வழக்கு மேல் வழக்குகள்!
செய்யு - 667
அடுத்த குறுக்கு விசாரணைக்குச் செய்யு
ரொம்ப தெகிரியமாவே மனதெ திடம் பண்ணிட்டுக் கெளம்புனா. எதுக்கும் துணைக்கு இருக்கட்டும்ன்னு
விகடுவும், சுப்பு வாத்தியாரும் கூடவே கெளம்புன்னாங்க. யாரும் தங் கூட வர வேணாம்ன்னு
செய்யு பிடிவாதமா நின்னா. அவ்வே பிடிவாதத்தெ சமாளிச்சி சுப்பு வாத்தியாரும், விகடுவும்
கூடவேத்தாம் வந்தாங்க. வந்தா சிஜேம் கோர்ட்டு ஜட்ஜ் புரோமஷன்ல போயிருந்தாரு. புது
ஜட்ஜ் வந்துத்தாம் கேஸ்ஸூ மறுபடியும் புதுசா தொடங்கணும்ன்னாரு வக்கீல் திருநீலகண்டன்.
அதுவரைக்கும் தேதித்தாம் கொடுப்பாங்க. வந்துட்டுப் போயிட்டு இருக்க வேண்டியதுத்தாம்னாரு.
எதுக்குத் தயாரா கெளம்பி வந்தா இப்பிடி ஆவுதேன்னு நெனைச்சா செய்யு. செய்யுவோட வாழ்க்கையெ
ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. அவ்வே நெனைக்குறது ஒண்ணாவும் நடக்குறது ஒண்ணாவும் இருந்துச்சு.
அவளும் தெகிரியமா இருக்க முடியும்ன்னு நெனைக்குற நெலையில தெகிரியம் இல்லாமலயும், தெகிரியமா
இருக்க முடியாதுன்னு நெனைக்குற நெலையில தெகிரியமாவும் வித்தியாசமா நடந்துகிட்டா.
அடுத்ததா ஆர்குடி குற்றவியல் கோர்ட்டுல
வன்கொடுமெ வழக்குல ஒருதலைபட்சமாகத் தீர்ப்பாயிருந்ததுல சட்டிசைடு பண்ணி வழக்குக்கு
உள்ளார வந்திருந்த பாலாமணி கங்காதரன் வக்கீல் மூலமா பதில் மனுவெ தாக்கல் பண்ணிருந்தாம்.
செய்யு தரப்புல அடுத்ததா நிரூபண வாக்குமூலம், சாட்சிகளோட வாக்குமூலம், ஆவணப் பட்டியல்ல
கொடுத்த விவரங்களோட ஆவணங்கள்ல சில அசல் ஆவணங்கள தாக்கல் பண்ண வேண்டிய வேல பாக்கியிருந்துச்சு.
அது சம்பந்தமா ஒவ்வொரு தவா செய்யு போறப்பயும் ஜட்ஜ், "சீக்கிரமா ஒங்க வக்கீல
வரச்சொல்லி அதெ தாக்கல் பண்ணுங்க!"ன்னு சொல்லிட்டெ இருந்தாரு. அதெ போல ஆர்குடி
சார்பு நீதிமன்றத்துல ஹெச்செம்ஓப்பி வழக்குலயும் பதில் மனுவும் தாக்கல் பண்ணாம இருந்துச்சு.
அதுக்கும் சீக்கிரமாவே பதில் மனுவே தாக்கல் பண்ணச் சொல்லி அங்க இருந்த ஜட்ஜூம் சொல்லிக்கிட்டெ
இருந்தாரு. இப்பிடி ஜட்ஜ் சொல்ற ஒவ்வொரு மொறையும் கோர்ட்ட வுட்டு வெளியில வந்த
ஒடனே செய்யு வக்கீல் திருநீலகண்டனுக்குப் போன அடிப்பா. அவரு ஒடனே அடுத்த வாய்தாவுல
தாக்கல் பண்ணிடுவோம்பாரு. ஆன்னா அடுத்த வாய்தாவுக்கு அவரு வர மாட்டாரு. முக்கியமான
கேஸ்ஸூ இருக்குறதாவும், குறுக்கு வெசாரணை இருக்குறதாவும் எதாச்சும் ஒரு காரணத்தெ சொல்லித்
தட்டிக் கழிச்சிக்கிட்டெ இருந்தாரு. இந்த வழக்குகள்ல ஒரு விசயம் என்னான்னா நடந்தா எல்லாம்
வேகு வேகமா எல்லாம் ஒரே நேரத்துல நடக்கும். இல்லாட்டி இப்படித்தாம் எதுவும் அந்தாண்ட
இந்தாண்ட நகர முடியாத அளவுக்கு மெதுவா நடக்கும்.
ஒவ்வொரு வாய்தாவுக்கும் செய்யு வக்கீல்
இல்லாம போறதும், ஜட்ஜூங்க கூடிய சீக்கிரமா தாக்கல் பண்ண வேண்டிய காயிதத்தெ தாக்கல்
பண்ணுங்கன்னு சொல்றதும் தொடர்கதெயா ஆவ ஆரம்பிச்சது. எதிர்தரப்பு கங்காதரன் வக்கீல்
இதெ ஒரு குத்தமா ஜட்ஜூகிட்டெ சொல்ல ஆரம்பிச்சாரு. கங்காதரன் வக்கீலும், ராசாமணி தாத்தாவும்
ஒவ்வொரு வாய்தாவுக்கும் தவறாம ஆஜராயிட்டு இருந்தாங்க. பாலாமணி ஆஜராவுல. செய்யு தரப்புல
தாக்கல் பண்ண வேண்டிய காயிதங்கள தாக்கல் பண்ணாம இருந்ததால பாலாமணிக்காக ஆஜரான கங்காதரன்
வக்கீலு வழக்க இழுத்தடிக்க இதெ ஒரு உத்தியா பயன்படுத்துறதாவும், போட்டுருக்குற வழக்குல
உண்மெ எதுவும் கெடையாதுங்றதால மேக்கொண்டு எதெயும் அவுங்களால தாக்கல் பண்ண முடியாதுன்னும்
அடிக்கடி ஜட்ஜூகிட்டெ சொன்னாரு. இதெ கேக்க செய்யுவுக்கு எரிச்சலா வந்துச்சு. இதெ ஒரு
தடவென்னு இல்லாம, கோர்ட்டுக்கு வர்ற ஒவ்வொரு தடவெயும் ஜட்ஜூகிட்டெ சொல்ல ஆரம்பிச்சாரு
கங்காதரன் வக்கீலு. இதெ சொல்றதுக்காகவே அவரு கோர்ட்டுக்கு வர்றாரோன்னு செய்யு நெனைச்சா.
ஒவ்வொரு தவாவும் விடாம வேற அந்த வக்கீலு இதெ சொல்றதுக்காவே ஆஜராயிட்டும் இருந்தாரு.
செய்யுவோ வக்கீலு இல்லாம தாம் மட்டும் சுப்பு வாத்தியாரோட போயி ஆஜராயிட்டு இருந்தா.
ஒரு தடவெ வழக்கம் போல செய்யு தரப்புலேந்து
தாக்கல் பண்ண வேண்டிய காயிதங்க தாக்கல் பண்ணாம இருக்குறதைக் கங்காதரன் வக்கீலு ஜட்ஜூகிட்டு
சொல்லிட்டு இருந்தப்போ செய்யு அவ்வே பாட்டுக்கு, "அவுங்க தரப்புலேந்து வக்கீல்தாம்
ஆஜராவுறாரு தவுர அவரோட கட்சிக்காரரு ஒரு தடவே கூட ஆஜராகவேயில்ல!"ன்னுட்டா பொட்டுல
அடிக்கிறாப்புல சொல்லிட்டா. வழக்கமா கங்காதரன் வக்கீலு எதெச் சொன்னாலும் அதெ காதுல
வாங்கிக்காததப் போல எழுதிக்கிட்டு இருக்குற ஜட்ஜூ அன்னிக்கு அப்பிடித்தாம் எதையோ
எழுதிக்கிட்டு இருந்தவரு செய்யு சொல்றதெக் கேட்டு டக்குன்னு நிமிர்ந்துப் பாத்தாரு.
கோர்ட்டுல இருந்த அத்தனெ பேரும் செய்யு இப்படிச் சொன்னதெ சட்டுன்னு ஆச்சரியமா பாத்தாங்க.
செய்யுவே நாம்மளா இப்படிக் கேட்டோம்ன்னு தன்னெத் தானே ஆச்சரியமா பாத்துக்கிட்டா. அப்படிக்
கேட்டதெ அவளாலயும் நம்ப முடியல. ஜட்ஜ் செய்யுவப் பாத்தவரு கங்காதரனப் பாத்து,
"எப்ப ஒங்க கட்சிக்காரரு ஆஜராவப் போறாரு? அவுங்க கேக்குறது ஞாயந்தானே?"ன்னாரு.
அன்னிலேந்துதான் கங்காதரன் வக்கீல் ஜட்ஜூகிட்டெ செய்யு தரப்புலேந்து காயிதங்கள எதுவும்
தாக்கல் பண்ணுறதில்லங்றதெ பேசுறதெ நிறுத்துனாரு. அதுக்குப் பெறவு அவரு பாட்டுக்கு வர்றதும்
போறதும், வாய்தாவ தாக்கல பண்ணுறதுமா இருக்க ஆரம்பிச்சாரு.
இருந்தாலும் திருநீலகண்டன் வக்கீல் வர்றாம
இழுத்தடிக்கிறதெ நெனைச்சு செய்யு மனசளவுல ரொம்ப தளந்துப் போக ஆரம்பிச்சா. அதெ அடிக்கடி
சொல்லி வருத்தப்படவும் செஞ்சா. இதெ நெனைச்சு நெனைச்சு சில நாள்கள்ல தன்னையுமறியாம
கலங்கி அழுவவும் ஆரம்பிச்சிட்டா. இத்தெ இப்படியே வுடக் கூடாதுன்னு தொணுச்சு அவளுக்கு.
இதுக்காகவே ஒரு நாளு அப்பங்காரர அழைச்சிக்கிட்டு திருநீலகண்டன் வக்கீலோட ஆபீஸூக்கேப்
போயிப் பேசுனா.
வக்கீல ஆபீஸ்ல பாத்ததுமே அவரு நல்லா இருக்காரா
இல்லையான்னு வெசாரிக்காமலேயே நேரடியா, "கோர்ட்டுல அடுத்ததா எதுவும் தாக்கல் பண்ணலன்னு
சொல்லி அந்த வக்கீலு அசிங்கம் பண்ணுறாவோ! வந்து மட்டும் தாக்கல் பண்ணிட்டுப் போயிடுங்கய்யா!"ன்னா
செய்யு வக்கீல்கிட்டெ கெஞ்சுற தொனியில.
"நமக்கென்ன வர்றக் கூடாதுன்னா நெனைப்பு?
வர்ற முடியலம்மா! இங்க வழக்கு, குறுக்கு விசாரணைன்னு வேலைக அதிகமாக இருக்குறதால திருவாரூர்லயே
பல வழக்குகள்ல சமயத்துல ஆஜராவ முடிய மாட்டேங்குதும்மா!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன்
தன்னோட வேலைப்பாட்டோட நெருக்கடிய காட்டிக்குறாப்புல.
"நீங்க வாராட்டியும் பரவாயில்ல. ஒஞ்ஞளுக்குத்
தெரிஞ்ச வேற வக்கீல் யாராச்சும் ஒங்க சார்பா ஆஜராயி அதெ தாக்கல் பண்ணவாவதுச் சொல்லுங்க!"ன்னா
செய்யு பட்டுன்னு வக்கீலே எதிர்பாக்காத ஒரு கோணத்துல.
திருநீலகண்டன் வக்கீல் பொசுக்குன்னு அண்ணாந்து
பாத்தாரு. "வேற ஒருத்தர்ர இந்த வழக்குக்குள்ளார நொழைச்சேம்ன்னா வெச்சுக்கோ இந்த
வழக்கெ ஒண்ணுமில்லாமப் போயிடும். இந்த வழக்குல இருக்கற அத்தனெ ரகசியங்களையும் அவ்வேம்
அப்பிடியே எதிர்தரப்பு வக்கீலுக்கு வித்துப்புட்டுப் போயிட்டே இருப்பாம். அதுக்காத்தாம்
நாம்ம ஆபீஸ்க்கே பாத்தீன்னா ஆபீஸப் பாத்துக்குறதுக்குன்னு யாரையும் போடுறதில்ல. அசிஸ்டென்ட்,
ஜூனியர்ன்னு இல்லாத ஒரே வக்கீல் நாம்மத்தாம்! பட் அட் த சேம் டைம் கோர்ட்டுக்கு அடிக்கடிப்
போயி போயி வக்கீலப் போலவே பேசக் கத்துக்கிட்டே! ஐ அப்ரிசியேட் யூ!"ன்னாரு வக்கீலு
தன்னோட நெலைப்பாட்டச் சமாளிக்குறாப்புல.
"எத்தனெ நாளு நாம்ம இப்பிடியே சமாளிக்கிறது?"ன்னா
செய்யு முடிவா கேக்குறாப்புல.
"கொஞ்சம் பொறுத்துக்கோம்மா! சீக்கிரமாவே
எல்லாத்தையும் தயார் பண்ணிட்டு ஓடியாந்திடுறேம். அங்க வந்தா ஒரு நாளு ஆயிடும்ன்னு பாக்குறேம்.
இங்க கேஸூங்க ரொம்ப அதிகமாவே இருக்கு! நீயிப் போயி ஆஜராயிட்டெ இரு. நீயி ஆஜராயிட்டு
இருக்குற வரைக்கும் வழக்குல எந்தத் தொய்வும் வந்துடாது. பயப்படாதே. திடீர்ன்னு ஒரு
நாளு ஒங்கிட்டெ கூட சொல்லாம வந்து நிப்பேம் பாரு!"ன்னாரு வக்கீலு செய்யுவ சாந்தம்
பண்டுறாப்புல.
"நமக்கு ரொம்ப பயமா இருக்குங்கய்யா!
வழக்குல எதாச்சும் ஆயிடுமோன்னு?"ன்னா செய்யு தன்னோட மனநெலையக் காட்டுறாப்புல.
"ஆமாங்கய்யா! கொஞ்சம் அவளுக்கு நம்பிக்கெ
தர்றாப்புல ஒரே தவா மட்டும் ஆஜராயிட்டுப் போயிடுங்க. காரு வாணாலும் ஏற்பாடு பண்ணித்
தர்றேம். வந்துட்டு முடிஞ்ச ஒடனே கார்லயே வந்துடலாம். கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா!
மவளோட மனசுக்காக ரொம்ப மெனக்கெட வேண்டியதா இருக்குங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரும்
ஊடால பூந்து தயவு காட்ட வேணுங்றாப்புல.
"என்னா சார்! சின்னப் பொண்ணு புரிஞ்சிக்காம
பேசுறான்னா, நீங்களும் அப்பிடியே பேசுனீங்கன்னா? நாம்ம அன்னிக்கே சமரசம் பண்ணி முடிச்சுக்கோங்கன்னு
சொன்னப்ப முடியாதுன்னீங்க. அன்னிக்கே நாம்ம சொன்னேம், வழக்குன்னா முடியுறதுக்கு அஞ்சாறு
வருஷம் கூட ஆவும்ன்னு. அதுக்குல்லாம் ஒத்துக்கிட்டுத்தாம் சார் பேசுனீங்க. இன்னிக்கு
வந்து நம்மள அவசரப்படுத்துனீங்கன்னா?"ன்னாரு வக்கீலு திடீர் பாய்ச்சல் காட்டுறாப்புல.
"அவசரம்லாம் படுத்தலங்கய்யா! இத்தோட
ஆறு ஹியரிங்க ஆயிடுச்சு கோர்ட்டுல தாக்கல் பண்ணச் சொல்லி!"ன்னா செய்யு வழக்கோட
இழுபறி நெலைய விளக்குறாப்புல்ல.
"அதெல்லாம் அப்பிடித்தாம் சொல்லுவாங்க.
நமக்குத் தெரியும் எப்போ தாக்கல் பண்ணணும்? எப்போ நாம்ம நேர்ல வாரணும்ன்னு? புரியுதோ?
அதுவரைக்கும் போயிட்டும் வந்துகிட்டும் இருங்க. சொல்றதெ கேளுங்க! ரொம்ப போட்டுப்
படுத்தாதீங்க!"ன்னாரு வக்கீல் கொஞ்சம் காட்டமா.
"இல்லீங்கய்யா! கொஞ்சம் பெரிய மனசு
பண்ணி ஒரே தவா மட்டும் வந்துட்டுப் போயிட்டீங்கன்னா நல்லா இருக்கும். ஏன்னா ஜட்ஜூம்
இதெத்தாம் சொல்றாங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நயப்பாடா சொல்றாப்புல.
"இந்தப் பாருங்க சார்! நாம்ம சொல்ல
வேண்டியதெ சொல்லியாச்சு. நம்ம மேல நம்பிக்கை இருந்தா பாருங்க. இல்லன்னா இந்தாங்க கேஸ்
கட்டத் தர்றேம். யாரு ஒங்களுக்குத் தோதா ஒவ்வொரு தவாவும் வந்து ஆஜராவோங்களோ அவுங்ககிட்டெக்
கொண்டுப் போயிக் கொடுத்து வாதாடிக்குங்க. நமக்கு ஒண்ணுமில்ல. நோ அப்ஜெக்சன் போட்டு
ஒடனே கையெழுத்தப் போட்டுத் தர்றேம்!"ன்னாரு வக்கீலு சங்குல கத்திய வெச்சு மெரட்டுறாப்புல.
வக்கீலு அப்படிச் சொன்னதுமே சுப்பு வாத்தியாரு
படபடத்துப் போனாரு. "என்னங்கய்யா எடுத்த எடுப்புல இப்பிடிச் சொல்லிப்புட்டீங்க?
ஒஞ்ஞள நம்பித்தாம் இந்த கேஸ்ஸப் போட்டதெ! இருந்தாலும் மனசுல இருக்குற பயத்தெ, சந்தேகத்தெ
நெனைச்சித்தாம் கேட்டது. மித்தபடி நம்பிக்கெ யில்லாமல்லாம் யில்ல. ஒஞ்ஞள நம்பாமலா வாஞ்ஞன்னு
சொல்றேம்? வந்துட்டுப் போயிட்டீங்கன்னா அந்த வக்கீலு என்னவோ குசுகுசுன்னு பேசுறதும்
நின்னுடும்ங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெலவெலத்துப் போனாப்புல.
"சரி பாக்கலாம் வாங்க! நமக்கு நாளைக்குக்
கொஞ்சம் கேஸ் கட்டுகளப் பாக்க வேண்டிக் கெடக்கு. இப்போ கொஞ்சம் கெளம்புனீங்கன்னா
செளரியமா இருக்கும்! வேறொண்ணும் விசயமில்லைல்ல?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன்
பட்டுன்னு பேச்ச முறிச்சி விடுறாப்புல. சுப்பு வாத்தியாருக்கும், செய்யுவுக்கு வக்கீல்
அப்பிடிப் பேசுனது மொகத்துலு அடிச்சதுப் போல இருந்துச்சு. ஒண்ணும் சொல்ல முடியாம,
"வர்றேங்கய்யா!"ன்னு சொல்லிட்டு ஆபீஸ வுட்டு வெளியில வந்தாங்க. வக்கீலப்
பாத்து பேசுனது அப்படி முடிஞ்சுப் போனது செய்யுவுக்கு.
வக்கீல் வராட்டியும் பரவாயில்லன்னு வழக்கு
எந்த வெதத்துலயும் தொய்வா போயிடக் கூடாதுங்றதுக்காக ஆர்குடியில ரண்டு கோர்ட்டு,
திருவாரூர்ல சிஜேயெம் கோர்ட்டுன்னு வாரத்துல ரண்டு நாளு, மூணு நாளுன்னு செய்யு மாத்தி
அலைஞ்சிக்கிட்டுக் கெடக்குறதெ மட்டும் கொறைச்சிக்கிடல. அடி மேல அடி வுழுந்துகிட்டே
இருந்தா அது இடி வுழுறாப்புல அடுத்தடுத்து வுழுந்துக்கிட்டே இருக்கும்பாங்களே அப்படி
வழக்கு மேல வழக்கா, அதுல இன்னொரு வழக்கா ஆர்குடியில நடந்துகிட்டு இருக்குற வன்கொடுமெ
வழக்க திருவாரூருக்கு மாத்தணும்ன்னு திருவாரூரு முதன்மை நீதிமன்றத்துல ஒரு டிரான்ஸ்ர்
ஓப்பி வழக்கப் போட்டு அதுக்கான அறிவிப்ப வக்கீல் கங்காதரன் அனுப்பிச்சிருந்தாரு. இப்போ
மூணு வழக்கோட நாலாவது ஒரு வழக்கா இன்னொரு வழக்கு சேந்துச்சு செய்யுவுக்கு. ஆர்குடி
கோர்ட்டு திருவாரூரு முதன்மை நீதிமன்றத்துக்குக்
கட்டுப்பட்டதுங்றதால இதுல தீர்ப்பு வர்ற வரைக்கும் வன்கொடுமெ வழக்குல மேக்கொண்டு
தொடர முடியாதுங்ற நெலமெய இந்த புது வழக்கு மூலமா கங்காதரன் வக்கீலு உண்டு பண்ணியிருந்தாரு.
வழக்கமா வழக்க தாமசம் பண்ணவும், இழுத்தடிக்கவும் இப்படி ஒரு உத்திய ஒரு உத்தியா பண்ணுறது
உண்டுன்னு இந்த வழக்கப் பத்தி கோர்ட்டுக்குப் போயிட்டு வந்தப்போ வெவரம் தெரிஞ்சவுங்க
சொன்னாங்க. அதுப்படித்தாம் பண்ணிருந்தாரு வக்கீல் கங்காதரன். ஏற்கனவெ வக்கீல் திருநீலகண்டன்
தாக்கல் பண்ண வேண்டிய காயிதங்கள தாக்கல் பண்ணாம தாமசம் பண்ணார்ன்னா இதுல இந்த மாதிரி
மேல்முறையீட்டு மனுவெ தாக்கல் பண்ணி கங்காதரன் வக்கீலும் அதெ தாமசம் பண்ணாரு. இப்போ
இந்த டிரான்ஸ்பர் ஓப்பிக்கான வழக்கப் பத்திக் கலந்துக்கிறதுக்கு திருநீலகண்டன் வக்கீல்
ஆபீசுக்குப் போவ வேண்டியதா இருந்துச்சு செய்யுவுக்கு.
அவ்வே டிரான்ஸ்பர் ஓப்பிக்கான சம்மன் வந்ததும்
அதெ எடுத்துகிட்டு வக்கீல் நீலகண்டன்கிட்டெ போனா, "நாம்ம மாத்தக் கூடாதுன்னு
ஆஜராயி வாதாடுறேம். மவளெ வக்காலத்துல மட்டும் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்க!"ன்னு
சுப்பு வாத்தியார்ர பாத்துச் சொன்னாரு வக்கீலு. அத்தோட இந்த வழக்கோட சாராம்சத்தப்
பத்தியம் சுருக்கமா எடுத்துச் சொன்னாரு. அவருக்கு எடுத்து நடத்துற வழக்குல ஒண்ணு கூடுதுங்ற
சந்தோஷம் மொகத்துல தெரிஞ்சது. அத்தோட வக்காலத்துக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா
ரண்டாயிரம் காச வேற எடுத்து வெச்சாவணும்.
"ஏம்ய்யா ரண்டு கேஸூம் திருவாரூர்லயே
நடந்தா நமக்குத்தானே நல்லது. போயிட்டு வர்றதுக்கும் வசதியா இருக்குமே?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு இந்த வழக்குல இருக்குற நல்லதெ எடுத்துச் சொல்றாப்புல.
"அப்பிடில்லாம் விட்டுப்புட முடியாது
சார்! அவ்வேம் போடுற கேஸூக்குல்லாம் ஜால்ரா தட்டிக்கிட்டு இருக்க முடியாது. இதுக்கு
எதிர்ப்பா கேஸ்ஸ எடுத்துத்தாம் சார் வாதாடணும்! தட் இஸ் புரபஸனல் எத்திக்ஸ் பார் எ
லாயர்!"ன்னாரு வக்கீலு ரொம்ப சவடாலா.
"எவ்வளவுக்குத்தாம் வழக்கு வழக்குன்னு
ஆஜராயிட்டு இருக்குறது? வாழ்க்கையில முக்காவாசி நாளுங்க வழக்குக்கு ஆஜராவுறதுலயே காலியாயிடும்
போலருக்கு. அதால ஆஜராவாமா அப்பிடியே விட்டுப்புட்டா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு
தன்னோட பேரலைச்சலால உண்டான சலிப்பெ காட்டுறாப்புல.
"அவனுக்குச் சாதகமா தீர்ப்பாயி ரண்டு
கேஸூம் இங்க வந்துடும்!"ன்னாரு வக்கீலு சுப்பு வாத்தியாருக்குப் பதிலச் சொல்றாப்புல.
"அப்பிடி வந்தா கூட செளரியந்தானேங்கய்யா!
ஒஞ்ஞளாலும் அஞ்ஞ ஆர்குடி வந்து ஆஜராவ முடிய மாட்டேங்குது, நேரம் இருக்க மாட்டேங்கு.
இப்போ அந்தக் கேஸூம் இஞ்ஞயே வந்துப்புட்டா, இஞ்ஞயே யிருக்குறதால ஒஞ்ஞளுக்கும் ஆஜராவுறதுக்கு
வசதியாப் போயிடுமே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீல்கிட்டெயே வாதம் வைக்குறாப்புல.
"இதெல்லாம் பிரஸ்டீஜ் இஷ்யூ சார்!
லேசுல விட்டுட முடியாது. வக்கீலுக்குன்னு ஒரு கெத்து இருக்கு சார். அதெ நாம்ம விட்டுப்புட
முடியாது. அவ்வேம் போடுற கேஸூக்குல்லாம் இஷ்டப்படி தலையாட்டிப்புட்டா அப்புறம் எதுக்குத்தாம்
சார் நாம்ம ஒங்களுக்காக வாதாட? அவ்வேம் சொல்றதெயல்லாம் கேட்டுக்கிட்டு அப்பிடியே விட்டப்புடலாமே?
நாம்ம அப்பிடி டிரான்ஸ்பர் பண்ணுறதால நமக்கு சிரமம் ஆவும்ன்னும், இழப்பு ஆவும்ன்னும்
பதில் மனுவ தாக்கல் பண்ணி எந்தெந்த கேஸ்ஸ எங்கப் போட்டோமோ அங்கத்தாம் நடக்கணும்ன்னு
வாதாடுறோம்! சில விசயங்கள்ல வக்கீலோட முடிவுக்கு விட்டுப்புடணும். அந்த முடிவுல நீங்க
தேவையில்லாம தலையிட்டு வேணும், வேணாம்ன்னு சொல்லக் கூடாது அன்டர்ஸ்டாண்ட்?"ன்னாரு
வக்கீலு அறுத்துக் கட்டி பேசுறாப்புல.
"செரித்தாங்கய்யா! ஒஞ்ஞ விருப்பப்படியே
போவட்டும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வேற வழியில்லாம தணிஞ்சு போறாப்புல. அதெ
கேட்டதும் ஏதோ பேசுறதுக்கு வாயெடுத்தா செய்யு. அவளெ மேக்கொண்டு எதுவும் பேச வாணாம்ன்னு
சொல்றாப்புல, “ஒண்ணும் சொல்ல வாணாம்! வக்கீலய்யா போக்குலயே வழக்குப் போவட்டும்!”ன்னாரு
சுப்பு வாத்தியாரு சட்டுன்னு.
"தட்ஸ் குட்! அப்பிடி எல்லா பாரத்தையும்
இங்க ஆபீஸ்ல விட்டுட்டுப் போயிட்டே இருங்க. எப்படிக் கேஸ்ஸக் கொண்டுட்டுப் போவணும்?
அடுத்த மூவ்மெண்ட் என்ன பண்ணணுங்றது நமக்குத் தெரியும்!"ன்னாரு வக்கீல் உருட்டு
முழி முழிச்சிக்கிட்டும் நெத்திய சுருக்கிக்கிட்டும்.
"வாஸ்தவம்ங்கய்யா!"ன்னு சொல்லிட்டு
வக்காலத்துக் காயிதத்துல மவளெ கையெழுத்துப் போடச் சொல்லி ரண்டாயிரம் காசியையும் எடுத்து
வெச்சிட்டு சுப்பு வாத்தியாரு செய்யுவ அழைச்சிக்கிட்டுக் கெளம்புனாரு. கெளம்பி வூட்டுக்கு
வர்றப்போ சுப்பு வாத்தியாரு செய்யுகிட்டெ சொன்னாரு, "என்னவோ அந்த வக்கீலு பண்ணுறதுக்கு
எதுப்பாப் பண்ணணுங்றாரு நம்ம வக்கீலு. பெறவு ஏம் சமரசமா போறதுக்கான காயிதத்தெ தயார்
பண்ணுறப்ப மட்டும் நம்ம வக்கீலு எல்லாத்தையும் எதிர்தரப்பு வக்கீலயே தயார் பண்ணுன்னு
சொல்லிட்டு பேயாம இருந்தாராம்? நம்ம வக்கீலு மேலயே சமயத்துல நமக்குச் சந்தேவமா வேற
இருக்குது. ஆர்குடி கோர்ட்டுக்கு வாஞ்ஞனுன்னா வர்ற மாட்டேங்றாரு. இப்போ அந்தக் கேஸே
இஞ்ஞ திருவாரூருக்கு மாறணும்ன்னு அவ்வேம் கேஸ்ஸப் போட்டா அதெயும் வர வுடாம அடிப்பேங்றாரு.
இஞ்ஞ வந்தா இவருக்கும் ஆஜராவ வசதியாப் போவும், நமக்கும் வந்துப் போவ வசதியாப் போவும்.
எதிரி நல்லது செய்யக் கூடாதுன்னு இருக்கா? நல்லது யாரு செஞ்சா ன்னா? அதெ ஏத்துக்கிட்டுப்
போறதெ வுட்டுப்புட்டு இவரு நம்மள அலக்கழிக்கத்தாம் போறாரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
அவரு சொன்னாப்புலத்தாம் பிற்பாடு நெலமெ ஆச்சுது. ஏற்கனவே மூணு வெதமான கோர்ட்டுக்கு
அலைஞ்சிக்கிட்டு இருந்த செய்யு இப்போ நாலாவதா மாடியில இருக்குற முதன்மை நீதிமன்றத்துக்கும்
அலைய வேண்டியதா ஆயிடுச்சு. இப்படி அங்கயும் இங்கயும் அலைஞ்சி அவளுக்கு வழக்குக மேலயே
ஒரு வெறுப்பு உண்டாவ ஆரம்பிச்சிது. மனசு ஒரு எந்திரமா இருந்தா அது பாட்டுக்கு அலுப்பு
சலிப்பு களைப்புப் பாக்காம அலைஞ்சிகிட்டு இருக்கும். என்ன செய்யுறது? மனசு எந்திரம்
இல்லியே! அதுக்கு அலுப்பு சலிப்புல்லாம் உண்டாவத்தாம் செய்யுது. அத்தோட எந்த வெதமான
முன்னேத்தமும் இல்லாம அலையுறப்போ ஒடம்புலயும் அடிக்கடி களைப்புன்னு ஒண்ணு உண்டாவத்தாம்
செய்யுது.
*****
No comments:
Post a Comment