15 Dec 2020

சட்டம் பெண்களின் பக்கம்!

சட்டம் பெண்களின் பக்கம்!

செய்யு - 656

            எல்லாம் முடிவாயி கடெசீ நேரத்துல சில வெசயம்ங்க ஒத்துக்கிடாம இதெ மாதிரிக்கிக் கலந்துப் பேசிக்கிட்டு நின்ன கேஸூங்க ரண்டு மூணு அங்க நின்னுகிட்டுத்தாம் இருந்துச்சு. அதுல ஓடாச்சேரியிலேந்து வந்திருந்த ஒரு வாத்திச்சியம்மா இருந்தாங்க. அவுங்களுக்கு வயசு எப்படியும் நாப்பதஞ்சுக்கு மேல இருக்கும். அவுங்க யாருகிட்டெயும் பேசாம ஒதுங்கித்தாம் உக்காந்திருந்தாங்க. இந்தக் பீஸ் கோர்ட்டுக்குத் தன்னந்தனியா வந்திருந்த ஆளுகன்னு பாத்தா அவுங்க ஒருத்தருதாம். மித்தவங்க எல்லாம் தொணைக்கு யாராச்சும் ஒருத்தர்ற அழைச்சிட்டுத்தாம் வந்திருந்தாங்க. தனியா உக்காந்திருக்குற அவுங்க அந்தந்த நேரத்துக்குப் போயி டீத்தண்ணியக் குடிச்சிட்டு வரற்து, சாப்புட்டு வர்றதுன்னு ரொம்ப சரியா இருந்தாங்க. அவுங்க நடக்குற நடையில அசாத்தியமான ஒரு தெகிரியம் இருந்துச்சு.

            அந்த வாத்திச்சியம்மாவுக்கு நேர் மாறா அவரோட புருஷங்காரரு எல்லாருகிட்டெயும் பேசிக்கிட்டு நின்னாரு. அவரு கூட அவரோட அண்ணன் தம்பிகன்னு நாலைஞ்சு பேரு வந்திருந்தாங்க. அவருக்கு அந்த வாத்திச்சி அம்மாவோட கலியாணம் ஆயி இருவது வருஷத்துக்கு மேல இருக்கும்ன்னும், வெவாகரத்து ஆயி பாஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும்ன்னும் சொன்னாரு. வெவாகாரத்து ஆன ஆளு எதுக்குய்யா கோர்ட்டுக்கு வந்தீருன்னு கேட்டா, "வெவாகரத்து வாங்குன பொண்டாட்டி இந்த வயசுல எஞ் சொத்துல பாதியக் கேட்டு வழக்கப் போட்டிருக்காங்கய்யா! இத்தனெ நாளும் அவளுக்கு இப்பிடி ஒரு நெனைப்புக் கெடையாதுங்கய்யா. எல்லாம் அவ்வே கூட வேல பாக்குற வாத்திகளும், வாத்திச்சிகளும் பண்ணுற வேல!"ன்னாரு அந்தப் புருஷங்காரரு. அவரோட கதெயக் கேக்க வித்தியாசமா இருந்ததால யிப்போ அவர்ரப் பத்தியும் அவரோட நெலமையப் பத்தியும் வெசாரிக்கிறதுல இப்போ இருந்த நெலையில ஒரு உண்டாயிப் போச்சுது சுப்பு வாத்தியாருக்கும், கைப்புள்ளைக்கும்.

            "இத்தென்ன இஞ்ஞ வந்து நம்மக் கதெயெ ஆவுமா? ஆவாதான்னு பாக்காம இன்னொருத்தருக் கதெயெக் கேட்டுக்கிட்டு?"ன்னு விகடு மெல்லாமா கைப்புள்ள காதுக்கு மட்டும் கேக்குறாப்புல கேட்டாம்.

            "அட ச்சும்மா இருப்பா. இவரு கதெயிலேந்து நம்ம கதெக்கு எதாச்சும் கெடைக்குதான்னுப் பாக்குறேம். அதுக்குத்தாம் இந்தக் கதெய யிப்போ நோண்டுறேம்!"ன்னு கைப்புள்ளயும் விகடுவோட காதுக்கு மட்டும் கேக்குறாப்புல மொல்லமா சொன்னாரு. செரி எதையாச்சிம் கேட்டுக்கிட்டுத் தொலைங்கன்னு விகடு அவ்வேம் பாட்டுக்குக் கேக்குறதெ கேட்டுப்புட்டு உக்கார்றதுன்னு முடிவெ பண்ணிட்டாம்.

            "அதுல பாருங்க! வெவகாரத்து ஆயி எப்பிடித் திரும்ப கேஸ்ஸூ வாரதுன்னு தெரியலையே?"ன்னாரு கைப்புள்ள பேசத் தூண்டுறாப்புல.

            "அதெ ஏங் கேக்குதீயே? அப்பயும் இப்பிடித்தாம், பாஞ்சு வருஷத்துக்கு மின்னாடி கேப்பாரு பேச்சக் கேட்டுக்கிட்டு வக்கீலு நோட்டீஸ்ஸ அனுப்பிச்சிட்டா நமக்குப் பொண்டாட்டின்னு வந்தவெ. நாமளும் எவ்வளவோ பேச்ச வெச்சிப் பாத்தேம். ஒத்துகிடல. ரண்டு வருஷம் அப்பிடி இப்பிடின்னு இழுத்துப் பாத்துப்புட்டு வேற வழியில்லாம வெவகாரத்தக் கொடுத்து முடிச்சிக்கிட்டெம். அவளும் வேலையில இருக்குறா, நாமளும் வேலையில இருக்குறதால இந்த ஜீவனாம்சத்தெப் பத்தில்லாம் யாரும் யோஜிக்கல. அப்ப அத்து ஒரு பெரிய விசயமாவும் தெரியல. ரண்டு பேரும் பிரிஞ்சிப் போனாப் போதும்ன்னு போயாச்சு. அத்து யிப்போ இம்மாம் பெரிய வெவகாரமா கெளம்பும்ன்னு நெனைக்கல!"ன்னாரு அந்தப் புருஷங்காரரு பழங்கதையில உண்டான பாரத்தெ சொல்றாப்புல.

            "ஏம் நீஞ்ஞ அந்த யம்மாவோட யப்பா, யம்மாகிட்டெ, ஒறவுகிட்டெப் பிரிஞ்சிப் போவுறதுக்கு வுடாம எதாச்சும் பேசலாயா?"ன்னாரு கைப்புள்ள அவரோட பெரச்சனையோட உள் ஆழத்த வௌங்கிக்கிறதுக்கான வெவரத்தெ வரவழைக்கிறாப்புல.

            "பேசாமலா இருந்திருப்பாங்க? எல்லாம் நம்ம கதெயப் போலத்தாம் இருந்திருக்கும். பேசியும் பெரயோஜனெம் யில்லாம!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தாம் நொம்பலப்பட்ட கதெயெ சொல்லாம சொல்றாப்புல.

            "அதில்லங்கய்யா வெசயம்! அந்தப் பொண்ணு ஒரு அனாதிங்கய்யா. அனாதி ஆசிரமத்துல வளந்தப் பொண்ணு. நாம்ம வேலைக்குப் போறதுக்கு மின்னாடியே கட்டுனா இப்பிடி அனாதியா இருக்குற பொண்ணுக்கு வாழ்க்கெ கொடுக்குறாப்புலத்தாம் கலியாணத்தக் கட்டுவேம்ன்னு நின்னுட்டேம்ய்யா. வூட்டுல எஞ்ஞ அப்பங்காரரு, அண்ணங்காரருக்குல்லாம் இதுல எதுப்புத்தாம். அந்த எதுப்பையும் மீறிப் பண்ணுனங்கய்யா. கலியாணம் ஆயி ரண்டு கொழந்தெ பொறந்து அது வரைக்கும் எந்தப் பெரச்சனையும் கெடையாதுங்கய்யா. அதுக்குப் பெறவுத்தாம் பெரச்சனையே!"ன்னாரு அந்தப் புருஷங்காரரு ஒரு பீடிகைய வைக்குறாப்புல.

            "அப்பியென்ன பெரச்சனெ?"ன்னாரு கைப்புள்ள அந்தப் பீடிகைய ஒடைச்சு வெளியில கொட்டுறாப்புல.

            "அவளோட சம்பாத்தியத்துக்குத்தாம் நாம்ம அவளெ கலியாணத்தக் கட்டிக்கிட்டேம்ன்னா. அப்பிடி யில்லன்னா அவளோட சம்பாத்தியம் முழுசையும் அவ்வே வளந்த அநாதி ஆசிரமத்துக்கே கொடுக்கணும்ன்னு நின்னா. நாமத்தாம் ரண்டுக் கொழந்தயா ஆயிடுச்சு. அதுக்குச் சொத்துச் சொகத்தெ சேக்க வேண்டியதில்லய்யான்னு அதுக்குச் சம்மதிக்கல. அத்தோட கொழந்தைங்களையும் வூட்டுல இஞ்ஞ வெச்சிப் படிக்க வைக்க கூடாது. ரெஷிடன்ஷியல் பள்ளியோடமா பாத்துதாம் சேத்து வுடணும்ன்னா. அவ்வே அப்பிடி ஆசிரமத்துல இருந்த படிச்சவாசித்தாம் வேலைக்குப் போவ முடிஞ்சதுன்னா. அதுக்கும் நாம்ம சம்மதிக்கலங்கய்யா. இதுல ஆரம்பிச்ச பெரச்சனத்தாம். கொழந்தெங்களோட பிரிஞ்சிப் போயி வூடு எடுத்துக்கிட்டு வம்புக்கு நின்னா. ஆனா புள்ளீயோளுக்கு அவ்வே கூட இருக்க இஷ்டம் இல்லாம நம்மகிட்டெ ஓடியாந்துட்டுங்க. அதுல வேற வெறுப்பு! வழக்கு நடந்தப்போ புள்ளீயோள கோர்ட்டுக்குல்லாம் கொண்டாந்து ஜட்ஜ் மின்னாடி நிறுத்தி அப்பங்காரரு கூடத்தாம் இருப்பேம்ன்னு புள்ளீயோ சொன்ன பெறவுத்தாம் வுட்டாங்கன்னா பாருங்க! ரொம்ப வேதனையான காலம்யா அதெல்லாம்! மறுக்கா அதெ வேதனையான காலக்கட்டம் திரும்பியிருக்கு!"ன்னாரு அந்தப் புருஷங்காரரு தன்னோட மனசு பாரத்தையெல்லாம் கொட்டுறாப்புல.

            "செரி நீஞ்ஞத்தாம் ஒத்துப் போயி ஒஞ்ஞகிட்டுப் பிரிஞ்சிப் போன பொண்டாட்டிக்காக சொத்துல கொஞ்சம் எழுதி வெச்சிட்டுச் சுமூகமா இந்தப் பெரச்சனைய முடிச்சிட்டுப் போங்களேம்!"ன்னாரு கைப்புள்ள அவரோட பெரச்சனைக்கு பெருந்தன்மையான ஒரு வழிய காட்டுறாப்புல.

            "அத்து எப்பிடிங்கய்யா முடியும்? சம்பாதிச்சதெல்லாம் நாம்ம. அவ்வேம் காசிய ஒத்த பைசாவே நமக்குக் கொடுத்ததில்ல. புள்ளீயோ அவ்வே கூட இருந்தாலும் செரித்தாம்ன்னு புள்ளீயோளுக்குக் கொடுக்குறதா நெனைச்சிக் கொடுத்துப்புடலாம். புள்ளீயோளும் நம்மகிட்டெ கெடக்குதுங்க. அவ்வே ஒத்த மனுஷி. அவ்வே இப்போ வாங்கற சம்பளம் இருக்கே. அத்து ரொம்ப அதிகெம். அந்தப் பணங்காசியே அவளுக்குப் போதும்! பெறவெதுக்குய்யா நம்மட சொத்து? கஞ்சிக்கு வழியில்லன்னாலும் செரித்தாம் போ தர்மம் பண்டுனதா நெனைச்சிட்டுக் கொடுத்துப்புடலாம். இவ்வெ இருக்குற நெலைக்கு என்னத்தெய்யா கொடுக்குறது?"ன்னாரு அந்தப் புருஷங்காரன் தம் பக்கத்து ஞாயத்தெ கைப்புள்ளயோட தலையில கொட்டுறாப்புல.

            "நீஞ்ஞ வைக்குற ஞாயமும் செரித்தாம். பெறவு ஏந்தாம் அந்தம்மா சொத்துல பங்குக் கேக்குது? சாவுக்குப் பின்னாடி ஒட்டா, ஒறவா ஒண்ணும் இல்லன்னு ஆனதுக்குப் பெறவு?"ன்னாரு கைப்புள்ள வெவகாரத்தோட மூலத்தெ கப்புன்னு பிடிக்குறாப்புல.

            "அந்தச் சொத்த வாங்கி அவ்வே வளந்த அநாதி ஆசிரமத்துக்கு எழுதி வைக்க நெனைக்குறா. அவ்வே காசிய வேணும்ன்னா எழுதி வெச்சிக்கிடட்டும். அதெ யாரு என்ன சொல்லப் போறா? அது வுட்டுப்புட்டு நாம்ம ஒழைச்சுச் சம்பாதிச்சக் காசியில் பாதியையும் புடுங்கி எழுதி வைப்பேன்னா? யாரு காசிய வாங்கி யாருக்கு எழுதி வெச்சிப்புட்டு நாளைக்கி எம் புள்ளீயோ ரோட்டுல அநாதியா நிக்குறதா? அதுக்குத்தாம் வுடக் கூடாதுன்னு மல்லுகட்டிக்கிட்டு நிக்குறேம். கோர்ட்டுலேந்து யிப்போ சமசரம் பேசுறதுக்காக இஞ்ஞ வந்திருக்கு. அவ்வே சொத்துலப் பாதியக் கொடுத்தாத்தாம் சமரசம் ஆவேன்னு நிக்குறா. நாம்ம கொடுக்க மாட்டேம்ன்னு சமரசம் ஆவாம நிக்குறேம். அதாங்கய்யா யிப்போ நடந்துக்கிட்டு இருக்குது!"ன்னாரு அந்தப் புருஷங்காரரு கைப்புள்ளைக்கு தன்னோட முடிவெ தீர்க்கமா வௌக்குறாப்புல.

            "செரி! வெவாகரத்து ஆனாலும் யம்மாக்காரி புள்ளீயோளா பாக்கணுங்ற சட்டம்ல்லாம் இருக்கே? அந்த யம்மாக்காரி புள்ளீயோள பாக்க வருதா? எப்பிடி அந்தச் சமாச்சாரத்தச் சொல்லுங்க!"ன்னாரு கைப்புள்ள என்னவோ பேட்டி எடுக்குற நிருபரப் போல.

            "அந்தக் கதெய ஏம் கேக்குதீயே? ரண்டு மூணு தடவெ வந்திருப்பா. புள்ளீயோ பாக்க முடியாதுன்னு அடம் பண்ணுச்சுங்க. அழுது ஆர்ப்பாட்டம் வேற. அவளுக்கு அசிங்கமா போயிருக்கும் போல. புள்ளீயோ பாக்கவே முடியாதுன்னு சொன்னதுல அப்பிடியே அதெ வுட்டுப்புட்டா. எங்கேயாச்சும் புள்ளீயோள வெளியில பாத்தாத்தாம் உண்டு. அப்ப எதாச்சும் ஆசெயா வாங்கிக் கொடுப்பாளாம். புள்ளீயோ அதெ வாங்கிக்கிடாம ஓடியாந்திடுறதா சொல்லும்ங்க. புள்ளீயோ ரண்டும் அது கூட நெருங்காத காரணத்தால அத்து ஒரு வெறுப்பு இருக்கும் போலருக்கு. அதாங் நமக்குப் பின்னாடி நம்ம சொத்தெல்லாம் புள்ளீயோளுக்கும் போவும்ன்னு தெரிஞ்சிக்கிட்டெ அதுல பாதியப் பிரிச்சிக் கொண்டு போயி அநாதி ஆஸ்ரமத்துல சேக்குறதா நிக்கறா?"ன்னாரு அந்தப் புருஷங்கார்ரேம் தம் புள்ளைங்க தம் மேல வெச்சிருக்குற பாசத்தெ அழுத்திச் சொல்றாப்புல.

            "அதெ வுடுங்க. பிரிஞ்சிப் போயி இவ்வளவு காலம் ஆயியும் தனியாவா யின்னும் இருக்காங்க? வேற கலியாணம் எதாச்சும் ஆயிடலயா ன்னா?"ன்னாரு கைப்புள்ள அடுத்த வெசயத்தெ நோண்டுறாப்புல.

            "நெருப்புங்கய்யா அவ்வே அந்த விசயத்துல. ஆம்பளைங்க யாரையும் அண்ட வுட மாட்டா. எரிஞ்சி எரிஞ்சி வுழுவா. யாருகிட்டெயும் ஆம்பளன்னு மட்டுமில்ல பொம்பளையோ கூட பேச்சு வெச்சிக்கிட மாட்டா. கூட வேல பாக்குற சில பேத்துகளோட பேசுறதுதாம். அந்தப் பேச்சுல வந்ததுதாம் இதெல்லாம். நம்மள வுட்டுப் பிரிஞ்சி வாழ்ந்தாலும் அந்த ஒரு விசயத்துல யாரும் நாக்கெ நீட்டி ஒரு வார்த்தெ சொல்லிப்புட முடியாது. இன்னொரு வெசயத்தையும் தெரிஞ்சிக்கோங்க. அப்பிடி ஒருவேள அவ்வே இருந்தாத்தாம் அதெ ஒரு காரணத்தெ காட்டி வழக்க முடிச்சிப்புடலாமே!"ன்னாரு அந்தப் புருஷங்காரரு பிரிஞ்சிப் போனாலும் தம் பொண்டாட்டியப் பத்தி பெருமிதமா.

            "எல்லாஞ் சரித்தாம்! யிப்போ என்னத்தெ பண்ணுறதா உத்தேசம்?"ன்னாரு கைப்புள்ள அந்தப் புருஷங்காரரோட மனநெலைய ஊடுறுவுறாப்புல.

            "கோர்ட்டு, சட்டம்ல்லாம் பொம்பளைக்குத்தாம்யா சாதவம். நாம்ம என்னத்தெத்தாம் கேஸ்ஸ எடுத்து நடத்துனாலும் கடெசியில பொம்பளைக்குச் சாதவமாத்தாம் முடியும். அந்த நம்பிக்கையிலயும் தெகிரியத்துலயந்தாம்யா இந்த வயசுல வந்து கேஸ்ஸப் போட்டுக்கிட்டு உக்காந்திருக்கிறா அவ்வே. அதாலத்தாம் நம்மட புள்ளீயோளக் கொண்டாந்து பேசுலாமான்னு ஒரு யோஜனெ. அதுக ரண்டும் பேசுனாச்சும் மனசு மாறுதுன்னா பாப்பேம். அதெ வுட்டா வக்கீலு சொல்றதுதாங் கதி. இன்னும் ரண்டு மூணு வருஷம் ஆன்னா புள்ளியோளுக்குக் கலியாணத்தப் பண்ணி வெச்சிப்புடலாம். இந்த நேரத்துல நமக்கு இப்பிடி ஒரு தலவேதனெ. பொண்ணுப் புள்ளீயோளுக்குக் கலியாணத்தப் பண்ணி வெச்சி பேரப் புள்ளீயோளப் போட்டுக் கொஞ்சிட்டுக் கெடக்க வேணும். யிப்போப் போயி புருஷன் பொண்டாட்டி வழக்குன்னு கோர்ட்டுல வந்து நிக்குறது கொஞ்சமாச்சும் ஞாயமா படுதாங்கய்யா?"ன்னு அந்தப் புருஷங்காரரு கண்ணாடியக் கழட்டுறாரு. அவரு கண்ணுலேந்து கண்ணுத் தண்ணிச் சொட்டுது. அவருக்கு எப்பிடி ஆறுதலெச் சொல்றதுன்னு தெரியாம அணைச்சிக்கிட்டாரு கைப்புள்ள. அப்பிடியே செய்யுவப் பாத்து, "கேட்டீயா! கோர்ட்டும் சட்டமும் பொண்டுகளுக்குச் சாதவமாத்தாம் இருக்காம். நீயி தெகிரியமா இரு. நம்மட வக்கீலு வாரட்டும் பேசுவேம். இவனுவோ நம்மளப் பலவீனம் பண்ணிப்புடலாம்ன்னு நெனைச்சிக்கிட்டு நம்மட வக்கீலுப் பத்தியெல்லாம் அவரு யில்லாத நேரமாப் பாத்துக் கொறையச் சொல்றானுவோ! நமக்குத் தெரிஞ்ச வகையில அப்பிடில்லாம் வெலை போவுற ஆளு கெடையாது நம்மட வக்கீலு!"ன்னாரு கைப்புள்ள அந்தப் பக்கம் கேட்டதெ வெச்சு இந்தப் பக்கம் தேத்துறாப்புல.

            அதெ கேக்க கேக்க செய்யுவோட மனசுல ஒரு நம்பிக்கெ போறந்துச்சு. அந்த நம்பிக்கெ அந்த நேரத்துக்கு அவளுக்கு ரொம்பத் தேவையா இருந்துச்சு. அவளுக்கு மட்டுமில்ல, விகடு, சுப்பு வாத்தியாருன்னு எல்லாருக்குமே தேவையாத்தாம் இருந்துச்சு. "நமக்கு அதெல்லாம் புரியாம யில்ல. எல்லாமும் பொண்ணுகளுக்குச் சாதவமா இருக்குறப்போ இவனுவோ எந்தத் தெகிரியத்துல யின்னும் கொடுக்குறதுல யிப்பிடி தப்பிலித்தனம் பண்ணிட்டுக் கெடக்குறானுவோ?"ன்னா செய்யு தன்னோட ஞாயமான சந்தேவத்தக் கேக்குறாப்புல.

            "எப்பிடியாச்சும் ஏமாத்தித் தலையில மெளவாய அரைச்சிப்புட்டுப் போயிடுலாங்ற நம்பிக்கெயும், நெனைப்புந்தாம்! அடப் போங்கடா சட்டமே பொண்டுகப் பக்கந்தாம்!"ன்னாரு கைப்புள்ள தெடமா நம்பிக்கெ கொடுக்குறாப்புல.

            "நாம்ம ஒண்ணும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல வேண்டியதில்ல. நமக்கு நடந்ததெச் சொன்னாலே போதும். கோர்ட்டுல ஞாயத்தப் பண்ணிடுவாங்க. சட்டம்ன்னு மெறையாப் போனா அந்தப் பயலுக்கு ஆபத்துதாம். அத்துத் தெரியாம வெளையாடுறாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரும் கைப்புள்ள பேச்ச ஆமோதிக்குறாப்புல.

            "எல்லாமே அந்தப் பயலுவோளுக்குத் தெரியும். அதுக்குத்தாம் நம்மள உருட்டறது, மெரட்டுறது, வக்கீலு மேல பழியச் சொல்றது, ஆகாத வேல அத்தனையும் பாக்கறது! பாக்கட்டும் பாக்கட்டும் எத்தனெ நாளுப் பாப்பானுவோ? நம்ம பொண்ணு தெகிரியமா போங்கடா கோர்ட்டுல வெச்சிப் பாத்துக்கிடுறேம்ன்னு சொன்னா முடிஞ்சிடுச்சுச் சுத்தமா. கழிஞ்சிடுவானுவோ ஒவ்வொருத்தனும்! அந்த நெலமெ வந்துப்புடக் கூடாதுன்னுத்தாம் குறுக்கு வெசாரனெயச் சொல்லி மெரட்டுவானுவோ! ன்னா பெரிய குறுக்கு வெசாரணெ? ஆமான்னு ஆம்மான்னு சொல்லணும். இல்லன்னா யில்லன்னு சொல்லணும். அவ்வளவுதாங் வெசயம்!"ன்னாரு கைப்புள்ள செய்யுவுக்கு ஒரு தெளிவையும் நம்பிக்கையையும் கொடுக்குறாப்புல.

            இங்க இப்பிடிப் பேச்சு நடந்துக்கிட்டு இருக்கிறப்பவே திருநீலகண்டன் வக்கீலு கோர்ட்டுல கேஸ்ஸூ முடிச்சி ஒரு பொண்ண கூடவே அழைச்சிக்கிட்டு வந்தாரு. அந்தப் பொண்ணு ஆளு நல்ல ஒசரமாவும், தாட்டிகமாவும், கருப்பாவும் இருந்துச்சு. "ஒஞ்ஞளுக்கு அடுத்த கட்டமா ஒரு தெளிவ உண்டு பண்ணுறதுக்காக இந்தப் பொண்ண அழைச்சாந்திருக்கிறேம். கேஸ்ஸூ சீக்கிரமா தீர்ப்பாவப் போவுது இவுங்களுக்கு. அனுபவப்பட்டவங்களோட வாசகந்தாம் கோர்ட்டப் பொருத்த மட்டில பொன்னான வாசகம்ங்க. அதாலத்தாம் வாடா பொண்ணுன்னு அதெயும் சித்தெ கெளப்பிக்கிட்டு வந்திருக்கேம். ஒங்க கதெயே வர்றப்பவே சொல்லிட்டுத்தாம் வந்தேம். இந்தப் பொண்ணோட சித்தெ பேசுங்கோ. இன்னும் தெளிவு கெடைக்கும்!"ன்னாரு வக்கீலு அங்க நின்னுகிட்டு இருந்த எல்லாத்தையும் பாத்து.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...