16 Dec 2020

மன்னிப்பு ஒரு மாபெரும் தண்டனை!

மன்னிப்பு ஒரு மாபெரும் தண்டனை!

செய்யு - 657

            நான்சியோட வழக்கு ஆரம்பிச்சி அஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும். இப்பத்தாம் ஒரு முடிவுக்கு வர்றப் போவுது. வழக்கு ஆரம்பிக்கிறப்போ மெல்லிச்சா ஒடிசலா வந்தப் பொண்ணு இப்பப் பாக்க அதுக்கு நேர்மாறா இருக்குறதா சொன்னாரு திருநீலகண்டன் வக்கீலு. நான்சி பிரிஞ்சி வர்றதுக்குக் காரணம் அதோட புருஷன் இன்னொரு பொண்ணை வெச்சிக் குடித்தனம் நடத்துனதுதாம். அப்பன் ஆயி சொன்னதுக்காக நான்சிய கட்டிக்கிட்டவேம், காதலிச்சப் பாவத்துக்காக அந்தப் பொண்ணையும் வுட்டுடாம கலியாணம் ஆன ரொம்ப நாளு வரைக்கும் குடித்தனம் நடத்திட்டு இருந்திருக்காம். விசயம் தெரிஞ்சதுக்குப் பெறவு நான்சி அவனெ வுட்டு வெளியில வந்திருக்கு. அதுதாங் வாய்ப்புன்னு நான்சியோட புருஷன் தொடர்புல இருந்தப் பொண்ண கலியாணமே பண்ணிக்கிட்டாம்.

            நான்சியோட வழக்கும் செய்யுவோட வழக்கப் போல மகளிர் காவல் நிலையம், சமூக நீதி மையம்ன்னு ஆரம்பிச்சி ஜீவனாம்ச வழக்கு, வன்கொடுமெ வழக்குன்னுத்தாம் வரிசையா வந்திருக்கு. நான்சியோட புருஷன் மகளிர் காவல் நிலையத்துல ஆரம்பிச்சி, சமூநீதி மையம், கோர்ட்டுன்னு எதுக்குமே ஆஜராகாமலே இருந்திருக்காம். அவ்வளவு செல்வாக்கு அவனுக்கு. திருவாரூரு மாவட்டத்துக்கு முக்கியமான கட்சி ஒண்ணுல மாவட்டச் செயலாளரா இருக்குற ஆளுக்கு வலது கையி, எடது கையின்னு எல்லா கையுமா நான்சியோட புருஷன் இருந்ததால அவனெ எதுக்கும் வரவழைக்க முடியல. கோர்ட்டுல ஆஜராகமா இருந்ததுக்குப் பிடிவாரண்ட் போட்டும் ஆஜராகமா இருந்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துலேந்து அதுக்கான வெளக்கத்தக் கேட்டு, அங்க வேல பாத்த போலீஸ்காரவுங்கள டிரான்ஸ்பர் பண்ணத்தாம் முடிஞ்சிதே தவுர நான்சியோட புருஷனெ ஆஜர் பண்ண முடியல. வக்கீலு திருநீலகண்டன் வுடாம ஹை கோர்ட்ல, வழக்குத் தொடர்ந்து நாளாவுதுன்னு ஒரு கேஸ்ஸப் போட்டு, குறித்தக் காலத்துல அந்தக் கேஸ்ஸ முடிச்சி வைக்கணும்ன்னு கேட்டதுக்கு அப்புறந்தாம் அந்த வழக்கு வேகமெடுத்து நான்சியோட புருஷனையும், அவ்வேம் ரண்டாவதா கலியாணம் கட்டிக்கிட்ட பொண்டாட்டியையும் கூண்டோட கொண்டாந்து கூண்டுல ஏத்த முடிஞ்சிது.

            கூண்டுல ஏத்துன நான்சியோட புருஷன் கையோட கத்தியோட வந்திருக்கிற சங்கதி, அவ்வேம் வழக்க நடந்தப்போ வக்கீல் திருநீலகண்டனப் பாத்து குறி வெச்சி வீசி எறிஞ்சப்பத்தாம் தெரிஞ்சது. நல்லவேளெ வக்கீலு சட்டுன்னு சுதாரிச்சு வெலகுனதுல குறி தப்பிருக்கு. அதெப் பாத்து கோர்ட்டெ அரண்டுப் போயிருக்கு. இது பெரிய பெரச்சனையாயி வக்கீலுங்க போராட்டம் வரைக்கும் போயி நான்சியோட புருஷன் கொஞ்ச நாளு ஜெயில்ல கெடக்குறாப்புல ஆயிடுச்சு. கோர்ட்டுன்னா கத்தியக் காட்டி மெரட்டி கட்டப்பஞ்சாயத்து பண்ணுற எடமான்னு ஜட்ஜூக்கு வந்தக் கோவத்துக்கு வழக்க ரொம்ப வேகமா கொண்டுப் போவ ஆரம்பிச்சிட்டாரு. ஏற்கனவே ஹை கோர்ட்டோட டேரக்சன் வேற இருந்ததால கேஸூ முடியப் போற நேரத்துல, கோர்ட்டுன்னு கூட பாக்காம நான்சியோட புருஷன் கட்டுன ரண்டாவதுப் பொண்டாட்டி கூண்டுல ஏறி நின்னு மடிப்பிச்சைக் கேட்டதெ அடுத்து வழக்கச் சுமூகமா முடிச்சிக்கிட நான்சி சம்மதிச்சிச்சு. அதே நேரத்துல ஜட்ஜூக்கு அந்த வழக்குக்கான தீர்ப்ப எழுத ஆரம்பிச்சிருக்காரு. இப்போ பேசுன வரைக்கும் தீர்ப்ப எழுதிக்கிட்டு இருக்குற ஜீவனாம்ச வழக்கத் தவுர வன்கொடுமெ வழக்கையெல்லாம் வாபஸ் வாங்குற முடிவுல இருந்துச்சு நான்சி. அந்தப் பொண்ண அழைச்சாந்துத்தாம் செய்யுகிட்டெ பேசச் சொன்னாரு வக்கீல் திருநீலகண்டன்.

            நான்சி செய்யுவப் பாத்ததும் சொன்ன மொத வார்த்தையே, "மொதல்ல இதெ முடிச்சிக்கிட்டு வெளியிலப் போயிடு!”ங்றதுதாம். “அவனுவோ சாமாஞ் செட்டுகள கொடுக்காட்டியும் பரவாயில்ல. நீயி ஒரு வேலையப் பாத்து சம்பாதிச்சிப்புடலாம். இதெ நாம்ம நம்மளோட வாழ்க்கையிலேந்தே புரிஞ்சிக்கிட்டெம். இந்த அஞ்சு வருஷத்துல கோர்ட்டுக்கு அலைஞ்சதெ வுட்டுப்புட்டு நாம்ம வெச்சிருக்குற டைப்பிங்கு சிராக்ஸ் சென்ட்டர்ரா பாத்திருந்தாவே அதெ சுலுவா சம்பாதிச்சிருப்பேம். இந்தக் கேஸ்ஸ நெனைச்சி நெனைச்சியே மன உளைச்சலுக்கு ஆளாயி அதுக்காக சைக்கியாஸ்ட்ரிக் டாக்கடர்ரப் பாத்து மாத்திரையப் போட்டுப் போட்டு ஒடம்பு இப்பிடி உப்பிப் போயிக் கெடக்குது. இப்போ ஒடம்பப் பாக்க தாட்டிகமா இருக்குறதா சொன்னாலும் இத்துயில்ல எம்மட ஒடம்பு. மொத்தத்துல இந்தக் கேஸூன்னு அலைஞ்சு ஒடம்பையும் மனசையும் கெடுத்துக்கிட்டதுதாம் மிச்சம். இத்து ஒரு வெறி, போதென்னும் சொல்லலாம். வழக்கப் போடுறப்ப யாரு சொன்னாலும் அடங்காது. அனுபவப்பட்ட பெறவுத்தாம் அடங்கும். அப்ப அடங்கி எந்தப் புண்ணியமும் இருக்காது. இந்தக் கேஸூ நடந்துகிட்டு இருக்குறப்பவே நல்ல நல்ல சம்பந்தமா செகண்ட் மேரேஜூக்கு வந்துச்சு. நாம்மத்தாம் இந்தக் கேஸையே நெனைச்சிக்கிட்டு வுட்டுப்புட்டேம். யிப்போ நெனைச்சிப் பாத்தா இந்த வழக்குக்காக எம்மட வாழ்க்கையெ தொலைச்சதுதாம் மிச்சம்ன்னு தோணுது. யப்போ இதெ ஜட்ஜ் மொதக்கொண்டு, நம்மட வக்கீலு வரைக்கும் எவ்வளவோ சொல்லிப் பாத்தாங்க. மனசுக்குள்ள இருந்த ஆத்திரம் அதெயெல்லாம் கேக்க முடியாதுன்னுட்டுது. அதெ சொல்லித்தாம் வக்கீலு நம்மள ஒங்கிட்டெ அழைச்சாந்தாரு!"ன்னுச்சு நான்சிப் பொண்ணு செய்யுகிட்டெ ரொம்ப அக்கறையாவும் அனுசரணையாவும்.

            "நாமளும் அப்பிடித்தாம்க்கா வெலகிடலாம்ன்னு பாக்குறேம். நம்மட காசியையே திருப்பி நமக்கு ஜீவனாம்சமா கொடுக்கறதா காயிதத்துல எழுதிக் கையெழுத்துக் கேக்கறாம். நம்மால அதெ தாங்கவே முடியல. படிச்சவந்தானே யக்கா? இதுல டாக்கடர்ரு வேற. அவனுக்கு மான, வெக்க, ரோஷம் எதுவும் இருக்காதா? அவுங்க காசியையே ஜீவனாம்சமா கொடுக்குறதா எழுதிக் கையெழுத்துக் கேக்குறோம்ன்னு? அதெ வெக்கமில்லாம வேற செஞ்சிக்கிட்டு நாமளாத்தாம் பிரிஞ்சிப் போறேம், அவ்வேம் சேந்து வாழத் தயாரா இருக்கேம்ன்னு வேற சொல்லிக்கிறாம். இவனுவோ மட்டும் எதெ செஞ்சாலும் யோக்கியமா எல்லாத்திலயும் காட்டிக்கிடணும். பொண்டுகள அவ்சாரிகளா, அடங்காப்பிடாரிகளா பட்டம் கட்டி வுட்டுப்புடணும். இவனுவோளுக்கு மட்டும் அப்பிடில்லாம் பண்ண மனசு எங்கேருந்து வருது?"ன்னு அழுதுட்டா செய்யு நான்சிகிட்டெ.

            "அழுவாதே! மொதல்ல அவனெ வுட்டுப் பிரிஞ்சிடு. நீயி அவனெப் பிரிஞ்சி அவனுக்கு வெவாகரத்துக் கொடுத்தாத்தாம் அவனுக்கான கேடுகாலம் ஆரம்பிக்கும். அவனப் பிரியாம கேஸ்ஸ நடத்திக்கிட்டே இருந்தீன்னா ஒம்மட புண்ணியத்துல அவ்வேம் நல்லாத்தாம் இருப்பாம். வேணும்ன்னா நீயி அவனெப் பிரிஞ்சிப் பாரு. நாளைக்கே அவ்வேம் ஆக்சிடெண்ட்டுல அடிபட்டுச் செத்துடுவாம். அப்பிடியில்லன்னா சூசைட் பண்ணிட்டெ செத்துடுவாம். யிப்போ அவனெப் பிரியாம வழக்க நடத்திட்டு இருக்குறது அவனுக்குப் பிடிமானம் மாதிரிக்கி. இந்த வழக்குல ஒன்னய ஜெயிக்கணும் ஜெயிக்கணும்ன்னு அவனுக்கு நல்லாவே பிடிமானம் கெடைக்கும். அவனெப் பிரிஞ்சித்தாம் பிடிமானம் யில்லாம கீழே வுழுந்துச் சாவுவாம்!ஒம் கதெயெல்லாமே நமக்கு நல்லாவே தெரியும். வக்கீலு சொல்லிருக்காரு. நாமளும் கோர்ட்டுக்கு வார்றப்போ வெசாரிச்சிருக்கேம்!"ன்னுச்சு நான்சி செய்யுவ ஆறுதல் பண்ணுறாப்புல.

            "அவனுக்குல்லாம் சீக்கிரமா சாவு வாராதுக்கா! பல பேத்தச் சாவடிச்சிட்டுத்தாம் அந்தப் பயெ சாவுவாம். இப்பத்தாம் பெத்தத் தாயெ கொன்னுருக்காம். வரிசயா இன்னும் பலபேத்த கொல்ல வேண்டிய கடமெ அந்தப் பயலுக்கு இருக்குக்கா! நாசமா போறவேம்!"ன்னா செய்யு மனசுல உள்ளதெ கொட்டுறாப்புல.

            "அப்பிடிக் கெடையாது! பாவத்தோடச் சம்பளம் மரணம்ந்தாம். அவ்வேம் நிச்சயம் சாவுவாம். அதுல மாத்தம் ‍கெடையாது! கர்த்தரோட வாக்குப் பொய்க்குறதில்ல!"ன்னுச்சு நான்சி செய்யுவோட மனசெ பலம் பண்ணுறாப்புல.

            "அப்பிடில்லாம் அவ்வேம் சீக்கிரமா செத்துடக் கூடாதுக்கா. உசுரோட யிருந்து நல்ல சாப்பாட்டப் பொங்கிப் பொட ஒரு பொண்ணு யில்லாம, கஷ்ட நஷ்டத்துல ஆறுதல் சொல்ல பக்கத்துல ஒரு பொண்ணு யில்லாம, வெயாதியில படுத்தா கவனிக்க ஒரு பொண்ணு யில்லாம அநாதியா கெடந்து புழுபுழுத்துச் சாவணும்க்கா!"ன்னா செய்யு மனசுல உள்ள ஆத்திரத்தெ இதெ தாண்டி வேறெப்படிச் சொல்றதுன்னு புரியாம.

            "செரி அந்தப் பயெ எப்பிடியோ செத்துட்டுப் போறாம்? நம்மள மாதிரிக்கிப் பொண்ணுகள கொடுமெ படுத்துறவேம் நிச்சயமா நிம்மதியா மட்டும் சாவ மாட்டாம். ஒனக்கும் எனக்கும் உள்ள வேறுபாடுன்னா, நாம்ம சீக்கிரமா சாவுவாங்றேம். நீயி மெதுவாத்தாம் சித்திரவதப்பட்டு சாவணுங்றே. அவ்வளவுதாம். மொத்தத்தல அவனுக்கு நல்லச் சாவு கெடையாது. அத்து உறுதி!"ன்னுச்சு நான்சி செய்யுவ அசமடக்கி அமைதி பண்ணுறாப்புல.

            "சாயுங்காலத்துக்குள்ள ஜட்ஜூகிட்டெ ஒரு முடிவெ சொல்லச் சொல்லிருக்கிறதா சொல்லுறாங்க யக்கா! எனக்கென்னவோ கேஸ்ஸ நடத்துன்னா இந்தப் பயெ காலியாயிடுவானுன்னு நெனைக்கிறேம் யக்கா. ஆளாளுக்கு நாம்ம ஒதுங்கிப் போவப் போவத்தாம் இந்த மாதிரிப் பயலுகளுக்குத் துளிரு வுட்டப்புட்டுப் போறதா நெனைக்கிறேம் யக்கா! நம்மள அவ்வளவு அடிமுட்டாச் சிறுக்கிகன்னு நெனைக்கிறானுவோ. நாம்ம யப்பிடி யில்லன்னு இவனுக்குக் காட்டணும் போல இருக்கு! மனசுக்குள்ள ஆத்திரம் ஆத்திரமா வாருது!"ன்னா செய்யு தம்மோட மனசெ அப்பிடியே தொறந்து காட்டுறாப்புல.

            "நீயி யிப்போ வூட்டுல ச்சும்மாத்தாம் இருக்குதீயா? அதாம் இப்பிடிப் பேசுறே?"ன்னுச்சு நான்சி செய்யுவோட பேச்ச வேற தெசையில திருப்பிக் கொண்டு போறாப்புல.

            "படிச்சிட்டு இருக்கேம் யக்கா. எம்பில் பண்ணிட்டு இருக்கேம்!"ன்னா செய்யு அதுக்கு நான்சியப் பாத்து.

            "நமக்கும் படிக்கணும்ன்னு ரொம்ப ஆசெ. வழிதவறி வந்தாச்சு. இனுமே படிக்க முடியாது. ஆன்னா ஒமக்கு அமைஞ்சிருக்குப் பாரு. அதெ வுட்டுப்புடாதே. பிடிச்சிக்கோ. பிடிச்சிக்கிட்டு மேல போ. நீயி மேல போறதெப் பாத்துப் பாத்தே வவுறு எரிஞ்சிச் செத்துடுவாம். அத்தோட ஒரு கலியாணத்தப் பண்ணி ஒரு கொழந்தையப் பெத்துத் தூக்கிட்டு அவ்வேம் மின்னாடி நடந்துப் போனீன்னா வெச்சுக்கோ சத்தியமா சொல்றேம் அன்னிக்கு ராத்திரியே அதெப் பாத்துப்புட்டு ஒண்ணு தூக்கு மாட்டிப்பாம், யில்ல வெஷத்தக் குடிச்சிடுவாம்! நிச்சயமா அதெ அவனால தாங்க முடியாது. அந்தப் பயலுகள அப்பிடித்தாம் பழி வாங்குணுமே தவுர கோர்ட்டு மூலமால்லாம் எதெயும் பண்ணக் கூடாது. ஏன்னா இந்த வழக்கு நடந்து முடியுறப்போ ஒனக்கு வயசாயிடும். வாழ்கையில தவற வுட்டப் பொருளு, திருடக் கொடுத்த சாமாம், ஏமாந்து வுட்ட நகெநட்டுன்ன எதெ வாணாலும் சம்பாதிச்சிப்புடலாம். வயசெ வுட்டா, அந்த வாலிப்பத்த வுட்டா அதெத் திரும்பப் பெறவே முடியாது. அந்தந்த வயசுக்குக் கலியாணம் நடந்து புள்ளையப் பெத்துக்கிட்டாத்தாம், நாம்ம நல்லா இருக்குறப்பவே அதுகளுக்கு ஒரு கலியாணத்தப் பண்ணி வுட்டுப்புட்டு பேரப் புள்ளைகளப் பாக்கலாம் பாரு. இப்பிடி கோர்ட்டு கேஸூன்னு அலைஞ்சி வயசுப் போச்சுன்னா எல்லாம் தள்ளித் தள்ளிப் போவும் பாரு. அதாலத்தாம் சொல்றேம். அத்தோட அனுபவப்பட்ட மொறையிலயும் சொல்றேம். நம்மோட வயசு போச்சு பாரு. இனுமே அதெ எத்தனெ காச கொட்டுனாலும் திருப்பிக் கொண்டார முடியாது. நாம்ம சொல்றது நிச்சயம் சரியான ஒண்ணு! இன்னியோட அவனெ தொலைச்சிக் கட்டி தலைய முழுவு. பாத்துப்பேம்!"ன்னுச்சு நான்சி பொண்ணு முடிவான உண்மெயெ செய்யுவுக்கு உபதேசம் பண்ணுறாப்புல.

            "ஒஞ்ஞ கேஸூ யிப்போ எப்பிடி இருக்கு?"ன்னா செய்யு நான்சியப் பாத்து வாஞ்சையா கேக்குறாப்புல.

            "அத்துத் தீர்ப்பாவும். இருந்தாலும் நாம்ம யிப்போ அது வரையிலயும் கூட காத்திருக்கிறதா யில்ல. அறுவது பவுனு நகெ, மூணு லட்சம் பணம், கலியாணச் சீரு வரிசெ சாமானுங்களத் தர்றதா அவுங்க தரப்புலேந்து சொல்றாங்க. அதெ வாங்கிக்கிட்டுக் கொர்ட்டுக்கு வெளியில வெச்சி முடிச்சிட்டு வழக்குக அத்தனையையும் வாபஸ் வாங்கிடப் போறேம். மிந்தியும் இதெயேத்தாம் சொன்னாங்க, சமரசம் பண்ணாங்க. நாம்மத்தாம் கேக்காம தப்புப் பண்ணவங்க தண்டென அனுபவிக்கணும்ன்னு நெனைச்சிக்கிட்டு வழக்க வுட முடியாம தொடந்துட்டேம்! கடெசியில வயசெ தொலைச்சு மன உளைச்சலு அதிகமாயி தண்டனெ அனுபவிச்சது நாம்மத்தாம் போலருக்கு. இத்து இப்பத்தாம் வௌங்குது!"ன்னுச்சு நான்சி தன்னோட மனநெலையெ துல்லியமா படம் பிடிச்சுக் காட்டுறாப்புல.

            "யப்போ தப்புப் பண்ணவங்க தண்டனெ அனுபவிக்க வேண்டியதில்லையா?"ன்னா செய்யு நான்சியப் பாத்து பரிதாபமான கொரல்ல.

            "தப்புப் பண்ணவங்க தண்டனெ அனுபவிக்க வேண்டித்தாம். தப்பே பண்ணாத நீயி ஏம் தண்டனெ அனுபவிக்கணும்? தப்புப் பண்ணதுக்கு அவுங்களுக்கு இத்தனெ வருஷம் போனா பரவாயில்ல. தப்பே பண்ணாத நீயி ஏம் இத்தனெ வருஷத்தெ வீணடிச்சிக்கிட்டுக் கெடக்கணும்? அவனுவோ ஆம்பளையோ! எதெ வேணாலும் பண்ணுவானுவோ! நம்மள கலியாணத்தக் கட்டிக்கிட்டெ இன்னொருத்திய வெச்சிக்கிட்டவேம் எங் கதையிலன்னா, ஒங் கதையில நீயி வழக்குல இருக்குறதால, பிரிஞ்சிக் கெடக்குறதால இதாங் சான்ஸூன்னு ஒரு பொண்ண அழைச்சாந்து குடித்தனத்த நடத்திக் கொழந்தையையும் பெத்துப்புடுவாம். அத்துத் தெரிஞ்சி நீயி கோர்ட்டுல கேஸ்ஸப் போடுறதுக்குள்ள வருஷங்க ஓடிப் போயிடும். அப்பிடியே கேஸ்ஸப் போட்டாலும் அவனுக்கு ஒண்ணும் பெரிசா தண்டனெ ‍கெடைச்சிடாது. பெரிசா தண்டனையையும் வாங்கிக் கொடுத்துப்புடயும் முடியாது. கோர்ட்லயும் வெச்சி இதெ போல சமாதானத்தப் பேசி முடிங்கன்னுத்தாம் சொல்லுவாங்க. அப்பிடியே நீயி வழக்க நடத்த ‍நெனைச்சாலும் அதுக்கு ஏத்தாப்புல நம்மள வுட ரொம்ப தெறமையான வக்கீலப் பிடிச்சி அவ்வேம் வழக்க நடத்தி எல்லாத்துலேந்தும் ஒண்ணும் பண்ணாதவனப் போல தப்பிச்சிப் போயிட்டே இருப்பாம். வழக்கப் போட்ட வகையில ஒன்னோட காசியும், ஒன்னோட காலமும்தாம் வீணாப் போயிக் கெடக்கும். அதுக்குத்தாம் சொல்றேம் தப்புப் பண்ணவங்கள நாம்ம தண்டிக்க வாணாம். ஆண்டவரு ஒருத்தரு இருக்காரு. அவருகிட்டெ ஒப்படைச்சிட்டு நாம்மப் பாட்டுக்கு அமைதியா இருப்பேம்!"ன்னுச்சு நான்சி தன்னோட அனுபவப் பாடத்துல கத்துகிட்டதெ அப்பிடியே செய்யுகிட்டெ எறக்கி வைக்குறாப்புல.

            "அப்பிடில்லாம் அமைதியா இருக்க முடியுமா ன்னா? நாம்ம ன்னா உணர்ச்சியே யில்லாத சடமா? மரக்கட்டையா? எல்லாம் ஆண்டவன்னா மனுஷம் நாம்ம எதுக்கு?"ன்னா செய்யு நான்சி சொல்றதெ எதையும் மனசளவுல ஏத்துக்க முடியாததெப் போல.

            "நீயி சண்டெ போட்டா கூட அவ்வேம் அந்த அளவுக்கப் பாதிக்கப்பட மாட்டாம். நீயி அமைதியா இருக்க இருக்க அவ்வேம் ரொம்ப பாதிக்கப்பட்டுப் போவாம். மன்னிப்புங்றது ரொம்ப பெரிய தண்டனெ. அவனுக்கு அந்தத் தண்டனையக் கொடுத்துப்புட்டு நீ பாட்டுக்கு அமைதியாயிட்டேன்னா அவ்வேம் அணுஅணுவா சித்திரவதைய அனுபவிக்கிற மாதிரித்தாம்!"ன்னுச்சு நான்சி செய்யுவுக்குத் தீர்க்கமா ஒரு முடிவெ சொல்றாப்புல. அதெ கேட்டுட்டு செய்யு எல்லாரையும் ஒரு தடவேப் பாத்தா எப்பிடிப்பட்ட முடிவெ எடுக்கறதுன்னு. அவளுக்குள்ள இப்போ ஒரு கொழப்பம் வந்திருக்கும் போல. விகடுவெப் பாத்து, "ஒம் முடிவு என்னாண்ணே?"ன்னா.

            "ஒன்னோட மனநெலத்தாம் எஞ்ஞளுக்கு இப்போ முக்கியம். ஒமக்குச் சரின்னு எது படுதோ அந்த முடிவெ எடு. நம்மளப் பொருத்தமட்டில பணங்காசி, நகெநட்டு வந்தாலும் ஒண்ணுத்தாம். அத்து வாணாம்ன்னு கேஸ்ஸ நடத்துன்னாலும் ஒண்ணுத்தாம். எப்பிடி நடக்குறது ஒம் மனசுக்குச் சந்தோஷத்த தருதோ அந்தப்படிக்கு முடிவெ எடுத்துக்கோ!"ன்னாம் விகடு பட்டுன்னு தன்னோட கருத்தெ சொல்றாப்புல.

            செய்யு கைப்புள்ளயப் பாக்குறதுக்கு மின்னாடி அவர சொன்னாரு, "ச்சும்மா கோர்ட்டு கேஸூன்னு அலைஞ்சிக்கிட்டு நிக்க வாணாம். முடிச்சிட்டு வெளியில வர்ற வழியப் பாக்கணும். தப்பித் தவறி சாக்கடையில வுழுந்துப்புட்டா அதுலேந்து வெளியில வர்றதத்தாம் பாக்கணும். எப்பிடி வுழுந்தேம்ன்னு திரும்ப ஒரு தவா வுழுந்துப் பாக்கக் கூடாது. வெளியில வந்துப்புடு. நாயீ நம்மள கடிச்சா நாம்ம நாய வுழுந்தா கடிக்க முடியும்? சாக்கடையில வுழுந்ததுக்கு சாக்கடைய தண்டிக்கவா முடியும்? கேஸ்ஸ முடிச்சிப்புடு!"ன்னாரு அவரு பொட்டுன்னு ஒரு முடிவெ சொல்றாப்புல.

            அப்பங்காரரான சுப்பு வாத்தியாரையும் பாத்தா செய்யு. "ஒண்ணும் அவ்சரமில்லே. இன்னிக்கே ஒடனே முடிவு எடுக்கணுமா ன்னா? எவ்வளவோ நாளு அலைஞ்சாச்சு. எவ்வளவோ காலத்தெ வெரயமும் பண்ணியாச்சி. ஒரு முடிவுக்கு வாரதுக்காக ஒரு நாளு யில்ல ஒரு வாரம் எடுத்துக்கிடறதுல ஒண்ணும் குத்தமில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட யோஜனைய சொல்றாப்புல.

            "அப்பிடின்னா மவனெ இன்றுப் போயி நாளை வான்னு சொல்லிப்புடலாமா?"ன்னாரு எல்லாத்தையும் இது வரைக்கும் ஒண்ணும் சொல்லாம ஆழமா கவனிச்சிக்கிட்டு, எல்லாரையும் பேச வுட்டுக்கிட்டுப் பாத்துட்டு இருந்த திருநீலகண்டன் வக்கீல்.

            "வூட்டுலயும் நாஞ்ஞ ஆர அமர உக்காந்துப் பேசிக் கலந்துக்கிறேம். அதுக்குப் பெறவு சொல்றேம். இந்த அளவோட நிறுத்திக்கிறதா? யில்ல வழக்கத் தொடந்துக்கிறதான்னு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதாங் சரிங்ற மாதிரிக்கி.

            "நம்மளப் பத்தி ஒண்ணுமில்ல. வழக்க நடத்துறதுன்னாலும் நடத்துறேம் நான்சியோட கேஸ்ஸப் போல. வழக்க முடிக்கலாம்ன்னாலும் முடிக்கிறேம் கைப்புள்ளையோட பங்காளிப் பொண்ணோட கேஸ்ஸப் போல. ரண்டுக்கும் நாம்ம ரெடித்தாம். ஒங்கப் பதிலப் பொருத்துதாம் முடிவு பண்ணணும்! வீட்டுக்குப் போயி நல்லா யோசிச்சே போன்ல சொல்லுங்கப் பதில! இங்கத்தாம் உக்காந்து ஒடனே முடிவெ எடுக்கணும்ங்ற அவசியமில்ல!"ன்னாரு வக்கீலு திருநீலகண்டன் சுப்பு வாத்தியாரு சொல்றதெ ஆமோதிக்குறாப்புல.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...