21 Dec 2020

குறுக்கு விசாரணை என்பது...


 குறுக்கு விசாரணை என்பது...

செய்யு - 662

            மறுதேதிக்குப் போறப்ப குறுக்கு விசாரணைக்குத் தயாராவே கெளம்புனா செய்யு. அதுக்கேத்தாப்புல அடுத்த தேதிக்கு ஆஜராவுறப்போ டேரக்டா குறுக்கு விசாரணைதான்னு சொல்லியிருந்தாரு திருநீலகண்டன் வக்கீல். வழக்குல இதுக்கு மேல ஒரு கை பாத்துப்புடறதுன்னு எதிர்தரப்பு வழக்கறிஞரு துடியா நிக்குறாதவும் சொல்லியிருந்தாரு வக்கீலு. மறுதேதிக்குத் திருவாரூரு கோர்ட்டுக்குக் கௌம்புறப்போ அப்பங்காரரு சுப்பு வாத்தியாரோட கூட நாமளும் போனா தங்காச்சிக்குத் தெம்பா இருக்குமேன்னு அன்னிக்கு லீவு எடுத்துக்கிட்டு விகடுவும் கெளம்புனாம். இன்னிக்குக் குறுக்கு விசாரணை இருந்தா அதுக்கு எப்பிடித் தயாரா இருக்கணுங்றதெ கொஞ்சம் சொல்லிடணும்ன்னு சொல்லி ரண்டு நாளைக்கு மின்னாடியே போனப் போட்டு எட்டரை மணிக்கெல்லாம் கோர்ட்டு வளாகத்துல இருக்குற கேண்டீனுக்குக் கொஞ்சம் முன்கூட்டியே வரச் சொல்லிருந்தாரு வக்கீலு. அதுபடியே சீக்கிரமா கெளம்பி அவர்ரப் பாக்க வேண்டியதா இருந்துச்சு. போன தேதிக்கு வராம போனதுல கொஞ்சம் வருத்தமா இருந்தாரு வக்கீலு. அந்த வருத்தத்தெ வெளிக்காட்டிக்கிடாததப் போல, "இப்போ ஒடம்புக்குப் பரவாயில்லையாம்மா?"ன்னாரு செய்யுவப் பாத்து அக்கறையா கேக்குறாப்புல. பரவால்லங்ற மாதிரிக்கித் தலைய ஆட்டுனா செய்யு. குறுக்கு விசாரணையப்போ எப்பிடி நடந்துக்கணும், எப்பிடிப் பதிலச் சொல்லணுங்றதெப் பத்தி விளக்கமா சொல்ல ஆரம்பிச்சாரு வக்கீலு.

            "எல்லா கேள்வியும் யெஸ் ஆர் நோ டைப் கொஸ்சினப் போலத்தாம். ஒண்ணு ஆம்ன்னு ஒத்துக்கணும், இல்லன்ன இல்லன்னு மறுக்கணும். இந்த ஆம் இல்லங்றதெ நமக்குச் சாதகமா அமையுற மாதிரி கூண்டுல நின்னுகிட்டுச் சொல்லணும். உணர்ச்சிவசப்பட்டு எதுக்கும் விளக்கத்தச் சொல்ல முயற்சிப் பண்ணவே கூடாது. அப்பிடிச் சொன்னா அதிலேந்து ஒரு கோஸ்சினப் போட்டு கிடுக்கிப் பிடியா நம்மள சிக்க வைக்குறதுக்கு நாமளே வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுக்குறாப்புல ஆயிடும். கேக்கற கொஸ்சின் புரியலன்ன தயக்கமே இல்லாம இந்தக் கேள்விய நம்மாள புரிஞ்சிக்க முடியலன்னும், எதெ கேக்க வர்றாங்கன்னு அனுமானிக்க முடியலன்னும் சொல்லிடணும். குறுக்கு விசாரணைங்றது வக்கீலுக்கு எந்தக் கேள்விய முன்ன போட்டு, எந்தக் கேள்விய பின்னாடிப் போடா தனக்குச் சாதகமான பதில வரவழைக்கிலாங்றதுக்கான ஒரு வாய்ப்பு. அதே நேரத்துல இதுல நீ சொல்ற ஒவ்வொரு பதிலும் வாக்குமூலம். உடனக்குடன் வக்கீல் கேக்குற கேள்வியும், உன்னோட பதிலும் டைப் பண்ணப்படும்ன்னா பாத்துக்கோ. விசாரணை முடிந்தவுடன் டைப் பண்ணதெ ஒடனே பிரிண்ட் போட்டு ஒங்கிட்டெ கையெழுத்தையும் வாங்கிடுவாங்க. அதுல நீ சொல்ற ஒவ்வொரு பாய்ண்டையும் ஜட்ஜ் தன்னோட தீர்ப்ப வழங்குறதுல முக்கியமான விசயமா எடுத்துப்பாரு."ன்னு சொல்லி அத்தோட வழக்கோட சாரம்சத்தையும் சுருக்கமா சொல்லி முடிச்சாரு திருநீலகண்டன் வக்கீல்.

            "குறுக்கு விசாரணைங்றது ஒரே செசன்ல முடிஞ்சிடுமா? ரண்டு மூணு செசன் ஆவுமா?"ன்னா செய்யு குறுக்கு வெசாரணையப் பத்தி மேலும் தெரிஞ்சிக்கிறாப்புல.

            "நாம்ம குறுக்கு விசாரணை பண்ணா ஒரே செசன்தான். ஒரு சில வக்கீலுங்க டார்ச்சர் பண்ணணும்ன்னு ரண்டு செஷன் வரைக்கும் போறதுண்டு. இதுல ஒம் ஆம்படையானோட வக்கீல் எந்த ரகம்ன்னு தெரியல. எத்தனெ செசன் இருந்தா என்ன? கேள்விய வாங்கிக்கிறது, அந்தக் கேள்விக்கு நமக்குப் பாதகமில்லாம ஆமாவா இல்லையான்னு பதிலச் சொல்றது. அவ்வளவுதாங் குறுக்கு விசாரணைங்றது. ஒண்ணும் நடக்காததக் கேக்க முடியாது. உனக்கு நடந்த சம்பவத்துலேந்துதாம் கேள்வியக் கேக்க முடியும். உனக்கு நடந்ததெல்லாம் உனக்கு நல்லாவே தெரியும். அத்தோட வழக்குல நாம்ம கொடுத்திருக்குற மனுவுக்கும், ஆவணத்துக்கும் பங்கம் இல்லாம பதிலச் சொல்லணும். நகை செஞ்சது எவ்வளவுன்னு ஒரு கேள்வி வருதுன்னு வெச்சுக்கோ, நீங்க செஞ்சது நூறு சவரன்தான். ஆன்னா மனுவுல சொல்லியிருக்கிறது எரநூறு பவுன். நீ எந்தப் பதிலச் சொல்வே?"ன்னு நிறுத்துனாரு வக்கீல்.

            "நூறுன்னுத்தாம் சொல்வேன்!"ன்னா செய்யு ரொம்ப நேர்மையா பதிலச் சொல்றாப்புல நெனைச்சுக்கிட்டு.

            "அப்பிடிச் சொன்னீன்னா கொடுத்த மனுவுல இருக்குற சங்கதிக்கும், நீ குறுக்கு விசாரணையில கொடுத்த வாக்குமூலத்துக்கும் வித்தியாசம் இருக்குறதா சொல்லி முன்னுக்குப் பின் முரணான பதிலச் சொல்றதாச் சொல்லி வழக்கே தள்ளுபடி ஆனாலும் ஆயிடும். அதுல கொஞ்சம் கவனம் வெச்சுக்கோ. இந்த நிரூபண வாக்குமூலத்துல நாம்ம கொடுத்துருக்கிற எந்த சங்கதியும் அதாவது நகெ செஞ்சது, பணம் கொடுத்தது, சீர் சனத்தி செஞ்சது எதுவும் குறுக்கு விசாரணையில கூடவோ குறைஞ்சிடவோ கூடாது. வேணும்ன்னா அதெ மனப்பாடம் பண்ணிக்கோ. இந்தச் சங்கதித்தாம் ஆர்குடி கேர்ட்டுல வன்கொடுமெ வழக்குன்னு குறுக்கு விசாரணைக்கு வந்தாலும், யில்ல சேந்து வாழ்றன்னு போட்டுருக்குற ஹெச்.எம்.ஓ.பி. வழக்கு விசாரணைக்கு வந்தாலும். குறுக்கு விசாரணையில கேள்விங்க வழக்குக்குத் தகுந்தாப்புல வித்தியாசப்படும் அவ்வளவுதாம். வழக்குக்குன்னு நாம்ம கொடுத்திருக்குற சாராம்சமான சங்கதிகள்ல பதிலச் சொல்றப்போ எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணிடக் கூடாது பாத்துக்கோ!"ன்னாரு வக்கீலு குறுக்கு வெசாரணையில பதில எப்படிச் சொல்லணுங்றதெ ந்நல்லா வெலாவரியா எடுத்துச் சொல்றாப்புல.

            "இந்த வழக்கப் பொருத்த வரைக்கும் கேள்விங்க எப்பிடி இருக்கும்ன்னு சொல்ல முடியுங்களாய்யா?"ன்னா செய்யு அப்பாவித்தனமா கேக்குறாப்புல.

            "ஆப்போசிட் லாயர் எப்பிடிக் கேட்பாங்றதெ சொல்றதுக்கு நமக்கு மனோவசியம்லாம் தெரியாதும்மா!"ன்னாரு வக்கீலு செய்யுவ வெடைச்சி வுடுறாப்புல.

            "ஒருவேள நீங்க ஆப்போசிட் லாயர் நெலையில இருந்து குறுக்கு விசாரணையப் பண்ணா எப்பிடிப் பண்ணுவீங்கன்னு சொன்னீங்கன்னா அவரோட கேள்விங்க எப்பிடி இருக்கும்ன்னு அனுமானிச்சுக்குவேம்!"ன்னா செய்யு வக்கீல்கிட்டெயிருந்து எப்படியும் தனக்குச் சாதவமான பதில வாங்கிப்புடுறாப்புல.

            "நாம்ம பண்ணா டெரர்ரா இருக்கும். உன்னால தாங்க முடியாது. நல்லவேளையா நாம்ம ஒன்னோட ஆப்போசிட் லாயரா ஆவாமப் போனதுக்காக சந்தோஷப்பட்டுக்கோ!"ன்னாரு வக்கீலு கேண்டீன் மேச மேல இருந்த சாமான்களெல்லாம் அதிர்றாப்புல ஒரு வெடிச் சிரிப்பெ போட்டுக்கிட்டு.

            "எதாச்சும் ஒரு கேள்விய மட்டும் சொல்லுங்களேம்!"ன்னா செய்யு வக்கீல்கிட்டெயிருந்து ஒரு கேள்விய வாங்கி நாடி பிடிச்சிப் பாத்துடுறாப்புல.

            "வேணாம் கோர்ட்டுக்குள்ள போவுறதுக்கு மின்னாடியே ஒன்ன டென்ஷன் பண்ண விரும்பல. ஏன்னா குறுக்கு விசாரணைங்றதே கூண்டுல நிக்குறவங்கள டென்ஷன் பண்ணி தனக்குச் சாதகமான சங்கதிகள ஒரு வக்கீல் வாங்குறதுதான்!"ன்னாரு வக்கீலு செய்யுவ தணிச்சி வுடுறாப்புல.

            "ஒரே ஒரு கேள்வி மட்டுமாச்சு!"ன்னா செய்யு ரொம்ப பிடிவாதமா.

            "அவசியம் கேட்டுத்தாம் ஆவணுமா?"ன்னு கேட்டுக்கிட்டே, "கலியாணத்துக்கு முன்னாடியே உனக்கு இன்னொருத்தனோட தொடர்பு இருந்ததாலத்தாம் நீ கணவனோட வாழப் பிடிக்காம அவன் கூட வாழ்றதுக்காக பிரிஞ்சி வந்திருக்கீயா?ம்பேம். இதுக்கு என்ன பதிலச் சொல்வே?"ன்னாரு வக்கீலு செய்யுவ அப்படியே தூக்கி தலைகீழா அடிக்கிறாப்புல.

            செய்யு ஒரு நிமிஷம் அதிர்ந்துதாம் போனா. "இப்பிடில்லாம்மா கேள்வியக் கேப்பாங்க?"ன்னா செய்யு இப்போ நடுங்குனாப்புல.

            "இதெ விடல்லாம் பயங்கரமா கேள்விகளக் கேப்பானுங்க. அதுக்காகத்தாம் பொண்ணுகள பெரும்பாலும் கூண்டுல ஏத்திக் குறுக்கி விசாரணைப் பண்ணுறதெ எந்த ஜட்ஜூம் விரும்ப மாட்டாங்க. அதுக்கு மின்னாடியே எப்படியாச்சும் பேசி முடிச்சி வுட்டுடப் பாப்பாங்க. இந்த ஜட்ஜூம் அதுக்குத்தாம் யோசனைப் பண்ணிக்கிட்டு நம்மள தனிப்பட்ட முறையில கேஸை எப்பிடியாச்சும் முடிச்சிக்கப் பாருங்கன்னு அழுத்தம் கொடுத்துச் சொல்றாரு. அதெ விடு. அத்து இனுமே நடக்காதெ கதெ. அதெ பத்திப் பேச வாணாம். இப்போ அந்தக் கேள்விக்கு உன்னோட பதில் என்ன? அதெ மொதல்ல சொல்லு?"ன்னாரு வக்கீலு செய்யுவோட மனசெ அளந்து பாக்குறாப்புல.

            செய்யுவுக்கு என்ன பதிலச் சொல்றதுன்னு புரியாம, "அதுக்கு எப்பிடிப் பதிலச் சொல்றதுன்னு சொல்லுங்க?"ன்னா சின்ன புள்ளெ கணக்கா. வக்கீலு சிரிச்சாரு. இப்பிடி குறுக்கு விசாரணை பண்ணுறப்பல்லாம் பிட்டு அடிச்சிப் பரீட்சை எழுதுற மாதிரியோ, பக்கத்துல உக்காந்திருக்கவனெ பாத்து எழுதுற மாதிரியோ எதையும் பண்ணிட முடியாது. அங்க நீந்தாம் பதிலச் சொல்லியாவணும். நம்ம வக்கீலு கேட்டுக்கிட்டு அவரு என்னப் பதிலச் சொல்லச் சொல்றாரோ அதெத்தாம் சொல்வேன்னு நின்னீன்னா மொத்த கோர்ட்டுமே சிரிக்க ஆரம்பிச்சிடும். அப்பிடி நம்மள சிரிப்பா சிரிக்க அடிச்சிடாதே!"ன்னாரு வக்கீலு மறுக்கா இடியப் போல ஒரு சிரிப்பு காட்டிக்கிட்டு.

            "அதுக்கு எப்பிடிப் பதிலச் சொல்றதுன்னு மட்டும் சொல்லுங்க?"ன்னா செய்யு மறுக்கா மறுக்கா திருவிழாவுல பொம்மெ கேட்டு அடம் பிடிக்குற புள்ளெயப் போல.

            "இப்படி ஒவ்வொண்ணையும் சொல்லிக் கொடுத்துக்கிட்டெ இருந்தா கோர்ட்டு ஆரம்பமாயிடும். போன தேதியில ஆஜராகமா தவிர்த்ததப் போல இந்தத் தேதியிலயும் ஆஜராக முடியாமப் போயிடும். அதெயே ஒரு சாக்கா வெச்சி குறுக்கு விசாரணைக்கு நாம்ம ஒத்துழைக்கலன்னு சொல்லி நாம்ம போட்ட வழக்கே பொய்யின்னு சோடிச்சிப்புடுவாம் ஆப்போசிட் சைடுல. இப்போ சொல்றதெ நல்லா கேட்டுக்கோ. குறுக்கு விசாரணையில நீ ஒண்ணும் பதில பிரமாதமா சொல்லணும்ன்னு அவசியமில்ல. உணர்ச்சிவசப்படாம பதிலச் சொன்னாலே போதும். இங்கப் பதில் எப்பவும் ரொம்பவும் சுருக்கமா ரத்தின சுருக்கமா இருக்கணும். நீட்டி முழங்கிடக் கூடாது. அதுக்கு உணர்ச்சிவசப்படாம இருந்தாத்தாம் முடியும். எவ்வளவு பதில் தேவையோ அதை விட கம்மியா சொன்னாலும் பிரச்சனை இல்லை. மறுபடியும் மறுபடியும் சொல்றதா நெனைச்சுக்காதே. உணர்ச்சிவசப்பட கூடவே கூடாது. ஏன் இதெ அழுத்தம் திருத்தமா சொல்றேன்னா பல பேரு கூண்டுல நின்னு உணர்ச்சிவசப்பட்டு சொன்ன பதிலாலேயே மாட்டிருக்காம். அதால ரொம்ப கேஷூவலா எதார்த்தமா எப்பிடியோ பேசுவீயோ, பேசுறப்ப கொச்சை வழக்குலத்தானே பேசிப் பதிலச் சொல்லுவோம். அப்பிடித்தாம் அங்க பேச்சு இருக்கணும். ரொம்ப இலக்கிய நடையில எல்லாம் பேசிட்டு இருந்தே அதெ சொல்லிக் கொடுத்துச் சொல்றதாத்தாம் பாப்பாங்க. சாதாரணமா எப்பிடிப் பேசுவீயோ அப்பிடித்தாம் பேசணும். நீ சொல்ற ஒவ்வொண்ணும் மேல உக்காந்திருக்குற ஜட்ஜூக்கு உண்மெங்றது மாதிரி மனசுல படணும். அதுதாம் ரொம்ப முக்கியம். நீ பதிலச் சொல்றப்போ உன்னோட பதில மட்டும் ஜட்ஜ் பார்க்க மாட்டாரு. உன்னோட பாவனை, மொகம் போற போக்குன்னு அத்தனையையும் கவனிப்பாரு. நீ எப்பிடி நிக்குறே, எங்கப் பாக்குறே, எப்படி யோசிக்கிறேன்னு இவ்வளவு விசயத்தையும் மனசுக்குள்ளயே வெச்சுக் கணக்கப் போட்டுருப்பாரு!"ன்னாரு வக்கீலு பொதுப்படையா செய்யுவ தெளிவு பண்டுறாப்புல.

            "நீஞ்ஞ இன்னும் எப்பிடிப் பதிலச் சொல்றதுன்னே சொல்லலயே?"ன்னா செய்யு வக்கீல் சொல்ல வந்த விசயத்த மறந்துட்டாப்புல.

            "அவசரப்படாதே. அந்த எடத்துக்குத்தாம் வந்துகிட்டு இருக்கேம். இப்போ சொல்றேம் பாரு. நீ நிதானமாக பதிலச் சொன்னா இல்லங்ற பதிலோட மட்டும் நிப்பாட்டிக்கணும். அதெ விட்டுப்புட்டு உணர்ச்சிவசப்பட்டு காலேஜ்ல படிக்கிறப்பவே நம்மள பல பேரு பாத்தாம், லவ் லெட்டர் கொடுத்தாம், ஆன்னா நாம்ம யாரையும் ஏறெடுத்துப் பாக்கல, எட்டிப் பாக்கலன்னு கதெ அளக்க ஆரம்பிச்சேன்னு வெச்சுக்கோ அதுலேந்து பாய்ண்ட்ட பிடிச்சி உனக்கு எதிரா வர்றாப்புல கேள்வியக் கேட்டு மடக்கிடுவேம். நாம்ம ஆப்போசிட் லாயர்ன்னா அதெத்தாம் பண்ணுவேம். திடீர்ன்னு வழக்குக்குச் சம்மந்தம் இல்லாமலே உன்னோட பக்கத்து வீட்டுல, எதிர் வீட்டுல கலியாணம் ஆவுறதுக்கு முன்னாடி வாலிபப் பசங்க இருந்தாங்களா? அப்பிடின்னும் கேள்விப் போவும் நாம்ம ஆப்போசிட் லாயர்ன்னா. அப்போ ஆப்போசிட் லாயர் நம்மகிட்டெ பிரியா பேசுறாருன்னு நெனைச்சி அதுக்குப் பதிலச் சொல்றாப்புல ஆமாம் தெரு முழுக்க பசங்க இருந்தாங்க. நாம்ம காலேஜ் போறப்பவும் வர்றப்பவும் பாத்துக்கிட்டேதாம் இருப்பாங்கன்னு சினிமா பாத்து ஒன்றிப் போயிடுறாப்புல பதிலச் சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது. அதெ வெச்சி இந்தப் பொண்ணுக்குப் படிக்குற காலத்துலயே படிப்பெ வுட பசங்கள கவனிக்குறதெ வேலையா இருந்திருக்கு. அதெ போலத்தாம் கலியாணத்துக்குப் பெறவும் புருஷனெ கவனிக்கிறதெ விட மித்த ஆம்பளைகள பாக்குறதெ பொழப்பா இருந்திருக்குன்னு பட்டுன்னு அடிச்சிடுவேம். ஒங் கேரக்டர்ரயே நாசம் பண்ணிடுவேம். இத்து நாம்ம ஆப்போசிட்ன்னா பண்ணுறது. குறுக்கு விசாரணையில சம்பந்தம் இல்லாததப் போல ஒரு கேள்வி வருதுன்னா அதுலேந்து ஒரு பாய்ண்ட பிடிச்சி சம்பந்தம் பண்ணுறதுக்கான இன்னொரு கேள்வி பின்னாடி வரப் போவுதுன்னு அர்த்தம். அப்பிடித்தாம் கேள்விகள எடம் மாத்திப் போட்டு கூண்டுல இருக்குறவங்களக் கொழப்பி வுட்டு கலங்குன குட்டையில நாங்க பாட்டுக்கு மீன பிடிச்சிக்கிட்டெ இருப்பேம். அப்பிடி பிடிக்கிற ஒவ்வொரு மீனுக்குத் தகுந்தபடியும், வக்கீலோட ஆர்கியுமெண்டுக்குத் தகுந்தப்படியும்தாம் ஒரு ஜட்ஜ் தீர்ப்ப வழங்க முடியும். அவரா ஒரு தீர்ப்பையெல்லாம் இது நியாயம், இது அநியாயம்ன்னு நெனைச்சிக்கிட்டு எழுதிட முடியாது. நீ கொடுக்குற வாக்குமூலம், எங்களோட வாதம் இதுலத்தாம் ஒளிஞ்சிருக்கு பின்னாடி ஜட்ஜ் கொடுக்கப் போற தீர்ப்பு. இப்போ ஒனக்கு ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேம்!"ன்னாரு வக்கீலு குறுக்கு வெசாரணையப் பத்தின முழுமையான குறுக்கு வெட்டுத் தோற்றத்தெ தர்றாப்புல.

            "நாஞ்ஞப் போடுற கணக்கு மாதிரித்தாம். கடைசியா ஆன்ஸ்ர் வர்றப்போ எடையில எந்த ஸ்டெப்பும் லாஜிக்கா இடிக்கக் கூடாது. அதானே!"ன்னா செய்யு விசயத்தெ கப்புன்னு பிடிச்சிக்கிட்டாப்புல.

            "சரியா பிடிச்சிட்டெ. அதேதாம். அங்க ஒனக்குக் கணக்கு. இங்க நமக்கு வழக்கு. அவ்வளவுதாம் வித்தியாசம். பேசிக்கலா லாஜிக்கா எந்த ஓட்டையையும் ஆப்போசிட் லாயரால கண்டுபிடிக்க முடியலன்னா, ஒன்னோட வாயப் பிடுங்கி எந்தப் பதிலையும் அவனால வாங்க முடியலன்னா இந்த வழக்குல நாம்மத்தாம் ஜெயிச்ச மாதிரி. அதே நேரத்துல இந்த குறுக்கு விசாரணையில நீ கொடுக்கற ஒவ்வொரு வாக்குமூலமும் நிரந்தரமானது, மாத்த முடியாதது. மேல் அப்பீல்ன்னு இந்த கேஸூ போனாலும் இதெ வெச்சித்தாம் அதுக்குப் பிறகு வழக்குப் போவும். இங்க கொடுக்குற ஒவ்வொண்ணும் சுப்ரீம் கோர்ட் வரைக்கும கேஸ் போனாலும் இதுதாம் அஸ்திவாரம் பாத்துக்கோ! அஸ்திவாரத்த சரியாப் போட்டாச்சுன்னா வழக்குல எந்த ஓட்டையும் இருக்காது. வழக்குல ஓட்டை இல்லன்னா சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனாலும் கீழ் கோர்ட்டுல என்ன தீர்ப்பாவுதோ அதேதாம் தீர்ப்பாவும்!"ன்னாரு வக்கீலு பொட்டுல அடிச்சிச் சொல்றாப்புல.

            "குறுக்கு விசாரணைன்னா கொஞ்ச கவனமாத்தாம் இருக்கணும்ங்ய்யா!"ன்னா செய்யு அதெ கேட்டுட்டு.

            "கொஞ்ச கவனம் இல்லே. ரொம்ப கவனமா இருக்கணும். கரணம் தப்புனா மரணும்ன்னு சொல்லுவாங்கப் பாரு. அப்பிடித்தாம். ஒரு சங்கதி பெரண்டுச்சுன்னா போதும் மொத்த கேஸூமே அடி வாங்கிடும். அதெ மட்டும் ஞாபவம் வெச்சுக்கோ. அதே நேரத்து ஆப்போசிட் லாயர் ரொம்ப ஆபாசமா கிராஸ் பண்ணுறான்னு வெச்சுக்கோ அதுக்காக அதெ கேட்டுக்கிட்டு உக்காந்திருக்க மாட்டேம். எழும்பி ஒடனே அப்ஜெக்சன் பண்ணுவேன். அப்பிடி நாம்ம அப்ஜெக்சன் பண்ணுறது மொதக் கொண்டு குறுக்கு விசாரணையில பதிவாவும். மறுபடியும் மறுபடியும் நாம்ம சொல்ல வர்றது கிராஸ்ங்றது ஒன்ன டென்ஷன் பண்ணி ஒம் வாயப் பிடுங்குறதுதாம். அதுக்கு நீ எடம் கொடுக்கலன்னா ஒங்கிட்டெருந்து ஒண்ணையும் பிடுங்கிட முடியாது. அதெ மட்டும் ஞாபவம் வெச்சுக்கோ. போதும் இதெப் பத்திச் பேசுனது. ரொம்ப பேசப் பேச உனக்குப் பயமா போயிட்டே இருக்கும். அதெ பத்தி இனுமே யோசிக்காத. சாப்டீயா?"ன்னாரு வக்கீலு தீர்க்கமான ஒண்ணுத்தெ சொல்றாப்புல.

            "யில்ல! எட்டரைக்கே வர்றச் சொன்னதால ஏழு மணிக்கெல்லாம் கெளம்பி எட்டு மணிக்குல்லாம் இஞ்ஞ வந்தாச்சு!"ன்னா செய்யு சாப்டீயாங்றதுக்குப் பதிலெ சுத்தி வளைச்சுச் சொல்றாப்புல.

            "நானும் சாப்புடல. இந்த வழக்குச் சம்மந்தமா கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணுறாப்புல ஆயிடுச்சு. சார் எல்லார்க்கும் டிபன்ன சொல்லிடுங்க. சாப்புட்டு முடிச்சி எல்லாரும் வர்றதுக்கு மின்னாடி பதற்றமோ, பரபரப்போ இல்லாம நிதானமா போயி கோர்ட்டுல நின்னுடுவோம்!"ன்னாரு வக்கீல் அடுத்த கட்ட காரியத்துல எறங்குறாப்புல.

            "நமக்குச் சாப்பாடு வாணாம். நீஞ்ஞ மட்டும் சாப்புடுங்க!"ன்னா செய்யு மொத மொதலா பரீட்செ எழுதப் போறவெ பயந்துகிட்டுச் சாப்புடாம போறாப்புல.

            "ஏம்மா? சாப்புடாம கூண்டுல மயக்கம் அடிச்சி விழுந்தேன்னா வெச்சுக்கோ, ஆப்போசிட் லாயர் அதெயும் தனக்குச் சாதவமாக்கிப்பாம்!"ன்னாரு வக்கீலு பட்டுன்னு செய்யுவ கலாய்க்குறாப்புல.

            "அதெப்படி சாதவமாக்கிக்க முடியும்?"ன்னா செய்யு வெவரம் புரியாதவளப் போல.

            "நாம்ம கேட்ட கேள்வியாலத்தாம் பொண்ணு கொழம்பிப் போயி மயக்கமடிச்சி வுழுந்துட்டதா பெருமெ பீத்திக்கிட்டு அலைய ஆரம்பிச்சிடுவாம்மா ஒம் ஆம்படையனோட லாயரு. இதெச் சொல்லியயே ஒம் ஆம்டையான்கிட்டெ காச வேற கூடுதலா கறந்துப்புடுவாம் பாத்துக்கோ!"ன்னு தான் சொன்னதுக்குக் காரணத்தெ சொல்லிச் சிரிச்சாரு வக்கீலு.

            "நாம்ம கோர்ட்டு முடிஞ்ச பெற்பாடு வந்து சாப்புட்டுக்கிறேம்!"ன்னா செய்யு பிடிவாதமா இருக்குறாப்புல.

            "காலையில டீ, காப்பி எதாச்சும் உள்ளப் போனுச்சோ?"ன்னாரு வக்கீலு செய்யுவப் பாத்து அனுசரனையா கேக்குறாப்புல.

            "ம்ஹூம்!"ன்னா செய்யு ஒத்த வார்த்தையில பதிலச் சொல்றாப்புல.

            "ஒவ்வொரு நாளும் கோர்ட்டுக்கு வர்றப்போ விரதம் இருந்துட்டுத்தாம் வர்றீயா? அதாம் பாக்கவே ரொம்ப இளைச்சிப் போயிருக்கே! இப்பிடி ஒரு சோதனெ ஒனக்குத் தேவையா? அதெ கேட்டா கோவம் வந்துடும். எனிவே ஒன்னோட விரதத்துக்கு ஒரு சக்தி கிடைக்கட்டும். குறுக்கு விசாரணை நல்லபடியா முடியட்டும். சார் நமக்கு ரண்டு பூரி, ஒரு பொங்கல், ஒரு தோசை மட்டும் போதும். நாம்ம சாப்புட்டுத் தெம்பா போயி உக்காந்தாத்தாம் குறுக்கு விசாரணையில ஆப்போசிட் லாயர் கேக்குற கேள்வி நமக்குப் புரியும்!"ன்னாரு வக்கீலு. அதெ கேட்டுக்கிட்டு டிபன் சாப்பாட்டுக்கான டோக்கன வாங்குறதுக்காக எழும்புனாரு சுப்பு வாத்தியாரு. எழும்புறப்பவே மவனெப் பாத்து ஒமக்கு என்னாங்ற மாதிரிக்கு கண்ணாலயே ஒரு பார்வெ பாத்தாரு. “குறுக்கு வெசாரணைய முடிச்சிக்கிட்டே நாமளும் தங்காச்சியோட சாப்புட்டுகிறேம்!”ன்னாம் விகடு தங்காச்சிக்கு தொணையா இருக்குறாப்புல.

            “நம்மால முடியாதுடாப்பா காலங்காத்தாலயே கொல பட்டினி கெடக்க! நாலு இட்டியில பிட்டு உள்ளாரப் போட்டு டீத்தண்ணிய உள்ளார ஊத்துனாத்தாம் சரிபட்டு வாரும்!”ன்னு சொல்லிக்கிட்டெ சுப்பு வாத்தியாரு டிபனுக்கான டோக்கனெ கணக்குப் பண்ணிகிட்டுப் போனாரு. செய்யு நடக்கப் போற இருக்குற குறுக்கு வெசாரணையப் பத்தி மனசுக்குள்ளயே கணக்குப் போட ஆரம்பிச்சிருந்தா. அவ்வே குறுக்கு வெசாரணைய எப்படி எதிர்கொள்ளப் போறாளோன்னு விகடுவும் மனசுக்குள்ளேயே அதெப் பத்தி கணக்குப் போட ஆரம்பிச்சிருந்தாம். 

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...