24 Dec 2020

நீயெல்லாம் ஒரு அண்ணனாடா?


 நீயெல்லாம் ஒரு அண்ணனாடா?

செய்யு - 665

            அடுத்தத் தேதிக்குக் குறுக்கு விசாரணைக்கு ஆஜரானப்போ செய்யுவோட சுப்பு வாத்தியாரும், விகடுவும் போயிருந்தாங்க. திருநீலகண்டன் வக்கீல்கிட்டெ குறுக்கு விசாரணை முடியுற வரைக்கும் வேறெந்த கோர்ட்டுக்கும் போயிட வாணாம்ன்னு சுப்பு வாத்தியாரு கேட்டுக்கிட்டாரு. அவரும் வெசாரணை முடியுற வரைக்கும் சிஜேயெம் கோர்ட்ட வுட்டு வேறெங்கயும் போகலங்ற உறுதியக் கொடுத்தாரு. கோர்ட்டு கூடுறதுக்கான நேரம் வந்தப்போ வக்கீல் கங்காதரன், பாலாமணி, ராசாமணி தாத்தா, ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் எல்லாரும் ஒண்ணா வந்தாங்க. அவுங்க சுப்பு வாத்தியாரு தரப்ப கடந்து கோர்ட்டுக்குள்ளார போறப்போ ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன், "இன்னிக்குச் சும்மா கிழி கிழின்னு கிழியப் போவுது! ன்னா வக்கீல் சார்! இன்னிக்குப் பொரட்டிப் பொரட்டி எடுக்கறதெ வாழ்நாளு முழுக்க மறக்கக் கூடாது. ஏம்டா இந்த வழக்க நடத்தணும்ன்னு நெனைச்சி நெனைச்சி அழுவோணும் பாத்துக்கோங்க!"ன்னு வாயப் பொத்திக்கிட்டு பழிப்புக் காட்டுறாப்புல சிரிச்சிக்கிட்டெ போனான்.

            அதுவரைக்கும் கொஞ்சம் நெதானமா இருந்த‍ செய்யு அதெ கேட்டதும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட ஆரம்பிச்சா. பதற்றம் அவ்வே மொகத்துல தெளிவா தெரிஞ்சது.

            "எவனெவனோ பஞ்சாயத்துல பேசக் கூடாதெ எல்லாம் பேசிட்டாம். இனுமே ன்னா புதுசா பேசிடப் போறானுவோன்னு நெனைச்சிக்கோ!"ன்னாம் விகடு செய்யுவ ஆறுதல் பண்டுறாப்புல.

            "இதெல்லாம் ச்சும்மா பேசணுங்றதுக்காக பேசுறதுதானே. வழக்க வைக்கணுங்றதுக்காக வைக்குறததானே. உண்மெ என்னாங்றது எல்லாருக்கும் தெரியும். ச்சும்மா இது ஒரு சடங்கு. இங்கக் கேக்குறதெப் பத்தியல்லாம் பெரிசா நெனைச்சிக்காம இருக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரும் தம் பங்குக்கு மவளெ நெதானத்துக்குக் கொண்டு வர்றாப்புல.

            "நாம்ம தெடமாத்தாம் இருக்கேம்ப்பா!"ன்னா செய்யு அப்பங்காரரு அண்ணன்காரன்னு ரண்டு பேத்தையும் தெடம் பண்டுறாப்புல.

            என்னத்தாம் மவ்வே தெடமா இருக்குறதா சொன்னாலும், அவளெ இன்னும் தெளிவு பண்டுறாப்புல, "ஒலகத்துல எத்தனையோ பேத்துக்கு நமக்கு நடக்கப் போறதெயல்லாம் வுட மோசமால்லாம் குறுக்கு வெசாரணை நடந்திருக்கும். அதால நமக்கு நடக்குற குறுக்கு வெசாரணைத்தாம் மோசமா இருக்கப் போவுதுன்னு நெனைச்சிக்காதே. அவ்வேம் என்னத்தெ புதுசா கேட்டுடப் போறாம்? நம்மள அவமானம் பண்ணணுங்றதெயே நோக்கமா வெச்சித்தாம் இதெ பண்ணப் போறாங்றது நமக்கு முங்கூட்டியே தெரிஞ்சிட்டதால அதெப் பத்தி பெரிசா அலட்டிக்கிட வேண்டியதில்ல. சொல்லப்போன அப்பிடி அவமானம் பண்ணி அசிங்கம் பண்ணிடுவேன்னு மெரட்டுறதுக்காகத்தாம் இந்தக் குறுக்கு வெசாரணைங்றப்போ இதெ நாம்ம பெரிசெ பண்ணிக்கிடக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்குப் புரியுதுப்பா!"ன்னா செய்யு அழுத்தமா. இப்படி ஒருத்தர் மாத்தி ஒருத்தர்ர தெடம் பண்ணுற வேலைத்தாம் சன்னமான கொரல்ல பதினொண்ணரை மணி வரைக்கும் நடந்துச்சு.

            பதினொண்ணரைக்கு மேலத்தாம் செய்யுவோட ஜீவனாம்ச வழக்கோட நம்பர்ர சொல்லி பேர்ரக் கூப்டாங்க. அதுவரைக்கும் பல வழக்குகளக்குத் தேதியக் கொடுக்குற வேலைகத்தாம் ஓடிட்டு இருந்துச்சு. அதால தேதிக் கொடுக்குற கேஸ்கள மொதல்ல வெச்சி, கிராஸ் பண்ணுற வழக்குகள பின்னாடி வெச்சிருந்தாங்க. கிராஸ் பண்ணுறதுக்கான மொத வழக்கா செய்யுவோட வழக்கு இருந்துச்சு. வக்கீலுங்க ரண்டு பேருமே எழும்பிட்டாங்க. செய்யு உள்ளாரப் போவ, பாலாமணியும் உள்ளாரப் போனாம்.

            "குறுக்கு விசாரணைக்குத் தயார்தானே? இதுக்கு மேல இதெ தள்ளிப் போட முடியாது!"ன்னாரு ஜட்ஜ் செய்யுவப் பாத்து. தயார்ங்ற மாதிரிக்கி செய்யு தலைய ஆட்டுனா. டவாலி செய்யுவ கூண்டுல ஏறச் சொன்னாரு. சத்திய வாக்குமூலம் வாங்க கிளார்க் எழும்ப அவர்ர உட்காரச் சொல்லிக் கைய காமிச்சிட்டு, "சத்தியமா சொல்றதெல்லாம் உண்மென்னு சொல்லுங்க!"ன்னாரு ஜட்ஜ் செய்யுவ பபாத்து.

            "சத்தியமா சொல்றதெல்லாம் உண்மெ!"ன்னா செய்யு.

            "கிராஸ்ஸ புரசீட் பண்ணுங்க. கேள்விங்க கண்ணியமா இருக்கணும். இல்லன்னா கிராஸையே கேன்சல் பண்றாப்புல ஆயிடும். வழக்குக்கு எது தேவையோ அதெ மட்டுந்தாம் கிராஸ் பண்ணணும். காயிதத்துல கோர்ட்டுக்கு கொடுத்திருக்கிறதத் தாண்டி வேற எதுலயும் எந்தக் கேள்வியும் இருக்கக் கூடாது!"ன்னு ஜட்ஜ் ஒரு எச்சரிக்கெ குறிப்பைத் தர்றாப்புல தந்தாரு. அதுக்குச் சரின்னு தலையாட்டிக்கிட்டு கங்காதரன் தன்னோட குறுக்கு விசாரணைய ஆரம்பிக்க செய்யு நின்னுகிட்டு இருந்த கூண்டுப்பக்கம் வந்தாரு. கங்காதரன் மொகத்துல ஒரு குதியாட்டம் தெரிஞ்சது அவருக்குப் பொங்கி வர்ற சிரிப்பாணியப் பாக்கையில. திருநீலகண்டன் தான் நின்ன இடத்துலயே தன்னோட கேஸ் கட்டெ பாத்தபடி நின்னாரு. குறுக்கு விசாரணை ஆரம்பிச்சது.

            "ஒங்க பேரு?"ன்னாரு வக்கீலு கங்காதரன்.

            "செய்யு"ன்னா செய்யு.

            "வெறும் செய்யுவா? செய்யு பாலமணியா?"ன்னாரு வக்கீலு.

            "எஞ்ஞ யப்பா வெச்சப் பேரு செய்யுதாம். அப்பிடித்தாம் அந்த பேர்லத்தாம் சர்டிபிகேட்லாம் இருக்கு!"ன்னா செய்யு.

            "சர்டிபிக்கேட்ல பேரு அப்பிடி இருக்குன்னா படிச்சிருக்கீங்க. எது வரைக்கும் படிச்சிருக்கீங்க?"ன்னாரு வக்கீலு.

            "எம்.பில்!"ன்னா செய்யு.

            "கோர்ட்டுக்குத் தாக்கல் பண்ணுன ஆவணங்கள்ல எம்மெஸ்ஸி பியெட்டுன்னு கொடுத்துப்புட்டு இப்போ எம்பில்ன்னு சொன்னா இதெ கோர்ட்டுக்கு சரியான விவரங்கள தாக்கல் பண்ணாம பொய்யான்ன வெவரங்கள தாக்கல் பண்ணதான்னு எடுத்துக்கிடலாமா?"ன்னாரு வக்கீலு.

            "இந்த வழக்க தாக்கல் பண்ணுற நேரத்துல எம்பில் அப்ளை பண்ணித்தாம் இருந்தேம். இப்பவும் எம்.பில் முடிக்கல. படிச்சிக்கிட்டுத்தாம் இருக்கேம்!"ன்னா செய்யு.

            "எம்மெஸ்ஸி பியெட் படிச்சிருக்கிற நீஞ்ஞ ஒரு வேல செஞ்சி சம்பாதிக்கலாம்! பியெட் இஸ் எ புரபஸனல் கோர்ஸ் யு நோ?"ன்னாரு வக்கீலு வழக்குல நொழைஞ்சி அவளுக்கு ஜீவனாம்சத்தெ கொடுக்க வாணாங்றதுக்கான மொத வலுவான குறிப்புக்கான நிரூபணத்தெ தேடி வைக்குறாப்புல.

            "வேல கொடுத்த வேல பாக்கலாம்!"ன்னா செய்யு பட்டுன்னு வக்கீல மடக்குறாப்புல.

            "அதத்தாம் நாம்மளும் சொல்ல வர்றேம். கும்பகோணம் பியாரார் குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ல ஒங்களுக்கு வேல கொடுத்திருக்காங்க. நீங்க அஞ்ஞ புரபஸனால டீச்சர்ரா வேல பாக்கறீங்க!"ன்னாரு வக்கீலு அவ்வே சொன்ன பதிலெ வெச்சு மடக்குறாப்புல.

            "யப்படி ஒரு பள்ளியோடம் கும்பகோணத்துல எஞ்ஞ இருக்குதுன்னே நமக்குத் தெரியாது!"ன்னா செய்யு.

            "கும்பகோணமாவது தெரியுமா?"ன்னாரு வக்கீலு.

            "தெரியும்!"ன்னா செய்யு.

            "அதானே அத்து எப்பிடித் தெரியாமா இருக்கும்?"ன்னு சொல்லிட்டு வக்கீல் தங்கிட்டெ இருந்த ஆவணப்பட்டியல்ல வர்ற ஒரு அக்நாலெட்ஜ்மெண்ட் கார்ட காட்டி, "இத்து ஒஞ்ஞ கையெழுத்துதானே?"ன்னு கேட்டாரு.

            அதெ நல்லா உத்துப் பாத்தா செய்யு. கொஞ்ச நாளுக்கு மின்னாடி கங்காதரன் கோவில்பெருமாளுக்கு அனுப்பிச்சிருந்த ரீஸ்தர் தபாலுக்காக அப்பங்காரரோட கோவில்பெருமாள் போயி வாங்குனப்போ கையெழுத்துப் போட்டுக் கொடுத்த அதே அக்நாலெட்ஜ்மெண்ட் கார்டு. அந்த நெனைப்பு வந்ததும், "ஆமா!"ன்னா செய்யு. இதெ ஏம் இந்த நேரத்துல காட்டி சம்பந்தமில்லாம ஒரு கேள்வி எழும்புதுன்னு அவளுக்குள்ள ஒரு யோசனெ சொழல ஆரம்பிச்சது. அதுக்கான விடை அவளுக்கு அடுத்தடுத்த கேள்விகள்ல ஒவ்வொண்ணா கெடைக்க ஆரம்பிச்சது. அப்போ கையெழுத்துப் போட்டு வாங்குன ரீஸ்தரு தபால படிக்க ஆரம்பிச்சு மயக்கம் போட்டு வுழுந்ததும் அவளுக்கு ஞாபவத்துல வந்துப் போச்சுது. மயக்கமடிக்க வெச்ச கடுதாசில்லா அத்துன்னு தனக்குள்ள முணுமுணுத்துகிட்டா.

            "நோட் திஸ் பாய்ண்ட்ங்ய்யா! இந்த அக்நாலெட்ஜ்மெண்ட் கார்டுல இவுங்க கையெழுத்துப் போட்ட எடம் கும்பகோணத்துக்குப் பக்கத்துல இருக்குற கோவில்பெருமாள்!"ன்னு சொல்லி அந்த அக்நாலெட்ஜ்மெண்ட் கார்ட கோர்ட்டு கிளார்க் மூலமா ஜட்ஜ்கிட்டெ கொடுத்தாரு கங்காதரன் வக்கீல். அதெ ஜட்ஜ் வாங்கிப் பாத்துட்டு செரித்தாம்ங்ற மாதிரிக்கித் தலைய ஆட்டுனாரு.

            "இவுங்க இப்போ இருக்குறது தஞ்சாவூரு மாவட்டத்துல இருக்குற கும்பகோணத்துக்குப் பக்கத்துல கோவில்பெருமாள். அதுக்கான ஆதாரந்தாம் அந்த அக்நாலெட்ஜ்மண்ட் கார்டு. அந்த அக்நாலெட்ஜ்மெண்ட் கார்டுங்றது ஹெச்செம்ஓப்பி வழக்குக்காக அறிவிப்பு அனுப்புறதுக்காக அவுங்க இருக்குற கோவில்பெருமாளுக்கு அனுப்பிச்ச தபாலோடது. அவுங்க அங்க இருந்தாத்தாம் இந்த அக்நாலெட்ஜ்மெண்ட் கார்டுல கையெழுத்துப் போட்டு வாங்க முடியும். ஆக அவுங்க இருக்குற எடம் கும்பகோணம்ங்றது உறுதியாவுது. அங்க இருந்துக்கிட்டுத்தாம் கும்பகோணத்துல இருக்குற பியாரார் இன்ஸ்ட்டியூசன்ல வேலயப் பாத்துக்கிட்டு, மாசா மாசம் சம்பத்தையும் வாங்கிக்கிட்டு ஜீவனாம்சத்துக்கும் விண்ணப்பிச்சிருக்காங்கறது நம்மளோட பாய்ண்டங்ய்யா. ஜீவனாம்சங்றது வாழ்வாதாரத்துக்கான ஒரு தொகை. இவுங்களுக்கு வாழ்வாதாரம் இருக்குறப்போ அதெ ஏன் என்னோட கட்சிக்காரர் கொடுக்கணும். தேவையேயில்ல!"ன்னாரு வக்கீல்.

            "யில்ல நாம்ம கும்பகோணத்துலயே யில்ல!"ன்னா செய்யு சத்தம் போடுறாப்புல.

            "நாம்ம ஆதாரமே கொடுத்துட்டேம்மா! கும்பகோணத்துல யில்லாத நீஞ்ஞ எப்பிடி கும்பகோணத்துல இந்த கையெழுத்தப் போட்டு நாம்ம அனுப்புன ரீஸ்தரு தபால்ல வாங்குனீயே?"ன்னாரு வக்கீலு.

            "இந்தத் தபால்ல வாங்குறதுக்காகவே போனேம்!"ன்னா செய்யு.

            "இந்தத் தபால் அங்க வந்திருக்கிறது அங்க இல்லாத ஒங்களுக்கு எப்பிடித் தெரிஞ்சதுன்னு ஆச்சரியமா இருக்கே?"ன்னாரு வக்கீலு.

            "எஞ்ஞ மாமா போன் பண்ணிச் சொன்னதால அதெ வாங்கப் போனேம்!"ன்னா செய்யு.

            "அப்பிடில்லாம் ஊர்ல இல்லாத ஒருத்தருக்கு தபால் ஆபீஸ்லேந்து தபால பட்டுவாடா பண்ணுவாங்களா ன்னா?"ன்னாரு வக்கீலு. அந்தக் கேள்விக்குச் செய்யு கொஞ்சம் தடுமாறுனா.

            "ஒண்ணும் தடுமாறாதீங்க செய்யு! உண்மெ என்னங்றதெ நாம்ம சொல்றேம்! ஒஞ்ஞ மாமாவுக்கு சற்குணங்றத பையன் கலியாணம் ஆவுற வயசுல இருக்காரா இல்லியா?"ன்னாரு வக்கீலு.

            "ம்! இருக்காங்க!"ன்னா செய்யு.

            "கலியாண வயசுல இருக்குற சற்குணத்தோட நீங்க வண்டியில போறதாவும், வரதாவும் கோவில்பெருமாள்ள இருக்குறவங்க பேசிக்கிறாங்களே? அத்து உண்மையா?"ன்னா செய்யு.

            "வண்டியில போயிருக்கேம். என்னிக்காவது பஸ்ஸப் பிடிக்க முடியாமப் போறப்போ!"ன்னா செய்யு.

            "நீஞ்ஞ ஏம் அஞ்ஞ பஸ்ஸப் பிடிக்கப் போறீயே? யப்போ நீஞ்ஞ இருக்குறது அஞ்ஞத்தாம். அஞ்ஞ இருக்குறவாசித்தாம் ஒஞ்ஞள அவரு வண்டியில அழைச்சிட்டுப் போறாரு. அதுவும் கலியாண வயசில இருக்கு ஓர் ஆண்மகனோட இல்லியா?"ன்னாரு வக்கீலு.

            "யில்ல சார்! யில்ல! கொஞ்ச நாளு அஞ்ஞ இருந்தேம். அப்போ நடந்தது!"அதுன்னா செய்யு.

            "இவர் முன்னுக்கு முரணான தகவலெ சொல்றதுலேந்தே இவரு சொல்றதெல்லாம் பொய்யின்னு தெரியுது. மொதல்ல கும்பகோணத்துல இல்லன்னவரு, யிப்போ கொஞ்ச நாளு இருந்தேம்ங்ற நெலைக்கு வர்றாரு. உண்மெ என்னான்னா இவரு இருக்குறது கும்பகோணத்துலத்தாம். அதுவும் இன்னும் கலியாணம் ஆவாத மாமன் மகனோட!"ன்னாரு வக்கீலு.

            "யில்லவே யில்ல சார்! எத்தனெ மொற சொல்லுவேம்? அஞ்ஞ யிருந்தது கொஞ்ச நாளுத்தாம்!"ன்னா செய்யு.

            "செரி ஒஞ்ஞ கணக்குப்படி கொஞ்ச நாளு இருந்ததாவே இருக்கட்டு. நீஞ்ஞ இருக்க வேண்டிய எடம் ரண்டுதாம். ஒண்ணு ஒஞ்ஞ புருஷனோட எடம். புருஷனப் பிரிஞ்சா அடுத்த இருக்க வேண்டிய எடம் ஒஞ்ஞ யப்பாவோட வூடுதாம். அதெ வுட்டுப்புட்டு எதுக்கு மாமா வூட்டுல அதுவும் கலியாணம் ஆவாத ஓர் ஆண்மகன் இருந்த வூட்டுல இருந்தீங்க?"ன்னாரு வக்கீலு.

            "யப்போ நமக்குக் கொஞ்சம் ஒடம்புக்கு முடியல!"ன்னா செய்யு.

            "ஒடம்புக்கு முடியலன்னா இருக்க வேண்டிய எடம் ஆஸ்பிட்டல்தானே தவுர கலியாணம் ஆவும் வயதிலுள்ள ஓர் ஆண்மகன் இருக்கக் கூடிய மாமன் வீட்டில கெடையாதே!"ன்னாரு வக்கீலு.

            செய்யு என்னத்தெ பதிலச் சொல்றதுன்னு தெரியாம எச்சில மென்னு முழுங்குறாப்புல முழுங்குனா.

            "நான் அப்ஜெக்சன் பண்ணுறேம்ங்கய்யா!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன்.

            "இதுல என்னத்தெ அப்ஜக்சன் பண்ணுறதுக்கு இருக்குன்னு நமக்குப் புரியலங்கய்யா!"ன்னாரு வக்கீல் கங்காதரன்.

            "ஒரு பெண்ணுக்கு சில காலம் உறவினர்கள் வீட்டில் இருந்து வர உரிமையில்லையா? அந்த உரிமை ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா என்ன? எதிர்தரப்பு லாயர் அடிக்கடி ஆண்மகன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி எனது கட்சிக்காரரை இழிவு செய்யும் முயற்சியோடு நடந்து கொள்கிறார்ங்றய்யா!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன்.

            "அந்த வார்த்தைய இனிமேல் பயன்படுத்த வாணாம்! யு புரசிட்!"ன்னாரு ஜட்ஜ்.

            "மன்னிக்கணுங்கய்யா!"ன்னு சொல்லிட்டு, செய்யுவப் பார்த்து, "எனது கட்சிக்காரர் ஒருமுறை கோவில்பெருமாள் வந்த போதும், எனது கட்சிக்காரரின் தாயார் ஒரு முறை கோவில்பெருமாள் வந்தப் போதும் நீங்கள் கோவில்பெருமாளில் இருந்துள்ளீர்கள்தானே?"ன்னாரு வக்கீல் கங்காதரன் செய்யுவப் பாத்து.

            "ஆமா!"ன்னா செய்யு.

            "நீங்கள் கோவில்பெருமாளில்தான் இருந்துள்ளீர்கள், இருக்கிறீர்கள் என்பதற்கு எத்தனை எத்தனை ஆதாரம். எனது கட்சிக்காரர், எனது கட்சிக்காரரின் தாயார், இந்த அக்நாலெட்ஜ்மெண்ட் கார்டு. இவை அனைத்தையுமே நீங்கள் உங்களது வாயால் வேறு ஒத்துக் கொண்டிக்கிறீர்கள். இப்போதாவது சத்திய வாக்குமூலம் எடுத்துக் கொண்டதற்கு மனசாட்சிப்படி பதிலைச் சொல்லுங்கள். இவ்வளவு நீண்ட காலம் தற்போது வரை கும்பகோணம் அருகில் உள்ள கோவில்பெருமாளில் நீங்கள் இருப்பது பியாரார் பள்ளியில் வேலை பார்க்கவும், உங்கள் மாமன் மகன் சற்குணத்தோடு குடும்பம் நடத்தவும்தானே?"ன்னாரு வக்கீல்.

            "சத்தியமா கெடையாது! சாமிச் சத்தியமா கெடையாது!"ன்னா செய்யு ரொம்ப பதற்றமா.

            "எதற்கு உண்மையை மறைக்க வேண்டும்? அதையும் உங்கள் வாயாலயே வரவழைக்கிறேன் பாருங்க. கும்பகோணத்துல நீங்க வேலைப் பார்க்கவில்லன்னா எதுக்கு அங்க தங்குனீங்க. அதாவது ஒங்க வாக்குப்படியே கொஞ்ச காலத்துக்கு?"ன்னாரு வக்கீல்.

            "ஒடம்புக்கு முடியாமப் போயிருந்ததுதாம் மொத காரணம். அதுக்கடுத்தாப்புல எம்பில்ல படிக்கிறத்துக்காகவும்தாம்!"ன்னா செய்யு.

            "நீங்க எங்க எம்பில் படிக்கிறீங்கன்னு தெரிஞ்சிக்கிலாமா?"ன்னாரு வக்கீல்.

            "தஞ்சாவூர்ல இருக்குற சேவியர் காலேஜ்!"ன்னா செய்யு.

            "பாத்தீங்களா! நீங்களே உண்மைய எப்படி ஒளறிக் கொட்டுறீங்கன்னு. தஞ்சாவூர்ல இருக்குற காலேஜூக்கு யாராச்சும் கும்பகோணத்துல தங்குவாங்களா? நீங்கள் எம்பில் படிப்பதாக அந்தக் காலேஜில் சேர்ந்து கொண்டு அங்கே அதைப் படிக்காமல் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டும், மாமன் மகன் சற்குணத்தோடும் சரச சல்லாபங்களில் ஈடுபட்டு உல்லாசமாகவும் இருந்துள்ளீர்கள்!"ன்னாரு வக்கீலு.

            "பொய்யிப் பொய்யா புழுவாதீங்க. நாக்கு அழுவிப் போயிடும்!"ன்னா செய்யு.

            "பாருங்கய்யா! நம்மளோட கடமெயச் செய்ய வுடாம ஒஞ்ஞ மின்னாடியே யிப்பிடி பேசுறவங்க என்னோட கட்சிக்காரர் சேர்ந்து வாழணும்ன்னு போயிக் கூப்புட்டப்போ எப்பிடிப் பேசிருப்பாங்கன்னு?"ன்னாரு வக்கீலு ஜட்ஜப் பாத்து.

            "அப்பிடில்லாம் பேசக் கூடாது. அதுக்கு மன்னிப்பக் கேளுங்க!"ன்னாரு ஜட்ஜ்.

            "மன்னிப்புக் கேக்குறேம்ய்யா! மாமா பையேம் சற்குணத்த ஒரு சகோதரனப் போலத்தாம் பாக்குறேம்ய்யா! வேறெந்த தப்பான நோக்கத்தோட பாக்கலங்கய்யா!"ன்னா செய்யு.

            "இதென்ன விநோதம்? மாமன் மகனை யாராவது அப்பிடிப் பாப்பாங்களா? இவுங்க பொய்யா பேசுறாங்றதுக்கு இதுவே நல்ல ஆதாரம். நான் இப்போது உண்மையைச் சொல்றேன். கூண்டிலேறி இருக்கும் செய்யுவுக்கும் சற்குணத்துக்கும் கலியாணத்துக்கு முன்பே உறவு இருந்திருக்கிறது. வீட்டில் சொன்னார்கள் என்பதற்காக எனது கட்சிக்காரரைத் திருமணம் செய்து கொண்ட எதிர்கட்சிக்காரரான செய்யு மாமன் மகன் சற்குணத்தின் நினைவோடயே எனது கட்சிக்காரரோடு குடும்பம் நடத்தியுள்ளார். எனது கட்சிக்காரர் தாம்பத்தியத்துக்கு அழைத்தப் போதும் அந்த நினைவோடயே அதை மறுத்துள்ளார். தொடர்ந்து எனது கட்சிக்காரரோடு கூண்டிலே இருக்கும் எதிர்கட்சிக்காரர் மாமன் மகன் நினைவோடு வாழ முடியாமல் எனது கட்சிக்காரரை கலியாணம் செய்து ஏமாற்றி விடும் நோக்கோடு பிரிந்து வந்திருக்கிறார். இதை உண்மென்னு ஒத்துக்குறீங்களா?"ன்னாரு வக்கீலு.

            "கெடையாது. அப்பிடிக் கெடையவே கெடையாது!"ன்னா செய்யு சத்தம் போட்டு.

            "சைலன்ஸ்! எதெச் சொல்றதா இருந்தாலும் அமைதியாச் சொல்லுங்க! சத்தம் போடாதீங்க!"ன்னாரு ஜட்ஜ்.

            பொங்கிட்டு வர்ற அழுகையை சேலைத் தலைப்பால தொடைச்சிக்கிட்டுச் சரிங்ற மாதிரிக்கித் தலைய ஆட்டுனா செய்யு.

            அடுத்தா கங்காதரன் வக்கீல் கேக்க ஆரம்பிச்சாரு. "தங்கள் மாமன் மகன் நினைப்புடனே எனது கட்சிக்காரரைத் தாம்பத்தியத்தில் திருப்திபடுத்தாமலே வாழ்ந்துள்ளீர்கள். உறவுக்கு அழைத்தப் போதெல்லாம்..."ன்னு சொல்ல ஆரம்பிச்சதும், "இவரு பொய்யிப் பொய்யா சொல்றாரு!"ன்னு சத்தம் போட்டு அதுக்கு மேல பேச முடியாம அப்பிடியே கூண்டுலயே மயங்கி விழுந்தா செய்யு. கோர்ட்டுல இருந்த அத்தனெ பேரும் சட்டுன்னு எழுந்திரிச்சிட்டாங்க. ஜட்ஜூம் எழும்பிட்டாரு. அக்கம் பக்கத்துல இருந்தவங்கள்ல பொண்ணுங்க ஓடிப் போயி அவளெ நிமுத்தி மொகத்துல தண்ணிய அடிச்சாங்க. ஒரு லேடி போலீஸ் ஓடியாந்து எல்லாரையும் நகரச் சொல்லிட்டு கூண்டுலேந்து வெளியில தூக்கிக் கொண்டாந்து பெஞ்ச் மேல படுக்கப் போட்டு கன்னத்துல லேசா தட்டுனாங்க. விகடுவும், சுப்பு வாத்தியாரும் பதறிக்கிட்டு உள்ளார ஓடியாந்தாங்க.

            "நீயெல்லாம் ஒரு யண்ணனடா? தங்காச்சிய யிப்பிடி கூண்டுல நிறுத்திட்டு வேடிக்கெப் பாக்குறே?"ன்னு சொல்லிட்டு அது கோர்ட்டுன்னு கூட பாக்காம விகடுவப் பாத்து காறித் துப்புறாப்புல வாயக் கொண்டு போனாம் பாலாமணி.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...