12 Dec 2020

ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட்!

ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட்!

செய்யு - 653

            பீஸ் கோர்ட்டுல கிட்டதட்ட எல்லாம் முடியப் போவுதுன்னு நெனைச்சப்ப கோவில்பெருமாள் நாது மாமா போன் அடிச்சி செய்யு பேருக்கு ரீஸ்தர் தபால் வந்திருக்குன்னும், அதெ செய்யு கையிலத்தாம் கொடுக்கணும்ன்னு தபால் ஆபீஸ்ல சொல்றதாவும் தகவல் சொன்னிச்சு. செய்யு கோவில்பெருமாள வுட்டு வந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆயிருந்துச்சு. இந்த இடைபட்ட காலத்துல நாதுமாமா வூட்டுக்கும், சுப்பு வாத்தியாரு குடும்பத்துக்கும் பெரிசா பேச்சு வார்த்தையும் இல்லாம இருந்துச்சு. அப்பிடியிருக்க அங்க யாரு ரீஸ்தரு தபால்ல அனுப்புற அளவுக்குக் கடுதாசிப் போட்டுருப்பான்னு கொழப்பமா இருந்துச்சு. ஒருவேள எம்பில் படிக்கிற காலேஜ்லேந்தோ, கும்பகோணத்துல படிச்ச சியார்ஐ அகாடமியிலேந்தோ கடுதாசி ஏதும் அனுப்பியிருப்பாங்களோன்னு ஒரு நெனைப்பும் வந்துச்சு.

            "ன்னா தபால்?"ன்னு நாது மாமாகிட்டெ திரும்ப போன அடிச்சிக் கேட்டாரு சுப்பு வாத்தியாரு.

            "அத்து என்னவோ கையெழுத்துப் போட்டு வாங்க வேண்டிய கடுதாசியாம். நமக்குச் செரியா வெவரம் கேக்கத் தெரியல. பொண்ணுதாம் வந்து வாங்கணுமாம். பொண்ணு வாரதுன்னா ரண்டு மூணு நாளுக்குக் கடுதாசிய வெச்சிக்கிடலாம். இல்லன்னா திருப்பி அனுப்பிப்புடலாம்ன்னு தபால்காரரு சொன்னாரு மச்சாம். வேறெதும் நமக்குப் புரியல! வந்து வாங்கிக்கிற மாதிரி இருந்தா சொல்லு. தபால் ஆபீஸ்லப் போயிச் சொல்லி வைக்குறேம். ல்லாட்டி அவுங்க திருப்பி அனுப்பிச்சிப்புடுவாங்க!"ன்னுச்சு நாது மாமா.

            போயிக் கடுதாசிய வாங்கிப் பாக்காம வூட்டுலயே உக்காந்து யோசிச்சா அதெப் பத்தி என்ன தெரியும்ன்னு நெனைச்சிக்கிட்டு அந்தக் கடுதாசிய வாங்கிப் பாத்தாத்தாம் வெவரம் புரியம்ன்னு சுப்பு வாத்தியாரு, நாளைக்குக் கெளம்பி வர்றதா போன்ல சொன்னாரு. மறுநாளு, சுப்பு வாத்தியாரும், செய்யுவும் டிவியெஸ் பிப்டியிலேயே திட்டையிலேந்து கோவில்பெருமாளுக்குக் கெளம்பிப் போனாங்க.

            நாது மாமாவோட மொத பையன் சற்குணம் உண்டு பண்ணுன பெரச்சனையால மனசு வெறுத்துப் போயிக் கெளம்பி வந்த சுப்பு வாத்தியாருக்கு இப்பவும் நாது மாமா வூட்டுக்குப் போக பிடிக்கல. நேரா கோவில்பெருமாள் தபால் ஆபீஸ்லப் போயி நின்னாரு. இவுங்கப் போன நேரம் தபால்காரரு தபால்கள எடுத்துக்கிட்டுப் பட்டுவாடா செய்ய பொறப்புட்டுட்டதா போஸ்ட் மாஸ்டர் சொல்ல அவரு வர்ற வரைக்கும் அங்கயே உக்காந்து வாங்கிட்டுப் போறதா முடிவெ பண்ணாரு சுப்பு வாத்தியாரு.

            சுப்பு வாத்தியாரும் செய்யுவும் தபால் ஆபீஸ்ல காத்திருக்கிற விசயத்தெ தெரிஞ்சிக்கிட்டு நாது மாமா தபால் ஆபீஸூக்கே வந்து, "தபால்காரரு வூட்டுக்கு வர்ற நேரந்தாம். வூட்டுக்கு வந்தீன்னா அப்பிடியே வூட்டுலயே வெச்சி வாங்கிப்புடலாம். இம்மாம் தூரம் வந்துப்புட்டு வூட்டுக்கு வர்றாம போன நல்லாவா இருக்கு? கெளம்பு மச்சாம்!"ன்னுச்சு.

            "வாணாம் மச்சாம்! அசிங்கப்பட்டு அங்கயிருந்து கெளம்புறாப்புல ஆயிடுச்சு. திரும்ப அஞ்ஞ வர்ற நமக்கு மனசில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "மவ்வேம் பண்ணதெப் பத்தித்தானே சொல்றே! அவ்வேம் கெடக்குறாம் வுடு. அவ்வேம் வூட்டுலயும் யில்ல. வேலைக்கிப் போயிருக்காம். அத்து என்ன அவ்வேம் வூடா? நம்ம வூடு! அன்னிக்கே அவனெ கண்டிச்சி வுட்டாச்சு. பொண்ணு மேல யிருந்த ஆசையில என்னத்தெ பேசுறது, என்னத்தெ பண்ணுறதுன்னு தெரியாம பண்ணிப்புட்டாம். என்னத்தெ பண்ணச் சொல்ல?"ன்னுச்சு நாது மாமா சாந்தம் பண்ணுறாப்புல.

            "நமக்கு வர்ற மனசில்ல! கட்டாயம் பண்ணப் படாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பிடிச்ச பிடிய உடாம.

            "இதுல ன்னா கட்டயாம் இருக்கு? ஊரு வரைக்கும் வந்துப்புட்டு நீ பாட்டுக்குத் தபால் ஆபீஸ்ல உக்காந்து ஊருக்குப் போனீன்னா ஊருல நாலு பேரு நம்மள பத்தி என்னத்தெப் பேசுவாம்? அப்பிடியொரு பேச்சுக்கு எடம் கொடுத்துப்புடாதே. நீயி வர்றேன்னு ஒந் தங்காச்சி அஞ்ஞ என்னென்ன சமைச்சி வெச்சிக்கிட்டு வருவே வருவேன்னு காத்துக் கெடக்கு. நீயி என்னான்னு நாதியத்த ஆளு மாதிரி இஞ்ஞ வந்துக் கெடக்கே. இதெ வர்றவம் போறவேம் வந்து பாத்துட்டுச் சொல்றப்ப எம்மாம் வேதனையா இருக்கு. வூட்டுக்கு வர்றாம அஞ்ஞ கெடக்குறதெப் பாத்து ஒந் தங்காச்சி அப்பிடியே ஒடிஞ்சிப் போயி வூட்டுல கெடக்கு. நீயி மச்சாம்ன்னு நெனைச்சிக்கிட்டு நமக்காகல்லாம் வார வாணாம். ஒந் தங்காச்சிக்காக வா. வந்துப் பாத்துப்புட்டுப் போயிடு. சாப்புட கூட வாணாம்."ன்னுச்சு நாது மாமா சுப்பு வாத்தியார்ர வுடாம சமாதானம் பண்ணுறாப்புல.

            "நாம்ம இன்னொரு நாளு வர்றேம். யிப்போ நமக்கு மனசு சரியில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மறுக்கா பிடிவாதமா.

            "எப்பிடிச் சரியா இருக்கும்? அந்தப் பயெ தர்ற பணமும் வாணாம். நகையும் வாணாம். பேயாம அவனெ அத்துக் கட்டிப்புட்டுப் பொண்ணுக்கு இன்னொரு எடத்துல ஒரு பையனப் பாத்து கட்டி வைக்குற வேலையப் பாக்குறீயா? அவ்வேம் என்னவோ பெரிய மசுரான்னு நெனைச்சிக்கிட்டு அவ்வேங்கிட்டெ போயி வம்பு வெச்சிக்கிட்டு, அதெல்லாம் வாணாம் போ. சேத்துல கெடக்குற பன்னி சாக்கடைய அள்ளி வீசுதுன்னா நாமளும் பதிலுக்கு எடுத்து அது மேல அடிக்க முடியுமா? யில்ல ரோட்டுலப் போற நாயீ நம்மள கடிச்சி வைக்குதுன்னா நாமளும் பதிலுக்கு அதெ கடிச்சி வைக்க முடியுமா? மொதல்ல கோர்ட்டும் வாணாம். ஒரு மண்ணும் வாணாம். அதெ ஒண்ணும் வாணாம்ன்னே முடிச்சிப்புட்டு வெளியில வா. அப்பத்தாம் ஒமக்கு மனசு சரியாவும். யிப்போ மொதல்ல வூட்டுக்குக் கெளம்பு! ஊரு வரைக்கும் வந்து வூட்டுக்கு வர்றாமப் போனா மனசுக்கு ஒரு மாதிரியாப் போயிடும். கெளம்பி வா!"ன்னுச்சு நாது மாமா எப்படியும் சுப்பு வாத்தியார்ர கொண்டு போற முடிவுல.

            நாது மாமா என்னத்தெ கூப்புட்டும் சுப்பு வாத்தியாரு தபால் ஆபீஸ்ஸ வுட்டு அந்தாண்ட இந்தாண்ட நகரல. "வர்ற இஷ்டம் இல்லன்னா வுட்டுப்புடுங்க மச்சாம்!"ன்னு மூஞ்சுல அடிச்சாப்புல சொல்லிப்புட்டாரு. நாது மாமாவுக்கு ஒரு மாதிரியாப் போயிடுச்சு. கொஞ்ச நேரம் ரண்டு பேருமே எதுவும் பேயாம உக்காந்திருந்தாங்க.

            கொஞ்ச நேரத்துக்குப் பெறவு நாது மாமாவே பேச ஆரம்பிச்சிது. "நீயி வாராட்டியும் பரவாயில்ல. பொண்ணையாவது அனுப்பி வுடு. அழைச்சாந்துப் போயிட்டுக் கொண்டாந்து வுடுறேம்!"ன்னுச்சு.

            சுப்பு வாத்தியாரு மவளப் பாத்தாரு. அவரு போறீயான்னு கேக்கல. அதுக்குள்ள செய்யு, "வாஞ்ஞ மாமா! நாம்ம வர்றேம்!"ன்னு கெளம்பிட்டா. நாது மாமா சைக்கிள தள்ளிட்டுக் கெளம்ப, பின்னாடியே செய்யு போனா. தபால் ஆபீஸ்லேந்து ஒண்ணரைக் கிலோ மீட்டாராவது போவணும் நாது மாமா வூட்டுக்கு. "நாம்ம சைக்கிள வுடுறேம். பின்னாடி உக்காந்துக்கோயேம்!"ன்னுச்சு நாது மாமா.

            "வாணாம் மாமா! நடந்தே போயிடுவேம்!"ன்னா செய்யு.

            "அன்னிக்கு நடந்ததெப் பத்தி மனசுல ஒண்ணும் வெச்சுக்காதே. நீஞ்ஞல்லாம் கெளம்பிப் போனதுக்குப் பெறவு நாமளும் செரித்தாம், யத்தையும் செரித்தாம் அவனெ கடுமையா வைஞ்சுப்புட்டோம். அன்னிலேந்து அவனுக்கும் நமக்கும் பேச்சு வார்த்தெ யில்ல. அவ்வேம் பாட்டுக்கு வருவாம், போவாம், அவனாவே சாப்பாட்டப் போட்டுச் சாப்புடுவாம். அவ்வளவுதாம் அவனுக்கும் வூட்டுக்குமான ஒறவு. சின்னவன் சரவணனோடத்தாம் பேச்சுல்லாம். ஒஞ்ஞ யத்தெதாம் ரொம்ப ஒடிஞ்சிப் போயிட்டா. நமக்கும் எப்பிடி அஞ்ஞ வர்றதுன்னு ஒரு யோசனெ. மச்சானுக்கும் அப்பிடித்தாம் இஞ்ஞ எப்பிடி வாரதுன்னு யோசனையா இருந்திருக்கும். அதாங் யிப்போ வாரதுக்கும் யோஜனெ பண்ணுது. நீயும் ன்னத்தா பண்ணுவே பொம்பளப் புள்ளையாப் போயிட்‍டே. நீயா கெளம்பில்லாம் வார்ற முடியாது. ஆன்னா ஒம்மட அண்ணன் கெடக்கானே விகடு அவ்வேம் வந்துட்டுப் போவலாம். குடும்பத்துல நடக்குற இந்த மாதிரியான பெரச்சனைகள இனுமே அவ்வேந்தாம் சரிபண்ணி வுடணும். அவனா எதெயும் கண்டுக்கிடாம இருக்குற பயெ. எஞ்ஞ எது நடந்தா ன்னான்னு அவ்வேம் பாட்டுக்குப் போயிட்டு இருப்பாம்!"ன்னுச்சு நாது மாமா.

            "யண்ணன் பாவம் மாமா! கோர்ட்டு கேஸ்ஸூன்னு வந்தப் பெறவு ரொம்ப அலைச்சலு. வேற எதுலயும் மனசெ செலுத்து முடியாமப் போயிடுச்சு. யிப்பிடில்லாம் ஆவும்ன்னு தெரிஞ்சிருந்தா கொடுக்குறதெ கொடு, கொடுக்காட்டியும் போன்னு வுட்டுப்புட்டு விவாகரத்துக் கேஸ்ஸப் போட்டு முடிச்சிருக்கலாம். கஷ்டப்பட்டு குருவிச் சேக்குறாப்புல சேத்தக் காசியா இருக்கே! அத்தோட இன்னொரு கலியாணத்தப் பண்ணி வுடணும்ன்னாலும் காசிப் பணம் வேண்டியதா இருக்கேன்னு போயி நிக்குறதுக்கு இனுமேத்தாம் ஒரு நல்ல காலம் பொறக்கும் போலருக்கு!"ன்னா செய்யு.

            "கேஸ்ஸூ முடியப் போவுதா?"ன்னு கேட்டுச்சு நாது மாமா.

            "ஏதோ கொடுக்குறதெ கொடு. வாங்கிக்கிறதெ வாங்கிக்கிறேம்ன்னு சமரச நீதி மையத்துல பேசி முடிச்சாச்சு. வக்கீலுங்க அதுக்கான காயிதத்தெ தயாரு பண்ணி என்னென்ன வாங்குறதுன்னு எழுதி முடிச்சிட்டுச் சொன்னாங்கன்னா போயிப் பாத்துக் காரியத்த முடிச்சிடலாம்!"ன்னா செய்யு.

            "அதெ சீக்கிரமா முடிக்கச் சொல்லு. இப்பிடியா சவ்வுப் போல ரண்டு வருஷத்தெ நெருங்கப் போவுது கேஸ்ஸப் போட்டு இழுத்தடிப்பானுவோ? எல்லாம் ஒம் மாமியக்காரி இருக்காளே. அவ்வே வந்துட்டுப் போன நேரம். இஞ்ஞயும் எல்லாரும் செதறிப் போறாப்புல ஆயிடுச்சு! அவ்வே பூந்தா எந்த வூடும் உருப்படாது போலருக்கு!"ன்னுச்சு நாது மாமா.

            "அத்துச் செத்துப் போச்சுது மாமா!"ன்னா செய்யு.

            "செத்துப் போச்சுதா? ந்நல்லா குத்துக்கல்லாட்டம்லா இருந்துச்சு. அதுக்கு ன்னா கேடு வந்துச்சு?"ன்னுச்சு நாது மாமா.

            "அப்பனும் மவனுமாவே சேந்து அடிச்சே கொன்னுப்புட்டானுவோ!"ன்னா செய்யு.

            "இதென்னடி பொண்ணே அதிசயமா இருக்கு? அந்தப் பயலுக்கு பெத்தத் தாயீ! எவனாச்சும் பெத்தத் தாயா அடிச்சிக் கொல்லுவானா? அந்தத் தாடிக்காரப் பயலுக்கு தாலி கட்டுன பொண்டாட்டிதானே. தாலி கட்டுன பொண்டாட்டிய எவனாச்சும் அடிச்சிக் கொல்லுவானா? நல்லவேள செரியான நேரத்துல நீயி அஞ்ஞயிருந்துக் கெளம்பி வந்தே. ல்லன்னா ஒங் கதிய நெனைச்சிப் பாக்கவே பயமாத்தாம் இருக்கு!"ன்னுச்சு நாது மாமா.

            "அதாங் மாமா! எல்லாம் முடியப் போவுது. அநேகமா ஒரு வாரத்துல வக்கீலு போனப் பண்ணாருன்னா போயி முடிச்சிட வேண்டியதுத்தாம். நெதமும் வக்கீலு போனப் பண்ணுட்டு அதெ வாங்குறேம் இதெ வாங்குறேம்ன்னு சொல்லுவாரு. யப்பா அதெல்லாம் பெரிசா கண்டுக்கிடறது யில்ல. ஏதோ வாங்கிக் கொடுங்க போதும்ன்னு சொல்லுது. அந்த வக்கீலுத்தாம் என்னவோ அதெ வாங்கமா வுட மாட்டேம், இதெ வாங்காம வுட மாட்டேம்ன்னு அழிச்சாட்டியும் பண்ணிட்டுக் கெடக்குறாம். கொடுக்குறதெ கொடுக்கட்டும் வாங்கிக் கொடுன்னா நமக்குள்ள அதுல பீஸ் கொறையும்ங்றாம். அவ்வேம் வாங்கிக் கொடுக்குற அளவுக்கு அதுல காசி மாமா!"ன்னா செய்யு.

            "வக்கீலுங்க அப்பிடித்தாம். சுலுவுல முடிக்க வுட மாட்டாங்க. ஆயிரத்தெட்டு முட்டுக்கட்டைகளப் போட்டு முடிச்சா போதும்டா சாமின்னு நாம்ம கால்ல வுழுவுறப்பத்தாம் முடிச்சிக் கோடுப்பாம். அஞ்ஞப் போயி நாம்ம அடியெடுத்து வெச்சிருக்கக் கூடாது!"ன்னுச்சு நாது மாமா.

            "அவனுங்க வக்கீல் நோட்டீஸ் அனுப்புன பெற்பாடு நாம்ம என்னத்தெ பண்ணுறது மாமா! அதாங் அஞ்ஞப் போயி நிக்குறாப்புல ஆயிடுச்சு!"ன்னா செய்யு.

            "ஏத்தோ நம்ம கெட்ட நேரம்ன்னு நெனைச்சிக்கோ. நீயி இஞ்ஞ வந்து அஞ்ஞப் போயி நெனைச்சிப் பாக்கவே முடியல. ஒம் படிப்பு என்னாச்சி? முடிஞ்சிடுச்சா? அதுக்கு எதாச்சும் வேலப் போட்டுக் கொடுத்துருக்கானா கவர்மெண்ட்ல? கவர்மெண்ட்டு பரீட்செல்லாம் எழுதுனீயே?"ன்னுச்சு நாது மாமா.

            "இந்நேரத்துக்குப் படிப்பு முடிஞ்சிருக்கணும் மாமா! கோர்ட்டு கேஸூன்னு அலைஞ்சதுல மனசெ சரியா அதுல போகாம கொஞ்சம் இழுத்துக்கிட்டு இருக்கு. புராஜெக்ட்த்தாம் கிட்டதட்ட முடிச்சிட்டேம். அநேகமாக முடிச்சிடுவேம். கைடுகிட்டெ காட்டி சம்மதம் மட்டுந்தாம் வாங்கணும். இதெ மொதல்ல முடிச்சிட்டு அங்கப் போவலாம்ன்னு இருக்கேம்!"ன்னா செய்யு.

            "அதெ சீக்கிரமா முடி! அப்பத்தாம் கவர்மெண்டுல ஒரு வேலயப் போட்டுக் கொடுப்பாம்!"ன்னுச்சு நாது மாமா.

            "அதெ முடிச்சாலும் கவர்மெண்டு வேல கெடைக்காது மாமா! கவர்மெண்டு பரீட்செ எழுதாம வேல கெடைக்காது!"ன்னா செய்யு.

            "பெறவு அந்தப் பரீட்சைய எழுதாம எதுக்கு இந்தப் படிப்ப தேவையில்லாம் படிச்சிட்டு இருக்கே?"ன்னுச்சு நாது மாமா.

            "கவர்மெண்டுப் பரீட்செ எழுதுற அளவுக்கு மனநெல யில்ல மாமா. அத்து முடியாமத்தாம் நமக்குப் பிடிச்ச கணக்குலயே மேக்கொண்டு படிக்கலாம்ன்னு நெனைச்சது. அத்துவும் என்னவோ இழுத்துக்கிட்டுப் போவுது. கோர்ட்டு கேஸூன்னு அலையுறதாலயோ என்னவோ சரியா எதுலயும் மனசுப் போவ மாட்டேங்குது!"ன்னா செய்யு.

            "அதாங் எல்லாம் முடியப் போவுதுன்னு சொன்னீயே? இந்தப் படிப்பையும் முடிச்சிட்டு அத்தோட கவர்மெண்ட்டு பரீட்சையையும் எழுது. வேல கெடைச்சிட்டா அதாங் யப்பாவுக்கும், யண்ணனுக்கும் ரொம்ப சந்தோஷம். அதுக்காகத்தாம் ரண்டு பேருமே இம்மாம் கஷ்டத்தப் பட்டுக்கிட்டு இருக்குதுங்க. மனசுல இருக்குற கவலெய வெளியில சொல்ல முடியாட்டியும் நீ மட்டும் வேலைக்குப் போயிட்டே அவுங்களுக்கு அத்து ஒரு பெருமெதாம். அவுங்க கவலெக்கும் அத்து ஒரு மருந்தாயிடும். கவர்மெண்டு வேல கெடைச்சா மாப்புள அவ்வேம் இவ்வேம்ன்னு தேடி வருவாம். ஒரு நல்ல பையனா பாத்துக் கலியாணத்தக் கட்டிட்டுச் சந்தோஷமா இரு. அதாங் சொல்றீயே இனுமே கோர்ட்டு கேஸ்லேந்து இனுமே ஒமக்கு விடுதலைத்தாம்! எல்லாத்துலேந்தும் விடுதலைத்தாம்!"ன்னுச்சு நாது மாமா.

            அவுங்க இப்பிடி சைக்கிள தள்ளிக்கிட்டே பேசிட்டு வூடு வந்துச் சேந்தாங்க. வாசலுக்கு வெளியிலயே நாகு யத்தெ நின்னுப் பாத்துக்கிட்டு இருந்துச்சு. இவுங்க வர்றதப் பாத்து, "வாடி ராசாத்தி! யப்பா வாரலியா?"ன்னுச்சு ஒடனே.  

            "அத்து என்னவோ தபாலாபீசில குந்திக்கிட்டுக் கெளம்ப மாட்டேங்குது. செரித்தாம் போன்னு பொண்ண கெளப்பிக்கிட்டு வந்தேம். தபால்காரரு வந்துப்புட்டாரா?"ன்னு கேட்டுச்சு நாது மாமா.

            "இன்னும் வாரல. சித்தெ நேரத்துல வந்துப்புடுவாரு. வர்ற நேரந்தானே. ரெட்டைத் தெரு சுத்திக்கிட்டு இந்நேரம் வந்துக்கிட்டுத்தாம் இருப்பாரு!"ன்னுச்சு நாகு அத்தெ.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...