ஐந்தாறு வருடங்களுக்குத் தயாராகிக் கொள்ளுங்கள்!
செய்யு - 660
சுப்பு வாத்தியாரோட போன கட் பண்ண ஒடனே
வக்கீல் திருநீலகண்டன் விகடுவுக்குப் போன அடிச்சாரு.
"திங்கக் கெழமெ சமசரம் இல்லன்னா நம்ம
வழக்கு கிராஸூக்குத் தயாராவுது. நாம்ம ஆப்போசிட் லாயர்ட்டெ பேசி அப்பிடில்லாம் வாணாம்ன்னு
சொல்லி வெச்சிருக்கேம். அப்பிடின்னா ஒண்ணு சமரசத்துக்கு வாங்க, இல்லாட்டி கிராஸ் பண்ண
வுடுங்கன்னு ஆப்போசிட் லாயர் துடியா துடிக்கிறாம். அவனெப் பத்தி ஒங்ககிட்டெ சொல்ல
வேண்டியதில்ல. இங்க சமரசம் பேசிக்கிட்டெ ஒங்க தங்கச்சிய மாமா வீட்டுக்கு நோட்டீஸ்ஸ
அனுப்பி வாங்க வெச்சவேம். ரொம்ப கிரிமினலா யோசிக்கக் கூடிய லாயர்ரா தெரியுறாம். அவனோட
குறுக்கு விசாரணைய ஒங்க தங்கச்சியால தாங்க முடியாது. நாம்ம ஒங்க தங்கச்சியிட்டயும்,
அப்பாகிட்டெயும் பேசிக்கிட்டேம். வழக்கத் தொடரலாம்ன்னு சொல்றாங்க. நீங்க ஒரு ஆசிரியர்.
பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குறவர். அதனால கடைசியா ஒங்ககிட்டெயும் ஒரு
வார்த்தையைச் சொல்லிக்கிறேம். இந்த வழக்கத் தொடர்றது நல்லதில்ல! நீங்கத்தாம் ஒங்க
தங்கச்சிக்கிட்டேயும், அப்பாகிட்டெயும் இதெப் பத்தி எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கணும்!"ன்னாரு
எடுத்த எடுப்புலயே வேற எதெப் பத்தியும் பேசாம நேரடியா விசயத்துக்கு வர்றாப்புல வக்கீல்
திருநீலகண்டன். கொறைந்தபட்சம் எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களான்னு சம்பிராயத்துக்குக்
கூட கேக்காம பொட்டுன்னு அடிச்சிப் பேசி நெலமையோட தீவிரத்தெ இந்த வகையில பேசி விகடுவுக்கு
உணர்த்த விரும்புனாரு வக்கீலு.
"எல்லாம் பேசிப் பாத்தாச்சுங்கய்யா!
அவ்வே நாம்ம முக்கியமா? பவுனு பணம் முக்கியமான்னு எதிரு கேள்வியக் கேக்குறா. யப்பாவுமே
நீஞ்ஞ சொல்றதெ அப்பிடியே சொல்லிப் பாத்தாச்சு. அதெ கேக்குறாப்புல யில்ல. வழக்கத்
தொடரணும்ன்னு ஆசெப் படுறாங்கய்யா! நீஞ்ஞத்தாம் பாத்து வழக்க தொடந்தாப்புல நடாத்தி
வுடணும்!"ன்னாம் விகடுவும் வக்கீல்கிட்டெ நேரடியாக வேற எதெப் பத்தியும் பேசாம
அவரு கேட்டதுக்குப் பட்டுன்னு ஒரு பதிலெ அடிச்சி வுடுறாப்புல.
"என்னவோ பொண்ணு ஆசெப்பட்டு கேக்குதுன்னு
குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிக் கொடுக்குறாப்புலல்ல பேசுறீங்க மிஸ்டர்
விகடு. ரொம்ப தப்பு. இதெல்லாம் வெளையாட்டுக் கெடையாது. ஒங்களுக்கும் நாம்ம சொல்றதோட
சீரியஸ்நெஸ் புரியலன்னு நெனைக்குறேம்!"ன்னாரு வக்கீலு விகடு ஏதோ சின்னபுள்ளெ தனமா
பேசுறாப்புல.
அதுக்கு விகடு பதிலச் சொல்லாம போன அப்பிடியே
அமைதியா வெச்சிருந்ததால, வக்கீலே தொடந்தாப்புல பேசுனாரு, "இந்த வழக்கத் தொடந்தா
அதெ முடிக்கிறதுக்கு அஞ்சாறு வருஷமாவது ஆவும். அப்பிடி முடிஞ்சாலும் அத்தோட முடியப்
போறதில்ல. மேல் அப்பீல்ன்னு அடுத்தக் கட்டமா மேல் கோர்ட்டுல இங்கேயே சுத்திக்கிட்டு,
அது முடிஞ்சா ஹை கோர்ட்டுல சுத்திக்கிட்டு, அதுக்கும் பெறவு சுப்ரீம் கோர்ட்டுக்குப்
போனத்தாம் முடிவு. அதுக்குள்ள ஒங்க தங்கச்சி கெழவியாப் போயிடுவா. வருஷங்க போயிடும்.
வாழ்க்கைப் போயிடும். தயவுபண்ணிப் புரிஞ்சிக்கோங்க! ஒங்க தங்கச்சி விசயம் தெரியாம
பேசுறான்னா அவளெ நாம்ம குறை சொல்ல மாட்டேம். விசயம் தெரிஞ்சும் நீங்கப் பாட்டுக்கு
அவ்வே போக்குக்கு ஒத்து ஊதுறீங்க பாருங்க. அதெத்தாம் குறை சொல்லுவேம்!"ன்னாரு
வக்கீலு விகடு பேசுறதுல இருக்குற தப்பெ சுட்டிக் காட்டுறாப்புல.
"எஞ்ஞள என்னத்தாம் பண்ணச் சொல்லுதீயே?
சொல்லிப் பாத்தாச்சு. நாஞ்ஞ அவ்வே மேல வெச்சிருக்குற பாசத்தெ வுட பணத்தெ பெரிசா நெனைக்குறாப்புல
பேசுறா. இந்த வழக்க நடத்தலன்னா பைத்தியமா போயிடுவேங்ற மாதிரிக்கி நிக்குறா. நாஞ்ஞ
என்னத்தெ பண்ண?"ன்னாம் விகடு தங்களோட நெலமையச் சுட்டிக் காட்டுறாப்புல.
"செல்லம் கொடுக்க வேண்டியதுதாம்.
அதுவும் பொம்பளைப் புள்ளைங்க அதெ ரொம்பவே எதிர்பாக்கும். நாம்ம அதெ வாணாம்ன்னு சொல்லல.
ஆன்னா ஓவர்ரா கொடுக்குற செல்லத்த நாம்ம ஏத்துக்க மாட்டேம். நீங்கல்லாம் சேந்துகிட்டு
ஒங்க தங்கச்சிக்குக் கொடுக்குறது ஓவர் செல்லம். அதெத்தாம் வாணாம்ன்னு சொல்றேம். இந்த
வழக்க முடிச்சிக்கிட்டு ஒங்க செல்லத்தையெல்லாம் இன்னொரு நல்ல கலியாணத்தப் பண்ணி வைக்குறதுல
காட்டுங்கங்றேம்! இந்தச் சந்தர்ப்பத்த விட்டீங்கன்னா ஒங்களுக்க வந்து சேர வேண்டிய பணம்காசு,
நகை, சீர் சனத்தின்னு எதையும் வரும்ன்னு மட்டும் தயவு பண்ணி எந்தக் காலத்துலயும் எதிர்பாக்காதீங்க?"ன்னாரு
வக்கீலு முடிவா எச்சரிக்குறாப்புல.
அதெ கேக்க கேக்க விகடுவுக்கு மனசுல ஆத்திரம்
பொத்துக்கிட்டு வர்ற ஆரம்பிச்சிது. வக்கீலு நம்ம ஆளா, யில்ல எதிர்தரப்பு ஆளா? நம்மள
இப்பிடி போட்டு பயமுறுத்துறாரேங்ற வேகம் விகடுவுக்கு உச்சி மண்டெ வரைக்கும் சுர்ருன்னு
ஏறுச்சு. உணர்ச்சிக் கொந்தளிப்புல அவ்வேம் பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சாம். "யாருய்யா
செல்லம் கொடுக்குறா? இன்னிக்கு எந் தங்காச்சி உசுரோட இருக்குறதால இதெ பேச முடியுது.
அன்னிக்கு தொங்க நெனைச்சவே அப்பிடியே போயிருந்தா இன்னிக்கு எந் தங்காச்சியும் யில்ல.
இந்த வழக்கும் யில்ல. ஒஞ்ஞள நாஞ்ஞ சந்திக்கப் போறதும் யில்ல. யிப்போ நீஞ்ஞ அதெப்
பத்திப் பேசப் போறதும் யில்ல. அவளெ காப்பாத்தி வெச்சிருக்கோம். ஒருவேள அன்னிக்கே
அவ்வேப் போயிச் சேந்திருந்தா அம்புட்டுப் பணங்காசியையும், நகெ நட்டையும், சீரு சனத்தியையும்
ஆட்டையப் போட்டுப்புட்டுத்தாம் அந்தப் பயலுவோ போயிருப்பானுவோ. எஞ்ஞகிட்டெ ன்னா
ஆதாரம் இருக்கு தங்காச்சிப் போயிச் சேந்திருந்தா. இன்னிக்காவது உசுரோட ஆதாரம் இருக்கு
இம்மாம் செஞ்சிருக்கோம்ன்னு எந் தங்காச்சியோட உசுரு வடிவத்துல. நாஞ்ஞ அப்பிடித்தாம்
நெனைச்சிக்கிறேம். அவ்வேம் அன்னிக்குப் போயிச் சேந்திருந்தா எல்லாமும் போயிச் சேந்திருக்கும்ன்னு.
இன்னிக்கு உசுரோட இருக்குறவாசித்தானங்கய்யா நாம்ம அதெப் பத்திப் பேசிட்டு இருக்குறேம்.
எந் தங்காச்சி உசுரையும், அவளோட மனசையும் தவுர நமக்கு வேறெதுவும் முக்கியமில்ல. அந்தப்
பயலுவோ பணங்காசிய, நகெ நட்ட கொடுத்தாலும் சரித்தாம், கொடுக்காட்டியும் சரித்தாம்.
அத்துப் பெரச்சனையில்ல. இந்த வழக்குல தோத்தாலும் செரித்தாம் செயிச்சாலும் சரித்தாம்.
அத்துவும் முக்கியிமில்ல. அவளோட மனசுக்கு இந்த வழக்க நடத்திப் பாக்கணும்ன்னு ஆசெப்படுறா.
அதெ நடத்தி வுடுங்க. மனுஷங்றவேம் பொறக்குறது ஒரு மொறைத்தாம். இன்னொரு பொறப்புலயல்லாம்
நமக்கு நம்பிக்கெ கெடையாது. இந்தப் பொறப்புல வைராக்கியமா செய்ய நெனைக்கறதெ செஞ்சிப்
புடணும். அவ்வே வைராக்கியமா நிக்குறா வழக்க நடத்தணும்ன்னு. ஒஞ்ஞளால முடியும்ன்னா சொல்லுங்க.
முடியாட்டியும் நாஞ்ஞ இதுக்கேத்தாப்புல நடத்துறாப்புல வேற வக்கீல வாணாலும் பாத்துக்கிறேம்!"ன்னு.
விகடு திடுதிப்புன்னு இப்படிப் பேசுவான்னு
வக்கீலு எதிர்பாத்திருக்க மாட்டாரு போல. அதெ கேட்டதும் வக்கீல் திருநீலகண்டன் கொஞ்சம்
எறங்கி வந்தாப்புல பேச ஆரம்பிச்சாரு. "நீங்க பேசுறது பாசத்துல. நாம்ம பேசுறது
எதார்த்தத்துல. ஒங்களுக்கு இப்போ இருக்குற நெலையில இந்த எதார்த்தம் புரியாது. ஆன்னா
நமக்கு ஒங்களோட பாசம் புரியும். நமக்கொண்ணும் வழக்க நடத்துறதுல எந்தக் கஷ்டமும் இல்ல.
அதெ அஞ்சாறு வருஷத்துக்குத் தாங்க முடியுமாங்றதெ இப்பவே கேட்டுக்கணும் இல்லியா? நாளைக்கு
வந்து நின்னு என்னங்கய்யா வழக்குப் பாட்டுக்கு ஜவ்வு மாதிரிக்கி இழுத்துக்கிட்டெ போவுதுன்னு
சொல்லப்படாது. நெறையப் பேரு இப்போ இப்பிடி ஒண்ண பேசிக்கிட்டு நாளைக்கி வந்து அப்பிடி ஒண்ண பேசியிருக்காங்க. நம்மளோட அனுபவத்துல நாம்ம
அதெப் பாத்திருக்கேம். அதெ வெச்சித்தாம் சொல்றேம். மத்தபடி ஒரு வக்கீலுக்கு கேஸ்தானுங்க
வேணும். நாமல்லாம் சாவுற அன்னிக்கு வரைக்கும் கேஸ்ஸ நடத்திட்டு இருக்க ஆசைப்படுற ஆளு.
கேஸ்ஸ எடுத்து நடத்த அஞ்சுற ஆளு கெடையாது. அப்பிடி ஒரு நெனைப்பு ஒங்களுக்கு இருந்தா
அதெ மாத்திக்குங்க. ஏன்னா போவுற உசுரும் கோர்ட்லயே வழக்க நடத்திக்கிட்டு இருக்கறப்பவே
போவணும்ன்னு நெனைக்குற ஆளு நாம்ம. இந்த புரபஷன்ன அந்த அளவுக்கு நேசிச்சு வந்திருக்குற
ஆளு. தயவுபண்ணி அதெயும் புரிஞ்சிக்கோங்க! ஒங்க கேஸ்ஸ அஞ்சாறு வருஷம் என்னா நூறு வருஷமான்னாலும்
நடத்திக்கிட்டெ இருப்பேம்! ஒரு வக்கீல்கிட்டெ இப்டில்லாம் பேசக் கூடாது நீங்க!"ன்னாரு
வக்கீலு விகடு தன்னெப் பத்திப் புரிஞ்சிக்கிட்டதெ திருத்துறாப்புல.
"ஒஞ்ஞப் பக்கமிருந்து நீஞ்ஞ சொல்ல
வேண்டியதெ அத்தனையும் சொல்லிப்புட்டீங்க. அதால நாமளும் சொல்றேம். இத்து எஞ்ஞப் பக்கமிருந்து
நாஞ்ஞ எடுக்குற முடிவுத்தாம். இந்த முடிவுக்கான அத்தனையும் அத்து நல்லதோ கெட்டதோ
முழுக்க எஞ்ஞளச் சாந்ததுதாம். அதுக்கு நாஞ்ஞ பொறுப்பேத்துக்கிடுறோம். நாளைக்கி ஒஞ்ஞகிட்டெ
வந்து இழுத்தடிக்கிறதாவோ, வருஷங்கப் போறதாவோ எந்தக் கொறையையும் சொல்ல மாட்டேம்.
இதுக்கான்ன அத்தனைக்கு நாஞ்ஞ முழு பொறுப்பையும் ஏத்துக்கிறேம். இது சத்தியம். நீஞ்ஞளும்
இனுமே ச்சும்மா கோர்ட்டுல வழக்க நடத்த வாணாம். ஒவ்வொண்ணுக்கும் வந்து ஆஜரு ஆவறதுக்கு
எம்மாம்ன்னு சொல்லிப்புடுங்க. கையோடு கொடுத்துப்புடுறேம். அதுதாங் இனுமே நல்லது!"ன்னாம்
விகடு அடுத்த அடிய எடுத்து வைக்குறாப்புல.
"அப்பிடில்லாம் நெனைச்சு நாம்ம பழகல
பிரதர். நீங்க நம்மளத் தப்பா நெனைச்சிட்டீங்க. இந்த வழக்க முடிச்சி அது மூலமா பணத்தப்
பாக்க நெனைக்கிறதா நெனைக்குறீங்கன்னு நெனைக்குறேம். நிச்சயமா கெடையாது. நாம்ம ஏன் இப்படிப்
பேசுனோங்றதெ நாள்பட்டு உணர்வீங்க. அந்த நாளு வர்ற வரைக்கும் இதப் பத்தி இனுமே நாம்ம
பேசுறாப்புல இல்ல. சில விசயங்களுக்கு நம்மள வுட காலந்தாம் நல்ல பதிலெ சொல்லும். காலம்
அதெ ஒங்களுக்குச் சொல்றப்பவே சொல்லட்டும். இனுமே நாம்ம எதையும் சொல்ல விரும்பல. பட்
ஒன் திங் பாருங்கோ! திருவாரூர் கோர்ட்டுல ஆஜராவுறதுன்னா இருநூறு, மன்னார்குடி, நாகப்பட்டிணும்ன்னா
நானூறு, குறுக்கு விசாரணைன்னா ஆயிரம்ன்னு வாங்குறதுன்னு நாம்ம பிக்ஸ் பண்ணி வெச்சிருக்கேம்.
இதுப்படி நாம்ம யாருகிட்டெயும் வாங்குனது கெடையாது. கேக்குறதும் கெடையாது. அவுங்களா
கொடுக்குற அம்பது, நூறையோ வாங்கிக்கிறதுதாம். ஏன்னா நாமளும் ஆபீஸ்ஸப் போட்டு வாடவெ
கொடுக்குறேம், கரண்ட் பில்ல கட்டுறேம். பெட்ரோல்லப் போட்டுக்கிட்டுத்தாம் டூவீலர்ல
வர்றேம். ஆத்துல இருக்குற வயிறுகளுக்கு கடையில அரிசி வாங்கித்தாம் உசுரை நிப்பாட்டி
வைத்திருக்கிறேம். அதுக்காகத்தாம் அந்தப் பணத்தெ வாங்குறதும்! நம்மள தப்பாவோ, குத்தமாவோ
நெனைச்சிடாதீங்க!"ன்னாரு வக்கீலும் தாம் எதுக்கும் தயாரா இருக்குறாப்புல.
"செரித்தாம்ங்கய்யா. ஒஞ்ஞள நாம்ம
ஒண்ணும் குத்தமே சொல்லல. ஒஞ்ஞ தொழில நீஞ்ஞ செய்யுறீங்க. அதுக்கான கூலி என்னவோ அதெ
நாஞ்ஞ கொடுத்துப்புடுறதுதாம் மொறெ. நீஞ்ஞ சொன்னபடியே இனுமே கொடுக்க வேண்டியதெ கொடுத்துப்புறேம்.
வழக்குல எந்தத் தொய்வும் யில்லாம கொண்டுப் போவ வேண்டியது இனுமே ஒங்களோடபொறுப்பு.
அதுக்குண்டான காசிய நேரா நேரத்துக்குக் கொடுத்துப்புட வேண்டியது இனுமே எஞ்ஞ பொறுப்பு.ஒருவேள
அன்னிக்கே கொடுக்க முடியாட்டியும் அடுத்தடுத்தாப்புல சந்திக்கிறப்போ சேத்து வெச்சி
நிச்சயம் கொடுத்துப்புடுவேம். காசி மட்டும் வராம போயிடும்ன்னு நெனைச்சிட வாணாம்!"ன்னாம்
விகடு ரொம்ப உறுதியா வாக்குக் கொடுத்துப் பேசுறாப்புல.
"நீங்க ரொம்ப தப்புத் தப்பா நெனைச்சிப்
பேசிட்டுப் போறீங்க பிரதர். அப்படில்லாம் நெனைக்கவே வாணாம். நீங்க பணமே கொடுக்காட்டியும்
இந்த வழக்க நாம்ம நடத்துறேம். எத்தனையோ வழக்க அப்பிடி நடத்திக் கொடுத்திருக்கிறேம்.
அதுல இதுவும் ஒரு வழக்கா இருந்துட்டுப் போவுது. ஆன்னா தயவு பண்ணி நீங்க நம்மளப் பத்தி
மனசுல நெனைச்சிக்கிட்டு இருக்கீங்கப் பாருங்க பணத்துக்காக வழக்கெ நடத்துறதெப் போல.
அப்படி மட்டும் தயவுபண்ணி நெனைக்காதீங்க!"ன்னாரு வக்கீலு ரொம்ப உருக்கம் காட்டுறாப்புல.
"நாஞ்ஞளும் பணத்தெ கொடுக்காம வழக்க
நடத்துறாப்புல யில்ல. எம்மாம் கொடுக்கணுமோ அதெ கொடுத்தே நடத்திப்புடுறேம். ஒஞ்ஞளுக்குக்
கொடுக்கக் கூடாதுங்றதுல்லாம் எஞ்ஞ நோக்கமில்லங்கய்யா. எல்லாம் யில்லாத கொறைத்தாம்.
இருந்ததெயெல்லாம் ஒரு கொள்ளைக்காரப் பயலுன்னு தெரியாம அவ்வேங்கிட்டெ கொண்டுப் போயிக்
கொட்டிப்புட்டு, அதுக்குச் சேத்து வட்டியக் கட்டிட்டு இருக்கிறேம். தங்காச்சி நல்ல
வெதமா வாழ்ந்திருந்தா அதெ சந்தோஷமா கட்டிக்கிட்டு இன்னும் கடனெ ஒடனே வாங்கி செஞ்சிக்கிட்டுத்தாம்
இருப்பேம். யிப்போ நல்லா வாழாம வந்து நிக்குறதால அந்த வேதனெயும் நொம்பலமும் வேற. அதுல
அந்தக் கடனுக்கான வட்டிய எல்லாம் கொஞ்சம் மனசு சங்கடப்பட்டுத்தாம் கட்டிட்டிருக்கேம்.
வேறொண்ணுமில்ல. அந்தப் பயலுவோ வேணும்ன்னா எஞ்ஞகிட்டெ வாங்குனதெ வாங்கிக்கிட்டு யில்லன்னு
சொல்லலாம். நாம்ம அப்பிடியில்லங்கய்யா. வாங்குன கடனுக்கு பைசா பாக்கியில்லாம்ம மாசம்
பொறந்தா வட்டியக் கட்டிட்டுத்தாம் இருக்கேம். எஞ்ஞ தங்காச்சி கலியாணத்துக்குன்னு எஞ்ஞல்லாம்
பணத்தெ வாங்குனோமோ அஞ்ஞயெல்லாம் யாரையும் ஏமாத்தாம மொறையா வூடு தேடிப் போயிக் கட்டிக்கிட்டும்,
கொடுத்துக்கிட்டுத்தாம்யா இருக்கேம் இன்னமும்! இனுமேலும் அப்பிடித்தாம் இருப்பேம்!
அதுல மாத்தம் உண்டாவப் போறது கெடையாது!"ன்னாம் விகடு தாம் உணர்ச்சிவசப்பட்டுப்
பேசுறதுக்கான காரணத்தெ வௌக்குறாப்புல.
"ஆஸ் எ லாயர்ரா இந்த வழக்கோட ஆப்போசிட்
சைடையும் ஒங்ககிட்டெ காட்ட வேண்டியது நம்மளோட கடமையும் பொறுப்பும். அதுக்காத்தாம்
நாம்ம அப்பிடிப் பேச வேண்டியதாப் போச்சு. அதெ எதையும் மனசுல வெச்சிக்கிட வாணாம். இருந்தாலும்
மறுபடியும் சொல்றேன்னு எதுவும் நெனைச்சிக்காதீங்க. திங்கக் கெழம வரைக்கும் நேரம் நிறைய
இருக்கும். இன்னும் நல்லாவே யோசனையப் பண்ணுங்க. நல்லாவே கலந்துக்குங்க. திங்கக் கெழம
கோர்ட்டுக்கு வந்து விசாரணை தொடங்குற அந்த நொடி வரைக்கும ஒங்களுக்கு நேரம் இருக்கு.
அந்த நேரத்துல கூட முடிவெ மாத்திக்கிடலாம். அதுக்கு மேல ஒங்கள யாரையும் நாம்ம கட்டாயப்படுத்த
மாட்டேம். ஒரு வழக்க எப்படிக் கொண்டுட்டுப் போவணுங்றதுதாம் லாயரோட டிசிசன். மத்தபடி
வழக்க தொடர்ந்து நடத்தணுமா, முடிச்சிக்கணுமாங்றது கிளையண்டோட டிசிசன்தான். ஆஸ் பார்
யுவர் டிசிசன் நாம்ம இந்த வழக்க நடத்துறோம் அல்லது முடிச்சிக்கிறேம். பட் இந்த வழக்கெ
தொடர்ந்து நடத்துறதுங்கறது நல்லதில்ல. அதால அப்படி ஒரு முடிவுன்னா அதுல நமக்குக் கொஞ்சம்
கூட உடன்பாடில்லங்றதெ பிரதர் கோவிச்சுக்கக் கூடாது, மறுபடியும் ஒரு மொறைச் சொல்லிக்கிறேம்!"ன்னாரு
வக்கீலு மறுக்கா ஒரு மொறெ கடெசீயா எச்சரிக்கெ கொடுக்குறாப்புல.
"நாஞ்ஞளும் வழக்க நடத்தச் சொல்லி
ஒஞ்ஞகிட்ட பிடிவாதமா நிக்குறதா நெனைச்சிப்புடக் கூடாது!"ன்னாம் விகடுவும் தன்னோட
நெலையா கட்டெ கடெசீயா சொல்றாப்புல.
"அய்யய்யோ அப்பிடியெல்லாம் நினைக்குறதுக்கு
இதுல எதுவுமே இல்ல. ஒரு வழக்க நடத்தி முடிச்சி தீர்ப்ப வாங்குறதுதாம் வக்கீலோட பிரபஷனல்
வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. அந்த திசையிலத்தாம் நீங்க இப்போ நம்மள நவுத்துறீங்க.
ரொம்ப சந்தோஷம். ஆன்னா எங்களுக்கு சட்டம் சொல்லிக் கொடுத்த சீனியர் லாயர்ஸ் என்ன
சொல்லிருக்கிறாங்கன்னா, வழக்குன்ன வந்து நிக்குறவங்களோட நல்லதுக்கு ஏத்தாப்புல வழக்க
நடத்துங்க, அவுங்களுக்கு இந்த வழக்க நடத்துறது நல்லதில்லன்னா அந்த வழக்க நடத்தாதீங்க,
ஏன்னா வழக்குக்கு வர்ற மனுஷங்கத்தாம் முக்கியமே தவிர, வழக்கு முக்கியம் கெடையாது, மனுஷங்களுக்காகத்தாம்
வழக்கு, வழக்குக்காக மனுஷங்க கெடையாதுன்னு சொல்லிருக்காங்க. அதுப்படித்தாம் நாம்ம
ஒங்ககிட்டெ பேசுனேம். எப்போ இந்த வழக்க தொடந்தாப்புல எடுத்து நடத்துங்கன்னு நீங்களே
சொல்லிட்டீங்களோ, அதுக்கு மேல இதுல நாங்க எங்க சீனியர் லாயர்ஸ் சொன்னதெ எதுவும்
மீறலன்னுத்தாம் நெனைக்கிறேம்!"ன்னாரு வக்கீலு இடையில இடைவெளி எதுவும் கொடுக்காம
அழுத்தம் திருத்தமா ஒரே மூச்சுல அத்தனையையும் சொல்லி முடிக்குறாப்புல.
"இந்த வழக்க நல்ல நெலையில முடிக்கிறேம்ன்னு
நீஞ்ஞ சொல்றதெ, நாஞ்ஞத்தாம் கட்டாயம் பண்ணி முடிக்க வாணாம்ன்னு அழுத்தம் பண்ணி நடத்தச்
சொல்றேம். அத்து எஞ்ஞளுக்கு நல்லாவே தெரியுது, புரியுது. அதால இந்த வழக்கால வர்ற குத்தம்
எதுவும் ஒஞ்ஞளச் சாரவே சாராது. அது முழுக்க எஞ்ஞளத்தாம் சாரும்!"ன்னாம் விகடுவும்
வக்கீலுக்கான பதிலெ ஒரே மூச்சுல சொல்லி முடிக்குறாப்புல.
"தேங்க்ஸ் பிரதர்! அப்பிடின்னா வழக்குக்குத்
தகுந்தாப்புல நீங்களும் சரித்தாம், ஒங்க தங்கச்சியும் சரித்தாம், ஒங்க குடும்பமும்
சரித்தாம் இன்னும் கொறைச்சலா அஞ்சு வருஷத்துக்குத் தயார் ஆயிடுங்க! வழக்கு பல கரடு
முரடான பாதைகள்ல போவும். சில சிரமங்கள, அசௌகரியங்கள சந்திக்க வேண்டியிருக்கும். சில
நேரங்கள்ல சந்தோஷமாவும், பல நேரங்கள்ல மன உளைச்சலாவும் இருக்கும். எல்லாத்துக்கும்
தயாராவே இருந்துக்குங்க. இதெ பயமுறுத்துறதா நெனைச்சிடாதீங்க. இதுதாம் எதார்த்தம்! தட்ஸ்
ஆல்! நாம்ம சொல்ல வேண்டியது அவ்வளவுதான். சொல்லிட்டேம்!"ன்னு சொல்லிப்புட்டு
விகடுகிட்டெ வேற எதையும் எதிர்பாக்காம போன பட்டுன்னு வெச்சிட்டாரு வக்கீல் திருநீலகண்டன்.
இனுமெ செய்யு விசயத்துல எந்த ஒரு வழக்கையும் தொடர்றது நல்லதில்லன்னு வக்கீல் நெனைக்குறது
நல்லாவே புரிஞ்சது விகடுவுக்கு.
*****
No comments:
Post a Comment