30 Nov 2020

ப்ளாக்மார்க் இல்லாம ரிட்டையர்டு ஆவணும்!


 ப்ளாக்மார்க் இல்லாம ரிட்டையர்டு ஆவணும்!

செய்யு - 641

            அஞ்சாவது மொறையா சமூக நீதி மையத்துலேந்து அழைப்பு வந்தப்போ செய்யுவும், சுப்பு வாத்தியாரும், விகடுவும் போனாங்க. கைப்புள்ளையக் கூப்புட்டதுக்கு இந்தக் கூட்டத்துக்கு யாருமே போக வேணாம்ன்னுட்டாரு. பாக்குக்கோட்டையான் தரப்புலேந்து யாரும் வர்றப் போறதில்லங்றதால போவுற எந்த பிரயோஜனமும் இல்லன்னு அடிச்சிச் சொன்னாரு கைப்புள்ள. ஒருவேள அவுங்க தரப்புலேந்து வந்து நாம்ம போவாம இருந்தா அடுத்து நடக்கப் போறதுக்கு நாமளே முட்டுக்கட்டையா இருந்ததா ஆயிடும்ன்னுத்தாம் சுப்பு வாத்தியாரு கெளம்புனது. அங்கப் போயிப் பாத்தப்போ கைப்புள்ள சொன்னதுதாம் அப்பிடியே நடந்துச்சு. ரொம்ப சரியாத்தாம் கணிச்சிருந்தாரு கைப்புள்ள. “சமூக நீதி மையத்துல வெசாரிக்குற மொறையப் பாத்தா அவுங்களால ஒண்ணும் காரியம் ஆவப் போறாப்புல தெரியல. ஞாயம் பேசுறவங்க சிலதெ கண்டிச்சும் சிலதெ தப்புன்னு அடிச்சும் பேசணும். இதுதாங் மொறைப்பாடுன்னு ரண்டு பேரு தலையிலயுமே தட்டணும். அத்து என்னான்னா தம் தலையிலயே தட்டிக்கிது. அத்தோட அந்த யம்மா ன்னா ரண்டு பக்கமும் தாளாளிச்சு வுடுறாப்புல பேசுது. இதுல கதெ ஒண்ணும் ஆவுறாப்புல தெரியல. நாம்ம அடிச்சிச் சொல்றேம் அந்த யம்மாவால நமக்கு எந்த ஞாயமும் பண்டிட முடியாது. நீஞ்ஞ இதெ போயிப் பாத்துப்புட்டு மறுக்கா அனுபவப்பட்டு வாஞ்ஞ. நாம்ம வேணும்ன்னா அடுத்த மொறெ வார்றேம். நம்ம கணிப்புத்தாம் எப்பிடி இருக்குன்னு பாப்பமே!”ன்னு கைப்புள்ள சொல்லி வுட்டுருந்தாரு.

            சமூக நீதி மையத்துலப் போயிப் பாத்தா நடக்குறது எல்லாம் கைப்புள்ள சொல்ற மாதிரித்தாம் நடக்கும் போல இருந்துச்சு. “என்ன மனுஷன்யா! இம்புட்டுச் சரியா கணிச்சுச் சொல்றாம் நாசா விஞ்ஞானியப் போல!” ன்னு ஒரு நிமிஷம் அதெ நெனைச்சு விகடு அசந்துப் போனாம். அங்கப் போனதுக்கு கடமைக்குன்னு திரும்பவும் வெசாரணை ஆரம்பிச்சது.

            வெசாரணை பண்ணுற அம்மாவப் பாத்து செய்யு கேட்டா, "எத்தனெ கூட்டம் போட்டாலும் வர்றேன்னு சொன்னவர்ரு ஏம் வாரலே?"ன்னு.

            "வாரதது மட்டுமில்ல. போன கூட்டத்துக்கு என்னென்ன வெசாரிச்சிப் பதிவு பண்ணிருக்கேங்றதெ தகவல் அறியும் உரிமைச் சட்டத்துலப் போட்டு வேற கேட்டிருக்காம் அவ்வேம். அவனுக்குப் போயா இம்மாம் பரிஞ்சிப் பேசணும்ன்னு ஆயிடுச்சு நமக்கு. நாம்மத்தாம் அன்னிக்கு சமரசம் பண்ணப்பவே எல்லாத்தையும் சொன்னேம். இருந்தாலும் இப்பிடி வெவரம் கேக்குறது மூலமா அப்பிஷியல் எவிடென்ஸ்ஸ எதிர்பாக்குறானோ என்னவோ! நாம்ம மனுதாரரின் தனிப்பட்ட ரகசியமான வெசாரணைகள கோர்ட்டுக்குத் தவுர வேற யாருக்கும் அளிக்கிறதில்லன்னு அவனுக்குப் பதிலக் கொடுத்திருக்கேம். என்னோட சர்வீஸ்ல எவ்வளவோ விசயங்கள டீல் பண்ணி வுட்டுருக்கேம். இப்பிடி நடந்ததில்ல. இதுதாங் மொத மொறை. நல்லவேம் மாதிரியே நடிச்சிக்கிட்டு இன்னிக்கு கூட்டத்துக்கும் வாராம, தகவல் அறியும் உரிமெ சட்டத்து மூலமா காயிதத்தெ போன ஒடனே அனுப்பி வுட்டு எவிடென்ஸையும் உருவாக்கிட்டு இருக்காம். அவ்வேம் போற டிராக்கெப் புரியல. சேந்து வாழணும்ன்னு நெனைக்கிறவேம் இன்னிக்கு எப்பிடியும் வந்திருக்கணும்தாம்!"ன்னாங்க அந்த அம்மா பரிதாபமா செய்யுவப் பாத்து.

            "பிடிக்கலன்னா பிரிஞ்சிப் போவ வேண்டித்தானே. பெறவு ஏம் சேந்து வாழணும்ன்னு நின்னுகிட்டு கழுத்தறுக்குறாம்?"ன்னா செய்யு அந்த அம்மாவப் பாத்து ஆத்திரம் தாளாம.

            "நீயா பிரிஞ்சிப் போவணுங்றதுக்காகத்தாம் சேர்நது வாழணும்ன்னு அவ்வேம் நிக்கணும். அவனா பிரிஞ்சிப் போனா உனக்கு ஜீவனாம்சம், இழப்பீடுல்லாம் கொடுத்தாவணும். அதுக்காகக் கூட இருக்கலாம். பட் எனக்கு முழுசா அப்பிடிதான்னான்னு தெரியல. அப்பிடியும் இருக்கலாம் அவனோட மோட்டீவ். இந்த ஒரு கூட்டத்துக்கு வாரததாலயே நாம்ம அப்பிடி நெனைக்க முடியுமான்னும் தெரியல. ஒருவேள வர்ற முடியாத சூழ்நிலையும் இருந்திருக்கலாம். அடுத்த ஒரு கூட்டத்துலப் பாத்துட்டு முடிவு பண்ணலாம். அதுதாங் செரியா இருக்கும்ன்னு நெனைக்கிறேம். அடுத்தக் கூட்டத்துக்கும் அவ்வேம் வரலன்னா நிச்சயமா நாம்ம சொல்றப்படித்தாம் இருக்கணும்!"ன்னாங்க அந்த அம்மா இப்பயும் நிச்சயமில்லாம.

            "நீஞ்ஞ போன அடிச்சி வர்றாங்களா யில்லியாங்றதெ கேக்கலாமேம்மா!"ன்னா செய்யு.

            "போன அடிச்சிப் பாத்தாச்சு. எடுக்குறாப்புல தெரியல. எத்தனெ மொறைப் போடுறது? இன்னொரு பாஞ்சு நாளு கழிச்சி அடுத்த சிட்டிங்கப் போடுறேம். அதுக்கு மட்டும் செருமம் பாக்கமா வந்துட்டுப் போயிடு. அதுக்கு மேல ஒன்னய நாம்ம வற்புறுத்த மாட்டேம்!"ன்னாங்க அந்த அம்மா செய்யுவப் பாத்து பாவப்படுற தொனியில. அத்தோட நெறைய ஆறுதலையும், புத்திமதியையும் சொல்லி அனுப்புனாங்க அந்த அம்மா. இன்னும் எத்தனெ மொறைத்தாம் இப்பிடி ஒரு முடிவுக்கு வார முடியாம ஆளாளுக்குப் போட்டு கொழப்பி வுடுறதெ பொறுத்துக்கிட்டு அலையணுமோன்னு வெறுத்துப் போயித்தாம் அன்னிக்குப் போன சுப்பு வாத்தியாரு, விகடு, செய்யுன்னு மூணு பேரும் வக்கீல்கிட்ட நடந்ததெ சொல்லிட்டுக் கௌம்பி வந்தாங்க. ஆனா பிடிச்ச சனியும் சளியும் விட்டாத்தானே!

            ஆறாவது மொறையா போட்ட கூட்டத்துக்குப் போறப்போ ரொம்பவும் சலிச்சுப் போயிருந்த செய்யு விகடுவெ வர்ற வாணாம்ன்னே சொல்லிட்டா. வந்து ஒரு காரியமும் ஆவப் போறதில்லங்றதால, தேவையில்லாமல லீவப் போட்டுட்டு அலைஞ்சிட்டுக் கெடக்க வேணாம்ன்னு அவ்வே சொன்னா. "ஒருவேள அவ்வேம் தரப்புலேந்து வந்து நம்ம தரப்புல தொணைக்கு ஆளில்லாமலோ, பேசறதுக்க வாய்ப்பில்லாமலோ போச்சுன்னா ன்னா பண்ணுறது?"ன்னாம் விகடு.

            "அப்பிடி இருந்தா நாம்ம வேணும்ன்னா போன அடிக்கிறேம். லீவ போட்டுக்கிட்டு வரலாம். அவனுங்க வர்றானுங்களா வரலீயான்னே தெரியாம அங்கப் போயி தண்டமா நின்னுட்டு, தண்டமா திரும்புறதுல எந்த வெதமான புண்ணியமும் இல்ல!"ன்னா செய்யு. அதுவும் செரித்தாம்ன்னு விகடு பள்ளியோடம் கெளம்பிப் போயிட்டாம். சுப்பு வாத்தியாரும் செய்யுவுந்தாம் அந்த ஆறாவது அழைப்புக்குப் போனாங்க. அத்தோட கைப்புள்ளையையும் போட்டு தொந்தரவு பண்ணி வாரச் சொல்லி அலைக்கழிக்க வேணாம்ன்னுட்டா.

            அங்கப் போனா வெசாரணைப் பண்ணுற அதிகாரியா இருந்த அம்மா செய்யுகிட்டெ பொலம்பித் தள்ள ஆரம்பிச்சிட்டாங்க. வழக்கமா இத்தனெ மொறையும் செய்யுத்தாம் ஆத்திரமாவும் ஆத்தாமையாவும் பொலம்பிட்டுக் கெடந்தா. இப்போ என்னான்னா எல்லாம் தலைகீழா மாறிப் போயி அந்த அம்மா ஆத்திரமாவும் ஆத்தாமையாவும் பொலம்ப ஆரம்பிச்சாங்க.

            "நாம்ம கூட ஒம் புருஷனெ என்னவோ எதுவோ எதார்த்தமா ஆத்திர அவ்சரத்துல பேசுறானேன்னு நெனைச்சிட்டெம். செரியான விஷப்பாம்பா இருப்பாம் போலருக்கு. தகவல் உரிமெ சட்டம் மூலமா தனிப்பட்ட வெசாரணை வெவரங்கள்ல ரகசியம் காக்குற உரிமெ எஞ்ஞளுக்கு இருக்குறதாப் போட்ட பதிலப் பாத்துட்டு அவ்வேம் பாட்டுக்கு அந்த உரிமெயோட சட்டப் பிரிவு என்னா? யாருக்குச் சாதகமா நாம்ம நடந்துக்கிறேம்? வெசாரணை முழுசா நடத்தாம தள்ளிப் போட்டுக்கிட்டெ இருக்குறதுக்கு ன்னார காரணம்ன்னு அவ்வேம் பாட்டுக்கு இது வரைக்கும் பத்துக்கு மேல தகவல் அறியும் உரிமெ சட்டத்து மூலமா காயிதத்தெ அனுப்பிட்டெ இருக்காம். அந்தப் பயெ அனுப்புற மனுவுக்குப் பதிலு சொல்றதுக்கே நமக்கு நேரம் போயிடும் போலருக்கு! அன்னிக்கு நீஞ்ஞ கொஞ்சம் தயங்குனாப்புல சொன்னது நல்லதாப் போச்சுது. ஒருவேள நீயிப் போயிருந்தீன்னா ஒம்மட நெலைய நெனைக்குறப்பவே பயமாத்தாம் இருக்குது. இத்து ஒரு சாதாரண வெசாரணைத்தாம். வெசாரணைன்னு கூட சொல்ல முடியாது. சமரசம் பண்ணி வுடுறதுதாம். இதுலப் போயி அவனா கற்பனெ பண்ணிட்டு ஏம் இப்பிடி ஒண்ணு கெடக்க பண்ணுறான்னு தெரியலையே? பேசுறதெ ஒண்ணுத்தெ பேசுறாம் அப்பாவியா. செய்யுறதெ வெறொண்ண செய்யுறாம் அடப்பாவிங்ற மாதிரிக்கி!"ன்னாங்க அந்த அம்மா.

            "அவ்வேம் அப்பிடித்தாம் பண்ணுவாம்மா. மனசுல நெனைச்சிருக்கிறதெ லேசுல தெரிஞ்சிக்கிட முடியாது. அதுக்கேத்தாப்புல நடக்குறதுக்கான அத்தனெ வேலைகளையும் முதுகுக்குப் பின்னாடி பாப்பாம். மொகத்துக்கு நேரா சொல்லவே மாட்டாம். சொல்லாமலே செய்ய வைக்குறேம் பாருன்னு அப்படிச் செய்ய வைக்குறதுல ஒரு குரூர திருப்தி! கொலகார பாவி! கொலையையும் எரக்கப்பட்டு பட்டுன்னு பண்டிட மாட்டாம். துடிக்க துடிக்க கழுத்தறுத்தாத்தாம் திருப்திப்படும் அவ்வேம்க்கு!"ன்னா செய்யு.

            "அதுக்காக நம்மட வேலைக்கே வேட்ட வெச்சிடுவாம் போலருக்கே. கலக்டர் ரிவ்யூ மீட்டிங்ல சத்தம் போடுறாரும்மா. டேரக்டா கலக்டருக்கு வேற மனு போட்டிருக்காம். நாம்ம சரியா வெசாரிக்கலன்னும், ஒஞ்ஞகிட்டெ பணத்தெ வாங்கிக்கிட்டு ஒஞ்ஞளுக்குச் சாதவமாக பேசுறதாவும். நெசத்துல நாம்ம நடந்த அத்தனெ சம்பவங்களும் தெரிஞ்ச பிற்பாடும், அவ்வேம் பக்கம் கொஞ்சம் சாதவமாவும், ஒஞ்ஞளுக்குக் கொஞ்சம் எதிராவும் பேசுனதுதாம் உண்மெ. ஏன்னா எடுத்த எடுப்புலயே அவ்வேம் மேல நீஞ்ஞ ஏகக் கடுப்புல இருந்தீயளா. அதால ஏம் ரண்டு பேத்த பிரிச்சி வைக்கணும், காலப் போக்குல எப்பிடியோ கடவுளோட கிருபையில அதெல்லாம் சரியாப் போயிடுங்ற நம்பிக்கத்தாம் அதுக்கு அப்பிடிப் பேசக் காரணம். எம் மேல அவ்வேம் அனுப்புன புகாருக்கு வேற வெசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. இந்த வெசாரணை சம்பந்தமா கம்ப்ளீட் பைலையும் எடுத்தாரச் சொல்லி கலக்டர்ரே நேர்ல பாத்தாரு. கலக்டருக்கு இருக்குற வேலைக்கு அவர்ர இந்த அளவுக்கு பாக்குற அளவுக்குக் கொண்டாந்துட்டாம். அந்த அளவுக்குக் கொண்டுப் போயி வுட்டுப்புட்டாம். ரொம்ப டார்ச்சரா போயிடுச்சும்மா அந்தப் பயெ பண்ணுற வேல! எல்லாத்தையும் தெரிஞ்சி வைச்சுக்கிட்டு ரொம்ப பெரமாதமா நடிச்சிக்கிட்டு வேலையக் காட்டிட்டு இருக்காம்! அவ்வேம் திட்டம் பண்ணி நகத்துறாம். அவ்வேம் திட்டம் புரியாம அப்பாவின்னு எறங்கிப் போயி அவனுக்காகப் பரிதாவப்பட்டு நாம்ம மாட்டிப்பேம் போலருக்கு!"ன்னாங்க அந்த அம்மா.

            "நீஞ்ஞத்தாம்மா இந்த விசயத்துல நமக்கு ஏதாச்சும் ஒரு நல்ல வழியக் காட்டணும்!"ன்னா செய்யு அந்த அம்மாவப் பரிதாபமா பாத்து.

            "நாம்ம எஞ்ஞ ஒனக்கு நல்ல வழியக் காட்டுனேம்? போயிச் சேந்து இருன்னு கெட்ட வழியத்தாம் காட்டப் பாத்தேம். நல்ல வேளையா ஒம்மட யண்ணன் கேட்ட கேள்வியில மைண்ட் அப்செட் ஆயி அதெ தள்ளி வெச்சேம். அன்னிக்கு அதெ ரொம்ப கெட்டதாப் பாத்தேம். அப்பிடி நடந்ததும் ஒரு வெதத்துல செளகரியமாப் போயிடுச்சு. இல்லீன்னா அன்னிக்கு ரண்டு பக்கமும் எழுதி வாங்கிட்டு இதெ முடிக்கிறதாத்தாம் யோஜனெ. இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருந்ததாலத்தாம் தள்ளி வெச்சேம். ஒமக்கு நல்ல வழின்னா அந்தப் பயெ கொடுக்க வேண்டிய பணங்காசி, நகெ நட்டெப் பாக்காதே. அவ்வேங்கிட்டெயிருந்து விடுதலைய வாங்கிக்கிட்டுப் போயிடு. சைத்தாங் கூட குடும்பம் நடத்த முடியாது!"ன்னாங்க அந்த அம்மா பட்டுன்னு.

            "அந்த முடிவுலத்தாம் நானும் இருக்கேம்! நகெ நட்டு, பணங்காசி நாஞ்ஞ கொடுத்ததெ கொடுத்தா போதும்ன்னு விட்டுட்டுப் போயிடுவேம். அந்த பணங்காசி, நகெநட்டுன்னு எதையும் நாம்ம சம்பாதிக்கல. எல்லாம் யப்பா, யண்ணனோட சம்பாத்தியம். அதுக்காகத்தாம் அதெ வுட முடியாம அதுல பிடியா நிக்குறேம்!"ன்னா செய்யு.

            "அதெ பாத்தீன்னா ஒன்னயப் பத்தி கெட்ட பேர்ர கட்டி வுடுறதுல அவ்வேம் குறியா நிப்பான்னு நெனைக்கிறேம். பாத்தீன்னா நம்ம பேரையே கலக்ட்ரேட்டுல கெடுத்துட்டாம். கலக்ரேட்டுல நமக்கு எப்பயும் ஒரு நல்ல பேரு. கறைபடாத கையி, வேலையில சரியா இருக்குற ஆளுன்னு. இந்தப் பயெ பண்ணி வுடுற வேலையால கெட்டப் பேர்ரா ஆயிட்டுக் கெடக்கு. தகவல் அறியும் உரிமெ சட்டத்தெ வெச்சிக்கிட்டு நெதமும் ஒரு காயித்தெ டார்ச்சர் பண்ணுறாப்புல அனுப்பிட்டு இருக்காம். அப்பிடி அவ்வேம் பண்ணுற டார்ச்சர்ல நம்மால நம்ம குடும்பத்தையே சரியா பாக்க முடியுல. குடும்பத்துல யாருகிட்டெயும் கொஞ்ச நேரம் மனசு வுட்டுப் பேச முடியல. எந்நேரமும் இதெ நெனைப்பாவே இருக்கு. நாளைக்கி என்னத்தெ அனுப்பப் போறானோ? கலக்டர்ரு எப்போ கூப்ட்டு வுடப் போறாரோன்னு? இப்பல்லாம் டெய்லி இந்த கேஸாலயே ஏதோ ஒரு வெதத்துல கலக்டர்ரப் போயி பாக்குறாப்பு ஆயிடுது. சரியான சென்னாக்குன்னிப் பயலா இருப்பாம் போலருக்கு!"ன்னாங்க அந்த அம்மா பாவப்பட்டாப்புல. அவுங்க சொல்றதெ கேக்க கேக்க செய்யுவ விட பாலாமணியால அவுங்க ரொம்ப பாதிக்கப்பட்டாப்புல தெரிஞ்சது. அந்த அம்மாவப் பாக்கவும் பாவமாத்தாம் இருந்துச்சு. ஒரே நேரத்துல ரண்டு பேத்தையும் போட்டுத் தாக்குறாப்புல பண்ணிப்புட்டாம் பாலாமணி.

            "புரிஞ்சிக்க முடியாத மனுஷன்ம்மா! ரைட்ல இன்டிகேட்டர்ரப் போட்டுட்டு லெப்டுல திருப்புற மனுஷனப் போல எந்த நேரத்துல என்னத்தெ பண்ணுவாங்றதெ புரிஞ்சிக்க முடியாத மனுஷம். சமைச்சி வையின்னு சொல்லிட்டு ஓட்டல்ல சாப்பாட்ட வாங்கியாந்து சாப்புடுறது, ராத்திரிக்கிச் சந்தோஷமா இருக்கணும்ன்னு சொல்லிட்டு தங்காச்சி வூட்டுலப் போயி படுத்துக்கிறது, நீயி இல்லாம இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு வெளியில போயி வந்துப்புட்டு சண்டெய வெச்சிக்கிட்டு வெளியில போடீ நாயேன்னு துணி மணிய எல்லாம் வெளியில தூக்கி எறியுறதுன்னு ரொம்ப அனுபவிச்சிட்டெம்ம்மா!"ன்னா செய்யு பழசையெல்லாம் நெனைப்புல கொண்டாந்து.

            "இவனெ வெட்டி வுடுறதுக்குன்னா எவ்ளோ காசிய வாணாலும் இழக்கலாம். அப்பிடித்தாம் நாம்ம சொல்வேம். நீயி கூடியச் சீக்கரமே வக்கீல்ட்ட சொல்லி கேஸப் போட்டு வுட்டு வெளியில வந்துப்புடு. இவனெ மறந்தீன்னாத்தாம் ஒன்னால கவலெ இல்லாம இருக்க முடியும். இந்த கேஸூ இருக்குற வரைக்கும் ஒன்னால இந்த நெனைப்ப மறக்க முடியாது. ஏம் அனுபவத்துல சொல்றேம், அந்தப் பயலே நெனைச்சாலே நமக்குப் பத்திட்டு வருது. அவ்வேங்கிட்ட எப்பயும் ரொம்ப கவனமா இரு. இப்பிடியெல்லாம் எப்பிடித்தாம் ஆம்பளைங்க பொறந்து வாரானுவோளே தெரியல? எவ்ளோ கேஸப் பாத்திட்டேம். இந்த மாதிரி கேஸ்ஸப் பாக்கல. நாம்ம பாத்த வரைக்கும் ஆத்திரமா, ஆக்ரோஷமா பேசுவாங்க. பிடிக்கலன்னா பிடிக்கலன்னு மூஞ்சுல அடிச்சாப்புல சொல்லுவாங்க. அதெ மீறிச் சேத்து வெச்சா கொன்னேபுடுவேம்ன்னு நேராவே சொல்லுவாங்க. அந்த மாதிரி ஆளுங்களத்தாம் நாம்ம பாத்திருக்கேம். இவனெ மாதிரிக்கிக் குடும்ப விசயத்துல நடிக்குற ஆளெ இப்பத்தாம் பாக்குறேம். அந்தப் பயலே அவனெ ஏமாத்திக்கிறாம்!"ன்னாங்க அந்த அம்மா அவனெ வெறுக்குறாப்புல.

            "நடிப்புதாம்மா! எல்லாமே நடிப்புத்தாம்! அவ்வேம் நடிக்கலாம் ஆம்பள. எல்லாத்துலயும் எப்பிடித்தாம் குடித்தனம் பண்ணுற பொண்ணு நாம்ம நடிக்க முடியும்மா?"ன்னு கேட்டா‍ செய்யு.

            "கஷ்டந்தாம் போ! ஒனக்கு மட்டுமில்ல, எனக்கும். இன்னும் மூணு வருஷம் இருக்கு சர்வீஸூ நமக்கு. அதுக்குள்ள நல்லபடியா ரிட்டையர்டு ஆவேனாங்ற கவலெ நமக்கு வந்தப்புட்டு. ஒம் கேஸூல ப்ளாக் மார்க் வந்துப்புடுமான்னு அத்து வேற கவலெயா இருக்கு. அந்த அளவுக்கு நம்ம மேல அவ்வேம் பாட்டுக்கு புகார்ர அனுப்பிட்டு இருக்காம் முதலமைச்சரோட தனிப்பிரிவுக்கு உட்படன்னா பாத்துக்கோயேம்! இத்தனெ மொறை வந்தப்பல்லாம் ஒமக்கு ஆறுதலெ சொல்லிட்டு, இப்போ நாம்மளே பொலம்புற நெலைக்கு வந்துப்புட்டேம் போ! அதாங் நேரங்றது! பேயாம ஒரு மூணு மாசத்துக்கு மெடிக்கல் லீவப் போட்டுப்புட்டு வூட்டுல இருக்கலாம்ன்னும் பாக்குறேம்!"ன்னாங்க அந்த அம்மா பாவமா.

            "நம்மாலே ஒஞ்ஞளுக்கு இப்பிடி ஒரு கஷ்டம் வந்திடுச்சேம்மா!"ன்னு செய்யு ரொம்ப மனசு சங்கடப்பட்டு அந்த அம்மாவப் பாத்துச் சொன்னா.

            "நமக்கு மட்டுமா? மகளிர் ஸ்டேசன்னு இன்ஸ்பெக்கடருக்கும்தாம். அவுங்க போன வாரத்துல போன அடிச்சாங்க. இவனெ போன்ல மெரட்டுனத ரிக்கார்ட பண்ணி புகாரு கொடுத்திருக்காம் போலருக்கு. அதெப் பத்தி வருத்தப்பட்டுக்கிட்டெ சொல்லி நம்மள எச்சரிக்கையா இருக்கச் சொன்னுச்சு அந்த அம்மா. பின்னாடி இப்போ பண்ண போன அந்தப் பயலெ வெசாரணையப் போடுறதுக்கு மின்னாடி சொல்லிருக்கக் கூடாது? எல்லாம் எந் நேரந்தாம். இதுல ஒன்னயச் சொல்லி எந்தக் குத்தமும் இல்ல. அந்தப் பயெத்தாம் எல்லாத்துக்கும் காரணம். அத்தோட எந் தலயெழுத்தும் இருக்கு. நம்மட சர்வீஸ்ல இப்பிடி ஒருத்தனெ சந்திக்கணும்ன்னு. ஆன்னா ஒண்ணு சொல்றேம் கேட்டுக்கோ, குடும்ப விசயத்துல உள்வேல பாக்குறவேம் வெளங்கவே மாட்டாம். இதுல நடிக்குறவேம் நாசமா போயிடுவாம். எவ்ளோ பெரிய ரெளடிகள எல்லாம் வெசாரணையில பாத்திருக்கேம். எவனும் பொண்ட்டாட்டிய வுட்டுக் கொடுத்துப் பேசி நாம்ம பாத்ததில்லே. ஒங்கிட்ட நாம்ம தனிப்பட்ட வெசாரணையில பேசுனதெ சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்றேம், ஒன்னய ஒந் சின்னம்மா புள்ளயா இருக்குற தம்பிக் கூட இணைச்சிப் பேசி, அவ்வேம் கூட படுத்து எழுந்திரிச்சிதெ கூட மன்னிச்சுச் சேர இருக்காம்ன்னு சொன்னாம் பாரு அப்போவே யோஜிச்சிருக்கணும். விட்டுப்புட்டேம். இந்த மாதிரி எந்தப் பயலும் சொன்னதே இல்ல. ஒரு வேள அப்பிடி வெசயம்ன்னாலும் அதெ சொல்லி அதுக்காகவே பிரிச்சி வுட்டுப்புடுங்கன்னு சொல்லித்தாம் நாம்ம கேட்டிருக்கேம். அதெச் சொல்லி என்னவோ பெரிய மகனாப் போல எப்பிடியோ சேத்து வெச்சிப்புடுங்க, எல்லாத்தையும் மறந்து அவ்வே கூட வாழ தயாரா இருக்கேம்ன்னு சொன்னாம் பாரு! அன்னிக்கேத் தப்புப் பண்ணிட்டேம், அதெப் பத்தி இன்னும் கொஞ்சம் யோஜிக்காம?"ன்னாங்க அந்த அம்மா வேதனைப்படுறாப்புல.

            அதெ கேட்டதும் செய்யுவோட கண்ணுலேந்து பொல பொலன்னு தண்ணித் தண்ணியா கொட்ட ஆரம்பிச்சது.

            "யய்யே! அவ்வேம் சொல்றது பொய்யிம்மா! அத்து நமக்கு அப்பவே தெரிஞ்சிது. இருந்தாலும் புருஷன் பொண்டாட்டிச் சண்டையில கூட கொறைச்சலு சொல்றதுன்னு நெனைச்சிக் கொஞ்சம் தடுமாறிட்டேம். நீயி அப்பிடிப்பட்ட பொண்ணுல்லாம் கெடையாதுங்றதெ யாரு சொல்லியும் நமக்குத் தெரியணுங்ற அவ்சியம் யில்ல. இதெ சொல்ல வாணாம்ன்னுத்தாம் நெனைச்சேம். என்னவோ மனசு பொறுக்காம என்னையும் அறியாம சொல்லிட்டேம்!"ன்னாங்க அந்த அம்மாவும் கண்ணைத் தொடைச்சிக்கிட்டு.

            "நாம்ம அதுக்காக அழவுலம்மா! யார்ரப் பாத்தாலும் இதெத்தாம் சொல்றாம்! பெறவெப்படி சேந்து வாழணும்ன்னும் சொல்றாம்? அவ்வேங் கூட சேந்து வாழப் போனா இதெச் சொல்லிச் சொல்லியே நெதமும் டார்ச்சர் பண்ண மாட்டானா? அவ்வேம் படுத்துன பாட்டுல, பண்ணுன டார்ச்சர்ல நாம்ம பைத்தியம் ஆனதுதாம் மிச்சம். என்ன செய்றேம்ன்னே தெரியாம தூக்குல தொங்கப் போனதுதாம் மிச்சம். செத்துப் போனாலும் பரவாயில்லன்னு சாப்புடாம கெடந்ததுதாம் மிச்சம். எப்பிடியெல்லாம் மனசு வந்துப் போய்யச் சொல்றாம்? ரண்டு தங்காச்சியோட பொறந்தவம்தாம் அவ்வேம்!"ன்னா செய்யு கண்ணீரும் கம்பலையுமா.

            "இதெயல்லாம் மனசுல வெச்சுக்காதே. நமக்கா அடுத்த ஒரு சிட்டிங் மட்டும் வந்துப்புட்டுப் போயிடு. கடெசீயா ஒரு எதிர்பார்ப்பு. அதுக்கு வாரானான்னா இல்லியான்னு! அதெ பாத்துப்புட்டு இதெ முடிச்சி வுட்டுப்புடுறேம். கோர்ட்ல வெச்சிப் பாத்துக்கிடலாம்!"ன்னாங்க அந்த அம்மா ஒரு முடிவுக்கு வந்தாப்புல.

            "யில்லம்மா இனுமே நாம்ம வர்ற மாட்டேம். வந்தும் பெரயோஜனம் இல்லன்னு நெனைக்கிறேம்!"ன்னா செய்யுவும் ஒரு முடிவுக்கு வந்தாப்புல.

            "செரி மொதல்ல கண்ணு கலங்குறதெ வுடு! நீயி வார்ர வாணாம். ஒருவேள அவ்வேம் வந்தாம்ன்னா போன அடிக்கிறேம். வூட்டுலேந்து ஒரு மணி நேரத்துல வந்தா போதும். ஒண்ணரை ரண்டு மணி நேரம் ஆனாலும் பரவாயில்ல. அவனெ காக்க வைக்கிறேம்! நீயி தேவயில்லாம அலைஞ்சிட்டுக் கெடக்க வாணாம்!"ன்னாங்க அந்த அம்மா ஆறுதலா சொல்றாப்புல. செய்யு அதுக்குத் தலையாட்டுனா. அதுக்குப் பெறவு அவுங்களே அந்த அறையிலேந்து செய்யுவ அழைச்சாந்து சுப்பு வாத்தியார்ட்ட விட்டு, "பொண்ண பாத்து அழைச்சிட்டுப் போங்க! பாத்துப்பேம்! எஞ்ஞ ஓடிடப் போறாம்? ஒஞ்ஞகிட்டெயிருந்து விடுதலெ வாங்குனாத்தாம் அவனுக்கு விடுதலெ!"ன்னு தெம்பு பண்ணுறாப்புல சொல்லி அனுப்புனாங்க. சுப்பு வாத்தியாரு அப்பிடியே செய்யுவ அழைச்சிக்கிட்டு கோர்ட்டுல இருந்த வக்கீலப் பாத்து சேதியச் சொல்லிட்டுக் கெளம்புனாரு. "நாம்ம அந்த மேடத்த கலந்துக்கிட்டுச் சொல்றேம்!"ன்னு சொல்லி வக்கீலும் அனுப்பி வெச்சாரு.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...