25 Dec 2020

பாதி கிணறு தாண்டுறப்ப விழுவுறதா?

பாதி கிணறு தாண்டுறப்ப விழுவுறதா?

செய்யு - 666

            செய்யு மயக்கம் தெளிஞ்சி எழுந்திரிச்சப்போ சுப்பு வாத்தியாரு, விகடு எல்லாருக்குமே தர்ம சங்கடமாப் போயிடுச்சு. ஜட்ஜ் பக்கத்துலயே வந்துட்டாரு. அவரோட மொகத்த யாராலயும் பாக்க முடியல. இதெத்தானே அப்போலேந்து சோன்னேங்ற மாதிரிக்கி அவரு ஒரு பார்வையப் பாத்தாரு. அந்தப் பார்வைய சுப்பு வாத்தியாராலயும் எதிர்கொள்ள முடியல. விகடுவுலாயும் எதிர்கொள்ள முடியல.

            "இப்பிடித்தாம் கிராஸ் பண்ணுறதா?"ன்னு ஜட்ஜ் வக்கீல் கங்காதரனப் பாத்துக் கேட்டாரு ரொம்ப மென்மையான கொரல்ல.

            "அவுங்க சமரசத்துக்குச் சம்மதம்ன்னா இப்போ வாணாலும் நாம்ம கிராஸ்ஸ நிப்பாட்டிக்கிறேம்!"ன்னாரு கங்காதரன் கீழ் முழி முழிச்சிக்கிட்டு.

            "சமரசத்துக்கு ஒத்துக்கிடலன்னா இப்பிடித்தாம் கிராஸ் பண்ணுவேங்றீங்களா?"ன்னாரு ஜட்ஜ் இப்போ கொஞ்சம் கொரல ஒசத்தி.

            "இன்னும் நம்மோட கிராஸ் முடியலங்கய்யா!"ன்னாரு கங்காதரன் ரொம்ப குரூரமா.

            "மயக்கம் அடிச்சி விழுந்தாலும் கிராஸ் பண்ணிக்கிட்டே இருப்பேன்னு சொல்ல வர்றீங்களா?"ன்னாரு ஜட்ஜ் வுடாம. கங்காதரன் அதுக்கு ஒண்ணும் சொல்ல முடியாம அமைதியானாரு.

            "ஒங்க கிராஸ்லேந்து என்னத்தெ சொல்ல வர்றீங்க? அதெ சொல்லுங்க?"ன்னாரு ஜட்ஜ் கங்காதரனப் பாத்து நெத்திய சுருக்குனபடிக்கு.

            "ஒண்ணு படிச்சவங்களா இருக்காங்க. வேலையிலயும் இருக்காங்க. அதால அவுங்களுக்கு ஜீவனாம்சமே தேவயில்ல. ரண்டாவது மாமன் மகனோட வாழ்றாங்க. மொறையா ஒரு கலியாணத்தப் பண்ணி வெவகாரத்து வாங்காமலே இன்னொருத்தரோட கணவனப் பிரிஞ்சி வாழ்றதுங்றது சட்டப்படி குற்றம். அந்த வகையில ஜீவனாம்சம் பெறுவதற்கான தகுதியே யில்லாத நெலையிலயே இருக்காங்க. ஆக இந்த ரண்டு வகையிலப் பாத்தா அவுங்க ஜீவனாம்ச வழக்கப் போட தகுதியே இல்லாதவங்களா ஆகுறாங்கய்யா. அதாம்யா நம்ம தரப்புல சொல்ல வர்ற சங்கதி!"ன்னாரு கங்காதரன் தன்னோட பாய்ண்ட்ஸ்கள எடுத்து வைக்குறாப்புல.

            "செரி! கெளம்புங்க!"ன்னாரு ஜட்ஜ் கங்காதரனப் பாத்து.

            "நெக்ஸ்ட் கிராஸ்?"ன்னாரு கங்காதரன் ஜட்ஜ்ஜப் பாத்து.

            "மத்தயானத்துக்கு மேல எப்படி இருக்காங்கன்னு பாத்துட்டு முடிவு பண்ணிக்கிடலாம். இப்போ கெளம்புங்க!"ன்னாரு ஜட்ஜ். அதெ கேட்டுட்டு என்னவோ மாபெரும் சாதனையச் சாதிச்சாப்புல கங்காதரன், பாலாமணி, ராசாமணி தாத்தா, ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் எல்லாரும் வெளியிலப் போனாங்க. "செமத்தியா கிராஸ் பண்ணிட்டீங்க! கிழிகிழின்னு கிழிக்கச் சொன்னபடியே கிழிச்சிட்டீங்க!"ன்னு ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் சொல்லிட்டுப் போறது உள்ளார சன்னமா கேட்டுச்சு.

            செய்யு இப்போ எழும்பி உக்காந்தா. "இப்போ எப்பிடிம்மா இருக்கே?"ன்னாரு ஜட்ஜ். பரவாயில்லங்ற மாதிரிக்கித் தலைய ஆட்டுனா செய்யு. "அப்பிடியே கொஞ்ச நேரம் பெஞ்ச்லேயே உக்காந்துக்கோ! பாக்கி எல்லாரும் வெளியில கெளம்புங்க! திருநீலகண்டன் நீங்களும் கௌம்புங்க!"ன்னாரு ஜட்ஜ். எல்லாரும் வெளியில கெளம்பி வர்றப்போ சுப்பு வாத்தியாரு விகடுவப் பாத்து, "நீயி மட்டும் பக்கத்துல கொஞ்சம் தொணையா உக்காந்துக்கோ!"ன்னாரு.

            அதெ கேட்டதும், "யாரு அண்ணனா? செரி நீங்க மட்டும் உக்காந்துக்கோங்க! மித்த எல்லாரும் வெளியில கெளம்புங்க!"ன்னு சொல்லிட்டு ஜட்ஜ் தன்னோட இருக்கைக்கு நகரப் பாத்தாரு. அப்போ செய்யு அவர்ரப் பாத்து, "நாம்ம சில விசயங்கள சொல்லணுங்கய்யா ஒங்ககிட்டெ!"ன்னா. "இந்த நெலையிலயோ? வாணாம்!”ன்ன ஜட்ஜ் அவளோட மொகம் ஏமாத்தம் அடைஞ்சதப் பாத்ததும், “செரி பரவாயில்ல. எதுவா இருந்தாலும் காயிதத்துல எழுதிக் கொடுங்கப் பாத்துக்கிடலாம்!"ன்னாரு. அதெ சொல்லிட்டு ஜட்ஜ் தன்னோட இருக்கைக்கு மேல ஏறிப் போயி உக்காந்தாரு. அடுத்த வழக்குகள தொடங்கலாம்ன்னு சொன்னதும் வழக்கோட நம்பரு சொல்லி, பேர்ர சொல்லி வழக்கம் போல கோர்ட் நடக்க ஆரம்பிச்சது.

            வெளியில போன பாலாமணி கொஞ்ச நேரத்துல இப்போ ஆக்ரோஷமா உள்ளார வந்தாம். அப்போ இன்னொரு கேஸோட குறுக்கு விசாரணை ஆரம்பமாயிருந்துச்சு. அவ்வேம் உள்ள நொழைஞ்சதப் பாத்த ஜட்ஜ், "உள்ளார வாராதீங்க! ஒங்க வழக்கு இப்போதைக்கு முடிஞ்சது. முடிஞ்சா மத்தியானத்துக்கு மேல பாக்கலாம்!"ன்னாரு

            "வெளியில வாரணும்ன்னா ரண்டு தரப்புந்தாம் வெளியில வாரணும். அவுங்கள மட்டும் உள்ளார உக்கார வெச்சு ஏதோ எழுதச் சொன்னா, அவுங்க ஏதோ ரகசிய வாக்குமூலம் ஒங்ககிட்டெ கொடுக்கறதா நெனைக்கிறேம். நாம்ம அதெ வெளியிலேந்துப் பாத்துட்டேத்தாம் இருக்கேம். நாமளும் அப்பிடின்னா சில ரகசிய வாக்குமூலங்கள கொடுக்கணும்!"ன்னாம் பாலாமணி பொட்டுன்னு வந்து பொடணியில தாக்குற கல்லப் போல.

            ஜட்ஜ் சுத்திலும் ஒரு பார்வையப் பாத்தாரு. அதெ புரிஞ்சிககிட்டாப்புல உக்காந்திருந்த சீனியர் லாயர் ஒருத்தரு எழும்பி, "தம்பீ! ஒடம்புக்கு முடியலன்னுத்தாம் உள்ளார உக்கார வெச்சிருக்காங்க. கொஞ்சம் தெளிஞ்சதும் வெளியில அனுப்பிடுவாங்க. ஒங்களோட வழக்குச் சம்பந்தமா இங்க எதுவும் நடக்கல. வேற ஒரு வழக்கு இங்க நடந்துகிட்டு இருக்கு. அநாவசியமா ஒரு வழக்கோட விசாரணையில குறுக்கிடாதீங்க. அது நீதிமன்ற அவமதிப்பாப் போயிடும்!"ன்னாரு பாலாமணிக்கு விசயத்தெ எடுத்துச் சொல்றாப்புல.

            "ஒடம்புக்கு முடியலன்னா ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வையுங்க. அதெ வுட்டுப்புட்டு எதுக்கு உள்ளார வெச்சிருக்கணும்? நாம்ம ஒரு டாக்கடருங்கய்யா. நமக்குத் தெரியும். ஒடம்புக்கு என்ன பண்ணுது, என்ன பண்ணலங்றது? இதெல்லாம் நடிப்புங்கய்யா. இது மாதிரிக்கி ஏகப்பட்ட மொறைக நம்மகிட்டெ நடிச்சப் பொண்ணுதாம் அது!"ன்னாம் பாலாமணி தன்னோட எதிப்ப பலமா எடுத்து வைக்குறாப்புல.

            "கோர்ட்டப் பொருத்த மட்டில ஜட்ஜ் எடுக்குற முடிவுதாம். நீங்க இப்போ வெளியில போவலாம்."ன்னாரு அந்த சீனியர் லாயர் பாலாமணிக்கு உத்தரவப் பெறப்பிக்கிறாப்புல.

            "அப்போ உள்ளார சும்மாவாச்சும் உக்காரச் சொல்லுங்க. எதுக்கு ஒரு காயிதத்தெ கொடுத்து எழுதித் தர்றச் சொல்றீங்க? அவுங்கள எழுதித் தர்றச் சொன்னா, நம்மளயும்தான எழுதித் தர்ற சொல்லணும். நீதிமன்றங்றீங்க, இதென்ன பாரபட்சமா? எதுவா இருந்தாலும் ரண்டு பேத்துக்குமே பொதுதாங்கய்யா!"ன்னாம் பாலாமணி நெருடி வுடுறாப்புல.

            "நீங்க வேணும்ன்னா இன்னொரு நாளுக்கு வந்து ஒங்களோட கருத்துகள எழுதிக் கொடுங்க. இப்போ வேணாம். கெளம்புங்க. அநாவசியமா பிரச்சனெ வெச்சிக்கிட்டு நிக்காதீங்க. அத்து ஒங்களுக்கு நல்லதில்ல. உள்ளப் பாத்தீங்கன்னா ஒங்க லாயரும் கெடையாது, அவுங்களோட லாயரும் கிடையாது. அவுங்க மட்டுந்தாம் உக்காந்திருக்காங்க. கூடவே அவுங்க தொணைக்கு அந்தப் பொண்ணோட அண்ணன் ஒருத்தருதாம் உக்காந்திருக்காரு. அவ்வளவுதாம்! ஏதோ அவுங்க மனசுல உள்ள கொறைய ஜட்ஜ்கிட்டெ சொல்லணும்ன்னு நெனைக்குறாங்க. அது வழக்குல சேராது!"ன்னாரு அந்த சீனியர் லாயர் பாலாமணிக்கு நெலமைய எடுத்துச் சொல்றாப்புல.

            "நமக்கும் கோர்ட்டு ரூல்ஸ்லாம் தெரியும். விசாரணை முடிஞ்சதுன்னா ரண்டு தரப்புந்தாம் கோர்ட்ட வுட்டு வெளியில வாரணும்! அதெ வுட்டுப்புட்டு இப்பிடி ஒரு தரப்பு மட்டும் உள்ளார உக்காந்து எழுதிக் கொடுக்கறதுல்லாம் மொறையே கெடையாது! இதெல்லாம் அநீதி! அப்போ இந்த நீதிமன்றதுக்குப் பேர்ர அநீதிமன்றம்ன்னு மாத்திப்புடுவமா?"ன்னாம் பாலாமணி தன்னோட லாவணிய வுடாம தொடர்றாப்புல.

            ஜட்ஜ் பாத்தாரு. "போலீஸக் கூப்புடுங்க!"ன்னாரு. டவாலி ஓடிப் போயி பக்கத்து குற்றவியல் நீதிமன்றத்துல இருந்த ஒரு போலீஸக் கூப்புட்டு ஓடியாந்தாரு. அவரு வந்து பாலாமணியக் கையப் பிடிச்சி வெளியில இழுத்தாரு. பாலாமணி நகர மறுத்தாம். "அவுங்களயும் வெளியில வர்றச் சொல்லுங்க. நாமளும் வெளியில வர்றேம். நம்மள இழுத்துப் பிடிச்சி வெளியில தள்ளுனா, அவுங்களயுந்தாம் பிடிச்சி வெளியில தள்ளணும். இந்திய கான்ஸ்டிட்யூசன் அப்பிடித்தாம் எல்லாருக்கும் சம உரிமெய வழங்குது. இப்பிடிப் பண்ணீங்கன்னா இதெ நாம்ம சட்டப்படி எதிர்கொள்ளுறாப்புல இருக்கும்!"ன்னாம் சத்தமா. அவ்வேம் இப்பிடி சத்தம் வைக்குறதப் பாத்து, அவனெ ஒடம்போட பிடிச்சி நெட்டித் தள்ளுனாப்புல தள்ளி வாசப்படிக்கு வெளியில இழுத்துக்கிட்டுப் போனாரு போலீஸ்காரரு. அதுக்குள்ள பாலாமணியோட வக்கீல் கங்காதரன் ஓடியாந்து, "வாங்கப் பாத்துக்கிடலாம். இத்து ஒண்ணும் பெரிய விசயமில்ல."ன்னு சொல்லிட்டுப் போலீஸ்காரரப் பாத்து, "யாரு தெரியுமில்ல இவரு? டாக்கடர்ரு! நீங்க பாட்டுக்கு இழுத்து வெளியில தரதரன்னு இழுத்துத் தள்ளுவீங்களா? மொதல்ல வுடுங்க! இதுக்கே ஒங்க மேல கேஸ்ஸப் போடுவேம்!"ன்னதும் போலீஸ்காரரு வுட்டாரு.

            "இதென்ன பெரிய கோர்ட்டா? இந்தக் கோர்ட்டுக்கு டேரக்சன நாம்ம ஹை கோர்ட்டுல போட்டு வாங்கிட்டு வருவேம். இதுக்குல்லாம் ஒண்ணும் யோசிக்காதீங்க வாங்க! அவ்வே என்ன வாணாலும் எழுதிக் கொடுக்கட்டும். அபார்ட் பிரம் தி கோர்ட்டுன்னு அதெ ஒண்ணும் யில்லாம அடிக்கிறேம். இந்த ஜட்ஜ் மேலயே கேஸ்ஸப் போட முடியும் நம்மால. இவரு ஒண்ணும் சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜ் கெடையாது. சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜாவே இருந்தாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தாம் நடந்துக்கிடணும். இவரு நீதிக்கும் கட்டுபடல, சட்டத்துக்கும் கட்டுபடல. என்னவோ நல்ல மனுஷங்ற பேரு வாங்குறேம்ன்னு அரசியல்வாதியப் போல நடிப்புக் காட்டி சினிமா படம் ஓட்டிக்கிட்டு இருக்காரு. வாங்க டாக்டர் நாம்ம எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்! இந்த ஜட்ஜே அவுங்ககிட்டெ காசிய வாங்கிட்டுக் கூட இப்பிடில்லாம் பண்ணலாம். எதுவா இருந்தாலும் ஒரு கையிப் பாப்போம். இப்போ இங்க நிக்க வாணாம். வாங்க! நாம்ம நெலமையச் சொல்லி நம்மளோட சீனியரு லாயரு ஒருத்தர்கிட்டெ பேசிக்கிட்டு இருக்குறதுக்குள்ள இஞ்ஞ இப்பிடி வந்து நிக்குதீயளே?"ன்னு பாலாமணிய அழைச்சிக்கிட்டுப் போனாரு கங்காதரன் ரொம்ப தெனாவெட்டா பேசிகிட்டே.

            அப்பிடிக் கெளம்புன அவுங்க அப்பவே கெளம்பிப் போயிருக்கணும் போல. மத்தியானத்துக்கு மேல யாரும் அவுங்க தரப்புலேந்து கோர்ட்டுல ஆஜராவல. அது கங்காரன் வக்கீலோட சீனியரு லாயரு சொன்ன அறிவுரையாவும் இருக்கலாம். மத்தியானம் சாப்புட்டுப்புட்டு கோர்ட்டுக்கு வர்றச் சொன்னாரு ஜட்ஜ். மத்தியானம் கோர்ட்டு கேண்டீன்ல சாப்புடப் போனா காலையில பண்ணதேப் போல செய்யு சாப்புட மாட்டேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டா. “மத்தியானம் சாப்புடலன்னா இந்த வழக்கய நடத்த மாட்டேம்!”ன்னாரு வக்கீலு திருநீலகண்டன் செய்யுவ சாப்புடுற வைக்குற நோக்கத்தோட. அதுக்குச் செய்யு அசைஞ்சு கொடுக்கல. “காத்தால சாப்புடாம மயக்கம் அடிச்சி வுழுந்தாப்புல, மறுக்கா மத்தியானமும் சாப்புடாம திரும்பவும் மயக்கமடிச்சி வுழுந்தா அசிங்கமால்ல போயிடும். மொதல்ல சாப்புடு. இல்லன்னா வா வூட்டுக்குக் கௌம்புவேம்!”ன்னு சுப்பு வாத்தியாரு கண்டிப்பு காட்டுனதுக்குப் பெறவுதாம் செய்யு சாப்புட சம்மதிச்சா. ஒரு தயிர் சாதத்துல பாதியச் சாப்பிட்டுருப்பா. அதுக்கு மேல முடியலன்னு எழும்பி கைய அலம்ப போயிட்டா. நடந்ததெப் பத்தி ஒருத்தருக்கொருத்தரு பேசி முடிச்சு, அதுக்கு எடையில ஒரு வழியா எல்லாரும் சாப்புட்டு முடீச்சுத் திரும்ப கோர்ட்டுக்குப் போனப்போ ரண்டரைக்கு மேல மத்தியான கோர்ட்டு ஆரம்பிச்சது.  அவுங்க தரப்புலேந்து யாரும் வாரததால நாலு மணிக்கு மேல வூட்டுக்குக் கெளம்பச் சொல்லி அனுப்பி வெச்சாரு ஜட்ஜ். போறப்ப, "பாதி கெணறு தாண்டியாச்சு. பாதி கெணறு தாண்டிட்டு இருக்குறப்பவா இப்படி தொபுக்கடின்னு கீழே வுழுவுறது? சரி பரவாயில்ல. இன்னும் ஒரு கிராஸ் பண்ணுறதுக்கு ஒரு சான்ஸ் கொடுத்துட்டு ஒங்க தரப்புலேந்து அவுங்கள கிராஸ் பண்ண விட்டுடலாம்!"ன்னாரு ஜட்ஜ் வழக்கோட அடுத்த கட்டத்தெ எடுத்துச் சொல்றாப்புல.

            அடுத்ததா வக்கீல் திருநீலகண்டனப் பாத்து, "என்னா மிஸ்டர் திருநீலகண்டன் இப்பிடியா கிளையண்ட பலவீனமா வெச்சிக்கிறது. நெறைய நம்பிக்கெ கொடுத்து தைரியமால்ல கூண்டுல ஏத்தணும். அழைச்சிட்டுப் போயி ஆபீஸ்ல வெச்சி கொஞ்சம் பிராக்டிஸ் கொடுங்க! கோர்ட்டு குறுக்கு விசாரணைன்னா எப்படின்னு ரண்டு நாளு வந்து பாக்கச் சொல்லுங்க. இதுல எதையும் பண்ணாம நீங்க பாட்டுக்கு பாக்ஸ்ல ஏத்தி விட்டுப்புட்டு வேடிக்கைப் பாக்குறதா? இதெப் பத்தி கம்ப்ளீட்டா அவுங்களுக்கு ஒரு ஐடியா வர்ற அளவுக்கு அவுங்களோட மனசெ சரிபண்ணி வுடுங்க! வழக்குல ஜெயிக்குறது, தோக்குறது ரண்டாம் பட்சம்தான். கிளையண்ட்ட கடெசீ வரைக்கும் நம்பிக்கை கொறையாம வைச்சிக்கிறது ஒரு வக்கீலோட முக்கியமான கடமெ! ஒங்க கிளையண்டுக்கு எப்பவும் நீங்கத்தாம் ரெஸ்பான்ஸிபிள்! இதெப் பத்தித்தாம் நாளைக்கிப் பேசிட்டு இருக்கப் போறாங்க, ஒங்க கிளையண்ட இப்பிடி விட்டுப்புட்டீங்கன்னு! அந்த வகையில ஒங்க கேரியருக்கும் இது ரொம்ப முக்கியம் பாத்துக்குங்க!"ன்னாரு ஜட்ஜ் அறிவுறுத்துறாப்புல. வக்கீலு அதெ கேட்டு தலையாட்டுனதோட செரி. வழக்கமா எது சொன்னாலும் பக்கம் பக்கமா பேசுறவரு எதெயும் பேசல. வூட்டுக்குக் கௌம்புறப்பயும் வக்கீலு அதிகமா எதையும் பேசல. சுப்பு வாத்தியாரு, விகடு, செய்யுன்னு மூணு பேத்தையும் பாத்து சோகத்துல சிரிக்குறாப்புல ஒரு சிரிப்பெ மட்டும் சிரிச்சிக்கிட்டுப் போய்ட்டு வாங்கன்னு சொல்லற மாதிரிக்கு அனுப்பி வெச்சாரு. சுப்பு வாத்தியாரு கொடுத்த பணத்தெயும் வாணாம்ங்ற மாதிரிக்கிச் சொல்லிட்டு வக்கீல் பாட்டுக்கு தன்னோட ஸ்டார் சிட்டி வண்டியில கௌம்பிட்டாரு.

            எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு வூட்டுக்கு வந்தப்போ சுப்பு வாத்தியாரு ரொம்பவே சோர்ந்துப் போயிருந்தாரு. கூண்டுல மயக்கம் அடிச்சி வுழுந்த செய்யு பாக்கறதுக்கு இப்போ தைரியமாவும், சுப்பு வாத்தியாரு அதைரியமாவும் இருந்தாங்க.

            "இவ்வளவு பயப்படறவங்க எதுக்கு கூண்டுல ஏறணும்? பயந்தாங்கொள்ளியா இருக்குறதெ நாம்ம குத்தம் சொல்லல. அப்பிடின்னா அதுக்குத் தகுந்தாப்புல இருக்காம இருக்குறதத்தாம் நாம்ம குத்தம் சொல்றேம். நம்மாள என்னத்தெ முடியுமோ அந்த அளவுக்குச் செஞ்சிக்கிட்டு இருந்துக்கிட வேண்டியதுதானே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவளுக்குப் புத்திச் சொல்றாப்புல.

            சுப்பு வாத்தியாரு கேட்ட கேள்விக்கு செய்யு விகடுவெப் பாத்துப் பதிலச் சொன்னா, "தப்பே பண்ணாத நம்மளப் போயி தப்பு பண்ணுற மாதிரிக்கிக் கேள்வியக் கேட்டா நாம்ம என்னண்ணே பண்ணுறது? நீயே பாத்தீயா இல்லியா? நம்மள அவமானம் பண்ணுறாப்புல அசிங்கப்படுத்திக் கிராஸ் பண்ணா நாம்ம என்னத்தெ பண்ணுறது?"ன்னா செய்யு தன்னோட நெலைய ஞாயம் பண்டுறாப்புல.

            "அதாம் குறுக்கு வெசாரணைன்னு எத்தனெ தடவெ வக்கீல் மொதக் கொண்டு நாமளும் படிச்சிப் படிச்சிச் சொன்னேம். வக்கீலு எத்தனெ மொற டென்ஷன் மட்டும் ஆயிடக் கூடாது. அத்து எதிராளிக்குச் சாதவமாயிடும்ன்னு படிச்சிப் படிச்சிச் சொல்லிருப்பாரு. அதெ மனசுல வெச்சிக்கிடணும்மா இல்லியா? பஞ்சாயத்துல இதெ வுட கேவலமாத்தாம் பேசுனானுவோ. ஒரு கடுதாசிய இதெ வுட கேவலாமாத்தாம் அனுப்புனானுவோ. அதுக்கெல்லாம் கோவப்பட்டுகிட்டும், டென்ஷன் ஆயிட்டும் இருந்தா அதெல்லாம் உண்மென்னு ஆயிடாதா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட ஞாயத்தெ கேக்குறாப்புல.

            "ஒஞ்ஞ அனுபவத்துக்கு வயசுக்கு நீஞ்ஞ அப்பிடி இருக்கலாம்ப்பா! நம்மட வயசுக்கு கோர்ட்டு, குறுக்கு வெசாரணைங்றதெல்லாம் ரொம்ப அதிகம். இப்பத்தாம் மொத மொறெ வேற. இனுமே எந்த குறுக்கு வெசாரணைன்னாலும் அதெ எதிர்கொள்ள முடியும்ங்ற நம்பிக்கெ இருக்கு!"ன்னா செய்யு இப்போ சுப்பு வாத்தியார்ர நேருக்கு நேரா பாத்து.

            "இனுமே வேற குறுக்கு வெசாரணையா? அதுக்கு நாம்ம அனுமதிக்க மாட்டேம்! அவனுக எதுவும் கொடுக்காட்டியும் பரவாயில்ல, மொதல்ல கேஸ்ஸ முடிங்கன்னு வக்கீல்கிட்டெ சொல்லப் போறேம்! இதையெல்லாம் பாத்துகிட்டு இருக்கு நம்மட மனசுக்கு தெம்பில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு முடிவா சொல்றாப்புல.

            "இத்து என்னோட கேஸ்ஸூ! என்னோட வாழ்க்கெ பெரச்சனெ! நாம்ம எப்போ முடிக்கணும்ன்னு நெனைக்குறோமோ அப்போ முடிச்சிப்பேம். இதுல நீஞ்ஞ அதிகமா தலையிட வாண்டாம். இனுமே கோர்ட்டுக்கும் நீஞ்ஞ யாரும் வார வேணாம். வந்து என்னவாவப் போவுது? எதுவா இருந்தாலும் நாம்மத்தானே எதிர்கொள்ளுறாப்புல இருக்கு?"ன்னா செய்யு அப்பங்காரரையே எதுத்துப் பேசுறாப்புல. இப்படி ஒரு பேச்சு மவ்வேகிட்டெயிருந்து வரும்ன்னு சுப்பு வாத்தியாரு எதிர்பாக்கல.

            "ன்னா பேச்சுப் பேசுறே நீயி?"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவ்வே பேச்ச பொறுக்க முடியாம.

            "செரியாத்தாம்ப்பா பேசுறேம்! இதுக்கு மேல குறுக்கு வெசாரணையில எந்த கஷ்டமான கேள்வியும் இருக்கப் போறதில்ல. அப்பிடியே கஷ்டமா இருந்தாலும் இதே கேள்வியத்தாம் திரும்பிக் கேக்குறாப்புல இருக்கும். எதுவா இருந்தாலும் மொத தடவெ கேக்குறப்பத்தாம் சங்கடமா இருக்கும். ரண்டாவது தடவெ பழகிப் போயிடும். நமக்கு யிப்பத்தாம் முன்னய வுட தெம்பு அதிகமா வந்திருக்குறாப்புல இருக்குது. நம்மாள இந்த வழக்கையும், அவனையும் சமாளிக்க முடியும்ங்ற நம்பிக்கெ இப்பத்தாம் முழுசா வந்திருக்கு. இந்த வழக்கப் பொருத்த வரைக்கும் நம்மள அவமானம் பண்ணுறதுதாம் அவனுங்களோட நோக்கம். இதுக்கு மேல அவனுங்க நம்மள அவமானம் பண்ண முடியாதுன்னு நெனைக்கிறேம். அவமானம் பண்ணுறதோட உச்ச நிலைய அவனுங்க காட்டிப்புட்டாங்க. இதுக்கு மேல அவனுங்களால ஒண்ணும் கிழிக்க முடியாது. ஏன்னா எல்லாம் கிழிஞ்சிப் போயித்தாம் இருக்கு! அதுக்கு மேல என்னத்தெ கிழிக்கிறது?"ன்னா செய்யு வியாக்கனத்தெ வைக்குறாப்புல.

            "இந்தத் தெகிரியத்த எல்லாம் இஞ்ஞக் காட்டி புண்ணியமில்ல. கோர்ட்டுல இருக்குறப்பவும் காட்டணும்! ஊருக்கு உபதேசம்லாம் ஒதவாது பாத்துக்கோ! வறட்டு வேதாந்தம் பேசிகிட்டு விக்கிச்சுப் போயி நிக்குறதுல்ல ஒண்ணும் ஆவப் போறதில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு விரக்தியா.

            "காட்டுவேம்ப்பா! இனுமே காட்டுவேம்! என்னண்ணணே நீயி ஒண்ணும் சொல்லாமலயே நிக்குறே?"ன்னா செய்யு இப்போ சுப்பு வாத்தியார்ர நேருக்கு நேரா பாக்காம விகடுவெப் பாத்து.

            "நமக்கும் சங்கடமாத்தாம் இருக்கு! ஒன்னய யிப்பிடி கூண்டுல ஏத்தி வுட்டுப்புட்டு வேடிக்கப் பாக்கறதெ தவுர வேற ஒண்ணுத்தையும் செய்ய முடியலன்னு!"ன்னாம் விகடு பரிதாபமா மேக்கொண்டு என்னத்தெ சொல்றதுன்னு புரியாம.

            "நீயி என்னத்தெ பண்ண முடியும்ண்ணே? இத்து நமக்கு மொத மொறையா? கூண்டுல ஏத்தி, சுத்தி நெறையப் பேரு. அதால கொஞ்சம் நெர்வஸ் ஆயிட்டேம். அப்பிடி ஆனதும் நல்லதுதாம். அந்த நெர்வ‍ஸோடு உச்சத்தப் பாத்தாச்சு. இதுக்கு மேல அதுல ஒண்ணும் இல்லன்னுத்தாம் தோணுது. நீயி ஒண்ணும் அதெ நெனைச்சிக் கவலப்படாதே. நமக்கு யிப்பத்தாம் முன்னய விட இந்த வழக்கு மேல நம்பிக்கையே வருது!"ன்னா செய்யு விகடுவையும் சுப்பு வாத்தியாரையும் தேத்துறாப்புல.

            "மனசுல அந்தத் தைரியம் இருந்தா போதும்! எப்பவும் அந்த தைரியம் இருக்கணும். இப்போ இங்க பேசுறப்ப மட்டுமில்லா எப்பவும் எங்கயும்! அதெ நெனைச்சித்தாம் யோஜனையா இருக்கு!"ன்னாம் விகடு தன்னோட சந்தேகத்தக் காட்டுறாப்புல.

            "இருக்கும்ண்ணா! அதெ பத்தின சந்தேகம் ஒனக்கு எப்பவும் வாணாம்!"ன்னா செய்யு சத்தியம் பண்ணுற தொனியில.

            "அத்தோட யப்பாவப் போல டென்ஷன் ஆவாம நெதானமா இருக்குற மனசும் வேணும்!"ன்னாம் விகடு சன்னமான கொரல்ல தங்காச்சியோட கொறைய லேசா குத்திக் காட்டுறாப்புல.

            "இருப்பேம்ண்ணா! யிப்பத்தாம் கிராஸ்ல என்ன நடந்திருக்குங்றதே நமக்குப் புரியுதுண்ணே!"ன்னா செய்யு விசயம் புடிப்பட்டாப்புல.

            "தெளிவாவும் துணிவாவும் இருந்தா சரித்தாம்!"ன்னாம் சொணங்கிப் போன கொரல்ல விகடு. அவ்வேம் வழக்கெ தெகிரியமா எதிர்கொள்வான்னு தங்காச்சி மேல வெச்சிருந்த நம்பிக்கெயெ லேசா எழந்திருத்தாம்.

            "இந்த மாதிரி விசயங்கள எல்லாத்தையும் கண்டுக்கிடாம அலட்சியமா இருந்துக்கிட தெரியணும். அவுங்கத்தாம் கோர்ட்டு, கேஸ எதிர்கொள்ள லாயக்கு! இவ்ளோ டென்ஷன் ஆவுறங்களுக்குல்லாம் கோர்ட்டு ஒத்து வாராது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எங்கோ பாத்து யாருக்கோ வெசயத்த சொல்றாப்புல. அவரு சொல்றதெ சரிங்ற மாதிரிக்குச் சொல்றாப்புல கெவுளிச் சத்தம் வுடாம கேக்க ஆரம்பிச்சது.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...