17 Dec 2020

தண்டனை வாங்கித் தர்றாம விட மாட்டேன்!

தண்டனை வாங்கித் தர்றாம விட மாட்டேன்!

செய்யு - 658

            வீட்டுக்கு வந்ததுலேந்து சுப்பு வாத்தியாரு மனசு முழுக்க நான்சியோட பேச்சுத்தாம் எதிரொலிச்சிக்கிட்டு இருந்துச்சு. அனுபவப்பட்டு ஒரு பொண்ணு சொல்றதுல உண்மெயத் தவுர வேற எதுவும் இருக்காதுன்னு அவரு நெனைச்சாரு. செய்யுவோட மனசுல ஓடாச்சேரி வாத்திச்சியோட புருஷங்கார்ரேம் பேசுன ‘சட்டம் எப்பவும் பெண்களுக்குத்தாம் சாதவம்’ங்ற பேச்சுத்தாம் எதிரொலிச்சிக்கிட்டு இருந்துச்சு. எப்பிடியும் வழக்கத் தொடர்ந்தா, இப்போ வாங்குறத போல அரைகொறையுமா இல்லாம, முழுசையுமே பாலாமணிகிட்டெயிருந்து வாங்கிப் புடலாம்ன்னு அவ்வே நெனைச்சா. இது சம்பந்தமா பேசறதுக்காக கைப்புள்ளையும் நேரா வூட்டுக்கு வந்தாரு. “இத்தோட இந்தக் கேஸ்ஸ வுட்டுப்புட்டு வேற வழியப் பாக்குற வேலையப் பாரு! நமக்குன்னு வாழ்க்கெ ஒண்ணு இருக்கு. அதெ வாழாம நாம்ம வுட்டுப்புடக் கூடாது! வாழ வேண்டிய காலத்துல அதெ வுட்டுப்புட்டா அதெ எம்புட்டுக் காசியக் கொடுத்தாலும் வாங்கிட முடியாது. அதென்ன நகெ நட்டா? கட்டிலு பீரோலா? வாழ்க்கெ! போதும் நாயீக் கடிச்சதுன்னு அதெ திருப்பிக் கடிச்சது. நம்ம வாழ்க்கெயெ இனுமே பாப்பம்! ஒனக்குன்னு ஒரு வாழ்க்கெ இருக்கு ஆமாம்!”ன்னாரு அவரு.

அப்பங்காரரு, கைப்புள்ள ரண்டு பேரும் சொல்றதெ சேத்து வெச்சு பெரியவங்களோட முடிவுப்படியே போயிடலாம்ன்னாம் விகடு. அதெ கேட்டுட்டு, "நீயி கூட எம் பக்கம் யில்லியாண்ணா? நமக்கு நடந்தெ கொடுமெ, அக்கிரமத்தப் பத்தி எல்லாத்தையும் வுட ஒமக்குத்தாம் நல்லா தெரியும். ஒங்கிட்டெத்தாம் அந்தக் கருமம் முழுசையும் சொல்லித் தொலைச்சிருக்கேம். நீயும் இப்பிடிண்ணா என்னத்தெ பண்ணுறது? தப்புப் பண்ணவேம் எந்தத் தண்டனையையுமே அனுபவிக்க வாணாமா?"ன்னா செய்யு விகடுவப் பாத்து. அதுக்கு விகடு என்ன சொல்றதுன்னு தெரியாம நின்னாம். கொழந்தையைப் பறிகொடுத்துட்டுப் பெத்தவ அழுவுறதுக்கும் மித்தவ அழுவுறதுக்கும் வித்தியாசம் இருக்குல்லா? நடந்ததெ முழுசா அறிஞ்சவேம்ங்ற வகையில செய்யு இப்போ கேக்குறதுக்குப் பதிலெ கெடையாதுங்ற நெனைப்புல இருந்தாம் அவ்வேம். அதால மேக்கொண்டு அவ்வேம் பேசல. அவனுக்குப் பதிலா சுப்பு வாத்தியாரு பேசுனாரு.

            "நாம்ம யாரையும் தண்டிக்க வாணாம். அவனவனா செஞ்சப் பாவத்துக்கு தண்டனெயெ அனுபவிச்சிட்டுப் போவட்டும்."ன்னாரு சுப்பு வாத்தியாரு. அவரு அனுபவப்பட்டவரு. சொமையத் தூக்கியும் சொமந்தவரு. அப்படிப் பேச அவருக்கு உரிமெயும் இருக்கு. இந்த வழக்கெ இத்தோட வுட்டுப்புடுன்னு அதிகாரத் தோரணையோட அவரு சொல்லிட்டுப் போயிடலாம். அப்படிச் சொல்றதுக்கான காரணம் மவளோட அடுத்த கட்ட வாழ்க்கெய பாக்க வேண்டிய கடமெ அதுக்குப் பின்னாடி இருக்கு. மனநெலையக் கடந்துததாம் அவரு பாத்தாவணும். விகடுவோட வயசு சின்னது. அனுபவம் கம்மித்தாம். அவ்வேம் தங்காச்சியோட மனநெலையிலத்தாம் எல்லாத்தையும் பாத்தாம். மனநெலையக் கடந்துப் பாக்க முடியும்ன்னு அவனுக்குத் தோணல. அவனுக்கு என்னவோ தங்காச்சி சொல்றது ஞாயங்ற மாதிரிப் பட்டுச்சு. அப்பங்காரரு பேச்ச மீறி யிப்போ ஒரு கருத்தெ சொல்றதுக்கும் யோஜனையா இருந்துச்சு. 

            "தண்டனெ அதுவாவே நடக்கட்டும். நீஞ்ஞக் கொடுத்த பணங்காசி எம்மாம் இருக்கும்? அதுல பாதியாச்சும் கொடுத்தா கூட பரவால்ல. அதுல காக்காசிய என்னவோ அவ்வேம் காசியில கொடுக்குறதெப் போல வாழ்நாள் ஜீவனாம்சமா கொடுக்குறதா எழுதிக் கொடுக்க நெனைக்குறானே? அதெத்தாம் நம்மாள ஏத்துக்கிட முடியலப்பா! அதெ நெனைக்க நெனைக்க வேதனெ தாங்க முடியலே. நம்ம காசிய எடுத்து நம்மகிட்டெ என்னவோ மூணு மாசம் குடும்பம் நடத்துனதுக்குக் கூலியக் கொடுக்குறாப்புல கொடுக்குறான்னேப்பா! அதெ நம்மாள தாங்க முடியல. நெனைச்சா சேந்து வாழுவேங்றாம், நெனைக்காட்டிப் பிரிஞ்சிப் போங்றாம். யிப்போ இந்தா அஞ்சு லட்சம் பிரிஞ்சிப் போன்னு சொல்றாம். அதெ வாங்கிட்டுப் பிரிஞ்சிப் போறேம்ன்னு வெச்சுக்கோங்க, நாளைக்கி வந்து இன்னும் ஒரு அஞ்சு லட்சம் தர்றேம் சேந்து வாழுன்னு சொன்னா அதெ கேட்டுக்கிட்டு அவ்வேம் கூட போறதா கேக்குறேம்? நம்மள ன்னா அவ்சாரின்னு நெனைச்சிக்கிட்டானா? கடெசீயில அவனுக்கு ஒத்து ஊதுறாப்புலத்தானே நீஞ்ஞளும் பேசுதீங்க. அவ்வேம் நமக்குப் பண்ணக் கொடுமெய வுட யிப்போ நீஞ்ஞல்லாம் பேசுறது ரொம்ப கொடுமையா இருக்கு!"ன்னா செய்யு கண்ணு கலங்கி கண்ணு தண்ணி எட்டிப் பாக்குறாப்புல.

            "இதெல்லாம் தேவையில்லாத சிந்தனெ. பணத்தெ கொடுக்குறாம் வெட்டி வுடுறாம்ன்னு. அவ்வுளவுதாங். திரும்ப வந்து அந்த நாதாரி ஏம் வாழக் கூப்புடப் போறாம்? அப்பிடியே கூப்ட்டாலும் நாம்ம அனுப்பிப்புடுவமா? வூட்டுப்பக்கம் வந்தா செருப்படித்தாம் விழும் பாத்துக்கோ! ஓரளவுக்கு மேல நாமளும் சிந்தனைய வுடக் கூடாது. இதுல யோஜிக்கிறதுக்கு அவ்ளவுதாங் இருக்கு. ரொம்ப யோஜிச்சுக் கொழம்பிப் போயி நிக்காதே. அந்த நாயீல்லாம் இதுக்கு மேல வந்துக் கூப்புடல்லாம் மாட்டாம்!"ன்னாரு கைப்புள்ள இதாம் எதார்த்தம்ன்னு சொல்றாப்புல.

            "ஏம் கூப்புட மாட்டாம்? பணத்தெ கொடுத்தா பிரிஞ்சிப் போறவே அதே பணத்தெ கொடுத்தா ஏம் சேர்ந்து வாழ வர்ற மாட்டான்னுத்தானே நெனைப்பாம்? நம்ம வாழ்க்கையே போயிடுச்சு. நம்மால தலைநிமுந்து நடக்க முடியல. என்னிக்கு அவ்வனெ வுட்டு இஞ்ஞ வந்தேன்னோ அன்னிலேந்து ஒரு கலியாணங்காட்சி, சாவுன்னு எதுக்கும் போவல. போவப் பிடிக்கல. போன்னா இதெப் பத்தி எதாச்சும் கேள்விக் கேப்பாங்களோன்னு மனசுக்குள்ள நடுக்கமா இருக்கு. அதுக்குப் பயந்துட்டெ எஞ்ஙயும் போறதில்ல. இனுமே ஒரு தேவ திங்க நடந்தா நம்மால அஞ்ஞ நிக்க முடியுமா? வாழவெட்டியா வந்தவங்ற பட்டத்தெ நம்மாளப் போக்க முடியுமா? எதுவும் முடியாதுல்ல. கொஞ்சம் மனசு ஆறுதல்ன்னா அவனெ கோர்ட்டுல நிக்க வெச்சி அவ்வேம் பண்ணது தப்புன்னு தீர்ப்பையாவது சொல்ல வைக்கிறதுதாம். அவனுக்குத் தண்டனெ கெடைக்கிறதோ, செயிலுக்குப் போறதோ நமக்குத் தேவையில்ல. அவ்வேம் பண்ணது தப்புன்னு தீர்ப்பாவணும். அதுதாங் நாம்ம அவனுக்குக் கொடுக்க நெனைக்கிற தண்டனெ!"ன்னா அழுதுகிட்டெ செய்யு. அவளோட எட்டிப் பாத்த கண்ணுத் தண்ணி கோடு கோடா கன்னத்தெ நனைச்சிட்டு இருந்துச்சு.

            "பொண்ணு ரொம்ப உணர்ச்சிவசப்படுது வாத்தியார்ரே! நாம்ம எடுத்துச் சொல்றது அதுக்குப் புரிய மாட்டேங்குது. கோர்ட்டு கேஸ்ஸூன்னு அலையுறது ஒரு கட்டத்துக்கு மேல ஒத்து வாராது. நம்மால மெனக்கெடவும் முடியாது. இந்த ஒண்ணாலயே வூட்டுல வேற எந்தக் காரியத்தையும் பாக்கவும் முடியாது. ஏதோ கொஞ்சம் பணங்காசியக் கொடுப்பானான்னு போனோம். கொடுக்குறாங்றப்போ வாங்கிட்டுப் போறதுதாம் வருங்காலத்துக்கு நல்லது!"ன்னாரு கைப்புள்ள தான் மனசுல நெனைக்குறதெ அப்பிடியே வார்த்தையால அள்ளிக் கொட்டுறாப்புல.

            "அவ்வேம் கொடுக்குறது போதும்ன்னா அன்னிக்குப் பாக்குக்கோட்டையிலேந்து வந்தாமே பழயப் பரமசிவம்ன்னு ஒருத்தெம். அன்னிக்கே வாங்கிட்டு அனுப்பிருக்கலாமே. யில்ல பஞ்சாயத்துல வெச்சி நாலு ஒதையக் கொடுத்து வாங்கிருக்கலாமே. நம்மள பஞ்சாயத்து, வக்கீல் நோட்டீஸ், கோர்ட்டுன்னு நெறைய எடத்துல வெச்சி அசிங்கப்படுத்திருக்காம். அவனெ நம்மாள ஒரு எடத்துல கூட ஜெயிக்க முடியல. போலீஸ் ஸ்டேசன் போனாக்கா அஞ்ஞயும் வர்றாமலே ஏமாத்துறாம். சமூக நீதி மையத்துக்குப் போனா அஞ்ஞயும் அவ்வேந்தாம் ஜெயிக்கிறாம். யப்போ நம்மாள அவனால ஜெயிக்கவே முடியாதா ன்னா?"ன்னு அடித்தொண்டையால கேவுனபடி கேட்டா செய்யு. அவள பாக்குறதுக்கு இப்போ ரொம்ப பரிதாவமா இருந்துச்சு. அவளப் பாக்க முடியாம விகடு தலைய குனிஞ்சிகிட்டாம்.

            "ஜெயிக்குறதுக்குல்லாம் அவ்வேம் ஒரு மனுஷனெ கெடையாது. சரியானப் பொட்டெ அவ்வேம். நல்ல வெதமா புத்தி வேல செய்யுறவேம் இதுலயா ஜெயிக்க நெனைப்பாம். நல்லா குடும்பத்தெ நடத்தி புள்ளெ குட்டியோளப் பெத்து குடும்பத்து நிமுத்த நெனைச்சி எதாச்சும் பண்ணா அவனெ குடும்ப வாழ்க்கையில ஜெயிச்சவனா மனசுக்குள்ள வெச்சிக் கொண்டாடலாம். இதுல ன்னா ஜெயிப்பு இருக்கு? பொண்டாட்டியப் பிரிச்சி வுட்டு, வாங்குன காசிய ஏமாத்த நெனைக்கிறதெல்லாம் ஒரு ஜெயிப்பா? இதெல்லாம் ஒரு பொழைப்பான்னு கேக்குறேம். இப்படிப் பொழைக்குறதுக்கு நாண்டுகிட்டெ செத்து பூடலாம். இதத்தானே நாட்டுல திருட்டுப்பயலும், ஏமாத்துறவனும் பண்ணிட்டு இருக்காம். இதுக்குல்லாம் பெரிசா ஞானம் வேண்டியதில்ல. யாரு வாணாலும் இந்தக் காவாளித்தனத்தெ பண்ணுலாம். இதெல்லாம் ஜெயிப்புல சேத்தியே கெடையாது! ஜெயிப்புன்னா நாலு பேரு நல்ல வெதமா பேசுறாப்புல வாழ்த்துறாப்புல இருக்கணும். இதெ எவ்வேம் வாழ்த்துவாம்? இதெப் பத்திக் கேட்டால ச்சீய்ன்னுத்தாம் காறித் துப்புவாம்!"ன்னாரு கைப்புள்ள செய்யுவோட மனசெ நிமுத்தி நேர் பண்டுறாப்புல.

            "யப்போ ஏமாத்துறவனெ அப்பிடியே வுட்டுக்கிட்டே இருப்பீயளா? இப்பிடியே வுட்டா அவ்வேம் எத்தனெ பொண்ணுங்கள ஏமாத்துவாம்? டாக்கடர்ங்ற வேலய வெச்சி இப்பிடித்தாம் பொண்ணு பொண்ணுகளாப் பாத்து பணங்காசியையும், நகெ நட்டையும் வாங்கிட்டு அவ்வேம் ஏமாத்திட்டு இருப்பானா? பொட்ட பயன்னா பொட்டெ மாதிரிக்கிப் பொண்ணுகிட்டெ எதெ வாணாலும் பண்டிட்டு இருப்பானா? அவனுக்கு ஒரு முடிவெ கெடையாதா?"ன்னா செய்யு கைப்புள்ளைய வெட்டு ஒண்ணுன்னு துண்டு ரண்டுன்னு ஆக்குறாப்புல. கைப்புள்ளைக்கு இப்போ மேக்கொண்டு செய்யுவ எப்பிடி ஆறுதல் பண்டுறதுன்னு புரியல. கண்ண மூடிட்டு யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு.

            "அவ்வேம் முடிவெ அவனே தேடிப்பாம். அவனவன் மனசெ அவனவன உறுத்திக் கொன்னுப்புடும். யிப்போ அவ்வேம் நல்லா இருக்கான்னு நெனைக்குதீயா? கொஞ்ச நாள்ல பாரு பண்ண பாவத்துக்கு எவ்வளவு அனுபவிக்கணுமோ அவ்வளவு அனுபவிப்பாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கைப்புள்ள எடத்துல நின்னு தொடர்றாப்புல.

            "இதெல்லாம் ச்சும்மாப்பா! நம்மளே நாமே மனசெ ஆறுதல் பண்ணிக்கிறதுக்காக சொல்லிக்கிறது. நாட்டுல தப்புப் பண்ணுறவேம், ஏமாத்துறவேந்தாம் ந்நல்லா இருக்காம். அதுக்குக் காரணம் நாமெல்லாம் யிப்பிடி செஞ்ச பாவத்துக்கு அவனா அனுபவிப்பாம்ன்னு நெனைச்சு ஒதுங்கிக்கிறதுதாம். இந்த ஒலகத்துல மனுஷனா எதெயும் முயற்சிப் பண்ணாம எதுவுமே நடக்காது. நாம்ம அவ்வேம் பண்ண தப்புக்கு தண்டனெ வாங்கித் தர்ற எந்த முயற்சியும் எடுக்கலன்னா வெச்சுக்கோங்களேம், அவனுக்கு எந்த நஷ்டமும் உண்டாவாது. அவ்வேம் பாட்டுக்கு ஹைய்யான்னு போயிட்டே இருப்பாம். இந்த மாதிரிக்கித் தப்புப் பண்ணுறது அவனுக்கு ஒரு பொழுதுப்போக்காப் போயிடும்ப்பா! அடிக்கிறவனெ திருப்பி அடிச்சாத்தாம்பா அடிக்கிறவனுக்கு வலியோட கஷ்டம் தெரியும். அடியெ நாம்ம வாங்கிட்டு இருந்தா அடிக்கிறது அவனுக்குச் சொகமாகப் போயிடும்ப்பா. சொகத்தெ எவ்வேம் வுடுவாம்?"ன்னா செய்யு பதிலுக்குப் பதிலு சுப்பு வாத்தியாருக்கு ஈடு கொடுக்குறாப்புல.

            "யிப்பிடி நீயிக் கெளம்புன்னா ஒம்மட வாழ்க்கெ என்னாவுறது? அவனெ பழி வாங்குறதா நெனைச்சி நீயி ஒம்மட வாழ்க்கெய வீணாக்கிக்கிட்டா அவனுக்கென்ன? அவ்வேம் அழியப் போறவேம்ங்றதால அவ்வேம் வாழ்க்கைய அவ்வனெ வீணடிச்சிக்கிடலாம். நாம்ம ன்னா குத்தம் பண்ணோம் நாம்ம அவனோட சேந்து அழிஞ்சிப் போறதுக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவளோட மனசெ திருப்பிப்புடணும்ங்ற நோக்குல.

            "யப்பா சொல்றது செரி. அதெ கொஞ்சம் மனசுல வாங்கிக்கோ செய்யு! இதெல்லாம் வெளையாட்டுத்தனமான வெசயம் யில்ல. போனது போதும். முடிச்சிக்கிட வேண்டிய எடம் வந்துட்டு. இதுவே நல்ல தண்டனெத்தாம் அவனுக்கு. பொண்டாட்டிய வுட்டுப்புட்டு நிக்குறதெ வுடல்லாம் ஒரு மனுஷனுக்குப் பெரிய தண்டனெ வேற எதுவும் கெடையாது. அவ்வேம் செரியான வெனைக்காரப் பயலா இருக்குறதால அவனுக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது. பின்னாடி இதெ நெனைச்சுப் பாத்து அவ்வேம் சட்டையக் கிழிச்சிட்டுப் பைத்தியமா அலையப் போறான்னா இல்லையான்னு பாரு!"ன்னாரு கைப்புள்ள. இதுவரைக்கும் கண்ணெ மூடிட்டு இருந்தவரு முடிவா ஒண்ணுத்தெ கண்டதெப் போல இதெ சொன்னாரு.

            "நீஞ்ஞல்லாம் நம்மள சமாதானம் பண்ணுறதுலயே இருக்கீயே? அவனுக்குப் புத்திப் புகட்டும்ன்னு நெனைக்க மாட்டேங்றீயே?"ன்னா செய்யு இப்போ இருக்குற நெல இதாம்ன்னு வௌங்கிக்கோங்கன்னு சொல்றாப்புல.

            "யய்யோ செய்யு! என்னம்மா பொண்ணு நீயி! மூளெ இருக்கறவனுக்குத்தாம் புத்தியப் பொகட்ட முடியும். அவ்வேந்தாம் மூளையே யில்லாதப் பயலா ஆச்சே. செரியான சைக்கோபாத் பயெ. ஒன்னய மாதிரிக்கி ஒரு பொண்ண வெச்சிட்டு அவ்வேம் எப்பிடிக் குடும்பத்தெ நடத்தணும் தெரியுமா? அத்துத் தெரியாதப் பயெ புத்தியே யில்லாதப் பயத்தாம். அவனுக்கு என்னத்தெப் போயி நீயி புத்தியப் பொகட்டப் போறே? கழுதைட்டப் போயி புத்தகத்தெ நீட்டுனீன்னா அதுக்குப் புத்தகம்ன்னு தெரியுமா? தாளுன்னு தெரியுமா? அதுக்கு எல்லாம் தாளுதாம். அதெ வாங்கி மென்னுத் தின்னத்தாம் அத்துப் பாக்கும். அதுக்காக இந்தக் கழுதைக்கு ஞானமே இல்லன்னு சொல்லுவீயா? அத்தோட சுபாவம் அத்துதாம். கடவுளு அதெ அப்பிடித்தாம் படைச்சிருக்கிறாரு. அத்தெ மாதிரித்தாம் கடவுளே அவனெ அப்பிடித்தாம் படைச்சிருக்கிறாரு. அதுக்காக யாருகிட்டெப் போயி அதெப் பத்தி நோவுறது சொல்லு? பன்னி எதெத் தின்னா நமக்கென்ன? அத்து எத்தையோ தின்னுத் தொலையுது போ!"ன்னாரு கைப்புள்ள செய்யுவோட மனசெ ஒரு எறக்கத்துக்குக் கொண்டு வர்றாப்புல.

            "கடவுளு ஒண்ணும் அவனெ அப்பிடிப் படைக்கல. நீஞ்ஞத்தாம் அவனெ அப்பிடி உருவாக்கி வெச்சிருக்கீங்க. ஆளாளுக்கு, அவ்வேம் பண்ணுறதெ பண்ணட்டும், அவனா அதுக்கு அனுபவிச்சிக்கிடட்டும்ன்னு ஒதுங்கிப் போறீயே. அத்து அவனுக்கு வசதியாப் போவுது. வலுவா நெனைச்சிக்கிட தோதா போவுது. அவ்வேம் தப்பு பண்ணுறப்பயே தலையில தட்டுனா அதெ அவ்வேம் பண்ண மாட்டாம். தலையில தாட்டாட்டியும் கூட தப்புன்னு ரண்டு வார்த்தெ திட்டுனாலும் அதுல அவ்வேம் போவ மாட்டாம். யாருக்கும் பூனைக்கி மணியக் கட்டலன்னா அத்து இஷ்டப்படித்தாம் திரிஞ்சிக்கிட்டுக் கெடக்கும்!"ன்னா செய்யு கைப்புள்ளய திரும்பவும் ஏத்தி வுடுறாப்புல.

            "நாட்டுல இவ்வேம் ஒரு பூனெ மட்டுமல்ல. ஏகப்பட்ட திருட்டுப் பூனைக இருக்கு. எவ்வளவுக்கு மணியெ கட்டிக்கிட்டெ போவ? அவ்வளவு மணிக்கு எஞ்ஞ போவே? கேடுகெட்ட பயலுவோ அம்மாம் இருக்காம். அந்தப் பூனைக்கெல்லாம் மணியக் கட்டுறதுதாம் ஒம் வேலயா? ஒங் கதெ, ஒம் பொழப்பப் பாப்பீயா? வேலயத்த வேலயப் பாப்பேம்ன்னு நிக்குதீயே?"ன்னாரு கைப்புள்ள செய்யுவ சாமர்த்தியமா மடக்கி ஒரு நெலைக்குக் கொண்டு வர்றாப்புல.

            "நாட்டுல இருக்குற அத்தனெ பேத்தையும் திருத்த அத்தனெ பேத்துக்கும் தண்டனெ கொடுக்க வேண்டியதில்லா. ஒருத்தனெ வசமா தண்டிச்சாவே போதும். மித்தப் பேருக்கு பயம் வந்து ஒழுங்கா ஆயிடுவானுவோ. அப்பிடிப் பண்ண தப்புக்கு ஒருத்தனெ கூட தண்டிக்காம வுடுறதுதாம் தப்பு பண்ணா தண்டனெ கெடைக்காதுன்னு நெனைச்சிட்டு பல பேத்தையும் தப்புப் பண்ண தூண்டுது. இவனுக்கு மட்டும் பண்ண தப்புக்கு தண்டனெ கெடைச்சா மனைவிய வன்கொடுமெ செஞ்ச டாக்குடர்ன்னு நிச்சயம் செய்தியில வரும். பேப்பர்ல போடுவாம். அதெப் பாத்துப்புட்டு நிச்சயம் பயந்துகிட்டாவது நூத்துக்குப் பத்துப் பேராச்சும் தப்புப் பண்ணாம ஒழுங்கா இருப்பாம். அதுக்காச்சும் இந்த கேஸ்ஸ நடத்தித்தாம் ஆவணும். இவனுக்குக் கெடைக்குற பாடங்றது நாட்டுல தப்புப் பண்ண நெனைக்குற அத்தனெ ஆம்பளைக்கும்மான பாடமா இருக்கணும். அப்பிடி ஒரு தீர்ப்ப கோர்ட்டுல போராடி அவனுக்கு வாங்கிக் கொடுக்காம இருக்க மாட்டேம்!"ன்னா செய்யு ரொம்ப தீர்க்கமா சபதம் பண்டறாப்புல.

            "யப்ப முடிவெ பண்ணிட்டீயா?"ன்னாரு கைப்புள்ள முடிவா கேக்குறாப்புல.

            "ஒஞ்ஞளுக்கு நம்மள வுட அரையும் கெறையுமா கெடைக்கிற பணங்காசியும், நகெநட்டும்தான் முக்கியம்ன்னா சொல்லுங்க. நாம்ம கேக்கற எடத்துல எல்லாம் கையெழுத்தப் போட்டுக் கொடுத்துட்டு ஒதுங்கிடுறேம். அப்பிடிக் கெடையாது நாம்மத்தாம் முக்கியம்ன்னு நெனைச்சா இந்தக் கேஸ்ஸ எடுத்து நடத்துறதப் பத்தி எதுவும் சொல்லாதீயே. ஆன்னா ஒண்ணு இந்தக் கேஸ்ஸ மட்டும் நம்மாள நடத்த முடியாமப் போச்சுன்னா அதெ ஏத்துக்கிட்டு நாம்ம நல்ல மனநெலையோட வாழ்ந்துடுவேன்னு மட்டும் நெனைச்சுப்புடாதீயே! மனநெல நமக்குக் கெட்டுப் போயிடும்!"ன்னா செய்யு எல்லாத்தையும் பாத்து முடிவா சொல்றாப்புல. ஒரு ரண்டு நிமிஷத்துக்கு யாரோட மொகத்துலயும் ஈயாடல. சுப்பு வாத்தியாரு கண்ண மூடிட்டாரு. அவரு ரொம்ப ஆழமா யோசிக்கிறார்ன்னு தெரிஞ்சது. அவருதாம் இப்போ பேச ஆரம்பிச்சாரு.

            "அப்பிடின்னா செரி! இதெ நடத்துறதப் பத்தியோ, இதுக்குச் சிலவெ பண்ணுறதோ பத்தியோ நமக்கு ஒண்ணுமில்ல. இந்தக் கேஸ்ஸூ நடக்குற வரைக்கும் தெகிரியமா எதையும் தாங்கிட்டு ஒன்னால இருக்க முடியுமா? கூப்புடுறப்பல்லாம் கோர்ட்டுக்கு அலைஞ்சிட்டுக் கெடக்க முடியுமா? படிப்பெ வேற வெச்சிக்கிட்டு, மேக்கொண்டு படிக்கணும்ன்னு ஆசயெ வேற வெச்சிக்கிட்டு அதெயும் கொஞ்சம் யோஜனைய பண்ணிக்கிட்டு முடிவெ எடுத்தா சரிப்படும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட நெலைப்பாட்ட சொல்றாப்புல.

            "நம்மாள சமாளிக்க முடியும். படிப்பையும், இந்தக் கேஸையும் சமாளிக்க முடியுங்ற நம்பிக்கெ இருக்கு. கோர்ட்டுக்குக் கூட நம்ம கூட யாரும் வரணுங்ற அவ்சியமில்ல. நாமளே போயிட்டு நாமளே வந்துப்புடுவேம். கோர்ட்டுல அப்பிடித்தானே நெறைய பொம்பளைங்க வர்றாங்க, போறாங்க. அவுங்களப் போலவே நாமளும் போயிட்டு வந்துப்புடுவேம். யாரையும் எதிர்பாக்க மாட்டேம். இந்த வழக்கும் சரித்தாம், படிப்பும் சரித்தாம் அத்து நம்மளோட பொறுப்பு. அதெப் பத்தி யாரும் எந்தக் கவலெயும் பட வேண்டியதில்லா!"ன்னா செய்யு தன்னோட முடிவு இதுதாம்ன்னும் இதுல மாத்தம்லாம் ஏதுமில்லங்ற மாதிரிக்கி.

            "அப்பிடில்லாம் கோர்ட்டுக்குத் தனியால்லாம் வுட்டுப்புட மாட்டேம். ஒண்ணு நாம்ம வருவேம். யில்ல யண்ணன அனுப்பி விடுவேம். தொணைக்கு யாராச்சும் வந்துடுவேம். அதெப் பத்தி நாம்ம கேக்கல. கேஸ்ஸூப் போவப் போவ இழுத்தடிச்சிக்கிட்டெ போவும். தோக்குறாப்புலயும் சில சமயங்கள்ல ஆவும். அதெயெல்லாம் ஏத்துக்கிட்டுப் போவ முடியும்ன்னாத்தாம் இதுல எறங்கணும். எறங்குறப்பவே ஆழ யோஜனெ பண்ணி எறங்கணும். எறங்குன பெற்பாடு ஆழம் ரொம்ப இருக்குறாப்புல இருக்கேன்னு பொலம்புனா சில சமயத்துல கைதூக்கி வுடுறதுக்கு யாரு நெனைச்சாலும் முடியாதுப் பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பின்விளைவுங்றது எப்பிடில்லாம் இருக்கும்றதெ காட்டுறாப்புல.

            "ந்நல்லதோ கெட்டதோ, தோற்கிறனோ ஜெயிக்கிறனோ அத்தப் பத்திப் பெரச்சனெயில்ல. நமக்கு இந்தக் கேஸ்ஸ நடத்தணும். நடத்துனா எப்பிடியும் ஜெயிப்பு ஆயிடும்ங்ற நம்பிக்கெ நமக்கு இருக்கு. அதுக்காக எத்தனெ மொறை வேணும்ன்னாலும் கோர்ட்டுப் படிக்கட்டெ ஏற தயாரா இருக்கேம். கோர்ட்டு கேஸ்ஸூன்னுப் போறதால படிப்பையும் விட்டுப்புட மாட்டேம். படிச்சி எப்படியாச்சும் ஒரு வேலைக்குப் போயிடுவேம். அத்தெ நாம்ம உறுதியாச் சொல்றேம்! நம்மாள முடியும்ப்பா!"ன்னா செய்யு தலையில அடிச்சிச் சத்தியம் பண்ணாத கொறையா.

            "ன்னா யண்ணங்காரரே! என்னத்தெ சொல்றே? நீயிப் பாட்டுக்குக் கேட்டுகிட்டெ நிக்குதீயே தவுர, ஊடால பூந்து ஒண்ணுத்தையும் சொல்ல மாட்டேங்றீயே? இருக்குற கடங்கப்பிக, கட்டிட்டு இருக்கற வட்டிக, வர்ற வருமானம் பத்தியல்லாம் நீந்தாம் சொல்லணும். குடும்பத்தோட மூத்தப் புள்ளே நீந்தானே? இனுமே நீந்தாம் சொமந்தாவணும். எத்தனெ காலத்துக்கு அப்பங்காரரே சொமக்க முடியும் சொல்லு. வயசு ஆவுதில்லா. காலகாலாத்துக்கு கடமெயெ முடிக்க நெனைக்குறது அதுக்குத்தாம். ஆகையால இதுல சகலத்தப் பத்திப் பேசுறதுக்கும் ஒமக்கு அதிகாரம் இருக்கு! எப்பவும் போல பேயாம மலுப்பிப் புடலாம்ன்னு நெனைச்சிப்புடாதே. பேசித்தாம் ஆவணும்! நல்லா யோஜிச்சு ஒரு பதிலச் சொல்லுடப்பா! ஒனக்கு இப்போ வேற வழியில்ல!"ன்னாரு கைப்புள்ள வேற வெதமா பேச வுட்டு செய்யுவச் சம்மதிக்க வெச்சிப்புடலாம்ன்னு.

            "கடங்கப்பிகளப் பத்தி எதுவும் நெனைக்க வாணாம். அதெ எப்பிடியாச்சும் நாம்மப் பாத்துக்கிடுறேம்! தங்காச்சி மனநெலைக்கு எத்துச் சரியோ அத்தெ பண்ணுறதுதாம் யிப்போ நல்லதுன்னு நெனைக்கிறேம்!"ன்னாம் விகடு எந்த யோசனையும் மேக்கொண்டு இல்லாம.

            "அட்றா சக்கனான்னாம்! யிப்பிடி ஒரு யண்ணன் யிருந்தா தங்காச்சிக யிப்பிடித்தாம் இருக்கும்! அப்பிடின்னா ஒந் தங்காச்சித் தோதுக்கே எறங்க வேண்டியதுதாம். வேற வழியில்ல!"ன்னாரு கைப்புள்ள அதுக்கு மேல பேசுறதுக்கு ஒண்ணும் இல்லங்றாப்புல.

            "நாமளும் கூடிய சீக்கிரமே வேலைக்குப் போயி கடங்கப்பிய அடைக்க தொணை நிப்பேம்!"ன்னா செய்யு வீராப்ப ஏத்திக் காட்டுறாப்புல.

            "அட்றா சக்கே! பெறவென்ன? நடத்துங்க ஒஞ்ஞ ஆட்டத்தெ!"ன்னு துண்ட விசிறி வுட்டுக்கிட்டெ எழும்புனாரு கைப்புள்ள.

            சுப்பு வாத்தியாரு எதுவும் சொல்ல முடியாம அமைதியா அப்பிடியே உக்காந்திருந்தாரு. கைப்புள்ள வெளியில கௌம்பி வண்டிய கௌப்புனாரு. அது ட்ர்ட்டு ட்ர்ட்டுன்னு தயங்கித் தயங்கித் தேங்கிப் போறாப்புல இருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...