23 Dec 2020

ஓப்பன் கோர்ட்

ஓப்பன் கோர்ட்

செய்யு - 664

            மேல்மாடியில ஒவ்வொரு கோர்ட்டா தேடிப் போனா செஷன்ஸ் கோர்ட்ல உள்ளார உக்காந்திருந்தாரு வக்கீல் திருநீலகண்டன். வழக்குக அது பாட்டுக்கு நடந்துக்கிட்டெ இருந்துச்சு. வக்கீல் அதுல கவனத்தெ வெச்சிக்கிட்டு இருந்தாரு. கோர்ட்டுல வாதாடுறவங்க கொரல தவுர வேற கொரலு யில்லாம ஒரு வெதமான மயான அமைதியில இருந்துச்சு அந்த எடமே. விகடுவுக்கு வக்கீல எப்பிடிக் கூப்புடுறதுன்னு தெரியல. கோர்ட்டுக்குள்ளார இருக்குறப்ப வக்கீலுங்க செல்போன ஆப் பண்ணிருப்பாங்க அல்லது சைலண்டுல போட்டுருப்பாங்க. திருநீலகண்டன் வக்கீலோ அந்தாண்ட இந்தாண்ட திரும்பிப் பாக்குறாப்புல யில்ல. ஒரே கோணத்துல நேர்ரா ஜட்ஜ் இருக்குற தெசையையே பாத்துக்கிட்டே இருந்தாரு. அந்த நேரம் பாத்து உள்ளார ஒரு வக்கீலு நோழையப் பாத்தாரு. அவரு கையப் பிடிச்சி விகடு வக்கீல் திருநீலகண்டனப் பாத்துக் காட்டி கொஞ்சம் அவர்ர வரச் சொல்லணும்ன்னாம். அந்த வக்கீலு சொல்றதா தலைய ஆட்டிக்கிட்டு உள்ளாரப் போனாரு. அவருப் போயி சொன்னதுக்குப் பெறவுதாம் திருநீலகண்டன் நெலைப்படிப் பக்கம் திரும்பி விகடுவப் பாத்தாரு. பாத்தவரு சித்தெ பொறுமையா அங்கயே இருங்கன்னு சொல்ற மாதிரிக்கி கண்ண மூடிட்டு தலைய மேலும் கீழும் ஆட்டுனாரு.

            அவரு சொன்னப்படி பொறுமையா நின்னா கோர்ட்டு ஒண்ணேகால் மணிக்கு முடியுற வரைக்கும் நிக்குறாப்புல ஆயிடுச்சு. கடெசீயா திருநீலகண்டனோட கேஸ்ஸோடத்தாம் கோர்ட்டு கலைஞ்சது. அதுக்குப் பெறவுத்தாம் விகடு திருநீலகண்டன அழைச்சிக்கிட்டுக் கீழே சிஜேயெம் கோர்ட்டுக்கு வர முடிஞ்சது. வந்தா கீழேயும் கோர்ட்டு கலைஞ்சிருந்துச்சு. கீழே சுப்பு வாத்தியாரும், செய்யுவும் மட்டுந்தாம் நின்னுகிட்டு இருந்தாங்க. மித்த எல்லாரும் கலைஞ்சிப் போயிருந்தாங்க. செய்யு கோவமா இருந்தா. ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டிருப்பா போல. மொகம் பாக்குறதுக்கு பதற்றமா இருந்துச்சு. "ஜட்ஜ் திரும்பவும் கூப்புட்டாங்கய்யா! வக்கீல் யில்லன்னதும் திரும்பவும் ரண்டரைக்கு மேல வாரச் சொல்லிருக்காங்க! அதுக்கு அந்தப் பயலுவோ வெளியில வந்து என்னமா நக்கல் பண்ணிட்டுப் போறானுங்க தெரியுமா? நமக்கு ரொம்ப அசிங்கமாப் போயிடுச்சுங்கய்யா!"ன்னா செய்யு கோவத்துல வெடிச்சுச் சிதறுறாப்புல.

            "என்னம்மா பண்ணுறது? அங்க மேல இருக்குற கேஸ்ஸ முடிச்சி விடலாம்ன்னு போனா அது பாட்டுக்கு இழுத்துக்கிட்டே போவுது. வெளியில வர்றதா? உள்ளாராய இருக்குறதாங்ற கொழப்பத்துல நேரம் போனதுதாம் மிச்சம்! நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். ஒன்னோட வக்கீலான நாம்ம இல்லாம கிராஸ் பண்ண மாட்டாங்க! இது நிச்சயம்! இது சத்தியம்!"ன்னாரு வக்கீலு அவளெ சாந்தப்படுத்துறாப்புல.

            "மத்தியானமாவது இஞ்ஞ இருப்பீயளா? வேற எடத்துல கேஸ்ஸூ இருக்குன்னுப் போயிடுவீயளா?"ன்னா செய்யு தன்னோட ஆத்தாமைய காட்டுறாப்புல.

            "மத்தியானம் ஒண்ணும் கேஸ்லாம் இல்ல. இங்கயே கெடக்க வேண்டியததாம். நீங்கச் சாப்புட்டு தயாரா இருங்க. நாம்ம வண்டிய ஒரு அழுத்து அழுத்திட்டு வீட்டுலப் போயி சாப்புட்டுட்டு வந்திடுறேம்! மத்தியானம் வெச்சு மொறையா கவனிச்சிடுவோம்!"ன்னாரு வக்கீலு நம்பிக்கைய சில்லறை காசுகள அள்ளி வீசுறாப்புல.

            "வாணாங்கய்யா! வூட்டுக்குப் போறேன்னு சரியான நேரத்துக்கு வாரலன்னா யின்னும் அசிங்கமாப் போயிடும். கேண்டீன்லயே நம்ம கூடயே சாப்புட்டு இஞ்ஞயே இருங்க!"ன்னா செய்யு முன்னெச்சரிக்கையா பேசுறாப்புல.

            "ரொம்ப நல்லதாப் போச்சு. ஒங்களுக்குத்தாம் தண்டமா சாப்பாட்டுச் செலவு. தாராளமாப் பண்ணுங்க. நமக்கும் வீட்டுச் சாப்பாட்டையே சாப்புட்டு அலுத்துப் போச்சு. அதெ போல கேண்டீன் சாப்பாட்ட சாப்புட்டும் அலுத்துப் போச்சு. அதால என்னப் பண்ணுவோம்ன்னா டவுனுக்குப் போயி நல்ல கடையில சாப்புட்டு வந்திடுவோமோ? ஒரு மாத்தமா இருக்கட்டுமே சாப்பாட்டுக்கும் செரித்தாம், இந்த சூழ்நிலைக்கும் செரித்தாம்!"ன்னாரு வக்கீலு நெலமைய சட்டுன்னு தன்னோட கட்டுப்பாட்டுக்கு மாத்துறாப்புல. அதுவும் சரிதான்னு தோணுச்சு சுப்பு வாத்தியாருக்கு. அவரு வழக்கமா அழைச்சிட்டுப் போற திருவாரூரு டவுன்ல ஓடம்போக்கி ஆத்தாங்கரையில மாடியில இருக்குற வாசன் ஓட்டலுக்கு அழைச்சிட்டுப் போனாரு. அந்த நேரத்துல சுடச்சுட பட்டர்நான் தயாராயிட்டு இருந்துச்சு. வக்கீல் ரண்ட வாங்கிச் சாப்புட்டாரு. மித்த எல்லாருக்கும் ஒண்ணு சாப்புட்டு முடிக்கிறதுக்குள்ளயே தெகட்டுனாப்புல ஆயிடுச்சு. அதெ சாப்புட்டு முடிச்சதும் வக்கீல் பாதாம் பால் வேணும்ன்னு கேட்டதுல எல்லாருக்கும் அதையும் வாங்கிக் கொடுத்தாரு சுப்பு வாத்தியாரு. அதெ குடிச்சி முடிச்சதும் அங்கயே ஓட்டல்ன்னும் பாக்காம குறுக்கு விசாரணையப் பத்தி திரும்பவும் செய்யுவும் வக்கீலும் பேச ஆரம்பிச்சாங்க.

            அதெ கேட்டுச் சுப்பு வாத்தியாருக்குச் சலிச்சாப்புல ஆயிடுச்சு. அவரு வெறுத்துப் போயிச் சொன்னாரு, "இனுமே இதெப் பத்தி யோஜிக்க வாணாம். என்னத்தெ கேட்டாலும் ஒம் மனசுக்கு யப்போ அந்த நேரத்துல என்னத்தெ தோணுதோ அதெச் சொல்லிட்டுப் போயிகிட்டெ யிரு! ரொம்ப யோஜிக்க யோஜிக்க எல்லாம் தப்பாத்தாம் போவும்! அளவோட யோஜிக்கிறதெ நிறுத்திக்கோ!"ன்னு மவளுக்குப் புத்திச் சொல்றாப்புல.

            வக்கீல் சிரிச்சிக்கிட்டு, "அப்பிடில்லாம் சொன்னா வழக்குப் புட்டுக்கிட்டுப் போயிடும் சார்! வழக்குல ரொம்ப எச்சரிக்கையா இருக்க வேண்டிய எடம்ன்னா அது க்ராஸ்த்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியார்ரப் பாத்து வழக்கோட நெலமைய எடுத்துச் சொல்றாப்புல.

            "போனா போயிட்டுப் போவுது போங்க. மவ்வே இருக்குற மனநெலைக்கு ரொம்ப யோசிச்சா அவ்வே மண்டெ கழண்டுப் போயிடுவா. அதுக்கு வழக்குப் புட்டுக்கிட்டுப் போறதே பரவாயில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவளோட மனநெலைய எடுத்துச் சொல்றாப்புல.

            "ஏகப்பட்ட வழக்குகள கோர்ட்டுல பாத்தாப்புலல்ல ரொம்ப பக்குவமா பேசுறீங்க சார்! சீனியர் லாயரே இப்பவும் குறுக்கு விசாரணைன்னா ரொம்ப மெனக்கெட்டு பர்ஸ்ட் கேஸைப் போல பதற்றமாத்தாம் தயாரு பண்ணுவாங்க சார்! கேஸ்ஸோட ஜீவ நாடியே க்ராஸ்லயும் ஆர்கியூமெண்ட்லயும்தாம் இருக்கு!"ன்னாரு வக்கீல் விசயத்தெ ரொம்ப உன்னிப்பா விளக்குறாப்புல.

            "சூதானமா இருக்க வேண்டித்தாம். ரொம்ப சூதானமா இருந்தாலும் காரியம் ஆவாது. மனசுல ஒளைச்சல்தான் மிஞ்சும்! ரொம்பவும் பேசிட்டு கெடக்க வாணாம். நேரத்துக்குக் கோர்ட்டுக்குப் போயிடுவோம்! அங்க வெச்சு ஆவுறது ஆவட்டும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதுக்கு மேல அவுங்க பேச்செ கேக்க முடியாதுங்றாப்புல. அதுக்கு வக்கீலு உதட்டப் பிதுக்குனாரு. எந்தப் பதிலையும் சொல்லல. கெளம்ப தயாராயிட்டாரு. அங்கேயிருந்து கெளம்பி கோர்ட்டுக்கு வந்தப்போ மணி சரியா ரண்டரைக்கு மேல ஆயிருந்துச்சு. ஆனா கோர்ட்டு ரண்டே முக்காலுக்கு மேலத்தாம் திரும்பவும் ஆரம்பமானுச்சு. ரண்டு வழக்குகள முடிச்சதும் மிச்சமிருந்தது இந்த குறுக்கு விசாரணை மட்டுந்தாம். கோர்ட்டுல அநேகமா கோர்ட்டு சம்பந்தப்பட்டவங்க, இந்த வழக்குச் சம்பந்தப்பட்டவங்களத் தவுர யாருமில்ல. அதுக்காகவே ஜட்ஜ் இதெ கடெசீயா வெச்சிருந்திருப்பாரு போல.

            ஜட்ஜ் வெளியில நின்னுகிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு, விகடு, பாலாமணி, ராசாமணி தாத்தா, ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன்னு எல்லாரையும் வழக்கோட பேரைச் சொல்லிக் கூப்புட வுடாம டவாலியை வுட்டு உள்ளார வரச் சொன்னாரு. கோர்ட்டுல யிருந்த கிளார்க், டைப்பிஸ்ட் எல்லாரையும் கெளம்பச் சொல்லிட்டாரு. அதெ பாத்ததும் இன்னிக்குக் குறுக்கு விசாரணை இல்லங்றதெ போல வக்கீல் திருநீலகண்டன் ஒரு மொகக் குறிப்பக் காட்டுனாரு.

            எல்லாரும் உள்ளார வந்ததும் ஜட்ஜ் சொன்னாரு, "கொஞ்சம் ஓப்பனா பேசுவோம்!"ன்னு.

            "இன்னிக்கு நாம்ம குறுக்கு வெசாரணைய முடிச்சிப்புடலாம்ன்னு நெனைச்சேம்ங்கய்யா!"ன்னாரு கங்காதரன் வக்கீல் பவ்வியமான கொரல்ல.

            "முடிக்கலாம் வாங்க. கோர்ட்டு எங்கப் போயிடப் போறது? நாம்ம எங்கப் போயிடப் போறேம்? இந்த கிராஸ் இல்லாம இந்த வழக்க முடிச்சிடலாம்ன்னு பாக்குறேம். நீங்க கிராஸ் பண்ணப் போறது ஒரு பொண்ணு. அதாலத்தாம் யோசிக்கிறேம்! வழக்க நடத்தி முடிக்கிறதுல என்னா இருக்குது? அதால யாருக்காவது புண்ணியம் இருக்கணும். இதெ வருஷக் கணக்குல நடத்தி முடிச்சீங்கன்னா ரண்டு பேருக்குமே புண்ணியம் இருக்காது. வயசு பாட்டுக்குப் போயிட்டே இருக்கும்."ன்னாரு ஜட்ஜ் இந்த வழக்கோட எதார்த்த நெலமைய எடுத்துச் சொல்றாப்புல.

            "நாங்க சமரசத்துக்குத் தயாராத்தாம் இருந்தேம். போன ஹியரிங்குக்கு அவுங்கத்தாம் வாரல. இன்னிக்கும் பாத்தீங்கன்னா மத்தியானத்துக்கு மின்னாடி முடிய வேண்டிய கிராஸ்ஸ சாயுங்காலம் வரைக்கும் இழுத்தடிக்கப் பாக்குறாங்க!"ன்னாரு வக்கீல் கங்காதரன் குத்தம் சொமாத்துறாப்புல.

            "என்னோட கிளையண்டுக்கு ஒடம்பு சரியில்ல. அன்னிக்கு அவுங்க ஆர்குடியில இவுங்க போட்டிருந்த ஹெச்செம்ஓப்பிக்கு ஆஜராகியிருக்காங்க. ஒடம்பு முடியாம அங்கேயிருந்து இங்க வார முடியல. இதெ அன்னிக்கே நாம்ம கோர்ட்டுல சொல்லிலுக்கேம்யா. இன்னிக்கு நமக்கு மேல செஷன்ஸ்ல ஒரு முக்கியமான கேஸூங்கய்யா. கட்டாயம் நாம்ம இருந்தாவ வேண்டிய நெல. மத்தபடி இழுத்தடிக்கணும்ன்னு எங்களுக்கு எந்த நோக்கமும் இல்ல. என்னோட கிளையண்டுக்கு இந்தச் சமரசம் பிடிக்கல. அவுங்க வழக்க நடத்தணும்ன்னு நெனைக்கிறாங்க. நாங்க கிராஸூக்குத் தயாரா இருக்கேம். இப்ப வாணாலும் ஆரம்பிக்கலாம்ய்யா!"ன்னாரு திருநீலகண்டன் வக்கீல் கங்காதரன் வக்கீலு சொன்னதுக்கு எதிர் வாதத்தெ வைக்குறாப்புல.

            "கிராஸ்ஸப் பத்தி கொஞ்ச நேரத்துக்கும் யாரும் வாயத் தொறக்காதீங்க. சமரசத்துக்கு வர்றதுல திருநீலகண்டன் ஒங்கப் பக்கம் இருக்கற சிக்கல் என்னா? அதெச் சொல்லுங்க. பேசித் தீக்க முடியுமான்னு கடெசீயா ஒரு முயற்சியப் பண்ணுவேம்!"ன்னாரு ஜட்ஜ் ரண்டு தரப்பையும் பாத்து தீர்க்கமா பேசுறாப்புல.

            "அய்யா! என்னோட கிளையண்ட் தரப்புலேந்து செஞ்ச நகெநட்டு, கொடுத்த பணங்காசு அதிகம்யா. எல்லாத்துலயும் அவுங்க மூணுல ஒரு பங்கத்தாம் தர்றதா சொல்றாங்க. அப்பிடித் தர்றதுல என்னோட கிளையண்டுகிட்டேயிருந்து வாங்குன காசையேத் திருப்பிக் கொடுத்து அதெ வாழ்நாள் ஜீவனாம்சம்ன்னு ஏத்துக்கிட்டு காயிதத்துல கையெழுத்துப் போட்டுக் கேக்குறாங்கய்யா. அது என்னோட கிளையண்டுக்கு இஷ்டமில்லாத ஒண்ணா இருக்குங்கய்யா. அத்தோட மியூட்சுவல் டிவோர்ஸ்ன்னு இல்லாம பொண்ணா விரும்பிப் பிரிஞ்சிப் போறதாவும் செட்டில்மெண்ட்ல ஒரு வாசகத்தெ சேத்து இருக்காங்கய்யா. அதுக்கும் சேத்து கையெழுத்தப் போடச் சொல்றாங்கய்யா. செட்டில்மெண்டும் ஒன் டைம் செட்டில்மெண்டா இல்லங்கய்யா. இப்போ அஞ்சு லட்சத்துக்கான டிடியை மட்டும் வாங்கிக்கிட்டு, மிச்சத்தெ டிவோர்ஸ் அப்ளை பண்ணுற பேப்பர்ஸ்ல கையெழுத்தப் போட்டுக்கிட்டு வாங்கிக்கச் சொல்றாங்கய்யா! அதுதாங் இதுல பிரச்சனையா முட்டிக்கிட்டு நிக்குதுங்கய்யா!"ன்னாரு திருநீலகண்டன் பீஸ் கோர்ட்டு வழக்கு முடிவுக்கு வர்றாம போன காரணத்தெ வௌக்கிச் சொல்றாப்புல.

            "என்ன மிஸ்டர் கங்காதரன்! இப்பிடில்லாம் பண்ணக் கூடாதே. ரண்டுப் பக்கமும் பரஸ்பரம் கொடுத்ததெ வாங்கிட்டதாவும், மியூட்சுவலா பிரியுறதாவும் போட்டு சிம்பிளா முடிக்க வேண்டியதுதானே. எதுக்குத் தலையச் சுத்தி மூக்கைத் தொடறீங்க? பீஸ் கோர்ட்டுல முடியுதுன்னா அதுக்குத்தாம் அப்பீலே கெடையாதே! பெறவு ஏம் நீங்க செட்டில்மெண்ட்டுல தேவையில்லாத விசயங்களெ சேத்து ஆப்போசிட் சைட்ட கொழப்புறீங்க?"ன்னாரு ஜட்ஜ் கங்காதரன் வக்கீலப் பாத்து.

            "என்னோட கட்சிக்காரர் அப்பிடித்தாம் விரும்புறாருங்கய்யா!"ன்னாரு கங்காதரன் ஜட்ஜ் சொன்னதுக்குச் சேத்து ஒரே போடா போடுறாப்புல.

            "வழக்க எளிமையா முடிச்சி வுடப் பாருங்க. அவுங்க சொல்றாங்கன்னுப் பிடிச்சி இழுத்து வுடாதீங்க. வழக்கு நடந்தா ஒங்களுக்கு லாபமா இருக்கலாம். அவுங்களோட லைப்புக்கு பெருத்த நஷ்டம். நீங்க வேற ஒரு கேஸ்ல ஒங்களோட சம்பாத்தியத்தப் பாத்துக்குங்க. குடும்ப விசயத்துல அத்து வாணாம்!"ன்னாரு ஜட்ஜ் ரண்டு வக்கீலுக்குமெ புத்திச் சொல்றாப்புல.

            "அய்யா நாம்ம இந்த வழக்கையே பொண்ணுக்காக ப்ரீயாத்தாம் நடத்தித் தர்றேம். நம்மளப் பொருத்த வரை நீங்க சொல்ற முறையில முடிச்சிக்கத் தயார்ங்கய்யா!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் தம்மோட கையி சுத்தங்றதெ போல.

            "நாமளும் தஞ்சாவூர்லேந்து இஞ்ஞ வந்து இந்தக் கேஸ்ஸ நடத்துறேம்யா. இஞ்ஞ வந்துட்டுப் போனாவே தஞ்சாரூ கோர்ட்டுல இருக்குற அத்தனெயும் அப்பிடியே நிக்குதுங்குய்யா. இந்த வழக்கால இதெ நடத்துறதால நமக்கு எந்த லாவமும் இல்லீங்கய்யா. நம்மள நம்பி வந்துட்டாங்களேங்ற மொறைக்கு நடத்திட்டு இருக்கேம்ய்யா!"ன்னாரு வக்கீல் கங்காதரனும் தம்மோட கையும் சுத்தங்றதெ போல.

            "செய்யு தரப்புல சொல்லுங்க. சமரசத்த ஏத்துக்கிறதுல என்ன பிரச்சனை?"ன்னாரு ஜட்ஜ் இதுக்கு மேல வழக்கோட சம்பந்தப்பட்டவங்களோட நெலைப்பாட தெரிஞ்சிக்கிற நோக்குல.

            "நமக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லங்கய்யா. நீங்களாப் பாத்து முடிச்சி விட்டா செளகரியந்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எல்லாதையும் ஜட்ஜ் தலையில சொமத்துறாப்புல.

            "இதுவரைக்கும் நடந்ததெ வெச்சுப் பாக்குறப்போ, சேர்ந்து வாழப் போறதில்லன்னு ஆயாச்சு. பிரிஞ்சிப் போறதுன்னா கொடுக்குறதெ வாங்கிட்டுப் போயிடுறதுதாம் நல்லது. இதெ ஒரு வழக்கா நடத்துறப்போ ரண்டு பேரோட லைப்புக்கும் அத்துத் தேவையில்லாம மனஉளைச்சல்தான். நாம்ம ரொம்ப ஓப்பனாவே ஒங்க ரண்டு பேத்தோட வக்கீலையும் வெச்சிக்கிட்டே சொல்றேம். இதுக்கு மேல நீங்க இந்த வழக்க நடத்துறது வக்கீலுங்களோட சம்பாத்தியத்துக்குத்தாம் உதவும். ஒங்களுக்கு எந்த வெதத்துலயும் ஒதவாது! பாலாமணி தரப்புல இதுக்கு என்னத்தெ சொல்ல வர்றீங்க?"ன்னாரு ஜட்ஜ் அந்தத்  தரப்போட நெல என்னங்றதெயும் தெரிஞ்சிக்கிறாப்புல.

            "நமக்கு எந்தப் பக்கம் போவச் சொன்னாலும் சரித்தாம்யா! வழக்கு நடத்துணும்ன்னு அவுங்க நெனைச்சா நடத்தட்டும். முடிச்சிக்கிறதுன்னாலும் இதோ டிடியெல்லாம் தயார்ராத்தாம் இருக்கு. கையெழுத்தப் போட்டுக் கொடுத்துட்டு வாங்கிட்டுப் போவட்டும். எதுக்கும் தயாராத்தாம் நாஞ்ஞ இருக்கோம்! எஞ்ஞளால வழக்குல எந்த முட்டுப்பாடும் இல்லங்கய்யா! பண்டுறதெல்லாம் அவுங்கத்தாம்யா!"ன்னாம் பாலாமணி எல்லாத தப்பையும் செய்யு தரப்புல தூக்கிக் கொட்டுறாப்புல.

            "செய்யு சொல்லும்மா! ஒன்னோட மனசுல உள்ளதெ?"ன்னாரு ஜட்ஜ் செய்யுவப் பாத்து அவளோட மனசெ ஊடுருவிப் பாக்குறாப்புல.

            "அய்யா நமக்கும் இந்த வழக்க நடத்துறதுல இஷ்டமில்லங்கய்யா. ஆன்னா இவுங்க குறுக்கு விசாரணை நடக்கப் போவுதுன்னு நம்மள கோர்ட்டு வாசப்படிக்கு மின்னாடி நிறுத்தி என்னமா பேசுறாங்க தெரியுங்ளா? குறுக்கு விசாரணையில கேக்குற கேள்வியில நம்மள தற்கொலை பண்ணிக்கிறாப்புல செஞ்சிடுவாங்களாம்! ச்சும்மா கூண்டுல வெச்சிப் பீஸ் பீஸா கிழிச்சிடுவாங்களாம்! எவ்ளோ கேவலமா பேசுறாங்க தெரியுமாங்கய்யா! த்துப்பூன்னு காறித் துப்புறாங்க. வக்கீலு வர்லேங்றதுக்கு ஏமாத்த நெனைக்குறதா வையுறாங்க. எஞ்ஞ யண்ணனையும், யப்பாவையும் எங் காதுக்குக் கேக்கறாப்புல அசிங்கம் அசிங்கமா மெரட்டுறாங்கய்யா!"ன்னு அழுவ ஆரம்பிச்சிட்டா செய்யு சட்டுன்னு மனசுல உள்ளதெ கொட்டுறாப்புல.

            அதெ பாக்க ஜட்ஜூக்கே தர்ம சங்கடமா போயிடுச்சு. அவரு நெதானமா மெதுவா பேச ஆரம்பிச்சாரு. "பாலாமணி ஒங்க தரப்புல சில விசயங்க இருக்கு. சமரசத்துக்கு வர்றவங்கள நீங்க சீண்டி வுடுறீங்க. அப்படிப் பண்ணா அவுங்க எப்பிடி சமாதானத்துக்கு வருவாங்க? மனுஷரோட உணர்வுகளோட வெளையாண்டா யாரும் தங்களோட சுயகெளரவத்த வுட்டுக் கொடுத்துட மாட்டாங்றதெ நீங்க உணரணும். செய்யு ஒங்கத் தரப்புலயும் சில விசயங்க இருக்கு. இந்த வழக்கு நடக்குற இப்பத்தாம் சிவியரா தெரியும். அஞ்சாறு வருஷத்துக்குப் பெறவு இந்த வழக்க நெனைச்சிப் பாத்தீங்கன்னா இந்த வழக்கால ஒண்ணும் இல்லங்றது தெரிய வரும். அதெ ஏம் காலம் கடந்து புரிஞ்சிக்கணும்? நாங்க வழக்க தெனமும் பாக்குறவங்க. பல பேரோட வழக்குகளப் பாத்தவங்க. அந்த அனுபவத்துல ஒங்களுக்கு ஒரு நல்ல வழியக் காட்டி விடப் பாக்குறோம். அத்தோட ரண்டு பேரும் படிச்சவங்க. ஒருத்தர்ர நம்பி ஒருத்தர்ரு கெடையாது. சொந்தக் கால்ல நிக்குற அளவுக்குக் கல்வித் தகுதியும் இருக்கு. அதாலத்தாம் இவ்வளவு மெனக்கெட்டு சொல்றேம். ஒரு ஜட்ஜ் இந்த அளவுக்கு எறங்கி வந்துப் பேச வேண்டியதில்ல! ஆனாலும் பேசறேன்னா வம்படியா வழக்க நடத்தி ஒண்ணும் ஆவப் போறதில்லங்றதாலத்தாம்! ரண்டு பேருமே பெர்சனலா நல்லா இருக்கணும். அந்த நல்லதுக்கு இந்த வழக்கு குறுக்க நிக்கக் கூடாதுன்னு பாக்குறேம்! ஒரு மனிதாபினத்தோட அடிப்படையிலத்தாம் இவ்வளவு பேசுறேம்!"ன்னாரு ஜட்ஜ் தன்னோட நெலைப்பாட்டெ எல்லாத்துக்கும் வௌக்குறாப்புல.

            அதுக்கு பாலாமணி உணர்ச்சிவசப்பட்டாப்புல, "அவுங்க ரொம்ப எக்ஸாகிரேட் பண்ணுறாங்கய்யா! என்னவோ செஞ்சேம் செஞ்சேம்ங்றாங்க. ஒரு டாக்கடருக்கு என்னத்தெ பெரிசா செஞ்சிருப்பாங்க?"ன்னாம் பாலாமணி பத்த வைக்குறதுக்கு மின்னாடியே வெடிக்குற பட்டாசெ போல.

            "அப்பிடியில்லாம் பேசக் கூடாது பாலாமணி. அவுங்க செஞ்சது பத்துக் காசாக் கூட இருக்கலாம். அவுங்களுக்கு அத்துப் பெரிசுத்தாம். ‍அதெ சம்பாதிக்க அவுங்க பட்ட கஷ்டம் அவுங்களுக்குத்தாம் தெரியும். அதெ கொறைச்சி மதிப்புடக் கூடாது!"ன்னாரு ஜட்ஜ் பாலாமணிக்கு நெதானம் தப்பாம வெசயத்தெ புரிய வைக்குறாப்புல.

            "அவுங்க செஞ்சதெ வுட கூடுதலாத்தாம்யா கொடுக்குறேம்ங்றேம்!"ன்னாம் பாலாமணி கொஞ்சம் கொரலெ ஒசத்துறாப்புல.

            "பொய்! சுத்தப் பொய்! செஞ்சதுல பாதி கூட கெடையாதுங்கய்யா!"ன்னா செய்யு சட்டுன்னு சத்தமா.

            "சத்தம் போடக் கூடாது. நீங்க என்ன செஞ்சீங்க? நீங்க என்னக் கொடுக்கப் போறீங்கற விசயத்துக்குள்ள நாம்ம வாரல. அதெயெல்லாம் பீஸ் கோர்ட்டுல பேசிருப்பீங்க. இதுல ஒஞ்ஞளுக்கு ஒடம்பாடு ஆவாம இருக்குறதுல என்னா சிக்கல்ன்னு பாத்து அதெ தீக்க முடிஞ்சா தீப்பேம். யில்லன்னா அடுத்தத் தேதியில கிராஸ்தாம். அதுல மாத்தமில்ல!"ன்னாரு ஜட்ஜ் இந்த இடைக்கால முட்டுப்பாட்டுக்கு தீர்ப்பெ சொல்றாப்புல.

            "இவுங்க செஞ்சதெல்லாம் என்னோட கால் தூசிக்குக் கூட சமானாம் கெடையாதுங்க்யயா!"ன்னாம் பாலாமணி பால் கொடுக்குற மாடு எடையில எட்டி ஒதைக்குறாப்புல.

            "அப்பிடின்னா அதெ அப்பிடியே எடுத்து வெச்சிட்டுப் போவ வேண்டித்தானே. அதுல ஏம் கிள்ளிக் கொடுக்குறாப்புல ஞாயம் வெச்சிக்கிட்டு இருக்குறே? இதெல்லாம் ஒரு பொழைப்பு! படிச்சவேம் பண்ணுற பொழைப்பா இத்து? கலியாணத்தப் பண்ணிப் பண்ணி நகெநட்டயும், பணங்காசியையும் வாங்கி வாங்கி ஏமாத்தி ஏமாத்தி இன்னொரு கலியாணத்தெ பண்ணிக்கிட்டுப் போறது! இன்னும் எவ்ளோ நகெ நட்டெ, பணங்காசிய இப்பிடி பொண்ணு மாத்தி பொண்ணுகள கலியாணத்தப் பண்ணியே சேக்கறாப்புல திட்டம்? இப்படி படிச்சவம்லாம் ஒபரி வருமானத்தப் பாக்கணும்ன்னு கலியாணத்த கையிலெடுத்தா பொண்ணப் பெத்து வெச்சங்களோட நெல என்னங்கய்யா? எஞ்ஞ பணங்காசி வேணும்னா எடுத்துக்கச் சொல்லுங்க. நாம்ம பிச்செ போட்டதா நெனைச்சிக்கிறேம். நாஞ்ஞ சமரசத்துக்கு தயாருங்கய்யா எதுவுமே வாங்காமலே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சிரிச்சிக்கிட்டெ. பேசுனெ விசயம் கோவத்தோட சம்பந்தமானதுன்னாலும் அவரு மொகத்துல சிரிப்புக் கலை கொறையல.

            "அவர்ர சிரிக்கிறதெ நிறுத்தச் சொல்லுங்க! பிச்செப் போடுறதா சொன்ன வார்த்தைக்கி மன்னிப்பக் கேக்கச் சொல்லுங்க!"ன்னு காட்டுக்கத்தலா சத்தம் போட்டாம் பாலாமணி அது கோர்ட்டுன்னு கூட பாக்காம.

            "இதென்னது சமரசம் பண்ணி வுடலாம்ன்னு பாத்து இஞ்ஞ நடக்குறதுக்கே ஒரு வழக்கப் போடணும் போல ஆயிடும் இருக்கே நெலமே?"ன்னாரு ஜட்ஜ் சங்கடப்படுறாப்புல.

            "நாம்ம வழக்கெ நடத்தியே ஒரு பைசா கூட அவுங்ககிட்டேயிருந்து வாங்கலங்றதெ நிரூபிக்கிறேம்யா! நாம் தயாருங்கய்யா. அவுங்க வழக்குக்குத் தயாராங்கய்யா?"ன்னாம் பாலாமணி அடுத்ததா சவால் வுடுறாப்புல.

            "வழக்குல நீங்க நிரூபிக்கலாம். ஒங்க மனசாட்சிக்கிட்டெ நிரூபிக்க முடியுமா?"ன்னாரு ஜட்ஜ் பாலாமணியோட மனசாட்சிய நெருடி வுடுறாப்புல.

            "நம்ம மனசாட்சியெ நாம்மப் பாத்துப்பேம்யா! ஒஞ்ஞளுக்குக் கோர்ட்டுல நிரூபிக்கிறதுதானே முக்கியம். அதெ நாம்ம செய்வேம்ங்கய்யா. அத்து நம்மால முடியும். கோர்ட்டுன்னா அதெத்தான பேசணும்!"ன்னாம் பாலாமணி நீதிபதிக்கே நீதியச் சொல்றாப்புல.

            "நாமளும் வழக்க நடத்தி வரதட்சனெ அவுங்க வாங்குனதெ நிரூபிப்பேம்ய்யா! ஏன்னா அதாங்கய்யா உண்மெ. உண்மைய நிரூபிக்கிறது ஒண்ணும் செருமம் இல்லங்கய்யா!"ன்னா செய்யுவும் இப்போ தம் பக்கத்தெ வுட்டுக் கொடுக்காம.

            "உண்மை என்னங்றது இங்க கோர்ட்டுல உக்காந்திருக்குற அத்தனைப் பேருக்குமே தெரியும். அதை யாரும் மறைச்சிட முடியாது. ஆன்னா தீர்ப்புங்றது ஆதாரத்தையும், வாதத்தையும் அதுக்கான நிரூபணத்தையும் வெச்சித்தாம் வழங்கணுங்றது எங்களுக்கு இருக்குற நியதி. வழக்குன்னு போனாக்கா அதுக்குத் தகுந்தாப்புலத்தாம் தீர்ப்புங்றது வரும்! அத்து யாருக்குச் சாதகமாப் போவுது, யாருக்குப் பாதகமாப் போவுதுங்றது வழக்கு முடியுறப்பத்தாம் தெரியும்! மவளே! ஒனக்குத் தனிப்பட்ட மொறையில சொல்லிக்க விரும்புறேம். குறுக்கு விசாரணைங்றது கொஞ்சம் சங்கட்டம்மாத்தாம் இருக்கும். பாரம்பரிய குடும்பத்துலேந்து அடக்க ஒடுக்கமா வீட்டுலயே இருந்துட்டு வர்றப் பெண்ணுக்கு அதெ அவ்வளவு சுலுவா ஏத்துக்க முடியாது. அதெப் பத்தி நீந்தாம் முடிவு பண்ணணும். யாரோட முடிவுலயும் குறுக்கிடுற அதிகாரம் நமக்குக் கெடையாது. அதெ நேரத்துல கண்ணுக்குத் தெரிஞ்சி யாரும் பாதிக்கப்படுறதெ பாத்துக்கிட்டும் இருக்க முடியாது. அதுக்காகத்தாம் இந்த ஒரு தேதி போனாலும் பரவாயில்லன்னு உக்காந்து நாமளே சமரசம் பண்ண பாக்குறேம். அதுக்காகத்தாம் இந்த ஓப்பன் கோர்ட். இத்து புருஷன் பொண்டாட்டி சண்டைதாம். பிடிச்சா சேர்ந்து வாழுங்க. பிடிக்கலையா பிரிஞ்சிப் போங்க. வழக்குலப் போட்டு இழுத்துக்காதீங்க. ஒரு கொலை கேஸ்ல ஞாயம் தேடுறதுல அர்த்தம் இருக்கு. இதுல அப்படி ஒண்ணும் யில்ல. என்னிக்கு மனசு ஒத்து வரலயோ அதுக்காக சட்டப்பூர்வமா பண்ணிக்கிறதெ பண்ணிக்கிட்டு எளிமையா முடிச்சிக்கிட்டுப் போறதுதாம் நல்லதா இருக்கும்! வாழ வேண்டிய வயசு ரண்டு பேருக்குமே இருக்கு. அந்த வயசெ வழக்குல கரைச்சிடாதீங்க!"ன்னாரு ஜட்ஜ் ரொம்ப அனுசரனையா ரண்டு பக்கத்தையும் பாத்து.

            "இப்பிடிப் பேசிக்கிட்டு இருக்குறதுக்கு வழக்க நடத்தியே முடிச்சிடலாம்ங்கய்யா! அதுக்கு அவுங்களுக்குப் பயமா இருந்தா வேணும்ன்னா அதெ மதிச்சி வேணும்ன்னா நாம்ம முடிச்சிக்க தயாரா இருக்கேம்!"ன்னாம் பாலாமணி நக்கலா தெருச் சண்டெயில பேசுறாப்புல.

            "இந்தப் பேச்சுத்தாம் ஒங்கள ரண்டு பேரையும் பிரிக்குதுன்னு நெனைக்கிறேம்!"ன்னாரு ஜட்ஜ் ரொம்ப வருத்தமா.

            "நமக்கும் ஒண்ணும் பயமில்லங்கய்யா! அத்து எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் குறுக்கு விசாரணைய எதிர்கொள்ளுறோம்ங்கய்யா. அதுக்கு நாம்ம பயப்படுறதாத்தானச் சொல்றாங்க. அதெ வேணும்ன்னா முடிச்சிக்கிட்டுக் கூட வழக்க நாம்ம முடிச்சிக்கிடுறேம்!"ன்னா செய்யு பாலாமணிக்குப் பதிலடிக் கொடுக்குறாப்புல.

            "கிராஸ் முடிஞ்சா அடுத்து ஆர்கியூமெண்டு முடிஞ்சித் தீர்ப்புத்தாம்! கிராஸ் முடிஞ்சாவே வழக்கு முடிஞ்சாப்புலத்தாம். அதால கிராஸூக்குப் பெறவு முடிக்கிறதுக்கு எதுவுமில்ல!"ன்னாரு ஜட்ஜ் வழக்கோட தெசையக் காட்டுறாப்புல.

            "எவ்வளவோ பாத்தாச்சு. அதெயும் பாத்துடுறேம்ங்கய்யா!"ன்னாம் பாலாமணி வழக்கெ குறுக்கு வெசாரணைய நோக்கிச் செலுத்துறாப்புல.

            "எஞ்ஞ காசையே திருப்பி வாங்கறதுக்கு வழக்கு நடத்தித்தாம் ஆவணும்ன்னா அப்பிடியே நடத்தியே வாங்கிக்கிறேம்யா!"ன்னா செய்யு அப்படித்தாம் வழக்குப் போவும்ன்னா அதெ ஏத்துக்கிடறாப்புல.

            வழக்கத் தொடர்றதால ரண்டு பேருமே பிடிவாதமா நின்னதால ஜட்ஜ் அதுக்கு மேல எதுவும் பேச விரும்பல. அவரு ஒரு அஞ்சு நிமிஷம் வரைக்கும் யோசனெ பண்ணாரு. அவரோட யோசனைய யாரும் கலைக்க விரும்பல, எல்லாரும் அவரையேப் பாத்துட்டு இருந்தாஙக். ஜட்ஜ் கேஸ் கட்ட எடுத்து, காலண்டர்ர்ப பாத்து தேதியப் போட்டு கையெடுத்தப் போட்டு முடிச்சாரு. “இதுக்கு மேல இதுல பேசுறதுக்கு ஒண்ணுமில்லன்னு நினைக்கிறேம். லாஸ்ட் அன்ட் பைனல் சான்ஸ்ஸா ஓப்பன் கோர்ட்டுல பேசிப் பாத்தேம். அதுக்கு சான்ஸ் இல்லன்னு தெரிஞ்சிப் போச்சு! தட்ஸ் ஆல்!”ன்னவரு, அடுத்ததா அவரு வழக்குல குறுக்கு விசாரணை பண்ணுறதுக்கான ஒரு தேதியக் கொடுத்து அத்தோட அதெ ஒத்தி வெச்சிட்டு தன்னோட சேம்பர்க்குள்ள ரொம்ப களைச்சிப் போனவர்ரப் போல தளந்தாப்புல போனாரு. டவாலி பின்னாடியே ஓடுனாரு.

            நீதிபதி இல்லாத கோர்ட்டுக்குள்ள இப்போ ரண்டு தரப்பு ஆளுக மட்டுந்தாம் நின்னுகிட்டு இருந்தாங்க. ரண்டு தரப்புமே ஒருத்தரை ஒருத்தரு பாக்கக் கூடாத ஆளுங்களப் பாக்குறதப் போல பாத்துக்கிட்டாங்க. மொதல்ல யாரு என்னத்தெ பேசப் போறாங்ற எதிர்பார்ப்பு அங்க நெலவுனுச்சு.

            "ரொம்ப தப்பான முடிவெ எடுத்திருக்கீயே! குறுக்கு விசாரணைக்கான பின் விளைவுகள அனுபவிக்கத் தயாரா இருந்துக்குங்க!"ன்னு சொல்லிட்டு வக்கீல் கங்காதரன் மொதல்ல அந்த எடத்தெ வுட்டுக் கௌம்பிப் போனாரு.

            "நாயடி பேயடிப் பட்டத்தாம் சில கழுதைகளுக்குப் புத்தி வரும்!"ன்னு அதுவரைக்கும் பேசாம இருந்த ராசாமணி தாத்தா பேசிட்டு வெளியப் போனுச்சு.

            "ஜட்ஜ் மின்னாடியே நின்னு சிரிப்பாவா சிரிக்கிறே? ஒம் பொண்ண குறுக்கு வெசாரணையில நிக்க வெச்சி கேக்க வைக்குற கேள்வியில ஒன்னய அழ வெச்சிப் பாக்கலன்னா பாத்துக்கோ? அடுத்த வாரத்துல அழுவுறதுக்குத் தயாரவே வந்துடு! அப்பிடியே மொழம் கயித்த முன்யோசனையோட வாங்கிட்டு வந்தாலும் செரித்தாம்!"ன்னு சொல்லிட்டு பாலாமணியும் அந்த எடத்தெ வுட்டுக் கெளம்புனாம்.

            "விதிய யாரால மாத்த முடியும். தலயெழுத்து. அசிங்கப்பட்டு சாவணும்ன்னு. இந்த தடவெ டெத் கன்பார்ம்தாம்!"ன்னாம் ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன்.

            எல்லாரும் போனதக்குப் பெறவு கோர்ட்டுல வக்கீல் திருநீலகண்டன், சுப்பு வாத்தியாரு, விகடு, செய்யு இவுங்க மட்டுந்தாம் இருந்தாங்க.

            "பாத்தீங்களா பேசிட்டுப் போறதெ? இதுக்கே வழக்க நடத்தித்தாம் ஆவணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்கு மட்டுமா கிராஸ் இருக்கு? அவனுக்குத்தாம் இது முடிஞ்சதும் இருக்கு. அதுல வெச்சிப் பாத்துக்கிடலாம். ஒங்க பொண்ணு இந்த அளவுக்கு ஜட்ஜ் மின்னாடி பேசுவான்னு நாம்ம எதிர்பார்க்கல சார். இதுவே போதும் நல்ல இம்ப்ருவ்மெண்ட்தாம். நாம்ம எடுத்து வைக்க வேண்டிய பாயிண்ட்ஸ் அவளெ எடுத்து வெச்சிட்டா. அதாலத்தாம் அவ்வே பேசட்டும்ன்னு நாம்ம எடையில எந்த எடத்துலயும் குறுக்கிடலெ. ஒண்ணும் கவலைப்படாமப் போங்க!"ன்னு அனுப்பி வெச்சாரு வக்கீல் திருநீலகண்டன்.

            "நமக்கு இதுவே போதும்ங்ய்யா! நாமளும் ஜட்ஜ் மின்னாடி வெச்சு அவனெ நல்லா கேள்வியக் கேட்டுப்புட்டேம் இதெல்லாம் படிச்சவன் பண்டுற வேலையான்னு. அத்து ஒண்ணுப் போதும்யா! எம் மவளும் கேக்க வேண்டியதெ கேட்டுப்புட்டா. இப்பவே எஞ்ஞளுக்கு வழக்குல ஜெயிச்ச மாதிரித்தாம்! ரொம்ப சந்தோஷம்தாம்யா!"ன்னு சொல்லிட்டுக் கெளம்ப ஆயத்தமானாரு சுப்பு வாத்தியாரு. இது எல்லாத்தையும் ஒண்ணும் சொல்லாம கேட்டுக்கிட்டெ இருந்தவெம், கோர்ட்டுக்குள்ள நின்னபடி கோர்ட்டைக் கண்ணால ஒரு சொழட்டுச் சொழட்டிப் பாத்துக்கிட்டாம் விகடு. கோர்ட்டு கட்டடம் இப்போ அவனுக்கு பூமி உருண்டெ ஓர் அச்சுல சொழல்றதெப் போல இருந்துச்சு. இனுமே இந்தச் சொழற்சிக்கு ஒரு முடிவு இருக்கப் போறதில்லங்ற மாதிரி அவனுக்குத் தோணுனுச்சு. சுத்தும் பூமி சுத்துற வரைக்கும் நாமளும் இந்தக் கோர்ட்டு கட்டடத்தெ சுத்திட்டு இருக்கப் போறோம்ங்ற மாதிரியான எண்ணங்க அவனுக்கு உருவாக ஆரம்பிச்சது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...