இல்லீங்கய்யா... நொள்ளீங்கய்யா...
செய்யு - 668
திருவாரூரு, ஆர்குடின்னு வழக்குக்கு இங்கயும்
அங்கயும்ன்னு மாறி மாறி அலைஞ்சதுல மூணு மாசம் ஓடுனது தெரியாம ஓடியிருந்துச்சு. ஓடிட்டு
இருக்குறப்ப நேரம் போறது தெரியாதும்பாங்க. அதாலத்தாம் எந்நேரமும் ஓடிட்டு அதாச்சி சுத்திக்கிட்டு
இருக்குற கடியாரத்துக்கு நேரம் போறதெ தெரியாம ஓடிட்டு அதாச்சி சுத்திட்டு இருக்குப்
போல. கடியாரத்துக்கு எங்க நேரம் போறது தெரியுது? அதெ பாக்குற நமக்குத்தாம் நேரம் போறது
தெரியுது. மூணு மாசத்துக்கு அப்புறமா புது ஜட்ஜ் சீஜேயெம் கோர்ட்டுக்கு வந்திருந்தாரு.
நெத்தியில விபூதிப் பட்டையோட சந்தனம் வெச்சு நடுவுல குங்குமம் வெச்சிருந்தாரு. பாக்குறதுக்கு
ரொம்ப பழக்கப்பட்ட மனுஷர்ரப் போல இருந்தாரு. பல வழக்குகள ரொம்ப விரைவா முடிச்சித்
தீர்ப்பு எழுதுற ஆளுன்னு இந்த ஜட்ஜப் பத்தி கோர்ட்டுல பேசிக்கிட்டாங்க. இந்த ஜட்ஜ்
வந்ததுக்குப் பெறவு ரொம்ப சரியா பத்து மணிக்குல்லாம் கோர்ட்டு ஆரம்பமாக ஆரம்பிச்சது.
பத்தரைக்குள்ள தேதிக் கொடுக்க வேண்டிய வழக்குகள சட்டு சட்டுன்னு முடிச்சிட்டு குறுக்கு
விசாரணை, வக்கீல் விவாதம்ன்னு அடுத்தக் கட்டத்துக்குப் போயிடுவாரு. அந்த வேகத்துல
பன்னெண்டு, பன்னெண்டரைக்கெல்லாம் கோர்ட்டு முடிஞ்சி மத்தியாம் சரியா ரண்டு மணிக்கெல்லாம்
திரும்ப கோர்ட்டு ஆரம்பமாயிடும்.
இந்த ஜட்ஜ் பச்சை நிற இங்கு பேனாவுலத்தாம்
எழுதுனாரு. நாட்டுல நெறைய பேரு இங்கு பேனாவ வுட்டுப்புட்டு லெட்டு பேனாவுக்கு மாறி
நாளாச்சு. அப்படியே இங்கு பேனா வெச்சிருக்கிறவங்களும் மேலால இங்க இழுக்குற ஹீரோ பேனாத்தாம்
வெச்சிருப்பாங்க. அதுலயும் இந்த ஜட்ஜ் வெச்சிருந்தது பெளண்டைன் இங்க் பேனா. அதுக்காகவே
டவாலி அவரு வர்றதுக்கு மின்னாடி இங்க் பாட்டுல்ல இங்க பில்லர்ர வுட்டு பேனாவுல இங்க
நெரப்புறதெ பாக்குறப்ப ரொம்ப வேடிக்கையா இருக்கும். சமயத்துல இங்க் செதறி அதெ தொடைச்சிருந்தா
அதெ சரியா கவனிச்சுக் ஜட்ஜ் கேட்டாரு. பல சட்டப் பிரிவுகள் அவருக்கு அத்துபடியாயிருக்கும்
போல. வக்கீல் யாராச்சும் சட்டப்பிரிவெ தப்பா சொன்னாலோ, சட்டத்துக்கு மாறாவோ வாதாடுனாவோ
ஒடனே அதெ சுட்டிக் காட்டிடுவாரு. அப்பிடி ல்லன்னு சொன்னா போதும் சட்டுன்னு சட்டப்
புத்தகத்தெ மேசையில இங்க இருக்குறத தூக்க அங்க படார்ன்னு போட்டு எடுத்துப் பாத்துட்டுச்
சொல்லுங்கன்னு மொகத்துல அடிச்சாப்புல சொன்னாரு. அதுக்காகவே சட்டப்புத்தகங்கள மேசை
மேல வேற அடுக்கி வெச்சிருந்தாரு. ஒவ்வொரு வழக்கும் மறுநாளு விசாரணைக்கு வர்றப்போ
வக்கீலுங்க அதெ படிக்கிறாங்களோ இல்லியோ, இந்த ஜட்ஜ் எல்லாத்தையும் படிச்சித் தயாரா
இருப்பாரு போலருக்கு. ஒவ்வொரு வழக்கப் பத்தியும் அட்சர சுத்தமா சுருக்கமா சொல்றதுல
ரொம்ப கில்லாடியா இருந்தாரு. அந்த வழக்கோட சாரம்சம் சட்டப் பிரிவுகளோட எப்படியெல்லாம்
சம்பந்தப்படுதுங்றதெ அவரு சொல்றப்ப ரொம்ப ரசமாவே இருக்கும்.
சில நேரங்கள்ல வக்கீலுங்க வாதாடுறப்போ
ஜட்ஜ்ஜ தாண்டி வெவரம் தெரிஞ்சாப்புலயும், அவருக்கு வழக்க வெவரிக்கிறாப்புல பேசுறதெயெல்லாம்
இவருகிட்டெ பேச முடியல. வழக்குக்குன்னு ஒரு நூலப் பிடிச்சா அதுக்கு இந்தாண்ட அந்தாண்ட
போவ முடியாம சரியா போவுறாப்புல அவரு வழக்கு நடத்துனதுலு வக்கீலுங்களுக்கு வாதாடுறதுக்கு
மின்னாடி நடுக்கமே உண்டாவ ஆரம்பிச்சிது. இந்த ஜட்ஜ் வந்தப் பெறவுதாம் வக்கீலுங்க கோர்ட்டுல
கேஸ் கட்டுகளப் பிரிச்சிப் படிக்கிறதையும், சட்டப் புத்தங்கள கொண்டாந்து வெச்சி அதெப்
பாத்து வாசிக்கிறதையும் பாக்க முடிஞ்சது. பல நேரங்கள்ல வக்கீலுங்களுக்குப் பாடம் எடுக்கவும்
ஆரம்பிச்சிடுவாரு இந்த ஜட்ஜ். வக்கீலுங்க தடுமாறி நின்னா போதும் நாளைக்கு நல்லாப்
பாத்துட்டு வாங்கன்னு சட்டுன்னு தேதிய மறுநாளுக்குப் போடுறதெயெல்லாம் இவருகிட்டத்தாம்
பாக்க முடிஞ்சது. இந்த ஜட்ஜ் வந்ததுக்குப் பெறவு அநாவசிய வாய்தாக்கள் கொறைய ஆரம்பிச்சது.
வழக்குக எல்லாம் வேகமெடுகக ஆரம்பிச்சதுன்னுத்தாம் சொல்லணும்.
கோர்ட்டுக்குள்ள அநாவசியமா யாரும் உள்ளார
வாரதையும், போறதையும் இந்த ஜட்ஜ் விரும்பல. கோர்ட்டோட நெலைப்படிக்கு வெளியில இம்மிச்
சத்தம் வந்தாலும் போதும் வழக்க வெசாரிக்கிறதெ நிறுத்திப்புட்டு எழும்பி வெளியில வர
ஆரம்பிச்சாரு. அவரு எழும்புனா போதும் போலீஸ் ஸ்டேசன்லேந்து கோர்ட்டுக்கு ஆஜராவ வந்திருக்கிற
போலீஸ்காரவுங்க சட்டுன்னு கூட்டத்தெச் சரி பண்ணி சத்தம் போடாம பண்ணுவாங்கப் பாருங்க,
அதெ பாத்துட்டு, "இதெ நாம்ம எழும்புறதுக்கு மின்னாடி பண்ணி வைக்கணும்!"ன்னு
கண்டிஷன்ன காட்டுவாரு. அநாவசியமா கோர்ட்டு நெலைப்படிக்கு மின்னாடி கூட்டம் கூடாம எப்பிடி
வழக்குகள திட்டம் பண்ணிக்கணுமோ அப்பிடி திட்டம் பண்ணிக்கிறது வரைக்கும் இந்த ஜட்ஜ்
எறங்கி வேல பாத்தாருன்னுத்தாம் சொல்லணும். அவருக்குக் கோர்டோட சின்ன சின்ன வேலைக வரைக்கும்
எல்லாமும் அத்துபடியாயிருக்கும் போல. மொத்த கோர்ட்டயும் தன்னோட வெரல் நுனியில் வெச்சிருக்கிறாப்புல
நடத்துனாரு.
இந்த ஜட்ஜோட வேகத்துக்கும் சுறுசுறுப்புக்கும்
பத்தரைக்கு மேல கோர்ட்டுல கூட்டத்தைப் பாக்கவே முடியாது. அதுவும் மின்ன மாதிரிக்கி
நசபுசன்னு யில்லாம, இந்த ஜட்ஜப் பத்தித் தெரிஞ்சிக்கிட்ட சனங்க அதுக்குத் தகுந்தாப்புல
ஒழுங்கா நிக்குறதையும், கோர்ட்டுக்குள்ளார நொழைஞ்சா செல்போன ஆப் பண்ணுறதும்ன்னு
ரொம்ப சரியா இருக்க ஆரம்பிச்சதுங்க. ஒரு சமயம் அப்பிடித்தாம் கோர்ட்டு சமயத்துல வெளியில
நின்ன சனங்க ரண்டு பேத்தோட செல்போன் சத்தம் போட்டுச்சுன்னு எழும்பி வந்துப் பாத்து
அபராதம் போட்டுட்டாரு. இன்னொரு தவா ஒரு போலீஸ்காரரோட செல்போன் ஒலிச்சதுக்கும்
அதெ கதியப் பண்ணாரு. வக்கீலுங்க, போலீஸ்காரவுங்க,
சனங்கன்னு எல்லாருமே இவர்ரப் பாத்தாலே போதும் தங்கள அறியாமலேயே தங்கள சரிபண்ணிக்கிற
ஒரு மனநிலைக்கு வந்துட்டாங்க. திருவாரூரு கோர்ட்கள்ல
ஒரு ராணுவ ஒழுங்கோட நடக்குற கோர்ட்டுங்ற பேர்ர சிஜேயெம் கோர்ட்டுக்கு அவரு வந்த சில
நாட்கள்லயே உண்டு பண்ணிட்டாரு.
அவரு அவ்வளவு கண்டிப்பு காட்டுனாலும் அவரோட
கிராமத்து மனுஷனப் போல இருந்த தோற்றமும், வெள்ளந்தியப் போல பேசுற அவரோட பேச்சும்
எல்லாருக்கும் ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. எல்லாத்தையும் விட பன்னெண்டு மணிக்கோ,
பன்னெண்டரைக்கோ கோர்ட்டு வெசாரணை முடிஞ்சாலும் ஜட்ஜூக்கான பின்னாடி இருக்குற அறையில
உக்காராம கோர்ட்டு முழுக்க ஒரு ரவுண்ட்டு நடை நடந்து சாதாரணமான மனுஷனப் போல அவரு
பேசுறது இது வரைக்கும் எந்த ஜட்ஜூம் பண்ணாதது. கோர்ட்டு நேரத்துல கடுகடுன்னு இருக்குற
அவர்ரா இப்பிடிச் சிரிச்ச மொகத்தோட எல்லார்கிட்டெயும் சர்வ சாதாரணமா பேசுறார்ன்னு
ஆச்சரியமா இருக்கும். வெளியில வர்றப்போ குடிதண்ணிக் கொழாய்லேந்து தண்ணி சொட்டிக்கிட்டோ
ஊத்திக்கிட்டோ இருந்தா போதும் அதெ சரியா மூடிட்டுப் போவாரு. ரொம்ப வித்தியாசமான
ஜட்ஜா இருந்த இவர்ர நாட்டாமக்கார ஜட்ஜூன்னுத்தாம் சனங்க அவுங்களுக்குள்ளப் பேசிக்கிட்டாங்க.
இந்த ஜட்ஜ் வந்ததுக்குப் பெறவு ஜீவனாம்ச
வழக்குல சீக்கிரமாவே தீர்ப்ப வழங்கிடுவாருன்னு சுப்பு வாத்தியாருக்குள்ள ஒரு நம்பிக்கெ
உருவானுச்சு. இவரு வர்றத்துக்கு மின்னாடி வரைக்கும் மூணு மாசமும் செய்யு எந்தத் தேதிக்கும்
விடாம ஆஜராயிட்டு இருந்தா. பாலாமணி தரப்புல கங்காதரன் வக்கீலும், ராசாமணி தாத்தா மட்டுந்தாம்
வந்துகிட்டு இருந்தாங்க. பாலாமணி வாரவே யில்ல. இவரு வந்ததும் அதெத்தாம் மொதல்ல கவனிச்சி,
"ஏன் ரெஸ்பாண்டன்ட் தொடர்ச்சியா அட்டென்ட் ஆவாம இருக்காரு?"ங்ற கெள்வியத்தாம்
கங்காதரன் வக்கீல்கிட்டெ கேட்டாரு.
"அவரு டாக்கடர்ரா இருக்குறதால வர
முடியல!"ன்னு அதுக்குப் பதிலச் சொன்னாரு கங்காதரன் பாருங்க, ஒடனே அதுக்கு,
"டாக்கடர்ரா இருந்தாலும் செரித்தாம், பிரசிடெண்டா இருந்தாலும் செரித்தாம் கோர்ட்டுன்னா
வந்துட்டா எல்லாரும் ஒண்ணுத்தாம். அப்பிடி கோர்ட்டுக்கு வர்றதுக்கு முடியலன்னா அதுக்கேத்தாப்புல
குடும்பத்தெ கோர்ட்டு படியேறாத அளவுக்கு நடத்தணும். கோர்ட்டு வரைக்கு வந்துட்டு டாக்கடர்ரா
இருக்கேங்றதால வரலன்னா ன்னா அர்த்தம்? அடுத்தத் தேதிக்குக் கட்டாயமா வாரணும்! ஜீவனாம்ச
கேஸ்ஸ ரொம்ப நாளு இழுத்தடிக்கக் கூடாது. நம்ம கணக்குக்கு ஆறு மாசத்துக்குள்ள முடிக்கணும்.
இதென்ன ஒண்ணரை வருஷத்துக்கு மேல போட்டு இழுத்துக்கிட்டுக் கெடக்கு? பர்தர் கிராஸ்ஸ
எப்பப் பண்றீங்க?"ன்னாரு ஜட்ஜ் நெத்தியடியா கேக்குறாப்புல.
"அய்யா கேஸ் கட்டுகளப் படிக்க ரண்டு
மூணு தேதிங்க எடுத்துப்பீங்கன்னு எதிர்பார்த்தேம்!"ன்னாரு கங்காதரன் பெனாத்துறாப்புல.
"அதெ நேத்தி ராத்திரிக்கே முடிச்சாச்சு.
அதெப் பத்தி நீங்க கவலப்பட வேணாம். பர்தர் கிராஸ்ஸ எப்ப முடிக்கிறீங்க? ரண்டு மாசந்தாம்
இதுக்கு டைம். அதுக்குள்ள ஜட்ஜ்மெண்ட்ட பண்ணியாவணும்!"ன்னு ஜட்ஜ் சொன்னதும் கங்காதரனுக்குக்
கொஞ்சம் அதிர்ச்சியாத்தாம் இருந்துக்கணும்.
"பர்தர் கிராஸ்ஸ யிப்பவே வாணாலும்
பண்ணுறேங்கய்யா!"ன்னாரு கங்காதரன் பதுங்கிப் பாயுற புலியப் போல பட்டுன்னு.
"ரெஸ்பாண்டண்டன்ட் இல்லாம நாம்ம கிராஸ்
பண்ண விடுறதில்ல. அடுத்தத் தேதியில ரெஸ்பாண்டன்டட் ஆஜராவணும். கிராஸ்ஸ முடிச்சிடணும்.
அதுக்கு அடுத்தத் தேதியில பெட்டிஷனர் சைட் லாயர் ரெஸ்பாண்டன்ட்ட கிராஸ் பண்ணி முடிச்சிடணும்.
அடுத்தத் தேதி இன்னிலேந்து வர்ற மூணாவது நாளு வியாழக்கெழமெ. அன்னிக்கு ஒங்க சைட் கிராஸ்ஸ
கம்ப்ளீட் பண்ணிடுங்க. அப்பிடிப் பண்ணாட்டி ஒங்க சைட் கிராஸ் முடிஞ்சதாத்தாம் அர்த்தம்.
அதுக்கு மேல டைம் தர்ற மாட்டேம். புரிஞ்சிதா?"ன்னாரு ஜட்ஜ் அறுத்துக் கட்டிப்
பேசுறாப்புல. அதுக்குச் சரிங்ற மாதிரிக்கித் தலைய ஆட்டுனாரு கங்காதரன். அன்னிக்குக்
கோர்ட்டு அப்படி ஒரு விறுவிறுப்பா முடிஞ்சது செய்யுவுக்கு புது ஜட்ஜ் வந்ததும்.
அடுத்த தேதி வியாழக் கெழம வந்தப்போ அந்தத்
தேதியில கட்டாயம் கங்காதரன் வக்கீலு கிராஸ் பண்ணி முடிச்சிடுவாருன்னுத்தாம் சுப்பு
வாத்தியாரு, செய்யுவோடயும், விகடுவோடயும் எதுக்கும் இருக்கட்டம்ன்னு இந்தப் புது
ஜட்ஜப் பத்தி ஓகையூரு கைப்புள்ளைக்கிட்ட சொல்ல கைப்புள்ளையையும் அழைச்சிக்கிட்டுப்
போனாரு. கைப்புள்ள கூட வர்றது மனசுக்குத் தொணையாவும், தெம்பாவும் இருக்கும்ங்ற நம்பிக்கெத்தாம்
அதுக்குக் காரணமா இருந்துச்சு. ரொம்ப நாளா கோர்ட்டுப் பக்கம் வார முடியாம போயிட்ட கைப்புள்ளையும்
வழக்கோட நெலவரம் எப்படி இருக்குங்ற பாக்குற ஆவலாதியில கூப்புட்டதும் கௌம்பி வந்தாரு.
எப்படியோ இன்னிக்கு அந்த குறுக்கு வெசாரணை முடிஞ்சா ஒரு டென்ஷன் முடிஞ்சிடும்ன்னு
செய்யுவும் நெனைச்சா. ஆன்னா அன்னிக்கு நடந்த கதெயே வேறா இருந்துச்சு.
கங்காதரன் வக்கீலோட பாலாமணி, ராசாமணி
தாத்தா, ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் எல்லாரும் வந்தாங்க. கங்காதரன் வக்கீல் குறுக்கு
விசாரணையத் தொடங்குவாருன்னு பாத்தா கூடுதலா ரெஸ்பாண்டட் சைட் பெட்டிஷன் ஒண்ணுத்தெ
கோர்ட்டு கிளார்க்குகிட்டெ கொடுத்து ஜட்ஜூகிட்டெ கொடுக்க வெச்சாரு. அது என்னங்ற மாதிரிக்கிப்
பாத்த ஜட்ஜ் அதெப் பிரிச்சிப் பாத்துட்டு அடுத்த நொடியே மின்னல் அடிக்குறாப்புல,
"இப்பிடில்லாம் சட்டத்துல எங்க எடம் இருக்குன்னு சொல்லிட்டு இதெ தாக்கல் பண்ணுங்க?"ன்னாரு
கங்காரன் வக்கீல்லப் பாத்து மொகத்தச் சுளிக்குறாப்புல.
"மின்னாடி கொடுத்த பெட்டிஷன்ல சில
விசயங்க விடுபட்டுப் போச்சுங்க்யயா! அதெ சேக்கத்தாம் இத்து!"ன்னாரு கங்காதரன்
வக்கீல் கிளார்க் மேசையில சாய்ஞ்சு படுத்த வாக்குல.
"மொதல்ல நிமுந்து நில்லுங்க. இதென்ன
மேசையில படுத்துக்கிட்டு!"ன்னாரு ஜட்ஜ் ஒரு கூர்மையான பார்வெ பாத்தபடிக்கு. அதெ
கேட்டுட்டு நிமுந்து நிக்க ஆரம்பிச்சாரு கங்காதரன்.
"இத்து எந்தச் சட்டப்பிரிவுக்குக்
கீழே வருதுன்னு சொல்லுங்க?"ன்னு இப்போ அழுத்தம் திருத்தமா கேட்டாரு ஜட்ஜ்.
"அத்து வந்துங்கய்யா இல்லீங்கய்யா..."ன்னு
கங்காதரன் வக்கீலு தடுமாறிக் கொளறிச் சொன்னதும், "இதென்ன இல்லீங்கய்யா, நொள்ளீங்கய்யான்னுகிட்டு.
ஒரு வக்கீல் இப்பிடியாப் பேசுறது? மொதல்ல திருத்தமாப் பேசுங்க! இந்தாங்க சட்டப் புத்தகம்.
இதுல எந்த எடத்துல இப்பிடி பண்ணலாம்ன்னு இருக்குன்னு காட்டுங்க? சட்டத்துல என்ன இருக்குதோ
அதெ செய்யுறதுக்குத்தாம் கோர்ட்டு புரிஞ்சிதா? ஒங்க இஷ்டத்துக்குல்லாம் செய்யுறதுக்கு
இத்து என்னா கட்டப் பஞ்சாயத்தா கேக்குறேம்?"ன்னு ஜட்ஜ் மேல இருந்த சட்டப் புத்தகத்துல
ஒண்ணுத்தெத் தூக்கி மேசையில இந்தாண்டயிலிருந்து அந்தாண்ட தூக்கிப் போட்டாரு. கங்காதரன்
ஒண்ணும் சொல்ல முடியாம பாவமா ஜட்ஜப் பாத்தாரு.
"இதெ நாம்ம வாங்கிட்டா பெட்டிஷனர்
சைடுலேந்து அடிஷனலா ஒண்ணுத்தெ பைல் பண்ணுவாங்க. அதுக்கு அடுத்தாப்புல அதுக்கேத்த மாதிரி
நீங்க இன்னொரு அடிஷனல பைல் பண்ணா, இந்த பைல் பண்ணுற வேலைக்கு முடிவே இருக்காது. மாத்தி
மாத்தி இத்து மாதிரி பண்ணிக்கிட்டெ இருக்க வேண்டியதுதாம். வேஸ்ட ஆப் த டைம். கோர்ட்டோட
டயத்த நீங்க வீணடிக்கிறீங்க. மிஸ்டர் திருநீலகண்டன் ஒங்க பக்கத்துலேந்து எதாவது அடிஷனலா
பைல் பண்ணணுமா? இப்பவே சொல்லிடுங்க!"ன்னாரு ஜட்ஜ் அடுத்ததா திருநீலகண்டன் வக்கீலப்
பாத்து. வந்த கொஞ்ச நாள்லயே இந்த ஜட்ஜ் வக்கீலுங்களோட பேரு சொல்லி கூப்புடுற அளவுக்கு
வக்கீலங்களப் பத்தின சகல வெவரங்களையும் எப்படியோ தெரிஞ்சும் வெச்சிருந்தாரு.
"நாங்க ஏற்கனவே தாக்கல் பண்ண வேண்டியதெ
தாக்கல் பண்ணிட்டோம். அதுக்கு மேல எதுவும் தேவையில்லன்னு நெனைக்கிறேம்ங்கய்யா!"ன்னாரு
திருநீலகண்டன் ரொம்ப பவ்வியம் காட்டிப் பேசுறாப்புல.
"ரெஸ்பாண்டட் சைட்ல இப்பிடி ஒரு பெட்டிஷன்ன
பைல் பண்ணுறதுல ஒங்களுக்கு எதுவும் அப்ஜெக்சன் இருக்கா?"ன்னாரு ஜட்ஜ் இன்னொரு
தரப்பு கருத்தையும் கலந்துக்குறாப்புல.
"நோ அப்ஜெக்சன்!"ன்னாரு திருநீலகண்டன்
துப்பாக்கியிலேந்து யோசிக்காம பொறப்பட்ட தோட்டவப் போல.
"இதெ கன்சிடர் பண்ணுறதா வேணாமாங்றதா
பிறகுப் பாத்துக்கலாம்! பர்தர் கிராஸ்ஸ முடிச்சிடுறீங்களா?"ன்னாரு ஜட்ஜ் கங்காதரனப்
பாத்து அடுத்தக் கட்டத்துக்குப் போறாப்புல.
"இந்தப் பெட்டிஷனுக்கு சில ஆவணங்கள
தாக்கல் பண்ணணும்!"ன்னாரு கங்காதரன் மெல்லிசான கொரல்ல.
"இதெ ஏத்துக்கிறதா வேணாங்றதையே இன்னும்
முடிவு பண்ணல. இதுக்கு ஆவணங்கள்ன்னா ஒண்ணும் புரியலையே?"ன்னாரு ஜட்ஜ் ஊசி வெச்சு
குத்துறதுப் போல வெசனக் கடுப்புல.
"இல்லீங்கய்யா..."ன்னு ஒரு இழுப்பு
இழுத்து, "அவசியம் தாக்கல் பண்ணணுங்கய்யா....!"ன்னாரு மேக்கொண்டு இழுத்து
கங்காதரன்.
"சரிங்கய்யா... தாக்கல் பண்ணுங்கய்யா..."ன்னு
ஜட்ஜூம் கங்காதரன் பேசுற அதெ தொனியில் இழுத்துப் பேசுறாப்புல கங்காதரன கிண்டல் அடிக்கிறாப்புல
சொன்னாரு.
"அதுல அதாச்சி அந்த ஆவணங்களல கொஞ்சம்
தயார் பண்ண வேண்டியதா இருக்கு. ரண்டு மணி நேரம் அவகாசம் கொடுத்து பாஸ் ஓவர் பண்ணி
வெச்சா ஒடனே தாக்கல் பண்ணி முடிச்சிடுறேம்!"ன்னாரு கங்காதரன் நாலா தெசையையும்
ஒரு பார்வெ பாத்துக்கிட்டு.
"செரிங்கய்யா... பாஸ் ஓவர் பண்ணியாச்சுய்யா...
சார்ப்பா பன்னெண்டரைக்கெல்லாம் வந்திடணும்ங்கய்யா..."ன்னு ஜட்ஜூம் கங்காதரன் பேசுறதெப்
போல பேசிட்டு, "பாஸ் ஓவர்!"ன்னு சொல்லிட்டு அடுத்த வழக்கக் கூப்புடச் சொன்னாரு.
கங்காரன் வக்கீல் ஒடனே பாலாமணியோட வேக
வேகமா வெளியில வந்து எல்லாரையும் அழைச்சிக்கிட்டு வெளியில போனாரு. அப்படிப் போறப்ப
ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன், "இதுவரைக்கும் வெச்சதெல்லாம் சாதா வெடிதாம்லே!
இனுமே வைக்கப் போறதுதாம் மரண வெடிலேய்! இத்து வெடிச்சிதுன்னாத்தாம் தெரியும் பட்டாஸ்ன்னா
எப்பிடி?"ன்னு சொல்லிட்டுப் போனாம்.
அதெ கேட்டுப்புட்டு கைப்புள்ள, "போங்கய்யா...
நீங்க வைக்குறதெல்லாம் வெடிக்காத வெடிதாங்கய்யா..."ன்னு கங்காதரன் வக்கீலு பேசுறாப்புல
இழுத்து நக்கலா சொன்னாரு. அதெ கேட்டுக்கிட்டு மொறைச்சிக்கிட்டெ போனாம் ராசாமணி தாத்தாவோட
அண்ணன் பையன்.
"யிப்பிடித்தாம் ஒவ்வொரு தவாவும்
பேசிட்டுப் போறானுவோ!"ன்னா வெளியில வந்த செய்யு அதெ கேட்டுக்கிட்டு.
"பேசிட்டுப் போனா நாமளுந்தாம் பதிலுக்குப்
பேசணும். அப்பத்தாம் அடங்குவானுவோ. அதெ வுட்டுப்புட்டு கேட்டுக்கிட்டு வந்தா திரும்பத்
திரும்பத்தாம் பேசிட்டுப் போவாம் அந்த பையித்தூக்கி!"ன்னாரு கைப்புள்ள நெலமைக்குத்
தக்காப்புல நடந்துக்கணுங்றதெ காட்டுறாப்புல.
"பேசுனா பேசிட்டுப் போறாம் போங்க.
ஏதோ வர்றதுக்கும் பைய்யத் தூக்கிட்டு நிக்குறதுக்கும் இந்தப் பயலுக்கு அந்தப் பயெ
காசு கொஞ்சம் கொடுப்பாம். இப்பிடி பேசிட்டுப் போனாத்தானே அதெ அந்தப் பயெ கொடுக்குற
காசியத் திருப்தியா கொடுப்பாம்! அதுக்காகத்தாம் பேசுறாம். எய்தவேம் ஒருத்தெம் இருக்க
அம்ப நோவுற கதெத்தாம் இவ்வேம் பேச்சுக்குப் பதிலு பேச்சு பேசுறதல்லாம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"ஏதேது கோர்ட்டுக்கு வந்து ஒங்கப்பாரு
மகானாயிட்டாரு போலருக்குடா விகடா! யிப்பிடியே பேசிட்டு இருந்தா சுத்தப்படாது கேண்டீனுக்குப்
போயி டீய அடிச்சிட்டு வருவேம்! அப்பத்தாம் ஒடம்புல கொஞ்சம் உணர்ச்சி வாரும் போலருக்கு!"ன்னாரு
கைப்புள்ள விகடுவப் பாத்து கண்ணடிச்சுக் கிண்டலடிக்குறாப்புல.
"இந்த ஜட்ஜ் நேரத்துல ரொம்ப கண்டிப்பா
இருப்பாரு. பன்னெண்டரைக்குள்ளார வந்தாவணும்!"ன்னா செய்யு தன்னோட கோர்ட்டு அனுபவத்தெ
எடுத்துச் சொல்றாப்புல.
"மணி பதினொண்ணே கால் கூட ஆவல. பன்னெண்டரைக்குள்ளார
வார முடியாதா?"ன்னு சொல்லிட்டு கைப்புள்ள எல்லாரையும் அழைச்சிக்கிட்டுக் கோர்ட்ட
விட்டு வெளியில வந்து கேண்டீனப் பாக்க நடக்க ஆரம்பிச்சாரு. கேண்டீன்ன நோக்கி அவரு நடந்த
நடைக்கு மித்த எல்லாரும் அவரு பின்னாடி ஓட வேண்டியதா இருந்துச்சு. அவ்ளோ உற்சாகமாகவும்
தெடமாவும் வேகு வேகுன்னு நடந்தாரு கைப்புள்ள.
*****
No comments:
Post a Comment