8 Nov 2020

யாரு வர்றான்னு பாத்துப்புடுவோம்!

யாரு வர்றான்னு பாத்துப்புடுவோம்!

செய்யு - 619

            சுப்பு வாத்தியாரு கோவில்பெருமாள் போயிச் சேந்ததும் எல்லாரையும் திட்ட ஆரம்பிச்சிட்டாரு. வெங்குவையும், நாகு அத்தையையுந்தாம் மொதல்ல திட்டுனாரு. "இப்பிடித்தாம் யாரு வந்தாலும் ன்னா ஏதுன்னு கேக்காம வூட்டுல வெச்சு விருந்துப் பண்ணுவீயளா? செரித்தாம் விருந்தெ பண்ணீயன்னா கூடவே போயி வூடு வரைக்கும் வுட்டுப்புட்டு வருவீயளா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு மனசோட வேகம் தாங்காம.

            "நமக்கென்னண்ண புரியுது? ஒம்மட மவ்வேத்தாம் வந்தவங்கள வாஞ்ஞ வாஞ்ஞன்னா. சோறாக்கிச் சமைச்சிப் போட்டுக் கொண்டுப் போயி விடணும்ன்னு நின்னா. அவ்வே பாட்டுக்கு அவுகக் கூடவே போயிடறப் போறாளோங்ற பயத்துல கும்பகோணம் வரைக்கும் போயி எப்பிடியோ அசமடக்கிக் கொண்டாந்திருக்கிறோம்!"ன்னுச்சு நாகு அத்தை.

            "சுட்டும் நெருப்புன்னு தெரியல. பட்டும் புத்தி இனனும் வாரல. ஒன்னயும் செரித்தாம்! யம்மாவையும் செரித்தாம்! கொணப்பாடு காணும்னுத்தாம் யாருக்கும் தெரியாம இஞ்ஞ கொண்டாந்து வெச்சிருக்கேம் மவளே! இந்த வெசயம் ஊர்ல கூட பல பேத்துக்குத் தெரியாது. யண்ணனும் யண்ணியும் கூட யாருகிட்டெயும் சொல்லாம ஊர்ல கெடந்தக்கிட்டு அல்லல்பட்டுக்கிட்டுக் கெடக்குதுங்க. எப்பிடி நீயி இஞ்ஞ இருக்குற வெவரம் தெரிஞ்சி அவுக வர்ற முடியும்? அவுகப் பாட்டுக்கு வந்து ஒன்னயத் தூக்கிட்டுப் போயிட்டா ஒன்னயக் காபந்துப் பண்ணிக் கொண்டார அளவுக்கு நம்மகிட்டெ ன்னா இருக்குன்னு நெனைக்குறே? ஊரு தேடி பஞ்சாயத்து வெச்சப்பவே ஊருக்கார பயெ ஒருத்தம் நம்ம பக்கம் யில்ல. எல்லா பயலும் அந்தப் பயெ கொடுத்த காசிக்காக அவ்வேம் பக்கந்தாம் நின்னாம். இன்னும் வெவரம் புரியாத புள்ளையா இருக்கீயே?"ன்னு செய்யுவப் பாத்துச் சங்கடப்பட்டாரு சுப்பு வாத்தியாரு.

            அவரோட சங்கடத்தப் புரிஞ்சிக்காம செய்யு, "நம்மள என்னத்தாம் பண்ணச் சொல்லுதீயே யப்பா?"ன்னா பட்டுன்னு.

            "அந்தப் பயலுவோ போன் பண்ணா யாரு ஒன்னய எடுக்கச் சொல்றா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு காட்டமா.

            "போன் பண்ணுறப்ப எப்பிடிப்பா பதிலச் சொல்லாம இருக்குறது?"ன்னா செய்யு பதிலுக்குப் பதிலு.

            "இதுவரைக்கும் நீயி சொன்ன பதிலு பத்தாதுன்னு நெனைக்குதீயா ன்னா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதெ மடக்குறாப்புல.

            "நம்மட மனசுல இருக்குற ஆத்திரத்தெ எப்பிடித்தாம் கொட்டித் தீத்துக்குறது? அவனுகள போன் பண்ணுறப்ப நாக்கெ பிடுங்கிக்கிற மாதிரிக்கி நாலு கேள்வியக் கேட்டாத்தாம் மனசு அடங்குதுப்பா!"ன்னா செய்யு கண்ணு கலங்குறாப்புல.

            "அதுக்குத்தாம் இப்பிடி விருந்து வெச்சி கூட வரைக்கும் போயி அனுப்புனீயா? அப்பிடியே கும்பகோணத்துல வெச்சி கார்ல பிடிச்சிப் போட்டுக் கொண்டுட்டுப் போனா என்னத்தெ பண்ணுவே? விருந்து வெச்சு அனுப்புறதுதாங் ஆத்திரத்தெ தணிச்சுக்கிற வழியா கேக்குறேம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெகுண்டாப்புல.

             "வூடு தேடி வந்தவங்கள எப்பிடிப்பா வெறு வயித்தோட அனுப்புறது?"ன்னா செய்யு அப்பாவித்தனமா. சுப்பு வாத்தியாருக்குக் கோவம் வந்துடுச்சு. அவரோட ஆத்திரம் எல்லை மீறுனுச்சு.

            "இத்து நல்லதுக்கில்லே! புரிஞ்சித்தாம் பேசுதீயா? புரியாம பேசுதீயான்னு ஒண்ணும் புரியல நமக்கு. ஆம்மா சொல்றேம் இத்து நல்லதுக்கில்லே!"ன்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு சுப்பு வாத்தியாரு. அவர்ர சுலுவுக்குச் சமாதானம் பண்ண முடியல. அன்னிக்கு ராத்திரி முழுக்க இத்து அப்பிடியே மெம்மேலும் பேச்சா வளந்து சண்டையிலப் போயி முடிஞ்சது. அப்பங்காரருக்கும், மவளுக்கும் சண்டெ நடந்ததுதாம் மிச்சம். மவளைத் தன்னால சரியா புரிஞ்சிக்க முடியலையேன்னு சுப்பு வாத்தியாரு நெனைச்ச தருணம் அது.

            "இந்தப் படுபாவியோ குடும்பத்துலேந்து ஒரு பயெ, ஒரு சிறுக்கி வர்றாம கெடந்துச்சுங்க. எங் குடும்பம் நல்லா இருந்துச்சு. என்னிக்கு அந்தப் பாவிப்பயெ குடும்பத்துலேந்து எங் குடும்பத்து அடியெடுத்து வெச்சானுவோளோ அன்னிக்கே எங் குடும்பத்தெ சனியன் பிடிச்சாப்புல ஆயிடுச்சு. இத்தனெ நாளு அந்த நாடுமாறி குடும்பத்துலேந்து யாரும் வர்றாம நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு. இன்னிக்கு என்ன நெனைச்சாளோ? ஏம் வந்துட்டுப் போனாளோ? இத்தனெ நாளும் இல்லாதெ அக்கறெ ஏம் வந்துச்சோ? எப்பிடி வந்துச்சோ? வந்துட்டுப் போனா கண்டாரஓலி! எங் குடும்பமெ இப்பிடி நிக்குதே!"ன்னு வெங்கு தலையிலயும், மாருலயும் அடிச்சிக்கிட்டு. அதெ ஓடிப் போயி ரண்டு பேரு தடுக்க வேண்டியதாப் போச்சு.

            ஆளாளுக்கு சுப்பு வாத்தியாரையும், வெங்குவையும் அந்த ராத்திரி முழுக்க உக்காந்து சமாதானம் பண்ணுறாப்புல ஆயிடுச்சு. அன்னிக்கு ராத்திரி முழுக்க யாரும் சரியா தூங்க முடியல. பேச்சுன்னா பேச்சு ரா முழுக்க பேச்சா கரைஞ்சிட்டு இருந்துச்சு.

            "சின்ன புள்ளதானே வுடு மச்சாம்! வெவரம் புரியாம பண்ணிப்புட்டா!"ன்னு நாது மாமா சமாதானம் சொன்னுச்சு.

            "இவளால குடும்பம் படுற கஷ்டம் தெரியாம இப்பிடில்லாம் பண்ணா என்னத்தெ பண்டுறது? இவளுக்காகவே குடும்பத்தைப் பாதிய இஞ்ஞ கொண்டாந்து வெச்சு, மீதிய ஊர்ல வுட்டுட்டு வந்து இங்கயும் அங்கயுமா நாம்ம அல்லாடுறது கூடவா புரியாது? அதெ கண்ணால காங்குறாளா இல்லியா? பொண்ண கட்டிக் கொடுக்குறேம்ன்னு வாங்குன கடனெ தீக்குறதா, பொண்ணால உண்டான பெரச்சனையா தீக்குறதான்னு நாம்ம அறியாம புரியாம கெடந்து தவிச்சிக்கிட்டுக் கெடக்குறேம்! முழி பிதுங்கிப் போயி நிக்குறேம்! இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. கிட்டதட்ட அவரு அழுவுற நெலைக்குக் கொரலு உடைஞ்சு, மனசு ஒடைஞ்சுப் போற அளவுக்கு ஆயிட்டாரு.

            "அதெ வுடுப்பா! பேசுனதெய பேசிக்கிட்டு! ஒம்மட வயசுக்குப் புரியுறது பொண்ணோட வயசுக்குப் புரியுமா? நல்லது செய்யணுங்ற மனசுல அதுவா போயிச் சிக்கிக்குது. அதோட கதெயே, தலயெழுத்தெ அப்பிடி இருக்குறப்போ அத்து என்னா செய்யும்? செரித்தாம்ன்னு வுட்டுப்புட்டுப் போவீயா? இம்மாம் காலம் புரிஞ்சிக்கிட்டெ நீயி இதெ புரிஞ்சிக்கிடலன்னா ன்னா?"ன்னாரு இதெப் பத்தி பேசிட்டுப் போவ வந்த நாது மாமா வூட்டுக்கு எதுத்த வூட்டு பாவடெ ஆச்சாரி.

            "அவுளுக எப்பிடி இருக்காளுவோன்னு பாருங்கங்றேம்? அப்பன் அங்க ஊர்ல இருக்குறேங்ற வெசயத்தெ தெரிஞ்சிக்கிட்டு, எம்மாம் நைச்சியமா வந்து வேவு பாத்துப்புட்டு, யாருக்கும் தெரியாம போயிருக்காளுவோ! செரியான கவுடு, சூது பிடிச்ச நாயிக அவுளுவோ. அத்துப் புரியாம நிக்குறாளே மவ்வே! அதெ நெனைச்சித்தாம் வேதனையா இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கலங்குனாப்புல.

            "நல்லவனே நாட்டுல வாழ முடியாம நிக்குறாம்? இதுல இந்தக் கெட்டச்சாதி நாயிகத்தாம் பெரிசா வாழ்ந்துடப் போவுது போ!"ன்னுச்சு நாது மாமா சுப்பு வாத்தியார்ர சாந்தம் பண்ணுறாப்புல.

            "அவுக வாழுறாளுவோ, வாழமாப் போறாளுவோ! அதெப் பத்தி நமக்கென்ன? நம்மள நாம்ம காபந்துப் பண்ணிக்கிடனுமா ன்னா? அப்பிடியே வெசத்தத் தடவி வக்கனையா பேசி அழைச்சிட்டுப் போயிக் கொன்னுப்புடலாம்ன்னு நிக்குறானுவோ அந்தப் படுபாவிப் பயலுவோ! அப்பத்தாம் பெரச்சனெ முடியும்ன்னு நேரத்தப் பாத்துப்புட்டு நிக்குறானுவோ அந்தப் பயலுவோ! நாம்ம சொந்த வூர்லயா இருக்கேம் கேக்குறேம். நாமளே ஒண்டிக்கிட்டு வந்து இஞ்ஞ ஒறவுக்கார வூட்டுல இருக்குறம்ன்னா எப்பிடி இருந்துக்கிடணும்? நம்மால நமக்கும் பெரச்சனெ இருக்கக் கூடாது. யாருகிட்டெ ஒண்டிக்கிட்டுக் கெடக்குறோமோ அவுங்களுக்கும் ஒரு பெரச்சனெயும் வந்துப்புடக் கூடாதுன்னுல்லா இருக்கணும். இஞ்ஞ வந்து பொண்ணு காங்கலன்னா ஒஞ்ஞளுக்கும் மனசு எப்பிடி இருக்கும்ன்னு கேக்குறேம்? அதெப் பத்தில்லாம் நெனைச்சிப் பாக்க வாணாமா? தன்னப் பத்தி நெனைச்சிப் பாக்க முடியலன்னா நாம்ம அதெப் பத்தி என்னத்தெ சொல்லுறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வேதனெ தாளாம.

            "யப்பா வாத்தியார்ரே! அப்பிடில்லாம் நெனைச்சிப்புடாதே! இந்தக் கோவில்பெருமாளு கெராமத்துல வந்துப் பொண்ணத் தூக்கிட்டுப் போயிடலாம்ன்னு எவ்வேம் நெனைச்சாலும் அவ்வேம் ஒடம்புல உசுரு தங்காது. கெராமமே ஒண்ணு தெரண்டு உசுரோட வெச்சி அவ்வேம் எவனா இருந்தாலும் கொளுத்திப்புடும் பாத்துக்கோ!"ன்னாரு பாவாடெ ஆச்சாரி அதெ கேட்டு ஆக்ரோஷமா.

            "வர்றவேம் பொண்ண கொண்டுட்டுப் போவ வந்திருக்கானா ன்னான்னு தெரிஞ்சாத்தானே அதெ பண்ண முடியும்? அதெ அடையாளம் பண்ணி யாரு காட்டணும்? எங் குடும்பத்துல இருக்குற அசாமிங்கத்தானே. அதுகளே யிப்பிடி வெவரங்கெட்ட தனமா கொன்னு போட வந்தவனுக்கு கொத்துக்கறியில விருந்தெ வெச்சிக்கிட்டுக் கெடந்தா கெராமத்துல இருக்குற நீஞ்ஞ என்னத்தாம் பண்ணுவீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பாவடெ ஆச்சாரியப் பாத்து.

            "ச்சும்மா பேசிட்டுக் கெடக்காதே மச்சாம்! ஒண்ணு பெரச்சனைய முடி! ரண்டு அந்தப் பயலுவோள வெட்டிவுடு!"ன்னுச்சு நாது மாமா பேச்ச ஒரு முடிவுக்குக் கொண்டு வாராப்புல.

            "எப்பிடி முடிக்கிறது? மவளோட மனசு யிப்பிடி இருந்தா என்னத்தெ முடிக்கிறது? என்னத்தெ நாம்ம பண்டுறது? போலீஸ் ஸ்டேசன் போவலாம்ன்னா இப்பிடி மனசு இருக்குறவெ அஞ்ஞப் போயி அப்பிடியே பெரண்டுட்டான்னு வெச்சிக்கோ நம்ம நெல ன்னா? அதுக மயக்குறாப்புல பேசுறதுக்குல்லாம் நம்ம வூட்டுச் சனங்க மயங்குறாப்புல இருக்குறதெ நம்பி எப்பிடிக் காரியத்துல எறங்குறது சொல்லு? இப்போதைக்குப் பொண்ணு, பொண்டாட்டியக் காபந்து பண்ணுறதெ தவுர நமக்கு வேற வழி தெரியல. அதுக்குத்தாம் இப்பிடி ஒளிஞ்சிக்கிட்டுக் கெடந்துக்கிட்டு இருக்குறேம். ஒளிஞ்சாம் பிடிச்சாம் வெளையாட்டு வெளையாடிட்டு இருக்குறப்போ யாராச்சும் நாம்ம இஞ்ஞ இருக்கேம்ன்னு மின்னாடிப் போயி  நிப்பாகளா கேக்குறேம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட நெலமைய.

            "ஒரு முடிவுக்கு வர்றதெ தவுர வேற ஒண்ணும் வழியிருக்காப்புல தெரியல வாத்தியாரே?"ன்னாரு பாவாடெ ஆச்சாரியும் நாது மாமாவோட சேந்துகிட்டு.

            "இன்னும் ஒடம்பும் மனசும் தெடமாவணும் மவளுக்கு. தெளிவா சிந்திக்கணும். அப்பத்தாம் தெகிரியமா காரியத்துல எறங்க முடியும். அதுக்கு அவ்சரப்பட்டா முடியாது. கொஞ்சம் பொறுத்துதாம் எல்லாத்தையும் பண்டணும். அது வரைக்கும் இப்பிடி இருந்துக்கிட்டு மனசையும், ஒடம்பையும் தயாரு பண்ணி தேத்தியாவணும். அதாங் இப்போதைக்கு நம்ம முடிவு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தெடமா.

            "பெறவு ஏம் கவலெப்படுறே? பொண்ணு இருக்குற எடம் அந்தப் பய‍லுவோளுக்குத் தெரிஞ்சிப் போயிட்டு, வேற எஞ்ஞ போறதுன்னா? எடம் தெரிஞ்சா என்னத்தெ பண்ட முடியும்? இந்த ஊர்ல ஒரு மசுர்ர கூட பிடுங்கிட்டுப் போவ முடியாது பாத்துக்கோ! இந்தான்னு சொன்னா போதும் மொத்த சனமும் தெரண்டுடும்! பொண்ணோட பாதுகாப்பப் பத்தின கவலெய வுடு. பொண்ண மேக்கொண்டு என்னத்தெ பண்ணணுமோ அதெப் பண்டப் பாரு!"ன்னாரு பாவாடெ ஆச்சாரி தீர்க்கமா.

            "மொதல்ல அவளோட மனசெ தெடம் பண்ணணும். மனசு மாறிட்டே இருக்குது. என்னவோ கவர்மெண்டு பரீட்சை எழுதிப் பாஸாயி வேலைக்குப் போவணும்ன்னு நின்னு அதுல கட்டுனப் பணம் அப்பிடியே நிக்குது. அடுத்ததா எம்பில்தாம் படிப்பேன்னு நின்னு அதுக்குத் தெரட்டிப் பணத்தெ கட்டி இருக்கு. அதெயும் வுட்டுப்புட்டு அவ்வே பாட்டுக்கு மனம் போன போக்குல ஏத்தோ ஒரு தெசையில போயிட்டே இருந்தா நாம்ம என்னத்தெ பண்டுறதுவோ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ரொம்ப கவலையா.

            அதெ கேட்டுப்புட்டு, "நமக்காக பணத்தெ செலவழிக்குறதா நெனைச்சா யாரும் ஒண்ணுத்தையும் பண்ண வாணாம். யாருக்கும் பாராம நாம்ம இருக்க விரும்புல. நாம்மப் பாட்டுக்கு எங்காச்சியும் போயி நம்மட பொழப்பே பாத்துக்கிடுறேம்!"ன்னா செய்யு ஆத்திரப்பட்டு.

            "இந்த ஆத்திரமும், அவ்சரமும் இதெ பத்தி நெனைச்சாத்தாம் பயமா இருக்கு! யிப்போ நாம்ம என்னத்தெ சொல்லிப்புட்டேம். நடந்த நடப்பத்தானே சொன்னேம். அதுக்கே வெசனப்பட்டுக் கோவப்பட்டு ஆச்சா போச்சான்னா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு செய்யுவப் பாக்காம நாது மாமாவப் பாத்து.

            "இந்தா சித்தெ சும்மா கெடக்க மாட்டே?"ன்னு இப்போ நாது மாமாவும் செய்யுவப் பாத்து ஒரு அதட்டல்லப் போட்டுச்சு.

            "கொழவாப் பேசுறவங்கள நல்லவங்கன்னும், கோவப்பட்டு பேசுறவங்களெ கேட்டவங்கன்னும் நெனைச்சா அத்து அப்பிடிக் கெடையாது. அக்கறையாப் பேசுறவங்க நல்லதுக்குன்னா கோவப்பட்டுத்தாம் பேசச் செய்வாங்க. வஞ்சனையா ஏமாத்த நெனைக்குறவங்கத்தாம் எப்பவும் வக்கனையா கொழைவாப் பேசுவாங்க. அதெ புரிஞ்சிக்கிடணும் மொதல்ல. என்னென்னவோ படிச்சி ஒண்ணும் பெரயோசனம் யில்ல. வாழ்க்கையில சிலதெ புரிஞ்சிக்கிடணும். அதெ புரிஞ்சிக்கிட்டாவே போதும். படிப்பும் வாணாம், ஒரு மண்ணும் வாணாம். நாட்டுல ஒசத்தியா இருக்குறேம்ல்லாம் படிச்சிப்புட்டுத்தாம் ஒசத்தியா இருக்குறானா ன்னா? படிச்சவேம் எல்லாம் ஒசத்தியா இருக்குற படிக்காதவங்கிட்டெத்தானே வேலயப் பாத்துப்புட்டுக் கெடக்குறாம். ஒசத்தியா இருக்குறது எப்பிடிங்றதெ மொதல்ல வாழ்க்கையிலேந்து அனுபவத்துலேந்து படிக்கணும். அதெ படிக்கலன்னா படிப்புல்லாம் எதுக்கு? ஏட்டுச் சொரைக்காய வெச்சி கோட்டெ வுடுறதுக்கா? படிச்சப் பொத்தகத்தையல்லாம் தூக்கி சூத்துல திணிச்சிக்குறதுக்கா?"ன்னாரு பாவடெ ஆச்சாரியும் செய்யுவப் பாத்து.

            "கண்ட கண்ட நாயிங்க வந்துட்டுன்னு படிக்குற படிப்பெ வுட்டுப்புட்டு லீவெ எடுத்துக்கிட்டு அதுக்காக இப்பிடி நின்னா படிப்பாலத்தாம் என்னத்தெ பெரயோசனம்? மொதல்ல அதெப் புரிஞ்சிக்கிடணும். இன்னிக்கு ஒரு லீவு நாளு தேவையா? காலேஜூக்குப் போயிருந்தா ஒரு நல்லதெ கத்துருக்கலாம். இதுங்கக் கூட கெடந்து உருப்படாததெ பேசுறாப்புல ஆயிடுச்சு. எதுக்கு என்னத்தெ பண்ணணுங்றதத்தாம் மொதல்ல கத்துக்கடணும்! நீயி இப்பிடிப் படிக்கணுங்றதுக்காக யண்ணன் அஞ்ஞக் கெடந்து கஷ்டப்பட்டுகிட்டு கெடக்கிறதெ நெனைச்சிப் பாரு! இன்னிய வரைக்கும் வாயெ தொறந்து கஷ்டம்ன்னு ஒத்த வார்த்தெயச் சொல்லிருப்பானா? யம்மாக்காரி அஞ்ஞ பைத்தியம் பிடிச்சாப்புல கெடந்தப்பயும் மனசுக்குள்ளயேப் போட்டுக்கிட்டு புழுங்கிக்கிட்டு, வெசயம் தெரிஞ்சா நாமல்லாம் சங்கடப்படுவோம், அப்பிடியே கௌம்பி வந்துப்புடுவோம்ன்னு கெடந்திருக்காம்ங்றேம். அதெ யெல்லாம் நெனைச்சிப் பாத்து நடந்துக்கிடாம, எவளோ ஒரு சிறுக்கி வந்தான்னு அவளுக்குத் சோத்த சமைச்சிப் போட்டு அவ்வே கூட போயிட்டு வந்திருக்கீயே?"ன்னு சுப்பு வாத்தியாரு ஒரு வழியா பேசி முடிச்சாரு.

            "இனி எதெப் பத்தியும் கவலப்பட வாணாம் வாத்தியாரே! இந்தப் பொண்ணு இனுமே இந்த ஊருப் பொண்ணு. இனுமே எவ்வேம் வந்து ஊர்லேந்து கெளப்பிட்டுப் போறேம்ன்னு பாக்குறேம்? இந்தாரு பொண்ணே! இனு‍மே காலேஜூ போறதும் வர்றதுந்தாம் இந்த ஊர வுட்டு வெளியில போறது வர்றதுன்னா வேல. ஆம்மாம் சொல்லிப்புட்டேம். அந்த வேலயப் பாத்துக்கிட்டு நறுவிசா, பதிவிசா இருந்துட்டு நல்ல பேர்ர வாங்கிட்டு ஊருப் போயி நல்ல வெதமா இருக்கணும் பாத்துக்கோ!"ன்னாரு பாவாடெ ஆச்சாரி செய்யுவுக்கு நல்ல புத்திய சொல்றாப்புல.

            "ஆம்மா மச்சாம்! இனுமே எவ்வேம் வர்றாம்ன்னு பாக்குறேம்! இப்பத்தாம்ன்னே நீயி வெவரமா சொல்லிருக்கே!"ன்னுச்சு நாது மாமாவும். ஆன்னா, மறுநாளே கோயில்பெருமாளுக்கு யாரு வர்றான்னுப் பாக்கற நெலமெ உண்டாவப் போறது அப்போ யாருக்கும் தெரிஞ்சிருக்க ஞாயமில்லே.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...