20 Dec 2020

பாதியிலே பாய்ந்து வந்த வாந்தி!

பாதியிலே பாய்ந்து வந்த வாந்தி!

செய்யு - 661

            திங்கக் கெழமெ ஆர்குடி சார்பு நீதிமன்றத்துல ஹெச்செம்ஓப்பி வழக்குக்குச் சுப்பு வாத்தியாரும், செய்யுவும் ஆஜராவப் போனாங்க. ஆர்குடி சார்பு நீதிமன்றம் ஆர்குடி பெரியாஸ்பத்திரிப் பக்கத்துல இருக்குற பெரிய தண்ணி டேங்குக்குக் கீழே உள்ள கட்டடம். அது ஒரு பெரிய தண்ணி டேங்கு. அந்த டேங்குக்குக் கீழே மூணு தளங்கள்ல கட்டடங்க இருந்துச்சு. தரைத்தளத்துல சார்பு நீதிமன்றமும், மொத தளத்துல வணிக வரி அலுவலகமும், ரண்டாவது தளத்துல நகராட்சி அலுவலகமும் இருந்துச்சு. எடம் ரொம்ப நெரிசலா நிக்கக் கூட முடியாத அளவுக்குக் குறுகலா இருந்துச்சு. இருக்குற எல்லா எடத்துலயும் பீரோலு நின்னுச்சு. பீரோக்கள அங்க இங்க நிறுத்தி அடைப்ப உண்டு பண்ணியிருந்தாங்க. வக்கீல்மார்க அவுங்களுக்குன்னு உக்கார்ந்திருக்குற எடத்துக்குப் போயிட்டு வர்றதும் செருமமா இருக்குற அளவுலத்தாம் இருந்துச்சு. இதுல கூட்டம் வேற. மூச்சு வுடறதுக்கு அந்தாண்ட இந்தாண்ட காத்து நவுருமாங்ற நெல. பத்தே காலக்கு மேல கூட்டமா இருக்குற பஸ்ல படியிலயும் மேலயும் தோத்திக்கிட்டு ஏறுறப்போ உள்ளார இருக்குறவங்களோட நெலமெ அப்பிடி இருக்குமோ அப்பிடித்தாம் இருந்துச்சு ஆர்குடி சார்பு நீதிமன்றம்.

            மனுஷன் நிக்குறதுக்கே எடம் இல்லங்றது புரியாம வேர்வைப் பாட்டுக்கு எங்காவது எடம் கெடைச்சா ஓடிப்போயி விழுந்துடுவோம்ன்னு அது பாட்டுக்கு கொப்புளிச்சிக்கிட்டு வருது. ஒரு வகையில அந்த எடத்துல நிக்குறதெ ஒரு வெதமான தண்டனையப் போலத்தாம் இருந்துச்சு. இப்பிடி எடம் இருந்தாத்தாம் பிரிஞ்சி வாழணும்ன்னு நெனைச்சி வர்றவங்க, இதுல நின்னுப் பாத்துப்புட்டு இந்தச் செருமத்துக்கு சேந்து வாழுற செருமமே பரவால்லன்னு முடிவெடுத்துச் சேந்துப்புடுவாங்கன்னு நெனைச்சும் கூட இந்த எடத்தோட அமைப்ப அப்பிடி அமைச்சிருக்கலாம். அத்து யாருக்குத் தெரியும்? சார்பு நீதிமன்றத்து கேஸூங்க எல்லாமே ஒண்ணு சேர்ந்து வாழ்றதுக்காகவோ, பிரிஞ்சிப் போவுறதுக்காகவோத்தாம் இருந்துச்சு. ஆம்பளைகள வுட பொம்பளைகத்தாம் அதிகமா இருந்தாங்க. அவுங்களக்குத் தொணையா பெரும்பாலும் வயசான அப்பாமாருகத்தாம் வந்திருந்தாங்க, அப்பான்னா வயசான காலம் ஆனாலும் பொம்பளப் புள்ளயத் தாங்கிட்டெ இருக்கணுங்ற மாதிரிக்கி. இங்க நிக்குற கூட்டத்தெப் பாக்குறப்போ தெருவுக்கு நாலு பேத்துக்கு குடும்ப வாழ்க்கெ நல்லாயில்லங்றதெ பாத்த ஒடனே புரிஞ்சிக்கிடலாம் போல இருந்துச்சு.

            கோர்ட்டுக்குக்குன்னு கெளம்புற ஒவ்வொரு நாள்லயும் செய்யு ஒருவெதமான அசாதாரண நெலமைக்கு ஆளாயிடுறா. அவளால அன்னிக்கு மட்டும் என்னவோ காத்தால சீக்கிரமா எழும்ப முடிய மாட்டேங்குது. சாப்புட உக்காந்தா சாப்பாடு உள்ளப் போவ மாட்டேங்குது. பெரும்பாலும் கோர்ட்டுக்குப் போயிட்டு வர்ற ஒவ்வொரு நாளும் பட்டினியாத்தாம் போயிட்டு வர்றா. கோர்ட்டுல எதாச்சும் இவளுக்குச் சாதகமா நடந்தா மட்டும் அன்னிக்கு ஓட்டல்ல மத்தியானச் சாப்பாட்ட வாங்கிச் சாப்புட்டு வர்றா. வெவகாரமா எதாச்சும் நடந்துப்புட்டா அன்னிக்கு மத்தியானச் சாப்பாடும் இல்லாமப் போயிடுது. கோர்ட்டுக்குப் போயிட்டு வூட்டுக்கு வந்தா அன்னிக்கு நூறு பேத்தோட வேலைய ஒத்த ஆளாச் செஞ்சதெ போல களைச்சிப் போயிடுறா. அப்பிடியே படுத்தான்னா அவளெ ராத்திரிச் சாப்பாட்டுக்கு எழுப்ப முடியாது. எழுப்ப நெனைச்சா கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சிடுறா. இப்பிடி மனசும், ஒடம்பும் இருக்குறவளுக்குக் கோர்ட்டே தேவயில்லன்னு சுப்பு வாத்தியாரும், விகடுவும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிட்டாங்க. இன்னிக்குக் கெளம்புனப்பயும் அவ்வே காலையில ஒண்ணுத்தையும் சாப்புடல.

            வெங்கு கெளம்புறப்ப சொல்லிப் பாத்துச்சு. "மொத மொறையா ஒரு கோர்ட்டுன்னு யில்லாம ரண்டு கோர்ட்டுக்குப் போவப் போறே. அஞ்ஞப் போயி பெறவு அஞ்ஞயிருந்து வேவாத வெயில்ல இஞ்ஞ திருவாரூருக்கு வேற வந்தாவணும். கொஞ்சமாச்சும் சாப்புட்டுப் போயிடு. இல்லாட்டி சாப்பாட்ட வாணும்ன்னாலும் டப்பாவுல போட்டுத் தர்றேம். அஞ்ஞ எஞ்ஞாச்சும் பசிக்கிறப்போ கெடைக்குற எடத்துல உக்காந்துச் சாப்புட்டுக்கோ. எஞ்ஞ கெளம்புன்னாலும் செரித்தாம் வெறுவயித்தோட மட்டும் கெளம்பாதே. ஒடம்ப வுட வேறென்ன முக்கியம்ன்னு நெனைக்குறே? நம்ம ஒடம்புக்கு மிஞ்சித்தாம் எல்லாமும். மொதல்ல ஒடம்ப தெடம் பண்ணிக்கோ. பெறவு எதா இருந்தாலும் பாத்துக்கிடலாம். ஒடம்பு தெடமா இருந்தாத்தாம் மனசும் தெடமா இருக்கும். நடக்குறதெ எதிர்கொள்ளுற தெடமும் உண்டாவும்!"ன்னு எவ்வளவோ அதோட அனுவத்தெ வெச்சு சொல்லிப் பாத்துச்சு.

            அதெ கேட்டுப்புட்டு, "கோர்ட்டுக்குப் போறதுக்கு மின்னாடியே ஆரம்பிச்சிடாதேம்மா! அஞ்ஞ போயிப் போவப் போற பிராணத்தெ மின்னாடியே எடுத்துப்புடாதே!"ன்னு எரிஞ்சி வுழுந்துப்புட்டுக் கோர்ட்டுக்குக் கெளம்புனவதாம் செய்யு. பச்சத்தண்ணி பல்லுல படல.

            "யப்பம் சொல்றதெயும் கேக்க மாட்டேங்றா. யண்ணன் சொல்றதெயும் கேக்க மாட்டங்றா. பிடிவாதமா நின்னு ஒடம்பெ கெடுத்துக்கிட்டு என்னத்தெ வழக்குல செயிச்சி என்னத்தெ பண்ணப் போறாளோ? இவ்வேகிட்டெ சொல்றது செவத்துக்குப் பாடத்தெ சொல்றதெ போல இருக்கு. கேக்க மாட்டேங்றாளே? நரிகிட்டெ போயி ஆட்டுக்குட்டிய ஒப்படைச்சிட்டுத் திரும்பக் கேட்டாக்கா அதெ கொடுக்குமா? விடாக்கண்டங்கிட்டயும், கொடா கண்டங்கிட்டயும் காசிப் பணத்தெ, நகெ நட்டெ கொடுத்துப்புட்டு அதெ மீக்கணும்ன்னு நின்னா ஆவுற கதெயா? ஒடம்பு நல்லா இருந்தா அதெ சம்பாதிச்சிட முடியாதா? எம்மட உஞ்சினி அய்யனாரே அவளுக்கு நல்ல புத்திய நீந்தாம் கொடுக்கணும். மனுஷனால சரிபண்ண முடியுற பொண்ணுல்ல இவ்வே. ஆண்டவந்தாம் சரிபண்ணியாவணும்!"ன்னு அது பாட்டுக்கு மவ்வே கௌம்பு வெங்குப் புலமபிக்கிட்டுக் கெடந்துச்சு.

            இங்க ஆர்குடி சப் கோர்ட்டுல பதினொண்ணரை மணி ஆனப்போ உள்ளாரயே நிக்க முடியாத அளவுக்கு கூட்டம் திமுதிமுன்னு சேந்துகிட்டெ இருந்துச்சு. பெரும்பாலான வழக்குகள்ல தேதியக் கொடுத்து அனுப்பிச்சிக்கிட்டெத்தாம் இருந்தாங்க. அப்பிடி அனுப்பியும் கூட்டம் கொறைஞ்ச பாடாயில்ல. நமக்கும் இப்பிடி ஒரு தேதியக் கொடுக்கறதுக்குத்தாம் நிப்பாட்டி வைக்குறாங்கங்றது செய்யுவுக்குப் புரியுது. புரிஞ்சி என்னத்தெ செய்ய? ஆஜராயிட்டதெ காட்டிப்புட்டு தேதிய வாங்குறதுக்கு இப்பிடி நின்னுத்தாம் ஆவ வேண்டியதா இருக்கு. பன்னெண்டு மணிக்கு மேலத்தாம் வழக்கு நம்பர்ர சொல்லி, பாலாமணியோட பேரையும் செய்யுவோட பேரையும் சொல்லி கூப்டாங்க சார்பு நீதிமன்றத்துல. இவ்வே ஆஜரானதெப் பாத்துப்புட்டு ஜட்ஜ் ஒரு மாசத்துக்குத் தள்ளி ஒரு தேதியப் போட்டுக் கொடுத்தாரு. பாலாமணி தரப்புலேந்து யாரும் ஆஜராவல. யாரோ ஒரு வக்கீலு மட்டும் எழும்பி வாய்தாவுக்கான காயிதத்தெ கொடுத்துட்டு உக்காந்துப்புட்டாரு அவ்வளவுதாங்.

            அதுக்கு மேல கெளம்பி வெளியில வந்தப்போ என்னவோ பெரிய விடுதலை கெடைச்சதெப் போல இருந்துச்சு செய்யுவுக்கும், சுப்பு வாத்தியாருக்கும். காத்து கொஞ்சம் சிலுசிலுப்பா வீசுறாப்புல இருந்துச்சு. அத்து சிலுசிலுப்பான காத்து கெடையாது. கொஞ்சம் வெக்கையானா காத்துதாம். உள்ள இருந்துட்டு வெளியில வந்தப்போ அந்த வெக்கையான காத்தும் கொஞ்சம் சிலுசிலுப்பா தெரிஞ்சிது. உள்ளோ அவ்ளோ வெக்கையும் வேர்வையும். பட்சணத்தெ அமுக்கிக்கிட்டு, கொஞ்சம் டீத்தண்ணிய உள்ளார வுட்டுக்கிட்டா தேவலாம் போல இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. கோர்ட்டுக்குக் கௌம்புற அவ்சரத்துல அவரு காலயில அரையுங் கொறையுமாத்தாம் சாப்புட்டுக் கௌம்புனாரு. அவரு ரொம்ப களைச்சுப் போனவர்ரப் போல இருந்தாரு. இது மாதிரியான நேரங்கள்ல டீத்தண்ணித்தாம் மனஷனுக்குத் தேவ பானத்தெ போல ஒடம்புக்கும் மனசுக்கும் தெம்பு கொடுக்குறது. செய்யுவப் பாத்து, "டீத்தண்ணி கொஞ்சம் குடியேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. வேண்டாங்ற மாதிரிக்கி அவ்வே தலைய அசைச்சா. சுப்பு வாத்தியாரு வண்டியக் கெளப்பிக்கிட்டு அரசமரத்தடி டீக்கடைக்குக் கீழே நிப்பாட்டி ஒரு மெதுவடைய எடுத்துச் செய்யுக் கையில கொடுத்தாரு. அவ்வே வாணாம்ன்னு சொன்னதும் அவரு அதெ சாப்புட்டு முடிச்சி, சூடா டீத்தண்ணிய வாங்கி உள்ளார ஊத்துனாரு. போன உசுரு திரும்ப வந்ததெப் போல அவருக்கு தெம்பா இருந்துச்சு. திரும்ப வண்டிய எடுத்து செய்யு பின்னாடி உக்கார வெச்சிக்கிட்டு திருவாரூர்ர நோக்கி வுட்டாரு.

            வண்டி கெளம்புறப்பவே தலைய கொஞ்சம் வலிக்கிறதா சொன்னா செய்யு. "நமக்கும் அப்பிடித்தாம் இருந்துச்சு. அதாங் கொஞ்சம் டீத்தண்ணியக் குடின்னேம். கேக்க மாட்டேன்னுட்டே. யிப்போ நமக்குக் கொஞ்சம் பரவாயில்லங்ற மாதிரிக்கி இருக்குது. அந்தக் கட்டடத்துக்குள்ளப் போயிட்டு வந்தாவே யில்லாத தலவலியும் வெலாசம் கேட்டுப்புட்டு வந்துப்புடும். வழியில எதாச்சும் கடையில நிறுத்தின்னா டீத்தண்ணி வாங்கித் தர்றவா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. "வாணாம்பபா! கொமட்டலா இருக்கு! வாந்தி எடுத்துடுவேம் போலருக்கு!"ன்னா செய்யு.

            வாந்தி வர்றதா சொல்லி இருவது நிமிஷம் ஆயிருக்கும். வண்டி கோரையாத்தங்கரைகிட்டெ போயிட்டு இருக்குறப்போ வண்டிய நிறுத்தச் சொல்றதுக்குள்ள, குப்பு குப்புன்னு வாந்திய எடுத்து பொடவைய நனைச்சி வெச்சிருந்தா செய்யு. மஞ்ச மஞ்சளா தண்ணியா வாந்திப் பாட்டுக்கு நிக்காம வந்துகிட்டெ இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு வண்டிய நிறுத்துறதுக்குள்ள வாந்தி பாட்டுக்கு வண்டி வண்டியா வந்திருச்சு. செய்யு சட்டுன்னு எறங்கி தலையில கைய வெச்சிட்டு குந்துனாப்புல உக்காந்துட்டா. வண்டிய ஸ்டாண்டு போட்டு நிப்பாட்டுன்ன சுப்பு வாத்தியாரு சட்டுன்னு பாட்டில்ல கொண்டுப் போயிருந்த தண்ணியக் கொடுத்து வாயக் கொப்புளிக்கச் சொல்லி, கொஞ்சம் உள்ளுக்குக் குடிக்கச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு. வண்டிய மரத்தடியாப் பாத்து நெழல்ல கொண்டுப் போயி நிப்பாட்டி மவளையும் கைத்தாங்கலா அழைச்சாந்து தரையிலயே துண்டப் போட்டு அப்பிடியே உக்கார வெச்சாரு. அவரும் அப்பிடியே பக்கத்துல உக்காந்தாரு.

            "நேத்தில்லாம் நல்லாத்தாம்பா இருந்தேம்! காலையிலயும் நல்லாத்தாம் இருந்தேம். ஒண்ணும் தெரியல. கோர்ட்டுக்குள்ள போனதுமே தலவலிக்க ஆரம்பிச்சிடுச்சு. விண்விண்னுன்னு தெறிக்கிது. ஒண்ணும் சொல்ல முடியல. தாங்கிக்கிட்டெ நின்னுட்டேம். நீஞ்ஞ டீத்தண்ணிய குடிக்கிறப்புல எல்லாம் தலையே வெடிச்சிச் செதறிடும் போல இருந்துச்சு. யிப்போ யிந்த வாந்திய எடுத்ததுக்குப் பெறவுத்தாம் கொஞ்சம் பரவாயில்ல மாதிரிக்கு இருக்குது!"ன்னா செய்யு.

            "மனசெ போட்டு அலட்டிக்கிறே. இதெல்லாம் வாணாம்ன்னாலும் வுட மாட்டேங்றே. டென்ஷன் தாங்க முடியாம, ஒடம்புக்கு ஒத்துக்கிடாம இப்பிடி ஆவுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வேதனைய வெளிக்காட்ட முடியாத விரக்தியில.

            "அதெ வுட முடியாதுப்பா! அதெ வுடுறதுங்றது உசுர்ர வுடுறதெப் போலன்னு தோணுதுப்பா!"ன்னா செய்யு ரொம்ப பிடிவாதமா.

            "எல்லாம் நெனைப்புத்தாம். ஒடம்புத்தாம் பெரிசு. உசுருத்தாம் பெரிசு. அதெ வுட இதென்ன பெரிசா? இதுல சாதிச்சு என்ன ஆவப் போவுது சொல்லு? என்னவோ ஒம் மனசு கேக்காம நெலையா நிக்குறே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவளெ எப்படி சமாதானம் பண்டுறதுன்னு புரியாம.

            "எத்தனெ தடவேப்பா சொல்றது? அஞ்ஞ இருக்குறது எம்மட காசியில்ல, ஒஞ்ஞ ஒழைப்புல சம்பாதிச்சிக் காசி! கஷ்டப்பட்டுப் பாடஞ் சொல்லிக் கொடுத்து, வயல்ல கெடந்து பாடுபட்டு, எதுக்கும் சிலவெ பண்ணாம சிக்கனமா யிருந்து சேத்தக் காசி. அதுல ஒத்தக் காசியச் சேக்கறதுக்கு எம்மாம் செருமப்பட்டிருப்பீயன்னு நமக்குத் தெரியும்ப்பா. ஆர்குடியோ, திருவாரூரோ வர்றப்போ ஓட்டல்ல சாப்புட்டா காசிச் சிலவாயிடும்ன்னு பட்டினியாவே எத்தனெ நாளு வந்திருக்கீயேப்பா! அதாலத்தாம் அதெ நம்மாள சுலுவா வுட முடியல. ஒத்தக் காசி வுடாம அத்தனையையும் மீட்டுப் புடணும்ன்னு நெனைக்குறேம்ப்பா. நாம்ம வேலைக்குப் போயி ஆயுசுக்கும் சம்பாதிச்சாத்தாம்பா நீஞ்ஞ நமக்குச் செஞ்சதெ ஈடு பண்ண முடியும். அதுக்காக யிப்போ நாலைஞ்சு வருஷம் ஆனாலும் பரவாயில்ல. வழக்கெ நடத்தி செயிச்சா அதெ வாங்கி எப்பிடியாச்சும் ஈடுபண்ணிப்புடலாம்ப்பா! இதுல ஒஞ்ஞ ஒருத்தரு காசி மட்டுமில்லாம யண்ணனோட காசின்னு ரண்டு பேத்தோட காசி வேறல்லப்பா கெடக்குது. அதால உண்டான்ன கடங்கப்பின்னு தாங்க முடியாத நெலமையிலப்பா குடும்பம் இருக்குது!"ன்னா செய்யு தாம் பிடிவாதமா இருக்குறதுக்கான காரணத்தெ எடுத்துச் சொல்றாப்புல.

            "வாஸ்தவந்தாம். அதெப் பாத்தா? யிப்போ ஒடம்புக்கு முடியுதா? அதெ தாங்குற மனோதெடந்தாம் ஒங்கிட்டெ இருக்கா? என்னவோ நாம்மப் பாத்த காக்கா வெள்ளத்தான்னு பிடிவாதமா நின்னுகிட்டு இருக்குறே. ஒம்மட மனநெலைக்கு நாஞ்ஞளும் ஒண்ணும் சொல்ல முடியாம கூடவே ஓடியாந்துட்டு இருக்கேம்! நமக்கு எம்மாம் முடியுதோ அதோட நிறுத்திருக்குறதுதாம் நல்லது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவளோட நெல பொறுக்க முடியாம.

            அந்த நேரம் பாத்து செய்யுவோட செல்போன் அடிச்சிது. வக்கீல் திருநீலகண்டன் அடிச்சாரு. "ரொம்ப நேரம் பாத்தாச்சு. நேரமாச்சுன்னு கேஸ்ஸ மத்தியானத்துக்கு மேல பாஸ் ஓவர் பண்ணிருக்கேம். எப்படியும் வந்துடுங்கோ! பாத்துக்கிடலாம்!"ன்னாரு மெல்லிசான சன்னமான கொரல்ல.

            "ஒடம்பு ரொம்ப முடியலங்கய்யா!"ன்னா செய்யு ரொம்ப பரிதாபமா.

            "அதெ பாக்காம வந்து தலைய மட்டும் காட்டிடுங்க. ஒம் ஆம்படையான் சமரசத்துக்கு நாம்ம தயார் இல்லங்தாலத்தாம் ஆஜர் ஆவாம இழுத்தடிக்கிறதா இங்கப் போட்டுப் பொளந்துக்கிட்டு இருக்காம். ஜட்ஜ் வேற அதெ நம்புறாப்புல தெரியுது. அதாலத்தாம் சொல்றேம் எப்படியாச்சும் வந்துப்புடுங்கோ! நெலமைய கொஞ்சமாச்சும் நமக்குச் சாதவம் பண்ணிக்கிடணும் இல்லியோ?"ன்னாரு வக்கீலு அங்க நெலவுற சூழ்நிலைய எடுத்துச் சொல்றாப்புல.

            என்னத்தெ சொல்றாங்றாரு போல சுப்பு வாத்தியாரு கேக்க, செய்யு சங்கதியச் சொன்னா. அதெ கேட்டுகிட்ட சுப்பு வாத்தியாரு போன எங்கிட்டுக் கொடுன்னு சட்டுன்னு வாங்கிப் பேசுனாரு.

            "யய்யா பொண்ணுக்கு ஒடம்பு முடியாமப் போயிடுத்து. ரோட்டோரமா மரத்தடியில உக்காந்துக் கெடக்கோம். மவ்வே காலச் சாப்பாடு சாப்புடல. மத்தியானச் சாப்பாடு சாப்புடப் போறாளான்னு தெரியல. வாந்தி வாந்தியா எடுத்துக் களைச்சிப் போயிக் கெடக்குறா. இவளே பத்திரமா வூடுக் கொண்டுப் போயிச் சேத்தா தேவலாம்ங்ற நெலையில இருக்கேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இங்க இருக்குற நெலமைய எடுத்துச் சொல்றாப்புல.

            "நாம்ம ஆஜராவாம போனா சமரசத்துக்கு எதுப்பா நாம்ம நிக்குறாப்புல ஆயிடும். அதெ பத்திக் கூட இங்க வந்து பேச வாண்டாம். வந்துட்டு மட்டும் தலையக் காட்டிட்டுப் போயிடுங்க! மித்ததெ நாம்ம பாத்துப்பேம்!"ன்னாரு வக்கீலு எப்படியாச்சும் செய்யுவ வர வைக்குற நோக்குல.

            "நாம்மத்தாம் சமரசத்துக்கு ஒத்து வாரலன்னு சொல்லியாச்சுல. அதெ அப்பிடியே சொல்லிப்புடுங்க. இன்னிக்கு மட்டும் ஒடம்பு முடியாம இருக்கறதால வாய்தவா வாங்குங்க. இன்னிக்கு ரண்டு கோர்ட்டா போனதால வர்ற முடியலயே தவுர ஒரே எடமா அஞ்ஞ மட்டும் யிருந்தா வந்துடுறதுதாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட ரண்டுங்கெட்டான் நெலமைய சொல்றாப்புல.

            "தீர்ப்ப எழுதப் போறவரு ஜட்ஜ் சார்! அவர்கிட்டெ போயி சமரசத்துக்கு நாம்ம தயாரா இல்லன்னு பொட்டுல அடிச்சாப்புல சொல்லிட முடியாது. அப்பிடி அதெ சொல்றதா இருந்தாலும் நாம்ம ஆஜர் ஆயி நெலமைய வெளக்கிச் சொல்லித்தாம் நம்மப் பக்கம் குத்தமில்லாததப் போல காட்டிச் சமரசத்த வெலக்கி விடணும்! அதனாலத்தாம் சொல்றேம் எப்படியாவது பாத்து வந்துப்புடுங்க. மிச்சத்தெ நாம்ம எப்பிடிக் கொண்டுப் போயிடுணுமோ அப்பிடிக் கொண்டுப் போயிக்கிறேம்ங்றேம்!"ன்னாரு வக்கீலு தன்னோட நெலமைய விட்டுக் கொடுக்காம.   

            "அழைச்சிட்டு வாரதப் பத்தி ஒண்ணுமில்ல. வாந்தி எடுத்தவள அஞ்ஞ அவ்ளோ தூரம் கொண்டாந்துக் கொண்டார்ற வழியில எஞ்ஞயாச்சும் மயக்கமடிச்சி வுழுந்தான்னா வெச்சுக்கோங்க, கார்ர எடுத்துகிட்டு வூட்டுல கொண்டாந்து சேக்குற அளவுக்குல்லாம் யிப்போ நம்மகிட்டெ காசியில்ல. இருக்குற காசிக்கு வண்டிக்குப் பெட்ரோல்லப் போட்டுப்புட்டு மொல்லமா வூட்டுக்குப் போயிடலாம்ன்னு பாக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட கையறு நெலைய காட்டுறாப்புல.

            "நீங்க இன்னிக்கு வர்றாமப் போறது எதிர் தரப்பு பக்கத்துல நெறைய சாதகங்கள உண்டு பண்ணும் சார்! வெறென்னத்த நாம்ம சொல்ல? அதெ புரிஞ்சிக்கிட மாட்டேங்றேள். இன்னிக்கு ஒரு நாளே இப்பிடின்னா வழக்கத் தொடர்ந்தா அஞ்சாறு வருஷம் அனுமாரு வாலப் போல இழுக்கும். அதெ எப்பிடி தாங்கப் போறீயளோ? நமக்குத் தெரியல!"ன்னாரு வக்கீலு.

            "யாருக்காச்சும் எதயாச்சும் சாதவத்தெ உண்டு பண்ணட்டும். நீஞ்ஞ சொல்றாப்புல அஞ்சாறு வருஷத்து இதெ எப்பிடித் தாங்கப் போறேம்ங்றது ஆண்டவனுக்கே வெளிச்சம். அதெப் பத்தியும் நாம்ம சொல்றதுக்கு யில்ல. ஆன்னா இன்னிக்கு மேக்கொண்டு வர்றாப்புல யில்ல. நம்ம நெனைப்புல்லாம் இன்னிய பத்தித்தாம் இருக்கு. நாளைய நாளைக்குப் பாத்துப்பேங்ற மாரி இருக்கு. இன்னிக்கு இன்னிய பொழுதுல வூடு சேர்றதுலயே நெனைப்பெல்லாம் இருக்கு. வேற எதுலயும் நெனைப்பு ஓட மாட்டேங்குது. தப்பா எடுத்துக்காதீங்க. இதுக்கு மேல அங்க வாரச் சொல்லிக் கட்டாயம் பண்ண வாணாம்! ஏன்னா நம்ம நெலமெ அப்பிடி இருக்கு. அதால ரொம்ப கட்டாயம் பண்ணக் கூடாதுங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இதுக்கு மேல இன்னிக்கு தன்னால ஓடியாட முடியாதுங்றதெ காட்டுறாப்புல.

            "இதுக்கு மேல ஒங்க இஷ்டம். ஒங்க முடிவு!"ன்னு சொல்லிட்டுப் பட்டுன்னு போன வெச்சிட்டாரு வக்கீல் திருநீலகண்டன்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...