9 Nov 2020

தலை தீபாவளிக்கு மட்டும் பொண்டாட்டி வேணுமா?

தலை தீபாவளிக்கு மட்டும் பொண்டாட்டி வேணுமா?

செய்யு - 620

            பொழுது மசங்குற நேரத்துல பாலாமணி கோவில்பெருமாள்ல நாது மாமா வூட்டுக்கு மின்னாடி வந்து நிப்பான்னு சுப்பு வாத்தியாரு கொஞ்சம் கூட எதிர்பாக்கல. ஒடனடியா கெளம்பி வந்தது நல்லதுன்னு நெனைச்சிக்கிட்டாரு. தான் இந்த நேரத்துல இங்க இல்லன்னா தன்னோட மவ்வே ஒண்ணு கெடக்க ஒண்ணுத்தாம் செஞ்சி வைப்பாங்றது சுப்பு வாத்தியாரோட நெனைப்பா இருந்துச்சு. கார்ல கூடவே ஒரு தொணைக்கு ஒரு பையனெ அழைச்சிட்டு வந்து நின்னாம் பாலாமணி. அவனெப் பாத்ததும் சுப்பு வாத்தியாரு மொறைச்சாரு. ஏம்டா இங்க வந்தேங்ற மாதிரித்தாம் பாத்தாரு. "எப்பிடித்தாம் நாயீ மோப்பம் பிடிக்குறாப்புல எங்கப் போனாலும் அங்க மோப்பம் பிடிச்சி வந்து நிக்குறானுவோளோ?"ன்னு சுப்பு வாத்தியாரு காட்டமாத்தாம் ஆரம்பிச்சாரு. அவரு பேசுறதப் பாத்து, நீயே பேசி அவனெ ஒரு வழியப் பண்ணுங்ற மாதிரி நாது மாமா ஒரு பார்வெ பாத்தாரு.

            "ஒஞ்ஞ கோவத்துல ஞாயம் இருக்கு மாமா. நீஞ்ஞ பேசலாம். தீவாளி வரப் போவுது. இந்த வருஷத்து தீவாளி தல தீவாளி. சவுளில்லாம் போட்டு எடுத்துட்டு வந்திருக்கேம்! தல தீவாளிய செய்யு யில்லாம முடியாது!"ன்னு வாங்கிட்டு வந்த சவுளிகளையும், பூ, பழம், இனிப்புகளையும் எடுத்து மின்னாடி வெச்சாம் பாலாமணி பதிவிசா.

            "எம் பொண்ண எம்மட வூட்டுல இருந்தப்போ வந்து பாத்திருக்கணும். அப்போல்லாம் பொண்ணு தூக்கு மாட்டிக்கிட்டு, கணவதி ஓமம் பண்ணுனாத்தாம் வூட்டுல அடியெடுத்து வைப்பேம்ன்னு நின்னுப்புட்டு, பஞ்சாயத்துக்கு வந்தப் பயெ வூட்டுப் பக்கமே அடியெடுத்து வைக்காம ஓடுனவ்வேம்லாம், இன்னிக்கு யாரோ ஒருத்தரு வூட்டுல ஒண்டிக்கிட்டுக் கெடக்கறப்ப எதுக்குப் பாக்க வர்றாம்? இருக்கோமா? செத்துட்டோமா? சாவலைன்னா சாவடிக்கலாமான்னு பாக்குறதுக்காக வர்றானா? அதாங் கேக்குறேம் எதுக்குடா பாக்க வர்றே? பஞ்சாயத்து வெச்சி ஒட்டும் ஒறவும் இல்லன்னு ஆனதுக்குப் பெறவு எதுக்குடா பாக்க வாரணும்? பஞ்சாயத்தெ வெச்சி அசிங்கத்தனமா பேசிட்டு, ஆளுகளெ வெச்சி அசிங்கத்தனமா நடந்துகிட்டு யிப்போ எந்த மொகத்தோடடா பாக்கணும்ன்னு வந்து நிக்குறே? தல தீவாளிக்கு மட்டும் ‍பொண்ட்டி வாணும்ன்னா மித்ததுக்குல்லாம் வாணாமாடா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெளுத்து வாங்குறாப்புல.

            "பேசுங்க மாமா! நீஞ்ஞ எப்பிடி வாணாலும் பேசலாம்! எம்புட்டுக் கேவலமா வாணாலும் பேசலாம்! பேசுறதுக்கு ஒஞ்ஞளுக்கு உரிமெ இருக்கு. நீஞ்ஞ பெரியவங்க. என்னத்தெ வாணாலும் பேசலாம்! எதெப் பேசுனாலும் அதெ கேட்டுக்கிடுற நெலமையிலத்தாம் நாம்ம இருக்கேம்!"ன்னாம் பாலாமணி தப்பு பண்ணிட்டதெ ஒப்புக்குறாப்புல.

            "பண்ணுறதையெல்லாம் பண்ணிப்புட்டு ஞாயம் பேசுறாம் பாரு! பதிவிசு மாதிரிக்கி என்னமா நடிக்குறாம் பாரு! எலே ஒம்மட நடிப்புல்லாம் நம்மகிட்டெ செல்லாது. இப்பிடித்தாம் நடிச்சு ஏமாத்தி மறுக்கா கலகத்தெ பண்ணலாம்ன்னு வந்து நிக்குதீயா? எவனாச்சும் பொண்டாட்டிய வுட்டுக் கொடுத்துப் பேசுவானாடா பொறுக்கிப் பயலே? எவனெவனோ பேச்சக் கேட்டுக்கிட்டு என்னம்மா பேச்சுப் பேசுனே? சேந்துக் குடும்பம் நடத்துறாப்புலயா பேசுனே? நடந்துக்கிட்டெ? மான ரோஷம் உள்ளப் பயலா இருந்தா எம் பொண்ணப் பாக்க அடியெடுத்து வெச்சிருக்கக் கூடாதுடா. நீஞ்ஞத்தாம் காசிக்காக கொலையே பண்ணுற பயலுவே ஆச்சே! நீயே பண்ண கொலையெல்லாம் நமக்குத் தெரியாதுன்னு நெனைச்சீயா? எம்மட பொண்ணையும் அப்பிடித்தானே அழைச்சிட்டுப் போயி கொலையப் பண்ணப் பாக்குறே? வுட மாட்டேம்டா!"ன்னு சுப்பு வாத்தியாரு கத்த ஆரம்பிச்சாரு. பஞ்சாயத்துல உண்டான வடு அவரோட மனசுல ரொம்ப ஆழமாப் பதிஞ்சிருந்துச்சு. என்ன தப்ப பண்ணிட்டோம்ன்னு பஞ்சாயத்தெ வெச்சி அசிங்கப்படுத்துனானுவோங்ற கேள்வி அவரோட மனசுல அடிக்கடி ‍‍அலைக்கழிச்சிக்கிட்டெ கெடந்துச்சு. அவரு பேசுறதப் பாத்துட்டு செய்யு, "அப்பிடில்லாம் பேயாதீங்கப்பா! அவுகளத் திட்டாதீங்கப்பா!"ன்னு சொன்னதும் அவருக்கும் இன்னும் கோவம் அதிகமாயிடுச்சு.

            "மொதல்ல இந்தக் கருமெத்தையல்லாம் எடுத்துட்டு வெளியில போடா! யாரு கேட்டுட்டுடா இதெல்லாம் எடுத்துக்கிட்டு இந்த வூட்டு வாசல்ல மிதிச்சே? வெக்கமா இல்லையாடா நக்குப் பொறுக்கி நாயே! எடுடா மொதல்ல இதெ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு காட்டுக் கத்தலா. அந்தச் சத்தம் கேட்டதுக்கும், காரு வந்து நின்னதுக்குமா சேத்து தெரு சனங்க ஒவ்வொண்ணா கூட ஆரம்பிச்சிட்டுங்க.

            "மாமா அப்பிடில்லாம் பேயக் கூடாது. எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கிடலாம்!"ன்னாம் பாலாமணி ஞாயம் பேசுற தொனியில.

            "அதாங் பேசித் தீத்து வுட்டுப்புட்டீயேடா! பெறவென்ன இனுமே தீத்துக்குறதுக்கு இருக்கு? போ போயி பஞ்சாயத்துல இன்னொரு பிராது கொடுத்து அதுக்கும் ஒரு பஞ்சாயத்த வையி! இந்த எடத்துல இனுமே ஒரு நிமிஷம் கூட நிக்காதே! அசிங்கப்பட்டுப் போயிடுவே பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வுடாம.

            "இதென்ன மாமா விசித்திரமா இருக்கு? மாமான்னுப் பாக்குறேம். இல்லன்னா மருவாதிக் கெட்டு எறங்குனா அசிங்கமாயிடும் பாத்துக்கோ. நீயி நம்மளத் திட்டுறதாலயோ, அடிக்கிறதாலயோ நமக்கொண்ணும் அசிங்கம் கெடையாது. நீயி வயசுல மூத்த நீயி. நாம்ம வயசுல கொறைஞ்ச நாம்ம. நாம்ம ஒன்னயத் திட்டுனாலோ, அடிச்சாலோ அசிங்கம் ஒனக்குத்தாம் பாத்துக்கோ!"ன்னாம் பாருங்க பாலாமணி.

            "எஞ்ஞ அடிடா பாப்பேம்! இந்த ஊர்ல இருந்துகிட்டு நம்மளத் திட்டுடா பாப்பேம்!"ன்னு நெஞ்ச முறுக்கிக்கிட்டு மின்னாடி வந்து நின்னாரு சுப்பு வாத்தியாரு. செய்யு அவரோட கையப் பிடிச்சி பின்னால இழுத்தா.

            "இந்தாரு! இந்த மெரட்டல்லாம் நம்மகிட்டெ வெச்சுக்காதே! எம்மட பொண்டாட்டி. நாம்மப் பாக்க வர்றேம். அதெ தடுக்குற உரிமெ சுப்ரீம் கோர்ட்டுக்கே கெடையாது. நீயென்ன ச்சும்மா சென்னாகுன்னியாட்டம் கெடந்து குதிக்கிறே? தெரியாத ஊருன்னா பயந்துடுவேம்ன்னு நெனைக்குதீயா? எல்லா எடத்துலயும் நமக்கு ஆளு இருக்கு தெரிஞ்சிக்கோ! என்னவோ பொண்ணக் கொண்டுப் போயி ஏழு கடலு, ஏழு மலெ தாண்டி ரகசியமா வெச்சிக்கிறாப்புல நெனைச்சிட்டு இருக்கீயா? நீயி எஞ்ஞ கொண்டுப் போயி வெச்சாலும் செரித்தாம், என்னத்தெ பண்ணாலும் செரித்தாம் நமக்குத் தெரியாம இருக்காது பாத்துக்கோ. ஒம் பொண்ணு இஞ்ஞ இருக்குங்ற தகவலெ நமக்குப் போனுப் போட்டுச் சொல்லக் கூட நம்மகிட்டெ ஆளு இருக்கு. இருந்த எடத்துலேந்து பொண்ணத் தூக்க நமக்கு நேரம் ஆவாது. ஏதோ ஒறவாப் போச்சே, நாளைக்கி ஒரு சொல்லுக்கு எடம் வந்துப்புடக் கூடாதுன்னு பாத்தா ரொம்ப ஓவரால்லா பேசிட்டுப் போயிட்டு இருக்கே! நீயி என்ன வாணாலும் பேசிக்கோ! என்ன வாணாலும் பண்ணிக்கோ. எம் பொண்டாட்டிய பாத்துபுட்டுப் பேசிப்புட்டுத்தாம் போவேம். தீவாளிக்கு அவ்வே கூடத்தாம் கொண்டாடுவேம். இதெ தடுக்க முடிஞ்சா தடுத்துக்கோ?"ன்னாம் பாலாமணி மெரட்டுறாப்புல.

            "அடிய வாங்குறதுக்கு மின்னாடி ஓடிப் போயிடுடா!"ன்னு சத்தத்தெ வெச்ச சுப்பு வாத்தியாரு அவ்வேம் வாங்கியாந்த சவுளிப் பைகள தூக்கி அவ்வேம் மேல வீசுனாரு. பழம் வாங்கியிருந்த பாலிதீன் பைகள எல்லாத்தையும் தூக்கி வீசுனாரு. பழங்க எல்லாம் சிதறி ஓடுனுச்சு. சத்தத்தெ கேட்டு ஏற்கனவே கூடி நின்ன சனங்க இப்போ பேச ஆரம்பிச்சுங்க. "அதாங் அப்பங்காரரு பாக்கவோ பேசவோ மிடியாதுன்னு சொல்றப்போ எதுக்கு நிக்கணும்? அநாவசியமா பெரச்சனெ பண்ணாம கெளம்பிப் போயிடணும். யில்லன்னா ஸ்டேஷன்ல பொண்ணக் கடத்தப் பாக்குறாம்ன்ன கம்ப்ளய்ண்டு கொடுக்கறாப்புல ஆயிடும்!"ன்னு சனங்க ஆளாளுக்குப் பேச பாலாமணி கொஞ்சம் யோசிச்சாம்.

            நாது மாமாவுக்கு ரண்டு பசங்க இருந்தாங்க. மூத்தவம் பேரு சற்குணம். இளையவேம் பேரு சரவணன். இந்த நிகழ்ச்சி நடந்தப்போ சற்குணம் வூட்டுல இருந்தாம். ஆளு நல்ல போதையில வேற இருந்தாம். சரவணன் வெளியிலப் போயிருந்தாம். போதைய ஏத்திக்கப் போனவேம் இன்னும் வூடு திரும்பாம இருந்தாம். அவனுக ரண்டு பேத்துக்கும் வேலைக்குப் போறதும், சம்பாதிச்சக் காசியில நல்லா தண்ணியப் போட்டுக்கிட்டு வூட்டுக்கு மின்னாடி வுழுந்துக் கெடக்கறதுமே வேலையா இருந்துச்சு. மித்தபடி வூட்டுக்கும் அவனுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததப் போல வூட்டுக்கு வெளியிலயே எந்நேரத்துக்கும் கெடந்தானுவோ. சாப்பாடு கூட வூட்டுல சாப்புடுறது கெடையாது. காத்தால கெளம்புன்னா சாப்பாடு கிளப்புக் கடையில முடிஞ்சிடும். கெடைக்குற எடத்துல வேலையப் பாத்துக்கிட்டு அங்கேயே சாப்புடுப்புடுவானுவோ. ராத்திரி தண்ணிப் போட்டுப்புட்டுச் சாப்புடுவானுவோளோ? சாப்புட்டுப்புட்டுத் தண்ணியப் போடுவானுவோளாங்றது அவனுக மட்டும் அறிஞ்ச ரகசியம். அவனுக பொழைப்பு அப்பிடி ஓடிட்டு இருந்துச்சு. என்னிக்காவது அதிசயமா வூட்டுல சாப்புட்டா உண்டு. அப்படிச் சாப்புட்டா அன்னிக்கு ஏதோ விஷேசமா இருக்கும்.

            சற்குணம் போட்டிருந்த சட்டையோட பட்டனப் போதையில கழட்ட முடியாம, பட்டனோட பிய்ச்சி எறிஞ்சி சட்டையெ தூக்கி அந்தாண்ட வீசுனாம். கைலியக் கழட்டி பாலாமணி மூஞ்சுல எறிஞ்சாம். அன்ட்ராயரோட நின்னுகிட்டு ஒரு குதி குதிச்சி கைய மாத்தி தோள்ல தட்டிக்கிட்டாம். "வாடா! வாடா! எம்மட மாமனுக்கிட்டெ எவ்வேம்டா சண்டைக்கி நிக்குறது? ஒத்தைக்கு ஒத்தைக்கு நம்மகிட்டெ வாடா! எங்கிட்டெ மோதிட்டு எம் மாமாங்கிட்டெ மோது! வெச்சிக்கிடலாமா? ஒத்தைக்கி ஒத்தெ! பாக்குறக்குத்தாம் ஆளு இப்பிடி இருப்பேம். கோதாவுல எறங்கிட்டா ரத்தம் பாக்காம திரும்ப மாட்டேம்டா!"ன்னு அவ்வேம் பாட்டுக்குச் சத்தத்தெ போட ஆரம்பிச்சாம். சற்குணத்தெ நாலு தெரு சனங்க சேந்து பிடிச்சிக்க வேண்டியதாப் போச்சு.

            அதெ பாத்ததும், "ன்னா குடிகாரப் பயலுகளப் பேச வுட்டு மெரட்டுதீயா? ஒரு தட்டுக்குத் தாங்குவானா இவ்வேம்லாம்?"ன்னாம் பாலாமணியும் கெத்தெ வுடாம.

            "போடா நாயீன்னு சொன்ன நேரத்துக்கு கெளம்பியிருந்தா இவ்வேம்லாம் ஏம்டா ஒன்னயப் பேசப் போறாம்? நீயி வெக்கங் கெட்டாப்புல நின்னுகிட்டு கேட்டுக்கிட்டெ நிக்குறே? ஏம்டா பஞ்சாயத்துல சாராயத்தெ வாங்கிக் கொடுத்து நீயி அனுப்பாத ஆளாடா? நாமல்லாம் அப்பிடி யாருக்கும் வாங்கிக் கொடுத்துப் பொட்டப் பயலாட்டம் நடந்துக்கிடல. நாம்ம ஒருத்தரு தனியாளாத்தாம் வந்து ஒவ்வொரு பஞ்சாயத்துலயும் கலந்துக்கிட்டேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அவனுக்குப் பதிலச் சொல்றாப்புல.

            "அதாங் சொல்றார்ல யம்பீ! அவ்வளவுதாங் ஒஞ்ஞளுக்கு மருவாதி! இதுக்கு மேல நின்னீயே கார்ர பிடிச்சி போடுறாப்புல ஆயிடும். ஒஞ்ஞளப் பிடிச்சிக் கட்டுறாப்புலயும் ஆயிடும்! ஸ்டேஷன்ல கொண்டுப் போயி ஒப்படைக்குறாப்புல ஆயிடும். எப்பிடி வசதி?"ன்னாங் தெரு சனங்க.

            பாலாமணியோட வந்த ஆளு மெரண்டுப் போயி கார்ல ஏறப் போனாம். "மருவாதியா வாங்கிட்டு வந்தச் சாமானுங்கள ஒண்ணு வுடாம எடுத்துக்கிட்டுப் போங்கடா!"ன்னு சத்தம் வெச்சாரு சுப்பு வாத்தியாரு. பாலாமணி கீழே குனிஞ்சி சிதறிக் கெடந்த ஆரஞ்சு, ஆப்பிளு, மாதுளம்ன்னு ஒவ்வொண்ணா பொறுக்கியெடுத்து பாலிதீன் பைக்குள்ளப் போட்டுக்கிட்டு வெறிச்சாப்புல கெளம்புனாம். கெளம்புறப்போ, "இன்னிக்கு நாலு பேத்த கூட வெச்சிக்கிட்டுப் பொண்டாட்டிய பாக்க வுடாம, பேய வுடாம அடிக்கிறே? எத்தனெ நாளு இதெ ஒம்மால பண்ண முடியும்ன்னு பாக்குறேம். யிப்போ போறேம். என்னிக்குத் திரும்புவேம்ன்னு தெரியாது. அன்னிக்கு இந்த மாதிரில்லாம் திரும்ப மாட்டாம். இன்னிக்கு வாங்குனதுக்கு எல்லாம் மொத்தமா திருப்பிக் கொடுக்க வேண்டியதெ கொடுத்துப்புட்டு பொண்ணயெ தூக்கிட்டுப் போவ தயங்க மாட்டேம்!"ன்னாம் பாலாமணி.

            சுப்பு வாத்தியாரு கோவத்த அடக்க முடியாம, "எங்க வந்து தூக்குடா பாப்பேம்! நாளைக்கி வந்துத் தூக்குறாம்லா? ஏம்டா நாளைக்கி? இன்னிக்கே தூக்கு! ஒன்னயெல்லாம் பேச வுட்டு அப்பிடியே வுட்டா அப்பிடித்தாம் பண்ணுவே!"ன்னு பாலாமணிய அடிக்கப் போனாரு. செய்யு ஓடி வந்து சுப்பு வாத்தியாரோட கையப் பிடிச்சி, "வாணாம்ப்பா! அவுகளப் போக வுடுங்க!"ன்னு தடுத்தா கண்ணு தண்ணி கலங்க.

            "பாத்தீயா? ந்நல்லா பாத்தீயா?  இன்னும் ஒம் பொண்ணு நம்மளோட குடித்தனம் வைக்கணும்ன்னுத்தாம் நின்னுகிட்டு இருக்கா. இத்து ஒண்ணு போதும். அவளெ எப்பிடி நம்மகிட்டெ கொண்டாறதுன்னு நமக்குத் தெரியும்!"ன்னாம் பாலாமணி மெரட்டலா.

            "ஒதைப்பட்டு போயிடுவா படுவா!"ன்னு பாலாமணியப் பாத்துச் சொன்ன சுப்பு வாத்தியாரு செய்யுவப் பாத்தப்போ, "தயவு பண்ணி சண்டெ போடாதீங்கப்பா!"ன்னு செய்யு கையெடுத்துக் கும்பிட்டா. அதெ பாத்த சுப்பு வாத்தியாரு கோவத்துல, "எல்லாம் நீயி கொடுக்குற எடம்! அந்தப் பயெ வந்தப்பவே போடா வெளியிலன்னு ஒத்த வார்த்தெ சொல்லிருந்தா இம்புட்டு நடக்க அவசியமில்ல!"ன்னாரு கொரலு ஒடைஞ்சாப்புல.

            "யோவ்! ந்த மாதிரி டாக்டர்ரு மாப்புளல்லாம் ஒனக்குக் கெடைக்க மாட்டாம். என்னவோ இத்தெ அத்து வுட்டுப்புட்டு இன்னொரு கலியாணத்தப் பண்ணி வைக்கறாப்புலல்ல பேசிட்டு நிக்குறே? அம்புட்டுத் தெகிரியம் வந்துப்புட்டா ஒமக்கு?"ன்னாம் பாலாமணி தெனாவெட்டா.

            "எலே எடுபட்ட பயலே! நம்மட பயலுவோ படிக்காத பயலுவோளாப் போயிட்டானுவோ. ல்லன்னா நம்மட பயலுவோளத்தாம்டா மச்சாம் பொண்ணுக்குக் கட்டி வெச்சிருப்பேம். இப்பயும் ஒண்ணும் கெட்டுப் போவலைடா. எம் மச்சாம் சொன்னுச்சுன்னா பிடிச்சி, கலியாணம் ஆனது பரவால்லன்னு அதாச்சி ரண்டாவது கலியாணமா இருந்தாலும் பரவாயில்லன்னு எம் மவனுக்குப் பிடிச்சிக் கட்டி வெச்சிப்புடுவேம் பாத்துக்கோ! இதுக்கு மேல இந்தப் பயல இஞ்ஞ நிக்க வைக்கக் கூடாது. மொதல்ல அடிச்சி வெரட்டுனாத்தாம் சரிபட்டு வருவானுவோ!"ன்னுச்சு அதுவரைக்கும் பேசாம பாத்துட்டு இருந்த நாது மாமா. அதெ கேட்ட சனங்க கார்ர சுத்த ஆரம்பிச்சாங்க. "புடுறா அவனெ! அட்றா அவனெ!"ன்னு சனங்க முண்டியடிச்சிட்டு வர்றதெ யாராலும் கட்டுபடுத்த முடியல. பாலாமணி அவசர அவசரமா கார்ல பூந்துக்கிட்டு கதவெச் சாத்திக்கிட்டாம். சனங்க எல்லாம் காரு மேல தட்ட தட்ட காரு கொஞ்சம் கொஞ்சமா நகர ஆரம்பிச்சிது. அத்தோட போனவந்தாம் பாலாமணி. திரும்பி ஒரு நாளு வரணும்ன்னு நெனைச்சிட்டுத்தாம் அவ்வேம் கெளம்பியிருப்பாம். அவ்வேம் நேரம், இந்தச் சம்பவத்தால பொண்டாட்டியோட குடித்தனம் நடத்த தோது இருக்கான்னு சாமியாரு ஒருத்தர்கிட்டெ குறிக் கேக்குறதுக்காக பைக்ல ஒரு ஆளு அழைச்சிட்டப் போயிருக்காம். அப்பிடிப் போறப்போ எதுக்க வந்து எருமெ மாட்டு மேல வுட்டு, பாலாமணி கையிக் கால்ல சிராய்ப்பாயி அடிபட்டும், பின்னாடி உக்காந்து போனவேம் கையி முறிஞ்சும் கெடந்தாம்.

            பாலாமணி வந்துட்டுப் போன இந்தச் சம்பவத்துக்குப் பின்னாடி ரண்டு நாளு செய்யு அலம்பல் பண்ணிக்கிட்டு பழையபடி பித்துப் பிடிச்சாப்புல காலேஜூப் போவாம கெடந்தா. ஆளாளுக்கு அவளுக்குப் புத்திச் சொல்லி மறுக்கா தேத்தி வுட வேண்டியதா இருந்துச்சு. மறுக்கா மூணாவது நாள்லேந்து காலேஜூக்குப் போவ ஆரம்பிச்சா. எவ்வளவோ சம்பவம் நடந்தும் மவளுக்கு இன்னும் புத்தி வர்ற மாட்டேங்குதேன்னு சொல்லிச் சொல்லி சுப்பு வாத்தியாரு கவலைப்பட்டுக்கிட்டுக் கெடந்தாரு. அந்த கவலெ ஒரு பக்கம் இருந்தாலும், பாலாமணியால உண்டாவ இருந்த பெரச்சனெ அந்த அளவோட முடிஞ்சதெ நெனைச்சிதுன்னு அவரு பெருமூச்சே வுட்டுக்கிட்டாரு. ஆன்னா அடுத்தப் பெரச்சனெ வேற ஒரு வடிவத்துல வந்துச்சு.

            ராசாமணி தாத்தா வாரத்துக்கு ஒரு மொறை வெச்சி போன அடிச்சி, "நீ மட்டும் வரலன்னா யாத்தா செத்துடும். யாத்தா ஒடம்புக்கு முடியாமக் கெடக்கு. நீ மட்டும் சொல்லு, நாம்ம வந்து அழைச்சிட்டுப் போறேம். யாத்தா ஒடம்பெப் பாத்துப்புட்டுத்தாம் புருஷங்கார்ரேம் தீவாளிக்கு ஒன்னயக் கொண்டாந்து வெச்சிப்புடணும்ன்னு நெலையா நின்னாம். தீவாளியும் போயி பொங்கலும் போயி இப்பிடியேப் போயிட்டே இருந்தா அத்து நல்லதுக்கில்ல. ஒரு முடிவா சொல்லு!"ன்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு பாக்குக்கோட்டையிலேந்து வர்றப் போன எடுக்காதேன்னு படிச்சிப் படிச்சிச் சொல்லித்தாம் பாத்தாரு. செய்யு கேக்குறாப்புல யில்ல. "ஒருத்தரு போன் பண்ணா என்னா ஏதுன்னு வெசயத்தெ கேக்குறதில்லியா? தப்பா சொன்னா நாக்கெ புடுங்குறாப்புல நாலு கேள்விய கேக்றுதில்லையா?"ங்ற பதிலெ திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருந்தா. அதெ கேக்க சுப்பு வாத்தியாருக்கு எரிச்சலா இருந்துச்சு. ஒண்ணும் சொல்ல முடியாம மனசுக்குள்ள கொந்தளிச்சிக்கிட்டெ இருந்தாரு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...