீந்தாம் தெளிவா இருந்துக்கணும். அத்து என்னான்னா நீயி எம்பில் படிக்கிறதா சொல்றே.
அதெ நல்ல வெதமாப் படிச்சி ஒனக்குன்னு ஒரு எதிர்காலத்த உண்டாக்கிக்கோ. எதிர்காலங்றது
ஒன்னோட வேலையத்தாம் சொல்றேம். ஒரு வேல ஒனக்கிருந்தா செகண்ட் மேரேஜ்னாலும் கலியாணத்தெ
கட்டிக்கிறதுக்கு நான் நீயின்னு ஆம்பளைங்கப் போட்டியப் போட்டுப்புட்டு வருவாம்! அத்து
ஒண்ணுத்தாம் அழுத்தம் திருந்தமா இந்த நேரத்துல நாம்ம சொல்லிக்கிறேம்!"ன்னாரு
அந்த நீதிபதி ரொம்ப கரிசனமா.
"இப்பிடி வெசாரணை, அலைச்சல்ன்னு வந்துட்டுப்
போறதால நம்மால படிப்புலத்தாம் சரியா கவனத்தெ செலுத்த முடியல. இஞ்ஞ ஒரு நாளு வந்துட்டுப்
போன மனசு திரும்ப பழையபடிக்குச் சரியாவ நாலஞ்சு நாளு ஆயிடுதுங்கய்யா. அத்துச் சரியாயி
படிக்க ஆரம்பிச்சா திரும்ப வெசாரணைன்னு அழைப்பு வந்துடுதுங்கய்யா. அதால நம்மாள இப்பயும்
புரோஜக்ட்ட தயாரு பண்ண முடியாம ரொம்பவே தடுமாறிட்டு இருக்கேம்ய்யா. இந்த வெசாரணை
மட்டும் இல்லன்னா நம்மாள படிப்புல நல்ல கவனத்தெ வைக்க முடியும்! ஆன்னா அதுக்கு இப்போ
வாய்பில்ல்ன்னுத்தாம் நெனைக்கிறேம்!"ன்னா செய்யு தன்னோட மனநெல இப்போ எப்பிடி இருக்குறங்றதெ
படம் பிடிச்சுச் சொல்றாப்புல.
"அதுக்காகத்தான் நாம்ம மொதல்ல சொன்னேம்.
இதெ கோர்ட்டுகிட்ட வுட்டுப்புடுன்னு. இதெ நீயி மனசுலயே ஏத்திக்கக் கூடாது. ஒண்ணு சொல்றேம்
கேட்டுக்கோ. அதெ கடைப்பிடிக்கிறதுங்றது சிரமந்தாம். இருந்தாலும் அதாங் வழி. இதெல்லாம்
ஒனக்கு நடக்குறதா தயவுபண்ணி நெனைச்சிக்காதே. இதெல்லாம் ஒனக்குத்தாம் நடக்குது. அதெ
இல்லன்னு சொல்ல முடியாது. ஆன்னா ஒனக்கு நடக்கறதா நெனைச்சிக்கிவே கூடாது. யாரோ ஒருத்தருக்கு
நடக்குறதாத்தாம் நெனைச்சிக்கணும். நாம்ம ரொம்ப ஈஸியா சொல்லிட்டாலும் அப்படி ஒரு மனசெ
வளத்துக்குறது ரொம்ப கஷ்டம். வேற வழியில்ல ஒனக்கு. அப்பிடித்தாம் இந்த விசயத்து நீ
நெனைச்சாவணும். அப்பிடி நெனைக்கப் பழகிக்கோ. இதெ ஜஸ்ட் பார் பன்ங்ற மாதிரி கடந்துப்
போயிகிட்டெ இருக்கணும். மனசுக்குக் கொண்டுட்டுப் போவவே கூடாது. இன்னும் வருஷங்கப்
போறப்போ கடந்து போன இதெ நெனைக்கிறப்போ அப்பிடித்தாம் நீயே நெனைப்பே. ரொம்ப காலம்
கடந்தப்போ மனசு அப்போ எப்பிடி நெனைக்குமோ அதெ இப்பயே நடந்துக்கிட்டு இருக்குற இந்தக்
காலகட்டத்துலயே மனசுக்குக் கொண்டு வந்து நெனைக்க கத்துகிடணும். படிச்ச புள்ளே இல்லியா.
ஒனக்கு பெரிசா சொல்ல வேண்டியதில்ல. புரிஞ்சிக்குவே. ஏம்ன்னா அப்பிடிக் கொண்டு வந்தாத்தாம்
கோர்ட்டு கேஸ்ஸ எதிர்கொள்ள முடியும். அதுக்குத்தாம் பொதுவாவே லேடீஸ் கேஸ்கள நாங்க
அந்த அளவுக்குப் போக விடாம இங்க வைக்க வெச்சு அளவுக்கு முடிக்க முடியுமோ அந்த அளவுக்குப்
பேசி முடிச்சி விட்டுடுவோம்! ஜென்ட்ஸ வுட லேடீஸ்க்கு மன உளைச்சல் எப்பவும் அதிகம்.
பட்டுன்னு இதெ முடிச்சிட்டு வெளியில வந்துடுறதுதாம் நல்லது!"ன்னாரு சமரச நீதிபதி
எதார்த்தம் என்னான்னு சொல்றாப்புல.
"நீஞ்ஞ சொல்றது சரித்தாங்கய்யா.
அதுப்படி இருக்குறதெ தவுர வேற வழியில்ல. அப்படி இருக்க முயற்சி பண்றேம்!"ன்னா
செய்யு அதெ கேட்டுக்கிட்டு.
"குட்! கீப் இட் அப்! ஒனக்கு பேமிலியே
புல் சப்போர்ட்டா இருக்கு. நெறைய பொண்ணுங்களுக்கு இத்துக் கெடைக்காது. அந்த வெதத்துலயும்
யூ ஆர் லக்கி. மேரேஜ் லைப்பப் பத்தி அன்லக்கின்னு நெனைக்க வேண்டாம். ஒண்ணு இந்த மேரேஜ்
லைப்பே பெட்டரா அமையலாம். இல்லன்னா இன்னொண்ணு இதெ வுட பெஸ்ட் லைப்புக்கத்தாம் இப்பிடி
ஆச்சுதுன்னு நெனைச்சுக்கோ. எல்லாம் மனசுதாம். அதெ சரியா எப்பிடிப் பிடிக்கணுமோ அப்பிடி
பிடிச்சி வெச்சுட்டா எதையும் சமாளிக்கலாம். தட்ஸ் பாசிட்டிவ் ஆட்டிட்யூட். தட்ஸ் ஆல்!"ன்னாரு
சமரச நீதிபதி மனசளவுக்கு ஒரு முடிவான வௌக்கத்தெ கொடுக்குறாப்புல. இப்பிடி ஒவ்வொரு
மொறை போனப்பயும் மனசெ வெச்சுக்கிற மொறையப் பத்திதாம் செய்யுகிட்டெ சமரச நீதிபதி
அதிகமாச் சொன்னாரு. எவ்வளவு நேரம் செய்யு மனசு வுட்டுப் பேசுனாலும் பொறுமையா கேட்டுக்கிட்டாரு.
கேட்டுக்கிட்டு ஒவ்வொரு விசயத்துலயும் அதெ எப்படி எடுத்துக்கணும், அதுல எப்பிடி நடந்துக்கணும்ங்ற
விசயத்தெ நுணுக்கமா எடுத்துச் சொன்னாரு. வூட்டுக்குப் போன பெற்பாடு மனசு சஞ்சலப்பட்டாலும்
தங் கூட போன் பண்ணிப் பேசுன்னு தன்னோட செல்போன் நம்பரு வரைக்கும் செய்யுகிட்டெ கொடுத்தாரு.
இப்படி ஒவ்வொரு மொறை வெசாரணைக்குப் போனப்பயும் ரொம்ப அனுசரணையா நடந்துக்கிட்டாரு
அந்த நீதிபதி.
அவரு பேசுறதப் பத்தி சொல்றப்போ,
"இந்த மாதிரி நல்ல விசயங்கள கேக்குறதுக்குத்தாம் இப்பிடி வர்றாப்புல இருக்குன்னு
நெனைச்சுக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரும் செய்யுகிட்டெ. எந்தப் பிரச்சனையப்
பத்தி அந்த நீதிபதிக்கிட்டெ பேசுறப்பயும் அவரு சட்டுன்னு மனசெ அதுக்கு எப்பிடி வெச்சுக்கணுங்றதெ
பத்தித்தாம் பட்டுன்னு சொல்லுவாரு. மனசெ சரியா வெச்சிக்கிட்டா எந்தப் பெரச்சனையையும்
எதிர்கொள்ள முடியும்ங்றது அவரோட பழக்கமொறையாவே இருந்துச்சு. அதுப்படித்தாம் அவரும்
எந்த வெசயத்தக் கேக்குறப்பயும் கோவமோ, பதற்றமோ படாம சிரிச்ச மொகத்தோட கேட்டு சிரிச்ச
மொகத்தோட பதிலச் சொன்னாரு. மொத்தத்துல அவரு சொல்றதெ அவரும் கடைபிடிச்சாரு. அதெப்
பத்தியும் பேச்சு வாக்குல ஒரு வார்த்தை சொன்னாரு, "நாம்ம ஒவ்வொண்ணுத்துக்கும்
தகுந்தாப்புல மனசெ ஆண்டனா மாதிரி திருப்பி வெச்சிக்கிறதாலத்தாம் நம்மாள ராத்திரி படுத்தா
பொக்குன்னு தூங்க முடியுது. இல்லன்னா இங்க கேக்குறப் பிரச்சனைக்கு மண்டெ சுக்கு நூறா
வெடிச்சிச் செதறிடும் பாத்துக்கோ! அதர் சைட்ல பாத்தா ஜட்ஜஸ்ஸோட லைப்ங்றது மைண்ட் டார்ச்சரான
ஒண்ணு. தூங்குனாலும் தூக்கத்துக்குள்ள வழக்குங்க ஓடிக்கிட்டெ இருக்கும். எல்லாத்தையும்
மறந்துட்டு தூங்குற தூக்கம் ஒரு ஜட்ஜ்க்கு வருஷத்துல ஒரு நாலு நாளு அமைஞ்சா பெரிய விசயம்!
பீஸ் கோர்ட்டுக்கு வந்ததுலேந்து இப்போ நம்ம நெல கொஞ்ச நாளா பரவாயில்ல. மித்த ஜட்ஜ்ங்க
நடுராத்திரியில நிம்மதியில்லாம கூட தூங்க முடியாது. ரிமாண்ட் பண்றோம்ன்னு போலீஸ் நடுராத்திரியிலயும்
வீடு வரைக்கும் வந்து நிற்கும்."ன்னு.
இப்படி பீஸ் கோர்ட்டுக்கு ஒவ்வொரு வெசாரணைன்னுப்
போயி அடுத்தக்கட்ட முன்னேத்தம்ன்னு வழக்களவுல எதுவும் இல்லன்னாலும் செய்யுவோட மனசளவுல
சில மாற்றங்க இருந்துச்சு.
அப்படி மூணு மொறை நடந்த வெசாரணைக்கும்
செய்யு போயிட்டு வந்தா. சுப்பு வாத்தியாரும், விகடுவும் கூடப் போனாங்க. எடையில ஒரு
சனிக்கெழம கைப்புள்ளயும் வந்தாரு. எடையில ஒரு வெசாரணைக்குத் திருநீலகண்டன் வக்கீலும்
வந்து சமரச நீதிபதியப் பாத்துப் பேசிட்டு கேஸ்ஸப் பத்திச் சொல்லிட்டுப் போனாரு. சிஜேயெம்
கோர்ட்டு நீதிபதியும் கூட ஒரு மொறை பீஸ் கோர்ட்டுக்கு ஒரு சனிக் கெழமையில வந்து எப்பிடியாச்சும்
வழக்க முடிச்சிடுமாறு தனிப்பட்ட மொறையில சமரச நீதிபதிக்கிட்ட சொன்னாரு. ஆக வழக்க
எப்படியாச்சும் முடிக்கணும்ங்றதுல எல்லாம் ஒரு முடிவுலத்தாம் இருந்தாங்க. ஆன்னா எப்படியாச்சும்
முடிக்கணும்ன்னா இந்த வெசாரணைக்கு வர்ற வேண்டிய ஆளு வந்தாத்தானே அதெ செய்ய முடியும்?
இந்த வெசாரணைக்கு முக்கியமா வர வேண்டிய ஆளு பாலாமணி. பாலாமணி மூணு வெசாரணைக்கும் வராமப்
போனதால இந்த வெசாரணைக்குச் சும்மா சும்மா போயித் தன்னோட கதெயையும், தன்னோட கோரிக்கையையும்
சொல்லிட்டுத் திரும்பிட்டு இருந்தா செய்யு.
ஒவ்வொரு வெசாரணைக்கும் பாலாமணி வாராட்டியும்
பழைய பரமசிவம் தவறாம வந்து ஆஜரப் போட்டுடுவாரு. வந்துதும் தன்னெ வக்கீலோட குமாஸ்தான்னு
பீஸ் கோர்ட்டுல இருந்தவங்ககிட்டெ சொல்லிக்கிட்டு அடுத்த வாய்தா தேதியக் கேட்டுக்கிட்டு
அப்பிடியே எல்லாரோட மனசையும் கலைச்சி வுட்டுக்கிட்டுப் போயிட்டு இருந்தாரு. அவரு
அடிக்கடி சொல்லிட்டு இருந்தாரு, "கோர்ட்டுல எத்தனெ கேஸூங்க இருக்குன்னு தெரியுமா?
அதுல எத்தனெ கேஸூ தீர்ப்பாயி முடிஞ்சிருக்கு தெரியுமா? எத்தனெ கேஸூ தீர்ப்பாகாம இழுத்துக்கிட்டு
இருக்குன்னு தெரியுமா? நடந்துகிட்டு இருக்குற கேஸூகள முடிக்கணும்ன்னாவே பத்து வருஷத்துக்கு
மேல ஆவும்! இதுல நெதம் நெதம் வேற கேஸூங்க வந்துகிட்டெ இருக்குதுங்க. அதெயெல்லாம் எப்ப
முடிக்கிறது? ஏதோ ஒரு சில கேஸூங்கத்தாம் சட்டுன்னு தீர்ப்பாவும். அதுக்கே மூணு வருஷம்,
நாலு வருஷம் ஆவும். ரண்டு வருஷம் கேஸூக்குன்னு அலைஞ்சாலே அலுத்துப் போயிடும். அலுத்துப்
போறது மட்டுமில்ல எதுக்குக் கேஸ்ஸப் போட்டேம்ன்னு ஒஞ்ஞளுக்கே மறந்துப் போயிடும்!
தேவையா இதெல்லாம்? கொடுக்குறதெ வாங்கிட்டுப் பேயாம போவீயளா? இப்பிடி பொட்டெ புள்ளயெ
வெச்சிக்கிட்டு கோர்ட்டுல நின்னுகிட்டு? இதெ எம் பொண்ணுன்னா அந்த எடத்துலயே வெட்டிக்
கொன்னுப் போட்டுருப்பேம்!"ன்னாரு பழைய பரமசிவம் ரண்டாவது மொறை வந்தப்போ சுப்பு
வாத்தியாரையும் விகடுவையும் பாத்து. மொத முறை பீஸ் கோர்ட்டுக்கு வந்தப்போ தெனாவெட்டுப்
பாத்துச் சிரிச்சிட்டுப் போனவரு இந்த ரண்டாவது மொறை அவரா நெருங்கி வந்து கிட்டத்தட்ட
நைச்சியமா பேசி மெரட்டுறாப்புல பேசுனாரு.
"மனுஷன மனுஷனப் பாத்தா ஏம் ஒஞ்ஞளுக்கு
வெட்டிப் போடுற நெனைப்பு வருது? மனுஷன மனுஷனாப் பாக்குறதுக்கு மனுஷனாலத்தாம் முடியும்.
மிருகங்கத்தாம் மனுஷன அப்பிடிப் பாக்கும் கொன்னுப் போடுறாப்புல. ஒரு காலத்துல அப்பிடி இருந்த மிருகங்க எல்லாம் இப்போ
செத்தழிஞ்சிப் போயிட்டுங்றதால மனுஷங்கள்ல நீஞ்ஞ அப்பிடி உருவாயி வந்திருக்கீயேங்கடா!
நீஞ்ஞல்லாம் மனுஷன அடிச்சிப் போடுற மிருகங்கங்டா! பெத்தப் பொண்ண வெட்டிப் போடுவானாம்ல!
அதுக்கு ஏம்டா பொண்ணப் பெத்தே?"ன்னு சொன்னாரு சுப்பு வாத்தியாரு ஆத்திரம் தாங்காம
பழைய பரமசிவத்தெ பாத்து.
விகடுவுக்கும் அந்தப் பேச்சோட சூடு தாங்காம
பழைய பரமசிவத்தப் பாத்து பேசுனாம், "யிப்பிடி பொண்ணுங்கள கொன்னுப் போட்டுட்டே
போங்க! அப்பத்தாம் ஒஞ்ஞள மாதிரி ஆம்பளைங்க பொறக்காம நாடு நல்லா இருக்கும். பொண்ணுங்க
வயித்துலதான பொறந்தீயே! ஒமக்கு இந்த உசுர வவுத்துல சொமந்து பொறக்குறப்போ பொண்ணுங்க
கொடுத்த வாச்சித்தாம் அந்தப் பொண்ணுங்களையெ வெட்டிப் போட்டுப்புடுவேன்னு சொல்லிக்கிட்டு
திரியறீயே? ஒஞ்ஞள பெத்த அன்னிக்கே என்னத்தெ பண்ணிருக்கணுமோ அதெ பண்ணிருந்தா இப்பிடிப்
பேசிட்டு நிக்க மாட்டீயே! பொண்ணுங்க பாவந்தாம். பொறக்குறப்பயும் சாவுலேந்து தப்பிப்
பொறக்க வேண்டியதா இருக்கு. பொறந்து வளந்து ஆளாயி ஒஞ்ஞள மாதிரி ஆளுங்ககிட்டெயிருந்து
தப்பிப் பொழைச்சு வாழ வேண்டியதா இருக்கு! அப்பிடி பொண்ணுங்கள கொன்னுப்புட்டு என்னத்தத்தாம்
வாழப் போறீயளோ? பெத்த வவுறு குளிர்றாப்புல எதாச்சும் பண்ணுங்க. இல்லன்னு ஒஞ்ஞ சாவு
கூட கேவலமாத்தாம் இருக்கும்!"ன்னு.
"தம்பி எள ரத்தம் பேசலாம். எத்தனெ
காலத்துக்கு எள ரத்தம் இருக்கும்? கூடிய சீக்கிரமே ரத்தம்லாம் சுண்டிப் போயிடும்பீ!
அப்பத்தாம் தெரியும் பணங்காசி முக்கியமா? பொண்ணு முக்கியமான்னு? ஒஞ்ஞள மாதிரி நெறையப்
பேத்தப் பாத்தாச்சும்பீ! இப்பிடித்தாம் ஆரம்பத்துல பொண்ணு பொண்ணுன்னு தாங்குவீயே?
எத்தனெ வருஷத்துக்கு? ஒரு வருஷமா? ரண்டு வருஷமா? டப்பு வேணும்பீ டப்பு! காசிருக்கிறவேம்
வக்கீல வெச்சிக் கோர்ட்டுக்கு அலைஞ்சிக்கிட்டுக் கெடக்கலாம். அவனுக்கு அத்துப் பொழுதுபோக்கு.
ஒஞ்ஞளுக்கு அப்பிடியா? ஒஞ்ஞளுக்கு இதெல்லாம் தேவையில்லாத வயித்துப்போக்கு. கோர்ட்டு,
ஆஸ்பத்திரின்னு வந்தா சிலவு யம்பீ! சிலவுன்னா சிலவு ஒரு நெலையில சோத்துக்கே சிங்கி
அடிக்கிறாப்புல ஆயிடும். வவுறு தகதகன்னு பசிச்சா பொண்ணாவது மண்ணாவது? இதெ வுட்டுப்புட்டுக்
கொடுக்குறதெ வாங்கிகிட்டுப் போயி பொழைப்ப பாப்பீயளா? ஒண்ணுத்தெ புரிஞ்சிக்கோங்க. மனுஷன்
போவக் கூடாத எடம்ன்னு ரண்டு இருக்கு. ஒண்ணு ஆஸ்பத்திரி. ரண்டு கோர்ட்டு. ஏன்னு கேட்டுக்குங்க.
ஆஸ்பத்திரின்னா சிலவும் ஆயி ஒடம்பும் கெட்டுப் போவும். கோர்ட்டுன்னா அப்பிடித்தாம்
சிலவும் ஆயி மனசும் கெட்டுப் போவும். அதாலத்தாம் சொல்லுவாங்க ஆமெ பூந்த வூடும் அமீனா
பூந்த வூடும் உருப்படாதுன்னு. நீஞ்ஞ பூர வுட்டுப்புட்டீயளே? நாம்ம எம்மாம் தல தலயா
அடிச்சிக்கிட்டெம். நாம்ம ஒஞ்ஞ நல்லதுக்குச் சொல்றேம். அனுபவப் பாடத்துல சொல்றேம்.
கெட்டதெ சொல்லல. ந்நல்லா இருக்குறதுக்காகச் சொல்றேம். ஏத்தோ ஒரு திருட்டுலயோ, கொள்ளையிலயோ,
ஆஸ்பத்திரிச் சிலவுலயோ பணத்தெ வுட்டுப்புட்டதா நெனைச்சிக்கிட்டு கொடுக்குறதெ வாங்கிட்டுப்
போயிக்கிட்டெ இருங்க. ஒஞ்ஞள மாதிரி நல்ல குடும்பத்துக்கு இத்தெல்லாம் ஒத்தே வாராது!
அம்புட்டுத்தேம் சொல்லுவேம்!"ன்னாரு பழைய பரமசிவம் பொடணியில போட்டுப் பொளக்குறாப்புல.
"ஒரு வெதத்துல நீஞ்ஞ சொல்றதெ நாம்ம
ஏத்துக்கிறேம்யா. எறங்கப் புடாதுதாம் இந்த வகையில. எறங்கியாச்சு. இனுமே யோசிக்கிறதுக்கு
எதுவுமில்ல. தலைக்கு மேல வெள்ளம் போறப்போ சாண் போன ன்னா? மொழம் போனா ன்னா? ஒஞ்ஞ
கணக்குக்கே வர்றேம். மொத தடவே திருடுனாலும் திருடந்தாம். ஆயிரம் திருடுனாலும் திருடன்தாம்.
அதெ போலத்தாம் மொத தடவெ பண்றப்பயும் கொலகாரந்தாம். லட்சம் தடவெ பண்ணுறப்பயும் கொலகாரந்தாம்.
பேர்ர மாத்தியாச் சொல்லப் போறாங்க. ஒரு தடவே கோர்ட்டுக்கு வந்துப்புட்டா பெறவு எத்தனெ
தடவெ வந்தாலும் அதுத்தாம். மொத தடவெ வர்றதுக்கு மின்னாடி யோசிக்கிறதுதாம். யோசிச்சுத்
தயங்குறதுதாம். அதெ கடந்த பெற்பாடு இனுமே யோசிக்க ன்னா இருக்கு? கோர்ட்டையும் பாத்தாச்சு.
வெசாரணையையும் பாத்தாச்சு. இன்னும் போயி கோர்ட்டு, குடும்பம் இதுக்குல்லாம் வாரக்
கூடாது போவக் கூடாதுன்னு பேசிட்டு இருக்குறதுல அர்த்தமில்லயா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு
பழைய பரமசிவத்தெ பதிலுக்குத் தொளைச்சு எடுக்குறாப்புல.
"பரவாயில்லயே! கோர்ட்டுக்கு வந்து
நல்லாவே பேசக் கத்துக்கிட்டீயே! தெகிரியம் வந்துடுச்சுப் போலருக்கே! நீஞ்ஞ இப்பத்தாம்
கோர்ட்டெயே பாக்குறீயே! அதால சுவாரசியமா இருக்கலாம். இருக்கும். அப்பிடித்தாம் இருக்கும்.
நாம்ம அப்பிடில்லா கோர்ட்டுல பொறக்காத ஒரு கொறைத்தானே தவுர, கோர்ட்டுலயே கெடந்து,
கோர்ட்டுக் காத்தையே சுவாசிச்சு, கோர்ட்டுல கெடைக்குற சோத்தையே சாப்புட்டு ஒடம்ப
வளத்து வளந்தவேம். எஞ் சாவு வரைக்கும் நமக்கும் கோர்ட்டுக்கும் ஒறவு அந்துப் போவப்
போறதில்ல. அந்த அனுபவத்துல சொல்றேம். ஒஞ்ஞ குடும்பத்துல ஒருத்தரா நெனைக்காட்டியும்
பெறத்தியாரா நெனைச்சாலும் சரித்தாம், ஒஞ்ஞளுக்கு இத்துச் சுத்தப்படாதுங்றதுதாம் நம்ம
கருத்து. ஏன்னா மேக்கொண்டு வெசாரணை எப்பிடிப் போவும்ங்றது, அதுவும் பொம்பளெ புள்ளயெ
வெச்சிருக்குற ஒஞ்ஞளுக்குச் சத்தியமா தெரியாது. நமக்குத் தெரியும். கோர்ட்டுல வக்கீலுங்க
எப்பிடி வெச்சுக் கேள்வியக் கேப்பாங்கன்னு தெரியும். அதெல்லாம் நேர்லப் பாத்தவேங்ற
மொறையில சொல்றேம். குறுக்கு விசாரணை முடிஞ்சி மறுநாளே வெஷத்தக் குடிச்ச, தூக்குல
தொங்குன, சீமெண்ணய்ய ஊத்திக்கிட்டு பொம்முனாட்டிகளோட வெலாசம் நமக்குத் தெரியும்.
சந்தேகம்ன்னா சொல்றேம். போயி வெசாரிச்சுக்கோங்க. அதெயல்லாம் கேட்டுகிட்டு மனுஷியா
ஒருத்தியாள உசுரோட இருக்கு முடியாதுங்க! அப்பிடி உசுரோட இருக்க முடியும்ன்னா அவ்வே
பொம்பளையே கெடையாதுங்க ஆம்மா சொல்றேம்! அடிச்சுச் சொல்றேம்!"ன்னாரு பழைய பரமசிவம்
ஒரே போடா போடுறாப்புல.
"அதெ பத்தி நீஞ்ஞ கவலெப்படுதீயே?
இத்து எஞ்ஞ வூட்டுப் பொண்ணு. நாஞ்ஞ அதெப் பாத்துக்கிடுறேம்யா. கவலப்பட்டுகிடுறேம்யா!
ஒரு பொண்ணு பொண்ணு ல்லன்னு சொல்றதுக்கு நீயி யாருய்யா? தப்புத் தப்பா பண்ணிட்டுத் திரியுற
நீயெல்லாம் வெஷத்த குடிக்காதப்போ, கயித்துல தொங்காதப்போ தப்பே பண்ணாத பொண்ணுங்க ஏம்யா
வெஷத்த குடிக்கணும்றே, கயித்துல தொங்கணும்ங்றே? ரொம்ப தப்புய்யா நீயெல்லம் பேசுறது!
ஏம் பொண்ண பத்தி ஒமக்கென்னய்யா கவலெ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பழைய பரமசிவத்தெ
தொவைச்சு எடுக்குறாப்புல.
"ந்ல்லா கேள்வியக் கேட்டீங்க. அதுக்குப்
பதிலெச் சொல்றேம். இந்தப் பொண்ணப் பாக்குறப்போ எம் பொண்ண பாக்குற மாதிரியே இருக்கு.
அந்தப் பாசத்தாலயுந்தாம் சொல்றேம். ஏற்கனவெ தொங்கப் போன பொண்ணு ஒஞ்ஞப் பொண்ணு.
யாரு செஞ்ச புண்ணியமோ பொழைச்சது. அதெயும் கணக்குல வெச்சிக்கிட்டு யோஜனெ பண்ணி முடிவெடுங்க.
எம்மட போன் நம்பரு இன்னமும் ஒஞ்ஞகிட்டத்தாம் இருக்கும்ன்னு நெனைக்கிறேம். ல்லன்னா
சொல்லுங்க தந்துட்டுப் போறேம். இஞ்ஞத்தாம் முடிவுக்கு வாரணும்ன்னு யில்ல. வூட்டுலப்
போயி ஆற அமர உக்காந்து குடும்பத்தோட கலந்துக்கிட்டும் முடிவெ எடுங்க. வாணாம்ன்னு
சொல்லல. எடுத்துட்டு ஒடனே போன அடிங்க. இஞ்ஞ வெச்சில்ல வூட்டுல வெச்சே முடிக்கிறேம்.
வூட்டுல கொண்டாந்து சொன்ன அளவுக்கு பவுனு நகெயெ தர்றேம். வெவாகரத்துக் கேஸூக்குக் கூட
கோர்ட்டுக்குப் பொண்ண வராத அளவுக்கு வூட்டுல வெச்சே முடிச்சித் தர்றேம். அதுக்கான
தோதுங்க எல்லாம் நம்மகிட்டெ இருக்கு! அதாங் பழைய பரமசிவங்றது. பாக்குக்கோட்டெ வந்து
கேட்டுப் பாருங்க தெரியும் பழைய பரமசிவம்ன்னா யாருன்னு!"ன்னாரு பழைய பரமசிவம்
சாம தான மொறைகள சேத்து வெச்சு அடிக்குறாப்புல. அப்பிடி படக்குன்னுப் பேசிட்டு ஓர் அதிர்ச்சியக்
கொடுக்குறாப்புல சுப்பு வாத்தியாரும் விகடுவும் அதுக்கு என்ன பதிலச் சொல்லப் போறாங்றதெ
கேக்க விருப்பம் இல்லாதவர்ரப் போனவருதாம்.
மூணாவது தடவெ வந்தப்ப பழைய பரமசிவத்தோட
பேச்சு ரொம்ப அதி தீவிரமான நெலைக்குப் போயிடுச்சு. "கோர்ட்டுக்கே வர்றாம கேஸ்ஸ
இழுத்தடிச்சி ஒண்ணுமில்லாம ஆக்கிப்புடுவேம்! என்னவோ கோர்ட்டுல நீதியும் ஞாயமும் கெடைக்குறாப்புல!"ன்னாரு
பேச்சோட ஆரம்பத்துலயே ஒரேடியா தூக்கலா. இதெ கேட்டுக்கிட்டு பழைய பரமசிவத்துக்கிட்டே
எதுவும் சொல்லாம அதெ அப்பிடியே இந்தச் சேதிய சமரச நீதிபதிக்கிட்டெ ஒடனே போயிச் சொன்னாரு
சுப்பு வாத்தியாரு மனசு பொறுக்காம. அது தெரிஞ்சி சமரச நீதிபதி ஒடனடியா வெளியில வந்து
அங்க இருந்த பணியாளுங்ககிட்டெ பாலாமணி சார்பா யாரு வந்தாலும் எந்தச் சேதியையும் சொல்லக்
கூடாதுன்னு சொன்னதோட பாலாமணிக்கு ஒடனடியா ஒரு சம்மனையும் போடச் சொன்னாரு அங்க இருந்த
கிளார்க்குக்கிட்டெ. நடந்ததெ ஒதுங்குனாப்புல போயி பாத்த பழைய பரமசிவம் அடுத்த நொடியே
எங்கப் போயி மறைஞ்சாருன்னு தெரியாம காங்காம போனாரு.
சுப்பு வாத்தியாருக்கு அத்தோட மனசு அடங்கல.
இந்தச் சேதிங்கள அத்தனையையும் அப்பிடியே வக்கீல் திருநீலகண்டனுக்கும் ஒடனே போனப் போட்டுச்
சொன்னாரு. அந்தச் சனிக் கெழமெ வூட்டுல இருந்த வக்கீலு ஒடனே ஸ்டார்சிட்டி பைக்ல கெளம்பி
சமரச நீதிமன்றத்துக்கு மின்னல் வேகத்துல வந்துட்டாரு. "இந்தளவுக்கு மெரட்டுறதுக்கு
அவனுங்களுக்குத் தைரியம் வந்துடுச்சா? போன மொறை பேசுனப்பவே எங்கிட்டெ சொல்றதில்லையா?
அந்த பரக்காவெட்டிப் பயலே உண்டு இல்லன்னு பண்ணிருப்பேம். விசாரணைக்கும் வர்றாம நம்ம
எடத்துக்கே நம்மள ஆள அனுப்பி வெச்சி மெரட்டுறான்னா, அந்த அளவுக்கு அவனுங்களுக்குக்
கொழுத்துப் போச்சுன்னா அடுத்த கேஸ்ஸப் போட்டு விட்டாத்தாம் அடங்குவானுவோ! காட்டுறேம்
இந்த வக்கீல் திருநீலகண்டன் யாருன்னு! ஒங்களுக்குன்னு வக்கீல் ஒருத்தெம் நாம்ம இருக்குறப்போ
எங்கிட்டல்லா பேசணும். அதெ வுட்டுப்புட்டு வக்கீல் குமாஸ்தான்னு ஒங்ககிட்டெ ஏம் வந்து
பேசுறாம்? வழக்கே வேற அவனெ முடிச்சிடுவான்னா நாயீ? வக்கீலுங்க நாங்களே பல கேஸ்கள முடிக்க
முடியாம கெடக்குறேம். இவ்வேம் குமாஸ்தா! அதுவும் உண்மையா பொய்யான்னும் தெரியல. அவ்வேம்
முடிச்சிடுவானா? பாக்குறேம்! சும்மா வுட மாட்டான் வக்கீல் திருநீலகண்டன். சும்மா ஆடுன்னா
பூமிய அதிந்து ஆடுறாப்புல ஆடித்தாம் நிப்பாட்டுவாம் திருநீலகண்டன். இதுல கால்ல சலங்கைய
வேற கட்டி விட்டுட்டா ருத்ர தாண்டவம் ஆடித்தாம் நிப்பாட்டுவாம் இந்த திருநீலகண்டன்!
இனுமே நடக்கப் போறதெ பாருங்கோ!"ன்னு வக்கீல்
திருநீலகண்டன் டென்ஷன் ஆனதோட அடுத்தபடியா பிரம்மாஸ்திரமா அவரு சொல்லிட்டு இதுநாளு வரைக்கும்
போடாம இருந்த வன்கொடுமெ வழக்க பாலாமணி மேல ஒடனடியா ஆர்குடி கோர்ட்டுல போட்டு வுட்டாரு.
வடவாதி போலீஸ் ஸ்டேசனோட லிமிட்டு ஆர்குடியில வர்றதால வழக்க அங்கப் போடுறாப்புல ஆயிடுச்சு.
இதுக்குப் பெறவுதாம் அடுத்தடுத்த சில சம்பவங்க வேகமா நடக்க ஆரம்பிச்சது. அதாச்சி இந்த
வழக்கப் போட்ட சேதி தெரிஞ்சதுக்குப் பெறவுதாம் பாலாமணி திருவாரூரு சமரச நீதி மையத்துக்கு
அலறியடிச்சுக்கிட்டு ஓடி வந்தாம்.
*****
No comments:
Post a Comment