22 Dec 2020

குறுக்கு விசாரணையில கொலையப் பண்ணுறவனுங்க!

குறுக்கு விசாரணையில கொலையப் பண்ணுறவனுங்க!

செய்யு - 663

            வக்கீல் திருநீலகண்டன் கோர்ட்டுக்குள்ள நொழைஞ்சி உள்ளார உக்காந்தாரு. செய்யு, விகடு, சுப்பு வாத்தியாரு மூணு பேரும் கோர்ட்டு நெலைப்படிக்கு வெளியில நின்னுகிட்டு இருந்தாங்க. நெலைப்படிக்கு அருகாமையில கூட்டம் கூடிகிட்டே இருந்துச்சு. நீபதியோட வருகைக்காக கோர்ட்டு காத்திருந்துச்சு. ராசாமணி தாத்தா, ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன்னு ரெண்டு பேரு வேக வேகமா வந்து விகடுப் பக்கம் நின்னாங்க. ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் பாக்குறதுக்கு குண்டா, நடுத்தரமான உயரமா இருந்தான். மொகச் சவரம் பண்ணி ஒரு மாசத்து மேல இருக்குங்ற மாதிரி மொகத்தல மடி கொச கொசன்னு இருந்துச்சு. அது பாக்குறதுக்கு ஒரு பயங்கரமான தோற்றத்தெ தந்துச்சு. அவனும் கலியாணம் ஆயி விவகாரத்து ஆன ஆளுன்னு பேச்சு உண்டு. அவன் கையில ஒரு நடுத்தர அளவுள்ள சூட்கேஸ் இருந்துச்சு. இன்னொரு கையில பையி ஒண்ண வெச்சிருந்தாம். அதெ விகடுவுக்குப் பக்கத்துல வந்து கீழே வெச்சிட்டு நின்னாம். அவ்வேம் அப்படி பக்கத்துல வந்து நின்னது ஒரு காரணத்தோடதாங்றது அடுத்ததா அவ்வேம் பேசுன பேச்சுலேந்து தெரிஞ்சது.

            "இந்த குறுக்கு வெசாரணை வேணாம். ஒந் தங்காச்சி அசிங்கப்பட்டு போயிடுவா!"ன்னாம் விகடுவோட காதுக்குக் கேக்கறாப்புல ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையனான அவ்வேம். விகடு அதுக்கு எந்த பதிலையும் சொல்லாம பேயாம அமைதியா அப்பிடியே இருந்தாம்.

            "காதுல கேக்குதா இல்லயடா? இந்த குறுக்கு விசாரணெ வேணாங்றேம். ஒரு எச்சரிக்கெ கொடுத்தா அதெ கேட்டுப் புத்திசாலித்தனமா பொழைச்சிக்கிணும்டா. அதெ மீறிக்கிட்டு நடந்து அசிங்கம் பண்ணிக்கக் கூடாதுடா! செவுட்டுப் பயெ மாதிரிக்கி நின்னா நஷ்டமும், கஷ்டடும் ஒமக்குத்தாம்டா!"ன்னாம் இப்போ முன்னய வுட கொஞ்சம் சத்தமா. அப்படி அவ்வேம் பேசுனதுக்கும் விகடு ஒண்ணுத்தையும் சொல்லாம பேயாமலே அமைதியாவே நின்னாம். அதே நேரத்துல, வேக வேகமா வந்து எதிர்தரப்பு வக்கீலா கங்காதரன் உள்ளார நொழைஞ்சாரு. அவர்ரப் பாத்து, "உள்ளார வெச்சி ச்சும்மா கிழி கிழின்னு கிழிச்சிடணும்!"ன்னு சொல்லிட்டு விகடுவெப் பாத்துச் சிரிச்சாம் இப்போ அவ்வேம்.

            அதுக்கும் விகடு ஒண்ணும் சொல்லாம அமைதியா கோர்ட்டுக்கு உள்ளாரயே பாத்துட்டு நின்னாம். எப்பிடியோ கோவப்படுத்தியோ, பயப்படுத்தியோ பாத்திடணுங்றது அவ்வேம் நோக்கமா இருந்திருக்கணும். விகடு அவ்வேம் பாட்டுக்கு அப்பிடியே மண்ணுமுட்டு போல நின்னதுல அவ்வேம் கோவப்பட்ட நெலைக்கு வந்துப்புட்டாம்.

            "எலே சொல்றமா இல்லையாடா!"ன்னு அவன் கொரல ஒசத்துனாம் பாருங்க, ஒடனே பக்கத்துல இருந்து அவ்வேம் பேசுறதையே கவனிச்சிக்கிட்டு இருந்த ஒருத்தரு, "எவ்வேம்டா இவ்வேம்? என்னவோ யிப்பத்தாம் கோர்ட்டுக்கு வர்றதுப் போல சீன காட்டிட்டு நிக்குறாம். பொத்துடா மொதல்ல. அடங்குடா! இந்த ஜட்ஜ் ஒண்ணும் அம்மாஞ் சீக்கிரத்துல கிராஸ் பண்ணிட வுட்டுப்புட மாட்டாரு. இன்னிக்கு எம்மாம் கேஸூ இருக்குன்னு தெரியாம இவ்வேம் ஒருத்தம் வெவரம் புரியாம சின்ன புள்ளையாட்டம் கட்டப்பஞ்சாயத்துல மெரட்டுறவேம் போல மெரட்டுறாம்! இத்து ன்னா ஒம் ஊரு கட்டப்பஞ்சாயத்துன்னு நெனைச்சியா? கோர்ட்டுடா!"ன்னு அமத்துனாரு. அப்பத்தாம் அவ்வேம் அடங்குனாம். அதே நேரத்துல கூட்டத்துலேந்து எழும்பிக்கிட்டு இருந்த சலசலப்பு அடங்குறாப்புல, கோர்ட்டுக்குள்ளேயிருந்து டவாலியோட "சைலன்ஸ்!"ங்ற சத்தம் வந்ததும் கோர்ட்டுக்குள்ளார நிக்குற எல்லாரும் எழும்பி நின்னாங்க. நீதிபதி கும்புட்டுகிட்டே வந்து காந்தியையும், வள்ளுவரையும் பாத்துக் கும்புட்டப் போட்டுப்புட்டு, கோர்ட்டுல இருந்த எல்லாரையும் பாத்து ஒரு கும்புடப் போட்டுட்டு உக்காந்தாரு.

            அன்னிக்கு வழக்குக்கு வர்ற ஒவ்வொரு கேஸ்ஸா நம்பர்ரப் படிச்சிப் பேர்ர கூப்புட ஆரம்பிச்சாங்க. ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் சட்டுன்னு செல்போன எடுத்து ஒரு நம்பர்ர அடிச்சாம். ஒரு நிமிஷத்துக்குள்ளார வேக வேகமா பாலாமணி அங்க வந்து நின்னாம். கூட்டத்தோட கூட்டமா வந்து நிக்குறதெ அவ்வேம் கெளரவ கொறைச்சலா நெனைச்சிருப்பாம் போலருக்கு. மொதல்ல எல்லாரையும் உள்ளாரப் போவச் சொல்லிட்டு சரியா கோர்ட்டு ஆரம்பிக்கிற நேரத்துக்கு ஒரு மிஸ்டு காலு கொடுத்தா உள்ளார வந்துப்புடுறதா அவ்வேம் ஒரு ஏற்பாட்ட பண்ணி வெச்சிருந்திருக்கணும். பத்தரைக்கெல்லாம் செய்யுவோட ஜீவனாம்ச கேஸூக்கு நம்பர்ரச் சொல்ல பேர்ர கூப்புட்டதும், செய்யு நெலைப்படியத் தாண்டி உள்ளாரப் போயி நின்னா. பாலாமணியும் உள்ளாரப் போயி நின்னாம். அவ்வேம் மொகத்தல இனம் புரியாத பூரிப்ப தாண்டவமாடிகிட்டு இருந்துச்சு. வக்கீல் திருநீலகண்டனும், கங்காதரனும் எழும்பி முன்னாலப் போனாங்க. குறுக்கு விசாரணைக்குத் தயாரா வந்திருக்கிறதா கங்காதரன் சொன்னாரு. ஜட்ஜ் பாஸ் ஓவர் பண்ணி வெச்சி பன்னெண்டு மணிக்கு மேல பாப்பம்ன்னாரு. எழும்பிப் போன ரண்டு வக்கீலும் திரும்ப வந்து உக்காந்தாங்க. மத்த கேஸ்கள நம்பரச் சொல்லிப் பேர்ரச் சொல்லிக் கூப்புட ஆரம்பிச்சாங்க.

            செய்யு கோர்ட்டு நெலைப்படியை வுட்டு வெளியில வந்தா. பாலாமணியும் வெளியில வந்தாம். ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையனப் பாத்து, "சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டியா? மாஜி மனைவின்னுல்லாம் பாக்குறதுக்கில்ல. குறுக்கு வெசாரணையில கிழிச்சித் தொங்க வுட்டுப்புடுவேங்றத?"ன்னாம் மொல்லமா பாலாமணி. "அதெல்லாம் சொல்லியாச்சுண்ணே! காதுல போட்டுக்கிறாப்புல தெரியல. பட்டத்தாம் புத்தி வரும் போலருக்கு. இன்னிக்கு ஒரு உசுரு வெஷத்தக் குடிக்கப் போவுதோ? தூக்குல தொங்கப் போவுதோ? சீமெண்ணய்ய ஊத்திக்கக் போவுதோ? நம்ம சின்னம்மா சாவுக்கு வாரட்டியும் நாம்ம அந்தச் சாவுக்குப் போவாம இருந்துடக் கூடாதுண்ணே. மாலெ கெடைக்குமோ? கெடைக்காதோ? தெரியல. ஒரு மாலெக்கு அட்வான்ஸ் பண்ணிப்புடணும்ண்ணே!"ன்னாம் அவன் சுப்பு வாத்தியாரு, விகடுவோட காதுக்குக் கேக்குறாப்புல வெடைச்சி மெரட்டுறாப்புல. அதெ சொல்லிப்புட்டு ரண்டு பேரும் அந்த எடத்த வுட்டு வேகு வேகுன்னு நகந்தானுவோ. வக்கீல் கங்காதரனும் எழும்பி வெளியில வந்து அவனுகளோட போனாரு. போறப்ப, "சொல்லியாச்சுல. களத்துல எறங்கிட்டா மானத்த வாங்கி, உசுர்ர எடுக்காம வுடுறதில்ல!"ன்னு விகடுவுக்கும், சுப்பு வாத்தியாருக்கும், செய்யுவுக்கும் கேக்குற அளவுக்கு மொல்லாம சொல்லிட்டுச் சிரிச்சிக்கிட்டெப் போனாரு கங்காதரன் வக்கீலும்.

            "ரொம்ப கொழுப்புத்தாம்டா அந்தப் பயலுவோளுக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு விகடுவோட காதுக்கும் செய்யுவோட காதுக்கும் கேக்குறாப்புல அவனுக போறதெப் பாத்துப்புட்டு. கொஞ்ச நேரத்துல வக்கீல் திருநீலகண்டனும் தலைய குனிஞ்சிக்கிட்டு கோர்ட்ட வுட்டு பின்பக்கமா வெளியில வந்தாரு. மேல ஒரு கோர்ட்டுல ஒரு கேஸ்ஸூ இருக்குறதாவும் அதெப் பாத்துப்புட்டு சார்ப்பா பன்னெண்டு மணிக்கெல்லாம் வந்துப்புடுறதா சொல்லிட்டுக் கெளம்புனாரு. அப்பிடியே நீங்களும் வேணும்ன்னாலும் கேண்டீன் பக்கம் போயிட்டு ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்கன்னும் சொல்லிட்டு வேக வேகமா மாடிப்படிப் பக்கமா ஓட்டமா ஓடுனாரு.

            "நாமளும் வெளியில போவமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "வாணாம்ப்பா! இஞ்ஞ எதாச்சும் குறுக்கு வெசாரணை நடந்தா அதெ பாத்து வெச்சிக்கிடலாம்! தங்காச்சிக்கும் அது ஒதவியா அனுபவமா இருக்கும்!"ன்னாம் விகடு. அதுவும் செரித்தாம்ன்னு சுப்பு வாத்தியாரு, செய்யு, விகடுன்னு மூணு பேருமே கோர்ட்டு நெலைப்பட ஓரமாவே நின்னுகிட்டு இருந்தாங்க. ஆன்னா ரொம்ப நேரத்துக்கு கேஸ்ஸூ நம்பர்ரச் சொல்லி பேர்ர அழைச்சு மறுதேதிக் கொடுக்குற வேலத்தாம் நடந்துக்கிட்டெ இருந்துச்சு. பதினொண்ணரைக்கு மேலத்தாம் ஒரு குறுக்கு வெசாரணை வந்துச்சு. அந்த குறுக்கு வெசாரணையப் பாத்தப்போ அத்து ஒரு ஆக்சிடெண்ட் கேஸூங்ற மாதிரி தெரிஞ்சிது. குடிச்சிட்டு வண்டிய ஓட்டிகிட்டுப் போயி வுட்டு ஒரு ஆளா காலி பண்ணிருப்பாம் போல. அதுக்கான குறுக்கு வெசாரணைக்கு வண்டிய ஓட்டுனவனெ கூண்டுல ஏத்தியிருந்தாங்க. அந்த ஆளப் பாத்து ஜட்ஜூ அவனோட பேரு, அப்பங்காரரோட பேரு, ஊரு எல்லாத்தையும் சொல்ல சொல்ல அந்த ஆளு ஆமாங்ற மாதிரிக்கித் தலையக் குனிஞ்சிக்கிட்டே தலைய ஆட்டுனாம்.

            குறுக்கு விசாரணை பண்ணுற வக்கீலு ஒவ்வொரு கேள்வியாக் கேக்க ஆரம்பிச்சாரு. எந்தக் கேள்விக்கும் அந்த ஆளு எந்தப் பதிலையும் சொல்லாம கல்லுளிமங்கனப் போல நின்னாம். குறுக்கு விசாரணை பண்ணுன வக்கீலு, "சம்பவத்தப்போ கார்ர ஓட்டுனது நீங்கதானே?"ங்ற கேள்விய நாலைஞ்சு மொறை கேட்டு அந்த ஆளுகிட்டேயிருந்து பதிலு வர்றதாதுல, அவருக்கே கேள்விக் கொழம்பிப் போயி அஞ்சாவது மொறை தடுமாறிப் போயி, "சம்பவத்தப்போ ஒங்கள ஓட்டுனது கார்தானே?"ன்னு தப்புத் தப்பா கேட்க ஆரம்பிச்சப்போ கோர்ட்டுல சிரிப்பாணி உண்டாயிப் போச்சு. ஜட்ஜூம் சிரிப்பாணி அடக்க முடியாம அந்த ஆளப் பாத்து, "எதாச்சும் பதிலச் சொல்லணும். கோர்ட்டு டயத்த வீணாக்கக் கூடாது. ஏற்கனவே பல மொறை இந்தக் குறுக்கு விசாரணை தள்ளிப் போயிக்கிட்டெ இருக்கு!"ன்னாரு. அதுக்கும் அந்த ஆளு எந்தப் பதிலையும் சொல்லாம தலைய மட்டும் ஆட்டிக்கிட்டாரு.

            குறுக்கு வெசாரணையப் பண்ணுன வக்கீலு கொஞ்சம் கடுப்பாயிட்டாரு. கொஞ்சம் காட்டமா, "அன்னிக்குக் கார்ர ஓட்டுனது யாரு? நீங்கத்தானே?"ன்னாரு. அப்பயும் அந்த ஆளுகிட்டெயிருந்து பதிலு வர்றாததப் பாத்து, அந்த ஆளோட தரப்பு வக்கீ‍லே டென்ஷன் ஆயி, "எதாச்சும் ஒரு பதிலச் சொல்லித் தொலைப்பா!"ன்னு சொல்லப் போவ அதுக்கும் கோர்ட்டுல சிரிப்பாணியா ஆனுச்சு.

            "ஏதாச்சும் ஒரு பதிலச் சொல்லணும். இல்லாட்டி எல்லாத்துக்கும் ஆம்ன்னு சொல்லி குறுக்கு விசாரணைய முடிக்கிறாப்புல ஆயிடும்!"ன்னு சொன்ன ஜட்ஜ் அந்த ஆளோட வக்கீலப் பாத்து, "என்ன ஒங்க கட்சிக்காரரு ஒண்ணும் பேச மாட்டேங்றாரு. இன்னும் எத்தனெ நாளுக்குத்தாம் கிராஸ்ஸத் தள்ளிப் போடுறது. ஏற்கனவே கோர்ட்டுல கிராஸ்ஸ ரொம்ப தள்ளிப் போடுற ஜட்ஜூங்ற பேரு நமக்கு வந்துப் போயிக் கெடக்கு!"ன்னாரு. அதெ கேட்டதும் அந்த வக்கீல் கொஞ்சம் தர்மசங்கடமா போயி, "அவரு தலைய ஆட்டுறதுக்குத் தகுந்தாப்புல பதிலப் போட்டுக்கிடலாம்ங்கய்யா!"ன்னு ஒரு வழியச் சொன்னாரு. அதுவும் சரித்தாம்ங்ற மாதிரி ஜட்ஜ் உதட்டப் பிதுக்கிக்கிட்டு, "புரஸூட்"ன்னாரு. இதெ பாத்துக்கிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு, விகடுவையும் செய்யுவையும் பாத்து, "கூண்டுல இருக்குற ஆளு வக்கீலுங்கள எல்லாம் தாண்டுன ஆளா இருப்பாம் போலருக்கு. கோர்ட்டையே ரண்டு பண்ணிக்கிட்டு இருக்காம்!"ன்னு ரொம்ப மொல்லமா சொல்லிப்புட்டுச் செய்யுவப் பாத்து, "இவ்வேம் மாதிரியே நாலு தடவெ அந்த வக்கீல கேள்வியத் திரும்பக் கேக்கச் சொன்னீன்னா, அவனும் கேள்விய மாத்தித்தாம் கேப்பாம் போலருக்கு. இதுக்கு என்னவோ பெரிசா காலம்பாரயே கெளம்பி வந்து பயந்துகிட்டு வக்கீல்கிட்டெ கேள்வியக் கேட்டுக்கிட்டுக் கெடந்தீயே? ஆனாலும் வக்கீல் ஒரு பாய்ண்ட்ட சரியாச் சொன்னாரு, டென்ஷன் ஆவாம நெதானமா இருக்கணும். அப்பிடி இருந்தா குறுக்கு விசாரணை பண்ணுற வக்கீலு டென்ஷன் ஆயிடுவாம் போலருக்கு!"ன்னு மெல்லிசா சிரிச்சாரு. அவருக்கு மவளோட குறுக்கு வெசாரணைப் பத்தி மனசுக்குள்ள இருந்த பயம் இப்போ வெலகுனது போல தோணுச்சு.

            குறுக்கு விசாரணைப் பண்ணுன வக்கீலு அதுக்குப் பெறவு அடுத்தடுத்ததா கேள்விகளக் கேக்க ஆரம்பிச்சாரு. "வலது பக்கமா ஒடிச்சு வேண்டிய வண்டிய எடதுப் பக்கமா ஒடிச்சது ஏன்? வண்டிய ஓட்டும் போதும் மது அருந்தியிருந்தீங்களா? வண்டிய மோதிட்டு வண்டிய வுட்டு ஓடுனது உண்மையா?" அப்பிடின்னு அடுக்கடுக்கான கேள்விகளா கேட்டுக்கிட்டே இருந்தாரு. எல்லாத்துக்கும் அந்த ஆளு தலைய மட்டும்தாம் இப்படியுமா, அப்படியுமா ஆட்டுனாரு. அதுக்குத் தகுந்தாப்புல பதில ஜட்ஜ் வக்கீலப் பாத்து சொல்லி அதெ உறுதிப் பண்ணிக்கிட்டு வாசகத்தச் சொல்ல சொல்ல பக்கத்துல இருக்குறவங்க டைப்பிஸ்ட் டைப் பண்ணிக்கிட்டே இருந்தாங்க.

            அரை மணி நேரம் அந்த வெசாரணை முடிஞ்சதும் அந்த ஆளெ குறுக்கு விசாரணை பண்ணுன வக்கீலு களைச்சிப் போனவரப் போல தெரிஞ்சாரு. மீதத்தெ இன்னொரு கிராஸ்ல வெச்சிப் பாத்துக்கிறதா சொல்லி “தட்ஸ் ஆல்”ன்னு சொன்னாரு. மணி சரியா பன்னெண்ட தாண்டிருந்துச்சு. இப்போ செய்யுவோட ஜீவனாம்ச வழக்கு நம்பர்ரச் சொல்லி, பேர்ரச் சொல்லிக் கூப்புட்டப்போ செய்யு உள்ளாரப் போயி நின்னா. வக்கீல் கங்கதாரனும், பாலாமணியும் சரியா உள்ளார நொழைஞ்சாங்க. குறுக்கு விசாரணைய ஆர்வமா கவனிச்சதுல அவுங்க ரண்டு பேரும் எப்போ பக்கத்துல வந்து நின்னு உள்ளார நொழைஞ்சாங்றதெ சுப்பு வாத்தியாராலயும், விகடுவாலயும் சரியா கணிக்க முடியல. அவுங்கப் பக்கத்துல ராசாமணி தாத்தாவும், அதுவோட அண்ணன் பையனும் பழையபடியே வந்து நின்னுச்சுங்க.

            வக்கீல் திருநீலகண்டன் வந்து சேரல. மேல்கோர்ட்டுக்குப் போனவரு அங்க வழக்கு முடியாம உக்காந்திருப்பாரு போல. ஜட்ஜ் செய்யுவப் பாத்து, "ஒன்னோட வக்கீல் எங்கம்மா?"ன்னாரு. "மேல ஒரு வழக்க முடிச்சிட்டு வந்திடுறதா சொல்லிப் போனங்கய்யா!"ன்னா. அதெ கேட்டதும் நெத்தியச் சுருக்கி யோசிச்ச ஜட்ஜ், "ஒரு மணிக்குக் கொஞ்சம் முன்னதா வக்கீல அழைச்சிட்டு வந்துடு!"ன்னு சொல்லிட்டு அடுத்த வழக்குக்கான குறுக்கு விசாரணைய ஆரம்பிக்கச் சொன்னாரு.

            செய்யுவும், பாலாமணியும் வெளியில வந்தாங்க. கங்காதரன் வக்கீல் அங்கேயே உக்காந்திருந்தாரு. பாலாமணி வெளியில வந்துச் சேர்ந்ததும், ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன், "குறுக்கு வெசாரணைப் பண்ணுறதெ எப்பிடியெல்லாம் தள்ளிப் போடுறதெ பாருண்ணே! த்துப்பூ இதெல்லாம் ஒரு பொழைப்பு! வாங்கண்ணே! கொஞ்ச நேரம் கழிச்சி இஞ்ஞ வந்து நிக்கலாம்!"ன்னு விகடுவோடு காதுலயும் சுப்பு வாத்தியாரோட காதுலயும் கேக்குறாப்புல மொல்லமா சொல்லிட்டுப் பாலாமணிய மின்னாடிப் போவ வுட்டுப்புட்டு பின்னாடி பையித் தூக்கியப் போல போனாம். அதுக்குப் பின்னாடி ராசாமணி தாத்தாவும் போனுச்சு.

            கோர்ட்டு நெலப்படிய வுட்டு வெளியில வந்தவெ, "எங்கண்ணே நம்மளோட வக்கீலு? ஏம்ண்ணே இப்பிடி அவரு வர்றாம அசிங்கப்படுத்துறாரு?"ன்னா செய்யு விகடுவெப் பாத்து மெல்லமா.

            "அவரு வர்றாம இருக்கறதும் செளரியந்தாம். குறுக்கு வெசாரண இன்னொரு நாளுக்குத் தள்ளிப் போவட்டும். அப்பத்தாம் அந்தப் பயலுவோ அடங்குவானுவோ. பக்கத்துல நின்னுகிட்டு என்னா பேச்சப் பேசுறானுவோ? என்னவோ குறுக்கு வெசாரணையிலயே கொலையப் பண்ணி முடிச்சிப்புடலாங்ற மாதிரிக்கி!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யப்பா! நாம்ம இதுக்கு ரோஷப்படணும்ப்பா!"ன்னா செய்யு சட்டுன்னு தன்னோட எரிச்சல காட்டுறாப்புல.

            "ரோஷக்காரப் பயலுகளுக்கு மின்னாடித்தாம் ரோஷப்படணும். வெக்க, மானம், ரோஷம்ன்னா என்னான்னு தெரியாத பயலுகிட்டெ ரோஷம்லாம் படப்படாது. இப்பிடித்தாம் இருந்துக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு செய்யுவுக்கு வௌக்கம் கொடுக்குறாப்புல.

            ஒடனே செய்யு விகடுவெப் பாத்து, "நீயி மேலப் போயி வக்கீலு இருந்தா பாத்துக் கொண்டாண்ணே!"ன்னா மனசுக்குள்ள ஒரு படபடப்பு வந்தாப்புல.

            "அதெல்லாம் போவதடாம்பீ! அவரு வந்தா வாரட்டும். இல்லன்னா இன்னொரு நாளு பாத்துக்கிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பிடிவாதம் காட்டுறாப்புல.

            "ன்னப்பா யிப்பிடிப் பேசுதீயே? இன்னிக்கு கிராஸ் முடிஞ்சா நம்மளப் பிடிச்ச சனியன் ஒண்ணு முடிஞ்சதா நெனைச்சிக்கிட்டு இருக்கேம். நீஞ்ஞ ன்னான்னா இன்னொரு நாளுக்குத் தள்ளிப் போவட்டுங்றீயேளே?"ன்னா செய்யு பொரிஞ்சு கொட்டுறாப்புல.

            "அதாங் கொஞ்ச நேரத்துக்கு மின்னாடி ஒரு குறுக்கு வெசாரணையப் பாத்தீல்ல. அது மாதிரிக்கி கல்லுளிமங்கனப் போல இருக்க முடியும்ன்னா சொல்லு இன்னிக்கே குறுக்கு வெசாரணைய வெச்சிக்கிடலாம். அதெ என்னவோ பெரிய ஆகாத காரியத்தெ ஆவ வைக்குறாப்புல நெனைச்சா இன்னிக்குக் குறுக்கு வெசாரணையே வாணாம். அதாங் இந்த ஜட்ஜூ கூட நல்லவரு போலருக்கு. அவ்வளவு சீக்கிரத்துல குறுக்கு வெசாரணையப் பண்ண வுட மாட்டாருன்னுப் பேசிக்கிறாங்களே. அப்பிடியே பண்ணிட்டுப் போவட்டும். ஒடனே குறுக்கு வெசாரணைய முடிச்சி ஒனக்கென்ன மெடலையாக் கொடுக்கப் போறாங்க? யில்ல வெரல்ல மோதிரத்தையா போட்டு வுடப் போறாங்க? செரித்தாம் போவீயா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு செய்யுவோட மனசெ சாந்தப்படுத்துறாப்புல அலட்சியமா.

            "யப்பா! யிப்பிடித்தாம் பேசுவாங்க. நீயி மேலப் போயி வக்கீலப் பாத்து கெண்டாண்ணே!"ன்னா செய்யு விகடுவெப் பாத்து உத்தரவப் போடுறாப்புல. தங்காச்சிச் சொல்றதெ கேக்கறதா, அப்பங்காரரு சொல்றதெ கேக்குறதான்னு கொழம்பி நின்ன விகடுவப் பாத்து, பட்டுன்னு அடுத்ததா செய்யு சொன்னா, "நீயிப் போறீயா? யில்ல நாம்மப் போவவா?"ன்னு அவசரம் காட்டுறதப் போல.

தங்காச்சி பதற்றமாவுறதப் பாத்ததும் சட்டுன்னு விகடு ஒரு முடிவுக்கு வந்தாப்புல டக்குன்னு, "நாம்ம கெளம்புறேம். போயிக் கொண்டார்றேம். நீயி யப்பா சொன்னதெப் போல மனசுல நெதானமாயிரு!"ன்னு சொல்லிட்டு வக்கீலத் தேடி மாடிக்கு மேலப் போனாம்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...