14 Dec 2020

வாழ்நாள் ஜீவனாம்சம்

வாழ்நாள் ஜீவனாம்சம்

செய்யு - 655

            வக்கீல் திருநீலகண்டன் அந்த வக்கீல் நோட்டீஸை வாங்கிப் படிச்சாரு. "தப்பு பண்ணிட்டீங்க சார்! இதெ அங்கப் போயி வாங்கியருக்கக் கூடாது! ரொம்ப தெறமையா யோஜனையப் பண்ணிருக்காம் சார் ஆப்போஸிட் லாயர். நமக்கு வழக்க மேக்கொண்டு சக்சஸ்புல்லா தொடர்றதுக்கு வாய்ப்பே இல்லே. இதெ காட்டிக்க வேண்டாம். அடுத்த வாரத்துல ஒரு நாளு சமரச நீதி மையத்துக்கு வர்றாப்புல இருக்கும். வந்து கையெழுத்தப் போட்டுட்டு ஒங்க மாப்புள்ள என்ன சாமாஞ் செட்டு நகெ நட்ட கொடுக்கிறாரோ அதெ வாங்கிக்கிட்டு ஒதுங்கிடணும்!"ன்னாரு எடுத்த எடுப்புலயே. ஒரே மாதிரியான கேள்விகத்தான்னாலும் மனசெ ஒரு நெலை பண்ணிக்க சிலதெ திரும்பத் திரும்ப கேக்க வேண்டியதா இருக்கு. அப்பிடித்தாம் சுப்பு வாத்தியாரு வக்கீல்கிட்டெ கேட்டாரு. "அதெத்தாம் ஒத்துக்கிடாச்சே! பெறவு இப்பிடி ஒரு நோட்டீஸ அனுப்புறதுல ன்னா புண்ணியமிருக்கு?"ன்னு.

            "ஒத்துகிட்டோம் சரிதான். நாம்ம கூடுதலா கொடுக்கணும்ங்ற டிமாண்ட வைக்குற பவரை இழந்துட்டோம்! அதாவது நம்மகிட்டெ சமரசம் பேசிக்கிட்டெ நம்மள கட்டம் கட்டிட்டாம். இனுமே அவன் எது செய்தாலும் அவன் போற போக்குலத்தாம் போயி ஆவணும்!"ன்னாரு வக்கீலு.

            "நீஞ்ஞ ஏதோ சொல்ல வர்றதுப் புரியுது. இன்னும் கொஞ்சம் வெளக்கமாச் சொன்னாத்தாம் நமக்குப் புரியும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நோட்டீஸ பொண்ணு வாங்கியிருக்கிற இடம் எது? கோவில்பெருமாள். ஒங்க மச்சினன் இருக்குற ஊர்ல. அதெ வெச்சி ஒங்கப் பொண்ணு ஒங்களோட இல்லங்றதெ ஆதாராப்பூர்வமா நிரூபிப்பாம்.  மச்சினனுக்குக் கலியாண வயசுல பையனுங்க ரண்டு பேரு இருக்காங்க. நோட்டீஸ்லயே அதெ தெளிவு பண்ணிட்டாம். இப்போ பொண்ணு ஒங்க கூட இல்ல, கலியாண வயசுல இருக்குற மச்சினன் புள்ளைங்க வீட்டுல இருக்குன்னா, அந்தப் புள்ளைங்களோட குடித்தனம் நடத்துறதா நிரூபிப்பாம். கேரக்டர் சரியில்லன்னு சொல்லி ஜீவனாம்சம் கொடுக்க முடியாதும்பாம். ஜீவனாம்ச கேஸ்ஸூப் போயிடுச்சா? அடுத்ததா வன்கொடுமெ வழக்குல ஒங்க மச்சினன் புள்ளையோட தொடர்ப வெச்சிக்கிட்டு அங்க வாழப் போறதுக்குத்தாம் அபாண்டமா தம் மேல வழக்குப் போடப்பட்டிருக்கிறதா சொல்வாம்! அதுல அந்தக் கேஸ்ஸூம் போயிடும்!"ன்னாரு வக்கீலு.

            இதெ கேக்க செய்யுவுக்கும், சுப்பு வாத்தியாருக்கும் நெஞ்சு கொதிக்க ஆரம்பிச்சது. "பெறவு ஏம்ங்கய்யா அவ்வேம் ஜீவனாம்ச வழக்குல கேஸ் கட்ட பீஸ் கோர்ட்டுக்குத் திருப்ப வெச்சாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீல் சொன்னதெ முழுசா புரிஞ்சிக்க முடியாம.

            "இதையெல்லாம் செய்ய அவனுக்குக் கால அவகாசம் வேணுமில்லே! அதுக்குத்தாம்! அதுவுமில்லாம இந்த வழக்குல ஒங்கள கட்டம் கட்டி அதுல ஜெயிச்சுதா இருக்கணும்ன்னு நெனைக்குறாம் போலருக்கு! இனுமே வழக்குன்னு தொடந்தாலும் நம்ம பக்கத்துல ஜெயிச்சுட கூடாது, சமரசத்தெ வுட்டும் நம்ம சைடுல விலகவும் கூடாதுன்னு யோஜனைய பண்ணி நல்லா ரிவீட் அடிச்சிருக்காம்! போர்லல்லாம் அப்பிடித்தாம் சார்! சமாதானம் பேசிக்கிட்டே முதுகுல குத்திட்டுப் போயிட்டு இருப்பாங்க சார்! அதெத்தாம் ஒங்க மாப்புள்ள பையேம் பண்ணிருக்காம்! வழக்குங்றதும் ஒரு வகையான போர்க்களம்தாம் சார்!"ன்னாரு வக்கீல்.

            "அது செரி! பீஸ் கோர்ட்டுல சுமூக முடிச்சிப்புட்டா இதெல்லாம் செல்லுபடியாவுதுல்ல?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட மனசுல இருக்குற அச்சத்தெ தெளிவு பண்ணிக்கிறாப்புல.

            "அதாம் வழி! வேற வழியில்ல! பேசி முடிச்சிட்டுக் கொடுக்குறத வாங்கிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதாம்!"ன்னாரு வக்கீலு சுப்பு வாத்தியாருக்கு ஏற்கனவெ சொன்னதையே திரும்ப ஒரு முடிவா சொல்றாப்புல.

            "அது போதும் போங்கய்யா! வேக வேகமா பேசி முடிக்கிறெ வழியப் பாருங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கொஞ்சம் சமாதானம் ஆனாப்புல. “முடிவா சமரசந்தாம் ஆவப் போறேம். இருந்தாலும் இப்போ அனுப்பியிருக்குற நோட்டீசுக்குப் பதில் நோட்டீஸ் ஒண்ணுத்தெ எதுக்கும் நம்ம பக்கத்துக்குச் சேப்டியா அனுப்பி வெச்சிடுவோம்!”ன்னு வக்கீலு பதில் நோட்டீஸத் தயார் பண்ணி அனுப்புற வேலையில எறங்குனாரு. பதில் நோட்டீஸ்ல கலியாணம் ஆன தகவலு ஒண்ணுத்தெத் தவுர மித்ததெல்லாம் பொய்யின்னும் அதெ தன்னோட கட்சிக்காரர் ஏற்க மறுக்கிறாருன்னும் அனுப்பி வெச்சாரு.

            சில விசயங்கள் ரொம்ப விநோதமாத்தாம் இருக்கு. அப்படி ஒரு விநோதம் அடுத்ததா நடந்துச்சு. எல்லாத்தையும் முடிச்சிக்கிடணும்ன்னு முடிவாயி அதுக்குப் பெறவு வன்கொடுமெ வழக்குல எக்ஸ்பார்ட்டி சட்டிசைடு செய்யுறதுக்காக ஆயிரம் ரூவாய கங்காதரன் வக்கீலு கொடுத்திருக்கிறதா திருநீலகண்டன் வக்கீலு ஒரு நாளு போன அடிச்சிச் சொன்னாரு. பீஸ் கோர்ட்டுல ஒரு வழியா முடிச்சிக்கிறதுன்னா எல்லாமும் முடிஞ்ச மாதிரித்தாம். வன்கொடுமெ வழக்கும் அதுக்குப் பெறவு செல்லுபடியாகாது. நெலமெ இப்படி இருக்குறப்போ வன்கொடுமெ வழக்குல ஏம் பாலாமணி எக்ஸ்பார்ட்டி சட்டிசைடு பண்ணுறாம்ன்னு கொழப்பமா இருந்துச்சு. ஒரு வெதத்துல இந்த வழக்குக முடியுறது போலயும் அதே நேரத்துல முடியாதுது போலயும் ரண்டு வெதமான தோற்றங்கள தர்ற ஆரம்பிச்சது. ரெண்டுல எது உண்மெங்றதும் தெளிவா தெரியல. ஆனா ஏதோ பொகைஞ்சிகிட்டு இருக்குங்றது மட்டும் லேசா தெரிஞ்சது.

            சீக்கிரமா எல்லாத்தையும் முடிச்சிப்புடுறதாங் நல்லதுங்ற முடிவுல வக்கீலு திருநீலகண்டன் ஒரு வாரத்துக்குள்ள அடுத்ததா போன்ன பண்ணி பீஸ் கோர்ட்டு சிட்டிங்குக்கு வாரச் சொன்னாரு. பணங்காசி, நகெ நட்டு, பொருளு எல்லாம் கோர்டுக்கு வந்துப்புடும்ன்னும், நாம்ம அதெ கையெழுத்துப் போட்டுக்கிட்டு எடுத்துட்டுப் போறதுதாம் வேலன்னும் ரொம்ப உறுதியா சொன்னாரு. பாலாமணியோட லாயரு கோவில்பெருமாளுக்கு நோட்டீசு அனுப்பி, வன்கொடுமெ வழக்குல எக்ஸ்பார்ட்டி சட்டிசைடு பண்ணி அது என்ன நடக்குமோங்றது தெரியாம இருந்தாலும், இப்போ திருநீலகண்டன் வக்கீலு சொன்னதுல, ஆக கடெசியா வழக்குன்னு கோர்ட்டுக்குப் போறது இதுவாத்தாம் இருக்கும்ங்ற நம்பிக்கெ எல்லாத்துக்கும் வந்துச்சு. எல்லாம் ஒரு முடிவுக்கு வர்ற நேரத்துல விகடு, கைப்புள்ள, சுப்பு வாத்தியாரு, செய்யுன்னு எல்லாம் கெளம்பிப் போனாங்க. இந்தக் கலியாணத்தப் பண்ணி வெச்சது கூட அவ்வளவு பெரிய காரியமா தெரியல. இப்போ பண்ணுன கலியாணத்த வாண்டாம்ன்னு சொல்லிட்டு முடிச்சிட்டு வெளியில வர்றதுதாம் பெரிய சோலியா இருந்துச்சு.

            இந்த வழக்குல மொத மொறையா சொன்ன தேதிக்கு ரண்டு தரப்பும் சொல்லி வெச்ச மாதிரி ஆஜரானது அன்னிக்குத்தாம். அதெ பாக்குறப்போ மறுபடியும் எல்லாத்தோட மனசுக்கும் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துடும்ன்னுத்தாம் தோணுச்சு.

            பீஸ் கோர்ட் ஜட்ஜூ முடிவா ரண்டு பக்கத்தையும் உக்கார வெச்சிப் பேசுனாரு. ரண்டு தரப்புலயும் சமாதானத்துக்குத் தாயர்ன்னதும் வக்கீலுங்க தயார் பண்ண காயிதத்துல கையெழுத்துப் போட்டுக் கொண்டாங்கன்னு வெளியில அனுப்பி வெச்சாரு. பாலாமணியோட வக்கீலு கங்காதரன் லீகல் சைஸூ காங்கர் பேப்பர் டைப் பண்ணதெ கொடுத்து நேரடியாவே வந்து செய்யுகிட்டெ கையெழுத்துக் கேட்டாரு. அதுல கையெழுத்தப் போட்டுக் கொடுத்ததும் அஞ்சு லட்ச ரூவாய்க்கான டிமாண்ட் டிராப்ட்ட தந்துடுறதா சொன்னாரு. செரின்னு அந்தக் காயிதத்தெ வாங்கிக் கையெழுத்துப் போடறதுக்கு மின்னாடி செய்யு அதெ படிச்சிப் பாத்தா. காயிதத்துலு வாழ்நாள் ஜீவனாம்சமா அஞ்சு லட்ச ரூபாயி தர்றதாவும், முப்பது நாலு சவரன் நகெ தர்றதாவும் ஒவ்வொண்ணோட எடை எவ்வளவுதுன்னு கிராம் சுத்தமா துல்லியமாவும் இருந்துச்சு. அத்தோட கட்டிலு, பீரோ, டைனிங் டேபிள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாத்தையும் தந்துட்டதாவும் அதுக்கு ஒத்துக்கிட்டு பாலாமணி சேர்ந்து வாழ முயற்சிப் பண்ணியும் செய்யு அவளா பிரிஞ்சிப் போறதாவும் எழுதியிருந்துச்சு. அவ்வளவுதாம் செய்யு நம்பிக்கெ இழந்தவளப் போல ஆயிட்டா. அவ்வே மனசு பூரா ஆத்திரங்க நெரம்பி வழியுறாப்புல ஆயிடுச்சு.

            செய்யுவால அஞ்சு லட்ச ரூவாயி வாழ்நாள் ஜீவனாம்சன்னு எழுதியிருந்ததெ ஏத்துக்கிட முடியல. அவ்வே டக்குன்னு ரொம்ப வெளிப்படையாவே கேட்டா, "எஞ்ஞகிட்டெ வாங்குன பணத்துல பாதியக் கூட கொடுக்கல. அப்பிடிக் கொடுக்குற பணத்தையும் வாழ்நாள் ஜீவனாம்சன்னு எழுதிக் கொடுத்தா ன்னா ஞாயம்? அப்பிடி வாழ்நாள் ஜீவனாம்சமா கொடுக்குறதா இருந்தா அவுங்க காசியிலல்ல கொடுக்கணும். எஞ்ஞ காசிய வாங்கி எஞ்ஞகிட்டெயே கொடுக்குறதுக்கு பேரு வாழ்நாள் ஜீவனாம்சமா?"ன்னு கங்காதரன் வக்கீல தெறிக்க வுடுறாப்புல.

            சுப்பு வாத்தியாரும் விடல, "எல்லா சாமாஞ் செட்டுகளையும், நகெ நெட்டையும் கையில கொடுத்துப்புட்டுல்லா கையெழுத்த வாங்கணும். கையெழுத்து வாங்கிக்கிட்டு அஞ்சு லட்சத்தெ மட்டும் கொடுக்குறதுக்கு எப்பிடிக் கையெழுத்தப் போட முடியும்?"ன்னாரு தன்னோட தரப்பு ஞாயத்தெ கேக்குறாப்புல.

            கங்காதரன் ரொம்ப பொறுமையா, "நீஞ்ஞ கையெழுத்துப் போட்டுக் கொடுத்து திருப்தியாப் போவணுங்றதுக்குத்தாம் அஞ்சு லட்ச ரூவா டிமாண்ட் டிராப்ட். அடுத்த சிட்டிங்குக்கு வர்றப்போ வெவாகரத்துக்கான விடுதலைப் பத்திரத்துல கையெழுத்தப் போட்டுட்டு நகெ நட்டு, சாமாஞ் செட்டு எல்லாத்தையும் வாங்கிக்கிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியார்ரப் பாத்து சாந்தம் பண்ணுறாப்புல.

            "அப்போ ஒண்ணுப் பண்ணுங்க. அடுத்த சிட்டிங்கிலயே எல்லாத்தையும் ஒப்படைச்சிட்டுக் கையெழுத்த வாங்கிக்கிடுங்க. இப்போ போட்டுத் தர்ற முடியாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வுடாப்புடியா பேசுறாப்புல.

            "அதெல்லாம் கொடுத்துடுவேம் சார்! கையெழுத்தப் போட்டுக் கொடுத்துட்டுப் போயிட்டே இருங்க. ஒரு வாரந்தாம். வாங்கிக்கிடலாம்!"ன்னாரு கங்காதரன் நம்பிக்கெத தர்றாப்புல.

            ஒடனே பத்திரத்தெ வாங்கி தாம் ஒரு மொறை வேகமா படிச்சிப் பாத்து சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "பத்திரத்துல எல்லாப் பொருளும் கொடுத்துட்டதாவும், அதெ நாஞ்ஞ பெத்துக்கிட்டதாவும்ல எழுதியிருக்கு. அடுத்த சிட்டிங்கல எல்லாத்தையும் நாஞ்ஞ வாங்கிக்கிட்டதா சொன்னா நாஞ்ஞ ன்னா பண்ண முடியும்?"ன்னு தன்னோட நெலைப்பாட்டைச் சொல்றாப்புல.

            "அப்பிடிச் சொன்னா விடுதலைப் பத்திரத்துல கையெழுத்தெப் போட்டுக் கொடுக்க வாணாம்!"ன்னாரு கங்காதரன் பட்டுன்னு அதுக்கு ஒரு பதிலச் சொல்றாப்புல.

            "யோவ்! வக்கீலுங்றெ! இப்பிடிப் பேசுறே? பொருளெல்லாம் கொடுத்துப்புட்டதா எழுதிக் கையெழுத்து வாங்குறீயேன்னா, விடுதலைப் பத்திரத்துல கையெழுத்தப் போடா வாணாங்றீயே? சமரசமா வந்து பிரியுறதெ வேற நாஞ்ஞளா பிரிஞ்சிப் போறதா எழுதியிருக்கே! எம்மட மவ்வே சொல்றாப்புல எஞ்ஞ பணத்தெ எஞ்ஞளுக்குக் கொடுத்துப்புட்டு அதெ வாழ்நாள் ஜீவனாம்சமா நீயி கொடுக்குறதா வேற எழுதியிருக்கே. ஏம்யா இப்பிடி எஞ்ஞளோட வவுத்தெரிச்சல கொட்டிக்கிறீயே? நீஞ்ஞல்லாம் நல்ல இருப்பீயளா? ஒங் குடும்பம் புள்ள பொண்ணுங்க எல்லாம் நாசமாப் போவே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஆத்திரம் தாங்காம.

            "நம்மாள புரிஞ்சிக்கிட முடியிது சார்! நமக்கு ஒண்ணும் கோவமில்லே. பிரியுற கடெசி நேரத்துல இப்பிடியில்லாம் பேச்சு வாரத்தாம் செய்யும். நம்பிக்கெத்தாம் வாழ்க்கெ. ஒஞ்ஞ லாயர்ர கன்சல்ட் பண்ணிட்டெ கையெழுத்தப் போடுங்க!"ன்னாரு கங்காதரன் முடிவா சொல்றாப்புல. இவ்வளவு பேச்சும் நடந்துக்கிட்டு இருக்கு. வக்கீல் திருநீலகண்டனும் பக்கத்துலத்தாம் நின்னுகிட்டு இருந்தாரு. ஆன்னா அவரு ஒண்ணும் பேசல. எதுவும் பேசவும் மாட்டேங்றாரு. இதுல பல விசயத்தெ தெளிவு பண்ண வேண்டிய பொறுப்பு அவருக்குத்தானே இருக்கு. அவர்ரப் பாத்துச் சுப்பு வாத்தியாரு கேட்டாரு, "என்னங்கய்யா! நீஞ்ஞளும் சேர்ந்துத்தாம் இதெ தயாரு பண்ணீயளா? யில்ல அந்த வக்கீலா ஒண்ணுத்தத் தயாரு பண்ணிட்டு வந்து அதுல கையெழுத்துக் கேக்குறாரா? இந்த மாதிரி வெசயத்தையெல்லாம் நீஞ்ஞத்தானங்க்யயா எஞ்ஞளுக்கு வெளக்கிச் சொல்லணும். இஞ்ஞ என்னான்னா நாஞ்ஞ கேக்க கேக்க ஒண்ணுமே சொல்லாம நிக்குறீயளே? ஒஞ்ஞ கண்ணு மின்னாடியே அந்த வக்கீலு காயிதத்தெ கொடுத்து கையெழுத்துப் போடச் சொல்லுறதெ வேடிக்கெ பாக்குதீயளே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நாம்ம ஒங்ககிட்டெ கேட்டுட்டுத்தானே பண்ணுறேம். நீங்கத்தானே எப்படியாச்சும் முடிச்சிப்புடுங்கன்னு சொன்னீங்க. இப்போ வந்து இப்பிடிச் சொன்னா எப்படி?"ன்னாரு வக்கீலு திருநீலகண்டன் சுப்பு வாத்தியார்ரத் திருப்பிக் கேக்குறாப்புல.

            "முடிச்சிடுங்கன்னு சொன்னேம்தாம். யில்லன்னு சொல்லல. அதுக்காக கெளரவத்தெ விட்டுப்புட்டு முடிச்சிப்புடுங்கன்னு சொல்லல. அதுல இருக்குற வாசகங்களப் பாருங்க. அதெ நீஞ்ஞப் படிச்சுப் பாக்கவே யில்லியா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு இப்பிடி பண்ணீட்டியேய்யான்னு கேக்குறாப்புல.

            "ன்னா சார் பெரிய வாசகம்? வெவாகாரத்து ஆயிட்டா அந்தக் காயிதத்தால ஒங்களுக்கும் பிரயோஜனம் இல்ல. அவுங்களக்கும் பிரயோஜனம் இல்ல. காயிதத்துல இருக்குற வாசகத்துக்கு அந்த அளவுக்குத்தாம் மதிப்பு. இன்னும் சொல்லப் போனா இப்பிடி ஒரு கேஸூ நடந்ததுங்றதுக்கான ஆதாரமே இல்லாமப் போயிடும். நாட்டுல அந்த அளவுக்கு கேஸ் மேல கேஸ்ஸா நடந்துக்கிட்டு இருக்கு. நமக்கு பொருளுங்க வருதான்னுத்தாம் பாக்கணும். வர்றது எந்த வழியா இருந்தா என்னா?"ன்னாரு வக்கீலு திருநீலகண்டன். அவருப் பேசுறதெப் பாக்குறப்போ நம்ம தரப்பு வக்கீலு பேசுறது போல இல்லையேன்னு தெகைப்பா இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு.

            "ஏம் இந்தக் காயிதத்தெ அந்த வக்கீலுத்தாம் தயாரிக்கணும்ன்னு சட்டம் இருக்கா? நீஞ்ஞ தயாரு பண்ணிருக்கக் கூடாதா?"ன்னா செய்யு திருநீலகண்டன் வக்கீலப் பாத்து.

            "நமக்கு அந்த நேரத்துல நெறைய வேலைகம்மா. அதெ தயாரு பண்ண நேரமே கெடைக்கல. ஆப்போசிட் லாயர் கங்காதரன்கிட்டெ பேசுனதுல இன்னின்ன மாதிரி விசயம்ன்னு சொன்னாரு. செரின்னு அதெ அப்பிடியே டைப் பண்ணி கொண்டாரச் சொல்லிட்டேம். அதுல ரொம்ப வடிகட்டில்லாம் பார்த்தா எந்தப் பக்கமும் போவ முடியாது. அப்பிடியும் இப்பிடியுமா அல்லாடிக்கிட்டெ நிக்க வேண்டியதுத்தாம்! ஒரு முடிவுன்னு வர்றப்போ கொஞ்சம் மின்ன பின்னத்தாம் இருக்கம். அதெ ஏத்துக்கிட்டுத்தாம் ஆவணும். வேற வழியில்ல!"ன்னாரு திருநீலகண்டன் ஏதோ சால்ஜாப்பு சொல்றாப்புல.

            "யில்லங்கய்யா இதுல வாழ்நாள் ஜீவனாம்சமா கொடுக்குறதா இருக்குற வாசகத்தெ எடுக்கணும், அத்தோட ரண்டு பேருமே பரஸ்பரமா மனமொத்துப் பிரியுறதா அடுத்த வாசகத்தையும் மாத்தணும். அதெ செஞ்சாத்தாம் கையெழுத்தப் போடுவேம்!"ன்னா செய்யு ரொம்ப உறுதியா.

            "ஆம்மா! எல்லா சாமாஞ் செட்டுகளையும் ஒரே நேரத்துல ஒப்படைச்ச பெற்பாடுதாம் கையெழுத்தப் போட சொல்ல முடியும்!"ன்னு சுப்பு வாத்தியாரும் தெடமா சொன்னாரு.

            “பாப்பாவும் வாத்தியாரும் சொல்றதுதாங் முடிவு. ன்னா வக்கீலு சார் அதுக்குத் தகுந்தாப்புல பண்ணுங்க!”ன்னாரு அதுவரைக்கும் எல்லாத்தையும் கவனமா கேட்டுக்கிட்டு எதுவும் பேசாம இருந்த கைப்புள்ள முடிவா பேசுறாப்புல. அத்தோட வுடாம எதுவும் பேசாம இருந்த விகடுவெப் பாத்து, “நீயி என்னத்தெ சொல்றே? பேயாம அப்பிடியே நமக்குப் மேல பாத்துக்கிட்டு இருக்கீயே? ன்னா நாம்ம சொல்றது செரித்தானே?”ன்னாரு. அத்துச் சரிதாங்ற மாதிரிக்கி விகடு எதுவும் பேசாம தலைய மட்டும் ஆட்டுனாம். “பெறவென்ன அதாங் எல்லாத்துக்கு இதாங் முடிவுன்னு ஆச்சுது! இதுல மாத்தமில்ல!”ன்னு அடிச்சுப் பேசுறாப்புல பேசுனாரு கைப்புள்ள.

            "அப்பிடின்னா நாம்ம ஜட்ஜூகிட்டெ சொல்றேம். நாம்ம முடிச்சிக்கத் தயார்ன்னும், எதிர்தரப்புலத்தாம் முடிச்சிக்க தயாரு இல்லன்னும்!"ன்னு சொல்லிட்டு ஜட்ஜ் உக்காந்திருக்கிற அறைக்குப் போயி கங்காதரன் படபடன்னு பேசுனாரு. திருநீலகண்டன் வக்கீலும் கூடவே போனாரு. ரண்டு பேரும் அங்க ஒருத்தருக்கொருத்தரு வாதம் செய்ய ஆரம்பிச்சாங்க. இங்கப் பேசிட்டுப் போனதுக்குச் சம்மந்தமே யில்லாமே திருநீலகண்டன் வக்கீல் அங்கப் போயி அஞ்சு லட்சப் பணத்தை டிமாண்ட் டிராப்ட்டா இல்லாம பணமா கொடுத்தாத்தாம் கையெழுத்தப் போட சொல்வேன்ன்னிருக்காரு.

            ஜட்ஜ் ரொம்ப தீர்க்கமா சொல்லிருக்காரு, "பீஸ் கோர்ட்டுங்றது சமரசத்துக்கான வாய்ப்புகளப் சொல்லி ரண்டு பார்ட்டியும் ஒத்து வந்து முடிச்சிட்டுக் காயித்தோட வந்தாத்தாம் முடிச்சி வுட முடியும். கடெசீ நேரத்துல ஒத்து முடிச்சிக்கிறதுக்கான காயிதம் இல்லன்னா அதெ முடிக்க முடியாது. வேணும்ன்னா கட்டெ திருப்பி வுடுறேம். நீங்க கோர்ட்ல போயி வழக்கத் தொடர்ந்துக்குங்க!"ன்னு.

            "ஒடனே இப்பவே திருப்புங்க. நாமே இன்னிக்கே கிராஸ்ஸ ஆரம்பிக்கிறேம்!"ன்னு வேகத்தெ காட்டிருக்காரு கங்காதரன்.

            "ஒடனே முடியாது. கொஞ்சம் வெளியில இருங்க. கோர்ட்ல ஆஜராவதற்கான தேதியச் சொல்லி விடுறேம்! அதெ நேரத்துல இன்னிக்குப் பூராவும் பேசிப் பாருங்க. கடெசீ நேரத்துல காரியம் ஆனாலும் செரித்தாம் முடிச்சி வுட்டுப்புடலாம். வந்தது வந்தாச்சு. இந்த முழுநாளையும் எடுத்துக்கிட்டு மீண்டும் பேசிப் பாருங்க. முடிவு எதுவும் எட்டுனா வாங்கப் பாக்கலாம்!"ன்னிருக்காரு ஜட்ஜ் ரண்டு வக்கீலையும் கொஞ்சம் ஆத்தி வுடுறாப்புல. அதுக்குப் பெறவு வக்கீலுங்க ரண்டு பேருமெ வெளியில வந்தாங்க.

            திருநீலகண்டன் சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "கேஸ்ஸ முடிக்கிறதுன்னாலும் நமக்குச் செரித்தாம். கேஸ்ஸ நடத்துறதுன்னாலும் செரித்தாம். அப்பிடி கேஸ்ஸ நடத்துறதா இருந்தா எப்படியும் கொறைந்தபட்சம் நாலு அஞ்சு வருஷமாவும் ஜட்ஜ்மெண்ட் ஆவ. ஜட்ஜ்மெண்ட் நிச்சயம் பொண்ணுக்குச் சாதகமாத்தாம் வரும். நல்லா யோசனையப் பண்ணிட்டுச் சொல்லுங்க! இந்த நாளு முழுக்க ஜட்ஜ் நமக்கு நேரத்தெ கொடுத்திருக்காரு. நீஞ்ஞ அதெப் பத்திப் பேசி யோஜனெ பண்ணி வையுங்க. அதுவரைக்கும் நமக்குக் கோர்ட்டுல ஒரு கேஸூ இருக்கு. அதெ பாத்துட்டு வந்துடுறேம்!"ன்னு கெளம்பிப் போனாரு திருநீலகண்டன் பீஸ் கோர்ட்டு கட்டடத்துலேந்து கோர்ட்டு இருக்குற எடத்துக்கு. என்னடா இத்து முக்கியமான வெசயம் பேச வேண்டிய நேரத்துல வக்கீலு பாட்டுக்கு வேற ஒரு கேஸ் இருக்குறதா சொல்லி நட்டாத்துல வுடுறாப்புல வுட்டுட்டுப் போறாரேன்னு சுப்பு வாத்தியாருக்கு கொஞ்சம் தெகைப்பா போயிடுச்சு.

            திருநீலகண்டன் வக்கீலு போனதுக்குப் பெறவு சுப்பு வாத்தியாரு, விகடு, கைப்புள்ள, செய்யுன்னு இவுங்க உக்காந்திருந்த எடத்துக்கு கங்காதரன் வக்கீலு வந்தாரு. "சார்! நம்மள நம்புங்க. இதுல எழுதியிருக்கிற எல்லா சாமாஞ் செட்டுகளையும் நம்பிக்கையா ஒங்ககிட்டெ ஒப்படைக்க வேண்டியது நம்ம கடமெ. ஒங்க வக்கீல நம்பாதீங்க. என்னோட கிளையண்டுகிட்டெ இருந்து கேஸ்ஸ முடிச்சிக் கொடுக்க இருவதினாயிரம் பணம் கேட்டிருக்கிறாரு. அப்பிடித் தர்றாம போனா கேஸ் முடிக்க வுட மாட்டேம்ன்னு மெரட்டிருக்காரு!"ன்னாரு கங்காதரன் திருநீலகண்டன் வக்கீல் போன நேரத்தெ சாதவமா பயன்படுத்திக்கிறாப்புல.

            "இதெல்லாம் ஒரு பொழைப்பா? நேருக்கு நேரு மோதாம இதென்ன எஞ்ஞ வக்கீல கொறை சொல்லிக்கிட்டு?"ன்னாரு கைப்புள்ள எதிர்தரப்பு வக்கீலப் பாத்து.

            "ஒஞ்ஞ கேள்வி ஞாயந்தாம். அத்தோட கோவம் நமக்குப் புரியுது. இப்பிடி பேசுறதுதாம் சகஜந்தாம். அதையெல்லாம் பாத்தா கேஸ்ஸ முடிக்க மடியாது. உள்ளார ஜட்ஜூக்கிட்டெப் போயி நாஞ்ஞப் போயி பேசுன பேச்ச கேட்டீயள்ன்னா நம்ம மாட்டீயே? அஞ்சு லட்சப் பணத்தெ டிடியா யில்லாம பணமா கொடுக்கணும்ன்னு கேக்குறாப்புல ஒஞ்ஞ லாயரு. பணமா கொடுக்காட்டிக் கேஸ்ஸ எடுத்து நடத்துவேங்றாரு. அதாச்சி ஒஞ்ஞள அவரு நம்பல. எங்க டிடியா கொடுத்து முழுபணத்தையும் நீஞ்ஞளே எடுத்துக்கிட்டு அவருக்கான பீஸ்ஸ அதுலேந்து கொடுக்காம வுட்டுப்புடுவீயோளோன்னு நெனைக்குறாரு. இப்பிடி ஒரு நெலமெ வாரும்ன்னு தெரியும். அதுக்காகத்தாம் சார் என்னோட கிளையண்ட் இந்த பணம் முழுக்க ஒஞ்ஞப் பொண்ணுக்குச் சேரணும்ன்னு டிடியா போட்டுக் கொடுக்குறாரு. நீஞ்ஞத்தாம் இதுக்கு மேல இதுல புரிஞ்சிக்கிடணும். ஒரு நல்ல மனசுல கேஸ்ஸ முடிச்சிப்புடுறது ரண்டு பக்கமும் நல்லதுங்றதுக்காக சொல்றேம்!"ன்னாரு கங்காதரன் ரொம்ப நல்ல மனசுக்காரரெப் போல.

            "அப்பிடி நல்ல மனசோட இருக்குற நீயி எதுக்குய்யா கோவில்பெருமாள் வெலாசத்துக்கு வக்கீலு நோட்டீஸ அனுப்பி எஞ்ஞ வூட்டுப் போண்ண வாஞ்ஞ வைக்குறே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட சந்தேகத்தெப் போக்கிக்கிறாப்புல.

            அதெ கேட்ட கங்காதரன் சுத்திலும் ஒரு பார்வெ பாத்துட்டு சுப்பு வாத்தியாருகிட்டெ வந்து மெல்லமா, "அதுவும் ஒஞ்ஞ வக்கீலோட யோசனெத்தாம். அவருத்தாம் நம்மகிட்டெ போன்ல சொல்லி அப்பிடியொண்ண போடச் சொன்னாரு. அப்பிடிப் போட்டாத்தாம் நீஞ்ஞ அந்தாண்ட இந்தாண்ட முண்டாம கேஸ்ஸ முடிக்க வருவீயேன்னு சொன்னாரு. நமக்கென்ன நம்மளோட கிளையண்டுக்குச் சாதவமா ஒண்ணுத்தெ பண்றேம்ன்னு நெனைச்சிக்கிட்டுப் பண்ணுனேம். ஒஞ்ஞளால இதெயெல்லாம் நம்ம முடியாது சார். வழக்கெ நடத்துறதுக்கு மின்னாடியே ரண்டு வக்கீலும் பேசிக்கிடுவேம். அதுக்கேத்தப்படித்தாம் நாடகத்தெ நடிக்கிறாப்புல வழக்க கோர்ட்டுல அரங்கேத்துவோம். எஞ்ஞளுக்கும் வருமானத்தப் பாக்கணுமில்லையா சார்! இதுல வக்கீலுக்கு வக்கீலு ஒத்துப் போயிடுவோம். நாஞ்ஞ உள்ளுக்குள்ள சேந்திருக்கிறது ரண்டு தரப்புக்குமே தெரியாம ரண்டு தரப்பும் அவுங்க பாட்டுக்கு அடிச்சிட்டுக் கெடப்பாங்க. அவுங்க அடிச்சிட்டுக் கெடக்க கெடக்கத்தாம் எஞ்ஞ காட்டுல மழெ. அப்பிடித்தாம் எஞ்ஞ பொழைப்பு ஓடிட்டு இருக்கு. எதுக்கு இதெல்லாம் சொல்றேம்ன்னா நீஞ்ஞ இதெப் புரிஞ்சிக்கிடணும். இதுல இருக்குற விசயங்கள தெரிஞ்சிக்கிடணும்ன்னுத்தாம்! அதுக்காகத்தாம் இவ்ளோ எறங்கி வந்து பேசுறேம்! மித்தபடி நாம்ம இவ்ளோ எறங்கி வந்துப் பேசணும்ங்ற அவ்சியமேயில்ல பாருங்க!"ன்னாரு கங்காதரன் உண்மெ இதுதான்னு போட்டு ஒடைக்குறாப்புல.

            "அதென்னய்யா வாசகம் வாழ்நாள் ஜீவனாம்சம்ன்னு?"ன்னாரு கைப்புள்ள நக்கலா.

            "சார்! அந்த மாதிரி வாசகமெல்லாம் போடக் கூடாதுதாம். நம்ம கிளையண்ட் பாலாமணி நம்மள வுடல. இந்தக் காயிதத்தெ தயாரிக்கிறப்போ கூடவே இருந்து இன்னயின்ன மாதிரியான்னா வாசகம்லாம் வாணும்ன்னுட்டாரு. இதெல்லாம் அவருப் போட்டதுதாம் சார். தம் பக்கத்தெ ரொம்ப பக்காவா, பாதுகாப்பா வெச்சிக்கிறதுக்காக இப்பிடில்லாம் பண்ணுறாரு. இதுலயெல்லாம் ஒண்ணும் ஆவப் போறதில்ல. ரண்டு பேத்துக்கும் இடையில வெவாகரத்து ஆயிட்டா அதுக்குல்லாம் எந்த மதிப்பும் இருக்கப் போறதில்ல. அவரும் அந்தக் காயிதத்தெ எஞ்ஞ தூக்கிப் போட்டேம்ன்னு தெரியாமத்தாம் தூக்கிப் போடப் போறாரு!"ன்னாரு கங்காதரன் முடிவா நடக்கப் போற எல்லாதையும் தெளிவு பண்ணுறாப்புல.

            "நீஞ்ஞப் பண்ணுறதெப் பாத்தா எஞ்ஞளுக்கும் எஞ்ஞ வக்கீலுக்கும் சிண்டு முடிஞ்சி வுடுறாப்புல இருக்கு. எதிர்தரப்புல இருக்குற நீஞ்ஞ சொல்றதெயெல்லாம் கேட்டுக்கிட்டு நாஞ்ஞ எதுவும் செய்ய மாட்டேம். நீஞ்ஞ வருத்தப்பட்டுக்கிடாம ஒஞ்ஞப் பக்கத்துக்கு என்னத்தெ பண்ண முடியுமோ அதெ மட்டும் பண்ணுங்க. ஏன்னா ஒஞ்ஞளுக்குக் காசியக் கொடுக்குறது அவுங்கத்தாம். நாஞ்ஞ யில்ல. அதால நீஞ்ஞ அஞ்ஞத்தாம் விசுவாசமா இருக்கணும். எஞ்ஞகிட்டெ யில்ல!"ன்னாரு கைப்புள்ள. அதுக்கு மேல ஒண்ணுத்தையும் பேச முடியாம கங்காதரன் அந்த எடத்தெ வுட்டுப்புட்டு அந்தாண்டப் போனாரு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...