மயக்கம் தந்த கடிதம்!
செய்யு - 654
கோவில்பெருமாளு ரெட்டைத் தெருவ முடிச்சிட்டு,
நாது மாமா இருக்குற ஆத்தாங்கரைத் தெருவ முடிச்சிட்டுத்தாம் தபால்காரரு தபாலாபீசுக்குப்
போவ முடியும். தபால்காரரு நாது மாமா வூட்டுப்பக்கமா கிணுகிணுன்னு சைக்கிள்ல மணியடிச்சிட்டு
வந்ததும் நாது மாமா அவர்ரப் பாத்து ஒரு சத்தத்தெ வுட்டுப் பிடிச்சிடுச்சு. “அசாமி நம்ம
வூட்டுலத்தாம் இருக்குது. ரீஸ்தரு தபாலு இருக்குன்னு சொன்னியளே? கொடுத்துட்டுப் போறது!”ன்னுச்சு
நாலு தெருவுக்குக் கேக்குறாப்புல சத்தமா.
தபால்காரரு வந்தவரு கையெழுத்து வாங்க வேண்டிய
காயிதத்துல கையெழுத்த வாங்குன பிற்பாடு, ஒப்புகைச் சீட்டுன்னு சொல்லப்படுற அக்நாலேட்ஜ்மெண்டு
சீட்டுலயும் கையெழுத்த வாங்கிட்டு இன்னும் கொஞ்சம் தபால் பட்டுவாடா பண்ண வேண்டியதா
இருக்கிறதா சொல்லிட்டு வெரசா கெளம்பிட்டாரு. அவரு கெளம்பிப் போனதுக்கு பெற்பாடு கையெழுத்துப்
போட்டு வாங்குன கவர்ரப் பிரிச்சிப் படிச்ச செய்யு அப்பிடியே மயங்கி வுழுந்துப்புட்டா.
படிச்சப் போண்ணு இப்பிடியா கடுதாசியப் படிச்சி மயங்கி வுழுவும்ன்னு பஞ்சு மாமாவுக்கும்,
நாகு அத்தைக்கும் ஒண்ணும் புரியல. நாகு அத்தெ செய்யு மொகத்துல தண்ணிய அடிச்சி எழுப்பப்
பாக்குது. மயக்கம் தெளிஞ்சி எழும்பி உக்கார்றா செய்யு. ஒடனே நாது மாமா சைக்கிள எடுத்துகிட்டு
தபால் ஆபீஸ்ல இருந்த சுப்பு வாத்தியார்ர அழைக்க ஓடுனுச்சு.
"ன்னா பொண்ணோ? ரொம்ப படிக்க வைக்காதேன்னு சொன்னா கேக்க மாட்டேங்றே?
தபால்காரருக் கொடுத்தக் கடுதாசியப் படிச்சிட்டு மயக்கம் போட்டுக் கெடக்கு!"ன்னு
நாது மாமா சேதியக் கேட்டு சுப்பு வாத்தியாரு பதறியடிச்சி ஓடியார்றாரு. போவ வாணாம்ன்னு
நெனைச்சிருந்த எடத்துக்குப் போவுற மாதிரி ஆயிடுச்சு சுப்பு வாத்தியாரோட நெலமெ இப்போ.
போனவரு செய்யு கையில வைச்சிருக்குற தபால வாங்கிப் படிச்சிப் பாக்குறாரு. வக்கீலு கங்காதரன்
அனுப்பிச்சிருக்குற ரீஸ்தரு தபாலு அது. அதுல இருக்குற வெவரத்த படிக்க ஆரம்பிச்சாரு
சுப்பு வாத்தியாரு.
அனுப்புநர்
K. கங்காதரன், B.A.,B.L.,
வழக்கறிஞர்,
எண். 1991, தீபம் நகர்,
கல்லூரி சாலை,
தஞ்சாவூர்.
பெறுதல்
சு. செய்யு,
கா / பெ, நாது ஆச்சாரி,
234, ஆத்தங்கரைத் தெரு,
கோவில்பெருமாள் & அஞ்சல்,
கும்பகோணம் வழி,
தஞ்சாவூர் மாவட்டம்.
Madam,
தஞ்சாவூர் மாவட்டம், பாக்குக்கோட்டை
கதவு எண் 999, சாமிப்பாளையம் என்ற முகவரியில் வசித்து வருபவரும், சென்னை அரசு மருத்துவமனையில்
ஆயுர்வேத மருத்துவராகப் பணிபுரிந்து வருபரும் ஆகிய ராசாமணி மகன் ரா. பாலாமணி கொடுத்த
சரியான தகவலின் படி தங்களுக்குக் கொடுக்கும் அறிவிப்பு என்னவெனில்,
எனது கட்சிக்காரரின் தாயின் மகள் வழிப்
பேத்தியாகி தாங்கள் எனது கட்சிக்காரரை 02. 11. 2014 அன்று பாக்குக்கோட்டை, மாடடிக்குமுளை,
வைரம் திருமண மகாலில் வைத்து கலியாணம் செய்துள்ளீர்கள். அத்திருமணம் உறவினர்கள் மற்றும்
பெரியவர்கள் நிச்சயத்த ஒன்றாகும். தாங்கள் எனது கட்சிக்காரரின் உறவினர் என்பதாலும்,
எனது கட்சிக்காரர் அரசு மருத்துவர் என்பதாலும் எவ்வித வரதட்சணையும் இன்றி தங்களைத்
கல்யாணம் செய்துள்ளார். கல்யாணத்திற்குப் பிறகு எனது கட்சிக்காரர் தங்களுடன் சேர்ந்து
வாழ வசதியாக சென்னையில் வீடெடுத்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி எனது கட்சிக்காரர்
பெருமளவு செலவு செய்துள்ளார். கலியாணத்திற்குப் பிறகு தாங்கள் அவருடன் சேர்ந்து வாழ்ந்தது
மூன்று மாதங்கள் மட்டுமே ஆகும். அந்த நேரத்தில் தங்களின் தாயாரின் பேச்சைக் கேட்டுக்
கொண்டு தங்களுக்குத் தெரிந்த காரணங்களை வரித்துக் கொண்டு எனது கட்சிக்காரருடன் சேர்ந்து
வாழாமல் வீண் வம்புக்களை வளர்த்துக் கொண்டு பிரச்சனை செய்துள்ளீர்கள். அதை ஒரு வாடிக்கையாகவும்
தாங்கள் கொண்டிருந்திருக்கிறீர்கள். தொடர்ந்து தங்களின் தாயாரின் பேச்சால் தூண்டப்பட்ட
தாங்கள் என் கட்சிக்காரருடன் காரணமின்றிச் சண்டையிட்டுப் பிரிந்து வந்திருக்கிறீர்கள்.
தங்கள் தாயார் வீட்டுக்குத் தாங்கள் சென்ற
பிறகும் எனது கட்சிக்காரர் தங்களுடன் சேர்ந்து வாழ முயற்சித்துள்ளார். அதற்காகப் பல
முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். உறவினர்கள் மற்றும் கிராமத்தார்களைக் கொண்டு பஞ்சாயத்தும்
பேசியுள்ளார். பஞ்சாயத்துப் பேசும் போது சில நாட்களில் வந்து விடுவதாகக் கூறும் தாங்கள்
எனது கட்சிக்காரருடன் சேர்ந்து வாழ வரவில்லை.
இந்த நிலையில் எனது கட்சிக்காரர் 2016
ஆம் ஆண்டில் வழக்கறிஞர் மூலமாக ஏதேனும் மனவருத்தம் இருப்பின் அதைப் பேசித் தீர்த்துக்
கொள்ளலாம் என்ற வகையில் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட தாங்கள்
பதிலறிவிப்புக் கொடுத்ததோடு திருவாரூர் மகளிர் காவல் நிலையத்திலும், திருவாரூர் மாவட்ட
சமூக நல அலுவலகத்திலும் புகார் மனுக்கள் கொடுத்துள்ளீர்கள். அந்த புகார் மனுக்களுக்கு
எனது கட்சிக்காரர் உரிய பதில் மனு சமர்ப்பித்துள்ளார். அத்தோடு அமையாமல் எனது கட்சிக்காரர்
மீது திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜீவனாம்ச வழக்கையும் தொடர்ந்துள்ளீர்கள்.
அந்த மனு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் திருவாரூர் அனைத்து மகளிர்
காவல் நிலையத்தில் தாங்கள் கொடுத்த புகார் மனுவிற்கும் எனது கட்சிக்காரர் வழக்கறிஞர்
மூலமாக சட்டப்படி முறையாகப் பதில் மனு அனுப்பியுள்ளார். அதனிடையே மகளிர் காவல் நிலையத்தில்
புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவலர்கள் விசாரணைக்காக அழைத்ததன் பெயரில் எனது கட்சிக்காரர்
திருவாரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து அதில்
மனுக்கள் எதுவும் நிலுவையில் இல்லாத காரணத்தால் தள்ளுபடி உத்தரவையும் பெற்றுள்ளார்.
இவ்வளவையும் செய்து விட்டு தாங்கள் தங்களின் மாமன் மகனோடு குடித்தனம் செய்வதற்காகக்
கோவில்பெருமாள் சென்று அங்கு கும்மாளம் அடித்து உள்ளீர்கள். அதாவது எனது கட்சிக்காரரிடமிருந்து
சட்டப்பூர்வமான வழியில் விவாகரத்து எதுவும் பெறாமல் தங்களது அத்தை மகனோடு குடும்பம்
நடத்தியுள்ளீர்கள். அங்கும் எனது கட்சிக்காரரும், எனது கட்சிக்காரரின் தாயாரும் வந்து
தங்களை நெறிபடுத்த முயன்றுள்ளனர். தங்களை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் தாங்கள் வர மறுத்துள்ளீர்கள்.
இதனால் எனது கட்சிக்காரரின் தாயார் தனது ஒரே மகனின் கலியாண வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே
என்பதை நினைத்து மனம் நொந்து இறந்து விட்டார். மேற்படி எனது கட்சிக்காரின் தாயாரின்
இறப்பிற்குத் தங்களுக்கு முறையாகப் பல முறைகளில் செய்தி தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாங்கள்
எனது கட்சிக்காரரின் தாயாரின் இறப்பிற்கு வரவில்லை. ஒரு மருமகள் என்ற முறையில் தாங்கள்
செய்ய வேண்டிய எந்த இறுதிச் சடங்கையும் செய்யவில்லை. தாங்கள் எனது கட்சிக்காரரிடமிருந்து
காரணமில்லாமல் சண்டையிட்டுப் பிரிந்து சென்று தங்களது மாமன் மகனோடு சேர்ந்து வாழ்ந்து
வந்தாலும், தங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்களின் அனைத்து விதமான தவறான
உறவுகளையும் மன்னித்து சேர்ந்து வாழ எனது கட்சிக்காரர் தயாராக உள்ளார். ஆகவே இந்த அறிவிப்புக்
கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் எனது கட்சிக்காரருன் தாங்கள் சேர்ந்து வாழ வர வேண்டும்
எனவும், தவறும் பட்சத்தில் தங்களுடன் சேர்ந்து வாழ எனது கட்சிக்காரர் தங்கள் மீது உரிய
நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார் எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் K.
கங்காதரன்,
வழக்கறிஞர்.
இதான் அந்த ரீஸ்தரு தபாலில்ல இருந்த சேதி.
சுப்பு வாத்தியாருக்கு இதெ படிச்சு முடிச்சதும் கொஞ்ச கொஞ்சமா எல்லாம் புரிய ஆரம்பிச்சது.
பீஸ் கோர்ட்டு மூலமா சமாதானம் வெச்சி முடிக்க நெனைக்குறவங்க இப்பிடி ஒரு வக்கீலு நோட்டீஸ
வுட வேண்டியதில்லே. எல்லாம் முடியப் போறப்போ இப்பிடி ஒரு துவக்கம் தேவையில்ல. ஒருவேளை
பீஸ் கோர்ட்டுல வைக்குற சமாதானம் ஒத்து வாராமப் போயிட்டுன்னா வழக்க வழக்காலயே எதிர்கொள்றதுக்கு
இப்பிடி ஒரு நோட்டீஸ அனுப்பிச்சு வழக்குத் தொடர்றதுங்றது ஒரு நல்ல உபாயந்தாம். இதெ
வெச்சி ஒரு வழக்கப் போட்டுட்டா ஜீவனாம்ச வழக்குல பாலாமணி சேர்ந்து வாழணும்ன்னு கோர்ட்டுல
கேஸ்ஸூப் போட்டுருக்கிறதால எதுக்கு ஜீவனாம்சம் கொடுக்கணும்ன்னு வாதாடலாம். அந்தக்
கேஸூக்கு அப்பிடி ஒரு எதிர்வாதம் பண்ணுறதுக்குத்தாம் ஒரே ஒரு வாய்ப்பு இருக்கு. வன்கொடுமெ
வழக்குலயும் சேர்ந்து வாழ தயாரா இருக்குறதா சொல்லி அந்த வழக்கையும் நீர்த்துப் போகச்
செய்யலாம். இப்படி இதுல ஏதோ சூட்சமம் இருக்கணும்ன்னு புரியது சுப்பு வாத்தியாருக்கு.
இதுக்கு மேல இதுல வேறென்ன சூட்சமம் இருக்கும்ங்றதெ வக்கீலக் கேட்டாத்தாம் புரியும்ன்னு
அவருக்குத் தோணுது.
சுப்பு வாத்தியாரு வக்கீல் திருநீலகண்டனுக்குப்
போன அடிச்சிச் சேதியச் சொன்னாரு. "நாமளும் கொடுக்குறதெ கொடு, வாங்கிக்கிறதெ
வாங்கிக்கிறேம்ன்னு சொல்லியாச்சு. அதுப்படி முடிச்சிக்கிட்டு ஒருத்தருக்கொருத்தரு
பிரிஞ்சிப் போயிட வேண்டித்தானே. அதெல்லாம் ஜட்ஜ் மின்னாடி பேசி முடிவு பண்ணதுதானே.
யிப்போ அதுக்கான வேலைகளத்தானே நீஞ்ஞப் பாத்துட்டு இருக்கீயே? பெறவு எதுக்கு இப்பிடி
ஒரு நோட்டீசு?"ன்னு கேட்டாரு.
"கடைசி நேரத்துல நீங்க மாறிப் போவவும்
வாய்ப்பு இருக்குன்னு ஒங்க மாப்புள்ள சந்தேகப்படுறாம் போலருக்கு. அதாங் சமரசமா போனா
அதெ இத்தோட விட்டுடலாம், ஒருவேள சமரசமா போக முடியலன்னா அதுக்கேத்த அடுத்த வழியையும்
இப்பவே பண்ணி வெச்சிக்கிறாம்!"ன்னாரு.
"இதுக்கு யிப்போ என்னத்தெ பண்ணுறது?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"நோட்டீஸ் வந்துட்டா, பதில் நோட்டீஸ
அனுப்பிட வேண்டியதுதாம். அதெ எடுத்துக்கிட்டு உடனே ஆபீஸூக்கு வாங்க! ஆபீஸ்லத்தாம் இருக்கேம்!
நோட்டீஸப் பாத்து முழுசாப் படிச்சாத்தாம் என்ன நோக்கத்துல அவனுங்க இருக்காம்ன்னு
புரிய வரும்! ஒரு மணி நேரத்துல வந்திடுறீங்களா? வேலைய ஒடனே ஆரம்பிச்சிடுவோம்! அவனெ
ஒண்ணும் இல்லன்னு பண்ணிடுவோம்!"ன்னாரு வக்கீலு.
"நாம்ம யிப்போ கும்பகோணத்துப் பக்கத்துல
இருக்குற கோவில்பெருமாள்ல இருக்கேம். அஞ்ஞ வர்றதுன்னா ரண்டு மணி நேரமாச்சும் ஆவும்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அதெ எடுத்துக்கிட்டு அஞ்ஞ எதுக்குப்
போனீயே? போன நீஞ்ஞ அதெ அப்பிடியே இஞ்ஞ வந்து கொடுத்துட்டுப் போவ வேண்டியத்தானே?
நோட்டீஸ் வந்து ஒடனே அடிக்காம அதெ எடுத்துக்கிட்டு வெளியூருக்குப் போயிட்டு அடிக்கிறீங்களே?"ன்னாரு
வக்கீலு.
"நோட்டீஸ் வந்ததெ இஞ்ஞ கோவில்பெருமாளுக்குத்தாம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அங்க எதுக்கு நோட்டீஸ் போவுது
சம்பந்தமில்லாமா? ஒங்க விலாசம் எதுவோ அதுக்குத்தானே வரணும்?"ன்னாரு வக்கீலு.
"இஞ்ஞ கொஞ்ச நாளு மவளுக்கு மனசு
சரியில்லாதப்போ வெச்சி இருந்தேம். இத்து எம்மட மச்சினம் வூடு இருக்குற ஊரு. பிரிஞ்சி
இருந்தப்போ இஞ்ஞ வந்து அந்தப் பயலும், அவனோட யம்மாக்காரியும் கூட பாத்திருக்காங்க!
அதெ வெச்சி அனுப்பிருக்காம் போலருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"மச்சினனுக்குக் கலியாண வயசுல ஒங்க
மவளுக்குக் கட்டிக் கொடுக்குறாப்புல புள்ளைக எதுவும் இல்லீல்ல?"ன்னாரு வக்கீலு.
"ஒருத்தம் யில்ல, ரண்டு பேர்ரா இருக்கானுவோ!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"ன்னா சார்! மடத்தனம் பண்ணி வெச்சிருக்கீங்க?
அந்த நோட்டீஸ அங்கப் போயா கையெழுத்துப் போட்டு வாங்கியிருக்கீங்க?"ன்னாரு வக்கீலு.
"யாமாம்! இதுக்காக மவளெ அழைச்சிட்டுப்
போனேம். மச்சினம் இந்த மாதிரிகின்னுப் போன பண்ணிருந்தாரு. போவ வேண்டியதாப் போச்சு!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"மவளுகிட்டெ போன கொடுங்க!"ன்னாரு
வக்கீலு. போன் செய்யுவோட கைக்கு மாறுனதும் வக்கீல் கேட்டாரு, "ஏம்மா அக்நாலெட்ஜ்மெண்ட்
கார்டுல கையெழுத்துல்லாம் போட்டுக் கொடுத்துட்டீயா?"ன்னு.
"கொடுத்திட்டேம்!"ன்னா செய்யு.
"அப்போ ஒண்ணு பண்ணு. ஒம் ஆம்படையான்
சமரச நீதிமன்றதுக்கு என்னத்தெ காயிதத்துல எழுதிட்டு வந்தாலும் அதெ ஏத்துக்கிட்டு கேஸ்ஸ
முடிச்சிக்கோ! இனுமே ஒனக்கு சமரசத்தத் தவிர வேற வழியில்ல! கூட கொறைச்ச கேக்கறதுக்கும்
இனுமே வழியில்ல. கொடுக்குறதுதாம். நாம்ம வாங்கிக்கிறதுதூம்!"ன்னாரு வக்கீலு.
"அதெத்தானங்கய்யா நாம்ம ஏத்துக்கிட்டோமே!"ன்னா
செய்யு.
"ஏத்துகிட்டது சரிதான். காயிதத்துல
என்னத்தெ எழுதித் தொலைச்சிட்டு வர்றப் போறானுவோன்னு தெரியலயே! அதெ பொறுத்துதாம்
பாக்கணும்! எவ்ளோ நேரம் ஆனாலும் பரவாயில்ல. அந்த நோட்டீஸ எடுத்துக்கிட்டு ஆபீஸூக்கு
வாங்க. அதெ முழுசா படிச்சிப் பார்த்தாத்தாம் ஏன் அந்த நோட்டீஸ் அங்கப் போயிருக்கு,
அங்க வெச்சி ஒங்கள வாங்க வைக்க ஏம் வேல நடந்திருக்குங்றது புரியும்! இதுக்கு மேல போன்ல
பேசுறதுல புண்ணியமில்ல. கெளம்பி நேர்ல வர்றப் பாருங்கோ! இந்தக் காலத்துலயும் இப்படி
இருக்கீங்களே? படிச்ச நீங்களே இப்பிடி இருந்தா என்னத்தெ சொல்றது? ஒண்ணும் சொல்றதுக்கில்லே!"ன்னு
சொல்லிட்டு வக்கீலு போன வெச்சிட்டாரு. சுப்பு வாத்தியாரும், செய்யுவும் நாது மாமாகிட்டெயும்,
நாகு அத்தைகிட்டெயும் கெளம்புறதா சொல்லிட்டு அவசர அவசரமா விளமல்ல இருக்குற வக்கீல்
ஆபீஸ நோக்கிப் பொறப்பட்டாங்க.
நாகு அத்தெ ஒரு வாயிக் டீத்தண்ணியாச்சும் குடிச்சிட்டுப் போன்னு கெஞ்சிப்
பாத்துச்சு. சுப்பு வாத்தியாரு இருந்த நெலையில கௌம்புனவரு கௌம்புனவருதாம். அவர்ர நிறுத்த
முடியல. நாகு அத்தைக்குப் பொங்கி வர அழுகையெ நிறுத்த முடியல. “ஒரு வாயித் தண்ணிய கூட
ஊத்தாம இப்பிடி கால்ல வெந்நிய ஊத்துனாப்புல கௌம்புதுங்களே! இதுங்க எஞ்ஞ வந்தாலும் நிம்மதியா
ஒரு நிமிஷம் இருக்க முடியாதா?”ன்னு அது பாட்டுக்கு அழுகாச்சிய வைக்க ஆரம்பிச்சிட்டுது.
“ஏத்தோ இஞ்ஞ வந்து மச்சானுக்கு நெலமெ சிக்கலாயிட்டுப் போல தெரியுது. அந்தப்
படுபாவிப் பயெ வெஷமத்தனமாக கடுதாசிய அனுப்பி ஏதோ வேல பண்ணிருக்காம் போலருக்கு. யிப்போ
மச்சானெ நிறுத்தாத. போயி வக்கீலப் பாத்து ஆவ வேண்டியதெப் பாக்கட்டும் வுடு!”ன்னுச்சு
நாது மாமா நாகு அத்தையெ சமாதானம் பண்ணுறாப்புல.
அலையுறுத்துக்குன்னெ பொறப்பெடுத்த சுப்பு வாத்தியாரோட டிவியெஸ் பிப்டியோட
சக்கரங்க விளமலு வக்கீலு ஆபீஸ நோக்கிச் சொழல ஆரம்பிச்சது. சுப்பு வாத்தியாரு மனசுக்குள்ளயும்
பல வெதமான நெனைப்புக சொழண்டு சொழண்டு அடிக்க ஆரம்பிச்சது.
*****
No comments:
Post a Comment