18 Dec 2020

ஒட்டவும் வெட்டவும் ஒரே நேரத்தில் வேலை பார்ப்பவன்!

ஒட்டவும் வெட்டவும் ஒரே நேரத்தில் வேலை பார்ப்பவன்!

செய்யு - 659

            நாம்ம ஒண்ணு நெனைச்சா தெய்வம் வேறொண்ண நெனைக்கும்பாங்க. பாலாமணியும் அப்பிடித்தாம். நாம்ம ஒண்ண நெனைச்சா பாலாமணி வேறொண்ண நெனைப்பாம். இன்னதுதாம் பாலாமணி செய்வாம்ன்னு நெனைச்சு அவனெப் பத்தி யூசிச்சுப் புரிஞ்சிக்கிடலாம்னு நெனைச்சிட முடியாது. பலவெதமா யோஜனெ பண்ணி அத்தனெ வெதமாவும் நடக்குறதுல அவ்வேம் கில்லாடி.

            பொதுவா பாலாமணி லேசுல நம்பிக்கெ படுற ஆளு கெடையாது. நெலமெ எப்படி ஆனாலும் எல்லா வழிகள்லயும் நடவெடிக்கைய முங்கூட்டியே எடுத்து வைக்குற ஆளு. அவனுக்குத் தெரியாத வழியில போயி அவனெ ஜெயிச்சிப்புடலாம்ன்னு நெனைச்சிட முடியாது. ஏன்னா அவ்வேமுக்குத் தெரியாத வழிங்றதெ இல்லன்னு சொல்லலாம். எதிர்ல் இருக்குறவேம் மனசுல நெனைக்குறதுக்குள்ள அந்த வழியில்ல போயிருப்பாம் பாலாமணி. வழக்கெ முடிக்கிறதுக்குன்னு அத்தனெ வேலைகளையும் பாலாமணி பண்ணிருந்தாலும், அதுக்கு நேர்மாறா போனா என்னா பண்ணுறதுங்றதையும் அவ்வேம் யோஜனெ பண்ணிருந்தாம். ஒருவேள செய்யு சமாதானத்துக்கு வர்றாம வழக்கத் தொடர்ந்தா அதெ எதிர்கொள்ளணுமேன்னு அதுக்கும் சேத்து முங்கூட்டியே யோஜனைய பண்ணி ஆர்குடி சப்கோர்ட்டுல செய்யுவோட சேர்ந்து வாழணும்ன்னு இந்துத் திருமணச் சட்ட ஒப்பந்தப்படி ஹெச்.எம்.ஓ.பி. வழக்கு ஒண்ணுத்தெ அண்மையில போட்டிருந்தாம். திருவாரூரு பீஸ் கோர்ட்டுல பணத்தெ நகெயெ இன்ன அளவுக்குக் கொடுத்துட்டுப் பிரிஞ்சிப் போறோம்ன்னு சொன்னவேம், ஆர்குடி சப் கோர்ட்டுல பொண்டோட்டியோட தன்னெ சேத்து வாழ வையுங்கன்னு இப்படி ஒரு வழக்கையும் போட்டு வெச்சிருந்தாம். திருவாரூரு பீஸ் கோர்ட்டுல பேசி பிரியுறது முடிவான்னா பாலாமணி ஆர்குடியில போட்டிருக்குற இந்த வழக்கோடு செய்யு போட்டிருக்குற அத்தனெ வழக்குகளும் தானா அடிபட்டுடும். ஒருவேள பீஸ் கோர்ட்டுல ஒரு முடிவுக்கு வர்றாம செய்யு தாம் போட்ட வழக்குகள தொடர்ந்தா தனக்கு இந்த ஹெச்.எம்.ஓ.பி. வழக்கு ரொம்ப ஒதவியா இருக்கும்ன்னு பாலாமணி நெனைச்சாம். இந்த சேந்து வாழணும்ன்னு அவ்வேம் போட்டிருக்குற வழக்கெ வெச்சு ஜீவனாம்ச வழக்குல ஆஜராவுறப்போ நாம்ம சேந்து வாழ தயாரா இருக்ககேம்ன்னு சொல்லி ஏம் ஜீவனாம்சம் கொடுக்கணும்ன்னு எதிர் கேள்வி கேக்கலாம். வன்கொடுமெ வழக்குல ஆஜராவறப்போ சேந்து வாழ தயாரா இருக்குற இந்த வழக்கக் காரணம் காட்டி அதுலேந்து தப்பிக்கவும் வழக்கெ தாமதிக்கவும் முயற்சி பண்ணலாம்.

பாலாமணி போட்டிருந்த ஹெச்.எம்.ஓ.பி. வழக்கோட சம்மன செய்யுவுக்கு வழங்க கோர்ட்டுலேந்து நேரடியாவே ஆள அனுப்பிச்சிருந்தாங்க. அந்தச் சம்மன் எப்போது வாரதுன்னா இப்பத்தாம் நேத்திக்கு ராத்திரி சுப்பு வாத்தியாரும் செய்யுவும் கைப்புள்ளையும் விகடுவும் பேசி முடிச்ச மறுநாளு காலங்காத்தால வருது. ஆர்குடி கோர்ட்டுல பாலாமணி போட்டுருந்த ஹெச்.எம்.ஓ.பி. மனுவுக்கான சம்மன நேரடியா கொடுக்குறதுக்காக எடுத்துட்டு வந்தவங்க ஒரு பெண்மணி. பாக்குறதுக்கு ஒடிசலா குட்டையா இருந்தாங்க. இதெ கொடுத்துப்புட்டுச் சீக்கிரமாவே கோர்ட்டுக்குப் போவணும்ன்னு அவசரம் பண்ணாங்க. அந்தச் சம்மனப் பாத்ததும் செய்யுவுக்குக் கோவம் அதிகமாயிடுச்சு. பெரிய மனவருத்தம் உண்டாயிடுச்சு. மனசு படபடக்க ஆரம்பிச்சிடுச்சு. அந்தப் பெண்மணி இவளோட நெலமயப் புரிஞ்சிக்கிட்டவங்கப் போல இது மாதிரியான கேஸ்கள ஜீவனாம்சத்த கொடுக்காம இருக்குறதுக்காக ஆம்பளைங்க பொதுவா போடுறதா சொன்னாங்க கிட்டதட்ட செய்யுவோட வழக்கு முழுசும் தெரிஞ்சவங்கப் போல. செய்யுவுக்கு மனசு ரொம்பச் சங்கட்டம்மா இருந்ததால தன்னோட கதெயெ முழுக்கச் சொன்னா. அவுங்க கெளம்புற அவசரத்துல இருந்தாலும் அதெ பொறுமையா கெட்டவங்க கேஸ்ஸ இழுத்தடிக்கிறதுக்காக வழக்கமா இப்பிடி எதிர்தரப்புல பண்ணுவாங்கங்றதெ எடுத்துச் சொல்லி அவளோட மனசெ சமாதானம் பண்ணப் பாத்தாங்க.

            செய்யுவுக்கு மனசு ஆறுறாப்புல தெரியல. ஒண்ணும் கவலயோ, பயமோ வாணாம்ன்னு சொன்னவங்க, அவுங்களோட மவளெ புருஷன வுட்டுத் தனியாத்தாம் வாழ்ந்துகிட்டு இருக்கிறதாவும், அவுங்களோட மவளுக்கும் இப்பிடி ஒரு கேஸ்ஸூ நடந்துகிட்டு இருக்கிறதாவும் சொன்னாங்க. "சேர்ந்து வாழ விருப்பம் இருந்தா இருக்குன்னு சொல்லப் போறேம், யில்லயின்னா யில்லன்னு சொல்லப் போறேம். கோர்ட்டுலேந்து யாரும் பலவந்தம்லாம் பண்ண மாட்டாங்க. ன்னா இதெ வெச்சி ஜீவனாம்ச வழக்கு நடந்துகிட்டு இருந்தா அதெ தாமசம் பண்ணலாம். மித்தபடி ஜீவனாம்சம் கொடுக்க முடியாதுன்னும் சொல்லிட முடியாது. இந்த வழக்குக்கு வக்கீலு வாணாலும் நாமளே பாத்து வுடுறேம். அவருக்கு ஏதோ ஒன்னால முடிஞ்சதெ கொடு. முடியாட்டியும் பரவாயில்ல. கேஸ்ஸப் பாத்துப்பாரு. அவரு வர்றச் சொல்றப்ப மட்டும் கோர்ட்டுக்கு வந்ட்டுப் போ. ஒண்ணுத்துக்கும் தெகைச்சிப் போயிப் பயப்பட வாணாம்!"ன்னாங்க அந்த பெண்மணி. அதுக்கு மேல அவுங்களுக்கு நேரம் அதிகமாயிட்டே போனதால ஆர்குடி கோர்ட்டுக்கு வர்றப்போ வந்து பாக்கச் சொல்லிட்டுப் போயிட்டாங்க.

            இப்பவே ரண்டு கேஸ்ஸப் போட்டுட்டு அலையோ அலைன்னு அலையுறது போதல. இதுல இன்னொரு கேஸ்னுன்னா அதுக்கும் சேத்து அலையுறதெ நெனைக்குறப்ப செய்யுவுக்குக் கொஞ்சம் மலைப்பாத்தாம் இருந்துச்சு. வாழ்நாளு முழுக்கவும் கோர்ட்டு கேஸூன்னு அலைஞ்சி அதுக்கே நேரம் சரியாப் போயிடுமான்னு ஒரு சலிப்பு அவளோட மனசுக்குள்ள இப்போ உண்டாவ ஆரம்பிச்சிடுச்சு. காலேஜூக்குப் போயிட்டு இருக்குறதப் போல கோர்ட்டுக்கும் அலைஞ்சிக்கிட்டு ஒரே நேரத்துல கோர்ட்டையும், காலேஜையும் சமாளிக்கிறதும் செருமமாத்தாம் இருக்கு. இந்தக் கோர்ட்டாலயே முடிய வேண்டிய எம்பில் படிப்பு வேற இழுத்தடிச்சிக்கிட்டுப் போவுது. இதுல இப்பிடி கேஸூ மேல கேஸா போனா ஒரு ஆளால எத்தனெ எடத்துக்கு, எத்தனெ வழக்குக்க அலைய முடியும்? அதெ நேரத்துல கோர்ட்டுன்னு வந்தப் பெறவு அலையாம இருக்கவும் முடியாது. நேத்திக்கு எங்க அலையுறதா இருந்தாலும் வீராப்பா நாமளே அலையுறேம்ன்னு சொன்னதும் அவளோட மனசுல நெனைப்புக்கு வந்துப் போச்சு.

            பாலாமணி சமீப நாளாவே மருத்துவம் சம்பந்தமா படிக்குற புத்தகங்கள வுட்டுப்புட்டு சட்டம் சம்பந்தமா புத்தகங்கள அதிகமா படிக்கிறதா ரொம்ப வெளிப்படையா‍வே பீஸ் கோர்ட்டுல வெச்சி பேசுறப்ப ஜட்ஜூக்கு மின்னாடி ‍பெருமையா சொல்லிட்டு இருந்தாம். இப்பவே அவனோட லாயரு அவனுக்காக வாதாட முடியாதுன்னு போனாலும் தனக்குத் தானே வாதாடிக்க முடியும்ன்னும் ரொம்ப தெனாவெட்டாவும் சொன்னாம். இப்பிடி ஒரு மனுஷன் நாட்டுல இருப்பானா? டாக்கடருக்குன்னுப் படிச்சி டாக்கடராயி, பொண்டாட்டிக்கி எதுப்பா வழக்க நடத்தணும்ன்னு அதுக்காகச் சட்டத்தையும் படிச்சி வக்கீல் ஆயிட்டேன்னு சொல்ற ஒரு மனுஷன ஒலகத்துல எங்கப் பாக்க முடியும்?

            ஜட்ஜ் கூட அவனெக் கேட்டுப் பாத்தாரு, "இதுக்காக எல்லாம் சட்டப் புத்தகத்தெ நீங்கப் பொரட்டிட்டுக் கெடக்க வாணாம். ஒங்க முடிவு என்னான்னு சொன்னாவே போதும். அதுக்கேத்தாப்புல இங்க வக்கீலே இல்லாம எல்லாத்தையும் இந்த நொடியே முடிச்சிக்கிடலாம். அதுல தெளிவு இல்லாம நீங்கப் பாட்டுக்குப் புத்தகத்தெப் படிக்குறதுல என்னத்தெ புண்ணியம் இருக்கு? ரண்டு மருத்துவ புத்தகங்களப் படிச்சாலும் இன்னும் ரண்டு பேர்ர நல்ல வெதமா கொணம் பண்ணலாம். ஏம் இந்த வேலயத்த வேலயப் பாத்துட்டு கஷ்டப்படுறீங்க?"ன்னு.

            அதுக்கு அப்போ பாலாமணி சொன்ன பதிலு செய்யுவோட மனசுல அப்பிடியே சினிமாப் படம் ஓடுறாப்புல ஞாபவம் வந்துச்சு. பாலாமணி சொன்னாம், "நம்மள யாரும் எமாத்திட முடியாதுங்கய்யா. ஏமாத்திட எடத்தெ கொடுத்துட மாட்டேம். நம்ம வழக்குக்கு வாதாடுற வக்கீலு சரியாத்தாம் நோட்டீஸூ வுடுறானா? சரியாத்தாம் வாதாடுறானா? மொறையாத்தாம் குறுக்கு வெசாரணையப் பண்ணுறானான்னு நம்மாள சொல்லிட முடியும். நாம்ம யாரயும் நம்புறதில்ல. ஆன்னா இந்தப் பொண்ணோட நெலமெ அப்பிடியில்ல. அதுக்கு ஒலகம் தெரியல. அதெ யாரு வாணாலும் ஏமாத்தலாம். அவ்வேம் வக்கீலு ரொம்பச் சுலுவா அவளெ ஏமாத்திடுவாம். அதெ அவளால தெரிஞ்சிக்கவும் முடியாது. அதுக்காகத்தாம் சொல்றேம் ஒரு லாயர்ர வுட அதிகமாக குடும்பச் சட்டங்களப் பத்தி படிச்சி வெச்சிருக்கேம்ன்னு. அத்து தெரிஞ்ச வாசித்தாம் யிப்போ ஒஞ்ஞகிட்டெ பாய்ண்ட்டு பாய்ண்டா எடுத்து வெச்சி வாதம் பண்ண முடியுது!"ன்னு.

            அதெ கேட்ட ஜட்ஜ் சிரிச்சிக்கிட்டு அப்போ சொன்னாரு, "எதெ தெரிஞ்சி என்னத்தெ புண்ணியும். ஒங்களால ஒங்க ஒய்ப்ப வெச்சிக்கிட்டுச் சேந்து வாழ முடியலையே! இதையெல்லாம் நீங்கப் புத்தகத்துல படிச்சிட முடியாது! ரண்டு பேருமே படிச்ச நீங்க. படிச்ச நீங்கத்தாம் இப்பிடி கோர்ட்டு கேஸ்ன்னு பிரியுறதுக்காகவோ, சேர்றதுக்காவோ வந்து நிக்குதீங்க. படிக்காதவங்க எல்லாம் எவ்ளோ ஒத்துமையா இப்பிடில்லாம் வழக்கப் போடலாம், இன்னின்ன சட்டம்ல்லாம் இருக்குன்னு தெரியாமலேயே நல்ல வெதமாத்தான்னே வாழுறாங்க!"ன்னு நக்கலா. பாலாமணிக்கு அதுக்குத் தகுந்தப் பதிலச் சொல்ல முடியாமப் போயிடுச்சு.

            ஒரு பக்கம் பிரிஞ்சிப் போன்னு சொல்லி வாங்குன காசியில காக்காசு கூட தேறாத அளவுக்குப் பணத்தெ வாழ்நாளு ஜீவனாம்சமா கொடுக்குறதா சொல்ற பாலாமணி, இன்னொரு பக்கம் சேர்ந்து வாழ வான்னு கோர்ட்டுல கேஸ்ஸப் போட்டு அதுக்கான சம்மனயும் கொடுக்க வைக்கிறாம். ஒரு மனுஷன் ‍ஒரே நேரத்துல சாமியாராவும், குடும்பஸ்தனாவும் இருக்க ஆசைப்படுற மாதிரித்தாம் பாலாமணியோட செய்கைங்க எப்பவும் இருக்கும். அவனெ சம்பந்தப்பட்டவங்க தெளிவோட இருக்க முடியாத அளவுக்கு அவ்வேம் எப்போதும் எதிரும் புதிருமான ரண்டு வழியக் காட்டுறாம். அந்த ரண்டு வழியுமே போவ முடியாத அளவுக்கு தடங்கலா இருக்குது. இதெ எப்பிடிச் சொல்றதுன்னா, நல்லா தண்ணிப் போயிட்டு இருக்குற கொழாய பிடிச்சி ஓர் இடத்துல வெட்டுறவேம், வெட்டுன எடுத்தெ ஒட்டப் பாக்குறாம். ஒட்டிப்புட்டு இப்போ ஒட்டுன எடத்தெ வெட்டப் பாக்குறாம். உள்ள ஓடிட்டு இருக்குற தண்ணியோட நெலமத்தாம் பாவம். உள்ள ஓடுறதா? வெளியில ஓடுறதான்னு புரியாம வெட்டுறப்போ வெளியேயும், ஒட்டுறப்போ உள்ளேயும் கொழம்புனாப்புல ஓடிட்டு இருக்குது. கிட்டத்தட்ட செய்யுவோட மனநெலையும் அந்த தண்ணியோட நெலையிலத்தாம் இருந்துச்சு.

            இரவு வந்தா பகலு இருக்கிறதில்ல. பகலு வந்தா இரவு இருக்கிறதுல்ல. பாலாமணி ஒலகத்துல ஒரே நேரத்துல ரண்டும் ஒண்ணா பக்கத்துப் பக்கத்துலயே இருக்கு நெருப்பும் பனிக்கட்டியும் பக்கத்துப் பக்கத்துலயே இருக்குறாப்புல. கடவுளும் சாத்தானும் சேந்துகிட்டுக் கும்மாளம் அடிச்சா எப்பிடி இருக்குமோ அப்பிடித்தாம் இருக்கு அவனோட அடாவடிங்க ஒவ்வொண்ணும். அவனுக்கு மட்டும் ரண்டு கண்ணும் ரண்டு வெதமா பாக்குது. ரண்டு கண்ணும் சேர்ந்து ஒண்ணா பாக்குறதில்ல. வலது கண்ணுக்கு ஒரு காட்சியாவும், எடது கண்ணுக்கு ஒரு காட்சியாவும் பிரிஞ்சி ரண்டு காட்சி தோணுறது ஒலகத்துல பாலாமணி போல ஒரு சிலருக்குத்தாம் அதிசயமா வாய்க்குது. அப்பிடில்லாம் ஒருத்தன் பாக்க முடியுமா, அப்பிடில்லாம் ஒருத்தனால யோசிக்க முடியுமான்னு கேட்டா மனசுக்குள்ள சைக்கோத்தனம் மண்டிக் கெடக்குற ஒரு மனுஷனுக்கு அதெல்லாம் சாத்தியமாவத்தாம் செய்யுது.

             நேத்திக்கு இருந்த தெளிவு இப்போ ஹெச்.எம்.ஓ.பி வழக்கோட சம்மன பாத்ததுலேந்து செய்யுவுக்கு இல்ல. கொஞ்சம் தடுமாறியும் கொழம்பியும் அப்பிடியே படுத்துக் கெடந்தா. அதெப் பாத்துப்புட்டு சுப்பு வாத்தியாரு கூட கேட்டாரு, "யிப்பிடி ஒரு சம்மனுக்கே கெடக்குறவ்வே நாளைக்கிக் குறுக்கு வெசாரணைன்னா அதெ எப்பிடி எதிர்கொள்ளுவா?"ன்னு. அத்துச் செய்யுவோட காதுக்கு எப்பிடியே வுழுந்திருக்கும் போல. அவ்வே ஆக்ரோஷமா வெளியில வந்தா. அவளோட கையில ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘குறுக்கு விசாரணைய எதிர் கொள்வது எப்பிடி?’ங்றது அந்தப் புத்தகத்தோட தலைப்பு. நூலகம் போயி இதுக்குன்னே தேடி எடுத்து வந்திருப்பா போல. அதெ காட்டி படிச்சிக்கிட்டுத்தாம் படுத்துக் கெடக்குறதா சொன்னா செய்யு. என்னடா இத்து ஒரு முடிச்செ அவுக்கலாம்ன்னு பாத்தா இன்னொரு முடிச்சு வுழுவுதுன்னுத்தாம் அவ்வே மனசுக்குள்ள நெனைச்சா. தண்ணியிலேந்து மொதலைகிட்டெ தப்பிச்சு கரைக்கு வந்தா கரையில கரடிகிட்டெ மாட்டிக்குறாப்புல தோணுச்சு அவளோட நெலமெ அவளுக்கு.

            இது இப்படி இருக்குறப்பவே, அன்னிக்குச் சாயுங்காலமா வக்கீல் திருநீலகண்டன் செய்யுவுக்கும், சுப்பு வாத்தியாருக்கும் போன அடிச்சி நேத்திக்குப் பேசிட்டு வந்ததெப் பத்தி என்னா முடிவுங்றதெ அறியுறதுக்காகப் பேசுனாரு. அப்போ பீஸ் கோர்ட்டுலேந்து வழக்கு சிஜேம்முக்கு திங்க கெழம வர்றதாவும் அன்னிக்குக் கட்டாயமா வந்துப்புடணும்ன்னு சொன்னாரு. அப்போ செய்யு அதெ திங்க கெழமெ ஹெச்செம்ஓப்பி வழக்குல ஆஜராவச் சொல்லி ஆர்குடி சார்பு நீதிமன்றத்துலேந்து சம்மன் வந்திருக்குற சேதியைச் சொன்னா. அதுக்கு வக்கீலு அதெப் பத்தி பெரிசு பண்ணிக்கிடாத மாதிரி, "அதுக்கு ஆஜராயிட்டு நேரா திருவாரூருக்கு வந்துப்புடுங்க. நாம்ம அதுவரைக்கும் பாஸ் ஓவர் பண்ணி வைக்குறேம்! வர்றப்போ சமாதானமான ஒரு முடிவோட வாங்க. அதுதாம் நல்லது!"ன்னு சொன்னாரு.

செய்யு முடியவே முடியாதுன்னு அடிச்சிச் சொல்லி வழக்க நடத்தித்தாம் ஆவணும்ன்னு போன்லயே அழுத்தம் திருத்தமா சொன்னா. அதெ கேட்டு, போன சுப்பு வாத்தியார்கிட்டெ கொடுக்கச் சொல்லி பேசுனாரு வக்கீலு. சுப்பு வாத்தியாரு நேத்தி முழுக்க பொண்ணோட நடந்த பேச்சு சங்கதிக முழுசையும் சொல்லி அதுக்கு மேல பொண்ணோட முடிவுதாம்ன்னு சொல்லிப் பாத்தாரு.

            "பொண்ணு வெவரம் தெரியாமப் பேசுதுன்னா நீஞ்ஞத்தாம் எடுத்துச் சொல்லணும் சார்! அதுக்குத்தாம் நேத்திக்கி நாம்ம நான்சிய அழைச்சாந்து பேச வெச்சது. கேஸ்ஸூ முடிஞ்சிப் போவப் போற பொண்ண நிறுத்திக் கொண்டாந்து சொல்லச் சொன்னது இப்பிடி ஒரு பதிலெ ஒங்ககிட்டெ கேக்குறதுக்கில்ல!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் சுப்பு வாத்தியாரோட பதில விரும்பாததப் போல.

            "கொஞ்சம் அனுபவப்பட்டாத்தாம் திருந்தும் போலருக்கு. வூட்டுல எல்லாரும் சொல்லியாச்சு. அதுக்கு மேல பிடிவாதமா இருந்தா என்னத்தெ பண்ணச் சொல்லுதீயே? அந்தப் பயலுந்தாம் என்னவோ முழுசா கொடுக்குறாப்புல போலல்லா பேசுறாம். அள்ளிக் கொடுத்ததெ அப்பிடியே வாங்கிப்புட்டு இப்போ என்னவோ கிள்ளிக் கொடுக்குறதெ பெரிசா சொல்லில்லா வழக்குலேந்து வெலகலன்னா இதெயும் கொடுக்க மாட்டேங்றாம். போனது போச்சு. அதுல இத்துனோண்டு வந்துத்தாம் ஆவப் போவுதுப் போங்க. மொதலை வாயில பூந்ததெ வெளியில கொண்டாரது செருமந்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட நெலைப்பாட்ட காட்டுறாப்புல.

            "கொஞ்சமோ நஞ்சமோ சார்! அதெ சம்பாதிக்கிறது சாமானியம் யில்ல. நீங்களேத்தாம் சொன்னீங்க, பஞ்சாயத்துல வாங்க முடியல, ஸ்டேசன்ல வெச்சி வாங்க முடியல, சமூக நீதி மையத்துல வாங்க முடியல. நாம்ம எவ்வளவு வாங்கிக் கொடுத்தாலும் அதெ வாங்கிக்கித் தயாருன்னு. இப்போ வந்து இப்பிடிச் சொன்னா எப்பிடி சார்? நேத்திக்கி ராத்திரி முழுக்க ஆப்போசிட் லாயர்கிட்டெ பேசிருக்கேம். தூங்கவே இல்ல. இந்தப் பொண்ண கொண்டுப் போயி குறுக்கு விசாரணையில நிறுத்திப்புடக் கூடாதுன்னு கெஞ்சியிருக்கேம் சார் நாம்ம ஒரு லாயர்ங்ற நெலையிலேந்து கீழே எறங்கிப் போயி அவ்வேம்கிட்டெ. அவனும் சரின்னு சொல்லிருக்காம். இதெல்லாம் அமையுறது பெரிய விசயம் சார்! இப்போ வந்து வழக்கத் தொடர்றப் போறதா சொன்னா அந்த லாயர் நம்மளப் பத்தி என்னத்தெ நெனைப்பாம் சார்?"ன்னாரு வக்கீலு திருநீலுகண்டன் ரொம்ப ஆக்ரோஷமா.

            சுப்பு வாத்தியாருக்கு இப்போ சுர்ருன்னு ஏற ஆரம்பிச்சிட்டது. மவ்வே பிடிவாதமா நிக்குறதுலயும் ஒரு நல்லதுத்தாம் நெனைச்சவரு, இந்த வக்கீலுப் போறப் போக்கப் பாத்தா மான மருவாதிய வுட்டுப்புட்டு கால்ல வுழுந்துல்லா வாங்கிக் கொடுப்பாம்ன்னு நெனைச்சிப்புட்டாரு. வக்கீல் என்னவோ கெஞ்சிக் கூத்தாடி ராத்திரில்லாம் தூங்காமன்னு சொன்ன வார்த்தைக அவர்ர சுண்டி வுட்டுப்புடுச்சு. அந்தக் கோவத்தோட, "நீஞ்ஞத்தா‍னே சொன்னீங்கய்யா! வழக்க நடத்துறதுன்னாலும் நடத்துறேம். முடிக்கிறதுன்னாலும் முடிக்கிறேம்ன்னு. இப்போ சொல்றேம் நீஞ்ஞ வழக்க முடிக்க வாணாம் நடத்துங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒரு முடிவுக்கு வந்தாப்புல.

            வக்கீலு இதெ சுப்பு வாத்தியாருகிட்டெ எதிர்பாக்காதவரு போல கொஞ்சம் தணிஞ்சிப் பேச ஆரம்பிச்சாரு. "சொன்னதுதான் சார்! இல்லன்னு சொல்ல! நம்ம வாயால சொன்னதெ நாமளே இல்லன்னு சொல்லல. இப்போ இருக்குற நெலை கேஸ்ஸ முடிக்கிறதுக்கான்ன சாதகமான நெலை. இதெ வுட்டுப்புட்டா இப்பிடி ஒரு சந்தர்ப்பம் அமையும்ன்னு சொல்றதுக்கு இல்ல. ஜீவனாம்ச வழக்குல தீர்ப்பு வர்றதுக்கும் வருஷங்க ஆவலாம். அப்பிடியே வந்தாலும் மாசத்துக்கு அய்யாயிரத்துக்கு மேலப் போடுறது அதிகம். ஒங்க மாப்புள அந்த வழக்கையே ஒரு சாதகமா வெச்சிக்கிட்டு ஒங்கப் பொருளு எதையும் ஒப்படைக்க மாட்டாம். அப்பிடியே ஸ்வாஹா போட்டுடுவாம்! மாசா மாசம் அய்யாயிரத்தெ கொடுத்துப்புட்டு நமக்கென்னன்னு அவ்வேம் பாட்டுக்கு இருந்துடுவாம். எத்தனெ வருஷத்துக்கு ஜீவனாம்சம் கொடுப்பாம்ங்றீங்க? ஒங்கப் பொண்ணுக்கு இன்னொரு கலியாணம் ஆவுற வரைக்கும்தாம். ஒரு கலியாணம் ஆயிடுச்சுன்னா அதெ காரணம் காட்டியே ஜீவனாம்சத்த நிறுத்திடுவாம். அதிகபட்சமா அவ்வேம் அஞ்சு வருஷத்துக்கு கொடுக்குறான்னு வெச்சுக்குங்க. அஞ்சு வருஷம் கூட வாணாம். பத்து வருஷத்துக்கு வச்சிக்குங்க. மாசத்துக்கு அய்யாயிரம்ன்னா வருஷத்துக்கு அறுபதினாயிரம்ந்தாம். பத்து வருஷத்துக்கும் சேர்ந்து ஆறு லட்சம் மட்டுந்தாம். அவ்வேம் ஒங்கிகிட்டெ வாங்கியிருக்கிறது நகெ நட்டு, பணங்காசோட மதிப்பப் பாருங்க. கிட்டதட்ட பத்து வருஷத்துக்கு ஜீவனாம்சமா மொத்தமா கொடுக்குறத வுட அஞ்சு ஆறு பங்கு. யாருக்கு லாபம்ன்னு நெனைச்சிப் பாருங்க. கேஸ்ஸூ நடத்துறது பெரிய விசயமில்லே சார். நாமாளும் ஒரு வக்கீல்ன்னு ஆயிரம் கேஸ்கள நடத்துறதுல என்னா இருக்கு? பிரயோஜனமா இருக்கணும். ஆக்கம் கெட்டத் தனமா ஒரு வழக்க நடத்திக்கிட்டு இருக்கக் கூடாது!"ன்னாரு வக்கீலு ஒரு பிலாக்கணத்தெ வெச்சாப்புல.

            "ஒங்களுக்கென்ன இப்போ முடிஞ்சா காசி வரும்ன்னு பாக்குறீயே. வழக்க நடத்துனா நடத்திக்கிட்டெ இருக்கணும்ன்னு நெனைக்குதீயே. அப்பிடில்லாம் நெனைக்க வாணாம். வழக்குக்கு எம்மாம் காசின்னு சொல்லிப்புடுங்க. அதெ நாம்ம கொடுத்துப்புடுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ரோஷப்பட்டவரெப் போல.

            "அய்யய்யோ சார்! நீங்க நம்மளப் பத்தி தப்பா நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க. ஒங்க நெலமெ நமக்குத் தெரியும். நாம்ம வழக்க ப்ரீயாவே நடத்தித் தர்றேம். அன்னிக்கு இதெ மாதிரி ஒரு சூழ்நிலை வந்தப்போ நான்சி என்ன முடிவெடுத்தாளோ அதெ முடிவெத்தாம் நீங்க இப்போ எடுக்குறீங்க. சொல்றேன்னு வருத்தப்படாதீங்க. அப்பிடி ஒரு முடிவெ நான்சி அன்னிக்கு எடுத்ததுலேந்து நாலு வருஷத்துக்கு மேல கஷ்டப்பட்டிருக்கிறா. கோர்ட்டுக்கும் நம்ம ஆபீஸூக்கும்மா அலையோ அலையின்னு அலைஞ்சிருக்கா. அப்பிடி அலைஞ்சும் அன்னிக்கு வந்த அதெ சமாதானத்துக்குத்தாம் இன்னிக்கு வழக்கோட தீர்ப்பு வர்றதுக்கு முன்னாடி வந்திருக்கிறா. இந்த முடிவெ அன்னிக்கே அவ்வே எடுத்திருந்தா அவளோட லைப்ல நாலு வருஷம் நல்லா போயிருக்கும் சார். நாம்ம அதெ சொல்றேம். தயவுப்பண்ணிப் புரிஞ்சிக்கோங்க. ஒங்க குடும்பத்தோட ஒரு வெல்விஷர்ரா சொல்றேம் இந்த வழக்கெ தொடர்றது நல்லதில்ல. அதுக்கப்புறம் ஒங்க முடிவுத்தாம். அதுல நாம்ம தலையிட விரும்பல!"ன்னாரு வக்கீலு திருநீலகண்டன் சுப்பு வாத்தியாரோட மனசெ தெசெ திருப்புறாப்புல.

            "எல்லாம் புரியுதுங்கய்யா! புரியாம எதுவுமில்லே. இனுமே எழக்குறதுக்கு எங்க கையில புதுசா எதுவும் யில்ல. எழக்க வேண்டிய எல்லாத்தையும் எழந்தாச்ச்சு. அதால இதுக்கு மேல எதுவும் பேசாம நீஞ்ஞ திங்க கெழமெ வழக்கத் தொடர வேண்டியதெ ஆவப் போறதெப் பாருங்க. போவப் போறது பணங்காசி, நகெ நட்டுன்னாலும் வழக்க திருப்தியா நடத்துனோங்ற சந்தோஷமாவது இருக்கட்டும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இதாங் முடிவுங்றாப்புல.

            "இதுக்கு மேல விதி விட்ட வழித்தாம். நாம்ம சொல்றதுக்கு எதுவுமில்லே!"ன்னு சொல்லிட்டுப் போன வெச்சாரு வக்கீலு திருநீலகண்டன் அதுதாம் விதின்னா அதுக்கு மேல தாம் பண்டுறதுக்கு எதுமில்லங்ற மாதிரிக்குத் தன்னோட சலிப்ப காட்டுறாப்புல.  

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...