28 Dec 2020

ஆவணங்கள் பலவிதம்!

ஆவணங்கள் பலவிதம்!

செய்யு - 669

            ரொம்ப சரியா பன்னண்டரைக்கெல்லாம் ஜட்ஜ் செய்யுவோட ஜீவனாம்ச வழக்கு நம்பரையும் பேரையும் சொல்ல வெச்சு உள்ளார அழைச்சாரு. உள்ளாரப் போனது செய்யு மட்டுந்தாம். வக்கீல் திருநீலகண்டன் உள்ளாரயே உக்காந்திருந்தாரு. பாலாமணியோ, வக்கீல் கங்காதரனோ வரல. மறுபடியும் ரண்டு தடவெ டவாலி சத்தமா வழக்கு நம்பர்ரச் சொல்லி பேர்ரையும் சொல்லிக் கூப்புட்டாரு. செய்யுவத் தவிர யாரும் வாரல.

            "அய்யா பன்னண்டரைக்கல்லாம் வர்றச் சொன்னீங்க. அது படி என்னோட கட்சிக்காரங்க ஆஜர்ங்கய்யா!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் எழும்பி நின்னு.

            "சொன்ன நேரத்துக்கு வாரதில்லையா? இப்பிடியா பண்ணுறது? செரி போவட்டும். மத்தியானத்துக்குப் பாக்கலாம்!"ன்னு சொன்ன ஜட்ஜ் செய்யுவப் பாத்து,  "நீங்க மத்தியானம் போயிட வேணாம்ம்மா!"ன்னாரு. செய்யு அதெ கேட்டுக்கிட்டுத் தலைய ஆட்டிக்கிட்டெ வெளியில வந்தா. இந்த நாளு முழுக்க கோர்ட்டுலயே செலவாயிடும்ன்னு அவளுக்குப் புரிஞ்சது. தனக்காகத் தாம் மட்டுமில்லாம தங்களோட வேலைகள எல்லாத்தையும் போட்டுப்ப்புட்டு அப்பங்காரரு, அண்ணங்கார்ரேம், கைப்புள்ளன்னு எல்லாம் காத்துக் கெடக்குறதெ நெனைச்சா செய்யு. அதெ நெனைக்க அவளுக்கு மனசுக்குக் கொஞ்சம் சங்கட்டமாத்தாம் இருந்துச்சு. அந்தச் சங்கட்டத்தோடேயே மத்தியானம் கோர்ட்டு கேண்டின்ல சாப்புட்டப்போ முழுசா சாப்புடாம அரையும் கொறையுமா சாப்புட்டு முடிச்சா.

            மத்தியானத்துக்கு மேல கோர்ட்டு ரண்டு மணிக்கெல்லாம் சரியா துவங்கிச்சு. அப்பவும் பாலாமணி தரப்புலேந்து யாரும் வாரல. செய்யு நெலைப்படி ஓரமா நின்னுகிட்டு இருந்தா. ரண்டே முக்காலுக்கு மேல பரபரப்பா பாலாமணி, வக்கீல் கங்காதரன், ராசாமணி தாத்தா, ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன்னு எல்லாரும் ஒலிம்பிக் போட்டியில தங்கப் பதக்கத்த பிடிக்குறதுக்கு ஓடியாரது போல ஓடியாந்தாங்க. கங்காதரன் உள்ளார நொழைஞ்சதப் பாத்த ஜட்ஜ், "வேல முடிஞ்சிடுச்சா?"ன்னாரு. அப்பதாம் ஒரு வழக்க வெசாரிச்சு முடிச்சிருந்தாரு ஜட்ஜ்.

            "நீஞ்ஞ உத்தரவு கொடுத்தா தாக்கல் பண்ணிடலாங்கய்யா!"ன்னாரு கங்காதரன் ரொம்ப பதிவிசா.

            "எங்க பண்ணுங்க பாப்போம்!"ன்னாரு ஜட்ஜ் கங்காதரனப் பாத்து கூர்மையா சொல்றாப்புல.

            கங்காதரன் கோர்ட்டு கிளார்க் மூலமா ஆவணப் பட்டியல ஜட்ஜ்கிட்டெ கொடுக்கச் சொல்லிக் கொடுத்து வுட்டாரு. அதெப் பாத்த ஜட்ஜ் மலைச்சிப் போயி, "நாப்பத்தஞ்சா? அந்த அளவுக்கா இருக்கு ஆவணம்? அதெ தாக்கல் பண்ணி முடிக்கவே ஒரு மணி நேரத்துக்கு மேல ஆவுமே! ஏற்கனவே கூடுதல் பெட்டிஷன்னு சொல்லி முப்பத்தாறு பக்கத்துக்குத் தாக்கல் பண்ணிருக்கீங்க. அதெ படிச்சு முடிக்கிறதுக்கே ஒரு மணி நேரம் ஆவும். வழக்குக்குத் தேவையில்லாம ஏம் சம்பந்தம் இல்லாததெயெல்லாம் பண்றீங்களோ தெரியல. ஆன்னா இதெ நாம்ம தீர்ப்புல கணக்குல எடுத்துக்க மாட்டேம் பாருங்க. ஏதோ ஒங்க திருப்திக்குப் பண்றீங்க. அவ்வுளதாம். புரிஞ்சுதா? செரி இப்போ ஒவ்வொண்ணா தாக்கல் பண்ணுங்க!"ன்னாரு தன்னோட விருப்பமின்மையக் காட்டுறாப்புல.

            கங்காதரன் ஆவணப் பட்டியல்ல இருந்த ஒவ்வொண்ணா வாசிச்சுத் தாக்கல் பண்ண ஆரம்பிச்சாரு. பாலாமணிக்கும் செய்யுவுக்கும் கலியாணம் ஆன நாள்லேந்து போயி வந்த ஒவ்வொரு கோயில்லயும் வாங்குன நொழைவுச் சீட்டு, கார்ர நிப்பாட்ட வாங்குன கட்டணச் சீட்டு, அர்ச்சனைக்குன்னு வாங்குன சீட்டு, விபூதி குங்குமப் பொட்டணம்ன்னு ஒவ்வொண்ணா வாசிச்சித் தாக்கல் பண்ணுனாரு கங்காதரன். அதெ தாக்கல் பண்ண பண்ண கீழே உக்காந்திருந்த வக்கீலுங்க சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. தொடந்தாப்புல ஏழெட்டுக் கோயிலுங்களோட சீட்டுகளையும், விபூதிப் பொட்டணங்களையும் தாக்கல் பண்ணப் பண்ண ஜட்ஜூம் சிரிச்சிட்டாரு. சிரிச்சிக்கிட்டெ, "நானும் ஒரு பெரிய பக்திமான்தான். ஆன்னா எந்தக் கோயிலுக்கும் போனெத இந்த அளவுக்குப் பாதுகாப்பா பத்திரமா சேகரிச்சதில்ல. கலியாணம் ஆயி இப்பிடி கேஸ்ஸாவும்ன்னு தெரிஞ்சே சேகரிச்சாப்புலல்ல தெரியுது!"ன்னாரு.

            அத்து எதெப் பத்தியும் கண்டுகிடாம கங்காதரன் ஒவ்வொண்ணா தாக்கல் பண்ணுறதுல மும்பமரமா இருந்தாரு. இது போல பத்தொம்பது கோயில்களோட ஆவணங்கள தாக்கல் பண்ணவரு, அடுத்ததா செய்யுவுக்குன்னு கலியாணத்தக்குப் பெறவு பாலாமணி வாங்கிக் கொடுத்த சின்ன சின்ன பொருளுக்கான ரசீதுகள தாக்கல் பண்ணுனாரு. அதுல சோப்பு, சீப்பு, பவுடர் வாங்குனது, ஜாக்கெட் பிட் வாங்குனது, அதுக்கு தையல் கூலி கொடுத்தது, செருப்பு வாங்குனது, பொடவை ரண்டு எடுத்துக் கொடுத்தது, நைட்டி ஒண்ணு வாங்கிக் கொடுத்தது, ப்ரா, பேண்டீஸ் வாங்கிக் கொடுத்ததுக்கான ரசீதுங்க, ஸ்டேப்ரீ பேட் வாங்கிக் கொடுத்ததுன்னு ஒவ்வொண்ணுத்துக்குமான ரசீதுங்கன்னு இருவத்து ஒண்ணு இருந்துச்சு. செய்யுவோட கோயம்புத்தூருக்குப் பிளைட்டுல போனதுக்கான டிக்கெட்டுங்க, ஓட்டல்ல ரூம் எடுத்து தங்குனதுக்கு செலுத்துன ரசீது, அங்க போனப்ப வாங்குன பொருளுக்கான ரசீங்கன்னு ரண்டு இருந்துச்சு. கடெசீயா பாலாமணி செய்யு பேர்ல எடுத்திருந்த அஞ்சு லட்சத்துக்கான இன்ஷ்யூரன்ஸ் பாலிசியயும், அதுக்கு காலாண்டுக்கு ஒரு மொறை பிரீமியம் கட்டுனதுக்கான ரசீதையும் அத்தோட பாண்டோட ஒரிஜினல்ல ஜட்ஜ்கிட்டெ காட்டிட்டு சிராக்ஸ்ஸா ஆவணமா தாக்கல் பண்ணாரு. வக்கீல் திருநீலகண்டன் எல்லாத்தையும் நின்னபடிக்குப் பாத்துக்கிட்டெ இருந்தாரு. பெரிசா ஒண்ணும் எதிர்ப்பெ தெரிவிக்கல. அவரு நிக்குறதப் பாக்குறப்போ சோளக்காட்டு பொம்மெ எதுவும் செய்யாம நிக்குறதப் போலத்தாம் ஒப்புக்குச் சப்பாணியா நின்னுகிட்டு இருந்தாரு. ஆனா நிக்குற தோரணையில ஒரு பயத்தெ காட்டுறாப்புலத்தாம் நின்னுகிட்டு இருந்தாரு. 

            நாப்பத்தஞ்சு ஆவணங்களையும் தாக்கல் பண்ணி முடிச்சதும் ஜட்ஜ் கங்காதரனப்  பாத்து, "இதுக்கும் வழக்குக்கும் எப்பிடிச் சம்பந்தம் ஆவும்ன்னு தெரியல. அதெ எப்பிடி லிங்க் பண்ணிக் கொண்டு வரப் போறீங்கறதெ க்ராஸ்லயும், ஆர்கியுமெண்ட்லயுந்தாம் பாக்கணும்!"ன்னாரு. அது எல்லாத்தையும் தாக்கல் பண்ணி முடிச்சப்போ மணி நாலு மணிக்கு மேல கடந்திருந்துச்சு. அதப் பாத்துட்டு ஜட்ஜ், "ஏற்கனவே சில வழக்குகள வெசாரிக்க வேண்டிக் கெடக்கு. அதெ நிறுத்தி வெச்சிட்டுத்தாம் இதெப் பாத்தேம். அதெ தொடர வேண்டியதா இருக்கு. கிராஸ்ஸ அடுத்தத் தேதியில வெச்சிக்கிடலாம்!"ன்னு சொல்லித் தேதிய அடுத்த திங்கக் கெழமைக்குப் போட்டுத் தந்தாரு.

            அந்தத் தேதியப் பாத்துப்புட்டு கங்காதரன் வக்கீல் ஜட்ஜ்கிட்டெ, "இதுக்காக இன்னிக்கு டாக்குடர் லீவ் எடுத்துக்கிட்டு வந்திருக்கார். திரும்பவும் திங்க கெழமைன்னா இன்னொரு நாளு லீவ் ஆவும். அதெ வெள்ளிக்கெழமெயாப் பாத்துக் கொடுத்தா அட்ஜஸ்ட் பண்ணிட்டு அவரு வர்றதுக்குச் செளகரியமா இருக்கும்!"ன்னாரு கங்காதரன் பெட்டிஷன் போடுறாப்புல.

            "அதெல்லாம் முடியாது. இன்னிக்கு ஒங்களுக்காக நாளு பூரா கிராஸ் நடக்காம அவுங்க காத்திருந்தாங்க யில்ல. அவுங்க என்னெ சாக்கச் சொன்னாங்க? வர்ற திங்கக் கெழமெத்தாம் பர்தர் கிராஸ். அன்னிக்கு வந்தா பாப்பேம். வரலன்னா ஒங்கப் பக்கத்துக்கான கிராஸ்ஸ முடிச்சிட்டு பெட்டிஷனர் சைட் கிராஸ்ஸப் பாக்குறாப்புல ஆயிடும். ஞாபவம் இருக்கட்டும் அன்னிக்கு ரெஸ்பாண்டன்ட் ஆப்சென்ட் ஆவக் கூடாது!"ன்னாரு ஜட்ஜ் கண்டிப்புக் காட்டுறாப்புல.

            "சரிங்கய்யா!"ன்னு தலையக் குனிஞ்சிக்கிட்டெ பின்னாடியே நடந்து வந்து வெளியில வந்தாரு வக்கீல் கங்காதரன். அடுத்த வழக்குக்கான நம்பரும், பேரும் கூப்புட ஆரம்பிச்சதும் செய்யுவும் வெளியில வந்தா.

            "அடுத்த வெசாரணையில மரண ஆப்புத்தாம். பாப்பா தாங்குமா? புட்டுக்கிடுமா?"ன்னு சொல்லிட்டெ போனாம் ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் வெளியில வந்த செய்யுவோட காதுக்குக் கேக்குறாப்புல. அதெ கேட்டதும் கைப்புள்ள வுடல, "அதென்னடா மரண ஆப்பா? சிரிப்பு ஆப்பா? நீஞ்ஞ தாக்கல் பண்ண ஆவணங்களப் பாத்து கோர்ட்டுல ஒரு ஆளு பாக்கியில்லாம் சூத்தால சிரிக்கிறாம்!"ன்னாரு. அதெ அவரு சொல்லி முடிக்கிறதுக்குள்ள வேகு வேகுன்னு அவனுங்க நடந்துப் போயிட்டானுங்க. காதுல அரையும் கொறையுமா விழுந்திருக்கும் போல. அதால அதுக்கு எதுவும் சொல்லாம, வம்பு வைக்காம அவனுங்கப் பாட்டுக்குப் போயிட்டெ இருந்தானுங்க. இல்லன்னா அன்னிக்குக் கோர்ட்டுல ஒரு பெருஞ் சண்டையாத்தாம் ஆயிருக்கும். அதுக்குப் பெறவு வக்கீல்கிட்டெயும் அதிகமா பேசிக்கிடல. ஐநூத்து ரூவா பணத்தெ கொடுத்துட்டு கௌம்பியாச்சு. வர்ற வழியில் டீக்கடையில நிறுத்தி டீத்தண்ணியும் பட்சணுமும் சாப்புட்டதும் கைப்புள்ளயோட ஒரு சில வார்த்தைகப் பேசுனதுதாம். கௌம்பியாச்சு. “பாத்துப்போம் வாஞ்ஞ. பொறுமையாவே எல்லாம் நடக்கட்டும். எல்லாம் நல்லதுக்குத்தாம்!”ன்னு கைப்புள்ள சொல்லிட்டு அவரும் வூட்டுப்பக்கம் கௌம்பிட்டாரு. ஒரு வழியா அன்னிய பொழுது அப்படிக் கோர்ட்டுல முடிஞ்சது. 

            அன்னிக்கு அதெ முடிச்சிட்டு வூட்டுக்கு வந்தப்போ, ராத்திரி வாக்குல வக்கீல் திருநீலகண்டன் போன் அடிச்சாரு. 

            "என்னம்மா அவுங்க பாட்டுக்கு அடிஷனல் பெட்டிஷன் தாக்கல் பண்ண அப்ஜெக்சன் பண்ணலைன்னு நெனைக்குறீங்களா?"ன்னாரு அவராவே செய்யுகிட்டெ.

            "அப்பிடில்லாம் ஒண்ணுமில்லங்கய்யா! ஆன்னா ஒரு நாளெ காலி பண்ணிட்டாங்கலேய்யா!"ன்னா செய்யு நாள் முழுவதும் காத்திருந்து சோர்வுல.

            "பெட்டிஷன்ங்றது ரத்தினச் சுருக்கமா ரண்டு மூணு பக்கத்தெ தாண்டக் கூடாது. ஜட்ஜூம் மனுஷர்தானே. அவர் பாட்டுக்குக் கதெ கதெயாவா படிச்சிட்டு இருக்க முடியும்? அவருக்கு இந்த ஒரு கேஸ்தான்னா என்னா? நெறைய கட்டுக இருக்கும். எல்லாத்தையும் படிச்சிப் பாத்தாவணும். ஜட்ஜூக்கு எரிச்சல்தாம் வரும் அப்பிடி பெட்டிஷன் தாக்கல் பண்ணுறதெல்லாம்! யப்பா முப்பத்தஞ்சு பக்கம்னப்போ நமக்கே சிரிப்பாயிடுச்சு. என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல இப்படி யாரும் ஒரு கொலை கேஸூக்குக் கூட தாக்கல் பண்ணதில்ல. அவனுவோ தாக்கல் பண்ண பண்ண கோர்ட்டுலயே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்கப் பாத்தீயா?"ன்னாரு வக்கீல் ஏதோ ஒரு ஞாயத்தெ சொல்ல வர்றாப்புல.

            "இதுக்கு நாம்ம பதில் பெட்டிஷன் தாக்கல் பண்ணணுமா?"ன்னா செய்யு தன்னோட சந்தேகத்தெ தீத்துக்குறாப்புல.

            "ஜட்ஜே அதெ கன்சிடர் பண்ணப் போறதில்லன்னு சொல்லிட்டாரு. அதுக்கு ஏன் நாம்ம தேவையில்லாம தாக்கல் பண்ணிகிட்டு? நான் சொல்ல வந்த விசயத்தைச் சொல்லல பாரு! அப்பிடி அனுமாரு வாலு தாக்கல் பண்ணான்னுவோ இல்லியா? இப்போ கொஞ்ச நேரத்துக்கு மின்னாடி ஆப்போசிட் லாயர் கங்காதரன் போன அடிச்சாம்!"ன்னு சொல்லி நிப்பாட்டுனாரு வக்கீல்.

            "அவ்ரு ஏம்ய்யா ஒஞ்ஞளுக்குப் போன அடிக்கிறாரு?"ன்னா செய்யு புரியாம கேக்குறாப்புல.

            "அங்கத்தாம் விசயமே இருக்கு. அதுக்குத்தாம் இப்ப போனே அடிச்சேம். எல்லாத்தையும் தாக்கல் பண்ணிட்டு அதுக்கு பீஸா அய்யாயிரம் கேட்டிருக்காம் கங்காதரன். ஒம் ஆம்படையான் அவ்வளவுல்லாம் கொடுக்க முடியாது. பூராவும் நம்ம தயாரிப்பு. ஆயிரந்தாம் தருவேன்னு நின்னுருக்காம். பார்ரேம் அந்தப் பயெ தயார் பண்ணித் தர்றதெ இவனும் வக்கீலா இருந்துகிட்டெ அப்பிடியே தாக்கல் பண்றாம். தஞ்சாவூர்ல கேஸ்ஸூ இல்லாம கெடந்தப் பயலக் கொண்டாந்து வக்கீலா போட்டா அப்பிடித்தாம் நடக்கும். அதாம் நடந்திருக்கும். இந்த வக்கீல் பயெ அய்யாயிரம் தரலன்னா நாம்ம கோர்ட்ல ஒம் சார்பா ஆஜராவ மாட்டேம்ன்னு சொல்லிருக்காம். ஆஜராவ மாட்டேன்னா போன்னு ஒம் ஆம்படையானும் சொல்லிருக்காம். கங்காதரனுக்குக் கோவம் வந்து கேஸ்லயிருந்து வெலகிட்டதா சொல்லிட்டானாமாம்! அதெ இப்பத்தாம் நமக்கு போன அடிச்சிச் சொன்னாம்! அதால கேஸ்ல நீயி பாட்டுக்குப் பூந்து விலாசு. அந்த அடிஷனல் பெட்டிஷன் ஒரு மேட்டரே யில்ல. அதெ குறுக்கு விசாரணைய கேவலமா பண்ணுறதுக்காகத் தாக்கல் பண்ணதுதாம். ஏன்னா பெட்டிஷன்ல இல்லாத ஒண்ண கேக்க முடியாது இல்லியா?"ன்னாரு வக்கீல் தாம் போன் பண்ணதுக்கான முக்கியமான விசயத்தெ வௌக்குறாப்புல.

            "இத்து எப்போ நடந்துச்சு?"ன்னா செய்யு வாயைப் பொளந்தாப்புல.

            "அதுன்னா எது?"ன்னாரு வக்கீலும் புரியாதவரப் போல.

            "அய்யாயிரம் கேட்டுக் கொடுக்க முடியாதுன்னது, ஆஜர் ஆவ முடியாதுன்னதெல்லாம்?"ன்னா செய்யு தன்னோட கேள்வியத் தெளிவு பண்டுறாப்புல.

            "கோர்ட்டு முடிஞ்சி போனதுக்கப்புறம் வக்கீல் பீஸ் கொடுக்கணுமில்ல. அப்போ நடந்திருக்கு!"ன்னாரு வக்கீல் ஒரு சிரிப்பெ போட்டுக்கிட்டெ.

            "சரிங்கய்யா வக்கீல் ஆஜராவலன்னா? மேக்கொண்டு வழக்குல யாரு ஆஜராவா? வேறு வக்கீலா?"ன்னா செய்யுவும் சிரிச்சிக்கிட்டெ.

            "அதாம் ஒம் ஆம்படையான் ஏகப்பட்ட சட்டப் புத்தங்க படிக்கிறதா பீஸ் கோர்ட்டு ஜட்ஜூகிட்டெ சொன்னானாம்ல. இப்போ மெடிக்கல் புக்ஸ் படிக்கிறதெ விட்டுட்டு லா புக்ஸ் படிக்கிறதா வேற பீத்திக்கிட்டானம்லா. அவன் வழக்குக்கு இனுமே அவனெ ஆஜராவாம் பாரு!"ன்னாரு வக்கீல் பாலாமணிய நக்கல் பண்ணி ஓட்டுறாப்புல.

            "அப்பிடி ஆஜரானா ரொம்ப கேவலாமல்லா குறுக்கு விசாரணையப் பண்ணுவாம்?"ன்னா செய்யு தம் பக்கம் உள்ள பயத்தெ காட்டுறாப்புல.

            "கோர்ட்ல எங்கள மாதிரி வக்கீலுங்க ஆஜரானாத்தானே நாங்க பொழைக்கலாம். இப்பிடி அவுங்கவுங்களே ஆஜராவ ஆரம்பிச்சா எங்க பொழைப்பு என்னாவறது? சுத்தி உக்காந்திருக்குற வக்கீலுங்க சும்மா இருக்க மாட்டாங்க. அவன் ஆஜரானா அதோட வீக் பாய்ண்ட்ஸ்ஸ எடுத்து நம்ம காதுல போட்டுக்கிட்டெ இருப்பாங்க. இப்போ அவனுக்குன்னு ஒரு வக்கீல் ஆஜரானா ஒம் பக்கத்துல நாம்ம ஒரு வக்கீல் மட்டும் ஆஜராவுறதா அர்த்தம். அவனே வக்கீலா மாறி ஆஜரானான்னா வெச்சுக்கோ ஒட்டுமொத்த கோர்ட்டுல இருக்குற வக்கீலுங்க அத்தனைப் பேருமே சேர்ந்து ஒனக்காக ஆஜராவுற மாதிரி அர்த்தம். புரியுதோ நோக்கு?"ன்னாரு வக்கீல் தர்க்கப்படி வௌக்குறாப்புல.

            "புரியுதுங்கய்யா!"ன்னா செய்யு வக்கீலு சொன்னதெ கேட்டு.

            "இப்போ புரியுதோ எதுக்குப் போன் பண்ணேன்னு? அவ்வேம் தரப்புல கட்டுக் கட்டா எதெயெதயோ தாக்கல் பண்ணி போயிட்டாம்ன்னும், ‍அதெ நம்ம வக்கீல் வேடிக்க பாத்துட்டு விட்டுப்புட்டான்னும் வீட்டுக்குப் பயந்துகிட்டு சுருண்டுகிட்டுக் கெடக்க கூடாதுல்ல. அவ்வேம் இன்னும் எவ்வளவு வேணும்ன்னாலும் தாக்கல் பண்ணட்டும். வழக்குக்கு வேண்டியது நாம்ம தாக்கல் பண்ண பெட்டிஷன் மட்டும்தாம். அது போதும். அதுலயே ஜெயிச்சிடலாம். நீ எதையும் நெனைக்காம கவலைப்படாம தூங்கு. ரொம்ப ஜாலியா திங்கக் கெழமெ‍ கெளம்பிக் கோர்ட்டுக்கு வா! யானை வாங்குறது முக்கியமில்ல, அங்குசமும் வாங்கணும் இல்லியா? அதெ போல இப்பிடி கட்டுக்கட்டா காகிதங்கள தாக்கல் பண்ணுறது முக்கியமில்ல. அதெ தெறமையா எடுத்து வழக்காட வக்கீல் முக்கியம் தெரிஞ்சிக்கோ!"ன்னு சொல்லிட்டுப் போனை வெச்சாரு திருநீலகண்டன் வக்கீல் ரொம்ப திருப்தியா.

            இந்த விசயத்த ரொம்ப சந்தோஷத்தோட சுப்பு வாத்தியார்கிட்டெயும் விகடுகிட்டெயும் சொன்னா செய்யு.

            செய்யு சொன்னதெ கேட்டுகிட்டு, "நமக்கென்னவோ நம்ம வக்கீல் இப்பல்லாம் ரொம்ப கோர்ட்டுல எதையும் பேசவே மாட்டேங்றாரு!"ன்னாம் விகடு தன்னோட சந்தேகத்த வெளிக்காட்டுறாப்புல.

            "நானும் கவனிச்சிட்டுதாம்டா இருக்கேம்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு விகடுவோட கருத்தெ ஆதரிக்கிறாப்புல.

            "யிப்போ போனடிச்சி அத்தனெ விசயத்தையும் சொல்றாரே?"ன்னா செய்யு வக்கீலு மேல சந்தேவப்பட ஒண்ணுமில்லங்ற மாதிரிக்கி.

            "நம்ம வக்கீல் சொல்றதையெல்லாம் நம்பிட முடியாது. கொஞ்ச நாளா‍வே அவரு மொகத்துக்கு நேரா எதயும் பேச மாட்டேங்றாரு. எதெ பேசுனாலும் கீமுழி முழிச்சிக்கிட்டுப் பேசுறாரு. இப்ப போன் பண்ணதுக்கான காரணமே நாம்ம கெளம்புறப்போ வக்கீல்கிட்டெ எதெயும் சொல்லிக்கிடல. நாம்ம பாட்டுக்கு ஐநூத்து ரூவா பணத்தெ கொடுத்தமா, கெளம்புனமான்னு யாருமெ ஒண்ணுஞ் சொல்லாம கெளம்பியாச்சு. கோர்ட்டுலயும் தாக்கல் பண்ண ஆவணங்கள்ல பெரிசா எதிர்ப்பு இல்லன்னு நம்ம வக்கீல் சொல்லிட்டதால, நம்ம வக்கீலு மேல நாம்ம சந்தேகப்படுறோமோங்ற நெனைப்பு அவருக்கு வந்திருக்கும். அதுக்குத்தாம் இந்த போன். அவ்வேம் சார்பா வக்கீல் ஆஜரானா ன்னா? ஆஜராவாட்டி ன்னா? நாம்மளும் கொஞ்சம் வழக்குல கவனமாத்தாம் இருந்தாவணும். ஒருவேள வக்கீல் சொன்னபடியே நடந்தும் இருக்கலாம். அப்பிடி நடந்திருந்தா இன்னொரு வக்கீல வெச்சித்தாம் அவ்வேம் வாதாடுவானே தவுர, அவனெ எறங்கி வாதாட மாட்டாம்? ஏன்னா பல நேரங்கள்ல அவனால கோர்ட்டுக்கே வார முடியல. அப்படி இருக்குறவேம் இந்த வக்கீல விட்டுப்புட மாட்டாம். இந்த வக்கீல் நமக்கு எதிர்தரப்பு வக்கீலா இருக்கலாம். இருந்தாலும் ரொம்ப விசுவாசமான ஆளா இருப்பாம் போலருக்கு. ரொம்ப சரியா ஆர்குடி கோர்ட்டு, திருவாரூரு கோர்ட்டுன்னு ஒவ்வொரு ஹியரிங்குக்கும் ரொம்ப சரியா எல்லாத்துக்கும் ஆஜராயிட்டுப் போயிட்டு இருக்காம். வழக்க எந்த எடத்துலயும் தொய்வடையவே வுடலயே. நம்ம வக்கீல் அப்பிடியில்லயே! திருவாரூரு கோர்ட்டுல ஆஜராவுறதோட செரி. ஆர்குடி கோர்ட்டுப் பக்கம் சுத்தமா எட்டியேப் பாக்குறதில்லயே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தம் மனசுல உள்ளதெ எடுத்து வைக்குறாப்புல.

            "நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையேப்பா?"ன்னா செய்யு கொழம்புனாப்புல.

            "அந்த ரண்டு பயலுகளுக்கும் பணம் கொடுக்குறதுல சண்டெ ஆயிருக்கலாம், ஆவாம இருந்திருக்கலாம். ஒருவேள சண்டெ ஆயி அப்பிடியே பேச்சும் நடந்திருக்கலாம். அந்த நேரத்து வேகத்துல எதிர்தரப்பு வக்கீலு நம்ம வக்கீலுக்குப் போனயும் அடிச்சிருக்கலாம். அதுக்காக எல்லாம் அப்பிடியே நின்னிருக்கும் சொல்ல முடியாதுல்லா. மறுக்கா நடந்ததெ மறுபரிசீலனை பண்டுறாப்புல அந்தப் பாக்குக்கோட்டையானும், வக்கீலும் கூட பேசிருக்க வாய்ப்பு இருக்குது. சம்பவம் இப்பிடி ஆயிடுச்சுன்னா லாலு வாத்திச் சும்மா இருக்க மாட்டாம். அவ்வேம் போயி மத்திசம் பண்ணி வுட மாட்டான்னு ன்னா நிச்சயம் இருக்கு? இன்னும் ரண்டு நாளு எடையில இருக்கு. அதுக்குள்ள என்னென்னவோ நடக்கலாம்! போ! போயிப் படு! இதெப் பத்தியெல்லாம் நெனைச்சிக்கிட்டு இருக்காதே. நம்ம வழக்க நாம்மத்தாம் நேராவும் ஒளிவு மறைவுயில்லாமலும் எதிர்கொண்டாவணும். இதுக்கெல்லாம் சந்தோஷப்பட்டுக்கிட்டு வழக்க சுலுவா எதிர்கொண்டுப்புடலாம்ன்னு நெனைச்சிட வாணாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு செய்யுவ உஷாரா இருக்கணும்ன்னு சொல்றாப்புல.

            "நீஞ்ஞ சொல்றதுதாம் சரிதாம்ப்பா!"ன்னா செய்யு இப்போ இன்னொரு பக்கத்தெப் பத்தி யோசிச்சுப் பாத்ததும்.

            "இவ்ளோ நாளு கோர்ட்டுக்கு அலைஞ்சதுக்குப் பெறவு ஒரு விசயத்த எப்படிப் பாக்கணுங்ற கோணம் புரிபடலன்னா அத்துச் சுத்தப்பட்டு வாராது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பாலாமணிகிட்டெ பட்ட அனுபவத்துலேந்து பாடத்தெ கத்துக்கிட்டு அதெ மவளுக்குப் போதிக்குறாப்புல.

            "செரித்தாம்பா!"ன்னு அதுக்கு மேல ஒண்ணும் சொல்லாம வந்த வழியிலயே திரும்ப கொல்லைப் பக்கம் நோக்கிப் பலத்த யோசனையோட போனா செய்யு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...