11 Dec 2020

மீண்டும் சமரச நீதி மையம்!

மீண்டும் சமரச நீதி மையம்!

செய்யு - 652

            சரசு ஆத்தா செத்த பெறவு கொஞ்ச நாளு வரைக்கும் பாலாமணியோ பாலாமணி தரப்புல யாருமோ வழக்குக்கு ஆஜராவுல. பாலாமணிக்கு எல்லா பக்கத்துலேந்தும் வழக்கு ரொம்ப பலவீனமா ஆவத் தொடங்குனுச்சு. ஆர்குடி குற்றவியல் நீதிபதியும், திருவாரூர் முதன்மை குற்றவியல் நீதிபதியும் பாலாமணி கோர்ட்ட மதிச்சு ஆஜராகலங்ற அதிருப்தியில இருந்தாங்க. அன்னிக்கு சீஜேயெம் கோர்ட்டு ஜட்ஜ் ஜீவனாம்ச வழக்குல கடெசீ வாய்ப்பப் பாலாமணிக்குக் கொடுக்குறதா சொன்னப்போ பாலாமணி சார்பா ஒரு புது வக்கீலு வக்காலத்துப் போட்டு ஆஜரானாரு. ஆளு பாக்குறதுக்குக் கருப்பா கட்டையா இருந்தாரு. நடையிலயும் ஓட்டத்துலயும் ஒரு சுறுசுறுப்பு தெரிஞ்சிது. வேக வேகமா உள்ளார நொ‍ழைஞ்சவரு ஜட்ஜூக்கிட்டெ பேசுறப்போ அப்பிடியே கோர்ட் கிளார்க்குக்கு மின்னாடி போட்டிருக்குற பெஞ்சுல படுத்தாப்புல முதுக வளைச்சி, கொஞ்ச நேரத்துல தன்னோட கட்சிக்காரரு கோர்ட்ல வந்து ஆஜராவார்ன்னு சொல்லி பாஸ் ஓவர்ரப் பண்ணினாரு. அவரோட கொரலு யாரு காதுக்கும் விழாத அளவுக்கு சப்தம் கம்மியா இருந்துச்சு.

            பன்னெண்டு மணிக்கு மேல திரும்பவும் ஜீவனாம்ச வழக்குக்குக் கூப்பிட்டப்போ ரொம்ப நாளுக்குப் பெறவு, நெறைய வாய்தாக்களுக்குப் பெறவு பாலாமணி கோர்ட்டுல ஆஜராவ வந்தாம். ஆளப் பாக்குறதுக்கே பாவமா இருந்தாம். தாடியெல்லாம் வளந்து ஆளப் பாக்குறதுக்கு ரொம்ப வித்தியாசமாவும் இருந்துச்சு. பாலாமணிக்குப் பின்னாலயே ராசாமணி தாத்தாவும் வந்துச்சு. இவ்வளவு நாளு வர்றாம இருந்ததுக்காக நீதிபதி தன்னோட அதிருப்திய பாலாமணிக்குத் தெரிவிச்சப்போ, தன்னோட தாயாருக்கு ஒடம்பு முடியாம இருந்ததால மனசு சரியில்லாமப் போயி தன்னால வர்ற முடியலன்னும், இந்தக் கேஸாலத்தாம் அவுங்க ஒடம்பு முடியாமப் போனதாவும், யிப்போ அவுங்க எறந்துட்டதால கோர்ட்டுக்கு ஆஜராக வந்திருக்கிறதாவும் சொன்னாம் பாலாமணி. அதெ கேட்டதும் நீதிபதிக்கு மனசு எறங்கிடுச்சு. போட்டிருந்த கண்ணாடிய எறக்கி கண்கள கைக்குட்டையால தொடைச்சிக்கிட்டாரு நீதிபதி. இந்தக் கேஸ்ஸ சீக்கிரமா முடிச்சிக்கிட்டா தேவலாம்ன்னு நீதிபதி பாலாமணிகிட்டெ சொன்னாரு.

            "நாங்க ரண்டு பேரும் சேந்து வாழணும்ன்னுத்தாம் எஞ்ஞ யம்மா உசுர வுட்டுருக்கு. அதால அய்யா நமக்குச் சேந்து வாழ்றதுக்கு இன்னொரு வாய்ப்பு தந்தா நல்லா இருக்கும்!"ன்னாம் பாலாமணி.

            "இப்பத்தாம் கட்டுக பீஸ் கோர்ட்டுலேந்து இங்க திரும்பியிருக்கு! திரும்பவும் அனுப்பிச்சா நல்லாவா இருக்கும்?"ன்னாரு நீதிபதி.

            "எனது கட்சிக்காரருக்கு கனம் கோர்ட்டார் அவர்கள் இன்னொரு வாய்ப்பைத் தந்தால் அதை நிச்சயம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார். அவர் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒரு வாய்ப்பைத் தர வேண்டும்!"ன்னு அதுவரைக்கும் யாருக்கும் கேக்காத குசுகுசு கொரல்ல பேசுன வக்கீலு சினிமா பாணியில ரொம்ப சத்தமா இதாங் கோர்ட்டுங்றது மாதிரி காட்டுறாப்புல பேசுனாரு பாலாமணி சார்பா ஆஜரான வக்கீலு.

            “நீங்க என்ன சொல்றீங்க?” இதெப் பத்தி செய்யுகிட்டெயும், வக்கீல் திருநீலகண்டன்கிட்டேயும் கருத்தெ கேட்டாரு நீதிபதி. வக்கீல் திருநீலகண்டன், "ஏற்கனவெ நெரம்ப பேசியாச்சுங்கய்யா! என்னோட கட்சிக்காரவங்க ஜீவனாம்சம் கெடைக்காம வாழ்க்கைய நடத்த ரொம்ப சிரமப்படுறாங்க. இன்னிக்குக் கோர்ட்டுக்கு வந்து போவ கூட காசில்லாம அக்கம் பக்கத்துல கடன வாங்கிட்டுத்தாம் வந்திருக்காங்க. கொஞ்சம் சீக்கிரமா விசாரிச்சி ஜீவனாம்சத்த வழங்குனா நல்லா இருக்கும். எதிர்தரப்பு ரிக்வெஸ்ட்ங்றது வழக்க இழுத்தடிக்கிறதுக்காக பண்ணுற உத்தித்தாம் இது!"ன்னாரு.

            செய்யுவும், "நமக்குச் சேர்ந்து வாழ பயமா இருக்குங்கய்யா! மறுக்கா சேந்து வாழ்றதப் பத்திப் பேசுறாப்புல அனுப்பிச்சிடாதீங்கய்யா!"ன்னா பட்டுன்னு.

            நீதிபதி ஒரு நிமிஷம் கண்ண மூடி யோசிச்சுப் பாத்தாரு. பேனாவுல ஏதோ எழுதுனாரு. பெறவு பேச ஆரம்பிச்சாரு. "எதுவா இருந்தாலும் இன்னொரு வாய்ப்புத் தர்றதுல தப்பு இல்லன்னு நெனைக்குறேம்! பீஸ் கோர்ட்டுக்குப் போயிப் பாருங்க. சேர்ந்து வாழ்றதும், பிரிஞ்சி வாழ்றதும் ஒங்க முடிவுதாம். அதுல நீதிமன்றம் தலையிடாது. அந்த முடிவுக்கு முன்னாடி இன்னொரு தடவெ அதெப் பத்திப் பேசுறதுல எந்தத் தப்பும் இல்ல! லாஸ்ட் அன்ட் பைனல் சான்ஸ்!"ன்னு சொல்லி நீதிபதி திரும்பவும் கேஸ் கட்ட பீஸ் கோர்ட்ட நோக்கித் திருப்புனாரு.

            கோர்ட்ட விட்டு வெளியில வந்தப்போ திருநீலகண்டன் வக்கீல் வந்து சுப்பு வாத்தியார்கிட்டெ பேசுனாரு. "ஆப்போசிட் லாயர் இங்க வர்றதுக்கு முன்னாடியே நேத்தி ராத்திரி நம்மகிட்டெ பேசுனான். பேரு கங்காதரன். தஞ்சாவூருக்காரன். ஒங்க மாப்புள்ளையோட மாமாங்காரரு லாலுன்னு ஒருத்தரு இருக்காரம்லா. அவரு மூலியமாத்தாம் இந்த லாயர்ர பிடிச்சிருக்காம் ஒங்க மாப்புள. சேத்து வாழ வைக்கணுங்றதுல ரொம்ப பிடிவாதமா இருக்கிறாம் ஆப்போசிட் லாயரு. பழைய கதையெல்லாம் சொல்லி அது முடியாதுன்னு சொல்லிருக்கேம். இருந்தாலும் இப்போ கேஸ் கட்டு பீஸ் கோர்ட்டுக்குத் திரும்பியிருக்கிறதால மறுபடி ஒரு சுத்து சேர்த்து வாழ வைக்கிறதப் பத்தித்தாம் பேசுவாங்க. பீஸ் கோர்ட்டுக்கு ஒழுங்கா ஒங்க மாப்புள்ளைய அழைச்சிட்டு வர்றதாவும் ஆப்போசிட் லாயர் சொல்லிருக்கார்! எப்படியும் மூணு சிட்டிங் முடிஞ்சித்தாம் கேஸ் கட்டுக இங்க வரும். அது வரைக்கும் பொறுத்துதாம் ஆவணும்!"ன்னு.

            இதெ கேட்டுட்டு, "எத்தனெ தடவத்தாம்ங்கய்யா! பீஸ் கோர்ட்டுல போயி நிக்குறது? சமூக நீதி மைய வெசாரணைன்னு அதுல அஞ்சாறு மாசத்துக்கு மேலப் போனுச்சு. இஞ்ஞ வந்து பீஸ் கோர்ட்டுன்ன அது ஒரு மூணு நாலு மாசம் போனுச்சு. இப்பிடியே மாசந்தாம் போயிட்டு இருக்கு. அஞ்ஞ ஆர்குடி கோர்ட்டுல எக்ஸ்பார்ட்டியான்ன கேஸ்ஸூ வரக் கெடக்குது!"ன்னா செய்யு.

            "ஆர்குடி கோர்ட்டு கேஸ்ல எக்ஸ்பார்ட்டி சட்டிசைடு பண்ணி வழக்குக்கு உள்ளார பாலாமணி வர்றப் போறதா ஆப்போசிட் லாயர் சொல்லிருக்காம். அப்படி வந்தா கேஸ்ஸூ நடத்துற மாதிரித்தாம் ஆவும்!"ன்னாரு திருநீலகண்டன்.

            “அப்போ இந்தச் சுத்துக்கு ஒரு முடிவே கெடையாதா?”ன்னா செய்யு வக்கீலப் பாத்து.

            “வெயிட் அன்ட் ஸீ!”ன்னாரு வக்கீலு திருநீலகண்டன். சுப்பு வாத்தியாருக்கு வேறெதெயும் பேசத் தோணல. அவ்வளவுதாம் அன்னிக்குப் பேச்சு. நூத்து ரூவாய எடுத்துக் கொடுத்துட்டு வந்துகிட்டெ இருந்தாங்க சுப்பு வாத்தியாரும் செய்யுவும்.

            திரும்பவும் பீஸ் கோர்ட்டுக்கு செய்யு போவ வேண்டியதாப் போச்சு. இந்த மொறை ஒவ்வொரு தடவையும் பீஸ் கோர்ட்டுக்கு பாலாமணி வக்கீலோட ஆஜரானாம். கூடவே ராசாமணி தாத்தாவும் வந்துச்சு. எல்லாரும் இன்னோவா கார்ல வந்து எறங்கினாங்க. மறுபடியும் எல்லாம் மொதல்லேந்து ஆரம்பமாறது போல இருந்துச்சு. பீஸ் கோர்ட்டு ஜட்ஜ் பழையபடிக்கு ஒவ்வொருத்தரா கூப்ட்டு பேசுனாரு.

            பீஸ் கோர்ட்டு ஜட்ஜ்கிட்டெ பேசுறப்போ பாலாமணி ரொம்ப உருக்கமா பேசுனாம். அவனோட தோற்றமும் தாடியெல்லாம் வெச்சிக்கிட்டு, முடியெல்லாம் வெட்டாமா பரிதாபத்த உண்டு பண்ணுறாப்புலத்தாம் இருந்துச்சு. பீஸ் கோர்ட்டு ஜட்ஜூக்கு மின்னாடியே பாலாமணியப் பத்தின நல்ல அபிப்ராயம் இல்லன்னாலும் இப்போ அவனோட பேச்சும், தோற்றமும் அவ்வேம் மேல ஒரு பரிதாபத்த உண்டு பண்ணுச்சு. அதுக்கேத்தாப்புல பாலாமணியும் பேசுனாம், "பெத்தத் தாய இழந்துட்டு நிக்குறேம் சார்! இப்போ கட்டுன பொண்டாட்டியையும் இழந்துட்டு நிக்க விரும்பல. நாம்ம பண்ணதெ எதையும் சரின்னு சொல்ல வாரல. தப்புத்தாம். இல்லன்னு சொல்லல. தப்புச் செஞ்சவேம் திருந்தி வாழ ஒரு வாய்ப்பக் கேக்குறதுக்குத்தாம் இஞ்ஞ வந்திருக்கேம்! எப்படியாச்சும் நம்மள பொண்டாட்டியோ சேத்து வெச்சிடுப்புடுங்க சார்!"ன்னு உடைஞ்சி வுழுவுறாப்புல பேசுனதுல ஜட்ஜ் ‍யோசிச்சுப் பாத்துப்புட்டுச் செய்யுவையும், சுப்பு வாத்தியாரையும், விகடுவையும் கூப்ட்டு வெச்சிப் பேசுனாரு. திரும்பவும் பீஸ் கோர்ட்டுன்னதும் சுப்பு வாத்தியாரு எதுக்கும் இருக்கட்டுமேன்னு கைப்புள்ளைய கூப்புட்டதுல கைப்புள்ளயும் வந்திருந்தாரு. அவருக்கும் ஒரு நெனைப்பு. கேஸ் பாட்டுக்கு இழுத்துட்டுப் போவுதே, என்னா ஏதுன்னு போயிப் பாத்துப்புட்டு வந்துப்புடுவேம்ங்ற நெனைப்புலயம் வந்திருந்தாரு. அவரையும் கூப்ட்டு வெச்சிப் பேசுனாரு ஜட்ஜ்.

            ஜட்ஜ் மொதல்ல விகடுகிட்டேயிருந்துதாம் பேச்ச ஆரம்பிச்சாரு. அவரு விகடுகிட்டெ பேசுறப்போ, "நீங்க கலியாணம் பண்ணிட்டுக் குடும்பத்தோட இருக்கீங்க. அதால அந்த வேதனை அவரோட கஷ்டம் ஒங்களுக்குப் புரியாது. நீங்கக் குடும்பத்தோட இருக்குறதப் போலத்தாம் அவரும் குடும்பத்தோட இருக்க ஆசைப்படுறாரு. இதெப் புரிஞ்சிக்கிட்டு நீங்கத்தாம் ஒரு வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுக்க முன் வரணும்!"ன்னாரு ஜட்ஜ்.

            ஏற்கனே செய்யு தூக்கு மாட்டுன நேரத்துல எதையும் பாக்காம சேத்து வைக்குறதுக்காக பண்ணிக் கொடுத்த வாய்ப்பப் பத்தி விகடு பேசுனாம். அதெ கேட்டுக்கிட்ட ஜட்ஜ், "அப்போ நெலமெ வேற. இப்போ நெலமெ வேற. தாய இழந்துட்டு நிக்குறவன் தாரத்தையும் இழந்துடக் கூடாதுன்னு நிக்குறாம். பேசுற பேச்சுல அந்த வலி தெரியுது. எந்த மனுஷனும் தப்பு பண்ணணும்ன்னு நெனைக்கிறதில்ல. சூழ்நிலையும்,மனநிலையும் அப்பிடி செய்ய வெச்சிடுது. அதெ மாத்திக்கிற மனசு வர்றப்போ மன்னிச்சுப் பெருந்தன்மையா நடந்துக்கிறதுதாம் அழகு!"ன்னாரு.

            "தங்காச்சிய அனுப்பி ரிஸ்க் எடுக்குற வேலையில நாஞ்ஞ எறங்கத் தயாராயில்லங்கய்யா. ஆத்தாக்காரிச் சாவுக்குப் போன எஞ்ஞ பெரிம்மா, சின்னம்மான்னு எல்லாத்தையும் அவுங்க அடிச்சி வெரட்டாதக் கொறையாத்தாம் அனுப்பிருக்காங்க. அத்தோட அந்தச் சாவுக்குக் காரணம் எந் தாங்காச்சித்தாம்ங்ற மாதிரி கொறையும் சொல்லிட்டு இருக்காங்க. அதெ வுட முக்கியமா அந்தச் சாவுக்குக் காரணமே பாலாமணியும், ராசாமணி தாத்தாவுந்தாம்ன்னு ஊர்ல பேச்சு வேற அடிபடுதுங்கய்யா. நாஞ்ஞ ஒருவேள நீஞ்ஞ சொல்றபடியே அனுப்பி வெச்சாலும் நாளைக்கி எதாச்சும் ஒரு பெரச்சனைன்னா வந்தா இந்தச் சாவ இழுத்துத்தாம் பேசுவாய்ங்க. பெறவு பழையபடி பெரச்சனெ வர்றதுக்கான வாய்ப்பு இருக்குறதாவே நெனைக்கிறேம்!"ன்னாம் விகடு.

            வயசுல எளமையா இருக்காம்ங்றதால, சொல்றதெ புரிஞ்சிக்குவாம்ன்னு இவ்வேம்கிட்டெ பேச்ச ஆரம்பிச்சா நல்லாருக்கும்ன்னு நெனைச்ச ஜட்ஜ், அது தப்புங்ற மாதிரி நெனைச்சாப்புல மொகத்த வெச்சிக்கிட்டு இப்போ சுப்பு வாத்தியாருகிட்டெ சேர்த்து வாழ வைக்கிறதப் பத்திக் கேட்டப்போ அவரு பழையபடி அதெயோ ரொம்ப தீர்க்கமா சொன்னாரு, "அனுப்பி வைக்குறதுன்னா பொண்ணு பொணமா திரும்புங்றதெ ஏத்துக்கிட்டு கல்லு மனசா இருந்தாத்தாம் அனுப்பி வைக்கலாம். வெச்சிக் குடித்தனம் நடத்துறவேம் பண்ணுற எந்த வேலையையும் அவ்வேம் பண்ணல. அவ்வேம் மேல நமக்கு நம்பிக்கையே யில்ல!"ன்னுட்டாரு ஒரே போடா போட்டாப்புல.

            செரித்தாம் இவனுங்ககிட்டெ கேட்டு என்னாவப் போவுதுன்னு வாழப்போற பொண்ணுகிட்டெயே கேப்பேம்ன்னு ஜட்ஜ் செய்யுகிட்டெ கேட்டா, செய்யுவும் அதையேத்தாம் சொன்னா, "இனுமே அந்த ஆளோட குடும்ப நடத்துறதுக்கான தெம்பு நம்ம ஒடம்புலயும் யில்ல, தெகிரியம் மனசலயும் யில்ல. போயி நடைபொணமா வாழணும்ன்னாத்தாம் வாழலாம். இந்த ஆளே ஏத்துக்கிட்டாலும் அவுங்க குடும்ப வகையில வர்ற மித்தவங்க இனுமே நம்மள எப்பிடி ஏத்துப்பாங்கய்யா? மாமியாக்காரியோட சாவுக்கு நாம்மத்தாம் காரணம்ன்னு பொரணி பேசிட்டுத்தாம் இருப்பாங்க. என்னைக்காவது ஒரு சண்டைன்னு வந்தா இந்தப் பெரச்சனெ விஸ்வரூபம் எடுக்காம எப்பிடி இருக்கும்ங்க்யயா! சேந்து வாழ்றதுக்கான நெறைய வாய்ப்புக இருந்துச்சு. அந்த வாய்ப்புக எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்ச பெற்பாடு திரும்பவும் அவுங்க மொதல்லேந்து ஆரம்பிக்க‍ நெனைக்குறாங்க. நமக்கு அந்த மனசேப் போயிடுச்சு. சேந்து வாழ முடியும்ங்ற நம்பிக்கையும் போயிடுச்சு! சேந்து வாழப் போனா செத்துப் பொணமாத்தாம் திரும்புவேம்ன்னு பயமா இருக்குதுங்கய்யா!"ன்னா செய்யு.

            எங்க ஆரம்பிச்சாலும் இப்பிடிப் போயி முட்டிக்குதேன்னு கைப்புள்ளையப் பாத்து சேத்து வாழ வைக்கிறதெப் பத்தி ஜட்ஜ் கேட்டாரு. கைப்புள்ளையும், "பாவம்ங்கய்யா பொம்பளப் புள்ளையா பொறந்து நல்ல வெதமா வளந்து கலியாணத்தப் பண்ணி அனுபவிக்கக் கூடாத அத்தனெ கஷ்டத்தையும் அனுபவிச்சிடுங்கய்யா! இதுக்கு மேல அதுக்கு நல்ல வாழ்க்கெத்தாம் அமையணும். அப்பிடி நல்ல வாழ்க்கெ அமையுணும்ன்னா அவ்வேம் கூட பொண்ணு வாழக் கூடாதுங்கய்யா. அவனெ அத்து வுட்டுப்புட்டு இன்னொருத்தம் கூட சேத்து வெச்சாத்தாம் நல்ல வாழ்க்கெ வாழ முடியும்!"ன்னாரு மூணு பேத்து சொன்னதெ விட ரொம்ப கட்டஞ் சாரமா.

            இருந்தாலும் சமரச நீதிமன்ற நீதிபதி வுடல. கொஞ்ச நேரம் வெளியில போயி கலந்து பேசிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி வுட்டு திரும்பவும் ரண்டு மொறை அழைச்சி இதையேப் பேசுனாரு. பாலாமணி மட்டுந்தாம் சேர்ந்து வாழணும்ன்னு நின்னு, மித்த யாருமே அந்த முடிவுக்கு உடன்படாத காரணத்தால ஜட்ஜூ மேக்கொண்டு இதுக்கு மேல அழுத்தம் கொடுக்க விரும்பல. இதுக்கு மேல இதெப் பேசி கதெ ஆவப் போறதில்லன்னு ஜட்ஜ்க்கு நல்லாவே புரிஞ்சிப் போயிடுச்சு. செரித்தாம்ன்னு அவுங்க போக்குக்கே பேசித் திரும்பவும் கேஸ் கட்டு கோர்ட்டுக்குப் போவமா இங்கயே வெச்சி பேசி முடிச்சிடுறதுங்ற முடிவுக்கு அவரு வந்தாரு. அதுக்கேத்தாப்புல அவரு அடுத்தக் கட்டத்தெ நோக்கி நகர்த்துனாரு. ஒருவேள பிரியுறதுன்னா அது எப்பிடின்னு ரண்டு பக்கமும் தனித்தனியா கூப்புட்டு வெச்சிக் கருத்தெ கேட்டாரு. பிரியுறதுங்ற முடிவெ எட்டுன பெற்பாடு சுப்பு வாத்தியாரு சீக்கிராமவே ரண்டு பக்கமும் பிரிஞ்சிடுறது நல்லதுன்னு நெனைச்சாரு. சுப்பு வாத்தியாரோட பக்கத்தோட கருத்தெ கேட்டப்போ, பாலாமணியோட மனநெல அவருக்கு நல்லா தெரிஞ்சதாலே, "அவுங்க கொடுக்குறதெ கொடுக்கட்டும். அதெ வாங்கிக்கிட்டு கேஸ்ஸ முடிச்சிக்கத் தயாரு! அதெ நீங்கத்தாம் நடுவுல நின்னு பண்ணி வுடணும்!"ன்னு ஜட்ஜ்கிட்டெ கேட்டுக்கிட்டாரு.

            அடுத்ததா இதெப் பத்தி பாலாமணி தரப்புல கேக்கணும் இல்லியா! இதெப் பத்தி பாலாமணிகிட்டெ ஜட்ஜ் சொன்னப்போ அதுக்கு அவ்வேம், "அப்பிடின்னா செரித்தாம்! ஆன்னா நம்மால ஜீவனாம்சம்லாம் கொடுக்க முடியாது. நம்மால கொடுக்க முடிஞ்சதெப் பத்தி நம்மளோட வக்கீல வெச்சி அவுங்களோட வக்கீல்கிட்டெ பேசச் சொல்றாம்!"ன்னு அதுக்கும் ஒத்துக்கிட்டாம். எப்படி ஒரே நேரத்துல பாலாமணி சேர்ந்து வாழணும்ன்னும் சொல்றாம், பிரியுறதுன்னாலும் பிரிஞ்சிக்கிடலாம்ன்னும் சொல்றாம்ங்றதெ சட்டுன்னு ஜட்ஜாலேயே ஒரு நிமிஷம் வெளங்கிக்க முடியல. பாலாமணியோட மனநெல சட்டுன்னு அவருக்குப் புரிஞ்சது. எது எப்பிடியோ சீக்கிரமே இந்த வழக்கெ போகுற போக்குல முடிச்சிடுறதுதாங் நல்லதுன்னு அவருக்கு தோணிருக்கணும். 

            ஜீவனாம்சம் கொடுக்க முடியாதுன்னு பாலாமணி சொன்னதப் பத்தி இப்போ ஜட்ஜ் திரும்ப சுப்பு வாத்தியாரு, செய்யு, விகடுவெ கூப்ட்டு வெச்சிப் பேசுனாரு. சுப்பு வாத்தியாரு தரப்புலேந்து இதுக்கு ஏதும் மறுப்பு இருக்குமோன்னு நெனைச்சாரு ஜட்ஜ். ஆனா அதுக்கு சுப்பு வாத்தியாரு, "அவ்வேம் வூட்டுக் காசி எஞ்ஞப் பொண்ணுக்கு வாணாம். எஞ்ஞ பொண்ணுகிட்டயிருந்து வாங்குன பொருளுங்கள மட்டும் கொறைவில்லாம கொடுத்துப்புட்டா போதும்! வேற ஒண்ணுத்தையும் நாஞ்ஞ எதிர்பார்க்கல. அவனும் இந்த கேஸ்ஸ முடிச்சிக்கிட்டு நல்லவெதமா வேறொரு கலியாணத்தப் பண்ணிக்கிட்டு நல்லா இருக்கட்டும். நாஞ்ஞளும் எஞ்ஞப் பொண்ணுக்கு வேற ஒரு கலியாணத்தப் பண்ணி வெச்சி நால்ல வெதமா வாழ வைக்கிறேம். ஜீவனாம்சமே வாணாங்றதையும் வேணும்ன்னாலும் பத்திரத்துல எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தர்றேம்! அவனே வாணாம்ன்னு ஆனப் பெறவு அவ்வேம் கொடுக்குற காசி மட்டும் எதுக்குங்கய்யா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. இந்தப் பதிலு சமரச நீதிபதிக்கு திருப்தியா பட்டிருக்கணும். அப்போ வழக்கெ இதுக்கு மேல இழுத்தடிக்காம இங்கேயே வெச்சு முடிச்சிப்புடுறதுதாங் நல்லதுன்னு நெனைச்சாரு சமரச நீதிபதி. அன்னிக்குப் பூராவும் ரண்டு தரப்பையும் அங்கேயே உக்கார வெச்சவரு மத்தியானத்துக்கு மேல சாப்பாடு நேரம் முடிஞ்சதும்           சமரச நீதிபதி இது சம்பந்தமா சிஜேம் ஜட்ஜ்கிட்டெ போயி கலந்துகிட்டாரு. மறுக்கா ஒரு தவா ரண்டு தரப்பையும் கூப்புட்டுப் பிரியுறதுதாங் கடெசீ முடிவாங்றதெ கூப்புட்டு வெச்சு பேசி உறுதி பண்ணிகிட்டாரு. அதாங் முடிவுன்னு தெரிஞ்சதும் சமரச நீதிபதி அடுத்ததா ரண்டு தரப்பு வக்கீல்களையும் வர வெச்சு ரண்டு பேத்தையும் பாத்து, பிரியுறது சம்பந்தமா ரண்டு பக்கமும் ஒப்படைக்க வேண்டிய நகெ, பணம், சீர் வரிசெப் பத்தி காயிதங்கள தயாரு பண்ணச் சொன்னாரு. பட்டுன்னு எல்லாமும் முடிஞ்சதெப் போல இருந்துச்சு. பாலாமணி சேந்து வாழ்றதெப் போல வந்து எப்பிடி டக்குன்னு பிரியுறதுக்கு தயாரா இருக்காங்றதெப் பத்தி யாருக்கும் எந்த ஆச்சர்யம் கூட உண்டாவல. அவ்வேம் இப்பிடித்தாம் பண்ணுவாங்றதெ அவ்வேம் பண்ணுறதப் பாத்துப் பாத்து அலுத்துப் போயிருந்துச்சு சுப்பு வாத்தியாரு குடும்பம்.

            சமரச நீதிமன்றத்துலேந்து முடிவா சுமூகமாப் பிரிஞ்சிடுறதுங்ற முடிவுல வெளியில வந்தப்போதிருநீலகண்டன் வக்கீலு, "இனுமே போயி சலம்பல் பண்ணிட்டு இருக்க வேண்டாம். கொடுக்குறதெ கொடுக்கட்டும். அதெ வாங்கிக்கிட்டு பொண்ணுக்கு ஒரு நல்ல எடத்தப் பாத்துக் கலியாணத்த முடிச்சி வெச்சிட்டுப் போயிகிட்டெ இருங்க! இன்னியோட பிடிச்ச சனியன் விட்டாப்புல நெனைச்சுங்க! மேக்கொண்டு அந்த ஆப்போசிட் வக்கீலோடப் பேசிட்டு நாம்ம போன அடிக்கிறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரைப் பாத்து.

            "கோர்ட்டு, கேஸூன்னு அலைஞ்சதுப் போதும். நல்லதோ கெட்டதோ அவனும் தாயார்ர எழந்துட்டு நிக்குறாம். இதுக்கு மேல நாம்மப் போட்டு இழுக்குறதும் நல்லதில்ல. ரண்டு பக்கமும் சூழ்நெல இந்த மாதிரி இருக்குறப்பவே சுமூகமா பிரிஞ்சிடுறதுதாம் நல்லது. உண்மெ அத்தனையும் ஒஞ்ஞளுக்குத் தெரியும். அதால நீஞ்ஞளா பாத்து எதெ வாங்கிக் கொடுத்தாலும் செரித்தாம். வாங்கிக் கொடுக்குறப்பவே நீஞ்ஞ எடுத்துக்கிட வேண்டியதெ எடுத்துக்கிட்டு மிச்சத்தெ கொடுத்துப்புட்டா போதும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எல்லாத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து முடிவா பேசுறாப்புல.

            "அப்பிடில்லாம் ரொம்ப எடுக்க மாட்டேம் சார்! கவலெப்படாதீங்க. எதிர்தரப்புலேந்து பேசி எவ்வளவு அதிகமா வாங்கித் தர்ற முடியுமோ அவ்வளவு அதிகமாவே வாங்கித் தர்றேம்! அதுக்கு நாம்ம கேரண்டி. அத்தோட இன்னோன்னு சொல்றேம், இந்த கேஸ்ஸப் பொருத்த வரைக்கும் இத்தோட நிறுத்திக்கிறதுதாம் நமக்கும் நல்லது. சிஜேயெம் ஜட்ஜூக்கு இந்த கேஸ்ஸக் கொண்டு போறதிலயே இஷ்டம் இல்ல. ரண்டு பேரும் நல்லா இருக்கணும்ன்னா சேர்றதோ, பிரியறதோ வழக்க சுமூகமா முடிச்சி விடுறதுதாம் நல்லதுன்னு நெனைக்குறாரு. ஜட்ஜ் அப்படி நெனைக்கிறப்போ கேஸ்ஸ வம்படியா நடத்தியும் பிரயோனும் இல்ல பாருங்கோ. அதால இந்த வழக்கப் பொருத்த மட்டுல அப்படியே முடிச்சி விடலாம்!"ன்னாரு திருநீலகண்டன் வக்கீல் சுப்பு வாத்தியார்ரப் பாத்து ஒரு முடிஞ்ச முடிவெச் சொல்றாப்புல.

            “செரித்தாம் அப்பிடியே ஆவட்டும். அதாங் நல்லது. கால சுத்துன பாம்பெ எடுத்து கழுத்தையும் சுத்திக்கோன்னு வுடப் படாது. முடியட்டும் எல்லாம். ஆனா பாருங்க…”ன்ன கைப்புள்ள இப்போ வக்கீலப் பாத்து, “பரவாயில்லய்யா! இந்தக் கேஸ்லயும் வாதாடாமலேயே காசைப் பாக்கப் போறீய்யேய்யா! யோகக்காரம்தாம்யா வக்கீலு நீயி!”ன்னாரு திருநீலகண்டன் வக்கீலப் பாத்து ஒரு சிரிப்ப சிரிச்சாப்புல.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...