4 Dec 2020

சேர்த்து வையுங்கள் கோர்ட்டார் அவர்களே!


 சேர்த்து வையுங்கள் கோர்ட்டார் அவர்களே!

செய்யு - 645

            ஜீவனாம்ச வழக்கோட ரண்டாவது வெசாரணைக்கும் பாலாமணி வரல. செய்யுவும், சுப்பு வாத்தியாரும் மட்டும் அந்த வெசாரணைக்குப் போயிருந்தாங்க. தொடந்தாப்புல லீவ எடுத்துக்கிட்டுப் பின்னாடி ஓர் அவ்சரம்ன்னா லீவு இல்லாம செருமப்பட வேணாம்ன்னு விகடுவெ இந்த மொறை கோர்ட்டுக்கு வர வாணாம்ன்னு சொல்லிட்டாரு சுப்பு வாத்தியாரு. கைப்புள்ளையையும் போட்டு ஒவ்வொரு தவாவும் அலைய வுட்டுச் செருமப்படுத்த வாணாம்ன்னு ரண்டு பேருமா போயி பாத்துப்புட்டு வந்துப்புடுறேம்ன்னுட்டாரு. மொத வெசாரணைக்குப் பரபரப்பா வெசாரணைத் தொடங்குற நேரத்துல வந்ததெப் போல இந்த தடவெயும் அந்த நேரத்துக்குத்தாம் ஓடி வந்தாங்க பாலாமணியோட வக்கீலும், பழைய பரமசிவமும். அதே நேரத்துல இந்த மொறை வந்த வக்கீலு வேறொரு வக்கீலா இருந்தாரு. பாலாமணி தரப்பு வக்கீலு போன தடவெ போல வாய்தா தேதிய வாங்குனாரு. நீதிபதி ரொம்ப கண்டிப்போட அடுத்த தடவெ பார்ட்டி ஆஜராகணும்ன்னாரு. அடுத்ததா ஒரு தேதியக் கொடுத்தாரு. அவ்வளவுதாம். அடுத்த வழக்கோட நம்பரும் பேரையும் சொல்றதுக்குள்ள செய்யு கோர்ட்ட வுட்டு வெளியில வந்தா. பாலாமணியோட வக்கீலும் கோர்ட்ட வுட்டுக் கௌம்பிட்டாரு. அவரோட சேந்துக்கிட்டு பழைய பரமசிவமும் வந்தச் சொவடு தெரியாம கண்ணுல பட்டு மறையுற மின்னலப் போல நொடியில காணாம போனாரு. திருநீலகண்டன் வக்கீலும் பின்னாடியே வெளியில வந்தாரு. அவரு வெளியில வராண்டாவுக்கு வந்ததும் நீதிபதி அடுத்த மொறை பாலாமணி ஆஜராகணும்ன்னு கண்டிஷன் போட்டதெ மனசுல வெச்சிக்கிட்டு, பாலாமணி வந்தா வெசாரிச்சி முடிச்சி வேல முடிஞ்சிடும்ங்ற நெனைப்புல செய்யு வக்கீல் திருநீலகண்டனப் பாத்து, "அடுத்த தேதியில அவ்வேம் வந்தா கேஸூ முடிஞ்சிடுமா?"ன்னா அப்பாவித்தனமா கேக்குறாப்புல.

            திருநீலகண்டன் வக்கீல் சிரிச்சிக்கிட்டெ சொன்னாரு, "இந்த வழக்குக்கு நிரூபண வாக்குமூலம் கொடுக்கணும், நம்ம மனுவுக்கு எதிர்மனுவ எதிர்தரப்புலேந்து தாக்கல் பண்ணியாவணும். குறுக்கு விசாரணை நடக்கணும். வக்கீலோட ஆர்கியுமெண்ட் இருக்கு. அதுக்கு ‍இடையில பீஸ் கோர்ட்டுக்குக் கட்டுகள அனுப்பி சேர்ந்து வாழ வைக்க முடியுமான்னு ஒரு முயற்சியப் பண்ணுவாங்க. இவ்வளவு வேலைகளும் முடிஞ்சாத்தாம் ஜட்ஜ்மெண்ட். இந்த ஜட்ஜ்மெண்டுக்குள்ள ஏகப்பட்ட வாய்தவ அவ்வேம் வாங்கி இழுத்தடிச்சிட்டெ இருப்பாம். அவ்வளவு சீக்கிரமா கேஸ்ஸ டிரையலுக்கு வுட்டுட மாட்டாம். இதுல அத்து ஒரு சங்கட்டம்ன்னா இதுக்கு இடையில ஜட்ஜ் மாறாம இருக்கணும். மாறிட்டா திரும்ப மொதல்லேந்து ஆரம்பிக்கிற மாதிரித்தாம். கோர்ட்ல ஒரு கேஸ் முடியுறதுங்றது சாமானியம் இல்ல. அதுக்கு இடையிலயே அவனெ பேச்சு வார்த்தைக்கு வர்ற வெச்சி எல்லாத்தையும் வாங்கிடலாம் வா!"ன்னு நம்பிக்கெ கொடுக்குறாப்புல.

            "நெறைய அலையுற மாதிரி இருக்குமா?"ன்னா செய்யு இப்போ வக்கீல் சொன்னதெ கேட்டு இப்பவே முடியலங்ற மாதிரிக்கு.

            "நெறையாவா? கம்மியாவாங்கறது ஒம் ஆம்படையான் கையிலத்தாம் இருக்கு. இதுல ரண்டு மூணு ஹியரிங்க பாப்பேம். அதெ வெச்சியே அவனோட மைண்ட் செட்ட கணிச்சிடலாம். இதுல முடியலன்னா ஒடனே டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ்தாம். அதுல எந்த மாத்தமும் இல்ல! மூணாவது விசாரணைக்கு கட்டாயம் அவன் வந்துத்தாம் ஆவணும்! வரலன்னா பிடிவாரண்ட்ப் போடச் சொல்லிடுவேம்லே!"ன்னாரு பாலாமணி அதுக்கு மேல வசமா மாட்டிக்கிறாப்புல வக்கீல் அழுத்தம் திருத்தமா.

            "அப்போ மூணாவது வெசாரணைக்கு வர்றாம பிடிவாரண்ட் போட்டாலும் நல்லதுதானேங்கய்யா!"ன்னா செய்யு பாலாமணி எப்படியாச்சும் மாட்டிக்கிடணும்ங்ற நெனைப்புல.

            "எல்லாம் நல்லதுக்குத்தாம்! இப்போ நூறு ரூவா பணம் இருந்தா கொடுத்துட்டுக் கெளம்பு. நாம்ம அடுத்த வழக்கப் பாக்குறேம்! ரொம்ப பேசுறதுக்கு நேரமில்ல!"ன்னாரு திருநீலகண்டன். ஒடனே செய்யு கோர்ட்டு வராண்டா ஓரமா எதெ பத்தியில் கவலெ யில்லாதவரப் போல வேடிக்கெ பாத்துட்டு நின்னுகிட்டு இருந்த சுப்பு வாத்தியார்கிட்டெயிருந்து வக்கீல் பணம் கேக்குறாருன்னு சொல்லி பணத்த வாங்கிக் கொடுத்தா. பணத்தெ வாங்குனதும் வக்கீலு விருட்டுன்னு வராண்டாவுலேந்து கோர்ட்டுக்குள்ள வில்லுலேந்து பாயுற அம்பெ போல பாய்ஞ்சாரு. சுப்பு வாத்தியாருக்குப் போலீஸ் ஸ்டேசன் போலவோ, சோஷியல் வெல்பேர் போலவோ இதுவும் ஆயிடுமோங்ற ஒரு அலுத்துப் போன மனநெல உண்டாகியிருந்துச்சு. அதாலத்தாம் அவரு பொண்ணெ கொண்டாந்து கோர்ட்டுக்குள்ள வுட்டுப்புட்டு வராண்டா ஓரமா போயி அலுத்துச் சலிச்சுப் போனாப்புல நின்னுட்டாரு. எதுவும் பேசாம ரண்டு பேருமா கோர்ட்ட வுட்டு வெளியில வந்தாங்க. “ஒண்ணும் கதெ ஆகல. அடுத்த தேதிக்கு வாரணும்!”ன்னா செய்யு சுப்பு வாத்தியார்ரப் பாத்து. அதெ சொல்லிட்டு ஹேண்ட் பேக்குல போட்டுருந்த போன எடுத்துப் பாத்துட்டு சட்டுன்னு விகடுவுக்குப் போன அடிச்சா. அதுக்குள்ள விகடு செய்யுவுக்கு நாலு தடவைக்கு மேல போன அடிச்சிருந்தாம். கோர்ட்டுக்குள்ள இருந்ததால போன செய்யு சைலண்ட் மோடுல போட்டிருந்தா. இப்போ கோர்ட்ட வுட்டு வெளியில வந்துதுத்தாம் பாத்த ஒடனே போன அடிச்சி விகடுவுக்கு வெவரத்தச் சொன்னா. "நீயி நெனைக்குறாப்புல அதிரடியால்லாம் எதுவும் நடக்கலண்ணே! கேஸூ முடிஞ்சா நாமளே போன அடிக்கிறேம். ஏம் நீயிப் பாட்டுக்குப் போன அடிச்சிக்கிட்டெ கெடக்கே?"ன்னா செய்யு.

            "நாமளும் லீவ அடிச்சிட்டுக் கோர்ட்டுக்கு வந்திருக்கலாம் போல. பள்ளியோடத்துல உக்காரவே முடியல. கோர்ட்டுல என்னத்தாம் நடக்குதோங்ற மாதிரிக்கிச் சிந்தனெ ஓடிட்டெ இருக்கு. மனசு ஒரு நெலையில இல்ல. அதாங் அடிச்சிட்டெ கெடந்தேம்!"ன்னாம் விகடு போன்ல செய்யுகிட்டெ.

            "ஒண்ணும் நடக்கப் போறதில்ல. ஒண்ணு அவ்வேம் வருவாம், ல்லன்னா வர மாட்டாம். வந்தா அவனெயும், என்னையும் என்ன ஏதுன்னு கேட்டுப்புட்டு அனுப்பப் போறாங்க. கேஸ் டிரையலுக்கு வர்றதுக்கு மின்னாடி அவ்வேம் எவ்ளோ வாய்தாவ வாங்க முடியுமா அவ்வளவையும் வாங்கிட்டுத்தாம் இழுத்தடிப்பாங்ற மாதிரிக்கி வக்கீல் சொன்னாரு. அதாங் யப்பாத்தாம் கூட இருக்காங்களே! நமக்கென்ன பயம்? நீயி பதற்றம் யில்லாம யிரு. கோர்ட்ட வுட்டுக் கெளம்புறதுக்கு மின்னாடி ஒனக்குப் போன அடிச்சிட்டுத்தாம் கெளம்புவேம்!"ன்னா செய்யு.

            "செரித்தாம்! நீஞ்ஞ பாத்துப் பத்திரமா உஷாரா வந்துச் சேருங்க!"ன்னு சொல்லிட்டுப் போன வெச்சப் பெறவுக்குத்தாம் விகடுவுக்கு மனசோட படபடப்புக் கொஞ்சம் கொறைஞ்சதெ போல இருந்துச்சு. விகடு அளவுக்கு எதாச்சும் நடக்கும்ங்ற எதிர்ப்பார்ப்பான மனநெலைய சுப்பு வாத்தியாரு இழந்திருந்தாரு. மவளெ வண்டியில அழைச்சிக்கிட்டு வர்றப்போ செய்யு கோர்ட்டுல நடந்ததெ சொன்னதெ மட்டும் கேட்டுக்கிட்டாரு. மித்தபடி ஊடால பூந்து எதெயும் கேக்கவும் இல்ல, அதெ பெரிசா எடுத்துக்கிட்ட மாதிரியும் தெரியல.

அடுத்ததா மூணாவது வெசாரணைக்கும் ஏம் எல்லாத்தையும் போட்டு அலைச்சுக்கிட்டுத் தொந்தரவு பண்ணிட்டுன்னு செய்யுவும், சுப்பு வாத்தியாரும்தாம் திருவாரூரு கோர்ட்டுக்குப் போனாங்க. அந்த வெசாரணைக்காவது பாலாமணி வருவானா, மாட்டானாங்ற யோசனையில அன்னிக்குப் பதினோரு மணி வரைக்கும் ஓடுனுச்சு. பேரு கூப்டப்போ செய்யு மட்டுந்தாம் போயி நின்னா. பாலாமணி தரப்புலேந்து வக்கீலு கூட ஆஜராவல. பழைய பரமசிவமும் கண்ணுல காங்கல. நீதிபதி செய்யுவக் கெளம்பிடாம கொஞ்சம் காத்திருக்கச் சொன்னாரு. அவ்வே வெளியில வந்து காத்து நின்னா.

            பதினொரு மணிக்கு மேல பாலாமணி வக்கீலயோடயும், பழைய பரமசிவத்தோடயும் கோர்ட்ல வேகு வேகுன்னு வேகமா ஓடியாந்து ஆஜரானாம். ராசாமணி தாத்தா அவுங்க பின்னாடியே சின்ன புள்ளையாட்டாம் ஓடியாந்துச்சு. பேரு கூப்டப்போ வாராம லேட்டா வந்ததுக்காக நீதிபதி அவனெயும் கூட வந்த வக்கீலையும் கடிஞ்சிக்கிட்டாரு. ஒரு மணி வரைக்கும் காக்கச் சொல்லிட்டு அடுத்த வழக்குக்குப் போனாரு. வழக்கமா சுப்பு வாத்தியாருகிட்டெ வந்துப் பேசுற பழைய பரமசிவம் இந்த மொறை எதுவும் வந்துப் பேசாம பாலாமணியோடயும், வக்கீலோட மட்டும் பேசிட்டு இருந்தாரு.

            மத்தியானம் ஒரு மணி ஆனப்போ கேஸ் நம்பர்ரச் சொல்லி செய்யுவோட பேரையும், பாலாமணியோட பேரையும் சொல்லி கோர்ட்டுக்கு உள்ளார கூப்புட்டாங்க. கோர்ட்லேந்து எல்லா வக்கீலும் போயிருந்தாங்க. கோர்ட்ல நீதிபதியும், பணியாளுங்க மட்டுந்தாம் இருந்தாங்க. நீதிபதி பாலாமணிகிட்டெ அவனெப் பத்தின வெவரங்கள ஒவ்வொண்ணா கேட்டாரு. கேட்டுக்கிட்டெ, "ரண்டு பேரும் படிச்சவங்களா இருக்கீங்க! ஏம் சேர்ந்து வாழ முயற்சிப் பண்ணக் கூடாது! படிச்ச ஒங்களுக்கு என்னத்தெ வெவரத்த சொல்லணும்ன்னு எதிர்பாக்குறீங்க?"ன்னாரு நீதிபதி.

            "நாம்ம சேர்ந்து வாழ தயாரா இருக்கேம்ங்கய்யா! அவுங்கத்தாம் அதுக்குத் தயாரா இல்ல!"ன்னாம் பாலாமணி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுங்ற மாதிரி எண்ணெயில குதிச்ச கடுகாட்டம் ஒரு பதிலெ.

            "நீங்க என்னம்மா சொல்றீங்க? அதாங் புருஷனே சேர்ந்து வாழணும்ன்னு இருக்குறப்போ ஒங்களுக்கு என்ன பிரச்சனை? இன்னிக்கே கேஸ முடிச்சிகிட்டு ரண்டு பேரும் சேர்ந்து வாழலாமா? ஏன் நேரத்தெ வீணடிச்சிக்கிட்டு, வழக்கெ இழுத்துக்கிட்டு?"ன்னாரு நீதிபதி செய்யுவப் பாத்து.

            "கலியாணத்துக்குன்னு எனக்காக எஞ்ஞ யப்பா, யண்ணன் பணம், நகெ நட்டு, சீரு சனத்திச் செஞ்சிருக்காங்க. அதெ கொடுத்தா அதெ வாங்கிட்டுப் பிரிஞ்சிப் போயிடுவேம்ங்கய்யா!"ன்னா செய்யு தெளிஞ்சு ஓடுற நீரோடையப் போல பட்டுன்னு.

            "பிரிஞ்சிப் போறது பெரிய விசயமில்ல. அப்பிடியே பிரிஞ்சி தனியா வாழ்ந்துட முடியாது. இந்தக் கலியாணத்தப் பண்ணி வைக்க ஒங்களப் பெத்தவங்க எவ்ளோ கஷ்டப்பட்டு முயற்சி எடுத்தாங்களோ, அதெ வுட கூடுதலான அளவுக்குத்தாம் கஷ்டப்பட்டு அடுத்தக் கலியாணத்தையும் பண்ணி வைக்க முயற்சி எடுத்தாவணும். ஒங்க வாழ்க்கைய இவரோட ஸ்டார்ட் பண்ணிட்டீங்க. அப்பிடியே கன்டினியூ பண்ணீட்டீங்கன்னா எந்தப் பிரச்சனையும் இல்ல. மறுபடி செகண்ட் லைப்ங்றப்போ திரும்ப மொதல்லேந்து ஸ்டார்ட் பண்ண வேண்டியிருக்கும். ஒருவேள அதுவும் இந்த மாதிரி வந்து நின்னா சங்கட்டம்தாம். அதாலத்தாம் சொல்றேம் எடுத்தேம், கவுத்தேம்ன்னு பதிலச் சொல்லக் கூடாது. யோசிச்சு முடிவெ சொல்லணும்!"ன்னாரு நீதிபதி செய்யுவுக்கு ஒரு வௌக்கத்தக் கொடுத்து.

            "நல்லா யோசிச்சுத்தாம் சொல்றேம்ங்கய்யா!"ன்னா செய்யு நீதிபதியப் பாத்து எந்தக் கொழப்பமும் இல்லாம.

            "இந்த யோசனையெல்லாம் பத்தாது. இன்னும் நல்லா யோசிக்கணும். கேஸ்ஸ பீஸ் கோர்ட்டுக்கு அனுப்புறேம். மூணு ஹியரிங் அங்க அட்டெண்ட் பண்ணுங்க. ஒங்களுக்கு நல்ல கெளன்சிலிங்க அங்கக் கொடுப்பாங்க. நல்லா கெயிடன்ஸூம் பண்ணுவாங்க. அதுக்கு மேலயும் ஒங்க மனசுக்கு ஒத்து வரலன்னா திரும்ப இங்க வாங்க! கேஸ்ஸ நடத்திக்கிடலாம்!"ன்னு செய்யுவப் பாத்துச் சொன்னவரு, "என்னா மிஸ்டர் திருநீலகண்டன்! ஒரு புருஷனையும், பொண்டாட்டியையும் இங்க வர்றதுக்கு மின்னாடியே சேத்து வைக்காம ஒரு கேஸ்ஸப் போட்டுக்கிட்டு இப்பிடி வந்து நிக்க வைக்குறீங்களே?"ன்னாரு திருநீலகண்டனப் பாத்து.

            "சேர்த்து வைக்கணும்ன்னு தலைகீழா நின்னு தண்ணிக் குடிச்சிப் பாத்துட்டேம்ங்கய்யா! மகளிர் ஸ்டேசனுக்குப் போட்டா ஆப்போசிட் பார்ட்டி அங்க வரவேயில்ல. சமூக நீதி மைய விசாரணைக்கும் ஒரு தடவே வந்ததோட செரி. அதாம்ங்கய்யா நமக்கு வேற வழி தெரியல. பேச வைக்காவது வர வைக்கணும் இல்லீங்களா! அதுக்கு என்ன பண்றதுன்னு தெரியாமத்தாம் வழக்கப் போட்டு வுட்டேம். இந்த வழக்குக்கேப் பாருங்க ரண்டு தடவெ வர்றாம்ம மூணாவது தடவெத்தாம் வர்றாங்க. நமக்கு மட்டும் என்ன பிரிச்சி வுடணும்ன்னா ஆசெ? பீஸ் கோர்டுக்குப் போட்டு வுட்ட வரை செரித்தாம்ங்கய்யா. அவுங்களுக்குள்ள சமாதானம் ஆயிட்டா கேஸ்ஸ வாபஸ் வாங்குறதப் பத்தி நமக்கு எந்த பிரச்சனையும் இல்லங்கய்யா!"ன்னாரு திருநீலகண்டன் நீதிபதிக்கிட்ட ரொம்ப பவ்வியமா.

            "பாத்து நல்ல வெதமா பண்ணி வுடுங்க. ரண்டு பேர்ரப் பிரிச்சதா இருக்க வாணாம். சேத்து வைச்சி வுடுற வழியப் பாருங்க!"ன்னாரு நீதிபதி திருநீலகண்டன்கிட்டெ அன்பான உத்தரவப் போடுறாப்புல.

            "சேர்த்து வைக்கணும்ன்னுத்தாம் பாத்தேம்ங்கய்யா! இதுக்காக போன்ல கூட சேர்ந்து வாழ வாங்கங்ற மாதிரிக்கி நம்ம பாஷையில கொஞ்சம் மெரட்டுனாப்புல பேசுனேம். அதெ ரிக்கார்ட் பண்ணி வெச்சிக்கிட்டு நம்ம மேல கேஸ்ஸப் போடப் போறதா ஆப்போசிட் சைட்லந்து மெரட்டுறாங்கறய்யா!"ன்னாரு திருநீலகண்டன் வசமா போட்டு வுடுறாப்புல.

            "அப்பிடில்லாம் பண்ணக் கூடாது. புருஷன் பொண்டாட்டிக்குள்ள மனக்கசப்பு அவ்வளவுதானே. பேசுனா தீந்துடும். பேசாமலே இருக்குறதாலத்தாம் வளந்துகிட்டு இருக்குது. மனசு வுட்டு ரண்டு பேரும் பேச ரண்டு லாயர்சும் எடம் கொடுங்க. ரண்டு பக்கத்துக்குமே சொல்றேம். வழக்க இழுத்தடிக்கணும்ன்னு நெனைக்க வாணாம். ஒங்களுக்குள்ளயே பேசி முடிச்சாலும் நல்லதுதாங். ரண்டு பேரையும் சேர்த்து வெச்சிடுங்க! சின்ன வயசு. சந்தோஷமா வாழணும். வழக்குன்னு அலைஞ்சு வயசு அதுலயே போயிடக் கூடாது."ன்னாரு நீதிபதி ரொம்ப கரிசனமா எல்லாத்தையும் பாத்து.

            "ஐயாவுக்குத்தாம் நம்ம மனசு தெரியுது!"ன்னாம் பாலாமணி நெருப்பு மூட்டி விட்டவேம் அதுக்கு நடுவுல ஐஸ் கட்டிய போடுறாப்புல.

            "பீஸ் கோர்ட்டுக்குக் கரெக்டா அட்டெண்ட் பண்ணுங்க. மொறையா கைடென்ஸ் பண்ணி வுடுவாங்க. அதெ பிடிச்சிக்கிட்டுச் சேர்ந்துடுங்க! அப்படி நெறைய பேரு சேந்து நல்ல வெதமா இப்போ வாழ்ந்துட்டு இருக்காங்க. வழக்குன்னு போயி வாழ்க்கைய வீணடிச்சிடக் கூடாது. ஒரு ஜட்ஜ்ங்ற மொறையில இதெ சொல்லல. ஒங்க ரண்டு பேரு மேலயும் அக்கறையுள்ள ஒரு வெல்விஷரா சொல்றேம். இப்போ நாம்ம பேசுறதெல்லாம் வழக்கோட எல்லைக்குள்ள வாராது. ஒங்க நல்லதுக்காக வழக்குக்கு வெளியில வந்து பேசுறேம். இதெ புரிஞ்சிப்பீங்கன்னு நெனைக்கிறேம்."ன்னு நீதிபதி சொல்லிட்டு எழும்பிட்டாரு. மத்தியானத்துக்கான சாப்பாட்டு நேரம் நெருங்கிடுச்சு. ஜட்ஜ் கெளம்பி வெளியில வந்ததும் எல்லாரும் வெளியில வந்தாங்க.

            பாக்குக்கோட்டை பழைய பரமசிவம் இப்பயும் எதுவும் பேசாம ராசாமணி தாத்தா, வக்கீலு, பாலாமணியோட ஓடிப் போயி கோர்ட்டு வளாகத்துக்கு வெளியில நிறுத்தியிருந்த இன்னோவா கார்ல ஏறிப் போனாரு. எல்லாம் நிமிஷ நேரத்துல அடுத்தடுத்து சரியுற சீட்டுக் கட்டெ போல நடந்துச்சு.

            “ஒண்ணு வந்தா ஓவரா பேசுறானுவோ! இல்லாட்டி எதையும் பேயாம போறானுவோ!"ன்னாரு ஒண்ணும் பேசாம போறதெப் பாத்துட்டு கோர்ட்டு ஓரமா வராண்டா பக்கத்துல நின்னுகிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு.

            "இப்போ அவுங்களுக்கு ரண்டு மாசம் வரைக்கும் பீஸ் கோர்ட்ல ஒடும்! அதெ நெனைச்சிச் சந்தோஷத்துல ஓடுறானுவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாருக்குப் பக்கத்துல வந்த வக்கீல் திருநீலகண்டன்.

            "அங்க வெச்சி எதையும் வெசாரிக்க மாட்டாங்களா?"ன்னாரு ‍சுப்பு வாத்தியாரு வெள்ளந்தியா பேசுறாப்புல.

            "சமூக நீதி மையத்துல பண்ணாங்க இல்ல! அதெப் போல உக்கார வெச்சி கதெய ஓட விடுவாங்க. பிரிஞ்சிப் போறதெ வுட ஒருத்தருக்கொருத்தரு சேர்ந்து வாழ்ந்தா ஏகப்பட்ட நன்மைன்னு அறிவுரையச் சொல்லுவாங்க. அதெ கேட்டா அங்கயே வெச்சி சோலிய முடிச்சி விடுவாங்க. இல்லாட்டி கட்டு திரும்ப இங்கயே வந்துடும்! ஒரு வேள அங்க அத்தனெ தேதிக்கும் மாப்புள்ள வரலன்னாலும் கேஸ் கட்டு இங்கத்தாம் திரும்பும்."ன்னாரு திருநீலகண்டன் சுப்பு வாத்தியாருக்கு வௌக்கத்தக் கொடுக்குறாப்புல.

            "பெறவு அந்தப் பீஸ் கோர்ட்டால என்ன பிரயோஜனம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பீஸ் கோர்ட்டுங்றது எதுக்குன்னு புரியாம.

            "கொஞ்ச கால அவகாசந்தாம். அதுக்குள்ள ரண்டு தரப்புக்கும் மனசு மாறுதான்னு பாப்பாங்க. மனச மாத்தி வுட கைடன்ஸ் அன்ட் கெளன்சிலிங்த்தாம். சமாதானமாப் பண்ணி வுட என்ன வேலைக இருக்கோ அத்தனையும் பாப்பாங்க!"ன்னாரு வக்கீல் பீஸ் கோர்ட்டுன்னா என்னான்னு சொல்றறாப்புல.

            "ஏம்ங்ய்யா! அங்க ஒருவேள சுமூகமா முடிச்சிக்கிட்டுத் திரும்பவும் வந்து கேஸ்ஸப் போட்டுக்கிடலாமா?"ன்னா செய்யு புரியாம வக்கீல் சொன்னதெ வெச்சுக்கிட்டு.

            "அதாங் முடியாது. பீஸ் கோர்ட்ல கையெழுத்தப் போட்டுட்டா சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும் ஒண்ணும் பண்ண முடியாது. ஒண்ணு முடியாதுன்னு கேஸ் கட்ட இங்க திருப்பிடணும். இல்லன்னா ஒத்துப் போயி கேஸ்ஸ முடிச்சிக்கிடணும். ரண்டுதாங் அங்க சாய்ஸ். ரண்டே ஆப்ஷன்தான். கட்டு திரும்ப வந்து இங்க ஆகுற தீர்ப்புக்குத்தாம் மேல் மொறையீடுல்லாம். பீஸ் கோர்ட்டுல ரண்டு பக்கமும் ஒத்துகிட்டா அதுக்குப் பெறவு அதுக்கு நோ அப்பீல். சோலி முடிஞ்சதாத்தாம் அர்த்தம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன்.

            அதெ கேட்டுட்டு, "இந்த ஒரு மூணு ஹியரிங்குக்குத்தானே பீஸ் கோர்ட்?"ன்னா செய்யு.

            "ஜட்ஜ் நெனைச்சா ரண்டு மூணு ஹியரிங் பாத்துட்டுத் திரும்பவும் அனுப்பிச்சிடலாம். புதுசா ஜட்ஜ் மாறுனாலும் அவுங்க திரும்பவும் ஒரு மொறை பீஸ் கோர்ட்டுக்குப் போட்டு வுட்டாலும் போட்டு வுடுவாங்க. நீ ஸ்ட்ராங்கா பீஸ் கோர்ட்டுல பேசுறதுலத்தாம் இருக்கு. என்ன வாணாலும் பேசலாம். ஏன்னா அங்க லாயர்ஸ் நாட் அலெளட். ஒன்னையும் ஒம் குடும்பத்தையும், அதெ போல அவனையும் அவனோட குடும்பத்தையும் மட்டும்தாம் வெசாரிப்பாங்க. அங்க பேசுற எதுவும் இந்தக் கோர்ட்டுக்கு வாராது. கொலை பண்ணிருந்தாலும் பண்ணிட்டேன்னு சொல்லலாம். அந்த ஸ்டேட்மெண்ட் பீஸ் கோர்ட்ட தாண்டி வெளியில செல்லுபடி ஆவாது. மொத்தத்துல அது திரும்பவும் ஒரு பஞ்சாயத்துதாம். எந்த அளவுக்குச் சமாதானம் பண்ண முடியுமோ அந்த அளவுக்குப் பண்ண பார்ப்பாங்க. அதாவது கோர்ட்லயே கோர்ட்டுக்கு வெளியில வெச்சி முடிக்கிறாப்புலன்னு வெச்சுக்கோயேம். வழக்குகள விரைவா முடிக்கிறதுக்கு, கோர்ட்டெ பண்ணி வைக்குற சட்டப் பஞ்சாயத்துன்னும் சொல்லாம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன்.

            "இதுலயாவது இனுமே இப்பிடி ரொம்ப அலையாம கொள்ளாம சுலுவா முடிச்சிடலாமா?"ன்னா செய்யு.

            "மொதல்ல இதுக்கு ஓம் ஆம்படையான் வர்றான்னு பாப்போம்! முடிக்கிற மாதிரி இருந்தாத்தாம் அவன் என்னிக்கோ நம்ம ஆபீஸூக்கு வந்திருக்கணுமே? என்ன முடிவுல இருக்கானோன்னு தெரியல. வக்கீலையும் ஒரே வக்கீலா வெச்சிக்க மாட்டேங்றாம். ஒவ்வொரு தடவையும் வேற வேற வக்காலத்தப் போட்டு இஷ்டத்துக்கு வக்கீல வெச்சிக்கிட்டு இருக்காம். ஒரே வக்கீல்ன்னா போனப் போட்டு சமாதானப் பேசி வுட்டுப்புடலாம்! ஒங் கேஸூ இப்பிடிப் போவுது! இழுத்தடிக்கணும்ன்னு நெனைக்கிறாம். இழுத்தடிச்சா பொம்பளப் புள்ளதானே! எவ்வளவு காலம் தாங்கும்! பயந்துகிட்டு கொடுக்குறதெ கொடுன்னு நெனைச்சி ஓடிப் போயிடும்ன்னு பாக்குறாம்! பீஸ் கோர்ட்டுக்கு வர்றான்னா என்னான்னுப் பாத்துட்டு, வந்தா என்னா சொல்றாங்றதெ வெச்சி அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் போவேம்!"ன்னாரு வக்கீல்.

            கிட்டத்தட்ட இப்போ சுப்பு வாத்தியாருக்கும் செய்யுவுக்கும் பீஸ் கோர்ட்டுங்றது என்னான்னு புரிஞ்சுப் போச்சு. இதுக்கு மேல அதுல கேக்க வேண்டியது ஒண்ணுமில்லங்றது தெரிஞ்சதும் சுப்பு வாத்தியாரு வக்கீல் கேக்குறதுக்கு மின்னாடியே நூத்து ரூவாய எடுத்துக் கொடுத்துட்டு கும்புட்டப் போட்டுட்டுக் கெளம்புனாரு. செய்யு சுப்பு வாத்தியாரோட டிவியெஸ் பிப்டியில வர்றப்ப விகடுவுக்குப் போன அடிச்சி நடந்தெ சொன்னா. பீஸ் கோர்ட்டுக்கான தேதி சனிக்கெழம போட்டிருந்ததால அன்னிக்கு லீவுங்றதால தானும் வர்றேன்னும் போன்லயே சொன்னாம் விகடு.

            "சி‍ஜேம் கோர்ட்ட வந்துப் பாத்துட்டே. அடுத்ததா பீஸ் கோர்ட்டயும் வந்துப் பாத்துடு! என்னென்னவோ கோர்ட்டையல்லாம் பாக்கணும்ன்னு தலையில எழுதிருக்கு. போலீஸ் ஸ்டேஷன், சோசியல் வெல்பேர், கோர்ட்டு இன்னும் என்னென்னத்த பாக்கணுமோ?"ன்னா செய்யு ரொம்ப மனசு ஒடைஞ்சாப்புல.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...